கேட்பார் இன்றிக் காதல்! - கதைத்திரி

Status
Not open for further replies.

நிதனிபிரபு

Administrator
Staff member
மெல்லிய ஏமாற்றம் மனத்தில் படர்ந்தாலும் இப்படி அவன் கைகளுக்குள் இருப்பதே பெரும் ஆறுதலாய் இருக்க, மெல்ல உறங்கினாள் அன்பினி.

அவனால் முடியவில்லை. விழித்தே கிடந்தான். அடுத்த இரண்டு நாள்களும் இப்படியேதான் கழிந்தன. மனம் முழுக்க ஏமாற்றமும் கவலையுமாக அன்பினி புறப்பட, அவனும் வந்தான்.

அவள் முகம் பளீரென்று மலர்ந்தது. அவசியம் தாண்டிய எந்தப் பேச்சும் இல்லா மெல்லிய மௌனம். ஆனாலும் அவனருகில் இருக்கிறோம் என்கிற எண்ணம், அவளை நிற்சிந்தையாய் அந்தப் பயணத்தை அனுபவிக்க வைத்தது.

அவன் காரைக் கொண்டுவந்து அவர்கள் வீட்டின் முன்னால் நிறுத்தினான். உள்ளே வா என்று சொல்ல முடியாது. இனி எப்போது அவனைப் பார்க்கக் கிடைக்கும் என்றும் தெரியாது. நெஞ்சு கனக்க, “வாறன்!” என்று முணுமுணுத்தபடி இறங்கினாள். கூடவே இறங்கினான் அவன்.

அவளால் நம்பவே முடியவில்லை. அவனும் வரப்போகிறானா என்ன? விழிகளை விரித்துப் பார்க்க, “என்ன, ரோட்டிலையே நிக்கிற பிளானா? நட!” என்றான் எழுந்த சிரிப்பை உதட்டுக்குள் மறைத்தபடி.

“வா…வாங்க!” சந்தோசத் தடுமாற்றத்தோடு அழைத்தபடி வீட்டுக்குள் ஓடினாள்.

தன் முடிவு சரிதான் என்று தெரிந்தது அவனுக்கு. அன்று தந்தை எடுத்துச் சொன்னவைகளும் மனத்தில் இருந்ததால் இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி வந்துவிட்டான்.

இவர்களைச் சோடியாகக் கண்ட இந்துமதியும் திக்குமுக்காடிப் போனார். விழிகள் வேறு இலேசாகக் கலங்கிவிட, “வாங்கோ தம்பி, வாங்கோ வாங்கோ!” என்று வாஞ்சையும் சந்தோசமுமாய் வரவேற்று, அவனை உபசரித்தார்.

அவள் திருநாவுக்கரசுக்கு அழைத்துச் சொல்ல, அடுத்த இருபதாவது நிமிடம் அவரும் அங்கே நின்றார். அவனுக்குள் பெரிய சங்கடம். ஆனால், அவர்களின் உறவைச் சுமூகமாக்க இந்தச் சங்கடத்தை அவன் கடந்துதான் ஆக வேண்டும்.

“சுகமா இருக்கிறீங்களா மாமா?” சம்பிரதாயமாக விசாரித்தான்.

“எங்களுக்கு என்னப்பு? நல்லாத்தான் இருக்கிறம். இப்பவா வந்தனீங்க. பிள்ளை சொல்லவே இலை. சொல்லியிருக்கக் கறி வாங்கி வந்து சமைக்கச் சொல்லியிருப்பன்.” தங்களுக்குள் எதுவுமே நடக்கவில்லை என்பதுபோல் இயல்பாகப் பேசினார் மனிதர்.

“அதுக்கு என்ன மாமா. இருக்கிறதைச் சாப்பிடுறதுதானே. நோர்மலா நான் வீக்கெண்ட்தானே வாறனான். இது அன்பா அங்க கொழும்புக்கு வந்தவள். அதான் தனியா விட வேண்டாம் எண்டு நானும் வந்திட்டன்.” கண்கள் மனைவியிடம் சிரிக்க அவளைப் போட்டுக் கொடுத்திருந்தான் அவன்.

