'அடிக்கடி’ என்ற சொல்லை அடிக்கடி பயன்படுத்துகிறோம். ஒன்றைத் தொடர்ந்து சீரிய இடைவெளியின்றி நிகழ்த்துவது, செய்வது, பயன்படுத்துவது, தொழிற்படுவதனை அவ்வாறு சொல்கிறோம். ஒன்றினைத் திரும்ப திரும்பச் செய்வது, ஒன்றினை மறுபடி மறுபடி செய்வது.
“அடிக்கடி தப்பு செய்யறே...”
“எனக்கு மட்டும் ஏன் இது அடிக்கடி நடக்குது ?”
“குழந்தைக்கு அடிக்கடி காய்ச்சல் வருது...”
அடிக்கடியின் பொருள் என்ன ? பார்ப்போம். அடிக்கடியை ‘அடிக்கு அடி’ என்று பிரிக்கலாம்.
இங்கே அடி என்பது செய்யுளின் ஒரு வரியைக் குறிக்கும். செய்யுளின் ஒரு வரியில் ஒரு சொல்லையோ ஓர் உவமையையோ ஓர் அணியையோ பயன்படுத்துகிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். அது ‘அடிக்கு அடி’ செய்யப்படுவதாகும். எழுத்து, சீர், அடி, தளை, தொடை போன்றவை யாப்பிலக்கணச் சொற்கள். குறள் வெண்பா ஈரடிகளைக் கொண்டது. வெண்பாவின் ஈற்றடிக்கு முச்சீர்கள். இப்படி யாப்பிலக்கணத்தில் அடியாகக் குறிப்பிடுவார்கள். அடிதோறும் செய்யப்படுவதை ‘அடிக்கு அடி’ என்பார்கள்.
அப்படி யாப்பில் சொல்லப்படும் ‘அடிக்கு அடி’ என்பது பேச்சிலும் பரவி ‘அடிக்கடி’ என்ற தொடராயிற்று. பலரும் அறியாத யாப்பிலக்கணப் பெயரொன்று பாமரரும் பயன்படுத்தும் அடிக்கடி என்ற சொல்லாட்சியாக மாறி நிற்கிறது. தமிழின் உயரடுக்கில் வீற்றிருக்கும் இலக்கணத்திற்கும் மொழியைப் பேச்சு மட்டத்தில் பயன்படுத்தும் எழுதப் படிக்கத் தெரியார்க்குமே தொடர்பு இருக்கிறது என்பதற்கு ‘அடிக்கடி’ நல்ல சான்று.
மகுடேசுவரன் அண்ணா