You must have JavaScript enabled in order to use this order form. Please enable JavaScript and then reload this page in order to continue.

கப்பல் பயணம் - இதழ் 12

ரோசி கஜன்

Administrator
Staff member
என் பூர்விகம், இலங்கையின் வடக்கே அமைந்துள்ள சப்த தீவுகளின் ஒன்றான அனலைதீவாகும். சிறு வயதில் சில வருடங்கள் அங்கு வசித்துள்ளோம். குறிப்பாகச் சொல்லப் போனால் 1977 ல் நடந்த இனக்கலவரத்தின் பின்னர் தான் அங்கு வசிக்கச் சென்றோம். அச்சிறுபிராயத்தில், நான்கைந்து வருடங்களேயென்றாலும் அங்கு வசித்த நாட்கள் ஒவ்வொன்றினதும் நினைவுகள் அவ்வளவு எளிதில் என் மனதில் நின்று அழிந்துவிடவில்லை. அவற்றில் சிறுதுளி இப்பதிவில்...

எங்கள் ஊரிலிருந்து யாழ்ப்பாணம் வருவதென்றாலோ அல்லது அருகிலுள்ள நயினாதீவுக்குச் செல்வதென்றாலோ லோஞ்சியில் தான் பயணம் செய்ய வேண்டும். இப்போது நினைத்துப் பார்க்கையில் அவை எல்லாம் எப்போதாவது நிகழும் மிகச் சிறு பயணங்கள் தான்; ஆனால், அன்று, அவை ஒவ்வொன்றும் வெளிநாடு சென்றுவருவது போலொரு குதூகலம் தரும் தருணங்களாக அமைந்திருந்தன.

அநேகமாக, காலையில் சென்றுவிட்டு மாலையில் வீடு திரும்பும் வகையிலானவை தான் அப்பயணங்கள். அதிலும் முதல் லோஞ்ச் பிடிக்கவேண்டுமென்றால் பொழுது புலரும் முன்னரே எழுந்து தயாராக வேண்டும். அதுவென்ன அவ்வளவு இலகுவான காரியமா என்ன? விடியலில் புறப்படுவதை நினைத்துக்கொண்டே இருப்பதால் உறக்கம் கூட ஒழுங்காக வராது; புரண்டு புரண்டு படுத்துக்கிடந்துவிட்டு அதிகாலையில் அசந்துறங்கும் பொழுது அம்மா அருட்டி அருட்டிப் பார்த்துவிட்டு, "அப்ப நீ வரவேணாம், நாங்க போயிட்டு வாறம்." என்று சொல்லும் போதுதான் வாரிச் சுருட்டிக் கொண்டு எழுந்தமர்வேன்.

மாரி காலமெனில் கதகதப்பான போர்வைக்குள்ளிருந்து வெளியே வரும் போதே வெடவெடவென்று குளிரில் நடுங்கியும் போவேன். அதற்கென்று தூக்கக் கலக்கத்தில் குந்தியிருந்தால் அம்மா சொன்னது போலவே 'அம்மம்மா வீட்டில நில்லு!' என்றுவிட்டுச் சென்றும் விடுவார்.

பிறகென்ன ? கண்களை முழுதாகத் திறவாதே தான் காலைக்கடன்கள் முடிப்பேன். சிலநேரம், இடது உள்ளங்கையில் பொத்திவைத்திருக்கும் கோபால் பற்பொடியைத் தொட்டெடுக்கும் வலது ஆட்காட்டி விரல் பற்களில் அழுத்தம் கொடாது வெடுவெடுவென்று நடுங்கித் தொலைக்கும். அப்போதெல்லாம் யாழ்ப்பாணம் போகப் போகின்றேன், நிச்சயம் தியேட்டரில் ஏதாவதொரு படம் பார்க்கலாம், ஐஸ்கிரீம் குடிக்கலாம் இதைவிட வேறென்ன வேண்டும் என்றது, சந்தோசத்தையும் உற்சாகத்தையும் பொங்கச் செய்து குளிரை விரட்டுவதில் குறியாய் நிற்கும்

'குளிக்கவா வேணும்? ஒரு வாளித் தண்ணியில சும்மா முகத்தை அலம்பீட்டுப் போகலாம் தானே?' மனதுள் ஒரு போராட்டமே போட்டுவிட்டு இறுதியில் முக்கி முனகி ஒரு ஐந்தாறு வாளித் தண்ணியைக் கிணற்றிலிருந்து இழுத்தெடுத்துக் குளித்துவிடுவேன். இந்த இடத்தில் அள்ளியெடுத்து என்றுதான் சொல்லவேண்டும். இருந்தாலும் அந்தநேரம் நான் சிறுமிதானே? என்னால் அள்ள முடிவதில்லை. அதேநேரம், அப்பாவோ அம்மாவோ அள்ளித் தருவார்கள் என்று எதிர்பார்த்திருப்பதும் இல்லை. கிணற்றுக் கட்டோடு தேய்த்துத் தேய்த்து என்றாலும் இழுத்து எடுத்துவிடுவேன்.

