இதயத் துடிப்பாய்க் காதல் - 20

நிதனிபிரபு

Administrator
Staff member
அத்தியாயம்-20


ஜெர்மனியில் வெய்யில் காலம் கடந்துசெல்ல, இலையுதிர் காலம் உள்ளே புகுந்துகொண்டிருந்தது. பகல் பொழுதில் வெப்பமாக இருந்தாலும் இரவுப் பொழுதுகள் குளிரைத் தாங்கி நின்றன. மெல்லிய குளிர் காற்று இலைகளை இடம் பெயர்த்து, நிலத்தில் வீசிக்கொண்டிருந்தது. இலைகளோ, பச்சை, மஞ்சள், சிவப்பு என்று பலவர்ண ஜாலங்கள் காட்டி, பார்ப்போரை தன்னழகில் சொக்கவைத்துக் கொண்டிருந்தன.

அந்த அழகான காலநிலையை அனுபவிக்கும் உணர்வற்றவளாக, தன்னறையின் ஜன்னல் வழியே வெளியை வெறித்துக்கொண்டிருந்தாள் சனா.

உள்ளம் இனம் புரியா அவஸ்தையினால் தவித்துக்கொண்டிருந்தது. அன்று ஞாயிற்றுக்கிழமை அவளைத் திட்டிவிட்டுப் போனவன், இதோ இன்றோடு மூன்றாவது நாளாகியும் அவளோடு கதைக்கவே இல்லை. அவளும் எத்தனையோ தடவைகள் முயன்றுவிட்டாள், பலன் என்னவோ பூஜ்ஜியம்தான்.

அன்று அவள் சற்றுக் கோபமாகப் பேசிவிட்டாள் தான். அதுவும் அவன் தாத்தா பாட்டியை அப்படிப் பேசியது தவறுதான். ஆனால், அதற்குக் காரணம் அவன் மேல் வைத்துவிட்ட அளவற்ற அன்பல்லவா!

அக்காவாக இருந்தாலும், ஒருவர் அவனைக் குறையாகச் சொல்வதைக் கேட்கும் சக்தி அவளிடம் இல்லையே! அதனால் தானே அப்படி வெடித்தாள்.

ஆனாலும், அவளின் பேச்சுப் பிழை என்று உணர்ந்த நொடியில் இருந்து, எத்தனையோ தடவைகள் மன்னிப்புக் கேட்டு மெசேஜ்கள் அனுப்பி விட்டாள். அப்படி இருந்தும் அவன் கோபம் போகவில்லையா என்று அவள் யோசித்துக்கொண்டிருக்க, அவள் நினைவுகளின் நாயகனே செல்லில் அழைத்தான்.

ஓடிச்சென்று கட்டிலில் கிடந்த கைபேசியைத் தூக்கினாள்.

‘சூர்யா அழைக்கிறான்’ என்று அதில் ஒளிரவும், கண்கள் கலங்க அதை ஆன் செய்து காதுக்குக் கொடுத்து, “சூர்யா…” என்றாள் நெஞ்சை உருக்கும் குரலில்.

அந்தப் பக்கம் சில நொடிகள் நிசப்தம். இப்போது மனம் தடதடக்க, “சூர்யா…?” என்றாள் மீண்டும் ஆவலோடு கேள்வியாக.

“நான்தான். இன்று மாலை உனக்கு டொச் வகுப்பு இருக்கிறதுதானே?” என்று கேட்டவனின் குரலில் என்ன இருந்தது? ஒட்டாமை? ஆனால், அதை உணரும் நிலையில் அவள் இல்லை.

“அங்கு சந்திப்போமா சூர்யா..?” ஆசை, எதிர்பார்ப்பு என்று ஆவலே நிறைய அவள் கேட்க, “ம். வா அங்கு பேசலாம்.” என்றவன் கைபேசியை வைத்துவிட்டிருந்தான்.

அவளுக்கு அதுகூடக் குறையாகத் தெரியவில்லை. அவன் அவளோடு கதைத்துவிட்டான். அதுதான் நினைவில் நின்றது. மாலை அவனைப் பார்க்கப் போகிறோம் என்கிற ஆவலில் என்ன செய்வது என்றே தெரியாமல் அறையிலேயே அங்குமிங்கும் நடந்தாள்.

இதழ்களில் இளம் புன்னகை. ஏதோ அவனை இன்றுதான் முதன் முதலாக பார்க்கப் போவதுபோல்.