அன்பினிக்கோ பேயறைந்த நிலை.

அவள் கொழும்பு சென்றதைப் பெரியவர்களிடம் சொல்லவில்லை. தனியாகப் போகாதே என்பார்கள். இல்லையா அபயனிடம் தெரிவித்துவிடுவார்கள். சொல்லாமல் கொள்ளாமல் சென்று நின்று, அவனைச் சமாதானம் செய்ய அவளுக்கு விருப்பமாக இருந்தது. இதை எல்லாம் சொல்லி, வீட்டில் சொல்லாதே என்று சொல்லியிருந்தாள்.

அவனானால் அதைத்தான் முக்கியமாகச் சொல்லியிருந்தான். ‘இவனை… இவன் எல்லாம் திருந்திட்டான் எண்டு நினைச்ச என்னைச் சொல்லோணும்!’ என்று பல்லைக் கடித்தாள்.

திருநாவுக்கரசு அவன் முன் எதுவும் கடிந்து பேசவில்லை. ஆனால், இந்துமதி அவளை வாயில் போட்டு அரைத்தபடிதான் அவசரச் சமையல் ஒன்றை முடித்து, எல்லோருக்கும் பரிமாறினார்.

அன்பினிக்குக் காதுகள் இரண்டாலும் இரத்தம் வடிந்தது. கிடைத்த தனிமையில் அவன் கையைப் பிடித்து நன்றாகக் கிள்ளி விட்டு ஓடியிருந்தாள்.

கத்தக்கூட முடியாமல் அவளை முறைத்தான் அபயன்.

உணவு வேளை முடிந்தபின், “கொஞ்ச நேரம் ஆறுங்கோவன் பிள்ளைகள்.” என்று இந்துமதி சொல்லியும் அவள் அறைக்கு வரவில்லை அவன். விறாந்தையிலேயே அமர்ந்துகொண்டான்.

தாம் இருக்கும்வரை அவன் உள்ளே போகமாட்டான் என்று தெரிந்துவிட, மனைவிக்குக் கண்ணைக் காட்டிவிட்டு எழுந்த திருநாவுக்கரசு, “நீங்க கொஞ்சம் படுத்து எழும்புங்கோ தம்பி. நான் ஒருக்காக் கடையப் பாத்துக்கொண்டு வரப்போறன்.” என்றுவிட்டுப் புறப்பட்டிருந்தார்.

அதன் பிறகு இந்துமதி விடவில்லை. மகளைக் கொண்டு அவனை அறைக்கு அனுப்ப வைத்து, குடிப்பதற்கும் கொடுத்துப் பின்னால் அவளையும் அனுப்பிவிட்டார்.

“நானும் கொஞ்சம் படுத்து எழும்பப் போறன் பிள்ளை. இப்ப எல்லாம் பகலிலே குட்டி நித்திரை கொண்டு பழகி அந்த நேரம்வந்ததும் கண்ணைச் சுழட்டுது.” என்றுவிட்டு அவர்களின் அறைக்குள் சென்று மறைந்தார்.

அவளுக்கு இன்னுமே கோபம் இருந்தது. அறைக்குள் சென்று தண்ணீர் போத்தலை வைத்துவிட்டு வெளியே நடந்தவளை மடக்கிப் பிடித்தான் அபயன். அதே கையேடு கதவையும் சாற்றியவன் அவள் இதழ்களைச் சிறை செய்தான்.

அவள் வியப்புடன் விழிகளை விரிக்க, “என்னவோ அந்த நாள் நினைவு. இங்க வச்சுத்தான் முதல் முதல்…” என்று மிகுதியைச் சொல்லாமல் விட்டுவிட்டு அவன் பார்க்க, அவள் முகத்தில் சிவப்பேறியது.

“மிச்சத்தையும் இஞ்சையே ஆரம்பிப்பமா?” அவள் நெற்றியோடு நெற்றி முட்டி வினவினான்.

என்ன கேள்வி இது? அவள் விலக முயல அவன் விடவில்லை. அவள் இடையைத் தன்னுடன் சேர்த்து வளைத்து, “இப்பவும் உனக்கு அந்தப் பயம் இருக்கா?” என்றான்.

