You must have JavaScript enabled in order to use this order form. Please enable JavaScript and then reload this page in order to continue.

அவளுக்கும் மனசு உண்டு - கோபிகை - இதழ் 4

ரோசி கஜன்

Administrator
Staff member
1543617223650.png



டிங் டிங் டிங் ---அலாரம் நேரம் 4 மணியாகிவிட்டதை உணர்த்தியது.


உறங்காத அவளை எழுப்ப நினைத்தது அலார ஓசை. கண்களை விட்டத்தில் பதித்திருந்த காவியா மெல்லத் திரும்பி தலைமாட்டில் இருந்த அலைபேசியின் அலார ஒலியை நிறுத்தினாள்.


கண்களில் எரிச்சல் மண்டிக்கிடந்தது. முகத்தின் முன்னால் வேறொன்றையும் சுமப்பது போலிருந்தது. முகம் வீங்கியதன் விளைவே அது என்பது அவளுக்குத் தெரியும். தலை விண்

விண் எனத்தெறித்தது. இரவு முழுவதும் அவள் உறங்கவே இல்லை.


அன்று மட்டுமல்ல, சில நாட்களாகவே அவளது நிலை இப்படித்தான் இருக்கிறது. உறக்கம் வரமறுக்கிறது, எண்ணங்கள் எங்கோ ஓடி கடைசியில் தனஞ்சயனின் தோற்றமே நினைவில் வந்து நிற்கிறது.


அவனை நினைத்த மாத்திரத்தில் கண்களை நிறைத்து அந்த நினைவுகளே கண்ணீர்த் துளிகளாகப் பரவுவதை அவளால் தடுக்கவே முடியவில்லை.


விக்கி விக்கி அழுது தீர்த்தாலும் ஓயாமல் சுரக்கும் அவன் நினைவுகளை எங்ஙனம் நிறுத்துவதெனத் தெரியாது தடுமாறினாள் அவள்.


தனஞ்சயன் ஒன்றும் அவள் கணவனல்ல, அவளது தொழிலின் ஒரு வாடிக்கையாளன் அவ்வளவே. எத்தனையோ ஆண்களின் பசி போக்கியது அவள் உடம்பென்றால் மனதை நிறைக்க மட்டும் அவளிடம் வந்தவன் தனஞ்சயன். கூரையை வெறித்தவளின் மனக்குதிரை தாறுமாறாய் ஓடத்தொடங்கியது.


போரிலே கணவனை இழந்துவிட்ட காவியாவினால் வாழ்வாதாரத் தொழிலாக கைப்பற்ற முடிந்தது இதுமட்டும் தான்.


நோயாளியான தாயின் மருத்துவத்திற்காகவும் வயிற்றுப்பசிக்காகவும் அவள் கடன் கேட்டவர்கள் பலர், அவளைக் காமக்கண் கொண்டே பார்த்தனர்.


அதிகம் படிக்காத, தன் கணவனே பொருளாதாரம் என முழுதாய் நம்பியிருந்த காவியாவினால், கணவனை இழந்துவிட்ட துயரோடும் வாழ்வின் ஆதாரம் இனி என்ன என்ற மலைப்போடும் போராடமுடியாது போய்விட்டது.


வீட்டுவேலை, செய்ய அழைத்தவர்கள் கூட அதனைக் கௌரவமாய்ச் செய்ய அனுமதிக்கவில்லை.


மனைவி இல்லாத வேளைகளை அவளோடு கழிக்க எண்ணிய கணவன், அவள் மறுத்ததினால் பழியை அவள் மீது போட்டுவிட்டு சாவகாசமாய் புன்னகைத்தான். சிலர் இப்படியென்றால், சிலரோ, கணவனின் அயோக்கியத்தனத்தை மறைக்க மனைவிமாரே பழியை அவள் மீது போட்டுவிட்டு கணவன்மாரை நல்லவர்களாகச் சித்தரித்தனர்.


தன்னை நிரூபிப்பதற்காக போராடி போராடி தோற்றுப்போனவள் இறுதியாய் எடுத்த முடிவுதான் இந்தத் தொழில்.


தாயாரை, அருகில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து அங்கே தங்கவைத்து கவனிப்பதற்காக ஒரு முதிய பெண்மணியையும் நியமித்தாள்.