இப்போதே அவனைப் பார்த்துவிடமாட்டோமா என்று ஏக்கமாக இருந்தது. நொடிக்கொரு தடவை சிவரில் தொங்கிய மணிக்கூட்டைப் பார்த்துப் பார்த்தே நேரத்தை ஓட்டியவளுக்கு பெரும் சந்தேகம் ஒன்று வந்தது.

அது அவர்கள் சந்திப்பது டொச் வகுப்புத் தொடங்க முதலா அல்லது முடிந்தபிறகா என்பதுதான்.

அதைக் கேட்பதற்கு என்கிற சாட்டை வைத்து அவனுக்கு செல்லில் அழைத்தாள். ம்கூம், அவன் எடுக்கவில்லை. ஆனாலும் அது அவளைப் பாதிக்கவில்லை.

எப்போதும் முடிந்தபிறகுதான் சந்திப்பது வழக்கம். இன்று எதற்கும் இருக்கட்டும் என்று, வகுப்புத் தொடங்குவதற்கு ஒரு மணித்தியாலம் முன்னதாகே பள்ளியை நோக்கிச் சென்றாள்.

முதன்முதலில் அவர்கள் சந்தித்துக்கொண்ட இருக்கையில் அமர்ந்தவள், அன்று அவன் இருந்த ஓரத்தை தடவிக்கொடுத்தாள். ஏதோ அவனையே தடவுவது போன்ற பிரமை. அவனின் கதகதப்பு அதில் இன்னும் ஒட்டியிருப்பது போன்ற எண்ணம்.

அவனுக்காக் காத்துக் காத்து அவள் கண்கள் பூத்துப் போனதுதான் மிச்சம். டொச் வகுப்புக்கான மற்றவர்கள் வந்து, “உள்ளே வரவில்லையா நீ..?” என்று கேட்டபோதும், “நீங்கள் போங்கள். வருகிறேன்..” என்றவள், அவளின் ஆசிரியரும் வந்தபிறகுதான் உள்ளே சென்றாள்.

சும்மாவே அவளுக்கு டொச் விளங்கிக் கொள்வது கஷ்டம். இன்று ஒன்றுமே விளங்கவில்லை.

கடனே என்று அமர்ந்திருந்தவள், வகுப்பு முடிந்ததும் முதலாவது ஆளாக வெளியே வந்தாள். வந்தவளின் கண்கள், அவள் சற்று முன் அமர்ந்திருந்த மரத்தடியை வேகமாக நோக்க, அங்கே சூர்யா அமந்திருந்தான்.

அவளுக்காகத்தான் அவன் காத்திருக்கிறான் என்பதில் பூவாய் மலர்ந்தது அவள் முகம்.

“சூர்யா…” என்றபடி அவனருகே ஓடியவள், அவன் கையைப் பிடித்துக்கொண்டு அவனை நெருங்கி அமர்ந்தாள்.

“என்ன சூர்யா. ஏன் இவ்வளவு நாட்களும் நீங்கள் என்னோடு கதைக்கவில்லை. மேசேஜ்களுக்கு கூடப் பதிலில்லை. தாத்தா பாட்டியைப் பற்றி அன்று நான் அப்படிச் சொன்னதற்காகவா? நான் கதைத்தது பிழைதான். என்னை மன்னித்துக் கொள்ளுங்கள். ஆனால் எதற்காகவும் இனி இப்படி என்னோடு கதைக்காமல் இருக்காதீர்கள் சூர்யா..” என்றாள் கண்களில் கண்ணீர் மல்க. அவளைப் பொறுத்தவரையில் அவர்களுக்குள் இருப்பது அந்தப் பிரச்சினை ஒன்றுதான்.

அவன் எதுவுமே பேசவில்லை. அவளையே பாத்திருந்தான்.

“இப்போது கோபம் போய்விட்டதுதானே. நானும் இனி உங்களிடம் கோபப் படமாட்டேன். ஒரு நாள் கோபப் பட்டுவிட்டு இந்த மூன்று நாட்களும் பட்ட பாடு இருக்கே! அம்மாடி! இனி ஒருபோதும் அந்தத் துன்பம் வேண்டாம்.” என்றாள் தழுதழுத்த குரலில்.

