You must have JavaScript enabled in order to use this order form. Please enable JavaScript and then reload this page in order to continue.

ஏனோ மனம் தள்ளாடுதே...!

Status
Not open for further replies.

நிதனிபிரபு

Administrator
Staff member
அவன் மனம் அப்படியே அமைதியாயிற்று. அவனுக்கான மிகப்பெரிய விடுதலை ஒன்றைக் கொடுத்திருந்தார் அவர். என்னவோ அத்தனை நாட்களாக அவனைப் பூட்டியிருந்த ஒரு விலங்கு அதன் சக்தியை இழந்து கழன்று விழுந்து விட்டதாக உணர்ந்தான் கௌசிகன்.

“நிச்சயமா மாமா! நீங்க சொன்னதை நினைவில வச்சு நடக்கிறன்!” என்று புன்னகைத்துவிட்டு, “இன்னொரு விசயம் மாமா.” என்றான்.

அவர் கேள்வியாகப் பார்க்க, “எனக்கு உங்கட உதவி கொஞ்சம் வேணுமே.” என்றான்.

“சொல்லுங்கோ. என்னால முடிஞ்சதை கட்டாயம் செய்வன்.”

“மோகனனும் இப்ப இல்ல. அப்பா கொழும்பிலையே நிக்கிறார். எனக்கு, கடை, ஹோட்டல், பள்ளிக்கூடம் எண்டு எல்லாமே சரியா இருக்கு. இந்த விளையாட்டு அரங்கு கட்டுற வேலைய கொஞ்சம் நீங்க மேற்பார்வை பாக்க மாட்டீங்களா? நீங்க இத பாத்தா நான் கொஞ்சம் மற்ற வேலைகளைக் கவனிப்பன். ஏலுமா மாமா?”

அவர் முகம் அப்படியே மலர்ந்து போயிற்று. விழிகள் நேசத்துடன் அந்தக் கல்லூரியையும், மைதானத்தையும் சுற்றி வந்தன.

“ஏலுமாவா? கட்டாயம் செய்றன் தம்பி! எனக்கும் வேற என்ன வேல.” என்றார்.

இதற்காகத்தானே அவன் கேட்டதே. நாட்கள் நகர்ந்தன. தினமும் அவர் அங்குக் காலையிலேயே வருவதும், உற்சாகத்துடன் கல்லூரி, மைதானம் என்று வளைய வருவதையும் பார்க்கையில், மனதுக்கு நிறைவாக உணர்ந்தான். மனைவி இதைப் பார்த்தால் நிச்சயம் மகிழ்வாள் என்று நம்பினான்.

மூன்றாவது வாரமும் கடந்திருக்க இனி முடியாது என்கிற நிலைக்கு வந்திருந்தான் கௌசிகன். யோசிக்கட்டும் தொந்தரவு செய்யவேண்டாம் என்று அவன் அழைக்காமல் விட்டதும் சேர்ந்து வாட்டியது. அவளைப் பாராமல் அவளின் குரலைக் கேளாமல் அவள் இல்லாமல் அவனுக்குள் வெறுமை மாத்திரமே! எவ்வளவுதான் அவள் தள்ளி நிறுத்தினாலும் அவளையே சுற்றும் மனதை அடக்க முடியவில்லை.

செல்லமுத்து நகைமாடத்தின் திருகோணமலைக் கிளையை ராஜநாயகத்தின் தம்பி மகனிடம் ஒப்படைத்திருந்தனர். இவர்களுக்கான பங்கு இலாபம் மட்டும் வரும். மற்றும்படி அதன் லாபநட்டத்தில் இவர்கள் தலையிடுவதில்லை. அதை ஒருமுறை பார்க்கவேண்டும் என்று இருந்த நீண்ட நாள் யோசனையைச் சாட்டாக வைத்துக்கொண்டு புறப்பட்டிருந்தான் அவன்.

பிரமிளாவுக்கும் இந்தப் பிரிவு மிகப்பெரிய மாற்றத்தைத்தான் உண்டாக்கிற்று. பாசமாகக் கவனித்துக்கொண்ட தீபா, பிரியமாகவே பார்த்துக்கொண்ட தீபன், தினமும் அழைத்து அவளோடு அளவளாவிய அன்னை தந்தை என்று அன்பானவர்கள் அவளைச் சுற்றி இருந்தாலும் மனம் கணவனிடம் தான் சிக்கிக்கொண்டு நின்றிருந்தது.

தன் வாழ்க்கையில் அவனுக்கான இடம் என்ன என்பதை, அவனைப் பாராத அவனுடைய குரலைக் கேட்காத இந்த நாட்கள் தான் உணர்த்திற்று.

அவனும் அவள் இல்லாமல் தனக்குள் மிகவுமே தவிக்கிறான் என்று புரியாமல் இல்லை. ஏன் அவளின் நிலையும் இப்போதெல்லாம் அதேதான்.

அவள் என்னதான் சுடு சொற்களை வீசினாலும், முகம் திருப்பிக்கொண்டாலும், முகத்தில் அடித்தாற்போல் பேசினாலும் திரும்பத் திரும்ப அவளிடமே வந்து நிற்கிறவனை எப்படி வெறுப்பது? அவனுடைய இரண்டாம் தாரம் பேச்சு மிகப்பெரிய கண் திறப்பு. அதுவும் யாரிடமும் தளைந்து போகாத அவனின் குணத்துக்கு அவளிடம் அவன் காட்டுகிற இந்த எல்லையற்ற நேசம் மலைப்பைத் தான் உண்டாக்கிற்று. சொல்லத் தெரியாத மனத்தடைகள் எல்லாம் இப்போது வெள்ளம் அடித்துச் சென்ற மனைகளாகக் கரைந்து போயிற்று.

காலைச் சுற்றும் நாய்க்குட்டியாகத் தன்னையே சுற்றும் கணவனின் அந்த விடாப்பிடியான அன்புக்கு முன்னே அவள் தோற்றுத்தான் போனாள். திட்டமிட்டு அவளை வரவைத்துவிட்டு, அதற்குமேல் அவளை நோகடிக்க முடியாமல் தோற்று உண்மையை ஒத்துக்கொண்டு நில் என்று கெஞ்சியவனின் நினைவில் அவள் உதட்டினில் அழகான முறுவல் ஒன்று மலர்ந்து போயிற்று.

அவள் தனிமையில் அகப்பட்டால் போதும், நொடி நேரத்திலேயே கோபத்தையும் காதலையும் சரிசமமாகக் காட்டிவிடுவான். ஒரு கண்ணில் கோபத்தையும் இன்னொரு கண்ணில் காதலையும் கொண்டே திரிவான் போலும்! என்றுமில்லாமல் இன்று ஏனோ மனம் கணவனை அதிகமாகவே நாடிற்று. இந்த நொடியே பார்க்க முடிந்தால்?

அவள் நினைத்து முடிக்க முதலே பரபரப்புடன் ஓடிவந்தாள் தீபா.

“அக்கா, அத்தான் வந்திருக்கிறார்.”

“அத்தானா? அவர் எப்பிடி இங்க?” அவளுக்குத் திகைப்பாயிற்று. நினைத்து முடிக்க முதல் வந்து நிற்கிறானே!

“மத்தியானம் எடுத்து, திருகோணமலைக்கு வந்திருக்கிறன், வீட்டை நிக்கிறீங்களா, பாக்க வரலாமா எண்டு கேட்டவர். ஒரு சப்ரைஸா இருக்கட்டும் எண்டு நான்தான் உங்களிட்ட சொல்ல இல்ல.” என்றவளின் பேச்சை முழுமையாக நின்று கேட்காமல் ஹாலுக்கு விரைந்தது அவளின் கால்கள்.

