You must have JavaScript enabled in order to use this order form. Please enable JavaScript and then reload this page in order to continue.

இப்படியும் ஒருவன் -ஜெகநாதன் வெங்கட் - இதழ் 10

ரோசி கஜன்

Administrator
Staff member

அன்றாட வாழ்க்கையில் எத்தனையோ மனிதர்களைச் சந்திக்கிறோம். எப்படி சேலைகளில் பல இரகங்கள் இருகின்றனவோ அது போல மனிதர்களிலும் வெவ்வேறு குணாதிசயங்களைக் கொண்டவர்கள் இருக்கவே செய்கிறார்கள். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான நடத்தை, சிந்தனை, செயல் இருக்கிறது.

சிலர் மாற்றங்களை வேகமாக ஏற்றுக் கொள்வார்கள். வேறு சிலரோ எந்தக் காலகட்டத்திலும் தங்களை மாற்றிக் கொள்ளவே மாட்டார்கள்.

சிலருக்கு நெகிழும் தன்மை குறைவு. அவர்கள் சிமென்ட் மாதிரி. கெட்டிப்பட்டால் அவ்வளவு தான். பிறகு இளகவே மாட்டார்கள்.

இன்னும் சிலபேர் எல்லாவற்றிலும் குறை கண்டுபிடித்துக் கொண்டே இருப்பார்கள். இந்த ரகத்துக்காரர்களுக்கு திருப்தி என்பது எள்ளளவும் இருக்காது. பயங்கர டென்சன் பேர்வழிகள். இப்படிப்பட்ட ஒரு பயங்கரவாதியிடம் சென்ற வாரம் ஞாயிற்றுக்கிழமை நான் பட்டபாடு இருக்கிறதே! அதை எழுத்தில் எழுதி மாளாது. பாவம் என் மனைவி. அவளுக்கும் நான் பட்டபாட்டில் பங்கு உண்டு. அந்த டென்சன் பேர்வழி வேறு யாருமல்ல...என் நெருங்கிய நண்பன் மணிவண்ணன் தான்.

போன வாரம் என்னிடம் அலைபேசியில் தொடர்புகொண்டு ஒரு கருத்தரங்கில் கலந்து கொள்ள ஞாயிற்றுக் கிழமை கோவை வருவதாகத் தெரிவித்தான். அதிகாலையில் அவனை வரவேற்று வீட்டிற்கு அழைத்து வர நான் இரயில் நிலையம் செல்லவேண்டும். காலை உணவை முடித்துக்கொண்டு அவனும் நானும் கோவை அரசினர் தொழில்நுட்பக் கல்லூரியில் நடக்கும் கருத்தரங்குக்குச் செல்லவேண்டும். இதைக் கேள்விப் பட்டதுமே என் மனைவி புலம்ப ஆரம்பித்து விட்டாள், “எப்படித் தான் உங்க நண்பரை சமாளிக்கப் போறனோ?” என்று.

தொட்டது தொண்ணூறுக்கும் குறை கண்டு புடிச்சிட்டே இருப்பான். இதுக்கு முன்னாடி ஒரு தடவை அவன் வந்தப்ப ஏற்பட்ட அனுபவத்தை இன்னமும் என் மனைவியால் மறக்க முடியவில்லை. அவனை உணவு விசயத்தில் திருப்திப்படுத்த குட்டிக்கரணம் போட வேண்டியிருந்தது.

"இட்லி பூ மாதிரி இல்ல... சட்னியில் உப்பு தூக்கலா இருக்கு... பொரியல் இன்னும் கொஞ்சம் வறுத்திருக்கலாம்...காப்பி அன்னபூர்ணா காப்பி மாதிரி இல்ல..." இப்படி ஏதாவது சொல்லிக் கொண்டிருப்பான். அதனால் தான் அவன் வரவு பற்றிய செய்தி என் மனைவிக்கு பயமூட்டுவதாக அமைந்தது. “ஒரே ஒரு வேளை மட்டுந்தான். எப்படியோ சமாளிக்கலாம். கவலைப்படாதே!” என்று என் மனைவியைச் சமாதானப்படுத்தினேன்.

ஞாயிற்றுக் கிழமை அதிகாலை ஐந்து மணிக்கெல்லாம் காரை எடுத்துக்கொண்டு இரயில் நிலையம் விரைந்தேன். அன்றைக்குப் பார்த்து இ ரயில் முன்னாடியே வந்திருந்தது. நிலையத்தை விட்டு வெளியே வந்து காத்துக் கொண்டிருந்தான் நண்பன். என்னைப் பார்த்ததும்,”என்னடா இவ்வளவு லேட்?அரை மணி நேரமாக் காத்துக் கெடக்கரேன் தெரியுமா?” என்று சலித்துக் கொண்டான்.

