அத்தியாயம் 42
பிரமிளாவைப் பார்க்க யாழினியுடன் வந்திருந்தார் செல்வராணி. அவர்களுக்கு இவரோடு இயல்பாக முகம் கொடுக்க விருப்பமில்லை, அவருக்கும் அவர்களின் முகம் பார்த்துக் கதைக்கச் சங்கடம். இரு சாராருமே தம் பிள்ளைகளை வாழக் கொடுத்தவர்கள். வருத்தமும் கோபமும் நிறைந்திருந்தாலும் வார்த்தைகளை விட்டுவிடப் பயந்தனர்.
வாங்கிக்கொண்டு வந்த பழங்களைக் கொடுத்துவிட்டு பிரமிளாவின் தலையை வருடி நலன் விசாரித்தார் செல்வராணி. நெற்றிக் காயத்தை ஆராய்ந்தார்.
வைத்தியர் என்ன சொன்னார் என்றும் கேட்டுக்கொண்டார். பார்த்திருந்த சரிதாவுக்கு, அடிக்கும் வரை வேடிக்கை பார்த்துவிட்டு இப்போது மட்டும் என்ன கரிசனம் என்று புகைந்தாலும் கணவருக்கு அஞ்சி வாயை மூடிக்கொண்டு நின்றார்.
சற்று நேரத்தில் யாழினி விசும்பும் சத்தம் கேட்டது. வந்ததில் இருந்து சத்தமே இல்லாமல் இருந்தவள் திடீர் என்று அழத் தொடங்கவும் எல்லோரும் திகைத்துப் போயினர். என்ன என்று கேட்டும் எதுவும் சொல்லவில்லை.
“யாழி, இங்க வா!” என்று அவளைத் தன்னருகில் இருத்திக்கொண்டு, “இப்ப என்னத்துக்கு அழுறாய்?” என்று வினவினாள் பிரமிளா.
“சொறி அண்ணி.. அண்ணா...அண்ணா..” என்று விக்கியவளுக்கு அதற்கு மேலே சொல்லத் தெரியவில்லை. கடந்த இரண்டு நாட்களாக அவள் பார்த்த கேட்ட விடயங்கள் மிகுந்த அதிர்ச்சிக்கு உள்ளாக்கியிருந்தது. எப்போதும் தைரியம் கொடுக்கும் பிரமிளாவைக் கண்டதும் அது அழுகையாகப் பொங்கிக்கொண்டு வந்தது.
முழுமையான காரணம் பிடிபடாத போதும் ஓரளவுக்கு விளங்க, “சரி சரி! அதுக்கு நீ ஏன் அழுறாய்? முதல் கண்ணைத் துடை.” என்று அவளைச் சமாதானம் செய்தாள் பிரமிளா.
“சொறி அண்ணி!” என்றபடி கண்களை நன்றாகத் துடைத்துக்கொண்டு முதல் வேலையாக அவளின் வயிற்றுக்கு ஒரு முத்தத்தைக் கொடுத்தாள். “செல்லக்குட்டி! எப்பிடி இருக்கிறீங்க? உங்கள பாக்க அத்த ஓடி வந்திட்டன், பாத்தீங்களா?” என்று மீண்டும் மீண்டும் முத்தமிட்டாள்.
அது அங்கிருந்த எல்லோரின் மனநிலையையும் சற்றே இலகுவாக்கிற்று. தனபாலசிங்கம் மெலிதாகப் புன்னகைத்தார்.
செல்வராணியும் இதை நல்ல வாய்ப்பாகப் பயன்படுத்திக்கொண்டார். “தம்பி செய்தது சரியான பிழை அம்மாச்சி. அதுக்கு நான் உன்னட்ட மன்னிப்பு கேக்கிறன். நீ ஒண்டையும் மனதில வச்சிருக்காதயம்மா!” என்றார் நயமாக. “பிள்ளை பிறக்கப்போற நேரம் கண்டதையும் யோசிச்சு உடம்பையும் மனதையும் கெடுக்காத.”
