You must have JavaScript enabled in order to use this order form. Please enable JavaScript and then reload this page in order to continue.

'உன் விருப்பம் என்ன?' உளம் சார்ந்த பகிர்வுகள்.

ரோசி கஜன்

Administrator
Staff member
"உன் விருப்பம் என்ன?"

இந்தக் கேள்வியை எவராலும் இலகுவாகக் கேட்டுவிட முடியும். ஆனால் இதற்குப் பின்னால் உள்ள உளவியலை உங்களால் உணர முடிகிறதா?

இந்தக் கேள்வியைத் தன்னிடம் கேட்கமாட்டார்களா என்று எண்ணுபவர்களிடம் ஒரு தெளிவான முடிவு எப்பொழுதும் இருக்குமா?


அல்லது தன்னளவில் திடமான முடிவுகளை எடுக்க முடியாது தவிப்பவரிடம் பெறுமதி மிக்க இந்தக் கேள்வியை கேட்பதால் அதன் தகுதியை இழந்து விடுகிறதா?

இது சுகிர்தா சண்முகநாதன் என்பவரின் முகநூல் பதிவு. இவர் இங்கே நம் தளத்திலும் உள்ளார்.

இதையே, இன்னும் சிலரிடம் (சக எழுத்தாளர்கள் உட்பட)கேட்டு, அவர்கள் கருத்தினை இங்கு பகிர்ந்து கொள்ளலாம் என்று நினைக்கின்றேன்.
நாம் மனம் விட்டு விவாதங்களைச் செய்யக்கூடியதாகவும் இருக்கும்.

நீங்களும் தயக்கமின்றி, கீழேயுள்ள கேள்விகளுக்கு உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளலாம்.

உங்களுக்கான கேள்விகள்:

1. இது பற்றிய உங்கள் பொதுப்படையான கருத்து என்ன?

2. நீங்கள் இக்கேள்வியை எதிர்கொண்டுள்ளீர்களா? யார் யாரிடமிருந்து எத்தகைய சந்தர்ப்பங்களில்.

3. உங்கள் விருப்பை வெளிப்படையாக சமரசங்களின்றிச் சொல்ல முடிந்ததா? அவ்விருப்புகள் வெற்றி பெற்றனவா?

4. இதுவரைக்கும் நீங்கள் இக்கேள்வியை யார் யாரிடம் எச்சந்தர்ப்பங்களில் கேட்டுள்ளீர்கள்.


5. உங்களை நாடிவந்த அவர்களின் விருப்புகள் உரிய அங்கீகாரம் பெற்றனவா?
 

ரோசி கஜன்

Administrator
Staff member
என் கருத்து:

1. இது பற்றிய உங்கள் பொதுப்படையான கருத்து என்ன?


இந்தக் கேள்வியைத் தன்னிடம் கேட்கமாட்டார்களா என்று எண்ணுபவர்களிடம் ஒரு தெளிவான முடிவு இருக்கும் என்பதே என் எண்ணம். அப்படியே இக்கேள்வி ஒருவரிடம் கேட்கப்பட்டாலும் அது நிறைவேறுவதில் சந்தர்ப்பங்கள் சூழ்நிலைகளின் தாக்கம் நிச்சயம் இருக்கும்.

தன்னளவில் திடமான முடிவுகளை எடுக்க முடியாது தவிப்பவரிடம் பெறுமதி மிக்க இந்தக் கேள்வியை கேட்பதால் நிச்சயம் இக்கேள்விக்கு வலு இருக்கப்போவதில்லை என்றே எண்ணுகின்றேன்.


2. நீங்கள் இக்கேள்வியை எதிர்கொண்டுள்ளீர்களா? யார் யாரிடமிருந்து எத்தகைய சந்தர்ப்பங்களில்.

3. உங்கள் விருப்பை வெளிப்படையாக சமரசங்களின்றிச் சொல்ல முடிந்ததா? அவ்விருப்புகள் வெற்றி பெற்றனவா?

மேலேயுள்ள இருக்கேள்விகளுக்குமே ஒரே பதிலாகச் சொல்லலாம் என்றெண்ணுகின்றேன் .

நான் இக்கேள்வியை எதிர்கொண்டது பற்றி நினைத்துப்பார்த்தால் மிகவும் குறைவு என்றே சொல்வேன். அதாவது எனது விருப்பை என் பெற்றோர்கள் என்னிடம் கேட்க முதல் நானே வெளிப்படுத்தியிருக்கிறேன். அம்மா அப்பா தவிர்ந்த நெருங்கிய உறவுகள் 'என் விருப்பு' என்பதுபற்றி அவ்வளவாக கவனத்தில் கொள்ளவில்லை. அவர்கள் விருப்பு என் விருப்பாகியுள்ளது, மனச் சுணக்கங்கள் இருந்தாலும் மறைத்துவிட்டேதான்.

முதலில் சின்ன சின்ன விசயங்களைப் பார்த்தால் , நினைவு தெரிந்த நாட்களில் இருந்து உணவு , விளையாட்டு, பொழுதுபோக்கு, உடைகள் என்று என் விருப்புகளை நான் வெளிப்படுத்தியிருக்கிறேன். அம்மா அப்பா கேட்கும் சந்தர்ப்பங்கள் அவர்களுக்கு இருந்ததில்லை. அப்படி விருப்புகளை வெளிப்படுத்தியதால் அவையனைத்தையும் நான் பெற்றுக் கொண்டேன் என்பதும் இல்லை. எங்கள் வசதி வாய்ப்புகளுக்கு ஏற்ப அவைகள் நிறைவேறியும் இருக்கு, நிறைவேறாதும் போயிருக்கு.
'அது எல்லாம் முடியாது' என்று தடைகளும் விழுந்திருக்கு.

எனக்கு நெருங்கிய நண்பிகள் அதிகம் . அவர்களிடமிருந்து இக்கேள்வி வந்திருக்கு. என் விருப்புகள் நிறைவேற்றியும் இருக்கு. 'அது பிடித்த ஐஸ் கிரீமிலிருந்து பிறந்தநாள் பரிசு வரை.

எனது திருமணம் என் நெருங்கிய நண்பி மூலமே பேசி வந்தது. அவளிடமிருந்து இக்கேள்வி பலதடவைகள் வந்திருக்கு.

