இருந்து

நிதனிபிரபு

Administrator
Staff member
இருந்து - இடைச்சொல் (இலக்கணம்)

இட வேற்றுமை உருபோடு இணைந்து நீக்கம், தொடக்கம் முதலிய தொடர்பை உணர்த்தும் வேற்றுமை உருபாகப் பயன்படும் இடைச்சொல்.

- நான் காலையிலிருந்து ஒன்றுமே சாப்பிடவில்லை

- நூறு ரூபாயிலிருந்து ஏலம் கேட்கத் தொடங்கினார்கள்

- மதுரையிலிருந்து வருகிறார்.

- கரும்பிலிருந்து சர்க்கரை தயாரிக்கப்படுகிறது.

- கோவிலை இடமிருந்து வலமாகச் சுற்றுவதுதான் முறை.

- அவன் அங்கிருந்து புறப்பட்டு ஒரு மணி நேரம் இருக்கும்.

- பலகை மேலேயிருந்து விழுந்தது.

- அவரிடமிருந்து எனக்குத் தகவல் வந்தது.
 

நிதனிபிரபு

Administrator
Staff member
இரு - வினைச்சொல்
Word forms: இருக்க, இருந்து

1.(நிலைமையைக் குறித்தல் தொடர்பான வழக்கு)


a.(ஒருவர் அல்லது ஒரு பொருள், ஓர் இடம், பரப்பு, சூழல் போன்றவற்றில் குறிப்பிட்ட நிலையில்) காணப்படுதல்; அமைதல்

- உன் அப்பா வீட்டில் இருக்கிறாரா?

- நீ தாத்தாவோடு இருந்தது தெரியாமல் தேடிக்கொண்டிருந்தோம்.

- பிற கிரகங்களில் உயிர் இருக்கிறதா என்று ஆராய்ச்சிகள் நடந்துகொண்டிருக்கின்றன.

- தமிழில் சிறந்த சிறுகதை ஆசிரியர்கள் பலர் இருக்கிறார்கள்.

- கோவிலுக்கு எதிரில் நிறையப் பூக் கடைகள் இருக்கின்றன.

- ரசத்தில் உப்பு இருக்கிறதா என்று பார்த்துச் சொல்.

- புகைப்படத்தில் இருக்கும் பெண் யார்?

- அவனுடைய கன்னத்தில் நிறைய தழும்புகள் இருந்தன.

- அவருடைய நகைச்சுவைகளில் துளிகூட ஆபாசம் இருக்காது.

- இமயமலை இந்தியாவில் இருக்கிறது.

- வானில் நிலவு இருக்கிறது.

- என் நிலையில் நீ இருந்தால் என்ன செய்வாய்?

- நீர் கலங்கலாக இருந்தது.

- வீட்டில் ஜாக்கிரதையாய் இரு!

- நாம் ஆரோக்கியமாக இருக்க உடற்பயிற்சி அவசியம்.

- இந்தச் சேலை புதிதாக இருக்கிறதே!

- அந்த மூட்டை கனமாக இருந்ததால் என்னால் தூக்க முடியவில்லை.

- குழந்தை அதன் அம்மாவின் சாயலில் இருந்தது


2.(நிலைத்தலைக் குறித்தல் தொடர்பான வழக்கு)

a.(குறிப்பிடப்படும் இடத்தில் ஒருவர்) தங்குதல்; வசித்தல்


- அவர் பத்து வருடங்களாக மயிலாப்பூரில் இருக்கிறார்.

- நீ கிராமத்துக்குப் போய் ஒரு வாரம் இருந்துவிட்டு வா.

- நாட்டின் மக்கள்தொகையில் 70 சதவீதம் பேர் கிராமத்தில் இருக்கிறார்கள்.

b.(ஓர் இருக்கையில், இடத்தில்) உட்கார்தல்

- அவர் நாற்காலியைக் காட்டி ‘இருங்கள்’ என்று சொன்னார்.

- அவர் ஊஞ்சலில் இருந்துகொண்டே பேசினார்.

- அவரை உள்ளே வந்து இருக்கச் சொல்

c.காத்திருத்தல்

- சற்று நேரம் இருந்து அவரைப் பார்த்துவிட்டு வா!

- கொஞ்சம் இருங்கள், நானும் வந்துவிடுகிறேன்

d.(நினைவில், கவனத்தில்) தங்குதல் அல்லது பதிதல்


- அவனை நான் முதலில் சந்தித்த அந்த நாள் நன்றாக நினைவில் இருக்கிறது.

- என்னை ஞாபகம் இருக்கிறதா?

- இந்த விஷயம் உங்கள் கவனத்தில் இருக்க வேண்டும்


3.(உடைமையைக் குறித்த வழக்கு)

a.(நான்காம் வேற்றுமை அல்லது ஏழாம் வேற்றுமை உருபு இணைந்த பெயர்ச்சொல்லுடன் வரும்போது) (ஒரு தன்மை, பொருள் போன்றவற்றை) உடையதாக அமைதல்; கொண்டிருத்தல்; வைத்திருத்தல்


- அவருக்கு ஒரு வீடு இருக்கிறது.

