You must have JavaScript enabled in order to use this order form. Please enable JavaScript and then reload this page in order to continue.

காற்றில் அசையும் மலர்கள் - கோபிகை -இதழ் -12

ரோசி கஜன்

Administrator
Staff member

தூரத்தில் எங்கோ கேட்ட வாகன ஒலியில் கண் விழித்த அகல்விழி, அவசரமாய்ப் படுக்கையைச் சுற்றிவைத்துக்கொண்டே அருகில் தூங்கிய மகன் கானகனையும், மகள் கானகியையும் எழுப்பிப் பல்துலக்கிப் படிக்கச்சொல்லிவிட்டு அந்தச் சின்ன வீட்டின் ஓரமாய் இருந்த அடுக்களைக்குள் புகுந்தாள்.

தண்ணீரைக் கொதிக்கவைத்து பிள்ளைகள் இருவருக்கும் தேநீரைத் தயார் செய்தபடியே நேரத்தைப் பார்த்தாள். மணி 4. 50 எனக்காட்டியது மொபைல் போன். ஐந்து மணிக்குப் போனால் தான் பிள்ளைகளைப் பள்ளிக்கு அனுப்பும் நேரத்திற்கு அவர்களுக்கு உணவை எடுத்துக்கொண்டு வந்துவிட்டுப் போக முடியும்.

எண்ணங்களினூடே கை தன்பாட்டில் வேலை பார்த்தது. பிள்ளைகள் இருவருக்கும் அருகில் தேநீர் கப்புகளை வைத்துவிட்டு மடக்கென்று இரண்டே மடக்கில் தனது தேநீரை அருந்தியவள் வேலைக்காக விரைந்தாள்.

அவர்களது குடியிருப்பிற்கு எதிரே உயரமாய் மாளிகை போல காட்சிகொடுத்த அந்த வீட்டில்தான் கானகிக்கு வீட்டு வேலை. எஜமானியம்மாவும் அவரது ஒரே மகனும் தான் வீட்டில். அறுபதைத் தொட்டுவிட்ட தாயாருடன் முப்பத்தைந்து நாற்பதைக்கடந்தும் திருமணம் ஆகாமல் வாழ்ந்த மகன் ஈகைமாறன். ஏதோ பெரிய உத்தியோகத்தில் இருப்பவர். அவரை வீட்டில் காண்பது அரிது, காலையில் சாப்பிட்டுவிட்டுப் போனால் இரவில் தான் வீடு திரும்புவார். சமையல் வேலை மட்டும் என்பதால் சமையலறையை விட்டு எப்போதும் வெளியே வராத, மாலை ஐந்து மணிக்கே இரவு உணவை முடித்துவிட்டுத் தன் வீட்டிற்கு வந்துவிடும் அகவிழி அவரைக் கண்டதே கிடையாது.

கணவனை இழந்து அநாதரவாய் அந்த ஊருக்கு வந்தவளை அந்த வீட்டில் வீட்டுவேலை செய்ய ஆள் தேவை எனக் கூட்டிவந்து சேர்த்துவிட்டது அந்த வீட்டில் தோட்டவேலை செய்யும் முத்தண்ணா தான். முத்தண்ணாவின் மனைவியும் அங்கேதான் வேலை. தோட்டத்தில் கணவனோடு சேர்ந்து வேலை செய்வதுடன் கூட்டிப்பெருக்கி எடுபிடி வேலைகளையும் அவர்தான் கவனிப்பார். அடுப்படியில் தீயோடு வேகும் பணி எப்போதும் அகல்விழியினுடையதுதான். அவளுக்கும் பிள்ளைகளுக்கும் மூன்றுவேளை உணவை எடுத்துச்செல்லவும் அனுமதித்திருந்தார், அந்த வீட்டு எஜமானி. சம்பளமாகக் கிடைக்கும் பணத்தில் பிள்ளைகளின் படிப்பு, இதர செலவுகள் தவிர ஒரு பகுதியைச் சேமிக்கவும் செய்தாள் அகல்விழி.