திருமணத்தின் பின்னர் கணவரிடமிருந்து இக்கேள்வி பலதடவைகள் வந்திருக்கு. அதிகமாக எங்கள் குடும்பத்தின் பொது விடயங்களை மேற்க்கொள்கையில் எதிர்கொண்டுள்ளேன். என் விருப்பு நடைமுறைக்கு ஒத்துவருமென்று கணவரும் நினைக்கும் பட்சத்தில் நிறைவேறியுள்ளது. நிறைவேறாவிட்டாலும் என் மனம் கோணியதில்லை. காரணம், எங்கள் குடுத்துக்குப் பொருத்தமானதே தெரிவாகும். பிறகென்ன!

இவையெல்லாம் கடந்து, தனிப்பட்டு கணவன் மனைவி உறவில், குடும்பவாழ்வில் இக்கேள்விக்கு நிச்சயம் பெரிய வேலையே இருக்கு.

இதிலும், என் மட்டில் இக்கேள்வி கேட்கப்படவேண்டிய தேவையிருக்கவில்லை. அநேக நேரங்கள் எனக்கே எனக்கான சின்ன சின்ன விருப்பங்களை நானே பார்த்து நிறைவேற்றிக்கொள்வேன். ஆமாம்,நிதா ஒருமுறை ஒரு பதிவில் தன்னைத் தனக்கு மிகவும் பிடிக்கும் என்று குறிப்பிட்டிருந்த நியாபகம். நானும் அப்படியே. எனக்கு என்னை மிகவும் பிடிக்கும். அதுவும் திருமணத்தின் முன்பு இலங்கையில் இருக்கையில் அன்றாடம் பல சிக்கல்களை எதிர்கொண்டதாகவே என் இளமைக்காலம் இருந்தது. அப்போதும் சரி, திருமணத்தின் பின்னரான தெளிந்த நீரோடை போன்ற வாழ்விலும் சரி என்னை நான் மிகவும் நேசிக்கிறேன். அதனால் என் மனதைச் சுணங்கிக் கிடக்க விடுவதில்லை. அதையும் கடந்து என் விருப்புகள் சில நிறைவேறாது போகும் சந்தர்ப்பங்கள் வந்ததே இல்லை என்று சொல்ல மாட்டேன். அது என்னை பாதிப்பதில்லை. கிடைப்பதில் உச்ச பட்ச திருப்திகொள்பவள் நான்.




4. இதுவரைக்கும் நீங்கள் இக்கேள்வியை யார் யாரிடம் எச்சந்தர்ப்பங்களில் கேட்டுள்ளீர்கள்.

5. உங்களை நாடிவந்த அவர்களின் விருப்புகள் உரிய அங்கீகாரம் பெற்றனவா?


சிநேகிதிகள், சகோதரிகளிடம் கேட்டுள்ளேன். என்னால் முடிந்தளவு அக்கேள்விகளுக்கு மரியாதைகொடுத்து நிறைவேற்றியும் உள்ளேன்.

பிள்ளைகளைப் பொறுத்தமட்டில், சின்ன வயதிலிருந்து அவர்களும் தம் விருப்பைத் தெளிவாகச் சொல்லும்படிதான் வளர்ந்து வருகின்றார்கள். உணவு உடை விளையாட்டு படிப்பு என்று அவர்கள் விருப்புகளை அனைத்தும் நிறைவேறிக்கொண்டே இருக்கின்றது. ஆரோக்கியமான, முறையான விடயங்களை, அறிமுகம் செய்விப்பதே எமது வேலை.

இங்கு, ஆடம்பரமான அவர்களின் ஆசைகள் என்று பார்த்தால் அவ்வளவாக நிறைவேற்றியதில்லை என்றே சொல்வேன். இந்நிலையில் அவற்றின் மறுப்பை உரிய வகையில் அவர்களுக்குப் புரியவைத்துவிடுவோம். சுணக்கங்கள் இருந்தாலும் அவர்கள் அதை ஏற்றுக்கொண்டு விடுவார்கள்.
 
Last edited:

ரோசி கஜன்

Administrator
Staff member
எழுத்தாளர் ஜான்சி அவர்களிடம் மேலுள்ள கேள்விகளைக் கொடுத்ததும் தனது பதில்களை எழுதித் தந்திருந்தார்.

அருமையாக உங்கள் பார்வையை எடுத்துரைத்ததுக்கு மிக்க நன்றி ஜான்சி!





"உன் விருப்பம் என்ன?"

இக்கேள்வியின் உளவியல் என்பது கேட்கப்படுகின்றவரின் விருப்பம் அறிந்துக் கொள்ள. ஆம் அறிந்துக் கொள்ள மட்டுமே இக்கேள்வி கேட்கப்படுகின்றது. விருப்பத்தை நிறைவேற்றுவதைக் குறித்து இக்கேள்வி எந்த உத்தரவாதத்தையும் கொண்டு வருவதில்லை.


"இந்தக் கேள்வியைத் தன்னிடம் கேட்கமாட்டார்களா என்று எண்ணுபவர்களிடம் ஒரு தெளிவான முடிவு எப்பொழுதும் இருக்குமா?" என்று கேட்பீர்களானால் நிச்சயம் இருக்கும்.ஆனால், அது அவருடைய சிந்தனைச் சார்ந்ததாக இருக்கும்.கேட்பவருக்கு பலனளிப்பதாகவோ இராததாகவோ இருக்கலாம். எவ்விதத்திலும் குறிப்பிட்டுச் சொல்ல இயலாது.


தன்னளவில் திடமான முடிவுகளை எடுக்க முடியாது தவிப்பவரிடம் பெறுமதி மிக்க, ""உன் விருப்பம் என்ன?" இந்தக் கேள்வியை கேட்பதால் அதன் தகுதியை இழந்து விடுகிறதா?

கேள்வி அதன் தகுதியை இழப்பதில்லை. கேள்வி கேட்பதால் கேட்பவரும் உடனே அவ்விருப்பத்தினை நிறைவேற்றப் போவதுமில்லை. கேள்வி கேட்பதன் நோக்கம் பிறர் விருப்பம் அறிவது. பதிலைப் பொருத்து விருப்பம் அறிந்துக் கொள்ள இயலும். அந்தப் பதிலே எதிரில் இருப்பவர் மனநிலை உணர்த்த உதவும்.

தேவையிருப்பின் அவரது திடமற்ற மனநிலையை, தெளிவின்மையை தெளிவாக்கவும் அக்கேள்வி உதவக் கூடும்.


நீங்கள் இக்கேள்வியை எதிர்கொண்டுள்ளீர்களா?

