ஒரு சொல்லைப் பயன்படுத்தும்போது அடிக்கடி அச்சொல்லைச் சுட்டிக் காட்டிப் பயன்படுத்த நேரும். குருவி மரத்தில் அமர்ந்தது – என்று இருக்கிறது. அங்கே மேலும் ஒன்றைச் சொல்ல நேர்ந்தது என்றால் என்ன சொல்வோம் ? அக்குருவி அழகாக இருந்தது என்று தொடர்வோம். குருவி மரத்தில் அமர்ந்தது. அக்குருவி அழகாக இருந்தது. இவ்வாறு அமையும். குருவியைச் சுட்டிச் சொல்லுமிடத்தில் அ என்ற சுட்டெழுத்தினைப் பயன்படுத்துகிறோம். பெயர்ச்சொற்களை இவ்வாறு குறிப்பிட்டுத் தொடர்ந்து பயன்படுத்த வேண்டும்.
அங்கே மாடு மேய்கிறது. அம்மாட்டிற்குக் கொம்புகள் பெரிதாக இருந்தன.
பாடம் படித்தான். அப்பாடத்தில் அவனுக்கு ஐயம் இருந்தது.
இவ்வாறு ஒரு பெயர்ச்சொல்லை மேலும் மேலும் பயன்படுத்துகையில் சுட்டிச் சொல்லவேண்டும். இதற்குப் பயன்படும் எழுத்துகள் சுட்டெழுத்துகள் எனப்படும். அ, இ, உ, எ ஆகியன அத்தகைய சுட்டெழுத்துகளாகப் பயன்படும். ஒரு பெயர்ச்சொல்லின் முன்னே இவ்வெழுத்துகளைச் சேர்த்தால் போதும். அவற்றுக்குச் சுட்டும் பொருள் வந்துவிடும்.
அ என்பது தொலைவில் இருப்பதனைக் குறிப்பதால் சேய்மைச் சுட்டு எனப்படும். அக்காடு, அத்தோட்டம், அக்கரை.
இ என்பது அருகில் இருப்பதனைக் குறிப்பதால் அண்மைச் சுட்டு ஆகும். இக்காடு, இத்தோட்டம், இக்கரை.
உ என்பது அருகிலும் இல்லாமல் தொலைவிலும் இல்லாமல் இடையில் இருப்பதைச் சுட்டுவது. இச்சுட்டெழுத்து யாழ்ப்பாண வழக்கில் உண்டு. அது, இது, உது, எது என்பர்.
எ என்னும் எழுத்து சுட்டுப் பொருளில் வினாப்பொருள் உணர்த்துவது. அதனால் இதனை வினாச்சுட்டு என்பர். எக்காடு, எத்தோட்டம், எக்கரை.
இவற்றைப் பயன்படுத்தாமல் ஒரு பெயர்ச்சொல்லைத் தொடர்ந்து ஆள இயலாது. உயர்திணையில் சுட்டெழுத்துகளின் வழியாகத்தான் அவன், அவள், அவர், இவன், இவள் இவர் என ஆள்கிறோம். “முருகன் பாடட்டும், அவன் பாடுவது எனக்குப் பிடிக்கும்” என்று தொடர்களை அமைப்போம்.
இத்தகைய சுட்டெழுத்துகளை ரகர, லகர வரிசையில் தொடங்கும் பெயர்ச்சொற்களுக்குப் பயன்படுத்த இயலாது. ரகர லகர எழுத்துகளில் தொடங்கும் சொற்கள் பிறமொழிச் சொற்களாகத்தான் இருக்கும். இரத்தம், இலாபம் ஆகிய சொற்களின் முன்னே அ, இ, எ சேர்ப்பது எப்படி ? அர்ரத்தம், அல்லாபம் எனல் இயலாது. என்ன செய்வது ?
தமிழல்லாத பிறமொழிச் சொற்களைச் சுட்டுவதற்காகத்தான் எச்ச நீட்சியாக இச்சுட்டு எழுத்துகள் மாறுகின்றன. அந்த இந்த எந்த என்று ஆகின்றன. இப்போது சுட்ட முடியும், அந்த இரத்தம், இந்த இலாபம் என்று வரும். பிறமொழிச் சொற்களைச் சுட்டத் தோன்றிய அந்த, இந்த, எந்த ஆகியன அந்தக் காடு, இந்தத் தோட்டம், எந்தக் கரை என்றும் எல்லாச் சொற்களின் முன்னும் பரவின.
ஒரு சொல்லைச் சுட்டெழுத்துகளைக் கொண்டு அமைக்கும்போது அந்தக் காடு என்பதனைவிடவும் அக்காடு என்று பயன்படுத்துவதே சிறப்பானது.
- கவிஞர் மகுடேசுவரன்