எட்டாம் வகுப்பில் மகனும், ஆறாம் வகுப்பில் மகளும் என இருபிள்ளைகளின் படிப்புச் செலவே அதிகமாய் இருந்தது, அந்த ஏழைத்தாய்க்கு. நெருப்பைத் தின்று தாய் தங்களை வளர்ப்பதை உணர்ந்து பிள்ளைகளும் நன்றாகவே படித்தனர்.

காலை விடிந்தால் மாலை வரை பம்பரமாய்ச் சுழலும் அவள், இரவில்தான் சற்று ஓய்வாக அமர்வாள். அவ்வேளையில் தான், பத்திரிகைகள் படிப்பதுண்டு. வாரப் பத்திரிகைகளில் கவிதைப்பகுதி அவள் அதிகமாக விரும்பிப் படிக்கும் ஒன்று. கவிதைகள் எழுதுவதும் வாசிப்பதும் அவளுக்கு மிகப் பிடித்த விடயம். பள்ளி நாட்களில் ஆசையாகக் கவிதைகளை எழுதியதுண்டு, பலரது பாராட்டும் பெற்றதுண்டு.

தாளில் எழுத்துக்களை மேய்ந்த பார்வை வெறித்தபடி இருக்க அவளது எண்ணங்கள் கடந்த காலத்தை நோக்கி ஓடியது. பள்ளியில் படுசுட்டி அவள், காலம் வறுமையிலும் மகிழ்வாய்க் கரைந்தது அவளுக்கு. உயர்தரம் வரைதான் எல்லாம். அதன் பின்னர் வயதான பெற்றோர் யாரோ ஒருவனை அவளுக்காகப் பார்த்துப் பேசிமுடிவு செய்ய, அவளும் கனவுகளுடன் கல்யாணமாகிப் போய்விட்டாள். சில நாட்களில் தான் கணவனது சுயரூபம் தெரிந்தது. குடிக்கும் போதைக்கும் அடிமையான அவனுடன் குடும்பம் நடத்துவதே பெரியபாடாக, ‘கவிதை எங்கே, கற்பனை எங்கே’ எனப் பறந்துவிட்டிருந்தது.

அதன் பின்னர் அவனது அடாவடியில் காலம் பாரமாய் நகர, தற்கொலை முயற்சிகளிலும் அவள் தோற்றுப் போய் வயிற்றில் கருவைச் சுமந்த போது இருளில் சிறு பொறியாய் வெளிச்சம் தெரிந்தது அவளுக்கு. கணவன் மாறாத போதும் அவள் மாறிக்கொண்டாள், சாகவேண்டும் என்ற எண்ணத்திலிருந்து.

மூத்தமகன் கானகன் பிறந்து பத்தாம் நாளே கணவன் குடித்துவிட்டுபோட்ட ரகளையில் தாங்க முடியாது தாய்வீடு வந்துவிட்டாள். மறுநாளே கணவன் கண்ணீரோடு வந்து நின்றதும் புத்தி சொல்லி அனுப்பிய பெற்றவர்களைக் குறை கூடச் சொல்ல முடியாது அவனோடு சென்று விட்டாள். ஒன்று மட்டும் எண்ணிக்கொண்டாள், இனிமேல் அவன் அடித்தாலும் கொலையே செய்தாலும் தாய்வீடு வருவதில்லை என்பதே அது.

இரண்டாண்டில் மகள் கானகியும் பிறந்துவிட, வறுமை அவளது தொண்டையை நெரித்த போதும் அப்பப்போ கூலி வேலைக்குச் சென்று தனது உணவை விடுத்தும் சுருக்கியும் குடும்பத்தைச் சமாளித்துக்கொண்டாள்.