பிறகு நிமிடமும் தாமதிக்கமாட்டேன். வெளிப்பாவனைக்கு என்று வைத்துள்ள சட்டையில் ஒன்றை உருவி அணிந்துவிட்டு, தலையை அம்மாவிடம் கொடுத்து இழுத்து, மறக்காது கமகமக்கும் குட்டிக்குறா பவுடர் போட்ட வேகத்தில் பொட்டுச் சிரட்டையுடன் குசினிக்குள் ஓடுவேன்.

'என்ன ...பொட்டுச் சிரட்டையா?' என்ற கேள்வி உங்களுள் எழுகின்றதா?

அப்போதெல்லாம் இந்த ஒட்டுப் பொட்டெல்லாம் பாவனையில் இல்லை. திருமணமான பெண்களுக்குக் குங்குமம், அதுதவிர சாந்துப்பொட்டு... கறுப்பு மற்றும் சிவப்பு நிறங்களில் சிறு குப்பிகளில் கிடைக்கும் தான். இருந்தாலும் எங்களுக்கு வீட்டில் அம்மாவே பொட்டைத் தயாரிப்பார். குழந்தையிலிருந்து அதைத்தான் வைப்பார்கள். அது ஒன்றும் பெரிய கடினமான வேலையெல்லாம் இல்லை. எனக்குத் தெரிய அம்மா ஒரே தடவையில் நான்கைந்து சிரட்டையில் செய்து வைப்பார்.

நன்றாகத் துப்பரவு செய்த, உள்ளும் வெளியிலும் பளபளவென்றிருக்கும் தேங்காய் சிரட்டை, சவ்வரிசி, பச்சை அரிசிக் குறுனல் , வாசத்துக்கு மல்லிப்பூ என இவ்வளவும் இருந்தால் போதும், பொட்டைத் தயாரித்துவிடலாம். அம்மா பொட்டுத் தயாரிக்கையில் பார்த்துக்கொண்டு நின்ற நினைவு இன்னமும் உண்டு.

உங்களுக்கும் அறியும் ஆவல் இருந்தாலுமென்று இங்கே செய்முறை சொல்கின்றேன்.

முதலில் சவ்வரிசி, குறுனல் அரிசி இரண்டையும் கருக வறுக்க வேண்டும். அவை நன்றாகக் கருகி வருகையில் மல்லிப்பூ சேர்த்து அளவாகத் தண்ணி விட்டு கஞ்சியாக்க வேணும். பின்னர், அதனை ஒரு மெல்லிய பருத்தித் துணியில் விட்டு வடித்து எடுத்து, சிரட்டையில் அளவாக ஊற்றி, அப்ப மாவை ஊற்றிவிட்டு சட்டியைச் சுற்றுவோமே, அப்படிச் சுற்றி விடவேணும். பின்னர் இதனை வெயிலில் காயவைக்க வேண்டும். சிறிது காய்ந்து வருகையில் மீண்டும் ஒருதரம் சுற்றிவிடவேண்டும் . பின் நன்றாகக் காய்ந்த பின்னர் எடுத்துப் பாவிக்கலாம். வாசமும் பளபளப்புமாக இருக்கும். தேவையான நேரங்களில் துளி அளவில் தண்ணி விட்டு விரலால் தேய்த்தெடுத்து நெற்றியில் இட்டுக் கொள்ளலாம்.

நானும் நீர் விட்டு உரசி எடுத்த பொட்டை, மங்கிய லாந்தர் வெளிச்சத்தில் வெகு பிரயத்தனம் செய்து கண்ணாடி பார்த்து நெற்றியில் இட்டுக் கொண்டு, என் பாட்டா செருப்பைப் போட்டுக்கொண்டு ஓடிப்போய் இன்னொருவாளி தண்ணியை இழுத்து முன் பின் எல்லாம் செருப்போடு சேர்த்துக் காலைக் கழுவுவேன்.

"இப்ப போட்டுக்கொண்டு வெளியில நடக்கத்தானே போற? பிறகேன் கழுவிற?" என்று அம்மா சொன்னாலும் எனக்குப் புத்தம் புதுசுபோல காலணி இருக்க வேண்டும். அதாவது தூசில்லாது.

அதன் பின்னென்ன? முதல் ஆளாக முற்றத்தில் இறங்கி நின்று கொள்வேன்.

"தேத்தண்ணி ஆறிட்டு, குடிச்சிட்டு வாவன்." என்பார் அம்மா.

செருப்பைக் கழட்டிவிட்டுச் சமையலறைக்குள் சென்றால் எங்கள் குசினியின் மண் தரையிலிருந்து தூசு ஈரக் காலில் அப்புமே! அசைய மாட்டேன். அங்கு நின்றே கேட்டு வாங்கி அரையும் குறையுமாகக் குடித்துவிட்டு புறப்பட்டு, பத்து வீடுகள் தள்ளியிருக்கும் அம்மம்மா வீடு செல்வோம். சிலவேளைகளில் சித்தியாக்களும்

சேர்ந்து வருவார்கள். அநேகம் யாழ்ப்பாணத்தில் வசிக்கும் பெரியம்மா ஆக்களுக்காக அம்மம்மா பொருட்கள் தந்துவிடுவார். முக்கியமாகத் தோசையும் சம்பலும். எங்களுக்கும் சுடச் சுடச் சாப்பிடத் தருவார் . ஒரே சுருட்டலாகச் சுருட்டி வாயில் அடைத்துக் கொண்டு நடக்கத் தொடங்குவோம்.

