You must have JavaScript enabled in order to use this order form. Please enable JavaScript and then reload this page in order to continue.

இம்மாத எழுத்தாளர்கள்...இதழ் 3 & 4

ரோசி கஜன்

Administrator
Staff member
செந்தூரத்தின் ‘இம்மாத எழுத்தாளர்’ பகுதியை அலங்கரிக்கவுள்ளார்கள் இருவர். குடும்ப நாவல்களை விரும்பி வாசிக்கும் வாசகர்களுக்கு இவர்கள் புதியவர்களாக இருக்க முடியாது.

எழுத்தாளர் பிரேமா எழுத்தாளர் திருமதி லாவண்யா


1543524139679.png 1543524160579.png





மனதை இலேசாக்கவல்ல நகைச்சுவை உணர்வு கலந்து, கலகலவென்ற உறவுகள், நட்புகள் சூழ நகரும் கதையில், வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவதுபோல் தாம் சொல்லவந்த கருத்துகளை அழகாகச் சொல்லும் கதைகளுக்குச் சொந்தக்காரர்களான, எழுத்தாளர் பிரேமா மற்றும் திருமதி லாவண்யா இருவரையும், செந்தூரத்தின் சார்பாகக் கேள்விகளோடு அணுகியபோது மனம் திறந்து தம் பதில்களைத் தந்தார்கள்.

அவற்றை உங்களோடு பகிர்வதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறோம்.

இருவரதும் எதிர்கால எழுத்துகள் மேலும் மேலும் மெருகோடு உங்களை நாடிவர எங்கள் அன்பு வாழ்த்துகள்!



இன்று எல்லாமே இணையம் என்றாகிப்போன நிலையில், நம்மை நாம் வெளியுலகுக்கு உணர்த்த, இணைய உலகம் கைக்குள் இருக்கும் மிகப்பெரிய வாய்ப்பாக இருந்தும் அதிலிருந்து சற்றே விலகி இருப்பவர் நீங்கள்.
அந்த வகையில், குடும்ப நாவல்கள், அதுவும் மனதை இலகுவாக்கவல்ல, உதடுகளில் உறைந்த முறுவலோடு வாசித்து முடிக்கும் வகையிலான நாவல்களின் சொந்தக்காரியான நீங்கள், உங்களைப்பற்றி எங்கள் வாசகர்களுடன் அறிமுகம் செய்து கொள்ளுங்களேன்.

உங்கள் சிறு பிராயம், குடும்பம், பிள்ளைகள், பள்ளி, கல்லூரி எனச் சுருங்கச் சொன்னால் உங்கள் வாசகர்களும் எங்கள் வாசகர்களும் அறிந்துகொள்வார்கள்.



பிரேமா: நான் பிறந்து வளர்ந்தது விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ‘அருப்புக்கோட்டை’ என்னும் ஊரில். பொறியியல் படிப்பிற்காகக் கோவை சென்றேன். திருமணத்திற்கு பின் சென்னைவாசியாகி விட்டேன். எனக்கு ஒரு மகன் மட்டுமே! அவன் கல்லூரி இறுதி ஆண்டு படித்துக் கொண்டிருக்கிறான்.




திருமதி லாவண்யா: சொந்த ஊர் கோவை. அம்மா, குடும்பத் தலைவி. தந்தை, காவல்துறையில் ஆய்வாளராக இருந்தார். நான் இளங்கலை கடைசி வருடம் படிக்கையில் பணியின் போது எதிர்பாராதவிதமாக ஒரு விபத்தில் உயிரிழந்தார். உடன்பிறந்த ஒரு அண்ணன், நியூயார்க்கில் வசிக்கிறார்.


பள்ளி மற்றும் இளங்கலை முடித்தது அனைத்துமே கோவையில். இளங்கலையில் விவசாயப் பாடத்தை விரும்பிப் படித்தேன். அதன்பிறகு, திருமணம் முடிந்து அமெரிக்கா வாசம். இங்கே மூலக்கூறு உயிரியலில் முனைவர் பட்டம் பெற்று, அதன்பின்னர் இரண்டு வருடங்கள் டொராண்டோவில் உள்ள மருத்துவ ஆராய்ச்சிக் கூடம் ஒன்றில் வேலையில் இருந்தேன். பரபரவென்று இடைவிடாது சுற்றிக் கொண்டிருந்த நான் குழந்தைகளுக்கென பணியில் இருந்து தற்காலிகமாக ஓய்வு எடுத்துக் கொண்டுள்ளேன்.