திடீரென ஒருநாள் குடிக்கச் சென்ற இடத்தில் நடந்த கைகலப்பில் வெட்டுப்பட்ட கணவன் அதன் பின்னர் பிணமாகவே வீடுவந்து சேர்ந்தான். தன் துக்கத்தை அழுது தீர்க்கவும் அவள் விரும்பவில்லை. அவளது கண்ணில் இருந்து ஒரு துளி கண்ணீர் கூட வரவில்லை. கல்லு போல அமர்ந்திருந்தவள், அவளை, வாய்க்கரிசி போட அழைத்தபோது தான் ஒரே ஒரு துளி கண்ணீரை விட்டாள். அதுவும் அறுகருசி பெற்ற ஐந்து ஆண்டிற்குள் அவனுக்கு வாய்க்கரிசி போடுகின்றோமே என்ற துயரில் மட்டுமே.

ஊர் ஏதேதோ பேசிக்கொண்டது, அவள் மனம் எதையும் சிந்திக்கும் நிலையில் இல்லை. இத்தனை நாள் அவள் நாயாய்ப் பேயாய் அலைந்தபோது கதைக்காத, பார்க்காத ஊர் அவளைப்பற்றி என்ன சொன்னால்தான் என்ன? மௌனமாக இருந்துவிட்டாள்.

குழந்தைகள் வீறிட்டு அழுதபோதுதான் சுயநினைவிற்கு வந்தாள். இனிமேல், இங்கு இருப்பதே கேவலம் என எண்ணியவள், பஸ்ஸில் புறப்பட்டு வந்து சேர்ந்த இடத்தில் கண்ட உறவுதான் முத்தண்ணாவின் மனைவி. ஏழை வாசம் ஏழைதான் அறிவார். பேருந்தில் வரும்போது பழகிய பழக்கமாய் உறவாகிப் போனவர்கள். முத்தண்ணா குடும்பம் தான் அவளுக்கு பெரும் உதவி. வீடு பார்த்துத் தந்தது மட்டுமன்றி வேலையும் வாங்கித்தந்தனர்.

இன்றுவரை அவளது குடும்ப வண்டி நிம்மதியாய் ஓடிக்கொண்டிருக்கின்றது.

"அம்மா பசிக்கிது" மகளின் குரலில் கோடாய் வழிந்த கண்ணீரைத் துடைத்தபடி எழுந்து நடந்தாள்.

அன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் எஜமானி வீட்டில் விருந்து நடந்தது. சமையலை முடித்துவிட்டு அவள் வெளியே வரவும் அடுக்கடுக்காய் மனிதத் தலைகள் தெரியவும் அவசரமாய் விரைந்து நடந்தவள் கல் தடுக்கி விழுந்துவிடப்போக, “பாத்து...பாத்து” சாதாரணமாய் அவளது கரம் பற்றித் தூக்கிவிட்டுச் சென்றது யாரென்று அவளுக்குத் தெரியாது.

படபடப்புடன் கைகளை விடுவித்துக்கொண்டவள் கையிலிருந்து விழுந்த பையைத் தூக்கிக்கொண்டு விரைந்து நடந்தாள். சிலஆண்டுகள் கடந்து அவளது மேனியில் பட்ட ஆணின் ஸ்பரிசம் ஏதோ சொல்ல முடியாத ஒரு உணர்வை உண்டு பண்ண, அந்தக் கரம் பட்ட இடத்தைத் துடைத்தபடியே விரைந்துவிட்டாள்.

அவளுக்குக் கவிதைகள் என்றால் கொள்ளை பிரியம். அதுவும் வாரப்பத்திரிகையில் வரும் 'வித்தகன் ' எழுதும் கவிதைகள் நிறையவே பிடிக்கும். தான் வாசித்த ஒவ்வொரு கவிதைக்கும் தவறாது வாழ்த்து அனுப்பிவிடுவாள். அன்றும் கவிதைக்கான தனது வாழ்த்தை எழுதி முத்தண்ணாவின் மகளிடம் தபாலில் சேர்க்குமாறு கொடுத்துவிட்டு வீடுவந்தாள்.