“உங்களைக் காணாமல் எனக்குப் பைத்தியமே பிடிக்காத குறை தான். இனி இப்படிச் செய்யாதீர்கள்..” என்றபடி அவன் தோளில் சாய்ந்துகொண்டவளின் உள்ளம், அந்தத் தோள் மட்டுமே காலம் முழுவதுக்கும் போதும் என்று எண்ணிக்கொண்டது.

அப்போதும் அவன் அமைதியாக இருக்க, நிமிர்ந்து பார்த்து, “என்ன சூர்யா. ஏன் அமைதியாக இருக்கிறீர்கள்? உடம்புக்கு ஏதுமா..?” என்று கேட்டாள் இதமாக.

“இல்லை. நன்றாகத்தான் இருக்கிறேன். முக்கியமான விஷயம் ஒன்று கதைக்கவேண்டும் என்றேனே..” என்றான் அவன்.

“அமாம். நானும் கேட்கவேண்டும் என்று நினைத்துக்கொண்டிருந்தேன். என்ன விஷயம் சூர்யா?” என்று அவள் சாதாரணமாகக் கேட்க, “இனிமேல் எனக்கு மெசேஜ் எதுவும் அனுப்பாதே. நாம் பேசிக்கொள்ளவும் வேண்டாம்..” என்றான் அவன்.

“ஏன் சூர்யா? உங்களோடு கதைக்காமல், மெசேஜ் அனுப்பாமல் என்னால் இருக்க முடியாதே…” என்றவளிடம்,

“இருக்கப் பழகு!” என்றான் அழுத்தமாக.

“ஏன்..?” என்று மீண்டும் அவள் கேட்க, “நாம் பிரிந்துவிடலாம்..” என்றான் அவன்.

“புரியவில்லை..” அவன் சொன்னதன் பொருளை ஆழமாக யோசிக்காமல் அவனை ஏறிட்டாள் லட்சனா. அவளைப் பொறுத்தமட்டில் அவர்களுக்குள் எதுவும் நடந்துவிடவில்லை. அவன் கோபம் எப்போதும் உள்ளதுதானே என்பதுதான் அவள் எண்ணமாக இருந்தது.

“நமக்குள் ஒத்துவராது. அதனால் நீ உன் வழியைப் பார். நான் என் வழியைப் பார்கிறேன்.” என்றான் அவன் இன்னும் தெளிவாக.

அப்போதும் புரியாமல் அவனை ஏறிட்டவளுக்கு, அவன் சொன்னதன் அர்த்தம் விளங்கத் தொடங்க, நெஞ்சுக்கூடு தடதடக்கத் தொடங்கியது.

ஆனாலும் அவன் பேச்சை பெரிதாக எடுக்காமல் இருக்க முயன்றபடி, “விளையாடாதீர்கள் சூர்யா.” என்றாள், தன்னை நிதானமாகக் காட்டி.

“என்னைப் பார்த்தால், விளையாட்டுப் பேச்சு பேசுபவன் போலவா இருக்கிறது…” அழுத்தமான குரலில் அவன் கேட்க, அப்போதுதான் அவன் முகத்தைக் கூர்ந்து கவனித்தாள். அதில் காதல் இல்லை. ஏன் அவள் மீதான கோபமும் இல்லை. உணர்ச்சிகளைத் துடைத்த முகமாக இறுகிக் கிடந்தது.

அதைப் பார்த்ததும் அவள் நெஞ்சில் ஒரு நடுக்கம். அவன் சொல்லப் போவதைக் கேட்காமல் ஓடிவிட்டால் என்ன என்று கூடத் தோன்றியது.

“ஆனால்.. நீங்கள் சொல்வதன் அர்த்தம் உங்களுக்குப் புரியவில்லையா..?” என்றவளின் உள்ளம் ஏனோ உதறியது.

“சொல்வதன் அர்த்தம் புரியாமல் போக நானென்ன குழந்தையா?” என்று எரிந்து விழுந்தான் அவன். “நீதான் புரியாமல் பேசுகிறாய். யோசித்துப்பார். நாம் ஒருவரை ஒருவர் நேசிக்கத் தொடங்கியதில் இருந்து இன்றுவரை, சந்தோசமாகக் கழிந்த நேரத்தை விட சண்டை பிடித்ததுதான் அதிகம். அப்படி வாழ்க்கையையும் ஓட்ட முடியாது.” என்றான் அவன், பொறுமையை இழுத்துப் பிடித்த குரலில்.