ஆம், எதிர்கொண்டுள்ளேன்.

முதலில் இந்தக் கேள்விக் குறித்த என் கருத்தைப் பகிர்ந்து உங்கள் கேள்விகளுக்கும் பதிலளிக்கின்றேன்.

உன் விருப்பம் என்ன?

பொதுவாக இந்தக் கேள்வி கேட்கப்படுமானால் பின்வரும் காரணங்கள் இருந்தாக வேண்டும்.

1. உங்கள் விருப்பத்தை நீங்கள் நிறைவேற்ற முடியாத தற்சார்பற்ற நிலை. எ.கா குழந்தைப்பருவம், பணி புரியாத குடும்பத்தலைவி அப்படியென்றால், பொருளாதாரம் இங்கே முன் நிற்கின்றது.

2. குடும்பத்தின் பொது முடிவுகளில் விருப்பம் கேட்டு செயல்படும் நிலை. குடும்ப அங்கத்தினராக உங்கள் விருப்பத்தை கேட்டுக் கொள்ளும் விதம்.

3. பொதுவெளியில் மற்றும் அலுவலகத்தில் கேட்கப்படும் கேள்விகள்.

முதலில் இந்த கருத்து என்னிடம் கேட்கப்பட்ட தருணங்களை நினைவு கூறுகின்றேன்.



1. தற்சார்பற்றவளாக குழந்தையாக இருந்த போதெல்லாம் என் விருப்பம் கேட்கப்பட்ட தருணம் எது என நினைவுக் கூறுகின்றவை இவை.

கிறிஸ்துமஸ் வீட்டை பெயிண்ட் செய்யும் போது எந்த நிறம் என்று என்னிடம் கேட்டு முடிவு செய்யப்படும்.

அது மட்டுமல்லாது வீடு கட்டியபோது கதவு டிசைன் எக்ஸெட்ரா எக்ஸெட்ரா...எல்லாம் என் விருப்பத் தேர்வுகள் தான்.

வீட்டின் கடைக்குட்டி நான் என்பதாலும், கலர் /டிசைன் தெரிவு செய்வதிலெல்லாம் என் 2 அண்ணன்களுக்கு எவ்வித குறிப்பிட்ட இரசனைகள் இல்லாததாலும் 100% என்னுடைய விருப்பம் நிறைவேற்றப்படும்.

போட்டியாளர் இல்லாத வேட்பாளர் நானே.

-முதன் முறை என் விருப்பம் கேட்காமல் செய்யப்பட்ட நகை அதனால் எனக்கெழுந்த கசப்புணர்வு , அதனைத் தொடர்ந்து என் விருப்பத்திற்கேற்ப கிட்டத்தட்ட 5-6 மணி நேரங்கள் செலவழித்து நகை தேர்வு செய்ததுவும் நினைவுக் கூறுதலுக்குள் வந்தது.

மேற்கண்ட இரு நிகழ்விலும் ஏற்கனவே அந்த செலவினங்களுக்காக முன் தயாரிப்பு இருந்தன.

செலவு செய்யப் போகின்றோம். விருப்பம் கேட்டுச் செய்யலாம் எனும் நிலையில் என் விருப்பம் கேட்கப்பட்டது.

என் விருப்பம் குறித்த கேள்விகள் கேட்கப்பட்டது நிறைவேற்றவும் பட்டது.

-இதுவே சில நேரங்களில் உன் விருப்பம் என்ன? எனக் கேட்கப்பட்டாலும் என் விருப்பத்திற்கும் அது நனவாவதற்கும் இடையில் உள்ள தூரத்தை பொருளாதாரம் மட்டுமே தீர்மானித்ததுவும் உண்டு..

"அதுதான் உன் விருப்பம், ஆனால் என்ன? பரவாயில்லை இதை வாங்கிக் கொள்" என்பதான சூழல்களையும் கடந்து வந்திருக்கின்றேன்.

அது உன் விருப்பம் ஆனால், நிறைவேற்ற முடியாத நிலை எனத் தேற்றப்பட்ட நிலையும் நடந்திருக்கின்றது.


2.பெண்ணாய் இருப்பதால் எல்லாவிடமும் எல்லாவற்றிற்கும் முக்கியமாய் குடும்ப நிகழ்வுகளில் என் சகோதரர்களிடம் கேட்கப்பட்ட அளவிற்கு எனது விருப்பம் கேட்கப்பட்டதில்லை.அது மட்டுமல்ல வீட்டின் சிறியவளாய் இருந்ததுவும் ஒரு காரணமாக இருக்கலாம்.

3. அலுவலகத்தில் விருப்பம் கேட்பது முற்றிலும் கருத்து அறிந்துக் கொள்ளவே. முன்முடிவுகள் எடுக்கப்பட்ட கேள்விகள் தான் அவைகள் எல்லாம்.

பொதுவெளியில் நான் தலைமை வகுத்த குழுக்களில் குழுவின் மேம்பாட்டிற்காக இக்கேள்வி என்னிடம் கேட்கப்பட்ட பொழுது எனது விருப்பங்கள் அறிந்து அதன் படி செயல்பட முனைந்தார்கள்.

பல நேரங்களில் எனது விருப்பங்கள் அதீத ஒழுஙகு/திருத்தமாக இருந்ததால் செயல்படுத்த தடுமாறிய தருணங்களும் உண்டு.

சில நேரங்களில் பொதுக் குழுக்களிலும் முன்முடிவுகள் தீர்மானித்து விட்டு விருப்பம் கேட்கும் நிலைகளும் உண்டு.
 

ரோசி கஜன்

Administrator
Staff member
//உங்கள் விருப்பை வெளிப்படையாக சமரசங்களின்றிச் சொல்ல முடிந்ததா? அவ்விருப்புகள் வெற்றி பெற்றனவா? //

- வீட்டில் 100% சமரசங்களின்றி சொல்லமுடிந்திருக்கின்றது.வீட்டில் பல நேரங்களில் என் விருப்பங்கள் மதிக்கப்படப் போவதில்லை என இருந்த போதும் வலியச் சொன்னது உண்டு. சமரசங்கள் இல்லா வாழ்க்கை இல்லை.

இங்கு வெற்றி குறித்து எவ்வித உறுதியும் இல்லை. மற்றவரது விருப்பமும் நம் விருப்பத்தோடு ஒன்றிப் போனால் மட்டும் வெற்றி கிட்டும்.