இரண்டு நாட்களில் எஜமானி வீட்டிற்கு வந்திருந்த ஒரு தபாலை வாங்கிய போதுதான் கவனித்தாள் அது 'வித்தகன்' என்ற பெயரிற்கு வந்திருந்தது. அந்நேரம், அவ்விடம் வந்த எஜமானி, அதனை வாங்கியபடி, “அது பத்திரிகை அலுவலகத்தில் இருந்து மகனுக்கு வந்திருக்கு,” என்றார். ஒரு கணம் இனிமை பூத்தது அகல்விழிக்குள்.

‘அவள் நேசிக்கும் கவிதைகளின் சொந்தக்காரன் அந்த வீட்டில் உள்ளவரா?’ அவளது தொடர் கவனிப்பு அதை உறுதிப்படுத்தியது. ஒருநாள் முத்தண்ணாவின் மனைவிக்கு உடம்பு சரியில்லை என்பதால் அறையைச் சுத்தம் செய்யச் சென்ற அகல்விழி, அவரது அறையில் எழுதிக்கிடந்த கவிதைத் தாள்களைக் கண்டதும் தனது எண்ணத்தை உறுதிப்படுத்திக்கொண்டாள்.

அதன்பின்னர் அடிக்கடி அவரைச்சந்திக்க நேர்ந்தது. வெள்ளை மனம் கொண்ட அவள், 'தனக்கு கவிதைகள் பிடிக்கும் என்பதையும் அவரது கவிதைகளை விரும்பி வாசிப்பதையும் பல கடிதங்கள் வாழ்த்தி எழுதியதையும் கொட்டிவிட்டாள்.' அவளை வியப்பாய் பார்த்த ஈகைமாறன், அந்தக் கணத்தில் அவளை ஒரு தோழியாய் உணரத்தொடங்கினான். அவளது பிள்ளைகள் இருவரின் மீதும் அதிக அக்கறையும் அன்பும் காட்டினான். தான் வெளியே போகும் போது அவளது பிள்ளைகளையும் கூட்டிச்சென்றான்.

“அம்மா ஈகைமாறன் சேர் ரொம்ப நல்லவர், இல்லம்மா?” என, பிள்ளைகளே சொல்லுமளவிற்கு நடந்துகொண்டான்.

கடந்துவந்த நாட்கள் இருவரையும் அதிகம் பேசவைத்தது. அவளுக்கு இருந்த கவி ஆர்வம் பற்றி கண்டுகொண்டவன் அவளையும் எழுதச் சொன்னான்.

“இனி எங்கய்யா, காலம் போயே போச்சு” என்றவளை விசித்திரமாய் பார்த்தவன், “என்ன நல்லா வயது போன ஆள் மாதிரிக் கதைக்கிறாய்?” என்றான்.

விரக்தியாய் ஒரு புன்னகை அவளிடம் இருந்து.

நாட்கள் இருவருக்கும் உண்டாக்கிய புரிதலில் அவளைக் கண்டதும் “ சாப்பிட்டியா?” என்பதே ஈகைமாறனின் முதல் கேள்வியாக இருக்கும். மனத்தில் ஒரு நேசம் சுரக்கத் தலையை மட்டும் ஆட்டிவைப்பாள் அவள். அவளுக்கு உடல்நிலை சரியில்லை என்று ஒருநாள் வேலைக்குப் போகாதபோது தேடிவந்துவிட்டான். நடுங்கிய படி படுத்திருந்த அவளைக் கண்டவன், பதற்றத்துடன் முத்தண்ணாவை அழைத்து மருந்தும் பானமும் வாங்கிவரச்செய்து தன் கையாலேயே கொடுக்க, அவள் வாங்க மறுத்துவிட, “பேசாம குடி, சொல்லுங்க முத்தண்ணா” என அவரையும் இழுக்க, “குடியம்மா” அவரும் சொல்ல வாங்கிக்குடித்தாள்.