அங்கே, தீபனுடன் அமர்ந்திருந்து பேசிக்கொண்டிருந்தான் அவன். இவளைக் கண்டதும் பேச்சு நிற்க அவளைப் பார்த்தான். அவளுக்கு ஏனோ கண்ணைக் கரித்தது. களைத்து இளைத்துத் தெரிந்தான்.

நொடியில் தன்னை அளவெடுத்த மனைவியின் பார்வையில் தனக்குள் சிரித்துக்கொண்டான் கௌசிகன்.

“பிறகு.. லீவு எல்லாம் எப்பிடி போச்சு?”

நன்றாகப் போனது என்பதுபோல் அவள் தலையை அசைக்க, “நீங்க இல்லாம நிம்மதியா சந்தோசமா போச்சு!” என்றாள் தீபா வெடுக்கென்று.

அவளுக்குப் பதில் சொல்லாமல், “போயும் போயும் உனக்கு இவள் தான் கிடைச்சவளா தீபன்? வேற நல்ல பிள்ளையா பாத்து நீ விரும்பி இருக்கலாம்.” என்றான் அவன் தீபனிடம்.

“ஏன், எனக்கு என்ன குறை? என்னை என்ன உங்களை மாதிரி நினைச்சீங்களா? அடிதடி உருட்டல் மிரட்டல் எண்டு இருக்க? எங்கட அக்கா எப்பிடி இருந்தவா தெரியுமா? அவாவ வாயில்லா பூச்சி மாதிரி ஆக்கி வச்சு இருக்கிறீங்க!” என்று திருப்பிக் கொடுத்தாள் அவள்.

பார்வை ஒருமுறை மனைவியிடம் சென்று வர, “ஆரு? உன்ர அக்கா வாயில்லா பூச்சி? இத அவளே ஏத்துக்கொள்ள மாட்டாள். அவள் என்னைத் திட்டி நீ பாக்கேல்லை எண்டு சொல்லு. இப்ப எல்லாம் எனக்கு அவளைப் பாத்தாலே நடுங்குது.” என்றவனின் பேச்சில் தன்னை மீறி முறுவல் அரும்ப அவனை முறைத்தாள் பிரமிளா.
 

நிதனிபிரபு

Administrator
Staff member
பெருசா அவளுக்குப் பயந்தவன் தான். கள்ளன்! நடிக்கிறான்!

அவர்கள் இருவருக்குமான சண்டை முடிவில்லாமல் நீண்டுகொண்டே போனது. அதற்கு நடுவில் இரவு உணவை முடித்துக்கொண்டு அவன் கிளம்பத் தயாரானான்.

“இப்பவே யாழ்ப்பாணம் வெளிக்கிடுறீங்களா அண்ணா?” என்றான் தீபன்.

“நாளைக்குத்தான் பயணம். இப்ப ஹோட்டலுக்குப் போய் நல்ல நித்திரை ஒண்டு கொண்டு எழும்பி விடிய வெளிக்கிட வேணும்.” என்றான் அவன்.

பாத்திரங்களைத் தமக்கையோடு சேர்ந்து ஒதுக்கிக்கொண்டு இருந்த தீபா படக்கென்று திரும்பி முறைத்தாள். “அதுசரி! இவர் எல்லாம் ஆரு? பெரி...ய செல்லமுத்து நகைமாடத்தின்ர ஓனர். எங்கட வீட்டை எல்லாம் தங்குவாரா? போங்க போங்க போய் உங்கட ஹோட்டலிலேயே தங்குங்க!” என்றுவிட்டு வெடுக்கென்று முகத்தைத் திருப்பிக் கொண்டாள்.

சிரிப்புடன் அவளின் தலையில் செல்லமாகக் கொட்டிவிட்டு, “ஏய் வாய்க்காரி! நான் உங்களுக்கு இடைஞ்சலா இருக்கக் கூடாது எல்லா. அதுக்குத்தான் அப்பிடி சொன்னனான்.” என்றான் அவன் சமாதானமாக.

“நீங்க இடைஞ்சலா இல்லையா எண்டுறதை நாங்கதான் சொல்லோணும். நீங்க இல்ல! எங்கட வீட்டை தாராளமா இடம் இருக்கு. உங்களுக்கு விருப்பம் இருந்தா நீங்க நிக்கலாம்! விருப்பம் இல்லாதவைய நாங்க மறிக்க மாட்டோம்.”

அதற்குமேல் இயலாமல், “இவளை எப்பிடியடா தினம் தினம் சமாளிக்கிறாய்? இந்த ஒரு நாளுக்கே எனக்குக் கண்ணைக் கட்டுது.” என்று தீபனிடம் நகைத்துக்கொண்டு கேட்டான் கௌசிகன்.

மனைவியிடம் கள்ளச் சிரிப்புடன் பார்வை சென்று வர, “கஷ்டம் தான் அண்ணா. வேற வழி?” என்று அவன் சொல்லி முடிக்க முதலே அடுத்தச் சண்டையை அவள் அவனோடு ஆரம்பித்திருக்கச் சிரிப்புடன் போய்க் காரில் இருந்த தன் பாக்கினை கொண்டு வந்து பிரமிளாவிடம் கொடுத்தான் கௌசிகன்.

அவன் கண்கள் அவளிடம் சிரித்தது.

பேசாமல் வாங்கிக்கொண்டு அறைக்குள் போனவள் பிறகு வெளியே வரவேயில்லை.

பின்னே, எத்தனை திருகுதாளங்களை நிகழ்த்தி அவளுடன் தங்குவதற்கு வழி சமைத்திருக்கிறான். உண்மையிலேயே இவன் மகா பொல்லாதவன் தான்! இல்லாமல், புத்தி சாலியான தீபாவே இவன் விரித்த வலைக்குள் மாட்டுப்பட்டுப் போவாளா? சொந்தச் சித்தப்பா குடும்பம் அதே ஊரில் இருக்கையில் இவன் ஏன் ஹோட்டலில் தங்கவேண்டும்? எல்லாம் பொய்!

படபடப்புடன் அவள் காத்திருக்க அவனும் அறைக்குள் வந்தான். கதவைச் சாற்றினான். சற்றுநேரம் தனக்கு முதுகு காட்டியபடி யன்னலோரம் நின்ற மனைவியிலேயே அவன் பார்வை தங்கியது.

மின்விளக்கு ஏற்றியிருக்கவில்லை. நிலவின் ஒளியில் சிலையென நின்றிருந்தவளைப் பின்னால் சென்று அணைத்துக்கொண்டான். அவளின் உடலில் ஒரு நடுக்கம் ஓடிற்று. பார்வையைத் திருப்பி அவனை நோக்கினாள். அவன் விழிகளும் அவளின் விழிகளைச் சந்தித்தது. விலகாத அவளின் விழிகளின் வழியே அவளின் மனதை படிக்க முனைந்துகொண்டிருந்தான் கௌசிகன். தன்னை விலக்க
முனையாத அவளின் நிலையே அவள் மனதை உணர்த்த சிறு சிரிப்புடன் அவளின் இதழ்கள் நோக்கிக் குனிந்தான் அவன்.

இத்தனை நாள் பிரிவை இதழ்களுக்குள் கரைத்துவிட்டு அவன் நிமிர்ந்தபோது அவளின் தலை தாழ்ந்து போயிருந்தது.

அவளைத் திருப்பி, தன் முகம் பார்க்க வைத்து, “சுகமா இருக்கிறியா?” என்றான் கன்னம் வருடி.

“ம்ம். நீங்க?”

“இருக்கிறன்!” என்றான் அவன்.