அவள் பதில் சொல்லும் முதலே, “ப்ளீஸ் அன்பா, ஓம் எண்டு சொல்லிப்போடாத. இனி எப்பவும் உன்ன விடமாட்டன். அதுக்காக அக்காவையும் என்னால விடேலாது. இந்த விசயத்தில மட்டும் நீ சமாளிச்சுத்தான் போகோணும்.” என்றவனின் உதட்டில் விரல் வைத்துத் தடுத்தாள் அன்பினி.

“அவா என்னை எப்பிடிப் பாக்கிறா எண்டு எனக்குத் தெரியாது அபய். ஆனா அவா எனக்கு அண்ணி. தளிர் என்ர மருமகள். என்னாலயும் அவேய விடேலாது. நீங்க அண்ணிட்ட எனக்காகக் கதைக்கோணும் எண்டு நான் எதிர்பாக்கவே இல்ல. எனக்காக நீங்க இருக்கிறீங்க, என்னை நடந்தாலும் என்ன விடமாட்டீங்க எண்டுற நம்பிக்கையை மட்டும் தாங்க, போதும்.” என்றாள் விழிகள் கலங்க.

அவன் விழிகளும் இலேசாய்ப் பனித்தன. பேசாமல் அவள் நெற்றியோடு நெற்றியை முட்டி விழிகளை மூடினான். உள்ளத்தில் மட்டும் பெரும் துடிப்பு. அவள் உள்ளம் எத்தனை அழகானது. அதைப் போய்க் காயப்படுத்தினானே!

ஒரு பெருமூச்சுடன் நிமிர்ந்து தன் ஜீன்ஸ் பொக்கெட்டினுள் இருந்த செயினை வெளியே எடுத்தான். அவள் விழிகளையே பார்த்து, “உண்மையான தாலி கட்டேக்க கூட என்ர மனதில பாரம்தான் இருந்தது. ஆனா இந்தச் செயினை போட்டுவிட்ட அண்டைக்கா இருந்தாலும் சரிதான் இண்டைக்கா இருந்தாலும் சரிதான், நெஞ்சு முழுக்க உன்ர அன்பால நிறைஞ்சு இருக்கு அன்பா. இனி உன்னை அழவைக்கிற மாதிரி நடக்கவே மாட்டன்!” என்றபடி மீண்டும் அவள் கழுத்தில் அணிவித்துவிட்டான் அவன்.

சின்ன விம்மல் ஒன்று வெடிக்க அவன் மார்பில் சாய்ந்தாள் அன்பினி. அந்தச் செயினை அவள் இலகுவாய்க் கழற்றவில்லை. கழற்றிய பிறகும் அது இல்லாமல் வாழ்வது அவளுக்கு இலகுவாய் இல்லை. இதோ இப்போதுதான் என்னவோ மனதின் இண்டு இடுக்கு எல்லாம் நிறைந்த உணர்வு.

அந்த உணர்வு தந்த உந்துதலில் கண்ணீரும் சிரிப்புமாக எம்பி, அவன் உதட்டில் தன் உதடுகளை ஒற்றி எடுத்தாள். மென் சிரிப்புடன் அவளை அள்ளிக்கொண்டான் அவன். கட்டில் அவர்களை ஏந்திக்கொண்டது.

தொடரும் . ..

ரெண்டு அத்தியாயம் . ரெண்டும் இந்தமுறை கவி(கவி தில்லை ) சிஸ்க்கு பரிசளிக்கிறேன் . அவாதான் ஒரு விசயம் கேட்டவா :ROFLMAO::ROFLMAO::ROFLMAO:

எப்பவும் போல வார இறுதியை கொண்டாடிட்டு திங்கள் சந்திப்போம்.