 

ரோசி கஜன்

Administrator
Staff member
அன்றைய அவனது பதற்றம் அவளுக்கு வியப்பாய் இருந்தது.

நாட்கள் கடந்தபோது, ஈகைமாறனின் அன்பில் ஏதோ ஒரு மாற்றத்தைக் கண்ட அகல்விழி, சுதாகரித்துக்கொண்டாள். விலகி நடக்கத்தொடங்கினாள், அவளது விலகலை உணர்ந்த ஈகைமாறன், ஒருநாள், அவள் வருமுன்னரே வீட்டிற்கு வந்து காத்திருந்தான். ஏதும் புரியாது, “என்ன?” என்றவளிடம்," ஏன் என்னைவிட்டு விலகிப்போற, திடீரெண்டு என்ன நடந்திட்டு? சொல்லு” என்றபோது அவளால் பேசமுடியவில்லை. அவசரமாய் ஏதோ சொல்ல எண்ணியவன், அவளது கரங்களைப் பற்றிக்கொண்டு, " அகல்விழி, உன்ர கடந்தகாலம் எண்டது முடிஞ்ச ஒண்டு; நான் உன்னைக் கலியாணம் செய்ய விரும்புறன், என்ர கவிதைகளை நேசிக்கும் உன்னோட காலமெல்லாம் வாழ விரும்புறன்" என்றான்.

தீயைக்கண்டது போல விலகிக்கொண்ட அவள், எதுவும் பேசவில்லை. தனது இரண்டு கரங்களையும் கூப்பியவள், “ஐயா, தயவுசெய்து போயிருங்க , யாராவது பாத்தாப் பிழையா நினைப்பினம்” என்றாள்.

“இதில பிழை என்ன இருக்கு? நான்..." என்று அவன் சொல்லமுதல், “வேணாம்...வேணாம்...” என்றாள் பயத்துடன்.

இரண்டே நாட்களில் அந்த இடத்தைவிட்டு போய்விட முடிவெடுத்துப் புறப்பட்டாள். அதனை அறிந்துகொண்ட ஈகைமாறன், அவசரமாய் விரைந்து வந்தான்.

“இஞ்சபார் அகல்விழி, என்னைத் தண்டிக்கிறதா நினைச்சு, உன்னையும் பிள்ளைகளையும் தண்டிக்காத!” என்றான்.

அவள் மௌனமாகவே நிற்க “அகல்விழி, என்னைவிட்டு, என்னை மறந்திட்டு, என் நினைவுகளைத் தூக்கிப்போட்டுவிட்டுட்டுப் போகப்போறியா?” என்றான்.

“இல்லை, உங்கள் நினைவாக இதக் கூடவே கொண்டுதான் போகப்போறன்” என்றபோது, நிமிர்ந்தவன் அதிர்ந்தான், காகிதக் கட்டாய் அவன் எழுதிய கவிதைகள் அவள் கையில்.

"இது மட்டுமா? கவிதைகளை மட்டுமா நேசித்தாய்? என்னை நேசிக்வே இல்லையா?” ஏக்கமாய் வந்தது அவனது வார்த்தைகள்.

கண்களில் நிறைந்த கண்ணீரோடு அங்கும் இங்குமாய் தலையை அசைத்தவள், “ தயவுசெய்து போங்கோ, உங்கட அம்மாவுக்குத் தெரிஞ்சா பெரிய பிரச்சினை ஆகிடும்” அவள் பயந்தபடி சொல்ல, “சரி நான் போறன், எப்பவாவது என்ர நினைவு வந்தால், என்ர விருப்பம் போல உனக்கும் வந்தால் திரும்பி வா, இது வரையும் கலியாணத்தைப் பற்றியே நினைக்காத நான் உன்னைப் பாத்த பிறகு தான், இனிமையான இல்லறம் பற்றி யோசிச்சன், உன்ர பிள்ளைகளுக்கு அப்பாவா உனக்கு நல்ல கணவனா, உன்ர காயங்களுக்கு மருந்தா இருக்க ஆசைப்பட்டன். நான் ஆசைப்படுறது எல்லாம் அன்பான இல்லறம் தான். அது உன்னோட வாழுற வாழ்க்கையில தான் எனக்கு கிடைக்கும்.” அவன் சொல்லிக்கொண்டிருக்கும் போதே தாயார் அவனைத்தேடி வந்துவிட, கண்களால் இறைஞ்சிய அவளது பார்வைக்கு கட்டுப்பட்டு வீட்டிற்குச் சென்றுவிட்டான்.