மகளின் எண்ணங்கள் ஓரளவு விளங்கியபோதும் மௌனமாகவே இருக்கமுடிந்தது அந்த தாயால். ஒருவர் இருவராக ஆரம்பித்து அவளைத்தேடி வந்தவர்களின் எண்ணிக்கை சில நாட்களிலேயே பலராகப் பெருகியது.


வீட்டுவேலை செய்தபோது அவளை இம்சித்தவர்களும் அதில் அடக்கம். மெலிதாக புன்னகைக்க மட்டுமே முடிந்தது அவளால்.


ஆரம்பத்தில் வானவெளியில் அந்தரத்தில் நிற்பது போலவே தோன்றியது அவளுக்கு. எப்போதும் ஒருவித படபடப்பு. வலிகண்ட தேகம் சுருண்டு கொள்ள எத்தனித்தது.


ஆனால் எந்தளவிற்கு? வயிற்றுப்பசியும் வாழ்க்கையும் விட்டுவிடாதே! அனலாய் கொதித்த தேகம் அடங்கிப்போனது.


காலஓட்டத்தில் உடல் வலிக்கும் மன வலிமைக்கும் பழகிக்கொண்டாள் அவள். தொழிலில் ஐந்து வருடங்கள் கடந்துவிட்ட நிலையில் பல வித ஆண்களைப் பார்த்திருந்தாள் அவள்.


அவ்வேளையில்தான், ஒருநாள், கலைந்த கேசமும் குலைந்த மனமுமாய் அவளிடம் வந்தான் தனஞ்சயன்.


தொழில் வியாபாரம் என்றான், மனைவி தாதிவேலை செய்வதாகவும் திருமணமாகி ஐந்து ஆண்டுகள் கடந்துவிட்டது, இன்னும் குழந்தைகள் இல்லை, வேலைச்சுமையோடு குழந்தையும் வேண்டாம் என்றுவிட்டாள் என்றும், அவளது படிப்பிற்குத் நான் தகுதியானவன் இல்லை என்பதால் எப்போதும் அவள் அன்பு காட்டியதே இல்லை என்றும், அதுவே தமக்குள் சின்னசின்ன சண்டையாகி பின்னர் பெரிதாகி திருமண உறவை உடைத்தெறிந்துவிட்டது என்றும் கூறினான்.


ஏனோ, அவன் மீது அன்பும் கரிசனையும் அதிகமாகவே காட்டினாள் காவியா.


“ஒரு தாயாவும் மனைவியாவும் உன்னைப் பார்க்கிறேன்” என்பான் அடிக்கடி.


அன்பைக் கொட்டிய கணவனாகவோ, அவள் ஏக்கங்களைப் புரிந்துகொண்ட கணவனாகவோ, அவளை அவளாகவே இருக்க அனுமதித்த கணவனாகவோ சேகர் இருக்கவில்லைத்தான். எனினும் பசி என்று அவள் பக்கத்துவீட்டிற்குச் செல்லும் நிலையை அவன் தரவில்லை.


ஒரு பெண்ணுக்கான கணவனின் கவனிப்பு இவ்வளவுதான் என ஏற்றுக்கொண்டு ‘அவர் மனம்கோணாது நடக்கவேண்டும் என எண்ணும் சராசரி பாமரப் பெண்ணான காவியாவிற்கு அதனைவிட கணவனிடம் எதிர்பார்ப்புகள் இருக்கவேயில்லை.


தனஞ்சயன் வந்தால் அதிகநேரம் கதைத்துக் கொண்டிருப்பான். வரப்போவதை அறிவித்துவிட்டே வருவதால் காவியாவும் அதற்கேற்றவாறு தயார் படுத்திக்கொள்வாள்.


எப்போவாவது வந்தவன், அப்பப்ப வந்தான். சில நாளில் சமைக்கவைத்து சாப்பிட்டுவிட்டே செல்வதும் உண்டு. காவியாவை பேசவைத்து கேட்டுக் கொண்டிருப்பான் தனஞ்சயன்.