முக்கியமான விசயம் திருப்பி வாசிக்கவே இல்ல . ஏதாவது பிழையா இருந்தா கொஞ்சம் சமாளிங்க . இப்பவே ரெண்டரை நேரம் காலை . அஞ்சு மணிக்கு நன் திரும்ப எழும்பி மகளைக் கூட்டிக்கொண்டு போகோணும் :cry:
 
Last edited:

நிதனிபிரபு

Administrator
Staff member
அத்தியாயம் 46


வெற்று மேலுடன் முதுகுக்கு ஒரு தலையணையைக் கொடுத்து அபயன் கட்டிலில் சாய்ந்திருந்தான். அவன் அணைப்பில் அடங்கி, அவன் நெஞ்சில் தலை வைத்துப் படுத்திருந்த அன்பினி, களைப்புடன் விழிகளை மூடியிருந்தாள். அன்பினியின் தோள் வரையிலும் போர்வை அவர்களை மூடியிருந்தது.

சுகமான அயர்ச்சி இருவரையும் ஆக்கிரமித்திருந்தது. இருவரின் உள்ளங்களும் நிறைந்து தளும்பிக்கொண்டிருந்தன. எதையும் பேசவோ சொல்லவோ வேண்டும் போலில்லை. ஒருவர் மற்றவரின் அணைப்பிலேயே சுகம் கண்டுகொண்டிருந்தனர்.

அபயன் குனிந்து அவள் முகம் பார்த்தான். அவன் அசைவில் அன்பினியும் இலேசாகத் தலையை நிமிர்த்தி அவனைப் பார்த்தாள். உதட்டில் குறும்புச் சிரிப்பு ஒன்று அரும்பக் கண்ணைச் சிமிட்டினான் அபயன். அவ்வளவு நேரமாக இல்லாத வெட்கம் அப்போது வந்துவிட, அவன் கையில் ஒரு அடியைப் போட்டுவிட்டு அவன் நெஞ்சில் முகத்தைப் புதைத்துக்கொண்டாள் அன்பினி.

அவன் சந்தோசமாக நகைத்தபடி அவளை இன்னும் இறுக்கமாகக் கட்டிக்கொண்டான்.

அவர்களைச் சுற்றி இருப்பது கனத்த சூழ்நிலை. இன்னும் எதுவும் சரியாகவே இல்லை. இனியும் அவன் கொழும்பிலும் அவள் யாழ்ப்பாணத்திலும் என்றுதான் அவர்களின் நாள்கள் நகரப்போகின்றன. அவன் தமக்கைக்கு ஒரு விடிவு பிறக்கவில்லை. இத்தனைக்கு மத்தியிலும் நடந்தேறிய தாம்பத்யம், ஒருவர் மீதான மற்றவரின் பிரியத்தை மிக அழகாய்ச் சொல்லி, ஒருவரை மற்றவருக்கு எவ்வளவுக்குப் பிடிக்கும் என்றும் காட்டிக்கொடுத்திருந்தது. உள்ளத்தாலும் உணர்வுகளாலும் இன்னுமே நெருங்கியிருந்தனர்.

அந்த உணர்வு தந்த தித்திப்புடன் அவளைக் கட்டிலில் சரித்து, அவள் உதட்டில் ஆழ்ந்து முத்தமிட்டுவிட்டு, அவள் முகம் பார்த்தான் அபயன். சின்ன வெட்கச் சிரிப்புடன் பார்வையைத் தழைத்தபடி அவன் முகத்தைப் பற்றித் திருப்பினாள் அன்பினி. முறுவலுடன் அவள் அணிந்திருந்த செயினுக்கு முத்தமிட்டான் அவன். அவள் தொண்டை உணர்வுகளின் பேரலையில் ஏறி இறங்கியது. அதைக் கவனித்தவன் அந்தக் கழுத்து வளைவில் முகம் புதைத்தான்.

அவனுக்கு அவள் தரும் இந்த மயக்கத்திலிருந்து மீளவே விருப்பமில்லை. இத்தனை நாள்களாய் ஓடிய ஓட்டத்துக்கெல்லாம் ஓய்வு கிடைத்ததுபோலொரு உணர்வு. நீர்ப்பரப்பில் மிதக்கும் தக்கையைப் போல் உடல் பாரமற்றிருக்க, உள்ளம் அதற்கு இணையான சுகத்தில் திளைத்தது.