காலங்கள் உருண்டு ஓடியது. மகன் வைத்தியராகவும் மகள் சட்டத்தரணியாகவும் பணிபுரிந்தனர். அண்மையில் தான் இருவருக்கும் ஒரே நாளில் திருமணத்தை நடத்தி முடித்தாள். இப்போது அகல்விழி, பலபேருக்கு உறவுக்காரி. ஆம்! அவளது ஆசைப்படி பிள்ளைகள் இருவரும் இணைந்து முதியோர் இல்லம் ஒன்றை ஆரம்பித்துப் பல முதியவர்களை அவளது பொறுப்பில் தந்திருந்தனர். எப்போதும் புன்னகை தவழ பேசும் அகல்விழி மீது அத்தனைபேரும் பாசத்தைப் பொழிந்தனர். அவளும் அவர்கள் அத்தனை பேரின் மீதும் அளவில்லாத அன்பைச் சொரிந்தாள். அவளது உலகம் அதுவாகவே மாறிப்போனது, அப்பப்போ ஒவ்வொருவராக வந்து இணைந்துகொள்வார்கள்.

அன்று ஞாயிற்றுக்கிழமை, அகல்விழி, ஒருவருக்கு உடம்பு சரியில்லை என்றதும் பார்க்கச் சென்றுவிட, மகள் கானகிதான் அலுவலக அறையில் இருந்தாள். முச்சக்கர வண்டியில் வந்திறங்கிய அவரை வரவேற்றுத் தேநீர் கொடுத்து உபசரித்துவிட்டு அவரது பெயரைப் பதிய ஆரம்பித்த போது “ஈகைமாறன்” என்ற அவரது பெயரைக் கேட்டதும் விலுக்கென நிமிர்ந்தாள்.

“நீங்கள்...“ என்றவளிடம் , “ஏன் பிள்ள, என்னைத் தெரியுமோ?” என்றவருக்கு, “நாங்க உங்கட வீட்டில இருந்தனாங்கள், நான் அகல்விழியின்ட மகள்” அவள் சொல்லிமுடிக்க முன்னர், “பி...ள்....ளை” ஏக்கமாய் அழைத்தவரை ஓடிச்சென்று அணைத்துக் கொண்டவள், விக்கி அழுதாள்.

அவரது கண்களிலும் கண்ணீர்.

அவ்வேளை உள்ளே வந்த அகல்விழி, இதனைக் கண்டதும் திகைத்து நின்றுவிட, “அம்மா... ஆரெண்டு பாத்தியளே , எங்கட ஈகைமாறன் சேர்” என்றாள் கானகி. கண்களில் வழிந்த கண்ணீரை உள்ளே இழுத்துக்கொண்ட அகல்விழி, "தங்க வைக்க வேண்டிய எற்பாடுகளைப் பார்!” எனக்கூறிவிட்டு அவசரமாய் தனது அறைக்குச் சென்றுவிட்டார்.

அவள் உயரத்தில் வைத்து நேசித்த ஈகைமாறனா இன்று முதியோர் இல்லத்தில் தங்கியிருப்பது? கேள்விகள் துளைத்தன. அடிக்கடி எடுத்துப் பார்த்து மனத்தைத் தேற்றிக்கொள்ளும் அவரது கவிதைகளை இன்றும் எடுத்துப் பார்த்துக் கண்களில் ஒற்றிக்கொண்டு அழுது தீர்த்தாள். அவ்வேளை உள்ளே வந்த கானகி, “ஏனம்மா அழுறீங்க, எனக்கு எல்லாம் தெரியும், சேர் எல்லாத்தையும் சொல்லிப்போட்டார், முட்டாள்தனமா இருந்திட்டீங்கள்” என்றாள்.