“சாரிடா...கொஞ்சம் தூங்கிட்டேன்.” என்று அசடு வழிந்தேன். பிறகு இருவரும் எதிரில் இருந்த கே.ஆர் அடுமனையில் டீ குடித்தோம்.

“என்னடா டீ இது? கழுநீர் தண்ணி மாதிரி...” என்று குறைப்பட்ட நண்பனைப் பார்த்ததும், “ஆரம்பிச்சுட்டானய்யா ஆரம்பிச்சுட்டான்” என்று வைகைப் புயல் வடிவேலு மாதிரி அலறத் தோன்றியது. நல்ல வேளை அவன் மேற்கொண்டு எதுவும் பேசவில்லை. காரில் ஏறி வீட்டுக்குப் புறப்பட்டோம்.

“ராத்திரி நல்லாத் தூங்கினியா?” இவ்வளவு தான் நான் கேட்டேன். உடனே புலம்பித் தள்ளிவிட்டான். ஏன்டா கேட்டோம் என்றாகி விட்டது.

“ எங்க போய்த் தூங்க? பேரு தான்டா எக்ஸ்பிரஸ்.... நத்த வேகம். ஒரே இரைச்சல். கொஞ்சமும் நாகரிகம் இல்லாத பயணிகள். சளசளவென்று பேச்சுச் சத்தம். எப்பத்தான் நம்ம ஜனங்க திருந்தப் போறாங்களோ...”என்று ஒரு இராமாயணமே பாடி முடித்தான் நண்பன்.

எப்படியோ ஒரு வழியாக வீடு வந்து சேர்ந்தோம்.என் மனைவி ஓடிவந்து “வாங்க, வாங்க... வீட்ல எல்லோரும் சௌக்கியமா?” என்று ஆவலோடு விசாரித்தாள்.

 

ரோசி கஜன்

Administrator
Staff member
“ஏதோ இருக்கோம்." என்று சலித்தவாரே கூறியபடி தான் கொண்டு வந்திருந்த ஸ்வீட் பாக்கெட்டை அவளிடம் நீட்டினான். அதை வாங்கிக் கொண்ட என் மனைவி சமையல் அறைக்குச் சென்று இரண்டு கப் சூடான காபி கொண்டு வந்து கொடுத்தாள். சும்மா சொல்லக்கூடாது, காப்பி கும்பகோணம் டிகிரி பிஃல்டர் காப்பி மாதிரி சுவையாக இருந்தது. என் படுகாதக நண்பன் பாராட்டுவான் என்று எதிர்பார்த்தேன். ஊம்...ஒரு வார்த்தை சொல்லவில்லை. குறை சொல்லவில்லை என்பதே என் மனைவிக்குத் திருப்தி. மேல்மாடியில் அவனுக்கென்று ஒதுக்கப்பட்டிருந்த அறையைக் காட்டி, “ சீக்கிரம் குளித்துவிட்டு வா. டிபன் சாப்பிட்டுட்டு ஒன்பது மணிக்கெல்லாம் கிளம்பனும். அப்பத்தான் கருத்தரங்குக்கு பத்து மணிக்குப் போய்ச் சேர முடியும்.”என்று சொல்லிவிட்டு குளிக்கச் சென்றேன்.

சிறிது நேரத்தில் நண்பன் குளித்துவிட்டுக் கீழே வர இருவரும் டைனிங் டேபிளில் அமர்ந்தோம். இட்டலியும் பொங்கலும் தயாராக இருந்தன. மனைவி பரிமாற இருவரும் மௌனமாகச் சாப்பிட்டோம். ஏதாவது பேசப்போக அது நண்பனுக்குக் குறை காண ஒரு வாய்ப்பு ஆகி விடக் கூடாது என்பதில் நான் எச்சரிக்கையாக இருந்தேன். ஒருவிதமான இறுக்கமான சூழ்நிலை கொஞ்ச நேரம் நிலவியது.

திடீரென்று என் மனைவி அதை உடைத்தாள். மிகவும் எச்சரிக்கையோடு “பையன் ப்ளஸ் டூவுல எவ்வளவு மார்க் வாங்கியிருக்கான்?”என்று கேட்டாள்.