அவள் நிலையும் அதேதான். அவளை அவன் ஏதேதோ செய்தான். சுக மயக்கத்தில் ஆழ்த்தினான். அவன் இழுவைக்கு வளைந்துகொடுக்கும் பதுமையாக்கினான். அவளால் தெளிவாய்ச் சிந்திக்க முடியவில்லை. அவன் மீதான கிறக்கத்திலேயே பிடித்து வைத்திருந்தான். இப்போதும் அவன் நெருக்கத்துக்கு இசைகிறவளாக அவனிடம் தன்னைக் கொடுத்துவிட்டு அவன் பிடறிக் கேசம் கோதினாள்.

அவளின் செய்கை அவனை இன்னுமே கிறங்க வைத்தது போலும். தன்னுள்ளேயே அவளைப் புதைத்துக்கொள்கிறவன் போன்று இறுக்கி அணைத்தபடி, “பிடிச்சிருந்ததா?” என்றான் கிசுகிசுப்பாய்.

அன்பினிக்கு நொடியில் உடல் முழுவதும் சிவந்தது. அவன் பிடறியிலேயே ஒரு அடியைப் போட்டாள்.

உடல் சிரிப்பில் குலுங்க, “கேக்கோணும்தானே.” என்றான் அப்போதும்.

“இல்லை எண்டா என்ன செய்வீங்க?” குரலில் சிரிப்பைக் கட்டாதிருக்க முயன்றபடி முணுமுணுத்தாள்.

“இன்னும் சிறப்பா உழைப்பன்!”

“கடவுளே! உழைச்சதே போதும். ஆளை விடுங்க!” என்று அவனைத் தள்ளிவிட்டு எழுந்துகொண்டாள் அன்பினி.

இப்போது வெளியே தலைகாட்ட வெட்கினாள் அன்பினி. அம்மாவின் முகத்தில் எப்படி விழிப்பது என்று யோசித்தாள். அவளையே பார்த்திருந்தவனின் உதட்டில் விசமச் சிரிப்பு. “நானும் வரவா?” என்றான் வேண்டுமென்று. “பெருசா ஒண்டும் நடக்கேல்ல எண்டு நானே மாமிட்ட சொல்லுறன்!”

“எப்பிடி? கொழும்புக்கு நான் வந்ததைச் சொல்லாதீங்கோ எண்டு சொன்னதைக் கேட்டுச் சொல்லாம இருந்தீங்களே, அப்பிடியா? இதில கதைக்கிறது முழுக்க வெக்கம் கெட்ட கதை!” என்று அவன் கழற்றி போட்டிருந்த அவனுடைய டீ சேர்ட்டையே எடுத்து, அவனுக்கு அடித்துவிட்டுப் போனாள் அன்பினி.

சிரித்தபடி புரண்டு படுத்தவனுக்கு உள்ளத்தின் மயக்கம் தீருவதாய் இல்லை. யாழ்ப்பாணத்தில் வைத்து அவள் கேட்டது அவனை மிக ஆழமாய்க் காயப்படுத்தியிருந்தது. கூடவே அவள் அவனுக்குக் கைப்பேசியில் அழைக்காமல் இருந்ததற்குச் சொன்ன காரணம் அவனைச் சில்லுச் சில்லாய் நொறுக்கித்தான் போட்டது.

என்னால் உன்னைப் பழையபடி நம்ப முடியவில்லை என்று கண்ணீருடன் சொன்னவளைத் தனிமை கிடைத்தபோதும் அவனால் நெருங்க முடியவில்லை. அவன் மீது நம்பிக்கை இல்லை என்கிறவளின் பக்கத்தில் எப்படிப் போவது? அதுவே, கொழும்பிலிருந்து முல்லைத்தீவு வரையிலான பயணத்தில் அவனருகில் இருப்பதே போதும் என்பதுபோல் அமைதியாய் வந்தவள் அவன் காயங்களை ஆற்றியிருந்தாள்.

அவன் மீது நம்பிக்கையும் பிரியமும் இல்லாமல் பெற்றவர்களுக்கே சொல்லாமல் கொழும்புவரை தேடி வருவாளா என்ன?