கணவர் சத்யா, மகன் நிதின் (6), மகள் நேயா (1 ½) இவர்களுடன் கலிபோர்னியாவில் தற்சமயம் வசிக்கிறேன்.
 

ரோசி கஜன்

Administrator
Staff member
பலருக்கும் எழுதும் ஆசை இருந்தாலும் எல்லோராலும் முடிவதில்லை. அப்படி இருக்க, நாவல்கள் புனையும் எண்ணம் எப்படித் தோன்றியது? அல்லது யாரின் எழுத்து நாமும் எழுதிப்பார்த்தால் என்ன என்கிற ஆர்வத்தைத் தந்தது? உங்கள் குடும்பங்களில் எழுத்துலகில் யாராவது இருக்கிறார்களா?

பிரேமா: நீங்கள் என்னிடம் பதினைந்து கேள்விகள் கேட்டு இருந்தீர்கள். நான் முதலில் பதில் எழுதுவது இதற்குத் தான். கேள்வி எளிதானது என்பதற்காக மட்டுமல்ல; இன்று நான் ஒரு எழுத்தாளராய் இருப்பதற்கு காரணமானவர்களைப் பற்றி முதலில் சொல்வது தானே சரியானதாக இருக்கும்?


என் குடும்பத்தைச் சேர்ந்த யாருக்கும் எழுதும் பழக்கம் இல்லை. யாரையும் பார்த்தும் எழுதும் எண்ணமும் எனக்குள் உதிக்கவில்லை.


‘அமுதாஸ் ஃபார் யூ’ என்ற வேர்ட்பிரஸ் சைட் ஒன்று இருந்தது. அங்கே நிறைய அறிமுக எழுத்தாளர்கள் கதை எழுதிக் கொண்டிருந்தார்கள். (இன்றைய பிரபல எழுத்தாளர்கள் பலரும் எங்கள் ப்ளாகைச் சேர்ந்தவர்கள் தான்) அவர்களின் கதைகளுக்கு நான் விமர்சனம் எழுதிக் கொண்டிருந்தேன். என்னுடைய விமர்சனம் நகைச்சுவை நிறைந்ததாய் இருக்கிறது என்று சொல்லி, கதையோடு சேர்த்து அதையும் அங்கே இருந்த தோழிகள் படிக்க ஆரம்பித்தார்கள்.


அவர்கள் ஒவ்வொருவரும் என்னிடம் கதை எழுதும் படி கேட்க ஆரம்பித்தனர். (என்னை முதன் முதலில் எழுதச் சொல்லிக் கேட்ட என்னுடைய அமுதா ப்ளாக் தோழி யாரென்பது என் நினைவில் இல்லை.)


இதனைக் கேள்விப்பட்ட என் கணவர், என்னைக் கதை எழுதுமாறு வற்புறுத்தத் தொடங்கினார். சரி என நினைத்து ஒரு காட்சியை எழுத முயற்சித்தேன். மூன்று பக்கத்தை தாண்டுவதற்குள் எனக்கு எழுதப் பிடிக்கவில்லை. “எனக்கு வராதுன்னு சொன்னேன்ல” என்று சொல்லி, கதை எழுதும் முயற்சிக்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்துவிட்டேன்.


பின், அதே அமுதா ப்ளாகைச் சேர்ந்த அரசி மற்றும் சரளா என்ற இரு தோழிகளின் இடைவிடாத வற்புறுத்தலின் பெயரில் மூன்று மாதங்கள் கழித்து மீண்டும் ஒரு முறை முயற்சித்தேன். இந்த முறை ஒரே மாதத்தில் அந்தக் கதையை நான் எழுதி முடித்தேன்.


சிறு வயதில் இருந்து துணுக்குக் கூட எழுதி இராத நான் எழுத்தாளர் ஆனது இப்படித் தான்.




திருமதி லாவண்யா: வாய்மொழியாக நம் எண்ணங்களையும், உணர்வுகளையும் புரிய வைப்பதை விட எழுத்தின் மூலம் புரிய வைப்பது எளிது என்பதை நம்புபவள் நான். அதனால் நண்பர்களுடன் அதிகம் பேசியதை விட கடிதம் தான் நிறைய எழுதியிருக்கிறேன்.