"என்னத்த வாங்கி இருக்கான்? படிக்கச் சொன்னா அதை விட்டிட்டு எந்நேரமும் மாவட்டம், மாநிலம் என்று விளையாட்டுல போயிட்டான். ஓட்டப் பந்தயத்துல நேசனலுக்கு தெரிவு செஞ்சிருக்காங்க. ஆனாலும் பரீட்சையில் மார்க் கொறைஞ்சு போச்சே!” என்று புலம்பினான் நண்பன். எனக்கோ எக்கச்சக்கமான எரிச்சல். “எவ்வளவு மார்க்? சொல்லித் தொலைடா.” என்று கத்தினேன்.

“வெறும் ஆயிரத்து நூத்தெழுபது தான் வாங்கி இருக்கான்.” என்றான் மிகவும் சலிப்பாக. எனக்குக் கோபம் கோபமாக வந்தது.

“ஏண்டா, இது என்ன கொறஞ்ச மார்க்கா?அதிருக்கட்டும்...பி.யூ.சியில் நீ எவ்வளவு வாங்கிக் கிழிச்ச? தேர்டு கிளாஸ் தானே?”என்று ஒரு போடு போட்டேன். நண்பனின் முகத்தில் அசடு வழிந்தது. அத்தோடு அந்த டாபிக் முடிவுற்றது. சாப்பிட்டு முடிந்ததும், கருத்தரங்கில் கலந்து விட்டு அப்படியே சென்னைக்குப் புறப்படுவதாகக் கூறி என் மனைவியிடம் விடைபெற்றுக் கொண்டான். வீட்டில் எல்லோரையும் விசாரித்ததாகச் சொல்லச் சொன்னாள் என் மனைவி. எந்திரம் போலத் தலையசைத்துவிட்டு என்னோடு கிளம்பினான் நண்பன். பலியாடாக என்னை நினைத்துக் கொண்டு காரில் ஏறி அதைக் கிளப்பினேன்.

ஒரு நாற்பது நிமிடப் பயணத்திற்குப் பிறகு ஒரு காலத்தில் நாங்கள் படித்த ஜி.சி.டி கல்லூரியை அடைந்தோம். கல்லூரிக்குள் நுழையும் பொழுதே பழைய ஞாபகங்கள் எல்லாம் ஒன்றன் பின் ஒன்றாக மனதில் எழுந்து நெகிழச் செய்தன.

அந்த நாட்கள் தான் எவ்வளவு இனிமையானவை! இன்று வாழ்க்கையில் பேயோட்டம் ஓடிக் கொண்டு அல்லல்பட்டுக்கொண்டு இருக்கும் நிலையை அந்தக் கல்லூரிக் காலத்தோடு ஒப்பிட்டுப் பார்க்கும்பொழுது எவ்வளவோ இழந்து விட்டதாக மனது ஓலமிட்டது.

கல்லூரி விடுதியில் தங்கி அப்பா பாடுபட்டு அனுப்பிய பணத்தை தாராளமாகச் செலவழித்துக்கொண்டு உல்லாசமாகக் கழித்த அந்த வசந்த நாட்கள் இனியொரு முறை திரும்ப வருமா என்று உள்ளம் ஏங்கியது.

கருத்தரங்கு தொடங்க இன்னும் நேரமிருந்தது. நாங்கள் படித்த வகுப்பறைகளையும் சோதனைச் சாலைகளையும் சிரமப்பட்டு கண்டுபிடித்தோம்.அவற்றுக்கு முன்னால் நின்று செல்பி எடுத்துக் கொண்டோம். கல்லூரி மிகவும் மாறியிருந்தது. புதிய கட்டடங்கள் உதயமாயிருந்தன. ஏராளமான மரங்கள் கல்லூரியைப் பசுமைப்படுத்திக் கொண்டிருந்தன. ஒரு சில ஆசிரியர்களைத் தவிர பெரும்பாலோர் புதிய முகங்களாக இருந்தனர். மாணவர்கள் மத்தியில் நாங்கள் படித்தபொழுது இருந்த சந்தோசமும் உற்சாகமும் இன்று குறைந்துள்ளதாகவே தெரிந்தது. பாடங்களின் கனம், எதிர்காலம் பற்றிய அச்சம் அவர்களை இறுக்கமாக்கி அவர்களிடமிருந்து இளமைக்காலக் கொண்டாட்டங்களைப் பறித்து விட்டதாக நினைக்கிறேன்.

கல்லூரியைப் பார்த்த சந்தோசத்தை நண்பனிடம் பகிர்ந்தபொழுது, வழக்கம் போல அவன் எதிர்மறையாகவே பேசினான்.