நாங்கள் அனலையில் தெற்குப் பகுதி. லோஞ்சி எடுக்க வீட்டிலிருந்து தரவையால் சிறிது தூரம் நடக்க வேண்டும். ஒரு ஐஞ்சு பத்து நிமிட நடைதூரமாக இருக்கும் என்று நினைக்கின்றேன். ஆனால், அன்று அது நீண்ட தூர நடை. அதுவும் மழை காலம் என்றால் தரவை மழை வெள்ளத்தின் வசமாகியிருக்கும். அந்நாட்களில் சற்றே உள்பக்கமாக பனை வடலிகளால் கடந்து சென்று பாதையால் செல்லலாம். அந்தத் தரவையில் சில கொட்டில் வீடுகள் இருந்தன . இரண்டு அல்லது மூன்று என்று நினைவு. மழைநாட்களில் சுற்றிலும் தேங்கி நிற்கும் வெள்ளத்தில் அவை படகு வீடுகள் போல் மிதந்து கொண்டிருக்கும். குழந்தைகளும் அங்கு வசித்தார்கள். அந்நாட்களில் எப்படி சமாளித்திருப்பார்கள்? அந்தச் சிறுவயதில் நான் ஒருபோதுமே நினைத்துப் பார்க்கவில்லை . லோஞ்சி எடுக்க ஓட்டமும் நடையுமாகச் செல்கையில் பார்த்துச் செல்வதோடு சரி.

லோஞ்சி என்றதும் 'அலையரசி' தான் சட்டென்று நினைவில் வருகின்றது. நீலமும் செம்மஞ்சளும் கலந்த தோற்றத்தில் ஒரு ராணி போலவே தான் காட்சியளிக்கும். அதற்கு முன்னர் இருந்தவை அலையரசியை விடவும் சிறு லோஞ்சிகள். கடலின் கொந்தளிப்பைத் தாராளமாகவே பிரதிபலிப்பார்கள். அவை போடும் ஆட்டத்தில் சற்றே பயமாகக் கூட இருக்கும். அலையரசி அப்படியில்லை. கடலன்னையின் ஆர்ப்பரிப்பைக் கம்பீரமாக எதிர்கொண்டோடுவாள். லோஞ்சியில் உள்ளே இறங்க இருபுறமும் இடம் இருக்கும். இறங்கி இருக்கரையிலும் போட்டுள்ள வாங்கில்களில் அமர்ந்து கொள்ளலாம் . இன்ஜின் இருக்கும் பக்கம் இருந்தால் அதன் வெப்பமும் சத்தமும் எண்ணெய் வாசனையும் முகத்தில் மோதும். பொருட்களையும் ஏற்றிக்கொண்டு ஆண்கள் பெரும்பாலும் மேல்தட்டில் அமர்ந்து கொள்வார்கள் . அப்போது, பத்துப் பதினோரு வயதுகளில் லோஞ்சி நகரத் தொடங்கியதும் அந்த வாயிலில் முகம் பதித்து, லோஞ்சியின் பக்கத்தில் மோதிவிளையாடும் கடலன்னையை இரசித்தபடியே அந்த முக்கால் மணிநேரப் பயணத்தையும் கழித்துவிடுவேன். எத்தனை தடவைகள் பார்த்தாலும் தெவிட்டாத கணங்கள் அவை. அப்பப்போ முகத்தில் பட்டுச் சிதறும் அந்த உப்பு நீருக்கும் ஒரு மாய சக்தி உண்டு என்ற வகையில் பச்சை வண்ணக் கடலழகி தன்னில் பட்ட விழிகளை அசைக்க விடாள்.

யாழ்ப்பாணம் வந்துவிட்டு மாலையில் வீடு செல்கையில் அநேகம் கையில் கச்சான் சோளன் கலந்த சிறு பாக்கெட்டுகள் இருக்கும். ஊர்காவற்றுறைத் துறைமுகத்திலேயே வாங்கலாம். கையில் உள்ளவை தீர்ந்ததும் அருகில் இருக்கும் தம்பியிடம் கெஞ்சோ கெஞ்சென்று கெஞ்சிக் கடன் வாங்கிச் சாப்பிடுவேன். அதுவும் ஒன்று இரண்டு என்று பெரிய மனதோடு தருவான். அதே அவனிடம் முதல் முடிந்துவிட்டால்...என்னிடம் கை நீட்டுவான் . கண்கள், ' எனக்கும் கொஞ்சம் தாவன்' என்று கெஞ்சும். அவனைப்போலவே நானும் ஒன்று இரண்டு அதுவும் உள்ளதில் சிறிதாகத் தெரிந்தெடுத்துக் கொடுத்தால் கடைசி வரை வாங்க மாட்டான்.