- அலுவலகத்தில் விருப்பம் சொல்வதே மடத்தனம் என காலப்போக்கில் விருப்பத்தை எண்ணத்தை பகிர்வதை நிறுத்திக் கொண்டேன். அமைதியாக இருப்பதே நலம் எனும் ஞானம் கிட்டியுள்ளது.

- பொதுச் செயல்பாடுகளில் நிலவரம் அறிந்து தேவையிருப்பின் மட்டும் விருப்பத்தைக் கூறியதுண்டு.


//இதுவரைக்கும் நீங்கள் இக்கேள்வியை யார் யாரிடம் எச்சந்தர்ப்பங்களில் கேட்டுள்ளீர்கள்.//

//உங்களை நாடிவந்த அவர்களின் விருப்புகள் உரிய அங்கீகாரம் பெற்றனவா?//


குடும்பத்தினருக்கு பரிசுகள் வழங்குகையில் கேட்டிருக்கிறேன்.( இவ்வளவு ரூபாய்க்குள்ள என்ன கிஃப்ட் வேணும்?
?
?
?
)

நட்பிற்கு பரிசு வாங்குகையில் கேட்டிருக்கிறேன்.

அங்கும் நிச்சயமாய் எல்லைக் கோட்டை வரைவது பணமே.

அதற்கேற்ப விருப்பத்திற்கேற்ப பரிசுகள் வாங்கியது உண்டு.

சில நேரங்களில் எல்லைக் கோட்டை உடைத்து விட்டு எண்ணியதற்கும் அதிகமாய் செலவழித்ததும் உண்டு.

- அலுவலகத்தில் எனக்கு கீழ் பணிவோரிடம் கேட்டிருக்கிறேன். அலுவலக கட்டுப்பாட்டுக்களுக்கு உட்பட்டு அவர்கள் விருப்பம் இருப்பின் செயல்படுத்தி இருக்கிறேன்.

உதா. வேறு டீமிற்கு மாறுவது, உயர் பதவிகளுக்கு விண்ணப்பிப்பது, அலுவலகப் பிரச்சனைகளில் ஏதேனும் உதவி வேண்டும் என்றால், எந்த நேரம் அவர்களுக்கு ப்ரேக் வேண்டும் என்பதை அவர்கள் விருப்பம் போல முடிவுச் செய்வது.

- பொது செயல்பாடுகளில் கேட்டிருக்கிறேன். தவிர்க்க முடியாத தருணங்களில் எப்போதுமே தலைமைப் பொறுப்பில் இருந்தாலும் குழுவின் விருப்பத்திற்கேற்ப அனைவருக்கும் திருப்தி தரும் விரும்பும் முடிவுகளை எடுப்பதற்கே முயலுவேன்.

- அடுத்து நான் நிறைவேற்றாத விருப்பம் ஒன்றைக் குறித்து மகனுக்கான கல்லூரித் தேர்வை அவன் கேட்டதற்கு ஏற்ப செய்ய முடியவில்லை. அந்தக் கல்லூரிக் குறித்து நல்லவிதமான எந்தக் கருத்தும் கிட்டாத தருணத்தில் அவனது விருப்பத்திற்கு மாறாக வேறொரு கல்லூரியில் சேர்த்தது எனைப் பொருத்தவரையில் நல்ல முடிவென்றாலும் அவனுக்கு இன்றளவும் கசப்புணர்வே.


Summary: - பல நேரங்களில் விருப்பங்கள் கேட்கப்படுவது நிறைவேற்றப் படுவதற்காக அல்ல.

- பொதுச் செயல்களில், அலுவலகத்தில் "முன்முடிவுகள்" இருப்பதைப் பொருத்து விருப்பக் கேள்விகள் பயன் பெறுவதும் பெறாததும் அமைந்துள்ளன.


- பொருட்கள் குறித்த விருப்பு எனில் பணம் உங்கள் விருப்பத்தை தீர்மானிக்கும் வல்லமைக் கொண்டது.


- நீங்கள் இக்கேள்வியைக் கேட்பவரானால் அவ்விருப்பத்தை நிறைவேற்ற முடியாத பட்சத்தில் எதிர்தரப்பின் வெறுப்பு மன நிலைக்கு ஆளாக முற்றும் முழுதாய் வாய்ப்பிருக்கின்றது.

சரியான விதத்தில் புரிந்து பதில் அளித்திருக்கின்றேனா எனத் தெரியவில்லை. எனினும், இது நல்லதொரு உளவியல் அலசலுக்கானக் கேள்வி. நன்றிகள். - ஜான்சி
 
Last edited:

ரோசி கஜன்

Administrator
Staff member
எழுத்தாளர் உஷாந்தி ...

அவர் கதைகள் போலவே அவர், 'விருப்பம்' என்பதைச் சீர்தூுக்கிப்பார்த்த விதமும் தெளிவாக, நுணுக்கமாக அமைந்திருக்கின்றது,
சுவாரசியமாகவும் .

வாசிக்கையில், 'அட ஓம் தானே!' என்று சொல்லிக்கொண்டேதான் வாசித்தேன்.

மிக்க நன்றி உஷா !



விருப்பம் என்றால் “இந்த விசயம் எனக்குக்கிடைத்தால் எனக்கு சந்தோசம் கிடைக்கும், இதை விட மேம்பட்ட ஒரு என்னை உருவாக்க முடியும் என்ற ஒரு தனிநபரின் கருதுகோள்” தானே. அந்த விசயம் நனவான பின்னர் தான் அந்த கருதுகோள் சரியா தவறா என்று தெரியும். ஆனால் நான் ஆசைப்பட்டேன் நான் அடைந்தேன் என்ற பெருமித உணர்வு , ஆங்கிலத்தில் empowering மிகப்பொருந்தும்.

ஆகவே, சரியானால் சந்தோசம் பிழையானால் தன்னால் அதை செய்ய முடிந்தது என்ற உணர்வும் தன்னுடைய எண்ணங்களுக்கு நேர்மையாக இருந்தோம் என்ற திருப்தியான எண்ணமும் தான் மேலோங்கி இருக்கும் அப்படி சமாதானப்படுத்திக்கொள்வோம் :D

குடும்ப , சமூக சூழ்நிலைகள் காரணமாக சிலரால் தாங்கள் நினைத்த பாதையில் பயணித்திருக்க முடியாது. 'தக்கன பிழைத்தல்' கொள்கைக்கு அமைய இலாப நட்டங்களை கணக்கிட்டுத்தான் சேதாரம் குறைவான விடயத்தை நோக்கி நம்மை சமரசம் செய்திருப்போம். ஆனால் என்ன? அதுவும் நான் தானே. என்னுடைய வாழ்க்கையில் ஆயிரம் தவறுகள் செய்து , கீழே விழுந்து தானே அடிபடுகிறோம்.