“பெரிய ஆள் மாதிரி பேசாமல் போ, என்னைக் கொஞ்சம் தனிய இருக்கவிடு!” என்ற தாயின் தவிப்புப் புரிந்தவளாய் வெளியே சென்றுவிட்டாள் கானகி.

மாதம் ஒன்று கடந்தது, அமெரிக்காவிற்கு வைத்தியப் படிப்பிற்காகச் சென்றிருந்த மகன், அவசரமாய் விடுப்பு எடுத்து வந்திருந்தான். என்ன ஏதெனச் சொல்லாது அம்மாவை அழைத்துக்கொண்டு புறப்பட்டவிட்டான்.

மகன் கானகனின் அழைப்பிற்கிணங்க அவனோடு பயணித்துக்கொண்டிருந்த அகல்விழி, “எங்க போறம்?” என்றதும் “வாங்கோ சொல்றன்” என்பதைத் தவிர அவன் வேறொன்றும் சொல்லவில்லை.

அது ஒரு அழகிய கிராமம். அந்தக் கிராமத்தின் எல்லையில், கோயில் ஒன்றும் சிறு குளமும் இருந்தது, எங்கும் பச்சை வயலும் ஆற்றுநீரின் சலசலப்புமாய் இயற்கை அன்னையின் கொடை அங்கு கொட்டிக்கிடந்தது. வயல்வெளிகளில் இருந்து சற்றுத் தள்ளி, அழகான சிறியவீடு ஒன்று சமீபத்தில் புதுப்பிக்கப்பட்டதாய்த் தெரிந்தது. இயற்கையை ஆழமாய் நேசிக்கும் அகல்விழிக்கு அந்தக்காட்சி புதுத்தெம்பையும் மன மகிழ்வையும் கொடுத்தது. புன்னகைத்தபடியே மகனைப் பார்த்தாள்.

"அம்மா என்ர நண்பன், பருதி, இங்கதான் கிளினிக் நடத்திறான், அவன் மூலமாத்தான் இந்த வீட்ட வாங்கியிருக்கிறன், அவனும் சனி, ஞாயிறு மட்டும் இஞ்ச வருவான், மற்றபடி அங்கதான், இந்த ஊரில எல்லாரும் அவனுக்குப் பழக்கம், டொக்ரர் ஐயா எண்டால் அப்பிடி ஒரு விருப்பம். ஒருமுறை அவனோட நானும் இஞ்ச வந்திருக்கிறன், இந்த இடம், வீடு உங்களுக்குப் பிடிச்சிருக்கோ?" என்றான்.

"தலையை ஆட்டிய அகல்விழி, இப்ப எனக்கு பிடிச்சென்ன? நான் அங்க..."

"அம்மா, அங்க எல்லாத்துக்கும் ஆள் ஒழுங்கு செய்துபோட்டன், கானகி கிட்ட இருந்து பாத்துக்கொள்ளுவா, நீங்கள் கிழமைக்கு ஒருதரம் அல்லது மாசத்துக்கு ஒருதரம் போய்வாங்கோ!"

"என்னப்பா சொல்லுற? இஞ்ச, நான் தனிய..."

"உங்களுக்கு ஒரு துணையை..."

ஆச்சரியமாக பார்த்த தாயிடம், இறங்கச்சொல்லிவிட்டு, வயல்வெளியின் நடுவே இருந்த அழகான வீட்டைக் காட்டி “போங்கோ!” என, பார்வையால் பகிர்ந்தான். வயலோரமாக இருந்த வரம்பில் கால்பதித்து நடந்து உள்ளே சென்ற அகல்விழி அதிர்ந்தாள், உள்ளே சாய்வு நாற்காலியில் அமர்ந்திருந்தார் ஈகைமாறன். பின்னால் வந்த மகனிடம்,

“இதென்ன கானகன்?ஏன் இங்க?” என்ற தாயாரிடம், “எனக்குத் தெரியும், கானகி சொன்னா, இனிமேலாவது என் அம்மா சந்தோசமா வாழோணும், அதுக்குத்தான்” என்றான் மகன் .