" நான் கனக்க எடுக்க மாட்டன் ரோசி அக்கா, காட்டு எடுக்கிறன்." என்று அநியாயத்துக்கு அன்பாகக் கதைத்து அந்தக் குட்டிக் கடதாசிப் பையினுள் தன் சிறு கரத்தை விட்டானோ அதனுள்ளிருந்த அவ்வளவையும் எடுத்துவிடுவான் . எனக்கு வருமே கோபம்! இருந்தாலும் சனம் பார்க்குகிறார்களே சண்டை போடவா முடியும் என்று கட்டுப்படுத்திக்கொண்டு கடலைப் பார்க்கத் திரும்பும் வேகத்தில் அழுதும் விடுவேன். அழுகையில் கோபம் அடங்காது, அதிகரிக்கும்; அவனை ஏதாவது செய்யவேண்டும் என்று மனம் முறுக்கும்; அதன் சொல் கேட்கும் கை மெல்ல நகர்ந்து இறுக்கி நுள்ளி விடும். விடுவானா அவன்? திருப்பி நுள்ளுவான். மாறி மாறி நுள்ளிக் கொள்ளும் போது இருவர் கண்களிலும் கண்ணீராக இருக்கும். அப்போதைக்கு அம்மாவின் ஏரிபார்வையில் அடங்கி விட்டாலும் கோபத்தில் கச்சான் அப்படியே கடலுக்குள் போவதும் நடந்திருக்கு. அடுத்த இரு நாட்களுக்கு எங்களுள் சண்டைக்கு அந்தக் கச்சானும் சோளனுமே காரணமாக இருக்கும்.

நயினாதீவு அம்மன் கோவில் திருவிழாக் காலங்களில் அதுவும் தேர்திருவிழாவுக்குக் கட்டாயமாகச் செல்வோம். சுடச் சுட கச்சான் , பூப்போல பொரிந்த சோளன், கண்ணைக்கவரும் நிறங்களில் இனிப்புப் பூந்தி, பஞ்சு மிட்டாய், குச்சி, கோன் ஐஸ் கிரீம், அதைவிட்டால் கைக்கு நிறைய காப்புகள் இதுதான் என் திருவிழாக் கனவே! அம்மாவின் கையிருப்புக்கேற்ப இவைகள் நினைத்த அளவுக்கு இல்லையென்றாலும் கிடைக்கும்.

அதைத் தவிர்த்து எங்கள் மாமா வீடும் அங்கு இருப்பதால் இடையிடை சென்று வருவதும் உண்டு. அப்படி ஒரு நாள் ஒரு ஞாயிறு என்று நினைக்கிறேன், நானும் அம்மாவும் மாமா வீடு சென்றுவிட்டு மாலை லோஞ்சியில் வீடு திரும்பும் எண்ணத்தில் வந்தால் அது புறப்பட்டுச் சென்று கொண்டிருந்தது. மறுநாள் பாடசாலை, அதைவிட்டு, வீட்டில் தம்பி தங்கச்சியை அம்மம்மா ஆட்களோடு விட்டுட்டே வந்திருந்தோம் .

"இனி என்ன செய்யிறது? இரவு தங்கீட்டு நாளைக்குப் போங்க!" என்று, வழியனுப்பும் நோக்கில் எங்களோடு வந்திருந்த மாமா சொன்னார் .

'இப்பிடியாகிற்று, நாளைக்கு வாறம்' என்று சொல்லிவிட்டுத் தங்கிச் செல்ல அப்போது தொலைபேசி எல்லாம் இல்லையே!

"இல்ல அண்ணா, அது எல்லாம் சரிவராது; எப்பிடியும் போக வேணும்; பிள்ளைகள் தேடுவீனம்." என்ற அம்மா கவலையோடு யோசிக்க, "சரி கொஞ்சம் நில்லுங்க, வள்ளம் ஏதாவது கிடைக்குதா பார்ப்பம்." என்றுவிட்டுச் சென்ற மாமா, திரும்பிவந்து, லோஞ்சி ஏறும் இடத்திலிருந்து சற்றுத் தூரத்தில் நிறுத்தியிருந்த ஒரு வள்ளம் நோக்கி அழைத்துச் சென்றார்.
 

ரோசி கஜன்

Administrator
Staff member
"இந்தக் குட்டி வள்ளத்திலா? பாம்பன் கடலில பிரண்டிட்டா? நான் மாட்டன் மா!" முனகிக் கொண்டேதான் சென்றேன். அந்த நேரம் தேவையில்லாமல் கல்கியில் வாசித்த பொன்னியின் செல்வன் கதையை அம்மாவின் வாயால் ஏற்ற இறக்கங்களுடன் கேட்டிருந்ததில், கடலில் விழும் பொன்னியின் செல்வன், அவரைக் காப்பாற்றும் ஊமச்சி எல்லாம் என் நினைவில்!

என் முணுமுணுப்பை அம்மா ஒரு பொருட்டாகவே பார்க்கவில்லை. வீடு போய்ச் சேர்ந்துவிடவேண்டும் என்றதுமட்டுமே அவர் சிந்தையில் இருந்திருக்க வேண்டும். பொழுது வேறு சாய்ந்து கொண்டிருந்தது.