எப்போது நாம் ஒரு விருப்பத்தை செயற்படுத்தாதது குறித்து மனம் வருந்துகிறோம்?

1. நம் வாழ்க்கை அந்த நிலையிலேயே நின்று விடும் போது, அல்லது

2. நம்முடைய அதே சூழ்நிலையில் இருந்து அவ்விருப்பதை வெற்றிகரமாக அடைந்தவர்களை பார்க்கும் பொழுது!

உதாரணமாக என்னை எடுத்துக்கொண்டால் பெரும்பாலும் நான் ஆசைப்பட்ட பெரிய விசயங்கள் எனக்கு கிடைத்து தான் இருக்கின்றன. அதெல்லாம் என் வாழ்க்கையில் இப்போதிருக்கும் நான் என்பதை கட்டமைத்த திருப்புமுனைகள். அதெல்லாம் சரியா? நான் வேறு முடிவுகளை எடுத்திருந்தால் இதை விட நன்றாக இருந்திருப்பேன் என்ற எண்ணங்கள் எனக்கு வராதா? எப்போதும் வரும். ஹி ஹி பல சமயங்களில் அடச்சே இதுக்குத்தான் பெரியவங்க சொல்றதை கேட்டிருக்கணும் என்று சுவற்றில் முட்டிக்கொண்டிருக்கிறேன். ஆனால், நானே சொந்தமாக போராடி நானே இப்படி ஆனேன் என்பதை எண்ணிப்பார்த்து அடுத்த கட்டம் சரியா பண்றோம் என்று நானே சார்ஜ் ஏற்றிக்கொள்வேன்.

சரி, நான் எடுத்த அத்தனை முடிவுகளும் தோல்வியை நோக்கி தள்ளியிருந்தால் நான் இப்படி நினைத்து சமாதானம் ஆவேனா? என் தன்னம்பிக்கை உடைந்திருக்கும். என் மனதின் விருப்பங்களை நான் கேட்க மாட்டேன், தாழ்வு மனப்பான்மை வந்திருக்கும். எப்போதும் யாராவது என் விருப்பம் சரியா என்று எடை போட்டு பார்த்து எனக்கு சொல்ல வேண்டியிருந்திருக்கும். அப்படிப்பார்த்தால் விருப்பங்களும் அவற்றை அடைதலும் தான் நம்மை செதுக்குகின்றன போலும். எல்லா விருப்பங்களும் நிறைவேறியவனுக்கு ஒரு வித கற்றல் அனுபவம், பல விருப்பங்கள் நிறைவேறியும் அவை தவறாக போகும் போது ஒரு வித அனுபவம். விருப்பங்கள் மறுக்கப்படும் போது அதை எப்படி எதிர்கொள்கிறோம், அதை சமரசம் செய்யும் போது என்ன காரணிகளை மனத்தில் கொண்டோம் என்று அது இன்னொரு வித அனுபவம்.

எல்லாமே பாடங்கள் தானே

நான் கடந்த காலத்தில் விரும்பியது நடக்காததை குறித்து எனக்கு வருத்தம் எப்போது ஏற்படுகிறது என்றால் நான் தற்போதைய நிலையில் சந்தோசமாகவும் தன்னம்பிக்கையாகவும் இல்லாத போது மட்டுமே.

நிகழ்காலத்தில் என் வாழ்க்கை சந்தோசமாக இருந்தால் அந்த விருப்பம் நிறைவேறாததை குறித்து எனக்கு வருத்தம் இருக்காது. ஒருவேளை அதெல்லாம் சிறுபிள்ளைத்தனமாக கூட தோன்றும்.
 
Last edited:

ரோசி கஜன்

Administrator
Staff member
காதல் நிறைவேறவில்லை வேறொரு திருமணம் செய்கிறோம். அந்த கணவருடனான வாழ்க்கை அவ்வளவு சந்தோசமாக இருந்தால் அந்த மனிதரின் மீது நேசம் வந்து விடும். பழைய காதலனை குறித்து நினைப்போமா?

அம்மாவிடம் இருப்பது ஒரே பாயாச ரெசிப்பி தான். ஆனால் அம்மா பத்து வருசத்துக்கு முதல் செய்த பாயாசம் தான் இன்று செய்து கொடுத்ததை விட நினைவில் ருசிக்கும்.

நினைவுகள் அழகானவை. நிகழ்காலத்தில் நம் மனதில் திருப்தியின்மையும் கவலையும் இருக்கும் போது நான் என்னுடைய பழைய விருப்பங்கள் நிறைவேறியிருந்தால் என்று வருத்தமடைகிறோம். நான் விரும்பிய பாதையில் சென்ற என்னுடைய நண்பன் இப்போது ரொம்ப மோசமான நிலைமையில் இருக்கிறான் என்று கண்டால் அந்த fantasy தலை தெறித்து ஓடி விடும்.

பூமியில் நம் வாழ்க்கையே தக்கன பிழைத்தல் கொள்கைக்கு உட்பட்டது தான். நாம் எடுக்கும் ஒவ்வொரு முடிவுகளும். நம்முடைய ஒவ்வொரு முடிவுகளும் நமக்கு எது இலாபம் என்ற கணித்தல்களின் அடிப்படையில் வந்தவை தான். தியாகம் எல்லாம் அந்த கணித்தல்களுக்கு நாம் சூட்டிக்கொள்ளும் அழகான பெயர்கள். அதன் பின்னே ஒரு நமதோ அல்லது நம் அன்புடைய ஒருவரதோ அல்லது நம் சமூகத்தினதோ அல்லது பூமியினதோ இலாபம் இருக்கும். ஆக, கடந்த காலத்தை விட்டு விட்டு நிகழ்காலத்தில் எதை சிறப்பாக செய்யலாம் என்பது தான் என்னுடைய கொள்கை. கொள்கை என்று தான் சொன்னேன். அதை நான் கடைப்பிடிக்கிறேன் என்று அர்த்தமில்லை. :D

பல சமயங்களில் உணர்வு பூர்வமான மனம் பல சிக்கல்களை பூண்டு வைத்திருக்கும். அதை இப்படி தர்க்க ரீதியாக சமாதானம் செய்து விட முடியாது. ஆனால், எவ்வளவு அழுதாலும் கடைசியில் நிகழ்காலம் தான் முக்கியமானது, அது தான் எதிர்காலத்தை திறக்கும் சாவி என்பதை மனத்தில் வைத்திருந்தால் சரிதான். அதற்கு self love ரொம்ப முக்கியம். நம்மில் பலருக்கு அது தானே இல்லை.