படிப்பு, வேலை எனத் தொடர்ந்து பம்பரமாய்ச் சுற்றிக் கொண்டிருந்த எனக்கு என் மகன் பிறந்ததும் இவற்றிலிருந்து இளைப்பாறச் சந்தர்ப்பம் வாய்த்தது. அப்படி இளைப்பாறிய நேரத்தில் தான் கதை எழுதலாம் என்ற எண்ணமும் தோன்றியது.


ரமணிச்சந்திரன் அம்மா அவர்களின் தீவிர ரசிகையான நான் பள்ளி நாட்களிலிருந்தே கவிதை என்ற பெயரில் கிறுக்கிக் கொண்டிருப்பேன். திருமணம் முடித்து அமெரிக்கா வந்த பின்னர் தமிழ் எழுத்துக்களின் வாசத்தை நித்தமும் சுவாசித்துக் கொண்டிருக்க முடியவில்லை.


சில வருடங்கள் கடந்து ஒரு கட்டத்தில் சில வார்த்தைகளுக்கு ‘ன’ போடுவதா, இல்லை, ‘ண’ போடுவதா எனத் தடுமாறுகையில் மனம் வலித்தது. சிறு வயது முதல் கற்றத் தமிழைச் சில வருடங்களிலேயே இப்படி மறந்து போகக்கூடும் என்றால் மேலும் பல வருடங்கள் கழிந்து மொழியையே மறந்து போவோம் எனத் தோன்றியது.

பள்ளி, கல்லூரி நாட்களில் தேர்வின் போது பேப்பர், பேப்பராக வாங்கி எழுதிய அனுபவமும், அணு மற்றும் மூலக்கூறு உயிரியலில் முனைவர் பட்டம் வாங்க, பக்கம் பக்கமாக ஆரய்ச்சிக் கட்டுரைகள் எழுதிய அனுபவமும் சேர்ந்து, கோர்வையாக எழுதுவதற்கு மிகவுமே உதவியாக இருந்தன.


என் அம்மா நிறைய கதைப் புத்தகங்கள் வாசிப்பார்கள். அதனால் தான் எனக்கு எழுதும் எண்ணம் தோன்றியது என்பது அவரின் எண்ணம். சரி என்று கேட்டுக் கொண்டேன். ஆனால் அவருடன் நான் தமிழில் பேசுவதில்லை. தெலுங்கு தான் பேசுவோம். ஒவ்வொருவருக்கும் சந்தர்ப்பச் சூழ்நிலை எழுதுவதற்கு மிகவும் முக்கியம் என்பது என் கருத்து. என் மாமனார், ஜெகநாதன் அவர்கள் நன்கு கவிதைகள் எழுதுவார். ஒரு கவிதைத் தொகுப்பையும் வெளியிட்டிருக்கிறார்.






 

ரோசி கஜன்

Administrator
Staff member
நாவல் ஒன்றைப் புனைய நினைக்கையில் கருவை வரையறை செய்துவிடுவீர்கள் அல்லவா? அதோடு, ஒவ்வொரு பாத்திரங்களும், கதை நகர்வும், முடிவும் இப்படித்தான் என்றும் ஏற்கனவே வரையறை செய்து விடுவீர்களா? அல்லது, அவை, கதையோட்டத்தில் அமைந்து விடுமா?



பிரேமா: கதை, கதாபாத்திரத்தின் தன்மை, முடிவு, என்று அனைத்தையும் கதை தொடங்கும் முன்பே வரையறத்து விடுவேன். கதையின் காட்சிகள் மட்டுமே கதையோட்டத்தில் அமையும்.



உதாரணத்திற்கு நாயகனும் நாயகியும் ஒரு மாலில் சந்திக்கிறார்கள் என்று வைத்துக் கொள்வோம். அவர்களின் முதல் சந்திப்பு எவ்வாறு நிகழ்ந்தது, அவர்கள் என்ன பேசிக் கொண்டார்கள் என்பதெல்லாம் முன் கூட்டியே தீர்மானிக்க மாட்டேன். அவர்களின் முதல் சந்திப்பு சாதாரணமானதா, சண்டையில் முடிய போகிறதா, இல்லை லவ் அட் ஃபர்ஸ்ட் சைட் வகையை சார்ந்ததா… இதை மட்டும் தான் முதலில் முடிவு செய்து வைத்திருப்பேன். கதை நகர நகர தான் காட்சிகளும் வசனங்களும் தீர்மானிக்கப்படும்.