"நானும் உங்களோட வந்து கரையில விட்டுட்டுத் திரும்பி வாறன்." என்று தானும் ஏறிக் கொண்டார் மாமா. ஆரம்பத்தில் மெதுவாக நகர்ந்த வள்ளம் ஆழ் கடல் செல்லச் செல்ல போட்ட ஆட்டத்துக்கு நான் அம்மாவின் மடிக்குள் சுருண்டு விட்டேன். பாம்பன் கடல் என்னவோ அப்பிடியே எங்களை விழுங்கிவிடும் என்ற பதைபதைப்பு அனலைதீவுக் கரையில் கால்வைக்கும் வரை என்னை விட்டு அகலவேயில்லை.

இது தவிர கச்ச தீவுக்கும் ஒரு முறை சென்றிருக்கிறேன்.

அதன் பிறகு நாங்கள் மீண்டும் அங்கிருந்து வந்துவிட்டோம். இடையிடை போய் வருவது மட்டும் தான் . அதுவும் 2001 க்குப் பிறகு அங்கு செல்லும் வாய்ப்புக் கிடைக்கவில்லை.

இப்படி லோஞ்சி, வள்ளம் என்ற பயண அனுபவங்களின் வரிசையில் இன்னுமிரு பயணங்கள் உயிருள்ளவரை மறக்காத அனுபவமாக நெஞ்சில் அழுத்தமாகப் பதிந்துள்ளது. அவை 1991, 1992 மற்றும் 1993 ஆம் ஆண்டுகளில் கொழும்பு சென்று வந்த அனுபவங்கள் ஆகும்.

எங்களுக்கான சாதாரண தரப்பரீட்சை இந்திய இராணுவ வருகையில் நடந்த கடும் பிரச்சனைகள் காரணமாக உரிய காலத்தில் நடக்காது அடுத்த ஆண்டில் நடந்தது போலவே, எங்கள் 1990 ஆண்டுக்கான உயர்தர பரீட்சையும் உரிய காலப்பகுதியில் நடக்கவில்லை. நாட்டில் அவ்வளவு பிரச்சனை; அடுத்த வருடமே நடந்தது. நிச்சயம் பல்கலைக்குச் சென்றுவிடுவேன் என்ற நம்பிக்கையில் இருந்த எனக்கு அந்த வாய்ப்புக்குக் கிடைக்காதும் போகலாம் என்றளவில் பெறுபேறுகள் வந்திருந்தன. A B 2 C . அதுவும் கட்டாயம் A எடுப்பேன் என்று நம்பியிருந்த கணக்கியலுக்கு C வந்திருந்ததில் மனதளவில் மிகவுமே நொந்துவிட்டேன். அந்த நாளை எனக்கு இப்பவும் நினைத்துப் பார்க்கப் பிடிக்கவில்லை. இரண்டாந்தரம் பரீட்சை எடுக்கும் எண்ணமெல்லாம் என் மனத்தில் துளியும் இருக்கவில்லை. இந்நிலையில் அடுத்து என்ன என்ற கேள்வி என் முன்னால் பூதாகரமாக எழுந்து நின்றது.

அப்போதுதான் கொழும்பில் இருந்து யாழ் வந்திருந்த பெரியம்மா, " என்னுடன் கொழும்புக்கு வாவன்; கம்பஸ் கிடைக்காட்டியும் வேற எதையாவது படிக்கலாம்." என்று என்னை அழைத்துச் செல்ல முன் வந்தார்.

அந்நாட்களில் யாழ்ப்பாணத்திலிருந்து வெளியேறுவது ஒன்றும் அவ்வளவு இலகுவான காரியம் இல்லை.

நானும் மனதிலிருந்த பல்கலை ஆசையை அப்படியே குழிதோண்டிப் புதைத்துவிட்டு பிரயாணத்துக்குத் தயாரானேன்.

ஒரு நாள் மாலை என் பள்ளித் தோழிகளும் வீட்டினரும் வழியனுப்ப நானும் பெரியம்மாவும் புறப்பட்டோம்.

யாழ்ப்பாணத்திலிருந்து இலங்கையின் மற்றைய பகுதிகளுக்குத் தரைவழியாகச் செல்ல இருக்கும் ஒரேபாதை ஆனையிறவு வழியாகச் செல்லும் நெடுஞ்சாலைதான். இது கண்டிவீதியென்றும் ஏ-9 என்றும் வன்னியில் யாழ் சாலை என்றும் அழைக்கப்படுகிறது. அதைவிட்டால் குடாநாட்டின் மேற்குப்பகுதியால் மன்னார் மாவட்டத்தின் பூநகரிக்குச் செல்லும் ‘கேரதீவு – சங்குப்பிட்டி’ என அழைக்கப்படும் பாதையொன்றுண்டு. அது முற்றிலும் தரைவழிப்பாதையன்று. இந்த இரண்டுபாதைகளுமே அப்போது மூடப்பட்டிருந்தன. அந்நிலையில் தேடிக்கொண்ட மாற்றுவழி தான் ஆனையிறவுக்கு கிழக்குப் பக்கமாக உள்ள கொம்படி-ஊரியான் பாதையாகும் . இடுப்பளவு உயரத்தில் தேங்கிநிற்கும் நீருக்குள்ளால் சிறுபடகுகளில் கிட்டத்தட்ட ஐந்து மைல் தூரம் பயணித்து வன்னி சென்றடையவேண்டும்.

