You must have JavaScript enabled in order to use this order form. Please enable JavaScript and then reload this page in order to continue.

இரயில் பயணங்கள்!

ரோசி கஜன்

Administrator
Staff member
பயணங்கள், எப்போதுமே புதுப்புது அனுபவங்களைத் தருவதுண்டு. அவற்றில் சில, அந்நேரம் ரசிக்க வைத்தாலும், லயித்துப் போயிருந்தாலும் காலவோட்டத்தில் நினைவடுக்குகளில் பின் தள்ளப்பட்டு மறைந்தே போய்விடும். சிலதுகளோ, ஏதோ ஒரு வகையில் விஷேசமாகிவிடும். நம் நினைவுகளில் எவ்வளவுதான் நெரிசல் இருந்தாலும் முன்னணியில் இடம்பிடித்துக் கம்பீரமாக வீற்றிருக்கும்!

அப்படி, என் மனம் பசுமையாக உணரும் பயண அனுபவங்களை உங்களோடு பகிர்ந்து கொள்வதில் மிக்க மிக்க மகிழ்வடைகிறேன்.


இரயில் பயணம்:

சிறுவயதில், ஒரு பத்துவயதுக்குட்பட்ட காலப்பகுதியில் அடிக்கடி இரயில் பயணம் மேற்கொண்ட அனுபவமுண்டு.

இரயிலில் பயணம் செய்வது ஒரு அலாதியான சுகம். அதுவும் விசுக் விசுக்கென்று கடந்து செல்லும் தந்தி/மின் கம்பிகளும், அவற்றோடு போட்டியிட்டு ஓடும் மரங்களும் தோப்புகளும் என்னை மிகவும் ஆச்சரியம் கொள்ள வைத்தவை.

ரயிலின் வேகமே அவையெல்லாம் அந்த வேகத்தில் கடந்து செல்லக் காரணம் என்று புரியாத பருவத்தில், உலக மகா அதிசியமாக அதைப் பார்த்துள்ளேன்.

1543619736478.png

நானும் என் தம்பியும்
“தம்பி! அந்த மரங்கள் எல்லாம் என்ன வேகமாக ஓடுது பாரடா!” என்னைவிட இரு வயது சிறிய சகோதரனுக்குப் பெரியவளாக விளக்கம் சொல்லியிருக்கிறேன். என் அநேக இரயில் பயணங்களில் என் தம்பியும் கூடவே இருந்துள்ளான். இதை எழுதுகையில், அதில் சரி ‘கூடவே இருந்துள்ளான்’ என்று சொல்லும் பாக்கியம் பெற்றேனே என்ற எண்ணம் தோன்றிற்று! இரயில் பயணங்கள் என்று மட்டுமில்லை, என் பால்ய பருவத்தில், மகிழ்விலும் மனச்சுணக்கத்திலும் உற்ற தோழனாக, அப்பப்போ அடிபிடிப்படுவதில் பெரும் எதிரியாக என, எல்லாவுமாக இருந்தவன் என் தம்பி!


வேண்டாம், அவன் பற்றிய விசயம் இவ்விடத்தில் தேவையில்லை; விட்டுவிடுவோம்.

இரயிலுக்கே வருவோம். தண்டவாளங்களை ஒட்டிய குடிமனைகளில் ஆர்ப்பரிக்கும் சிறார்களைக் கண்டுவிட்டால் போதும், நான் ஏதோ அவர்களை விட மிகப் பெரியவளாக உணர்வேன். அவர்களுக்குக் கை காட்டுகையில் உள்ளே ஏகப்பட்ட பெருமிதக் குமிழிகள் பொங்கும். பின்ன...அவர்கள் ஆசையாசையாகப் பார்க்கும் ரயிலில் நான் பயணம் செய்கிறேனே!

குட்டி இளவரசியாக உணர்ந்த தருணங்கள் அவை!

அந்தச் சந்தர்ப்பத்தில் அநேகமாக நான் ஒரு வேலை செய்வேன். இப்போது நினைத்தால் ஹா...ஹா...சிரிப்புத்தான் வருகின்றது.

1543619788622.png

அப்போதெல்லாம் பம்ஸ் தான் அநேக நேரங்களில் அணிவேன். கறுப்பு, வெள்ளை நிறங்களில் சில சோடிகள் பம்ஸ் என்னிடம் எப்போதும் இருக்கும்.

ரயிலில் ஏறும் போதே அம்மாவிடம் கண்டிப்பான எச்சரிக்கை கிடைக்கும். “இங்க பார் ரோசி, இண்டைக்குப் பம்சைக் கழற்றி வீசினாயோ, இனிமேல் பாட்டா சிலிப்பர் தான்!” என்றதற்கு, நன்றாகவே தலையாட்டுவேன். ஆனாலும், விரைந்து செல்லும் ரயில் பயணத்தை முழுமையாக அனுபவிக்க வேண்டுமாயின் அம்மா சற்றே கண்ணயரும் தருணம் பார்த்து ...ஹே...ஹே...அதில் தான் எத்தனை ஆனந்தம்!