இது என்ன பதில் என்று பார்த்தாள் அவள். “நீயில்லாம நான் எப்பிடி சுகமா இருக்க?” என்றவன், அவளின் தலையைத் தன் மார்போடு சேர்த்து அணைத்துக்கொண்டான். விழிகள் தானாக மூடிற்று. தன்னவள் தன் கைக்குள் இருக்கிறாள் என்பதை ஆத்மார்த்தமாக மனதோடு உணர்ந்துகொண்டிருந்தான்.

அவனிடம் மட்டுமே கிடைக்கும் இந்த ஆறுதலுக்காக அவளின் ஆழ்மனமும் அவளறியாமல் ஏங்கிப் போயிருந்ததோ என்னவோ, விழியோரம் கசிய அவன் கைகளுக்குள் பேசாமல் அடங்கினாள். அதை உணர்ந்தவனும் தன் அணைப்பை இறுக்கினான். ஒருவருக்கு மற்றவரின் அருகாமை ஆறுதலாகி, தேவையாகி, தேடலாகிப் போய் எல்லை மீறும் நொடியில் சிறு சிரிப்புடன் அவளை விடுவித்தான் அவன்.

முகத்தை நிமிர்த்தமுடியாமல் அவள் நிற்க, நெற்றியில் தன் உதடுகளை ஒற்றி எடுத்துவிட்டு, “வீட்டுடுப்பு பாக்ல இருக்கு; எடுத்துவை குளிச்சிட்டு வாறன்.” என்றுவிட்டு பாத்ரூமுக்குள் நுழைந்துகொண்டான் அவன்.

அமைதியாக அவன் சொன்னதைச் செய்து வைத்தாள். இனி? அந்த ஒற்றைச் சொல் கேள்வியிலேயே சிக்குண்டு நின்றது மனது. பேசாமல் சென்று படுத்துக்கொண்டாள்.

அவனும் வந்தான். உடையை மாற்றிக்கொண்டு, விளக்கை அணைத்துவிட்டுக் கட்டிலில் சரிந்தான். அவனுக்கு முதுகு காட்டிப் படுத்திருந்தவளைப் பார்க்கச் சிரிப்பு வந்தது. இப்படி ஆளுக்கொரு திசையில் இருக்கத்தான், திட்டமெல்லாம் தீட்டி அங்கிருந்து மெனக்கெட்டு வந்தானா?

“பக்கத்தில வா! நீ பயப்பிடுற ஒண்டும் நடக்காது!” என்றபடி தன் கைகளுக்குள் அவளை அள்ளிக்கொண்டான்.

“கௌசி பிளீஸ்!” அவளுக்கு முகமெல்லாம் சூடாகிற்று.

அவன் சிரித்தான். “இந்த, ‘கௌசி பிளீஸ்’ க்காக இன்னும் நிறையச் செய்யலாம் போல இருக்கே!” என்றான் கிறக்கத்துடன்.

அவன் மார்பில் முகத்தைப் புதைத்தபடி கையிலேயே அவள் ஒன்று போட சத்தமற்றுச் சிரிப்பில் குலுங்கியவனுக்கு இன்னும் சிலபல அடிகளைப் போட மாத்திரமே முடிந்தது அவளுக்கு.

மனைவியின் தலையை நேசத்துடன் வருடிக்கொடுத்தான் கௌசிகன். அவள் மாறியிருக்கிறாள். அவனை ஏற்றுக்கொள்ள ஆரம்பித்திருக்கிறாள். அந்த மாற்றம் மிக நன்றாகவே தெரிந்தது. அதுவே அவனுக்கு மிகப்பெரிய சந்தோசத்தைக் கொடுக்க அவளை மார்பில் தாங்கியபடி நிம்மதியாக விழிகளை மூடிக்கொண்டான்.
 

நிதனிபிரபு

Administrator
Staff member
அத்தியாயம் - 51


அன்று காலையில் முகம் கழுவிக்கொண்டு வந்த பிரமிளா பரபரப்பாகத் தயாராகிக்கொண்டிருந்த தந்தையைக் கண்டுவிட்டு அப்படியே நின்றுவிட்டாள். கல்லூரிக்காலம் கண்முன்னே வந்து போயிற்று.

நேற்றைய நாள் முழுவதும் இரண்டு குடும்பமும் திக்கோணேஸ்வரர் கோவில், மார்பில் பீச், நிலாவெளி கடற்கரை என்று சுற்றிவிட்டு இரவுணவையும் முடித்துக்கொண்ட பிறகு புறப்பட்டு நள்ளிரவில் தான் கணவனோடு வீடு வந்து சேர்ந்திருந்தாள்.

அடித்துப் போட்டதுபோல் உறங்கி எழுந்து பார்த்தால் வீட்டில் இப்படி ஒரு காட்சி அரங்கேறிக்கொண்டு இருந்தது.

“அம்மாச்சி, எழும்பிட்டியா பிள்ளை. அப்பான்ர கண்ணாடி எங்க எண்டு ஒருக்கா பாரம்மா. தேடுறன் தேடுறன் கண்ணில அம்பிடுதே(அகப்படுதே) இல்ல. நேரம் வேற போகுது!” அவசரமும் அந்தரமுமாகத் தேடிக்கொண்டிருந்தவரைக் கண்ணில் சிரிப்புடன் நெருங்கினாள் பிரமிளா.

தேடல் நிற்க மகளின் சிரிப்பில் தானும் மலர்ந்தபடி, “என்னம்மா?” என்றார் அவர். அவருக்கு நேரம் போகிறது. இந்தப் பிள்ளையானால் சிரிக்கிறாளே! விளையாடுகிற நேரமா இது?

அவளோ, ஒன்றும் சொல்லாமல் அவரின் தலையில் கிடந்த கண்ணாடியை எடுத்து மூக்கில் மாட்டிவிட்டாள்.

“இவ்வளவு நேரமா இது இங்கேயா கிடந்தது..” அவர் முகத்தில் வழிந்த அசடைக் கண்டுவிட்டு அடக்கமாட்டாமல் நகைத்தாள் பிரமிளா.

பார்த்தவருக்கு அப்படி ஒரு சந்தோசம். சரிதா கூட ஓடிவந்து ஆசையோடு மகளின் முகத்தையே பார்த்தார்.
“போம்மா! உனக்கு அப்பாவை பகிடி பண்ணுறது எண்டா நல்ல சந்தோசம் என்ன?” செல்லக் கோபத்துடன் சொன்ன தனபாலசிங்கத்துக்கு அதற்குமேல் அவளுடன் நின்று கதைக்க நேரமில்லை.

“தம்பி இண்டைக்கு நிக்க மாட்டார். கிரவுண்ட்ல ஸ்விம் பூல் கட்டுற வேல நடக்குது. பக்கத்திலேயே நிண்டு பாத்தாத்தான் வேலை ஒழுங்கா நடக்கும். இல்லாட்டி நாங்க ஒண்டு சொன்னா அவங்கள் இன்னொண்டு செய்துபோட்டுப் போயிடுவாங்கள். நடைபாதை எல்லாம் கம்பு, கட்டை எண்டு எல்லாத்தையும் போட்டு வச்சிருக்கிறாங்கள். வாற கிழமை பள்ளிக்கூடம் தொடங்க முதல் அதையெல்லாம் ஒதுக்கச் சொல்லவேணும். அப்பிடியே ஹோட்டலுக்கும் போய்ட்டுத்தான் வருவன். மத்தியான சாப்பாடு எனக்குச் செய்ய வேண்டாம். தம்பி பத்திய சாப்பாட்டுக்கு ஏற்பாடு செய்திருப்பார்.” மனைவிக்கும் மகளுக்கும் சேர்த்துக் கதை சொல்லிவிட்டு, வேக வேகமாகத் தன் மோட்டார் வண்டியைக் கிளப்பிக்கொண்டு போனவரைக் கண்டு வியப்பும் சந்தோசமுமாகப் பார்த்திருந்தாள் பிரமிளா.