எல்லாவற்றையும் விட அவளின் இந்த அறை அவனுக்குள் மிகப்பெரிய மாயத்தைச் செய்திருந்தது. உள்ளே வந்ததும் இடைப்பட்ட நாள்களில் நடந்தவை எல்லாம் மறக்க, அன்றைய அந்த ஒரு நாள் மட்டுமே அவனுள் மையம் கொண்டிருந்ததில் மையலோடு அவளை அள்ளிக்கொண்டான்.

அவளின் வெட்கங்களும் அதை அவன் தாண்டிய விதங்களும் அதன் பிறகான அவளின் இசைவுகளும் மனக்கண்ணில் வந்துபோக, தலையணையை இறுக்கி அணைத்தபடி புரண்டவன் கண்டது, குளித்துவிட்டுப் புது மலராய் வாசம் வீசியபடி வந்தவளைத்தான்.

விழிகளால் அவளையே வருடினான்.

அவன் பார்வை தந்த தடுமாற்றத்துடன் அலமாரியைக் கிண்டியவளைப் பின்னிருந்து அணைத்தான். அவள் எதிர்பார்த்ததுதான். மனம் நிறைய அவன் மார்பில் சாய்ந்து, தலை திருப்பி அவனைப் பார்த்தாள். அவள் முகத்தையே பார்த்தவன் என்ன உணர்ந்தானோ, “என்னடா?” என்றபடி அவள் விழிகள் இரண்டிலும் உதடுகளைப் பதித்தெடுத்தான்.

“நீங்க வெளிக்கிடோணும்தானே?”

“ம்!” என்றான் ஒரு பெரிய மூச்சுடன்.

“உடுப்பு வேண்டாமா?”

அவன் அணிந்து வந்தவற்றைத் திரும்பிப் பார்த்தான். அவை தரையில் கிடந்தன.
 

நிதனிபிரபு

Administrator
Staff member
“என்னட்ட வேற இருக்கு.” அவனைப் பாராமல் சொல்லியபடி எடுத்துக்கொடுத்தாள்.

“எப்ப இதெல்லாம் எடுத்தனி?” வாங்கிப் பார்த்தபடி வினவியவனிடம் மெல்லிய வியப்பு.

“போன உங்கட பிறந்தநாளுக்கு.”

இன்பமாய் அதிர்ந்தவன் அவளை முறைத்தான். “இதையெல்லாம் வாங்கி வச்சிட்டாடி என்னைப் பைத்தியக்காரனாக்கினனி?” என்றதும் அவளுக்குச் சிரிப்பு வந்தது.

“பேந்து(பின்ன), உங்களை அவ்வளவு ஈஸியா மன்னிக்கோணுமோ? இதுக்க ‘பிறந்தநாள் வாழ்த்துச் சொல்லு அன்பா’வாம்.” என்று, அன்று அவன் சொன்னதைப் போலவே அவள் கண்களை உருட்டிப் பிரட்டிச் சொல்லிக் காட்டவும் அவளை முறைக்க முடியாமல் சிரிக்கத் தொடங்கினான் அவன்.

அவன் தயாராகி வந்தபோது அன்னை ஊற்றித் தந்த தேநீரும் பலகாரமும் கொண்டுவந்தாள் அன்பினி.

“பிரெஷ்ஷா?” என்றான் கண்கள் சிரிப்பில் பளபளக்க.

“இல்ல, கழுவாத பிளாஸ்க்ல இருந்தது.”

“இப்ப நீ எதத் தந்தாலும் குடிக்கிற நிலமைலதான் இருக்கிறன்.” என்றவன் அவளிடமிருந்து சந்தோசமாகச் சில பல அடிகளை வாங்கிக்கொண்டான்.

அவளை இழுத்துத் தன் மடியில் அமர்த்திக்கொண்டு தேநீரைப் பருகினான். அடிக்கடி அவள் கழுத்தில் தொங்கும் செயினில் முத்தமிட்டான். அவளுக்கும் அந்தச் செயினுக்குமான பந்தத்தை விடவும் அவனுக்கும் அந்தச் செயினுக்குமான பந்தம் மிக நெருக்கமைய இருப்பது போலிருக்க, “இதப் போட்டதும் காணும், நீங்க என்னைப் படுத்திற பாடும் காணும்!” என்றாள் அவள் பொய் முறைப்புடன்.