ஹா...ஹா... அநேக சந்தர்ப்பங்களில் இரயிலில் இருந்து இறங்குகையில் ஒற்றைக்காலில் சொக்ஸ் மட்டுமே இருக்கும். நடக்கவும் முடியாதல்லவா? பிறகென்ன? ஏச்சு(திட்டு) விழுந்தாலும் தூக்குக்காவடிதான்.

என் காலில் இருந்த பம்சை வெளியில் வீசுகையில் குட்டிக் கல்லு வீசுப்படுவது போல அப்படியே தொப்பென்று போய் விழும். கண்ணிமைக்கும் பொழுதுக்குள் பார்வையை விட்டு மறைந்திருக்கும்.

“அந்தா...அங்கபார், நான் வீசினது அங்க கிடக்கு!” என்று தம்பிக்குக் காட்டி எல்லாம் சொல்லமுடியாது. ரயில் தான் விரைந்து முன்னேறியிருக்குமே.

அதைவிட, தம்பி போட்டிருக்கும் சேர்ட், டீ சேர்ட் எதுவோ அதைக்கழற்றி, அப்படியே இருவரும் ஒன்றாகப் பிடித்தபடி சிறிதுதூரம் படபடவென்று பறக்கவிட்டுக் கொண்டு வந்து, ரயிலின் தாலாட்டுக்குச் சொருகும் கண்களை மூடி அசந்துவிடும் அம்மா, கண் திறந்து எங்களைப் பார்க்கையில் பட்டென்று பறக்க விடுவது ...ஹப்பா! அந்தக் கணம் கிடைத்த சந்தோசத்துக்கு ஈடு இணையே கிடையாது. எத்தனை எத்தனை பட்டங்கள் விட்டாலும் வராத ஆனந்தம் அதில் கிடைக்கும். அதுமட்டுமா கிடைக்கும்? அங்காலும் இங்காலும் பார்த்துவிட்டு நறுக்கென்ற நுள்ளும் தான். ஹா...ஹா...தாராளமாக வாங்கியுள்ளேன்.

அடுத்து, இரயில் பயணம் என்றதும் நினைவில் வருவது அங்கு விற்கப்படும் தின்பண்டங்கள் .

சின்ன வயதில் வாயூற வைக்கும் ‘வட வடே’ என்ற கூவல். வடையின் வாசத்தை நாசி நுகர்கையில் அம்மாவைக் கெஞ்சலாகப் பார்த்தால், “ஹ்ம்ம்... இதெல்லாம் சாப்பிடக் கூடாது. பிறகு வருத்தம் வரும்.” ஒரேயடியாகச் சொல்லிவிடுவார். கையோடு கொண்டுவரும் சாப்பாடு, பிஸ்கட், பழங்கள் தான் கிடைக்கும். அப்படியான நேரங்களில் வில்லியாகவே தெரிவார், அம்மா. ஹா...ஹா...இப்போ என் மகன்களும் இதே ‘வில்லி’ என்ற கதையை அப்பப்பச் சொல்கிறார்கள். பிடிக்க வேண்டிய இடத்தில் இறுக்கிப்பிடிக்காவிட்டால் கைக்கெட்டாத தூரம், எட்டிப் பிடிக்க முடியாத இடத்திற்கே போய்விடுவார்கள் என்பதை, பிற்காலத்தில் அவர்களும் உணர்வார்கள், அவர்களின் குழந்தைகளுக்கு வில்லனாகத் தெரிகையில்.

சோடா திறக்கும் கட்டரைச் சோடாப் போத்தலில் அப்படியே இழுத்து ஒரு சத்தம் எழுப்பியபடி சோடா விற்பார்களே! ஹ்ம்ம்...கச்சான், சுண்டல், உப்பு மிளகுத்தூள் தூவிய மாங்காய், கொய்யா இப்படி அந்தப்பட்டியல் நீளுமே! எல்லாமே கண்களுக்கு மட்டுமே விருந்தாகியது!

சரி, வளர்ந்ததும் இரயில் பயணம் செய்கையில் விற்கும் தின்பண்டங்களை எல்லாம் வாங்கி ருசிக்க வேண்டும் என்று ஒரு ஆசையே இருந்தது. அது எங்கே? வளரும் பருவத்தில் யாழ்ப்பாணத்திலிருந்து வவுனியா வரும் வரை தண்டவாளமே அம்போ...

இருந்தும், வளர்ந்த பின்னர் முற்றாக இரயில் பயணம் செய்யவில்லை என்றும் சொல்ல முடியாது.

மிகச் சிலதடவைகள் கொழும்பிலிருந்து வவுனியா சென்று வந்திருக்கிறேன். பெரியம்மாவோடு சிலதடவைகள், தோழியின் திருமணத்துக்கென ஒருதடவை இன்னொரு தோழியுடன். அதைவிடத் தனியாகவும் ...