“என்னம்மா நடக்குது இங்க?” நடப்பதை இன்னுமே அவளால் நம்பமுடியவில்லை.

அவர் முகத்திலும் பழைய சந்தோசம். “அதை ஏனம்மா கேக்கிறாய். இப்ப எல்லாம் ஆள் இப்பிடித்தான் விடிய எழும்பினா வெளிக்கிட்டு ஓடிடுவார். தம்பி அத பாக்கச் சொன்னவர், இத செய்யச் சொன்னவர் எண்டு ஒரே பிசிதான். நான் ஏதும் கேட்டா கூட, ‘நேரமில்லை, ரஜீவனைக் கேள்’ எண்டு சொல்லிப்போடுவார்.” குறை சொல்வதுபோல் வெளித்தோற்றத்துக்குத் தெரிந்தாலும், எறும்பாகவே வாழ்ந்து பழகிய கணவரின் உற்சாகமும் துள்ளலும் மீண்டும் மீண்டுவிட்டதில் அவருக்கும் மிகுந்த மகிழ்ச்சியே என்று முகம் சொல்லிற்று.

முறுக்கிக்கொண்டு நின்ற இருவருக்குள் இதெல்லாம் எப்போது நடந்தது? நேற்று முழுக்கக் கூடவே இருந்தவன் இதைப்பற்றி ஒரு வார்த்தையும் சொல்லவே இல்லையே! அன்னையிடம் இருந்து அவள் அறிந்துகொண்டவை அனைத்தும் கணவன் மீதான நேசமாக மடை திரும்பிற்று!

அதன் பிறகு அப்பாவைக் கூர்ந்து கவனிக்க ஆரம்பித்தாள் பிரமிளா.

‘தம்பி சொன்னவர்’, ‘தம்பி செய்தவர்.’, ‘தம்பி கேட்டவர்’, ‘தம்பிக்கு நேரமில்லையாம்’ இப்படி அவருக்கு எல்லாமே அந்தத் தொம்பி மயம் தான். இவன் என்ன சொன்னதுபோலவே அவளை விட்டுவிட்டு இரண்டாம் தாரமாக அப்பாவை மணந்து கொண்டானோ? அவளுக்குச் சிரிப்பை அடக்க முடியவில்லை.

மற்றவர்களிடம் பேசுகையில் கூட, ‘எங்கட மருமகன் நல்ல கெட்டிக்காரன்’ என்றோ, ‘ஆள் நல்ல மூளைசாலி’ என்றோ கணவனைக் குறித்துத் தந்தையின் வாயில் இப்படியான வார்த்தைகளைக் கேட்கையில் அவள் மனது மகிழ்ந்து போயிற்று.

நினைவு தெரிந்த நாளில் இருந்து இன்றுவரை அவள் போற்றி நேசிக்கும் ஒரு மனிதர் அவளின் தந்தை. அப்படியான அவரே அவனை மதிப்பது, அவனைக் குறித்துச் சிலாகித்துப் பேசுவது மிகவுமே நிறைவைத் தந்தது.

ஆனால், அந்தக் கள்ளன் அன்று இரவு நல்லபிள்ளை போல் அவளை இறக்கிவிட்டுப் போய்விட்டான். வீட்டுக்குள் வரவே இல்லை.

அதுவும் அன்று திருநாவுக்கரசு வந்து அவரிடம் ஏதோ உதவி கேட்டபோது, “கொஞ்சம் பொறுங்கோ! மருமகனை கேட்டுட்டு என்ன செய்யலாம் எண்டு சொல்லுறன். அவருக்குத்தான் இதெல்லாம் நல்லா தெரியும்.” என்றுவிட்டு அவனுக்கு அழைத்து விடயத்தைச் சொல்லிவிட்டு வெகு தீவிரமாக அவன் சொல்வதைக் கேட்டுக்கொண்டிருந்தார் அவர்.

பார்க்கப் பார்க்க மனம் பூரித்துப் போயிற்று. அந்தப் பக்கத்தில் இருப்பவன் அவளின் கணவன் அல்லவா!

அதற்குமேல் முடியாமல் அவனைப் பார்த்தே ஆகவேண்டும் என்கிற நிலைக்கு வந்து சேர்ந்திருந்தாள் பிரமிளா.

“இப்ப இவர் எங்க அப்பா நிப்பார்?” என்று கேட்டுக்கொண்டு புறப்பட்டாள்.

ஸ்கூட்டியை கொண்டுபோய்க் கரையாக நிறுத்திவிட்டு ஹோட்டலை நிதானமாகப் பார்த்தவள் அசந்துதான் போனாள். அந்தளவில் அட்டகாசமாக இருந்தது அவனின் உழைப்பு. முதன்முறை அவள் வந்தபோது பத்தோடு பதினொன்றாகச் சாதாரணத் தோற்றத்தில் இருந்த ஒரு ஹோட்டலை இப்படித் தலைகீழாக மாற்றமுடியுமா?

வீதியில் இருந்து சற்றே உள்ளுக்கு எடுத்துக் கட்டியிருந்தான். ஒரு பக்கம் கார் பாக்கிங். மற்றப் பக்கம் மோட்டார் சைக்கிள், ஸ்கூட்டி, சைக்கிலுக்கான பார்க்கிங். அங்கே நிறுத்திவிட்டு நடந்து போவதற்குக் கற்கள் பதித்த நடைபாதை. அதன் இரு மருங்கிலும் பச்சை வர்ண செடிகொடிகள். ஹோட்டலின் வாசலில் அகன்ற கண்ணாடிக் கதவுகள் உள்ளே வந்துவிடு என்று அழைத்தன. அதன் இரு மருங்கிலும் அவளின் இடுப்பளவினால அகன்ற பெரிய சாடியில் இரண்டு வாழை மரங்கள் நின்று, வாழை இலைகள் காற்றிலாடி வரவேற்ற காட்சி உள்ளுக்குள் நுழைய முதலே ஒரு இனிய உணர்வை அவளுக்குள் பரப்பிற்று.

‘மிருதுளா? அது யார்?’ பிரமாண்டமாக எழுந்துநின்ற அந்தப் பெயரைப் பற்றி யோசித்தபடி வாசலை நோக்கி நடந்தாள். கண்ணாடிக் கதவுகள் இரண்டும் பிரிந்து அவளுக்கு வழிவிடச் சில் என்று தாக்கிய ஏசி மேனியை நனைத்தது.

சாதாரண நாற்காலிகள் மேசையாக அல்லாமல், வட்ட அமைப்பில் சோபாக்களை இட்டு நடுவில் மேசை போட்டிருந்தான். வருபவர்கள் அவசர கதியில் உண்ணாமல் ஆறி அமர்ந்திருந்து உண்ண வைப்பதற்கான வழி! குழந்தைகளுக்கு என்று பிரத்தியேகமான இருக்கைகளும் ஒரு பக்கமாக வைத்திருந்தான். ஒரு மூலையில் குட்டி சறுக்கு மரம், பிரத்தியேகமான ஸ்பாஞ்சில் அமைக்கப்பட்ட விளையாட்டு வீடு, குட்டி மேசை கதிரை போட்டு அதன் அருகே ஒரு ஸ்டான்டில் கலர் பென்சில்கள் வெள்ளை பேப்பர்கள் வைக்கப் பட்டிருந்தது. குழந்தைகளோடு வந்தாலும் நிம்மதியாக இருந்து உண்டுவிட்டுப் போவதற்கான ஏற்பாடு!

