எங்கள் வீட்டு ‘கிறிஸ்மஸ் மர’ அலங்காரம்! – ரோசி கஜன்

ரோசி கஜன்

Administrator
Staff member
1542049507612.png

மார்கழி என்றதும் ‘நத்தார்’ நினைவில் வராதிருக்கவே முடியாது.


இப்போதெல்லாம், மதம் என்றதையும் கடந்து மகிழ்விற்காகவென்று நத்தார் கொண்டாடப்படுவது மிக இயல்பாகி வருகிறது.


ஊரிலிருக்கும் பொழுது, ஒரு மேசையின் மூலையில் சுவரோடு இருக்கின்ற மாதிரி சவுக்கு மரக்கொப்பு; அதில் சில மணிகள், கலர் காகிதங்கள், மின்னிகள், விடிவெள்ளிகள் என எளிமையாக மர அலங்காரம் முடிந்துவிடும்.


மேசைமீது வைக்கோலில் சிறு மேடையமைத்து அதில் குட்டியாக பாலன்; மேரிமாதா; சூசையப்பர்; மூவரசர்கள் இவ்வளவும் தான்.


எளிமையாக இருந்தாலும் அங்கு பக்திதான் முன்னணியில் நிற்கும்.


நெதர்லாந்து வந்த பின்னரான நத்தார், எங்களுக்கு மிக மிக விஷேசம்! காரணம், எங்கள் மூத்த மகனோடு கொண்டாடினோம். அதுவும் அவர் பிறந்து இரு கிழமைகள்தான்.


அவர் பிறந்து சில தினங்கள் வைத்தியசாலையில் இருக்கும்படியாக நேர்ந்துவிட்டது. ஏழு நாட்களின் பின்னர் வீடு வரும் போது அழகான பிளாஸ்டிக் கிறிஸ்மஸ் மரம் எங்கள் வரவேற்பறை மூலையை ஆக்கிரமித்திருந்தது.

சிறிதும் பெரிதுமாகச் சிவப்பும் தங்க நிறமுமாக அழகான போல்ஸ்; குட்டிக் குட்டி உருவங்கள்; கண்சிமிட்டும் குட்டிக் குட்டி மின்குமிழ்கள். மரத்திற்குக் கீழே குட்டியாக ஒரு பாலன் பிறப்பு செட்; ஒரு குடில், அதில் பாலன், மாதா, சூசை.“எனக்கு இதெல்லாம் செய்து பழக்கமில்லை. முதல் முதல் வைத்திருக்கிறேன்.” என்றார் கஜன்.

அதன் பிறகு ஒவ்வொரு மார்கழியிலும் எங்கள் வீடு ஜொலிக்கும். மரம் மட்டுமின்றி, மாடிப்படி, வரவேற்பறை ஜன்னல்கள், சமையலறை என்று மின்விளக்கு அலங்காரமும் செய்வேன்.மரத்தின் கீழ் இன்னமும் அதே பாலன் பிறப்புக் குடில் தான். கூடவே, பிள்ளைகள் பள்ளியிலிருந்து கொண்டுவரும் நத்தார் புதுவருட வாழ்த்து மடல்கள், அவர்களுக்கான சிறு சிறு பரிசுப் பொதிகளும் இருக்கும்.

பரிசுக்காகவே மர அலங்காரத்திற்குப் போட்டி போட்டுக்கொண்டு உதவி செய்வார்கள். தமக்குத் தேவையான சின்னச்சின்னச் பொருட்கள் (அதுதான் கிடைக்கும் என்று அவர்களுக்கு நல்லாவே தெரியும்) எங்கே கிடைக்கும் என்ற விபரங்களை அடிக்கடி கதைத்துக் கொள்வார்கள். அதைக் கேட்டுவிட்டு நாங்கள் வாங்கி வைக்க வேண்டுமாம்.

இப்படி, ஊரில் போன்று ‘பக்தி’ என்பதைக் கடந்து, சந்தோசத்திற்காக, அதுவும் பிள்ளைகளின் மகிழ்விற்காகவே இத்தனையும் என்பதில் மறுப்பேதுவும் இல்லவே இல்லை.

மதச்சார்பின்றி அனைவரும் கொண்டாடும் நத்தார், உங்கள் உள்ளங்களிலும் இல்லங்களிலும் சந்தோசப்பூக்களை மலரச் செய்யட்டும்!

பெண்மையில் அனைவருக்கும் எங்கள் இனிய நத்தார், புதுவருட வாழ்த்துக்கள் பலபல!‘பெண்மை’ மார்கழிமாத மின்னிதழில் வெளியாகிய சிறு ஆக்கம்.
 
Top Bottom