தனியாக என்றதும் அது எல்லாம் என்ன பெரிய விசயமா என்ற வியப்பு ஏற்படலாம். இருபது வருடங்களுக்கு முதல் தனியாகச் செய்யும் பிரயாணங்கள் மிகவும் குறைவு. அன்றைய வீட்டு, நாட்டு நிலை அப்படி.

அதைவிட, கொழும்பில் நான் வேலைபார்த்த அலுவலகம் ‘பெற்றா’வில் இருந்தது. கிட்டத்தட்ட ஒருவருட காலம் வெள்ளவத்தையில் விடுதி வாழ்வு. அங்கிருந்து பஸ்ஸில் வேலைக்குப் போவதற்குள் ஹப்பா! இப்பொழுது நினைக்கையிலும் களைப்பாக உள்ளதே!

“பஸ்ஸில் ஏன் வருகிறாய்? ட்ரைன் என்றால் எவ்வளவு சுகம் தெரியுமா?” என்று, என் வேலையிடத்துத் தோழி சொல்லி, சீசன் டிக்கெட் எடுத்து இரயிலில் போய் வந்தேன்.

1543619843401.png

வெள்ளவத்தையில் ஏறி பெற்றாவில் இறங்கிச் சில நிமிட நடைதான். காலையும் மாலையும் மிகவும் சுவாரசியமான பயண நாட்கள் அவை. வெள்ளவத்தையில் நான் ஏறும் பொழுது என்னோடு வேலைபார்ப்பவர்கள் இரயிலினுள் இருப்பார்கள். கலகலப்பாகச் சென்று இறங்குவோம். பெரிய அலுவலகம். அன்றைய நாட்டு நிலையில் முழுச் சிங்கள அலுவலர்களிடையே விரல் விட்டு எண்ணுமளவுக்கு நாங்கள். அங்கு வேலை செய்த அந்த மூன்றரை வருடங்களின் பசுமையான நினைவுகளிற்குக் கூட வேலை செய்த நட்புகளே காரணம்.

ஆமாம்! உண்மையான நட்புக்கு இனம், மதம் எதுவுமே தெரியாது. பிடிக்கவில்லையோ கண்டிக்கும், கோபம் கொள்ளும். மனதில் படுவதை வெளிப்படையாகப் போட்டுட்டைக்கும். அதேநேரம், சந்தோசத்தில் தோள் அணைப்பது போலவே, சிறு கஷ்டத்திலும் கரம் கொடுக்கும். இந்த வார்த்தைகளை எழுதுகையில் என்னுடன் வேலைசெய்த ஒவ்வொரு முகங்களும் நினைவலைகளில்... சிலரோடு இன்னமும் தொடர்புண்டு. என்றாலும் அனைவருமே நினைவில் உள்ளனர்.

இன்றைய நிலையில், என் நாட்டில் இரயில் பயணம் எப்படி இருக்கும்? அன்று பாழடைந்து கிடந்த யாழ்ப்பாணப் புகையிரத நிலையத்தின் தோற்றம் பார்க்கையில் பயணம் செய்து பார்க்கும் ஆவல் மேலோங்கி நிற்கின்றது. காத்திருக்கிறேன், எப்போது அந்தச் சந்தர்ப்பம் கிடைக்கும் என்று.

வெளிநாடு வந்தபின்னர் ஒருதடவை பாரிசில் இருந்து லூர்த்து அன்னை ஆலயத்துக்கு மின்சார இரயிலில் சென்றிருந்தோம். ஒரு இருபது பேர்வரை சேர்ந்து சென்ற அந்த அனுபவமும் மிகவும் ரம்மியமானது.

அதைவிட, இங்கு ஒருதடவை, ஒரே ஒரு தடவை அம்ஸ்டர்டாம் வரை இரயிலில் சென்று திரும்பியிருக்கிறேன்.

பச்! என்னதான் என்றாலும் எங்கட ‘யாழ்தேவியை’ எந்த மின்சார இரயிலாலும் அடிக்கவே முடியாது.

மாட்டுவண்டிலில் தொடங்கி துவிச்சக்கர வண்டி, ஆட்டோ ரிக்ஷா, மினிவான், பேருந்து, லாரி, கார், லோஞ், கப்பல், விமானம் என, வெவ்வேறு போக்குவரத்துச் சாதனங்களில் பயணம் செய்திருந்தாலும் இரயில் பயணம் தனி!


அனுபவங்கள் தொடரும்...
 

Attachments

ரோசி கஜன்

Administrator
Staff member
இரயில் பயணங்கள் தொடர்பாக உங்கள் மனதில் உள்ள சுவையான தகவல்களை இங்கே பகிர்ந்து கொள்ளலாம்!
 

Google Typing

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.

Latest posts

Top Bottom