“ஏன் சூர்யா, இப்படிப் பெரிய பெரிய வார்த்தைகளைப் பேசுகிறீர்கள்..?” என்று தவிப்போடு அவள் கேட்க, அவன் அமைதி காத்தான்.

அந்த அமைதியைத் தாங்க முடியாது, “இனிமேல் நான் சண்டையே பிடிக்கமாட்டேன். அன்று நடந்ததற்காக என்னை மன்னியுங்கள். ஆனால் வேடிக்கைக்குத் தன்னும் இப்படிப் பேசாதீர்கள். எனக்கு வேதனையாக இருக்கிறது..” என்றவளின் குரல் நடுங்கியது. கண்களில் கண்ணீர் இதோ இதோ என்று துளிர்த்தது. அழுதால் அவனுக்குப் பிடிக்காதே என்று கண்ணீரை உள்ளிழுத்துக் கொண்டாள்.

“ப்ச்!” என்று சலித்தான் அவன். அடுத்தவருக்கு விளக்கம் சொல்லிப் பழக்கம் இல்லாததால் பொறுமையை இழுத்துப் பிடித்தபடி பேசத் தொடங்கினான்.

“எதையும் நான் வேடிக்கைக்கும் சொல்லவில்லை. விளையாட்டுக்கும் சொல்லவில்லை. அதை முதலில் நன்கு புரிந்துகொள்!” என்று அழுத்திச் சொன்னவன், தான் சொன்னதை அவள் உணர்ந்துகொள்ள அவகாசம் கொடுப்பது போல் சற்று அமைதியாக நின்றான்.

அவளோ அவன் பேசும் மொழியே புரியாதவள் போல் திகைத்து நின்றாள்.

“நிதானமாக இருந்து யோசித்தால், நமக்குள் ஒத்துவராது என்பது உனக்கே புரியும். நமக்குத் திருமணம் நடந்தாலும் இரண்டு நாட்களில் பிரிந்து நிற்போம். அதற்கு அது நடக்காமல் இருப்பதே மேல். அதுதான் பிரிந்துவிடலாம் என்கிறேன். எனக்கு நீ ஒத்துவர மாட்டாய். உனக்கு நான் ஒத்துவர மாட்டேன்.” என்றான் அவன் பிசிறற்ற குரலில்.

பேச்சு மூச்சற்றுப் போனது அவளுக்கு. இந்த மூன்று நாட்கள் பிரிவையே தாங்க முடியாது அவள் தவிக்கையில் நிரந்தரப் பிரிவா? அவனின்றி வாழ அவளால் முடியுமா?

அவளால் வாயை திறக்கவே முடியவில்லை. கண்களில் கண்ணீர் வழிய, “ஏ..ன் இப்படியெல்லாம் சொல்கிறீர்கள் சூர்யா. வேண்டாமே.. என்னால் தாங்கமுடியவில்லை…” என்றாள் வேதனையோடு.

“நீங்கள் சும்மா… சும்மாதானே இதெல்லாம் சொல்கிறீர்கள்…” ஆமாம் என்று சொல்லிவிடு என்று மன்றாடியது அவள் குரல்.

“நான் சும்மா சொல்லவில்லை!” என்றான் அவன் கடினமான குரலில்.

அவள் அவனைத் திகைப்போடு பார்க்க, “உன்னோடு பழகுவது எனக்கு மூச்சு முட்டுகிறது. அன்பு என்கிற பெயரில் உனக்கு அடிமையாக வாழ என்னால் முடியாது. பாசம் காட்டுகிறேன் என்று நீ செய்யும் செயல்கள் சினமூட்டுகிறது.” என்றான் கடினப்பட்ட குரலில். அடக்கப்பட்ட ஆத்திரம், இதுநாள் வரை அடக்கிவைத்திருந்த கோபம் அத்தனையையும் இன்று காட்டினான்.

அவன் அவள் அடிமையா? என்ன கதை இது? அவள் தானே அவன் அடிமை. அதுவும் இஷ்டப்பட்டு அவன் காலடியில் அவள்தானே கிடக்கிறாள். கடைசிவரையும் அவன் காலடிதான் வேண்டும் என்று அவள் நெஞ்சம் கதறுவது அவன் காதில் கேட்கவில்லைய?

“ஒருவர் மேல் அளவற்ற அன்பு காட்டுவது குற்றமா சூர்யா..?” நொந்த குரலில் கேட்டாள் சனா.

“நீ காட்டியது அன்பல்ல, அடக்குமுறை!” என்றான் அவன் இரக்கமே இல்லாமல்!
 