கும்மிருட்டு. ஆங்காங்கே அதைக் கிழித்தெறிய முயலும் மங்கிய லாந்தர் ஒளி. பயணிகள் தொகைக்குப் பஞ்சமேயில்லை. பயணிகளை ஒழுங்குபடுத்தி விடுபவர்கள் கையில் டார்ச். தெரிந்தவர் அறிந்தவர் கூடப் பயணம் செய்கின்றார்களா என்று கண்களைக் கூர்மைப்படுத்திக் கொண்டே நகர்ந்தேன்.மனத்தில் ஒருவகைத் திகில். வீட்டாரை விட்டு முதல் முதல் பிரிந்து செல்லும் வலியை மிஞ்சிய பயம். புறப்பட்ட பயணம் போய்ச் சேர்ந்த பிறகே நிம்மதி என்ற நிலைதானே? இப்படிப் பயணம் மேற்கொண்டவர்கள் அப்படியே மேலே போய்ச் சேர்வதெல்லாம் அந்நாட்களில் வெகு இயல்பென்பது தெரிந்தே வந்திருந்தாலும் திக் திக் தான்.

அந்தப் படகுகளில் ஏற முண்டியடித்துக்கொண்டு நின்ற சனத்திரளில் நாங்களும் சேர்ந்து கொண்டோம். எங்களை வழியனுப்ப அப்பா வந்திருந்தார். ஒதுங்கி நின்று கொண்டிருந்தார் . படகுகளில் ஏறலாம் என்றதும் ஓரளவு முதலில் நின்றதால் முனைப்போடு நகர நினைத்தோம். மறுநொடி, பின்னாலிருந்து சனம் தள்ளியதில் அப்படியே தள்ளுப்பட்டுச் சென்றிருந்தேன் நான். கணப்பொழுதுதான். " பெரியம்மா!" என்ற தொடர் கூவலோடு அந்தக் கும்மிருட்டில் அருகில் நிற்பவர்களில் அவரை இனம் காணமுயன்றேன். அதுபார்த்தால், " ஐயோ என்ர ஹாண்ட் பேக்கக் காணேல்ல!" என்ற பெரியம்மாவின் குரல்தான் கேட்டது. அவர் சனநெரிசலில் விழுந்தெழும்பி நின்று பெரிதாகக் குரல் கொடுத்துக்கொண்டு நின்றார். முண்டியடித்து அவரிடம் செல்ல, "பயப்படாதேங்க, தள்ளுப்பட்ட இடத்தில இங்கதான் எங்கயாவது கிடக்கும் ; கட்டாயம் எங்களிட்ட கொண்டுவந்து தருவீனம்; கொஞ்சம் பதற்றம் இல்லாமல் நில்லுங்கோ!" என்று ஆறுதல் சொன்னது மட்டுமின்றி அவரின் கைப்பையை அதனுள் இருந்த அத்தனை விலைமதிப்புள்ள பொருட்களுடன் அவர் கையில் கொடுத்து எங்கள் பயணம் தொடர வழியமைத்துக் கொடுத்தார்கள். அந்த நாட்களில் இயக்கத்தினரின் கண்காணிப்பில் தான் எல்லாமே நடைபெற்றது என்பது எல்லாருக்குமே தெரியும். இருந்தாலும் அங்கு பொது சனமும் பல வேலைகளில் ஈடுபட்டிருந்தார்கள். பயணிகளை ஒழுங்குபடுத்தி விடுவது, படகோட்டுவது, மறுகரை சென்ற பயணிகளையும் பொருட்களையும் சைக்கிள்களில் ஏற்றிச் சென்று தாண்டிக்குளத்தடியில் விடுவதெல்லாம் அவர்கள்தான்.
 

ரோசி கஜன்

Administrator
Staff member
யார் எவர் என்று தெரியாவிட்டாலும் காட்டுப் பாதையில் அவர்களோடு துணிந்து சைக்கிளில் ஏறிச் செல்லும் மன தைரியம் கொடுத்த சூழ்நிலை அங்கு நிலவியதை ஒரு போதும் மறுக்கவோ மறைக்கவோ முடியாது. பிழை புரிந்தால் தண்டிக்கப்படுவோம் என்பது வெளிப்படையாகவே தெரிந்த விசயமாக இருந்தாலும் அந்நாட்களில் அங்கு மனிதம் தலைநிமிர்ந்து நின்றது என்பேன்.

அன்று, அப்படித் தொடர்ந்த எங்கள் பயணத்தில், மறுகரையில் அன்றிரவு ஒரு மரத்தடியில் தான் அமர்ந்திருந்தோம். விடிந்ததும் தான் பயணம் . அங்கிருந்த சிறு கடையில் பாணும் டின் மீன் வருமே அந்த டின்னில் கறியும் வாங்கிச் சாப்பிட்டுப் பசியை ஆற்றிக் கொண்டு மறுநாள் பயணம் தொடர்ந்தது.