திருமதி லாவண்யா: ஒவ்வொரு பாத்திரங்களும் இப்படித் தான் இருக்க வேண்டும் என எழுத ஆரம்பிப்பதற்கு முன்னரே வரையறை செய்துவிடுவேன். ஆனால் கதை நகர்வு ஒவ்வொரு அத்தியாயமும் எழுதி முடித்து திருப்தியாக அமையவில்லை என்றால் இடையில் முன்னும் பின்னும் மேலும் சில நிகழ்வுகளைச் சேர்ப்பேன்.





 

ரோசி கஜன்

Administrator
Staff member
இதுவரை எத்தனை நாவல்கள் வெளிவந்துள்ளன. உங்களின் முதல் நாவல் எது? இப்போது எழுதிக்கொண்டிருக்கும் நாவலைப் பற்றிச் சொல்லுங்களேன்.


பிரேமா: இதுவரை இருபத்தி ரெண்டு நாவல்கள் எழுதி உள்ளேன். என்னுடைய முதல் நாவல் ‘காத்திருந்தேன் உனது காதலுக்காக’. இப்பொழுது எழுதிக் கொண்டிருக்கும் நாவல் பற்றி சொல்ல வேண்டுமென்றால்… யாரோ தவறு செய்ய தண்டனை வழங்கப்படுவது என்னவோ கதையின் நாயகிக்கு. அந்த சோதனையை அவள் எவ்வாறு சாதனையாக மாற்றுகிறாள் என்பது தான் கதை.



திருமதி லாவண்யா: காதலின் சாரலிலே என்ற கதையை விளையாட்டுப் போல் ‘சீரியல் ஸ்டோரி’யாக ‘அமுதாஸ்’ என்ற ப்ளாகில் எழுத ஆரம்பித்தேன். நண்பர்கள் ஐந்து பேரின் காதல் கதையைப் பற்றியது. என்னால் மறக்க முடியாத நாவலும் கூட. அதன் மூலமே எனக்கு எழுத்துலகில் நிறையத் தோழிகள் கிடைத்தனர். வாசகத் தோழிகள் ஆதரவளித்து என்னை ஊக்குவித்ததன் விளைவாக இன்று பனிரெண்டு கதைகளை எழுதியிருக்கிறேன்.



பதிமூன்றாவது கதை, உயிரோடு உறவாக அல்லது உறவின் உயிரே பிரசுரிக்க அருணோதயம் பதிப்பகத்தாரிடம் கொடுத்திருக்கிறேன். எளிமையானக் கதைக் கரு. பணத்தின் பின்னே ஓடும் நாயகனும், பணம் மட்டுமே பிரதானம் கிடையாது என எண்ணும் நாயகியும் சந்தித்து எப்படிக் காதலில் விழுகிறார்கள், எப்படி ஒன்று சேர்கிறார்கள் என்பது தான் கதை.


அடுத்த கதை இன்னும் எழுத ஆரம்பிக்கவில்லை ஆனால் என்ன எழுதப் போகிறேன் என்பதை ஓரளவுக்கு மனதில் கோர்வையாக வரித்து வைத்துவிட்டேன். கொஞ்சம் சீரியசான கதைக்களம். என் மகனின் பள்ளி விடுமுறை முடிந்ததும் கூடிய விரைவில் எழுத ஆரம்பிப்பேன்.








 

ரோசி கஜன்

Administrator
Staff member
நீங்கள் ஒரு குடும்பப்பெண். வீடு, கணவர், பிள்ளைகள், அவர்களின் படிப்பு என்று எல்லோருக்கும்போலவே வேலைகள் சுற்றிச் சுற்றி இருக்கும். ஆனாலும், எழுதுவதற்கு எப்படி நேரத்தை எடுத்துக்கொள்கிறீர்கள்? தினமும் குறிப்பிட்ட நேரத்தை ஒதுக்குவீர்களா அல்லது கிடைக்கும் நேரத்தில் எப்போதாவது எழுதுவீர்களா?