நிதனிபிரபு

Administrator
Staff member
“என்னது அடக்குமுறையா?” அதிர்ந்துபோய் அவள் கேட்க, “அடக்குமுறை இல்லாமல் வேறென்ன?” என்று வெடித்தான் அவன்.

“எப்போ பார், மெசேஜ் மெசேஜ்! சாப்பிட்டாயா?தூங்கினாயா? இருந்தாயா? எழுந்தாயா? என்று மனிதனை ஒரு நிமிடமாவது நிம்மதியாக இருக்க விடுகிறாயா? காலையில் தூங்க விடுவதில்லை. நண்பர்களோடு இருக்க விடுவதில்லை. என் விருப்பப்படி ஒன்றையும் செய்ய முடியவில்லை.உடுத்தும் உடையில் இருந்து தலை முடியின் நிறம் வரை உன் விருப்பப் படிதான் இருக்கவேண்டும் என்றால், எப்படி? ஒரு கிளாஸ் வைன் குடிப்பதற்கு கூட உன்னிடம் கெஞ்ச வேண்டும் என்றால், என்ன வாழ்க்கை இது?” என்று அவன் எரிமலையாக வெடித்தபோது, விக்கித்து நின்றாள் லட்சனா.

என்னவெல்லாம் சொல்கிறான். அதைக் கேட்டு அவள் உள்ளம் பலமாக அடிவாங்கியது. யார் மேல் உயிரையே வைத்தாளோ அவனே உயிரைப் பறிப்பது போல் உணர்ந்தாள். அந்தளவுக்கு வலித்தது. அவள் அடக்குமுறை செய்தாளா? அவனையா? ஏன் இப்படி அநியாயமாகப் பேசுகிறான் என்று தவித்தது அவள் உள்ளம்.

“உங்கள் மேல் கொண்ட அன்பால், அக்கறையால், காதலால் நான் காட்டிய பாசம் சூர்யா.. அது தப்பா?” என்று அவனுக்குத் தன் அன்பைப் புரியவைக்க முயன்றாள்.

“இப்படி ஒருவனை அவன் விருப்பத்துக்கு இருக்க விடாமல் எப்போது பார்த்தாலும் தொனதொனப்பதுதான் காதல் என்றால், அந்தக் காதலும் எனக்கு வேண்டாம். ஒரு கருமமும் வேண்டாம். இடையில் வந்த காதல் இடையிலேயே போகட்டும்!” என்றான் அவன்.

அவள் காட்டிய காதல் கருமமா? இடையில் வந்தாலும் வாழ்வின் இறுதிவரை தொடர்வது இல்லையா காதல்? அடுத்த ஜென்மம் என்று ஒன்று இருந்தால் அதிலும் தொடர வேண்டியதல்லவா காதல். இது புரியவில்லையா அவனுக்கு?

“சரி சூர்யா. இனி நான் உங்களோடு சண்டை பிடிக்கவில்லை. அடக்குமுறை செய்யவில்லை. உங்கள் விருப்பம் போல் நீங்கள் இருங்கள். இனி மெசேஜ் எதுவும் அனுப்பவில்லை.சரிதானா? தயவு செய்து இப்படி எல்லாம் கதைக்காதீர்கள். எனக்கு நெஞ்சுக்குள் என்னவோ செய்கிறது.. வலிக்கிறது.” என்றாள் தழுதழுத்த குரலில்.

அது அவனையும் பாதித்ததோ.. எழுந்து, சற்றே முன்னே சென்றவன் அவளுக்கு முதுகு காட்டி நின்றான்.

“இல்லை. நமக்குள் என்றும் சரியாக வராது. கலாச்சாரம், கட்டுப்பாடு என்று உன் பழக்கவழக்கம் வேறு. ஆசைகளை அடக்கிப் பழக்கமில்லாத என் பழக்கவழக்கம் வேறு.” என்றான் அவன் இரக்கமற்று.

அவன் எதைச் சொல்கிறான் என்று புரிய, “இனி.. இனி நீங்கள்.. என்னை தொட்டாலும்.. அது எவ்வ..ளவு தூரத்துக்கு என்றாலும் நான்.. நான் ஒன்றும் சொல்ல மாட்டேன் சூர்யா. உங்.. உங்கள் விருப்பபடி செய்யுங்கள்…” என்று உயிரினும் மேலாய்க் காக்க வேண்டிய கற்பைக் கூட அவனுக்குப் பரிசளிக்கத் தயாரானது அவள் காதல் நெஞ்சம்.