- குழந்தைக்கு இன்னும் காய்ச்சல் இருக்கிறது.

- எனக்குக் குடும்பம் இருக்கிறது; அதுதான் எனக்கு முக்கியம்.

- எனக்கு மக்கள் ஆதரவு இருப்பதால் நான்தான் நிச்சயம் வெற்றி பெறுவேன்.

- எனக்கு இரண்டு பையன்கள் இருக்கிறார்கள்.

- அவருக்கு வயது ஐம்பது இருக்கலாம்.

- அவளுக்கு நிறைய வேலைகள் இருந்ததால் அவனுடன் கடைக்கு வர முடியாது என்று கூறிவிட்டாள்.

- எனக்கு இருக்கும் ஒரே பிரச்சினை நேரத்தை எப்படிக் கழிப்பது என்பதுதான்.

- அவனுக்கு எவ்வளவு திமிர் இருந்தால் என்னையே எதிர்த்துப் பேசுவான்?


b.(ஒன்று நிகழ்வதற்கு) குறிப்பிட்ட அளவு நேரம் எஞ்சுதல்

- ரயில் கிளம்ப இன்னும் ஐந்து நிமிஷம் இருக்கிறது.

- அமாவாசைக்கு இன்னும் எத்தனை நாட்கள் இருக்கின்றன?

4.(பிற வழக்கு)

a.(குறிப்பிட்ட எண்ணம், உணர்ச்சி போன்றவை) ஏற்படுதல்; தோன்றுதல்


- அவருக்குப் பெண்டாட்டி பிள்ளைகளைப் பார்க்க வேண்டும் என்று இருக்காதா?

- தன்னுடைய கஷ்டத்தை நண்பர்கள் பகிர்ந்துகொள்ள மாட்டார்களா என்று அவளுக்கு இருந்தது.

- ஏன் இங்கு வந்தோம் என்று இருக்கிறது

b.(விரதம்) கடைப்பிடித்தல்; (பட்டினி) கிடத்தல்

- காவிரிப் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வை வலியுறுத்தி அவர் ஒரு நாள் உண்ணாவிரதம் இருந்தார்.

- என்னால் இருபத்துநாலு மணி நேரம் பட்டினி இருக்க முடியாது.

- வாரம் ஒரு நாள் மௌன விரதம் இருப்பது அவர் வழக்கம்

c.ஒன்று நிகழும் அல்லது ஒன்றைச் செய்யும் நிலையில் அமைதல்

- நாங்கள் சட்டங்களை மீறுவதாக இருக்கிறோம் என்றார் காந்திஜி.

- புது நாடகம் போடுவதாக இருந்தோம்.

- நாங்கள் இருவரும் அடுத்த ஆண்டு திருமணம் செய்துகொள்ளலாம் என்று இருக்கிறோம்.
 

நிதனிபிரபு

Administrator
Staff member
இரு - துணை வினை
Word forms: இருக்க (துணை வினை), இருந்து (துணை வினை)

1.ஒன்றை அல்லது ஒருவரைப் பற்றிய அனுமானத்தையோ ஊகத்தையோ தெரிவிக்கப் பயன்படுத்தும் துணை வினை.


- விழா முடிந்திருக்கும்

- நான் வீட்டுக்குப் போவதற்குள் குழந்தை தூங்கியிருக்கும்.

- நாளை இந்நேரம் அவர் அமெரிக்கா போயிருப்பார்.

- நான் மட்டும் ஜாக்கிரதையாக இருந்திருக்காவிட்டால், விபத்தில் இறந்திருப்பேன்.

2.வினைச்சொல் குறிப்பிடும் செயலின் விளைவாக ஒன்று காணப்படும் நிலையைத் தெரிவிக்கப் பயன்படும் துணை வினை

- உன்னுடைய சட்டை கிழிந்திருக்கிறது.

- கல் பட்டு ஜன்னல் கண்ணாடி உடைந்திருந்தது.

- கதவு நன்றாகத் திறந்திருந்தது.

- திருகாணி கழன்று கீழே விழுந்திருந்தது.

3.ஒருவர் ஒன்றை உறுதியாக அல்லது நிச்சயமாகத் தெரிவிக்கப் பயன்படுத்தும் துணை வினை

- எங்களுக்கு இந்த வீடு பிடித்திருக்கிறது.

- குழந்தைக்கு மருந்து கொடுத்திருக்கிறேன்.

- உன்னைத் தேடி யாரோ வந்திருக்கிறார்கள்.

- தேர்வுக்கு உள்ள பாடத்தை நன்றாகப் படித்திருக்கிறாயா?

4.(இறந்தகால வடிவங்கள் மட்டும்) ஒரு செயலைத் தொடர்ந்து மற்றொரு செயல் நிகழப்போவதுபோல் இருந்து பின் நிகழாததைத் தெரிவிக்கப் பயன்படுத்தும் துணை வினை

- கல் தடுக்கிக் கீழே விழ இருந்தேன்.

- அவனிடம் பணத்தைக் கொடுத்து ஏமாற இருந்தேன்.

- கீழே விழுந்து கண்ணாடி உடைய இருந்தது.
 
Last edited:
Top Bottom