இவன் ரசனைக்காரன் மாத்திரமல்ல கைதேர்ந்த வியாபாரியும்தான். தனக்குள் முறுவலித்துக்கொண்டாள்.

எதிரில் வந்த வேலையாளிடம், “கௌசிகன் எங்க நிக்கிறார்?” என்று வினவினாள். அவன் கண்களில் மெல்லிய வியப்பு. முதலாளியைப் பெயர் சொல்லி விசாரிக்கும் இவர் யார்? “நீங்க?” என்று கேள்வியாக இழுத்தான் அவன்.

“மிஸஸ் கௌசிகன்!” என்றாள் முறுவலுடன்.

நொடியில் அவன் விழிகளில் வியப்பும் மரியாதையும் வந்து அமர்ந்தது. மிகுந்த பணிவுடன், “முதலாவது மாடில இடப்பக்கம் இருக்கிற முதல் ரூம்.” என்று படிக்கட்டு வரைக்கும் கூடவே வந்து வழிகாட்டிவிட்டுப் போனான் அவன்.

ஏறுகிற படிக்கட்டுச் சுவரில் நீண்ட மீன் தொட்டியைப் பொருத்தி வண்ண வண்ண மீன்களை நீந்த விட்டிருந்தான். அவளால் அதிலிருந்து கண்களை அகற்றவே முடியவில்லை. ‘இவன், இந்த ஹோட்டலுக்கு வருகிறவர்களை வெளியே போக விடமாட்டான் போலவே..’ எண்ணம் முறுவலைத் தோற்றுவிக்கப் படிகளை ஏறி முடித்தாள். மேலே நீண்ட கொரிடோரின் இரு புறமும் அறைகள் தமக்கான இலக்கங்களைத் தாங்கியபடி நின்றன. சுவரில் அழகிய வண்ணப் படங்கள். நடக்கையில் மாத்திரம் ஒளிர்ந்து பின் தணியும் விளக்குகள் என்று எல்லாமே அற்புதமாகக் காட்சி அளித்தது. மனதில் பெருமிதமாக உணர்ந்தபடி அவன் அறையின் முன்னே சென்று கதவைத் தட்டிவிட்டு மெல்லத் திறந்தாள்.

அங்கேதான் இருந்தான் அவன். யார் என்று பார்வையை உயர்த்தியவன் அவளைக் கண்டதும் பெரும் வியப்புடன் புருவங்களை உச்சி மேட்டுக்கே கொண்டுபோனான். பின், கண்களில் சிரிப்புடன் அவளையே பார்த்துக் கொண்டிருந்தான்.

அவனைப் பார்க்க வேண்டும் என்கிற எண்ணத்தின் ஆளுகைக்குள் உட்பட்டு எதையும் யோசிக்காமல் வந்துவிட்டவளுக்கு, அவன் பாவனைகளும் சிரிப்பும் மெல்லிய தடுமாற்றத்தைத் தந்தது. முகம் முழுக்கப் பரவிய சந்தோசச் சிரிப்பை அடக்க முயன்றபடி கதவைச் சாற்றிவிட்டு அவனிடம் வந்தாள்.

கண்கள் மின்ன, மேசையின் முன்னே இருந்த இருக்கையைக் கையால் காட்டினான். அவனையும் அந்த இருக்கையையும் ஒருமுறை பார்த்துவிட்டு, அதில் அமராமல் மேசையைச் சுற்றிக்கொண்டுபோய் அவன் முன்னே கைகளைக் கட்டிக்கொண்டு மேசையில் சாய்ந்துகொண்டாள் பிரமிளா.

அவன் உதட்டுச் சிரிப்பு விரிந்தது. தன் இருக்கையில் வசதியாகச் சாய்ந்து அவளையே பார்த்தான்.

கள்ளன்! வாயை திறக்கிறானா பார்!

பார்வையில் கோபத்தைக் கொண்டுவந்து, “கதைக்க மாட்டீங்களா? ஏன் வந்திருக்கிறாய் எண்டு கேக்க மாட்டீங்களா?” என்றாள் அவள்.

அதற்குமேல் அடக்கமாட்டாமல் நகைத்தான் அவன்.

“சிரிக்காதீங்க கௌசி!” அவனைப் பாராமல் பார்வையை அறை முழுக்கச் சுழல விட்டவளுக்கும் உதட்டுச் சிரிப்பை அடக்க முடியவில்லை. வெட்கப்பட வைக்கிறானே!

“கேளுங்கோவன்! ஏன் வந்தனான் எண்டு.” என்றாள் மீண்டும்.

“சரி சொல்லு, ஏன் வந்தனீ?” அழகிய முறுவல் ஒன்றுடன் அவளின் இழுவைக்கே இழுபட்டான் அவன்.

“எனக்கு உங்கள பாக்கவேணும் மாதிரி இருந்தது.” தன் விரல் நகங்களைப் பார்வையிட்டபடி சொன்னாள் அவள்.

“ம்ஹூம்!” கண்கள் மின்ன ராகம் இழுத்தான் அவன்.

“அப்பா வார்த்தைக்கு வார்த்த தன்ர மருமகன் அப்பிடி தன்ர மருமகன் இப்பிடி எண்டு பெருமை பாடிக்கொண்டு இருக்கிறார்.”

“ம்ஹூம்.”

அவள் முறைத்தாள். “என்ன ம்ஹூம்? அதைக் கேக்க கேக்க எனக்கு உங்களைப் பாக்கவேணும் மாதிரியே இருந்தது. அதுதான் வந்திட்டன்!” என்றாள் கோபமாக.

“சரி! வந்தாச்சு. பாத்தாச்சு. இனி?” அவன் குரலே நகைத்துச் சீண்டியது.
 

நிதனிபிரபு

Administrator
Staff member
“இனி என்ன? போயிட்டு வாறன்!” முறைப்புடன் சொல்லிவிட்டு விசுக்கென்று திரும்பியவளை பிடித்து இழுத்துத் தன் மடியில் அமர்த்திக்கொண்டான் அவன்.

“நீங்க விடுங்க! ஒன்றுமே தெரியாதவன் மாதிரி நடிப்பு!” அவள் கோபத்துடன் திமிர, அவள் உதட்டினில் அழுத்தி முத்தமிட்டான் அவன். “என்னட்ட வாறதுக்கு உனக்கு மூண்டு நாள் பிடிச்சிருக்கு! இதுல கோபம் வேற! திருகோணமலையில இருந்து வந்த அடுத்த நாளே உன்ன எதிர்பார்த்தனான்.” என்றான் அவன்.

ஆக, அவளாக வரவேண்டும் என்று அவனும் காத்திருந்திருக்கிறான். மனம் கசிந்துபோகக் கணவனின் முகத்தைப் பார்த்தாள். மனதை மயக்கும் சிரிப்புடன், என்ன என்று புருவம் உயர்த்தியவனின் நெஞ்சுக்குள்ளும் நிறையக் காயங்கள் உண்டே! இருந்தும் அவளிடம் மறைத்து அன்பை மட்டுமே காட்டுகிறான்! விழியோரம் கசிய அவன் முகத்தைப் பற்றி நெற்றியில் தன் உதடுகளை ஒற்றி எடுத்தாள் பிரமிளா.

மேகத்திலிருந்து விழுகிற ஒற்றை நீர்த்துளிக்காகக் காத்திருக்கும் சாதகப் பட்சியைப்போல அவளின் ஒரு துளி அன்புக்காகக் காத்திருந்தவன் அவன். “என்னடி செய்றாய்?” என்றான் தன்னிலை இழந்தபடி.