“என்னை என்ன காமப் பேய் என்று நினைத்தாயா அல்லது உன் உடம்புக்கு அலைபவன் என்று நினைத்தாயா..?” என்று அவன் உறும, “இல்லை. அப்படி இல்லை…” என்றவளைப் பேசவிடாது, “உன் விளக்கம் எனக்குத் தேவையில்லை.” என்று இடைமறித்தான் அவன்.

விளக்கத்தைக் கேட்காமல், குற்றம் சாட்டுவது எந்த விதத்தில் நியாயம் என்று கேள்வி எழுந்தபோதும், அதை வாய்விட்டுச் சொல்லும் துணிவற்று ஊமையாகிப் போனாள் லட்சனா. ச்அந்தளவுக்குக் கடினமாக இருந்தது அவன் முகம்.

அவள் காதல் கொண்ட முகமா என்கிற சந்தேகமே வந்தது. காதலில் கனிந்து, கண்களால் அவளை வசியம் செய்து, புன்னகையால் உலகத்தையே மறக்க வைக்கும் அவன் முகம் இன்று கல்லை விடக் கடினமாக இருந்தது.

அதுநாள் வரை காதலில் பளபளத்த கண்கள் கண்ணீரில் பளபளக்க அவனையே பாத்திருந்தவளிடம், “நான் சொல்வதைக் கொஞ்சம் பொறுமையாகக் கேள்.” என்று ஆரம்பித்தான் அவன்.

அதைக் கேட்டு அவள் நெஞ்சு நடுங்க ஆரம்பித்தது. ‘இல்லை! கேட்கமாட்டேன்!’ என்று காத்த வேண்டும் போல் இருந்தது. அவளால் தாங்கவே முடியாத ஒன்றை அவன் சொல்லப் போகிறான் என்று உள்மனம் உணர்த்தியது.

“சூர்யா…” எதுவும் சொல்லாதீர்களேன் என்று கெஞ்ச வாயெடுத்தவளை, கையைத் தூக்கிக் காட்டி அவள் பேச்சை நிறுத்தினான்.

“நான் முடிக்கும் வரை குறுக்கே பேசாதே!” என்றான் அதிகாரமாக. வாயடைத்துப் போனாள் லட்சனா. இந்த அதிகாரம் கூட அவனிடம் அவளுக்குப் புதிதாகப் பட்டது.

“உன்னை உண்மையாகத்தான் நேசித்தேன். அதனால்தான் திருமணம் செய்து கொள்ளலாம் என்றும் கேட்டேன். அதை நீ தள்ளிப் போட்டது கூட நல்லதுக்குத்தான் என்று இப்போது தோன்றுகிறது. அல்லது காதல் முறிவு என்பது திருமண முறிவாக முடிந்திருக்கும்..” என்றான் அவன்.

என்னது காதல் முறிவா? என்ன சொல்கிறான் இவன்? நேசித்தேன் என்று இறந்த காலத்தில் சொல்கிறான். அப்படியானால் இப்போது அந்த நேசத்துக்கு என்ன ஆனதாம்? அவள் நெஞ்சில் அவன் மீதான நேசம் நாளுக்கு நாளல்லவா பெருகிக் கொண்டிருகிறது. அவனுக்கு அப்படி இல்லையா? இப்படி எத்தனையோ கேள்விகள் அவளுக்குள் தோன்றியபோது, அவன் மறுபடியும் பேச்சை ஆரம்பித்து இருந்தான்.

“என்னால் உன்னோடு இணைந்து வாழமுடியாது. என்னை நீ உன் கட்டுக்குள் வைத்திருப்பது போல் இருக்கிறது. அம்மா அப்பாவுக்குப் பொய் சொல்லி, தாத்தா பாட்டியோடு நேரம் செலவழிக்க முடியாமல், அண்ணன் அண்ணியோடு கூட இருந்து கதைக்க முடியாமல், நண்பர்களோடு பொழுது போக்க முடியாமல், ஏன்.. என்னால் எனக்குப் பிடித்த விளையாட்டுக்கு கூட நேரம் ஒதுக்க முடியால் வாழ முடியாது. என் வாழ்க்கையில் ஒரு பகுதிதான் காதல். வாழ்க்கையே காதல் கிடையாது. அப்படி ஒரு பகுதியான காதலுக்காகவோ, இடையில் வந்த உனக்காகவோ என்னால் இவர்களை எல்லாம் இழக்க முடியாது லட்சனா.”