வேலை செய்யும் இடத்தில் ஒவ்வொரு நாளும் நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? என் குடும்பத்தாரிடம் இருந்து என எல்லா நிலைகளிலும் என் விருப்பம் கேட்கப்படும். ஆனால் நானும் பலரிடம் கேட்டிருக்கிறேன். அவை ஏற்கப்பட்டும் இருக்கின்றன. மறுக்கப்பட்டு இல்லாவிட்டால் கேலி செய்யப்பட்டும் இருக்கின்றன. நான் அடுத்த தடவை கொஞ்சம் பெட்டராக விரும்ப கற்றுக்கொள்கிறேன்.

சிலரின் விருப்பங்களை கேட்டால் அதை எப்படி சிறப்பாக எடுத்து செல்ல முடியும் என்று சொல்லுவேன். விஷ் பண்ணுவேன். நலன் விரும்பியாக சப்போர்ட் செய்வேன். சில சமயம் என்னிடம் தங்கள் விருப்பங்களை சொல்லும் போது எனக்கு பகீரென்று இருக்கும். கண்ணைத்திறந்து கொண்டு குழியில் விழுகிறார்களே என்று! ஏனெனில் சில சமயங்களில் வாழ்க்கைக்கு வெளியில் நின்று பார்க்கும் பிறருக்கு தான் முழுமையான வடிவம் கிடைக்கும். உள்ளே இருந்து உழல்பவர்களுக்கு தெரிவதில்லை. அப்படியான சந்தர்ப்பங்களில் நான் மெல்ல அவர்களை சிந்திக்க வைத்தும் வைத்திருக்கிறேன்.

இந்த இரண்டு விசயங்களையும் எனக்கும் பலர் செய்திருக்கிறார்கள். மாற்றிக்கொண்டிருக்கிறேன். சில சமயம் கேட்காமல் அடம்பிடித்து விரும்பியதையே செய்து பிறகு ஐயோ என்று வருந்தியிருக்கிறேன்.

ஆக, விருப்பங்கள் எனப்படும் கருதுகோள்கள் எப்போதும் சரியானவையாக இருக்க வேண்டியது இல்லை என்று திறந்த மனதோடு இருந்தால் இந்த விருப்பம் என்ற விசயத்துக்கு இவ்வளவு ஹெவி வெய்ட் கொடுக்க வேண்டியதில்லை என்று நினைக்கிறேன்.

சில சமயங்களில் நம் விருப்பம் என்னவென்று நமக்கு சரியான தெளிவில்லை. நம்மிடம் விருப்பம் என்னவென்று கேட்டால். இங்கே இருக்கு ஆனால் இங்கே வரவில்லை என்று வாயை காண்பிப்பேன். அந்த மாதிரி சமயங்களில் நம் வாழ்க்கையில் நாம் சுய பரிசோதனை செய்ய வேண்டிய தருணங்கள். யாராவது வழிகாட்டியிடம் மனம் திறந்து பேச முயல்வேன். எல்லோரும் அப்படித்தான் என்று நினைக்கிறன். கவுன்சிலரிடம் கூட போவோம்.

எல்லா விருப்பங்களையும் இந்த வரையறைகளுக்குள் அடைத்து விட முடியாது. சில நம்மை விடாமல் துரத்தும். அது இல்லாத என் வாழ்க்கை டல்லாக இருக்கிறது. அதை அடைந்தவனை பார்த்து பொறாமைப்படுகிறேன் என்றால் நானாக இருந்தால் காலம் கடந்தாலாவது அதை அடைந்து விடத்தான் முயல்வேன். அப்படியான விருப்பங்களை நம்மால் அடையாமல் இருக்க முடியாது என்று எண்ணுகிறேன்.

லேனா சொல்வார். அவசியம் ஏற்பட்டால் நாமும் கடலை குடிப்போம். அவசியம் தான் ஆற்றலை தருகிறது என்று. எல்லாவற்றையும் ரொமான்டிசைஸ் செய்து ஹெவி வெய்ட் கொடுப்பது அவசியமில்லாது. பல சமயங்களில் எல்லாம் தெரிந்திரிந்தும் நம் சொந்த வாழ்க்கை என்று வரும் போது கட்டிலுக்கு கீழே படுத்துக்கொண்டு அழுவது தான் இயற்கை!
 

ரோசி கஜன்

Administrator
Staff member
இவ்விடயம் பற்றிய உங்கள் ஒவ்வொருவரினதும் எண்ணங்களை அறியும் ஆவல் எமக்குண்டு . தயங்காது இங்கே பகிர்ந்து கொள்ளுங்கள்.

இங்கு பகிரப்படும் கருத்துக்களில் உங்களுக்கு ஏதேனும் மாற்றுக்கருத்துக்கள் இருப்பினும் தயங்காது பகிர்ந்து கொள்ளுங்கள் . விவாதிக்கலாம்.
 

ரோசி கஜன்

Administrator
Staff member
முதன் முதலில் இவ்விடயம் பற்றிய பேச்சை ஆரம்பித்த சுகிர்தா அவர்களின் விரிவான விளக்கம் .

இவ்விடயம் பற்றி எங்களை எண்ண வைத்து , எழுதுவதையே மறந்திருந்த என்னை மீண்டும் கொஞ்சமே கொஞ்சமாகச் சரி எழுத வைத்்துக்கு அன்பும் நன்றியும் சுகிர்தா!


  • இந்தப் பதிவு எழுதுவதற்குப் பின்னால் நிறைய சுவையான பல நிகழ்வுகள் இருக்கின்றன.