“சொறி!” குரலடைக்கச் சொன்னவள் அவன் கேசத்துக்குள் கைகளை நுழைத்துக் கோதினாள். அவனைத் தன்னிடம் இழுத்து அவன் காயங்களுக்குத் தன் இதழ்களினால் மருந்திட்டாள்.

அந்த நொடியில் உணர்வுகளின் பிழம்பானான் அவன்.

“என்னடியப்பா புதுசா பாசம் எல்லாம் காட்டுறாய்?” என்றவன் அவளை இறுக்கிக் கட்டிக்கொண்டு கழுத்து வளைவில் முகம் புதைத்தான்.

அவன் கைகளின் நடுக்கத்தையும், குரலின் பேதத்தையும் உணர்ந்து அவள் அவன் முகம் பார்க்க முனைய காட்ட மறுத்தான் அவன்.

“கௌசி!”

“...”

“கௌசி பிளீஸ்! என்னைப் பாருங்கோ!” அவனுடைய மனப்போராட்டம் கண்டு அவள் மனம் துடித்தது. இத்தனை நாட்களாக அவனைக் கவனிக்காமல் விட்டுவிட்டோமே என்று தவித்தாள்.

“கௌசி, என்னைப் பாக்க மாட்டீங்களா?” கெஞ்சலாகக் கேட்டாள். கை அதுபாட்டுக்கு அவன் பிடறிக் கேசத்தைக் கோதி அவனுடைய மனக்காயத்தை ஆற்ற முற்பட்டது.

நெடுநாள் காயம் அல்லவா. அப்படியும் ஆறவில்லை போலும்! வேகமாக நிமிர்ந்து, “உனக்கு இப்பதான் உன்ர கௌசின்ர நினைவு வந்ததா?” என்று, அவளின் தோள்களைப் பற்றிக் கோபத்துடன் கேட்டவனின் விழிகளில் மெல்லிய நீர் படலம்.

அவள் திகைத்துபோய்ப் பார்த்தாள். “போனது என்ர மகளும் தானே ரமி. கொன்றுட்டீங்க எண்டு சொன்ன? என்னால ஏலுமாடி அது? என்னைப் பாக்க அந்தளவுக்கு மிருகமா தெரிஞ்சதா உனக்கு? ஒரு பிள்ளைக்காக உன்னவிட ஆசையா காத்திருந்தவன் நான். என்னைப்பாத்து அப்பிடி சொல்ல மனது வந்திருக்கே உனக்கு?” நினைத்து நினைத்தே தனக்குள் வெந்திருப்பான் போலும். சந்தர்ப்பம் கிடைத்ததும் குமுறித் தீர்த்தான்.

அவள் விழிகளில் இருந்து கண்ணீர் வழிந்தது. தழுதழுத்த குரலில், “சொறி!” என்றாள்.

“பிறகு பாத்தா விட்டுடுங்க எண்டுறாய். நீயும் பக்கத்தில இல்லாம பிள்ளையும் இல்லாம அந்த நேரம் நான் பட்ட பாடு உனக்குத் தெரியுமா?”

“சொறி..” இதைத்தவிர வேற என்ன சொல்ல இயலும் அவளால். அவனுடைய பனித்திருந்த விழிகளைப் பார்க்க முடியாமல் தன் கரங்களால் துடைத்துவிடப் போக, “போடி! பாசக்காரி மாதிரி நடிக்காத!” என்றான் அவன் முகத்தைத் திருப்பிக்கொண்டு.

விடாமல் பற்றி அவன் முகத்தைத் திருப்பிக் கண்களைத் துடைத்துவிட்டாள். “ஆரம்பம் முதலே எனக்கு ஒரு மனப்பயம் இருந்தது கௌசி. உங்கட சரி பிழைகளால பிள்ளைக்கு ஏதும் நடந்திடுமோ எண்டு. அதுவே நடக்கவும் நான் நானா இல்ல கௌசி. அந்த நேரம் கதைச்சதை எல்லாம் பெருசா எடுக்காதீங்க, பிளீஸ்!” என்றாள், என்னைப் புரிந்துகொள்ளேன் என்கிற தவிப்புடன்.

அதற்குமேல் கோபம் காட்ட முடியாமல் அவளின் நெற்றியில் தன் உதடுகளை ஒற்றி எடுத்துவிட்டு, “பரவாயில்லை.. விடு!” என்றான் அவன் குரலைச் செருமிச் சீர் செய்தபடி.

“கவலையா இருந்ததா?” என்றவளுக்குப் பதில் சொல்லாமல் அவளையே பார்த்தான் அவன்.

“என்னில நிறையக் கோபம் வந்திருக்கும் என்ன?” என்றவளுக்கு அப்போதும் தன் அணைப்பை இறுக்கி அதையே பதிலாக்கினான் அவன்.

“சொறி.. அப்ப நான் உங்கள பற்றி யோசிக்கவே இல்ல.”

“இப்ப..” என்றான் சிறு சிரிப்புடன்.

அவள் இதழ்களிலும் மெல்லிய முறுவல் தானாக மலர்ந்தது. “நீங்க மட்டும் தான் மண்டைக்க நிண்டு குடையிறீங்க. உங்கள மறந்து ஒரு வேலை செய்ய முடியேல்ல!” என்றாள், அவன் கண்களைச் சந்திக்காது.

வாய்விட்டுச் சிரித்தான் கௌசிகன். அவன் மடியில் அமர்ந்துகொண்டு தன் அன்பைக் சொல்கிறாள் அவனுடைய மனைவி! ஆசையோடு அவள் உதட்டினில் தன் உதட்டினை ஒற்றி எடுத்துவிட்டு, “அடியேய் டீச்சரம்மா. இப்பிடியாடி லவ்வ சொல்லுவாய்?” என்று கேட்டான்.

“வேற எப்பிடியாம்? எனக்கு இப்பிடித்தான் வருது!” அவனுடைய கழுத்தினில் தன் கைகளைக் கோர்த்து, அவனைத் தன்னிடம் இழுத்து அவனுடைய கன்னத்தில் தன்னால் முடிந்தவரைக்கும் இதழ்களை அழுத்தி ஒற்றி எடுத்தாள்.

“சும்மாவே உன்னில பைத்தியமா அலையிறவன சட்டையெல்லாம் கிழிச்சுக்கொண்டு தெருவில அலைய வைக்காம விடமாட்டாய் போல!” என்றவனின் வேகத்தைச் சமாளிப்பதற்குள் சற்று நேரம் பெரும் போராட்டமே போராடி முடித்திருந்தாள் அவள்.

“இது சரி வராது! விடுங்க நான் வீட்டை போகப்போறன்!” என்று எழுந்தவளை விடாமல் பற்றி மடியில் மீண்டும் அமர்த்தியபடி, “இனியும் வீட்டை போற கதை ஏதாவது கதைச்சியெண்டா(கதைத்தாய் என்றால்) ரெண்டு போடவும் யோசிக்க மாட்டன்!” என்றவனின் வார்த்தைகளில் கோபம் கொண்டு முகத்தைத் திரும்பியவளின் விழிகளில் பட்டது அவன் மேசையில் இருந்த ஃபோட்டோ.

பிரேமில் அடக்கி நிமிர்த்தி நிறுத்தி இருந்தான். கௌசிகனுக்கு மனைவியின் பார்வை போன இடத்தைக் கண்டதும் நெஞ்சுக்குள் ஒருமுறை பக் என்றது. அசைவற்று அவனும் இருக்க, அவளின் விழிகளில் மளுக்கென்று நீர் நிறைந்து போயிற்று. கைகள் நடுங்க எட்டி அந்த ஃபோட்டோவை எடுத்தாள். பரிதவிப்புடன் விழிகள் ஒருமுறை கணவனிடம் பாய்ந்துவிட்டு வந்தது. கலங்கிவிட்ட விழிகளினூடு காட்சி தெளிவில்லாமல் தெரிய உற்றுப் பார்த்தாள். சாயலே சொல்லிற்று அது அவள் இழந்த பொக்கிஷம் என்று! அடைப்பு உடைபட்டு விழுந்த கண்ணீர் துளிகள் பிரேமில் பட்டுத் தெறித்தது.

