• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

`நாத்தனார்` என்ற உறவுமுறைச்சொல் ஈழத்தில் இல்லாமலிருப்பது ஏன்?

நிதனிபிரபு

Administrator
Staff member

இலங்கநாதன் குகநாதன் அண்ணாவின் பதிவு இது :

`நாத்தனார்` என்ற உறவுமுறைச்சொல் ஈழத்தில் இல்லாமலிருப்பது ஏன்?

ஈழத்திலிருந்து புலம் பெயர்ந்து ஐரோப்பாவில் வாழும் ஒரு பெண் தனது கணவனின் தங்கையினை ஒரு விழாவில் தனது உறவினருக்கும் நண்பர்களுக்கும் ( எல்லோருமே ஈழத்தின் வழி வந்தவர்கள்) அறிமுகப்படுத்தும் போது, `இவ என்னுடைய நாத்தனார்` எனச் சொல்லி அறிமுகப்படுத்தியமை அங்கிருந்தவர்களுக்கு வியப்பினை ஏற்படுத்திற்று.

உடனடியாகவே அங்கிருந்த மூதாட்டி ஒருவர் அப் பெண்ணைப் பார்த்து , `நல்லா ரீவி சீரியல் பார்க்கிறாய் போல` எனக் கேட்டே விட்டார்.

ஈழத்தில் பொதுவாகக் கணவனின் உடன்பிறந்தவளை `நாத்தனார்` என அழைக்கும் பழக்கமில்லை, மாறாக `மச்சாள்` என அழைக்கும் பழக்கமே உண்டு. தமிழ்நாட்டிலிருந்து வரும் தொலைக்காட்சி நாடகங்கள், திரைப்படங்கள், புதினங்கள், சிறுகதைகள் என்பவற்றினூடாக ஈழத்தமிழர் `நாத்தனார்` எனும் சொல்லின் பொருளினை அறிந்திருந்தாலும், தமக்கிடையேயான நாள்தோறுமான பயன்பாட்டுச் சொல்லாக, அச் சொல்லினைப் பயன்படுத்துவதில்லை.

தமிழ்நாட்டுக்கும் ஈழத்துக்கும் ஏன் இந்த உறவுமுறைச் சொல்லின் பயன்பாட்டில் வேறுபாடு காணப்படுகின்றது? இதனை அறிந்து கொள்வதற்கு நாம் அச் சொற்பிறப்பினை அறிந்து கொள்ள வேண்டும். அதனைப் பார்ப்போம்.

நாத்தனார் என்ற சொற்பிறப்புக்குக் கூறப்படும் விளக்கங்களைப் பார்ப்போம்.

👉
`நாற்று` என இளம் செடியினைச் சொல்வதனைக் கேள்விப்பட்டிருப்போம், `நாற்று நடுதல்` தெரிந்ததுதானே! ஓரிடத்தில் விளைந்த நாற்றினை இன்னொரு இடத்தில் பிடுங்கி நடுவோம் அல்லவா! அதுபோன்றே பிறந்த வீட்டில் வளர்ந்த பெண் இன்னொரு வீட்டுக்கு `நாற்று` போன்று செல்வதால் நாத்தனார் என்ற பெயர் ஏற்பட்டது என்பது ஒரு விளக்கம்.
நாற்று+அன்னார் = நாற்றன்னார்>>> நாத்தனார்.
(நாற்றன்னார் என்பதே நாத்தனார் எனத் திரிந்து விட்டது என்பது முதல் விளக்கம் )

………………………..

👉
👉
இரண்டாவது விளக்கமாக நாத்துணையார் என்பதே `நாத்தனார்` என ஆயிற்று எனச் சொல்வர்; அதாவது புகுந்த வீட்டுக்குச் செல்லும் மணப்பெண்ணுக்கு பேச்சுத் துணையாக (நாவுக்குத் துணையாக) அவளது கணவனின் உடன்பிறந்தவள் இருப்பதால், நாத்துணையார் என்ற சொல் பிறந்தது , பின் அச்சொல்லானது `நாத்தனார்` எனத் திரிந்தது என்பர்.
நாத்துணையார் > நாத்தனார்

……………………………………………..

👉
👉
👉
இன்னொரு விளக்கமாக சிலப்பதிகாரத்தின் வழி சான்று காட்டுவர். `நாத்தூண் நங்கையொடு நாள்வழிப் படூஉம்`` எனும் சிலம்பின் வழி வந்த `நாத்தூண் நங்கை ` என்ற சொல்லே நாத்தனார் ஆயிற்று என்பது மற்றொரு விளக்கம். புகுந்தகத்தில் பிறந்தகத்தினை யாராவது தாழ்த்திப் பேசினால், பிறந்த வீட்டின் பெருமைகளைத் தூண் போலத் தாங்கி நிற்பவள் என இதற்கு விளக்கம் சொல்வர்.
.........................
👆
👆
👆
மேலுள்ள மூன்று விளக்கங்களில் எது சரியானது என ஆய்வது இப் பதிவின் நோக்கமன்று, ஆனால் இந்த மூன்று விளக்கங்களிலும் ஒரு பொதுத்தன்மையினைக் காணலாம், அதாவது பிறந்த வீட்டிலிருந்து புகுந்த வீட்டுக்குச் செல்வதனுடன் தொடர்புபட்டே `நாத்தனார்` எனும் சொல் எழுகின்றது. அதுவே எமக்கு இங்கு முகன்மையானது.

இப்போது ஈழத்துக்கு வருவோம், ஈழத்தில் பிறந்த வீட்டிலிருந்து பெண் புகுந்த வீட்டுக்குச் செல்வதில்லை, மாறாக இன்றும் மணமகன்தான் மணமகளின் வீட்டுக்குச் சென்று குடியேறுவார். இது பழந்தமிழரின் தாய்வழிக் குமுக அமைப்பின் எச்சம். தமிழ்நாட்டிலும் இவ்வாறான ஒரு நிலைமையே முன்னர் இருந்தது, பின்னர் அங்கு முறைமை மாறிவிட்டது. ஈழத்திலோ இன்றும் அந்த மரபு தொடருகின்றது. எனவே ஈழத்துக்கு நாற்று அல்லது நாத்துணை அல்லது நாத்தூண் போன்ற விளக்கங்களில் எதுவும் பொருந்ததாது, அதனால்தான் `நாத்தனார்` என்ற சொல் ஈழத்து வழக்கிலில்லை. எமது ஈழத்து மரபுக்கு அச் சொல் பொருந்தாது.
🙏
“எல்லாச் சொல்லும் பொருள் குறித்தனவே”
🙏
 

Goms

Well-known member
அருமையான விளக்கம் நிதா சகோதரி. முதல் விளக்கம் மட்டும் கேள்விப்பட்டிருக்கிறேன். இரண்டாவதும், மூன்றாவதும் புதிது. மிக்க நன்றி.🙏

அதேபோல் ஈழத்தில் திருமணத்திற்கு பின் மணமகன், மணமகள் வீட்டிற்கு சென்று குடியேறும் பழக்கம் இருப்பதை உங்கள் கதைகளின் மூலம்தான் தெரிந்து கொண்டேன். 😀
 
Top Bottom