“அப்படியே இருக்குதடா காலேஜ். பெரிசா எதுவும் மாறலே. சென்னையில் இருக்கற எஞ்சினியரிங் காலேஜ்களோட ஒப்பிட்டா இது எம்மாத்திரண்டா?” என்ற அவனை நாலு அறை அறையலாம் போல எனக்குள் ஆத்திரம் பீறிட்டது.

"என்னடா கொறச்சல் இந்தக் காலேஜ்ஜுக்கு? புதுசா நெறைய மாற்றங்க பண்ணியிருக்காங்க! எவ்வளவு மரங்க வச்சிருக்காங்க! இன்னிக்கு மாசா மாசம் இலட்ச ரூபா சொளையா சம்பளம் வாங்கறமே...அது இந்தக் காலேஜ் போட்ட பிச்சைடா. நன்றியோட நெனச்சிப் பாரு!” என்று ஒரு போடு போட்டேன். ஒரு மாதிரி என்னைப் பார்த்துவிட்டு மௌனமாகி விட்டான்.

சிறிது நேரத்தில் கருத்தரங்கு தொடங்கியது. கல்லூரி முதல்வர் வரவேற்பு உரையாற்றினார். நாட்டின் பல்வேறு பல்கலைக் கழகங்களிருந்தும் வெளிநாடுகளில் இருந்தும் பிரதிநிதிகள் வந்திருந்தனர். அவர்களில் பெரும்பாலோர் அருமையான ஆராய்ச்சிக் கட்டுரைகள் வாசித்தனர். நானே எதிர்பார்க்காத அளவுக்கு என்னுடைய நண்பனும் தன் கட்டுரையை வாசித்தபொழுது பலத்த கைதட்டல் பெற்றது. இவ்வளவு பெரிய திறமைசாலி ஏன் எடுத்ததெற்கெல்லாம் குறை காணுகிறான் என்ற எண்ணம் மனதிற்குள் புகுந்து என்னை வருத்தியது.

கருத்தரங்கின் காலை அமர்வு ஒருவாறாக முடிந்தது. கல்லூரி உணவு விடுதியில் மதிய உணவு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. நண்பன் புலம்ப ஆரம்பித்தான்.

‘சாம்பாரில் உப்பில்லை. இரசத்தில் காரம் அதிகம். தயிர் ரொம்ப புளிச்சுப் போச்சு’ என்று அடுக்கு அடுக்காகக் குற்றச்சாட்டுகள்!

“பேசாம வெளியில போயி சாப்பிட்டிருக்கலாம்” என்று முணுமுணுத்தான். எனக்குத் தாங்க முடியவில்லை.

“ டேய்...சாப்பாடு நல்லாத் தாண்டா இருக்கு. பார்...எல்லாரும் எவ்வளவு இரசிச்சு,ருசிச்சுச் சாப்பிடறாங்க. அதுக்கு மேல நாம கருத்தரங்குல கலந்துக்கத்தானே வந்திருக்கோம்? சமையல் போட்டியில தீர்ப்பு வழங்க வரலியே?” என்று ஒரு போடு போட்டேன். அதற்குப் பிறகு தான் அடங்கினான்.

மாலையில் ஐந்து மணிக்கு கருத்தரங்கு நிறைவடைந்தது. எப்படியிருந்தது கருத்தரங்கு எனக் கேட்கப் பயமாயிருந்தது. கேட்டால் கண்டிப்பாக யூஸ்லெஸ் என்று சொல்லப்போகிறான். எதற்காக நாமே வலியப்போய் வம்பை விலை கொடுத்து வாங்க வேண்டும்? அந்த டாபிக்கை தவிர்த்தேன்.

“உன்னுடைய அடுத்த திட்டம் என்னடா?” என்று மெதுவாக விசாரித்தேன்.

"அவளுக்கு ஒரு சேலையும் பையனுக்கு பேண்ட் சர்ட்டும் எடுக்கணும்” என்றான். நேராக புரூக் ஃபீல்டு மால் சென்றோம். ஆர்.எம்.கே யில் மென்பட்டில் ஒரு சேலையும் மகனுக்கு ரெடிமேட் பேன்ட், சர்ட்டும் எடுத்துக் கொண்டான். அன்னபூர்ணாவில் காஃபி குடித்தோம். ஒரு கிலோ பாதாம் அல்வா வாங்கி நண்பனின் மறுப்பையும் மீறி அவனுடைய தோள்பையில் திணித்தேன். பிறகு கோவை ரயில் நிலையம் நோக்கி காரைச் செலுத்தினேன்.