“ரமி!” தவிப்புடன் அவளைத் தன் நெஞ்சில் தாங்க முனைந்தான் அவன். அதற்கு மறுத்தபடி, “மிருதுளா?” என்றாள் கண்ணீர் குரலில்.

அவன் விழிகளும் பனித்துப் போயிற்று. “ரமி பிளீஸ். அழாத!”

“எப்பிடி அழாம இருப்பன்?” போட்டோவை மார்போடு சேர்த்தபடி கேவியவளை வலுக்கட்டாயமாகத் தன் மார்போடு இறுக்கி அணைத்துக்கொண்டான் அவன்.

“என்ர செல்லம் எல்லா. அழாதயாடி!” ஆறுதலும் அன்புமாகக் கெஞ்சிக் கெஞ்சி மெதுவாக அவளைத் தேற்றினான்.

“இப்பிடி நடந்திருக்க வேண்டாம் தானே?” தழுதழுத்த குரலில் ஆதங்கத்துடன் கேட்டாள்.

மெதுவாக அவளின் கையில் இருந்த ஃபோட்டோவை வாங்கி மேசையின் இழுப்பறைக்குள் வைத்தபடி, “நடந்திருக்கக் கூடாதுதான்!” என்றான் அவனும்.

“நான் நினைச்சே பாக்கேல்ல கௌசி. இருந்திருந்தா இப்ப உடம்பு பிரட்டி, தவழ ஆரம்பிச்சு இருப்பா.” எனும்போதே மீண்டும் கண்கள் கலங்கிற்று அவளுக்கு.

“போதும் ரமி. எங்கட குழந்தை கடவுளிட்ட பக்குவமா இருப்பாள். எங்களோடையும் இருப்பாள். அதாலதான் மிருதுளா எண்டு இந்த ஹோட்டலுக்குப் பெயர் வச்சனான். காலகாலமா எங்கட பிள்ளை எங்களோடயேதான் இருப்பாள்.” அவன் சொன்னதைக் கேட்டு அவளின் நெஞ்சிலும் அந்த ஹோட்டல் மீது புதுச் சொந்தம் ஒன்று உண்டாயிற்று.

சற்று நேரம் மௌனத்திலேயே கழிய, “நாங்க இன்னும் மூண்டு பிள்ளைகள் பெறவேணும்.” என்றாள் அவள்.

“ம்.. சரி!”

“மூண்டும் பொம்பிளை பிள்ளைகளா பிறந்தாலும் வடிவா படிப்பிச்சு நல்லபடியா வளத்து கட்டிக் குடுக்கவேணும் நீங்க.”

“ம்..சரி!” என்றான் அவளின் கலைந்து கிடந்த கேசத்தை ஒதுக்கியபடி.

“எங்கட பள்ளிக்கூடத்திலதான் படிக்க வைக்க வேணும்.”

சிறு முறுவலுடன், “சரி.” என்றான் அவன் அதற்கும்.

“அப்பா நிர்வாகி, அம்மா டீச்சர் எண்டு எந்தச் செல்லமும் குடுக்கக் கூடாது!” இதை இவள் முதல் பிள்ளைக்கும் யோசித்து வைத்திருக்க வேண்டும் என்று புரிந்தது அவனுக்கு. எதையும் காட்டிக்கொள்ளாமல் அவளைச் சொல்ல விட்டான்.

“உங்களை மாதிரி பொல்லாத பிள்ளைகளா வளக்கிறேல்ல.” அவள் விழிகளில் மெல்லிய முறைப்பு வந்து அமர்ந்தது.

முறுவல் அரும்ப அவளின் நெற்றியில் முட்டிவிட்டு அதற்கும், “சரி” என்றான் அவன்.

“பிள்ளை வளப்பில நீங்க தலையிடக் கூடாது! அது என்ர பொறுப்பு. என்னை மாதிரி நல்ல பிள்ளையாத்தான் நான் வளப்பன்.”

அவன் முறைத்தான். “நீ நல்ல பிள்ளையாடி டீச்சரம்மா. இவ்வளவு காலமா என்னை போட்டு என்ன பாடு படுத்தினாய்? உன்ர தங்கச்சி என்னவோ உன்ன அப்பாவி எண்டு சொல்லுறாள். எனக்கு மட்டும் தான் தெரியும் நீ எவ்வளவு பெரிய அடப்பாவி எண்டு.” என்றவனின் கோபத்தில் அடக்கமாட்டாமல் நகைத்தாள் பிரமிளா.

முதன் முதலாக மனைவி முத்துப் பற்கள் மின்ன அவனிடம் சிரிக்கிறாள். கோப முகம் கண்டே கள்ளுண்ட வண்டாகக் கிறங்கிப் போனவன் அவன். முகமெல்லாம் மலர நகைத்தால் என்ன ஆவான்? ஆசையோடு அவளின் இதழ்களில் தொலைந்துபோனான்.

“என்ன இப்ப சத்தத்தையே காணேல்ல?” என்றவனின் கண்களைச் சந்திக்க இயலாமல், “நீங்க ஆக மோசம் கௌசி!” என்றவள் கணவனின் மார்பினில் தன் முகத்தை மறைத்துக்கொண்டாள்.

இது போதுமே அவனுக்கு!

அப்படியே அவளைத் தன் மார்பில் தாங்கியபடி கண்களை மூடிக்கொண்டான். மனது நிறைந்துபோயிருந்தது!


முற்றும்.
 

நிதனிபிரபு

Administrator
Staff member
வணக்கம் வணக்கம்,

2020 ஜூலை ஆரம்பிச்ச கதை. இடையில பெரிய இடைவெளி விட்டு ஆரம்பித்தபோது நல்லபடியாக முடிப்பேன் என்கிற நம்பிக்கையே இல்லை. என்னை முடிக்க வச்சது உங்க எல்லோரினதும் அன்பும் இடைவிடாத அடுத்த எபி எப்போ என்கிற கேள்வியும் தான். கூடவே ஒவ்வொரு அத்தியாயத்துக்கும் கருத்திட்டு நீங்க தருகிற ஊக்கங்களும் தான். எல்லோருக்கும் மிக்க மிக்க நன்றி! வேற என்ன சொல்ல? தெரியேல்ல. இன்னொரு கதையில் மீண்டும் சந்திக்கலாம்.

ஆரணி எங்கே என்று கேக்காதீங்க? நிச்சயம் வருவாள்! அந்தக் கதையும் கட்டாயம் முடிப்பேன்.

இனி நீங்கதான் கதை எப்படி இருக்கு என்று சொல்லவேணும். நன்றி!

நட்புடன் நிதா


 

நிதனிபிரபு

Administrator
Staff member
வணக்கம் வணக்கம்,

ஏனோ மனம் தள்ளாடுதே கதைக்கு நீங்க எல்லோரும் தந்திருப்பது மிகப்பெரிய ஆதரவு. அதுக்கு மனம் நிறைந்த நன்றிகள்! ‘நல்லாருக்கு, அடுத்தக் கதை எப்போ?’ என்று கடந்துபோகிறதைத் தாண்டி உங்க மனதுக்கு மிக நெருக்கமாக இந்தக் கதை அமைந்திருக்கிறது என்பதை உங்க எல்லோரினதும் கருத்துக்களின் வாயிலாக அறிந்து மிகுந்த சந்தோசம் எனக்கு.