அப்படிக் கொழும்பு சென்ற எட்டாம் மாதமே மீண்டும் யாழ் வரும்படி ஆகிற்று. பாடசாலையில் உயர்தரப் பரீட்சையின் பெறுபேரைத் தவறாகப் பார்த்துக் கூறியிருந்தார்கள் என்பது புள்ளிகள் வெளியாகியபொழுது தெரியவந்த்து. கணக்கியலுக்கு நான் ஆசைப்பட்ட, எதிர்பார்த்த A வரவில்லை என்றாலும் B வந்திருந்தது. பல்கலை செல்லும் பொருட்டு மீண்டும் அதே பாதையால் யாழ் வந்தேன். பிறகு அந்தப் பாதையும் மூடப்பட்டு கிளாலிப்பகுதியால் போக்குவரத்து ஆரம்பித்திருந்தார்கள். அதன் மூலமும் முன் சொன்ன அதே கெடுபிடியான பிரயாணமாக அப்பாவும் இன்னும் இரு நண்பிகளும் கூட வர , கொழும்பு சென்று வந்தேன்.

இவை தவிர்த்துக் கப்பல் பயணமும் ஒருமுறை செய்திருக்கிறேன், 1996 ல்.

95 ல் யாழ்ப்பாணத்திலிருந்து இடம்பெயர்ந்து ஒவ்வொரு இடமாகத் தங்கித் தங்கி வன்னி வரை சென்றுவிட்டோம். அங்கிருந்து 96 பங்குனி அல்லது சித்திரை என்று நினைக்கின்றேன், நான் தனியாக பல்கலைக் கல்வியைத் தொடரும் நோக்கில் யாழ் செல்லப் புறப்பட்டேன். அந்த நேரம் தான் யாழ்ப்பாணத்தில் கிருஷாந்தியின் கோரச் சம்பவம் அரங்கேறியிருந்தது. அதைச் சுட்டியே வீட்டில் எழுந்த பலத்த எதிர்ப்பின் மத்தியில், தொடங்கிய பல்கலைக் கல்வியை முடித்தே தீருவேன் என்ற வைராக்கியத்தில் தனியாகப் புறப்பட்டிருந்தேன். புறப்பட்டிருந்தேன் என்று சட்டென்று சொல்லிவிட்டாலும் அதொன்றும் அவ்வளவு இலகுவான காரியமாக இருக்கவில்லை. அலைந்து திரிந்து இயக்கத்திடம் பாஸ் எடுப்பதில் ஆரம்பித்து, ஆமி தங்கள் பகுதிக்கு எடுக்கும் வரை அங்கிருந்த தங்குமிடங்களில் தங்கி, மறுநாள் ஆமி உள்ளே எடுக்கும் வரை பரதேசிகள் போல நிலத்தில் அமர்ந்திருந்து, அந்த இடத்தில் பல்கலை மாணவர் என்ற முன்னுரிமையில் முதலில் சென்று பூந்தோட்டத்தில் இருக்கும் ஒரு பாடசாலைக்கு வந்து சேர்க்கையில் பல்கலை மாணவர்கள் பதினோரு பேர்வரை ஒன்றாகியிருந்தோம்.

அங்கு பல்கலை மாணவர் மாணவிகள் எனும் அடையாளத்தில் ஐந்தாறு நாட்கள் வரை இருந்த பிறகே திருகோணமலைக்குச் செல்ல முடிந்தது . அந்த வாழ்க்கை முற்று முழுதான அகதி என்று நான் உணர்ந்த வாழ்க்கை. அதன் பின்னர் அதைவிடக் கொடூரமாக எல்லாம் எங்கள் மக்கள் வாழ்ந்திருந்தாலும் அம்மா அப்பா என்று அவர்களின் நிழலில் ஒதுங்கியிருந்த நான் தனியாக , இனி எனக்கு நான் தான் பொறுப்பு என்ற வகையில் புறப்பட்டு வந்து அங்கிருந்த அந்த நாட்கள் பற்றி நான் தனியாக இன்னொரு சந்தர்ப்பத்தில் எழுதலாம் என்றிருப்பதால் இங்கு சுருக்கமாகச் சொல்லிக் கடந்து விடுகின்றேன்.

இந்தப் பயணத்தில் பல்கலை மாணவர்கள், அரச உத்தயோகத்தர்கள் என்று முன்னுரிமை இருந்தது. அத்தனை நெருக்கடியிலும் தனியாக ஒரு வகுப்பறை ஒதுக்கித் தந்தார்கள். ஒரு தடவை வவுனியாவுக்குச் சென்று வர அனுமதித்தார்கள் . என்னடா இது என்றிருக்கா? நாங்கள் யாழ் செல்லப் பதிந்திருந்தோம். பிறகு வேறு எங்கவாது சென்றுவிடலாம் தானே? அதனால் வெளியில் செல்வது அவ்வளவு சுலபம் இல்லை. இருந்தபோதும் பதித்துவிட்டு ஒரு முறை வவுனியாவில் வெளியில் சென்றது போலவே திருகோணமலை சென்று கப்பல் ஏற முன்னர் ஒரு பாடசாலையில் தங்கி இருந்த சிலநாட்களில் திருகோணமலை கோணேஸ்வரர் ஆலயத்துக்கும் சென்று வர முடிந்தது.