மத்தளத்துக்காவது இரு பக்கம் தான் அடி. இந்தப் பெண்மணிக்குத் திரும்பிய பக்கமெல்லாம் அடி. மனதில் பரிவு உண்டாக, “விடுங்கோ மாமி. நடந்ததுக்கு நீங்க என்ன செய்வீங்க?” என்று, அவரையும் சமாதானம் செய்தாள் பிரமிளா.
தீபா தமக்கையின் கால்களுக்கு ஒத்தடம் கொடுக்க ஆயத்தமாக, “தாங்க! நான் செய்றன்! எங்கட வீட்டை நான்தான் ஒவ்வொரு நாளும் என்ர அண்ணிக்குச் செய்து விடுறனான்.” என்று, நொடியில் அந்த வேலையைத் தன்னதாக்கிக் கொண்டிருந்தாள் யாழினி.
பிரமிளாவின் முன் தரையில் அமர்ந்து, அவளின் கால்களைத் தன் மடியில் ஏந்தி, அவள் ஒத்தடம் கொடுப்பதைப் பார்த்தபோது, பிரமிளாவின் குடும்பத்தினரின் காயம்பட்டிருந்த மனதுக்கு அது மிகப்பெரிய ஆறுதலை உண்டாக்கிற்று.
“தம்பி கை நீட்டினதை எந்த இடத்திலையும் நான் நியாயப்படுத்த மாட்டன் அண்ணா! ஆனா, அவனுக்கு முன்னாலேயே தகப்பனை பிரமி கேள்வி கேக்கவும் தான் அவசரப்பட்டு அப்பிடி நடந்திட்டான். என்ன இருந்தாலும் அப்பா எல்லோ. பிரமியையும் நான் குறை சொல்ல இல்ல. அவளுக்கு நாங்க செய்தது எல்லாம் பெரிய பிழைகள். அந்தக் கோவம் அவளுக்கு. அப்பாவை பேசின கோவம் அவனுக்கு எண்டு எல்லாம் கையை மீறிப் போச்சுது.” என்று தன்னால் முடிந்தவரை விளக்கினார் செல்வராணி.
வேறு வழி? எதையாவது சொல்லி எப்படியாவது அவர்களைச் சமாதானம் செய்து மகனையும் மருமகளையும் வாழவைக்க வேண்டுமே.
தனபாலசிங்கத்துக்கு மகளின் மீதிருந்த தவறு புரிந்தது. மனைவியை ஒருமுறை பார்த்துக்கொண்டார். பிரமிளாவின் கால்களைப் பிடித்துவிட்டுக்கொண்டு இருந்தாலும் இந்தப் பேச்சில் மீண்டும் யாழினி மௌனமாகக் கண்ணீர் உகுக்கத் தொடங்கவும் அதைப்பற்றி மேலே விவாதிக்க விரும்பவில்லை தனபாலசிங்கம்.
“போதும். நீ மேல வா!” என்று யாழினியைத் தன்னருகில் அமர்த்திக் கண்களைத் துடைத்துவிட்டாள் பிரமிளா.
அப்படியே ஒரு வேகத்தோடு மோகனனை மூத்தவன் விசாரித்தது கொடுத்த தண்டனை என்று எல்லாவற்றையும் அவர்களின் முகம் பாராது சொல்லிமுடித்தார் செல்வராணி. இத்தனை நாட்களாகப் பிரமிளாவின் புகைப்படத்தைப் போட்டது மூத்தவன் என்றுதானே அவருமே நினைத்திருந்தார்.
இருவருமே அவர் பெற்ற மக்கள். ஒருவனை நல்லவன் என்றும் மற்றவனைக் கெட்டவன் என்றும் தன் வாயாலேயே சொல்லவேண்டி வந்துவிட்டதால் பெற்ற மனம் புண்ணாகிப் போயிற்று. என்ன செய்ய? வாழ்க்கை இப்படியான இக்கட்டான சூழ்நிலைகளைத்தானே அவரிடம் தள்ளி விடுகிறது.