“பாக்கிறவே என்ன சொல்லுவினம் தெரியுமா?”

“என்ன வேணுமெண்டாலும் சொல்லட்டும், எங்களுக்கு அதைப்பற்றிக் கவலையில்ல. இண்டைக்குப் பருதி இஞ்சதான் நிக்கிறான். சமைக்க எல்லா ஏற்பாடும் இருக்கு. சமையுங்கோ, பருதியையும் சாப்பிடக் கூட்டிக்கொண்டுவாறன்." என்றுவிட்டு, "சரி , நான் போயிட்டுப் பிறகு வாறன்‘ என்படி புறப்பட்ட மகனைத் தடுப்பதா விடுவதா எனத் தெரியாது தவித்தபடி நின்றாள் அகல்விழி .

சின்னதாக ஒரு புன்னகையையும், " சேர்..." என்றபடி ஒரு தலையசைப்பையும் கொடுத்துவிட்டு அவன் நகரமுற்பட,

"கானகன்" என்ற அவரது அழைப்புக் கேட்டு நின்றான்.

"என்னை வார்த்தைக்கு வார்த்தை சேர் எண்டுதான் சொல்லுறாய். நான் உன்னட்ட ஒரு அப்பாவா நடக்கவேயில்லையா?" என்றதும்,

"ஐயோ...சேர்!" எனறவன், "சொறி....அப்பா!"என்றான்.

ஆனந்தத்தில் அவரது உடல் ஒருகணம் குலுங்கியது.

"உங்களை அப்பா எண்டு சொல்லுறது எங்கட பாக்கியம், இப்பவாவது அந்த வரம் கிடைச்சதே எண்டு சந்தோசம்," என்றவனை, அவசரமாய் அணைத்துக்கொண்டார் அவர் .

"தம்பி, நித்தியா... அவா வீட்டில..."என்ற தாயை ஆழமாகப் பார்த்தவன், "உங்கட மருமகள் நித்தியாதான் இந்த யோசனையை என்னட்டச் சொன்னதே." என்றான்.

விழிவிரித்த தாயிடம், "அவள், நீங்கள் தேடி எடுத்த மருமகளாச்சே அம்மா, உங்களை மாதிரியேதான்."என்றான், பெருமையாக.

இருவரிடமும் விடைபெற்று மகன் சென்றுவிட, ஈகைமாறனை நிமிர்ந்து பார்த்தவள், "நீங்களாவது அவனுக்குச் சொல்லியிருக்கலாமே, பாக்கிற சனம் என்ன சொல்லும்?" முணுமுணுத்தாள் .

அவ்வேளை, அவளருகே வந்த ஈகைமாறன், “அந்திக்காலத்தில மோகம் வந்ததா சொல்லுவினம்” என்றார் கவிதையாய்!

அகல்விழி சங்கடமாய் அவரைப் பார்த்துவிட்டு மௌனமானாள்.

"இப்பவும் நீ அப்பிடியேதான் இருக்கிற. அதே பயம், அதே பதற்றம்.....நீ மாறவே இல்ல. என்னைப்பார், ஒரு மாசத்துக்கு முதல் எப்பிடி வந்தன், உன்னைப் பாத்தபிறகு முப்பது வயசு குறைஞ்சமாதிரி இருக்கிறன்" என்றார்.

வெட்கம் கலந்த மகிழ்வில் வாய்விட்டுச்சிரித்த அகல்விழியின் சிரிப்பொலி அந்த வயல் கரையெங்கும் எதிரொலித்தது.
 
Top Bottom