திருகோணமலையில் இருந்த நாட்களில் எனக்கு மலேரியா வந்துவிட்டது . பல்கலை மாணவர்கள் என்று ஒன்றாக இருந்தாலும் எல்லாருமே வெவ்வேறு துறையைச் சேர்ந்தவர்கள். அதற்கு முதல் அவ்வளவாகப் பரீட்சயம் இல்லை என்றுதான் சொல்லவேண்டும் . இருந்தபோதும் இயலாமல் சுருண்டுவிட்ட என்னை மிகவும் கரிசனமாகப் பார்த்துக் கொண்டார்கள். வைத்தியரிடம் அழைத்துப் போனார்கள் . அதே காய்ச்சல் தந்த சோர்வுடன் தான் தாரகி கப்பலில் கால் வைத்தேன்.

அந்த நேரம் சரக்குக் கப்பலும் மக்களை ஏற்றிச் செல்லப் பயன்படுத்தப்பட்டுக்கொண்டிருந்தது . இது பயணிகள் கப்பல் என்பதால் உள்ளே அதற்குரிய வசதிகள் இருந்தாலும் இருக்கைகள் எல்லாம் எங்களுக்குக் கிடைக்கவில்லை . நாங்கள் அதை நாடவும் இல்லை . வெளியே பால்கனியில் ஒரு மூலையில் இடம் பிடித்து அமர்ந்து கொண்டோம் . அந்தப் பயணம் முழுவதும் நான் என்னுடன் கூடவந்த தோழியின் மடியில் சுருண்டிருந்தேன். கனத்த தலைக்கு ஈடாக மனதுள் என்ன என்னவோ பயங்கள்! அவை கண்ணீராக வடிந்துவிடாதிருக்க எத்தனையோ பிரயத்தனங்கள்! 'தனியாக வந்த முடிவு சரியா?' என்றளவுக்கு மனம் குழம்பியிருந்தது. யாழில் கூடப் படிக்கும் தோழியின் வீட்டில் தங்கிக் கொள்ளும் நோக்கில் தான் புறப்பட்டிருந்தேன் . அது எல்லாம் சரியாக இருக்குமா என்ற பதற்றம் என் முதல் கப்பல் பயணம் பற்றி வேறெந்த உணர்வையும் என்னுள் எழுப்பவில்லை. அப்படியே பயணப்பட்டுக் காலையில் காங்கேசன் துறைமுகத்தில் இறங்கிச் சிறு ஓய்வின் பின்னர் யாழ்ப்பாணம் நோக்கிப் புறப்பட்ட பஸ்சில் ஏறுவதத்திற்குக் காத்திருக்க, நான் யார் வீட்டில் தங்கலாம் என்று வந்திருந்தேனோ அதே தோழி கொழும்பு நோக்கிப் பயணம் மேற்கொண்டு வந்திருந்தாள் . அந்தக் கணம், 'யாருமற்ற' என்ற சொல்லின் முழு அர்த்தம் புரிந்த கணம்! அதுவும் கணம் தான். கூடவந்த அனைவருமே தங்களுடன் வரும்படி அழைத்தார்கள். எனக்கும் வேறு வழியில்லை, மூளாயில் வசிக்கும் ஒரு பிள்ளையின் வீடு செல்லும் நோக்கில் மினிவானில் ஏறியிருந்தேன். அந்த மினிவான் யாழ் பல்கலையைத் தாண்டிச் சென்று கலட்டிச் சந்தியிலுள்ள இராணுவக் காவலரண் முன்னால் நின்றது. வலப்பக்கம் பார்த்தால் 'ஆனந்த குமாரசாமி விடுதி' நிமிர்ந்து நிற்கின்றது. "நீயேன் இடம் தேடி வேறெங்கும் அலையவேண்டும்?" என்ற கேள்வியை என்னைப் பார்த்துக் கேட்கவும் செய்தது. கணத்தில் எடுத்த முடிவில் என் பயணப் பெட்டியோடு இறங்கிவிட்டேன். அடுத்து வந்த ஒருவருடத்துக்கும் மேற்பட்ட காலம் அங்கு அமோகமாகக் கழிந்தது.அது பற்றிப் பிறிதொரு பதிவில் பார்ப்போம் .
 

ரோசி கஜன்

Administrator
Staff member
பயணங்கள் folder la Ella articles um super ah irukku..no words to express...the way you wrote apdiyae nerla partha mathiri irukku..chanceless
மிக்க சந்தோசமும் நன்றியும் விவேகா . எல்லாம் நான் சந்தித்த அனுபவங்கள்!

உங்களுக்கு விரும்பினால் நீங்களும் பகிர்ந்து கொள்ளுங்கள்!
 

Gowri

Active member
ஹப்பா.. என்னால் நினைத்து கூட பார்க்க முடியவில்லை அக்கா! எப்படி இருந்திருக்கும் உங்கள் அனைவருக்கும்(இலங்கை தமிழர்கள்). ஒவ்வொரு விடயத்திற்கும் நம்கெமை பற்றி எதுவும் அறியாதவர்களிடம் கெடுபிடி, அனுமதி, பயம்.. ஆனால் அத்தனையும் தாண்டி சாதித்துள்ளீர்கள். அற்புதம்..
 
Top Bottom