கேட்டிருந்த பிரமிளாவுக்குத் தலை வலிப்பது போலிருந்தது. இவன் எதற்கு எல்லோருக்கும் கையை நீட்டுகிறான்? எதையும் பொறுமையாகக் கையாள மாட்டானா?
செல்வராணி விடைபெற்ற பிறகும் தனபாலசிங்கத்துக்குச் செய்வது அறியாத நிலை. ஒன்றைத் தொடர்ந்து இன்னொன்று என்று விரும்பத் தகாத விடயங்கள் நடந்துகொண்டே இருப்பதை அமைதியாக வாழ்ந்து பழகிய மனிதரால் இயல்பாக எடுத்துக்கொள்ள முடியவில்லை. இனியாவது மோகனன் அண்ணனுக்கு அடங்கி இருப்பானா இல்லை பதிலுக்கு அவனும் ஏதும் செய்வானா? தன் இரு பெண் பிள்ளைகளின் வாழ்வுமே அந்தரத்தில் தொங்குவது போல் இருந்ததை அவரால் தாங்கிக்கொள்ளவே முடியவில்லை. அப்படியே அமைதியாகிப் போனார்.
சற்று நேரத்தில் தனபாலசிங்கம் மூச்சிறைப்பது பெரிதாகக் கேட்கவும் தான் எல்லோரின் பார்வையும் அவரிடம் ஓடியது. அன்று போலவே, வியர்த்துக்கொட்டி, கண்கள் செருக பாதி மயக்கத்தில் இருந்தவரைக் கண்டு பதறிப்போனார்கள். இரத்த அழுத்தத்துக்கான மாத்திரை வேலை செய்ய மறுக்க, ஒரு ஆட்டோவைப் பிடித்துக்கொண்டு வைத்தியரிடம் கொண்டு ஓடினார்கள்.
தினமும் தவறாத உடற்பயிற்சி, கட்டுப்பாடான உணவு என்று எல்லாவற்றிலும் கவனமாக இருந்தாலும் பிள்ளைகளைப் பற்றிய கவலையும் அதனால் உண்டான உறக்கமற்ற நிலையும் மனதின் அழுத்தமும் அவரின் இரத்த அழுத்தத்தை உச்சிக்கே கொண்டுபோயிருந்தது.
இரண்டு மணித்தியால போராட்டத்தின் பின்னர், இந்த முறையும் மாரடைப்பு இல்லைதான் என்றாலும் மிகுந்த கவனத்துடன் இருக்கவேண்டும் என்று எச்சரித்த வைத்தியர் இரண்டு நாட்களுக்கு அவரை அங்கேயே தங்கிப்போகச் சொன்னார்.
சரிதாவுக்குத் தாங்கிக்கொள்ளவே முடியவில்லை. பெண் பிள்ளைகளின் வாழ்க்கை தான் ஆபத்தில் இருக்கிறது என்று பார்த்தால் கணவருக்கும் இப்படியாகிவிட்டதே என்று கண்ணீர் உகுத்தார். தீபாவுக்கு எல்லாமே அடுத்தடுத்த அதிர்ச்சியாகிப் போனது. அவள் அன்னையைக் கவனிக்க, முடியாத அந்த நிலையிலும் தந்தையைக் கவனித்துக்கொண்டாள் பிரமிளா.
வைத்தியசாலைக் கட்டிலில் இயலாமல் கிடந்தவரின் பார்வை பிரமிளாவின் மீதே இருக்க அவளுக்கு அழுகை வரும் போலிருந்தது. சிரமப்பட்டு முகத்தில் புன்னகையைக் கொண்டுவந்து, “என்னப்பா அப்பிடி பாக்கிறீங்க?” என்று வினவினாள்.
ஒன்றுமில்லை என்பதுபோல் தலையை மெல்ல அசைத்தவரின் விழிகள் தன் மனதின் துயரை மகளிடம் காட்டிவிட விரும்பாமல் மூடிக் கொண்டது.