பிரேமா: நான் எழுத ஆரம்பிக்கும் பொழுது எனக்கு வயது முப்பத்தி ஒன்பது. அதனால் என் மகனால் என் எழுத்துப் பணிக்கு எந்த இடையூறும் ஏற்படவில்லை. அவன் பள்ளி இறுதி ஆண்டு படிக்கும் பொழுது மட்டும் எட்டு மாதங்கள் இடைவெளி விட்டேன். இணைய உலகத்தில் இருந்தும் விலகி இருந்தேன். அவன் கல்லூரிக்கு சென்ற பின்பே மீண்டும் எழுதத் தொடங்கினேன். எழுதுவதற்கென்று தனிப்பட்ட நேரம் ஒதுக்குவதில்லை. எனக்கு எப்பொழுதெல்லாம் எழுதும் மனநிலை தோன்றுகிறதோ உடனே எழுத ஆரம்பித்து விடுவேன்.



திருமதி லாவண்யா: முன்பெல்லாம் மகன் பள்ளியில் இருக்கும் சமயத்தில் கதை எழுத தினமும் சிறிது நேரம் ஒதுக்குவேன். ஆனால் மகள் பிறந்ததும் நேரம் போதவில்லை. அதனால் இப்போது தினமும் உறங்குவதற்கு முன்னால் கதையைப் பற்றியும், எப்படி நகர்த்தலாம் என்பது பற்றியும் சிந்திப்பேன். அதைக் கைபேசியில் குறித்தும் வைத்துக் கொள்வேன். பின்னர் கிடைக்கும் நேரத்தில் எப்போதாவது எழுதுவேன்.





 

ரோசி கஜன்

Administrator
Staff member
எழுதத் தொடங்கும்போது சாதாரணமாய்த் தொடங்கியிருக்கலாம். ஆனால், என்றோ ஒருநாள் ‘பரவாயில்லை; நாம் கஷ்டப்பட்டு எழுதியதற்கு ஏதோ ஒரு பலன் இருக்கிறதுதான்.’ என்று நெகிழ்ந்து நினைத்துக்கொண்ட தருணங்கள் உண்டா?

பிரேமா: என் கதைக்கான விமர்சனங்களை வாசகர்கள் மின்னஞ்சல் மூலமாக அல்லது முகநூல் மூலமாக அனுப்புவார்கள். அதில் நிறைய பேர் ‘எங்கள் கவலைகளை உங்கள் கதைகள் மறக்கச் செய்கின்றன. எங்கள் மனநிலையை உங்கள் கதை மாற்றி அமைக்கிறது’ என்றெல்லாம் கூறுவார்கள்.


‘இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரி’ என்று பின்னணியில் வைக்கம் விஜயலட்சுமியின் குரல் என் காதுகளில் ஒலிக்கும். ஹா ஹா ஹா. வாசகர்களின் விமர்சனத்தை படிக்கும் பொழுதெல்லாம் ‘இதை விட வேறு என்ன வேண்டும் நமக்கு?!’ என்று மனம் நெகிழும்.




திருமதி லாவண்யா: கண்டிப்பாக. ஒவ்வொரு வாசகரின் கருத்துகளையும் வாசிக்கையில் எல்லாம் அப்படி ஒரு நெகிழ்வு உள்ளுக்குள் தோன்றி என்னைப் பரவசமடையச் செய்யும். அதிலும் வாசகர்கள் உங்கள் நகைச்சுவைக் கதைகளைப் படித்து என் கவலைகளை மறந்து சிரித்தேன் எனக் கூறுகையில் நீங்கள் சொல்வதைப் போல் மிகவுமே நெகிழ்ந்திருக்கின்றேன். இது போன்ற தருணங்களில் மனமும் உற்சாகமடைந்து மேலும் கதை எழுதுவதற்கு என்னை ஊக்கப்படுத்தும்.


சமீபத்தில் என் தோழி, வானதி என்னைக் கட்டாயப்படுத்தி திருப்பூர் மத்திய அரிமா சங்கம் அளிக்கும் பெண் படைப்பாளிகளுக்கான சக்தி விருதுக்கு என் கதையை அனுப்பி வைக்கச் சொன்னாள். அதை முன்னிட்டு மின்மினிக் கனவுகள் கதையை நான் அனுப்பி வைத்தேன். திருப்பூர் மத்திய அரிமா சங்கம், சக்தி விருதுக்கு என் கதையைத் தேர்வு செய்து என்னைக் கவுரவித்ததை நான் எதிர்பார்க்கவே இல்லை.