‘லட்டு’ லட்சனாவாக மாறிவிட்டது. அதிலிருந்தே புரிந்தது அவன் அவளிடம் இருந்து தள்ளிப் போய்விட்டான் என்று. அவன் வாழ்க்கையில் ஒரு பகுதிதான் காதலா? இடையில் வந்தவளா அவள்? அவள் வாழ்க்கையே காதல் அல்லவா! அவன் மட்டும் தானே அவள் உலகம்! அவன் தானே அவள் உயிர்! உயிரின்றி உடல் வாழுமா? அவளை இதுநாள் வரை உயிர்ப்பாய் வைத்திருந்தது அவனும் அவன் காட்டிய அன்பும் தானே! அவையின்றி அவளால் எப்படி வாழ முடியும்?

நீரின்றி செடி செழிக்குமா? அவன் துணை இன்றி அவளால வாழ முடியுமா?

உயிர்வரை வலித்தது. இதையெல்லாம் கேட்பதற்குத் தானா அவள் உயிரோடு இருக்கிறாள். இதற்கு அன்று அண்ணனோடு சேர்ந்து நானும் இறந்திருக்கக் கூடாதா என்று உள்ளம் கதறியது.

கண்ணீர் கன்னங்களில் ஆறாய் வழிய, நெஞ்சிலோ பெரும் வலியொன்று தாக்கியது.

அவன் குறுக்கப் பேசாதே என்று சொன்னதையும் மறந்து, “நான்… நா..ன்.. அவர்களை எல்..லாம் ஒதுக்கச் சொல்..லவில்லையே.” திக்கித் திணறி அவள் சொல்ல, “இல்லை. நீ சொல்லவில்லைதான். ஆனால் நீ காட்டும் அன்பே எனக்கு விலங்காக இருக்கிறது. என்னால் உன்னிடமும் இயல்பாக இருக்க முடியவில்லை. அவர்களிடமும் இயல்பாக இருக்கமுடியவில்லை. ஏன்டா காதலித்துத் தொலைத்தோம் என்றிருக்கிறது. என்னுடைய சுதந்திரத்தை எல்லாம் நீ பறிக்கிறாய்.” என்று குற்றம் சாட்டினான் அவன்.

அவளின் அன்பே அவனுக்கு விலங்கு என்றது அவளை அடியோடு சாய்த்தது. ஏன்டா காதலித்துத் தொலைத்தோம் என்று இருந்ததா? அந்தளவுக்கா அவளை வெறுத்துவிட்டான். அள்ள அள்ளக் குறையாதது அன்பு என்பார்களே! கொடுக்கக் கொடுக்க பெருகுவதும் அன்பு என்பார்களே! அதெல்லாம் பொய்யா? ஒருவனின் மேல் உயிரையே வைத்து, என் எதிர்காலமே அவன்தான் என்று எண்ணி, அவன் மேல் அளவற்ற அன்பைப் பொழிந்தது கூடத் தவறா?

மெல்லக் கொள்ளும் விஷம் போல், அவன் சொல்லும் ஒவ்வொரு வார்த்தைகளும் அவளைக் கொன்றது! அவள் மனதைத் தின்றது. விலங்கு என்கிறான், மூச்சு முட்டுகிறது என்கிறான், இயல்பைத் தொலைத்துவிட்டேன் என்கிறான்.. இவ்வளவு நாட்களும் அன்பு காட்டுகிறேன் என்கிற பெயரில் அவனைத் திணறடித்ததாகவா சொல்கிறான்.

என் காதல் பெரும் எதிர்ப்புக்கள் இன்றிக் கைகூடிவிடும் என்று அவள் கனவு கண்டிருக்க, அவள் காட்டிய காதலே அவள் காதலுக்கு எதிரியாகிப் போனது!

“உன்னாலும் என் பழக்க வழக்கத்துக்கு மாறமுடியாது. நீ கற்பு கட்டுப்பாடு என்று ஆயிரம் சொல்வாய். என்னாலும் என்றுமே உனக்கு ஏற்ற வகையில் மாறமுடியாது. உனக்கு ஏற்றவன் ஜெயன் தான். அவனையே நீ திருமணம் செய்துகொள். அதுதான் உனக்கும் நல்லது எனக்கும் நல்லது.” என்று அவன் சொல்லவும், அதிர்ச்சியின் உச்சக் கட்டத்துக்கு சென்றவள், நெஞ்சில் கைவைத்தபடி பேயறைந்தவள் போல் அவன் முதுகையே வெறித்தாள்.