அவளோடு கதைக்கும் போது அவள் தனக்குப் பிடித்தவைகள், பிடிக்காதவைகள் என தன்னையறியாமலே அனைத்தையும் சொல்லிவிடுவாள். மறுமுறை வரும் போது அவளுக்கு பிடித்தவைகளை வாங்கிவந்துவிடுவான்.


இதுவரை கணவனிடம் இருந்து கூட அவள் இத்தகையதோர் அன்பினைக் கண்டதில்லை. சிலிர்த்துப் போன அவளுக்கு கண்ணைக் கரித்து கண்ணீர் சொரிந்தது.


அந்தக் கண்ணீரைக்கூட துடைத்து விட்டவன் தனஞ்சயன் தான். மெல்ல மெல்ல அவன் மீதான நேசங்களை கோர்க்கத் தொடங்கினாள் மாலையாக. அவனுக்காகவே வாழத்துடித்தாள்.


தொட்டுவிட்ட இந்த தொழிலில் இருந்து இதுவரை மீளமுடியவில்லை. இனிமேல் விட்டுவிடவேண்டும் என திடமாக எண்ணினாள். தனஞ்சயன் ஒருவனுக்காக மட்டுமே தன் வாசல் கதவுகள் திறக்கவேண்டும் என எண்ணி அவள் முடிவெடுத்த தருணத்தில் தான், “இதுநாள் வரை எனக்காகத் திறந்த கதவுகளை இனிமேல் திறக்கவேண்டாம்” என்றான் அவன்.


புரியாமல் பார்த்தவளிடம், “என் மனைவி, திரும்பி வீட்டுக்கு வந்திட்டா, எனக்காகவே வாழணும்னு வந்திட்டா, இப்ப அவ காட்ற பாசம் எனக்கு காலம் முழுதும் வேணும், அவளுக்கு வேலை மாற்றம் கிடைச்சிருக்கு, நாங்கள் வேற ஊருக்குப் போறம்” சொல்லிச் சென்றவன், அதன் பின் வரவேயில்லை. அலைபேசி அடித்ததும் அவசரமாய் அவன்தானோ எனப்பார்த்துக் களைத்துப் போனாள்.


வாசல் பார்த்து பார்த்தே ஏமாந்து நின்றாள்.


கணவன் இறந்தபோது கூட அவள் இந்தளவிற்கு நிலைகுலைந்துவிடவில்லை.


வாழ்க்கையை ஏதோ ஒரு வகையில் தைரியமாக எதிர்கொள்ள நினைத்தவள், இப்படி வாழ்க்கையைப் பார்த்துப் பயந்து நிற்பது ஏன்? அவளுக்கே புரியவில்லை?


தனஞ்சயனை நினைத்த போதெல்லாம் கண்ணீர் கன்னங்களில் வழிந்து காதை நிறைத்தது.


இனிமேல் தனஞ்சயன் வரப்போவதே இல்லை என்பதை மனம் ஏற்க மறுத்தது. தனஞ்சயனின் பிரிவும் சடுதியாய் வந்த தாயின் மறைவும் நடைபிணமாக்கியது காவியாவை.


பூட்டிய வீட்டிற்குள் விட்டத்தை வெறித்தபடி படுத்திருந்தாள். மனித சஞ்சாரமற்ற அந்தத் தனிமை அவளுக்குப் பிடித்திருந்தது.


தன்னோடு எப்போதும் கூடவே இருந்த அந்த தனிமையை அவள் அதிகமாய் நேசித்தாள்.


நாட்கள் சில கடந்தன. மயான அமைதி கண்டிருந்தது அந்த வீடு. அயலவர்கள் யன்னல் வழியாய் எட்டிப்பார்த்தனர், சந்தேகம் வரவே கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது, விட்டத்தை வெறித்தபடி அமைதியாகவே இருந்தாள் காவியா.


அவளுக்கு உதவ மறுத்த சமூகம் அவள் உயிரைக் காப்பாற்ற எண்ணியது.


வைத்தியசாலையில் சேர்த்து இரண்டே நாளில், ஏதோ ஒரு நேசத்திற்காக காத்திருந்த அவளது ஆவி அது கிடைக்காமலே வானவெளிகளில் சஞ்சரித்தது.


முற்றும்.
 
  • Like
Reactions: dsk
Top Bottom