அந்தளவுக்கு மனம் நெகிழ்ந்த பாராட்டுகள், வாழ்த்துகள், நெகிழ்ச்சியான வார்த்தைகளைக் கேட்டு நிறைவாக இருந்தது. உண்மையைச் சொல்லப்போனா, ஆரணி பெரிய கதை என்பதால் இது சின்னக் கதையாக வரும் அதனால் இதை முடிப்போம் என்றுதான் ஆரம்பித்தேன். அது பார்த்தால் இவ்வளவு பெரிதாக வந்திருக்கு.

பரவாயில்லை, காத்திருந்து வாசித்ததற்குப் பெறுமதியான கதை என்று பலர் சொல்லி இருந்தீங்க. அதையேதான் நானும் சொல்வேன், இத்தனை நாட்களாக மெனக்கெட்டு எழுதியதுக்கு மிகப்பெரிய சன்மானத்தை உங்க எல்லோரினதும் பாராட்டு மூலம் தந்து இருக்கிறீங்க.

இனி கதைக்கு வருவோம்!

கௌசிகன்- பிரமிளா: தான் கதையின் நாயகன் நாயகி. ஆக, அவர்கள் மட்டும் தான் இதுல முதன்மை பெறுகிறார்கள்.

ரஜீவன்- யாழினி: ரஜீவன் ஐந்து வருடம் கழித்துத்தான் திருமணம் என்றுவிட்டான். யாழினியின் அண்ணாவும் திருமணத்துக்கு ஓம் என்று சொல்லிவிட்டான். ஆக, நிச்சயம் அவர்கள் சேருவார்கள். அதை இன்னொருமுறை நானும் சொல்வதில் அர்த்தமில்லை. அதைச் சொன்னால் மெல்லிய அலுப்புத் தட்டப் பார்க்கலாம்.

அடுத்ததாக, மோகனன்- இவனைப் பற்றி அப்படி என்ன எழுத? பலரின் ஆதங்கம் அவனைத் திருத்தி அவனுக்கு ஒரு இணையைக் கொடுத்திருக்கலாம் என்பது. ஒன்றுக்கு இரண்டு பெண்களைக் கேவலப்படுத்தியவனை அவ்வளவு இலகுவாக நாம் மன்னிக்கிறோமா என்ன? எனக்கு அது முரண்டியது. அவனை நல்லவனாகக் காட்டி இருந்தேன் என்று வைங்க, என்னைக் கிழி கிழி என்று கிழித்துத் தோரணமாக இங்கே இருக்கும் பலர் தொங்க விட்டிருப்பார்கள். ஹாஹா.

ஒருவனின் இயல்புக் குணம் என்பது எப்போதும் மாறாது தானே. அண்ணாவின் துடிப்பும் குழந்தையின் இழப்பும், வீதியில் அவன் கண்ட காட்சியும் அவனை நன்றாகவே அசைத்திருக்கலாம். தனிமை கிடைத்தபடியால் சுய அலசல் நடக்குது. அதுவே அவன் இங்கேயே இருந்திருந்தால் நடக்குமா தெரியவில்லை?

குழந்தை இழப்பே பாரிய இழப்பு. இதுவே பிரமிளாவுக்குக் குழந்தை பிறக்க சாத்தியமே இல்லாத நிலை உருவாகி இருந்தால்? இந்த வயிற்றோடு இவள் ஏன் போனாள் என்று கேட்பது சரியாக வருமா தெரியவில்லை. கண்முன்னே ஒரு காட்சி அரங்கேறுகையில் பாத்துக்கொண்டு இருக்க அதுவும் பிரமிளா போன்ற ஒரு பெண்ணினால் முடியுமா என்ன?

அவள் மோகனனை திட்டியது போதாது என்றுதான் நான் சொல்வேன். பிரமிளாவுக்கு அவ்வளவு நடந்தபோதும் நீ எனக்காக நிக்கவில்லையே அண்ணா என்றவன் தான் மோகனன். அதுதான் அவன் குணம். இது எல்லாம், மோகனனை அப்படியே விட்டதற்கான என் பக்க வாதங்கள். காலங்கள் அவனை மாற்றும் என்று நம்பவில்லை. ஆனால், செய்த தவறுகளை உணரவைக்கும். அதற்கான காலத்தை அவனுக்குக் கொடுத்துவிட்டு அவனை வைத்து ஒரு கதை எழுதவா? குறுநாவல் மாதிரி?

மோகனனுக்கு ஒரு முடிவைச் சொல்லியிருக்கலாம் என்று பரவலாக எல்லோருமே கேட்டதும் என் மனதில் நிற்கிறது. அதனால் தான் இந்த யோசனை. அப்போதும், அந்தக் கதைக்கு வேண்டுமானால் அவன் நாயகனான இருப்பானே தவிர, அவன் ஒரு உண்மையான நாயகனாக இருக்க மாட்டான். அவனுடைய அதே குணத்தோடு வருவான். விருப்பம் என்றால் சொல்லுங்கள்; சற்று நாட்கள் கழித்து நிச்சயம் எழுதுவேன்!

கதையின்தலைப்பு: ஓ.. ராதா!
நாயகன்: மோகனன்
நாயகி: ராதா(ஏனோ மனம் தள்ளாடுதே கதையில் ரஜீவனின் தங்கையாக வருகிறவள் தான் ராதா.)

ஒரு ஆறு வருடங்கள் கழித்துக் கதை நகர்வதுபோல் ஆரம்பிக்கலாம்.அப்போது நீங்கள் கேட்டமாதிரி பிரமிளா தன் மூன்று குழந்தைகளோடும் வருவாள். இப்போது சந்தோசமா?

முக்கியமான கேள்விகள் சில: எல்லோரும் கட்டாயமாகப் பதில் சொல்ல வேணும்.

இந்தக் கதையில் சற்றே அதிகமாகவே எங்கள் பேச்சுத் தமிழைக் கையாண்டு இருக்கிறேன். அது பிடித்ததா? விளங்கியதா? இதையே நான் தொடரலாம் தானே.
 

நிதனிபிரபு

Administrator
Staff member
வணக்கம்,

முடிந்தவரைக்கும் இங்கே வாசிப்பதற்குத் திரியைத் திறந்து விட்டாயிற்று. இன்னுமே சிலர் வாசித்து முடிக்கவில்லை என்று தெரியும். உண்மையிலேயே அதற்கு மிகவுமே வருத்தப்படுகிறேன். உங்களை வாசிக்க விடக்கூடாது என்பது என் நோக்கமல்ல. புத்தகம் போடவும் நான் கொடுக்க வேண்டும். அமேசானில் போட்டபிறகு வேறு எங்குமே போடக்கூடாது. அதனால் தான் வேறு வழியற்று நீக்கியிருக்கிறேன்.

சற்றே பொறுத்து இருங்கள். வெகு விரைவில் அமேசானில் இலவசத் தரவிறக்கம் செய்ய ஏற்பாடு செய்கிறேன். அப்படியானால் எப்போதெல்லாம் நீங்கள் விரும்புகிறீர்களோ அப்போதெல்லாம் வாசித்துக்கொள்ளலாம் தானே.

என்னை விளங்கிக்கொள்வீர்கள் என்கிற நம்பிக்கையுடன்


நட்புடன் நிதா.

அமேசான் கிண்டில் ஆலிமிடெட்டில் வாசிக்க விரும்பினால்:

Amazon.in:


Amazon.com:

 
Last edited:
Status
Not open for further replies.

Google Typing

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.

Latest posts

Top Bottom