அத்தோடு விழாவில் பேசிய குழு நடுவர்களில் ஒருவர் என் கதையைப் பற்றி பாராட்டிப் பேசி, திருநங்கைகள் நம் சமூகத்தில் எப்படி நடத்தப்படுகிறார்கள் என்பதை மிகவும் அருமையாக எடுத்துக் காட்டியிருப்பதாகச் சொல்லியிருக்கிறார். நேரம் கிடைக்கும் போது என் கதையைப் படிக்குமாறு மற்றவர்களிடம் தெரிவித்திருக்கிறார்.



விழாவுக்குச் சென்ற என் மாமா இதை என்னிடம் சொல்லும் பொழுது, நான் எதை நினைத்து அந்தக் கதாபாத்திரத்தைப் படைத்தேனோ அதில் வெற்றி கண்டுவிட்டேன் என மிகவுமே நெகிழ்ந்த தருணம் அது.






 

ரோசி கஜன்

Administrator
Staff member
கதை எழுதி, புத்தமாக வெளியிடும் ஆவல் கொண்ட புதுமுக எழுத்தாளர்களுக்கு நீங்கள் சொல்ல விரும்புவது?

பிரேமா: இன்றைய கால கட்டத்தில் யார் வேண்டுமானாலும் எழுத்தாளர் ஆகலாம். அதற்கு நானே ஒரு சிறந்த உதாரணம். அதனால் உங்களுக்கு கதை எழுதும் ஆசையும் ஆர்வமும் இருந்தால் முயற்சி செய்யுங்கள். உங்களின் திறமையை வெளிக் கொண்டு வந்து வெற்றி பெறுங்கள்

திருமதி லாவண்யா : புகழோ, பணமோ கிடைக்கும் என உங்கள் மனசாட்சிக்கு விரோதமாக எதையும் எழுதாதீர்கள். நம்மில் பலர் தினந்தோறும் கதைகள், கட்டுரைகள் என நிறைய வாசிக்க நேரிடும். அதன் தாக்கத்தை உங்கள் படைப்புகளில் காட்டி விடாதீர்கள். பின்னர் உங்கள் தனித்தன்மை பறிபோய்விடும். ஒவ்வொரு படைப்பாளிக்குள்ளும் ஒரு தனித்துவம் ஒளிந்திருக்கும். முயன்று அதை வெளிக்கொணர்ந்தால் உங்கள் எழுத்து என்றென்றும் வாசகர்களின் மத்தியில் நிலைத்திருக்கும்.
 

ரோசி கஜன்

Administrator
Staff member
பிரேமா, உங்கள் நாவல்களில் பொதுவாகவே புதிர்கள் இடம்பெற்றிருக்கும். ஆரம்பத்திலிருந்து அழகாகக் கொண்டு சென்று இறுதியில் அவற்றை விடுவிப்பீர்கள். கதையொன்றை எழுத ஆரம்பிக்கையில் அக்கதைக்கான புதிர்களை தீர்மானித்து விடுவீர்களா? அல்லது, கதையோட்டத்தில் உருவாகி, விடுபடாது சென்று ஒரு கட்டத்தில் விடுபடுமா?

“என்னைப் பொறுத்த வரையில் என் கதையின் கருவே அந்தப் புதிரைச் சுற்றித் தான் அமைந்து இருக்கும். அதனால், அதைத் தான் முதலில் தீர்மானம் செய்வேன்.”




லாவண்யா, உங்கள் அக்கரைச் சீமையிலே மறக்கவே முடியாத கதை. அக்கதையோடு நாங்களும் பயணித்த அனுபவம் கிடைத்தது. அக்கதை உருவாக்கம் பற்றிச் சொல்லுங்களேன். அந்தக்கரு எப்படி உருவானது? எழுதும் உந்துதல் எதனால் உருவானது?


“இயற்கைப் பிரியர்களான நானும் என் கணவரும் அந்தக் கதையில் ஆரம்பித்ததைப் போலவே லாஸ் ஏன்ஞ்சலஸிலிருந்து நியூயார்க் வரையில் ரோட் ட்ரிப் ஒன்று சென்றோம். அதைப் பயணக்கட்டுரையாக எழுத வேண்டும் என அப்போது நினைத்து, நிறைய விவரங்களைக் குறித்து வைத்திருந்தேன். ஆனால் எழுத முடியாமல் தள்ளிப் போய்க் கொண்டே இருந்தது.