  • நாளாந்தம் என் அனுபவத்தில் நான் காணும் மனிதர்களின் இயல்பான செயற்பாடுகளைக் கூர்ந்து அவதானிப்பது எனக்கு மிகவும் பிடித்தமானதொரு விடயம். அதிலும் சிறுவர்களின் இயல்பை ரசிப்பதென்பது இன்னும் ஆனந்தம். அதேமாதிரித்தான் குடும்ப உறவுகளுக்குள் நிகழும் உரையாடல்களும்... அம்மா பிள்ளை, அப்பா பிள்ளை, கணவன் மனைவி, காதலர்கள், நண்பர்கள் இவர்களுக்கிடையேயான பொதுவெளியில் இடம்பெறும் உரையாடல்கள், இவர்களுடன் நானும் ஓர் அங்கமாகும்போது சுவாரசியம் இன்னும் கூடுதலாக இருக்கும். இதற்கெல்லாம் அடிப்படைக் காரணம் அவர்களின் இயல்பான, நகைசுவையுடன் கூடிய அதேநேரம் மற்றவரைப் புண்படுத்தாத இயல்பான அணுகுமுறைகளேயாகும். இந்த இயல்பில்லாத அணுகுமுறைகளே எம்மவர்களிடமிருந்தும் என்னை மிகவும் விலத்தியும் வைக்கிறது எனலாம்.



உதாரணமாக,
  • பிறந்து இரண்டு வாரங்களேயான பிள்ளையுடன் ஓர் அம்மா வருகிறார். தான் என்ன செய்கிறார், அந்தப் பிள்ளைக்காக என்ன செய்கிறார் என்பதை மிகவும் சுவாரசியமாக பிள்ளையுடன் கதைத்தப்படி அனைத்தையும் செய்துமுடித்துவிட்டுச் செல்கிறார். அந்தப் பிள்ளையிடமிருந்து எந்தப் பதிலுமிருக்காது என்பது அனைவருக்குமே தெரியும், அப்படியிருக்க ஏன் அவர் பிள்ளையிடம் அனைத்தையும் சொல்லி, கேட்டுச் செய்கிறார்?

  • இரண்டாவது, ஒரு வயோதிகத் தம்பதிகள். மனைவியின் கண்ணசைவிலேயே கணவர் அவரின் வேண்டுகோளை இயல்பாகப் புரிந்துகொண்டு நிறைவேற்றி வைக்கிறார்.

  • இந்த இரு உதாரணங்களில் இருந்தும் உங்களால் எதை உணர முடிகிறது?

  • பிள்ளை வளர்ப்பிலிருந்து, கணவன் மனைவி உறவு வரை எம் சமூகத்தில் எவ்வாறான நடைமுறைகள் இருக்கின்றன? எம் விருப்பங்கள் மதிக்கப்படுகின்றனவா? என்ற ஓர் ஒப்பீடே என்னை மிகவும் சிந்திக்க வைப்பதாக இருந்தது. என்னை ஒரு சிறுமியினிடத்தில் வைத்துப்பார்த்த போதே இந்தக் கேள்விகள் என்னுள் எழுந்தன!

  • என்று எம்மை நாமே கேள்வி கேட்கத் தொடங்குகிறோமோ, எம்மை நாமே நேசிக்கத் தொடங்குகிறோமோ அந்தக் கணத்திலிருந்து உலகம் உங்களுக்குப் புதிதாகத் தோன்றும். இந்த விடயங்களில் எமக்கு (எம் சமூகத்தில்) பல இடங்களில் முட்டுக்கட்டையாக இருப்பது எம்மைச் சுற்றியுள்ள உறவுகளே!
 

ரோசி கஜன்

Administrator
Staff member
இது பற்றிய உங்கள் பொதுப்படையான கருத்து என்ன?

  • ஒருவரின் விருப்பங்கள் சார்ந்து கேட்பது என்பது யாரால், எந்த இடத்தில், எதுசார்ந்து கேட்கப் படுத்தல் என்ற ஒன்று இருக்கிறது. மற்றையது மனவிருப்பு சார்ந்த சின்னச் சின்ன விருப்புக்களை முன்னிறுத்திக் கேட்கப்படுவது. நான் கேட்க நினைத்ததும் இந்தச் சின்னச் சின்ன விருப்பங்களை முன்னிறுத்தியே!

  • ஏன் எம்மில் பலர் இந்த விருப்பங்களைக் கவனத்திலேயே கொள்வதில்லை? சிறுவர்களுக்கும், பெண்களுக்கும் ஏன் இந்த பாரபட்சம்?


நீங்கள் இக்கேள்வியை எதிர்கொண்டுள்ளீர்களா?

  • உண்மையைச் சொல்வதானால் என்வாழ்வைத் தாயகம் புலம் என்று இரண்டாகப் பிரிக்க வேண்டும். தாயகத்தில் இருந்த என்னை இப்போதெல்லாம் எனக்கே பிடிப்பதில்லை. நல்லபிள்ளையாக இருக்கவேண்டுமென்று என் அழகான அந்த இளம்பராயத்தைத் தொலைத்துவிட்டேனே என்கின்ற என்மேலான கோபம் இப்போதெல்லாம் அனேகமாக இருக்கிறது. எனக்கு என்ன விருப்பம் என்பதைக் கூட வாய்திறந்து சொல்லத் தயங்கியவளாகவே இருந்துள்ளேன் என்று புலத்திற்கு வந்த பின்பே உணரத்தொடங்கினேன். அன்றும் சரி, இன்றும் சரி ஆடம்பரங்களில் எனக்கு அதிகம் நாட்டம் இருந்ததில்லை. அதனாலேயே இருப்பதைக்கொண்டு, ரோசி அக்கா உங்களைப்போலவே மனநிறைவோடு இருப்பதால், அதையும் தாண்டிய என் தேவைகள் அம்மாவால் நிறைவேற்றப்பட்ட படியால் அதிகம் அடம்பிடித்ததுமில்லை. ஏமாற்றமடைந்ததுமில்லை.