வாயால் வரமறுத்த வார்த்தைகளை ஒன்றாக்கி நெஞ்சம் ஊமையாய் கதறியது.

இரவும் பகலும் சேர்ந்ததுதானே நாளாகிறது. பகலவன் அவன் இன்றிப் போனால் அவள் வாழ்வில் இருள் கவ்வாதா? அதை அறியமாட்டானா அவன்?

அவனே அவளை இன்னொருவனுடன் இணைத்துப் பேசலாமா? எப்படி முடிந்தது அவனால்? அப்படியானால் இதுவரை உயிராகப் பழகியது எல்லாம் பொய்யா? காதலில் கசிந்துருகியது எல்லாம் சும்மாவா? அவளைக் கொஞ்சிக் குலாவியது எல்லாம் எதற்காக? அவள் மனதில் ஆசைகளை வளர்த்தது எதற்காக? உறவுகள் இன்றி வாழ்ந்தவளுக்கு எல்லாமாக நான் இருக்கிறேன் என்கிற நம்பிக்கையைத் தந்தது எதற்க்காக? இப்படி ஒரேயடியாக அதலபாதாளத்துக்கு அவளைத் தள்ளவா? இதற்கு அவன் அவள் கழுத்தை நெரித்துக் கொன்று போட்டிருக்கலாமே!

இப்படி நெஞ்சில் பல்லாயிரக் கணக்கான கேள்விகள். அதைக் கேட்கத்தான் அவளால் முடியவில்லை.

அவனிடம் கேள் கேள் என்று நெஞ்சு கதறியது. திறக்க மாட்டேன் என்று அடம்பிடித்த உதட்டினால், பேசும் சக்தியை இழந்து நின்றாள் லட்சனா.

அவள் புறமாகத் திரும்பிய சூர்யா, வேதனையால் விரிந்த விழிகளில் கண்ணீர் வழிந்தபடி இருக்க, வலியில் துடிக்கும் மார்பை இரு கைகளாலும் அடக்கியபடி, அவனையே வேதனையோடு பார்த்திருந்தவளைப் பார்த்ததும், ஒரு நொடி ஸ்தம்பித்து நின்றுவிட்டான்.

உடனேயே முகத்தைத் திருப்பிக்கொண்டு, “இதோ.. இந்த அழுகை கூடத்தான் எனக்குப் பிடிக்கவில்லை. எப்போது பார்த்தாலும் அழுவது. அழுதழுதே உன் காரியங்களைச் சாதிக்க நினைப்பது..” என்று சிடுசிடுத்தான் அவன். வேதனை நிறைந்த அவள் முகத்தைப் பார்த்ததும் தடுமாறிய தன் உள்ளத்தின் மீது கொண்ட கோபத்தை அவள் மீது காட்ட முயன்றானோ?

அவன் சிடுசிடுப்பைக் கேட்டவளின் உதடுகள் அழுகையில் துடிக்க, அதைப் பற்களால் கடித்து அழுகையை அடக்க முயன்றாள். கண்களில் நீர் பெருக, இயலாமையால் இறுக மூடியவளின் விழிகளில் இருந்து கண்ணீர் தாரை தாரையாக வழிந்தது.

அந்த முகத்தைப் பாராது பார்வையத் திருப்பியவன், “ஜெயனுடனான உன்னுடைய திருமண வாழ்க்கைக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்!” என்றுவிட்டு, அவ்விடம் விட்டு வேகமாக நடந்தான் சூர்யா.

சட்டென்று விழிகளைத் திறந்தவள், நெஞ்சுக் கூட்டுக்குள் நஞ்சை ஊற்றிவிட்டுச் செல்லும் அவனையே பாத்திருந்தாள். கண்கள் கண்ணீரை மட்டும் நிறுத்தவே இல்லை.
 

Goms

Member
ஓ மை god. நிஜமாவே முடிவு எடுத்திட்டானா?? எப்படி லட்டு தாங்குவ?? 🥺😞
ஆனாலும் நிதா, எங்கள அழ வைக்காம கதை எழுதவேமாட்டீங்களா?🙄😭
 
Top Bottom