பயணக் கட்டுரையாக எழுதினால் எங்கே எழுதி வெளியிடுவது, அதை அனைவரும் படிப்பார்களா என்ற தயக்கமும் உடன் இருந்தது. கதை எழுத ஆரம்பித்ததும், இதை வைத்தே ஒரு கதையை எழுதினால் என்ன என்ற கேள்வி என்னுள் எழ, கதையில் வந்த கதாபாத்திரங்கள் இது போன்று ரோட் ட்ரிப்பை விரும்பும் ஆட்களாக மாற்றினேன். அதில் காதல், நட்பு, குடும்பம் எனக் கலந்து கதையாக எழுதினேன். உங்களுக்குப் பிடித்ததில் மிக்க மகிழ்ச்சி.”





 

ரோசி கஜன்

Administrator
Staff member
நீங்கள் ஒரு வாசகி, எழுத்தாளர்; இருவேறுபட்ட நிலையில் ஒற்றுமை வேற்றுமைகள்? உங்கள் எழுத்துக்குப் பலர் ரசிகர்களாக இருப்பார்கள். அப்படி நீங்கள் ரசிகையாய் இருக்கும் எழுத்தாளர் யார்? யாரின் எழுத்தைத் தவறவிடாது படித்துவிடுவீர்கள்?

பிரேமா:

“நான் கல்லூரிக் காலத்தில் தான் நாவல்கள் வாசிக்க ஆரம்பித்தேன். என்னுடைய ஆதர்ச எழுத்தாளர் சிவசங்கரி மேடம். அவர் கதைகளை படித்த பின் அந்தத் தாக்கத்தில் இருந்து விடுபட நமக்குச் சில நாட்கள் பிடிக்கும். அப்படி ஒரு எழுத்துக்கு சொந்தக்காரர் அவர்.

இப்பொழுது என் சக எழுத்தாளத் தோழிகளின் கதைகள் அனைத்தையும் நேரம் கிடைக்கும் பொழுது வாசிக்கிறேன்.

வாசகியாகவும் எழுத்தாளராகவும் எனக்குள் இருக்கும் ஒற்றுமை வேற்றுமை பற்றிக் கேட்டு இருந்தீர்கள்.

பிரேமா ஒரு வாசகியாக என்ன எதிர்பார்க்கிறாளோ அதைத் தான் எழுத்தாளராய் நிறைவேற்றிக் கொள்கிறாள் என்று தான் சொல்ல வேண்டும்.

சிவசங்கரி மேடமின் கதைகள் மனதைப் பிசைவதாய், சோகம் நிறைந்ததாய் இருக்கும். வாசகியாய் நான் ரசித்தவற்றை எழுத்தில் கொண்டு வராத ஒரே விஷயம் சோகம் தான்.

என்னுடைய எல்லா கதைகளும் சுப முடிவு கொண்டவையே! இருபது வயதில் சோகக் கதைகளைப் படித்து ரசித்த என்னால் நாற்பது வயதில் படிக்க முடியவில்லை. வாசகியும் எழுத்தாளரும் மாறுபடுவது இந்த ஒரு விஷயத்தில் தான்.”


திருமதி லாவண்யா:
ஒற்றுமை என்றால் நான் வாசிக்கும் போதும் சரி, எழுதும் போதும் சரி தரமான எழுத்துக்களையே மனம் விரும்பும்; எதிர்பார்க்கும்.

வேற்றுமை என்றால் நான் எழுதும் போது தோன்றாத பிழைகள், இதை இப்படி எழுதி இருக்கலாமோ, அப்படிக் கொண்டு வந்திருக்கலாமோ என வாசிக்கையில் கண் எதிரே தோன்றும்.

அதனால் வாசகர்களின் கருத்துகள் ஒவ்வொரு எழுத்தாளர்களுக்கும் மிகவும் முக்கியம்.

எனக்குப் பிடித்தது ஒரே ஒருத்தரின் எழுத்துக்கள் என என் ரசிப்புத் திறனுக்கு நான் கடிவாளமிடவில்லை.