  • புலம்பெயர்ந்த பின்பு இந்த உலகம் எனக்கு வேறொரு பக்கத்தைக் காட்டியது. நான் யார், என் விருப்புக்கள் என்ன, நான் எதை எண்ணுகின்றேன், எதை விரும்புகின்றேன் என்பதை உணரத் தொடங்கிய பின்பே நான் ஒரு புதிய பிறவியை எடுத்ததாக உணர்கின்றேன். அதற்காக நான் கொடுத்த விலைகளும் நிறைய உண்டு. பட்டங்களும் உண்டு. அவற்றில், «திமிர்பிடித்தவள்» என்பது எனக்கு மிகவும் பிடித்த பட்டம். இங்கே வந்தபின்னான என் விருப்பங்கள் (திருமணத்தின் பின்) அவை ஆரோக்கிமானவையாகவும், வாழ்க்கைக்குத் தேவையானவையாகவும் மட்டுமே இருந்துள்ளன. என் விருப்பங்கள் அநேகமானவை நான் கேட்காமலேயே என் கணவனால் நிறைவேற்றப்பட்டுள்ளன. கேட்ட விருப்பங்களுக்கும் இதுவரை இல்லை என்ற பதில் வந்ததில்லை. சில நேரங்களில் என் விருப்பங்கள் வீட்டுப் பொருளாதாரத்தை தாக்கம் செலுத்துவனவாகவும் இருந்திருக்கின்றன. அவ்வேளைகளில் இருவரும் மிகவும் சிக்கனமாகவும் இருக்கவேண்டிய கட்டாயத்தில் இருந்திருக்கிறோம். அனேக காலங்கள் கணவனின் ஓய்வு நேரத்தைக் கூட எனக்காகக் களவாடியிருக்கின்றேன். ஆக மொத்தத்தில் அவை அனைத்துமே நிறைவேறியும் இருக்கின்றன.

உங்கள் விருப்பை வெளிப்படையாக சமரசங்கள் இன்றி சொல்ல முடிந்ததா அவ்விருப்புக்கள் வெற்றி பெற்றனவா?


  • நிச்சயமாக! சமரசம் செய்யவேண்டிய தேவை இருக்கவில்லை. என் விருப்பங்கள் அனைத்தும் வாழ்வின் அடுத்தகட்ட நகர்விற்கான படிகளாகவோ, முதலீடாகவோ தான் அதிகம் இருந்திருக்கின்றன. அது கல்விசார்ந்து, பொதுமக்கள், பொது விடயங்கள் சார்ந்து அமைந்திருக்கின்றன. அதனால் அவற்றை அடைவதற்காக, என் கணவரும் நானும் ஒன்றாக வேலைகளைப் பங்குபோட்டு, பல விட்டுக்கொடுப்புக்களையும் தியாகங்களையும் செய்துள்ளோம். இன்று பிள்ளைகளும் அவ்வாறே, எல்லாமே அவரவர் விருப்பங்களை மதித்து ஒருவருக்கு ஒருவர் உதவியாக இருந்ததாலேயே சாத்தியமாகியது!

  • இதுவரைக்கும் நீங்கள் இக்கேள்வியை யார் யாரிடம் எச்சந்தர்ப்பங்களில் கேட்டுள்ளீர்கள்?

  • உங்களை நாடிவந்த அவர்களின் விருப்புக்கள் உரிய அங்கீகாரம் பெற்றனவா?

என் குடும்பம், உறவுவட்டம், நண்பர்கள் எல்லாமே மிகவும் சிறிது. கூடுதலானவரை அவர்களின் உணர்வுகளை, விருப்பங்களை மதித்தே நடப்பதால் என்னால் முடிந்தவரை அவர்களிடம் கேட்காமலேயே அவர்களின் சின்னச் சின்ன விருப்பங்களை நிறைவேற்றுவேன்.

அனேகமாக இந்தப் புரிதல்களுக்குள் பணம் என்ற ஒன்றை நான் அனுமதிப்பதற்கு விரும்புவதில்லை. அதை உள்நுழைய விட்டாலே எதோ ஒன்றிற்கு கட்டுப்படுவதாக, எதிர்பார்ப்புக்களைத் தூண்டுவதாக உணர்வதால் அநேகமானவரை தவிர்த்தே வந்துள்ளேன். இந்த நடைமுறை என் பிள்ளைகளுக்கும் பொருந்தும். சிறு வயதிலிருந்தே அவர்களின் அத்தியாவசிய தேவைகள் தவிர்ந்த ஏனைய விருப்புக்களை உடனடியாக நிறைவேற்றியதில்லை. அவர்கள் ஒன்றை அடைவதற்கு தமது உழைப்பை, நேரத்தை, ஒன்றிற்கான காத்திருப்பை உணர்ந்தவர்களாக இருக்க வேண்டும் என்று விரும்புவேன். அதற்காக அவர்களுடன் இணைந்து திட்டங்களை வகுத்து செயலாற்றுவேன்.

இங்கே சமரசங்கள் நிறைய உண்டு. நான் எதை மற்றவர்களிடம் எதிர்பார்க்கின்றேனோ, அதையே மற்றவர்களுக்கும் தாராளமாக செய்கின்றேன். உங்கள் இயல்பு எதுவோ, நீங்கள் யாராக இருக்கிறீர்களோ, அவ்வாறே உங்களை நான் ஏற்றுக்கொள்கிறேன். முரண்படும் விடயங்களைத் தாண்டி இயல்பாக உறவாட விரும்புவேன். இதுவே, குடும்பம் உறவுகள் என்று வரும்போது சில வரையறைகளை வைப்பதுண்டு. என்னளவிலான காரண காரியங்களை புரிந்துகொள்பவர்களை நானும் அவர்களின் விருப்புகளை மதிப்பதோடு அவர்களில் அதிகம் அக்கறையாகவும் இருக்கிறேன்.

இந்தக் கேள்வி ஒரு நீண்ட விவாதத்திற்கு உட்படுத்தப் படவேண்டிய ஒன்று. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான நியாயப்பாடுகள் இருக்கின்றன. அதனால் ஒருவருக்கு சரி என்று படுவது இன்னொருவருக்குத் தவறாகவும் தெரியலாம். அதனால் அவரவர் விருப்பங்களை கேட்டு நிறைவேற்றி வைக்காவிட்டாலும் பரவாயில்லை, அவர்களையும் அவர்கள் உணர்வுகளையும் கேலிக்குரியதாக்காமல் இருந்தாலே போதுமானதாக இருக்குமென்று நினைக்கின்றேன்.

உங்கள் விருப்புக்களை மற்றவர்களில் திணிக்காமலும் இருக்கப் பழகுங்கள்.
 

ரோசி கஜன்

Administrator
Staff member
இவ்விடயம் பற்றிய உங்கள் ஒவ்வொருவரினதும் எண்ணங்களை அறியும் ஆவல் எமக்குண்டு . தயங்காது இங்கே பகிர்ந்து கொள்ளுங்கள்.

இங்கு பகிரப்படும் கருத்துக்களில் உங்களுக்கு ஏதேனும் மாற்றுக்கருத்துக்கள் இருப்பினும் தயங்காது பகிர்ந்து கொள்ளுங்கள் . விவாதிக்கலாம்.
 
Top Bottom