“அப்பா…” தவிப்புடன் அவரின் கரத்தைப் பற்றினாள் பெண். தனபாலசிங்கத்தின் விழியோரம் தடுக்க முடியாமல் இரு துளி கண்ணீர் வெளியேறிவிடத் துடித்துப்போனாள் அவள்.
“அப்பா, என்னப்பா நீங்க?” மகளின் கலக்கத்தில் வேகமாக விழிகளைத் திறந்து அவளின் கரத்தைத் தான் பற்றி அழுத்திக் கொடுத்தார். இருவரையும் பெண் பிள்ளைகளாகப் பெற்றபோதும் கவலைப்பட்டதில்லை. நல்லபடியாக வளர்த்தபோதும் யோசித்ததில்லை. ஆனால் இன்றைக்கு அவர்களின் எதிர்காலத்தைச் சிந்தித்து மிகவுமே அச்சம் கொண்டார்.
பரிதவித்துப் போனாள் பிரமிளா. அவரின் துன்பங்களைக் களைந்துவிடத் துடித்தாள்.
“என்னைப் பற்றி யோசிக்காதீங்கோ அப்பா. நானே நினைச்சாக்கூட உங்கட மருமகன் என்னை விட்டுட மாட்டார். கொஞ்சம் கோவக்காரன் எண்டாலும் நல்லவர் தான் அப்பா. நீங்க சொன்னதுதான், பிறந்ததில இருந்தே பதவி, கௌரவம், பெயர் எண்டு ஒரு மாயை உலகத்துக்க வாழ்ந்திட்டார். அதுதான் எங்களுக்க முரணா நிக்குது. ஆனா, நாங்க நல்லா வாழுவோம் அப்பா. எனக்கு நம்பிக்கை இருக்கு. தீபாவை பற்றியும் யோசிக்காதீங்கோ. இனி அவளுக்கும் அவர்தான் பொறுப்பு. மாமி சொன்னதைக் கேட்டனீங்க தானே. மாமாவையும் எதிர்த்து கதைச்சு மாமியையும் பேசி நான் செய்ததும் பிழை தானே. அதுதான் இப்பிடியெல்லாம் நடந்து போச்சு.”
அவரிடம் மெல்லிய தெளிவு. “சும்மா சொல்ல இல்லையேம்மா.” மகள் மீண்டும் கணவனோடு சமாதானம் ஆகிவிடுவாளா என்கிற எதிர்பார்ப்புடன் கேட்டார்.
“உங்கட மகளுக்குப் பொய் சொல்லுறதுக்குச் சொல்லித்தந்து இருக்கிறீங்களாப்பா? அதுவும் உங்களிட்ட.” என்று, திருப்பிக் கேட்டாள் அவள்.
“அப்ப தம்பிய ஒருக்கா வரச்சொல்லு. நான் அவரோட கதைக்கவேணும்.”
அவளின் முகம் சுருங்கிற்று. அதைக்கண்டு அவர் முகம் வாடினார். வேகமாகத் தன்னைச் சமாளித்துக்கொண்டு, “இப்பவே வரச் சொல்லுறன். நீங்க கொஞ்சம் படுத்து எழும்புங்கோ. அதுக்குப் பிறகு அவரோட கதைக்கலாம் சரியா.” என்று, குழந்தைக்குச் சொல்வதுபோல் அவரைத் தேற்றி உறங்க வைத்துவிட்டு வெளியே வந்தவள் ஃபோனைப் பற்றிக்கொண்டு அப்படியே நின்றுவிட்டாள்.
அவன் சொன்ன வார்த்தைகள் அத்தனையும் நெஞ்சுக்குள் நின்று வலித்துக்கொண்டு இருக்கையில் அவனுக்கு எப்படி அழைப்பது?
“என்னவாம்மா அப்பா?” அன்னையின் கவலை தோய்ந்த குரலில் அவரைக் கவனித்தாள் பிரமிளா.