நான் பலருடைய எழுத்துக்களுக்கு ரசிகை.
பள்ளிப் பருவத்தில் ராஜேஷ்குமார் அவரின் நாவல்கள் என்றால் முதல் ஆளாக வாசித்து விடுவேன். அவ்வளவு விருப்பம். அதில் வரும் கொலைகள், அதை விஞ்ஞான ரீதியாகத் எவ்வாறு தீர்ப்பது எனப் பல தகவல்கள் அதில் அடங்கியிருக்கும். மிகவுமே விரும்பி வாசித்து வியப்படைந்திருக்கிறேன்.

அதன்பிறகு குடும்ப நாவல்களில் ரமணிச்சந்திரன் அம்மா அவர்களின் நாவல்களை இன்று வரையிலுமே விடாது முதல் வேலையாக வாசிப்பேன். மனதுக்கு இதமளிக்கும் விதத்தில் என்றுமே அவர்களின் கதைகள் இருக்கும்.

கடந்த சில வருடங்களாக தமிழ் நிவேதா மற்றும் மனோரம்யா அவர்களின் நாவல்களை விடாது வாசிக்கிறேன்.

மனோரம்யா இப்போது எழுதுவதில்லை என நினைக்கிறன்.

உங்கள் செந்தூரம் முதல் இதழில் தமிழ் நிவேதா அவர்களின் பேட்டியைப் பார்த்து மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன்.

அவரைப் பற்றிய அறியாத விவரங்களை அறிந்து கொண்டேன். உங்களுக்கு மிக்க நன்றி.

இப்போது பல எழுத்தாளர்கள் இருக்கிறார்கள். அவர்களில் ஒருவரை மட்டும் சொல்ல இயலாது. அனைவரும் ஒவ்வொரு விதத்தில் தனித்துவம் கொண்டவர்கள்.






















 

ரோசி கஜன்

Administrator
Staff member

எழுத்தாளர்களுக்குத் தனிப்பட்ட சக்தி கொடுப்பதென்றால் வாசகரின் கருத்துப் பரிமாற்றம் என்பதை மறுக்க மாட்டீர்கள் தானே? அந்த வகையில், உங்கள் மனதில் கல்வெட்டாய்ப் பதிந்த சம்பவங்கள் ஏதேனும் உண்டா?




பிரேமா: நிச்சயமாக! வாசகர்களின் விமர்சனம் தான் ஒரு எழுத்தாளருக்கான எனர்ஜி டானிக். மனதில் கல்வெட்டாய் பதிந்த சம்பவம்…
( இந்த இடத்தில் என் மனசாட்சி ‘ நீ அந்த அளவுக்கு சாதிச்சுட்டியா என்ன? என்று என்னை எள்ளி நகையாடுகிறது. ஹா! ஹா! ஹா! )
அப்படி ஒன்று இடம்பெறவில்லை என்று தான் சொல்ல வேண்டும்.
எவ்வளவோ பாராட்டுக் கடிதங்கள், தொலைபேசி அழைப்புகள் வந்திருக்கின்றன. கல்வெட்டாய் பதியும் சம்பவம் எதுவுமில்லை. அதற்கு நான் இன்னும் நிறைய சாதிக்க வேண்டும்.





திருமதி லாவண்யா: என் கதைகளை எண்பது வயது பாட்டி ஒருவர் வாசித்துவிட்டு அதைப் பற்றி என் மாமாவிடம் புகழ்ந்து என்னிடம் நேரில் பேச வேண்டும் என மிகவும் ஆர்வமாக இருப்பதாக அவரிடம் தெரிவித்திருந்தார்.



நானும் இந்தியா செல்கையில் அவரைச் சந்திக்கும் ஆர்வத்தில் இருந்தேன்.
ஆனால் நான் சென்றமுறை இந்தியா செல்வதற்குச் சில வாரங்களுக்கு முன்னரே எதிர்பாரதவிதமாக அவர் இயற்கை எய்துவிட்டார்.
அவரைச் சந்திக்க முடியாமல் போனது குறித்து மிகவும் வருத்தம் கொண்டேன்.

அவரிடம் தொலைபேசியிலாவது பேசி இருக்கலாமோ என இன்றுவரையிலும் என் மனதை வருத்திக் கொண்டிருக்கிறது.

முகம் தெரியாத அவரின் அன்புக்கு ஈடு இணை வேறெதுவும் இல்லை.





 
Top Bottom