ரயில் புறப்பட இன்னும் இரண்டு மணி நேரம் இருந்தது. அங்கிருந்த ஒரு பெஞ்சில் அமர்ந்தோம். நண்பனைப் பார்த்தேன். மிகவும் களைப்பாகக் காட்சியளித்தான். அவன் உடல் நலம் பற்றி விசாரிக்கத் தோன்றியது.

“அடே,நண்பா, ஹெல்த் செக்கப் செய்வதுண்டா” என்று கேட்டேன். அவன் என்னை ஒரு மாதிரி முறைத்துப் பார்த்தான்.

“இல்ல, வயசு ஐம்பதை நெருங்கி விட்டதல்லவா?அதனால கேட்டேன்." என்று சற்று அச்சத்துடன் அவனை நோக்கினேன்.

“ ஊம்,... மூன்று மாதங்களுக்கு முன்னால் அவளோட வற்புறுத்தல் தாங்காம அப்பல்லோவுல முழு உடல் பரிசோதனை செஞ்சேன்.” என்றான் ஒருவித சலிப்போடு.

“என்ன சொல்லுச்சு பரிசோதனைகள்?” என்றேன் ஆவலோடு.

“ கொஞ்சம் சர்க்கரையும் இரத்த அழுத்தமும் இருக்குதாம். கொலஸ்ட்ரால் அளவு கூடி இருக்குதாம். டாக்டர் பயமுறுத்தற மாதிரி பேசினார். அவ ரொம்ப பயப்பட்டுப் போனா. ஒருபாடு மாத்திரை இப்போ சாப்பிட்டிட்டு இருக்கேன்.”என்றான், ஒரு எந்திரம் போல.

எனக்கு அவனைப் பார்க்கும்பொழுது பாவமாக இருந்தது. “ சொல்றேன்னு கோவிச்சுக்காதே. மருந்து மாத்திரை மட்டுமே போதாதுடா. லைஃப் ஸ்டைல் மாறனுண்டா. உணவுப் பழக்க,வழக்கங்களில் கொஞ்சம் கவனம் செலுத்தனும். எல்லாவற்றுக்கும் மேல மனசை இலேசா வச்சுக்கணும். சந்தோசமா இருக்கப் பழகிக்கணும். எதிலும் திருப்பதி அடையணும். ஆனா நீ எல்லாத்திலும் எதிர் மாறா இருக்கே. சின்ன விசயத்துக்கெல்லாம் எரிச்சல் படறே. கோபப்படறே. எல்லார் கிட்டயும் குறை கண்டு பிடிக்கிற. நீ எல்லாத்திலும் பெர்பெக்ட்டா?" என்று பொரிந்து தள்ளினேன்.

எனக்கே அதிகம் உரிமை எடுத்துக் கொண்டு நண்பனைப் பேசி விட்டோமோ என்று சங்கடமாக இருந்தது. “தப்பா எடுத்துக்காதே. சொல்லணும் எனத் தோணிச்சு ...சொன்னேன்.” என்றேன் மன்னிப்பு கேட்கும் தோரணையில்.

என் அருமை நண்பன் கொஞ்சம் யோசிப்பது போலத் தெரிந்தது. தனது தவறுகளுக்கு வருத்தப்படுகிறானோ என நினைத்தேன். பிறகு மெல்ல வாயைத் திறந்து சொன்னான், " உபதேசத்தை முடிச்சிட்டயா? என் நிலையில நீ இருந்து பார் அப்பத் தெரியும். சொல்றது யார்க்கும் எளிது நண்பா. மனசை இலேசா வச்சுக்கிறது, திருப்தி அடையறது, எதிலும் சந்தோசப்படறது இதெல்லாம் யதார்த்த வாழ்க்கையில் சுலபமான காரியமல்ல.” என்று குறுக்குழவு ஓட்டினான்.

ரயில் புறப்படுவதற்குத் தயாராக இருந்தது. கோபத்தின் உச்ச நிலையில் நான் இருந்தேன். கடைசியாக அவனிடம் சொன்னேன், “ அடே நண்பா. என்னை மன்னிச்சிருடா. உன்னைத் திருத்தமுடியாதுடா சாமி. சொர்க்கத்துக்கே போனாலும் நீ திருப்தி அடைய மாட்டாய். கடவுளையே கூட டென்சன் பேர்வழியாய் மாற்றி விடுவாய். போதுண்டா சாமி. இனி உனக்கு எதுவும் சொல்ல மாட்டேன். போயிட்டு வாடா கண்ணா.”
 
Top Bottom