உதட்டோரம் மெல்லிய முறுவல் அரும்பினாலும், “உனக்குத் தெரியா அன்பா. இத எங்கட வீட்டு வாசலில கண்ட நேரம் எனக்கு என்னவோ நீயே அந்த இடத்தில அநாதரவாக் கிடந்த மாதிரி இருந்தது. உன்ன நம்பி வந்தவளை தெருவுல விட்டுட்டியேடா எண்டு என்னால நித்திரையே கொல்லேலாமப் போச்சு. அக்காவுக்காக ஆரோ ஒருத்தியக் கட்ட ஓம் எண்டு சொல்லி, உன்னையும் இப்பிடி விட்டு, ஆருக்கடா நீ உண்மையா இருக்கப் போறாய் எண்டு அந்த நேரம் எனக்கு நெஞ்சு வெடிக்காம இருந்ததே பெரிய விசயம். அந்தக் கலியாணம் நிண்டதும் அவ்வளவு சந்தோசம்.” என்றான் அன்றைய நினைவுகளை மீட்டியபடி.

அந்தத் திருமணம் நிற்காமல் இருந்திருந்தால்… மேலே யோசிக்கப் பிடிக்காமல் அவன் மடியில் அமர்ந்திருந்தவள் அவன் கழுத்தைக் கட்டிக்கொண்டு அவன் நெற்றியில் அழுத்தி முத்தமிட்டாள்.

“சொறியடி அன்பா!” என்றான் அவன் உண்மையான தவிப்புடன்.

அவள் உள்ளம் கரைந்தே போயிற்று. “பரவாயில்ல விடுங்க. அதெல்லாம் முடிஞ்சு போச்சு. இனிக் காலம் முழுக்க இந்த அபாயமானவன் எனக்குத்தான்.” அவன் கண்கள் இரண்டிலும் முத்தமிட்டுச் சொன்னவள் உதட்டில் சின்னதாய்ச் சிரிப்பு.

“நான் அபாயமானவனாடி?” மீசைக்குள் சிரிப்பை மறைத்தபடி முறைத்தான் அவன்.

“அபாயம் மட்டுமில்ல ஆபத்தானவனும்.”

“அந்தளவுக்கு உன்ன என்ன செய்தனான்? நல்ல பிள்ளையாத்தானே இருக்கிறன்.” அவன் கைகள் எல்லை தாண்ட ஆரம்பித்தன. அன்பினியின் முகம் சிவந்தது. “அபய்!” அவள் எழுந்துகொள்ள முயல அவன் விடவில்லை.

“உங்களை. இதெல்லாம் நல்ல பிள்ளை செய்ற வேலையா?”

“உன்னட்டத்தானே!”

அதற்கென்று என்னவெல்லாம் செய்கிறான்? கடைசியில் அவனையே இறுக்கிக் கட்டிக்கொண்டு அவனிடமிருந்து தன்னைக் காத்துக்கொள்ள முயன்றாள் அவள். சந்தோசமாய்ச் சிரித்தபடி அவளோடு சேர்ந்து கட்டிலில் விழுந்தான் அபயன்.

என்னவோ அவளுக்கு அவனை விட்டு விலக மனமேயில்லை. அப்படியே அவன் மார்பில் தலை சாய்த்துப் படுத்துக்கொள்ள அவனும் தன் சேட்டைகளை விட்டுவிட்டு அவளைத் தன் அணைப்பில் வைத்திருந்தபடி அவள் தலையை வருடிக்கொடுத்தான்.

உண்மையில் இன்றைய நாள் மனத்தளவில் அவர்களுக்குத் தரும் இந்த நெருக்கத்தை இதுவரையில் எந்த ஒரு நாளும் தந்ததேயில்லை. இன்றுதான் திருமணம் நடந்து, அனைத்தும் அரங்கேறிய உணர்வு.

“நேரமாச்சு அன்பா.” இதற்குமேல் தாமதிக்க முடியாது எனும் நிலையில் மனமே இல்லாமல் சொன்னான்.

அவளுக்கு நெஞ்சடைக்கும் உணர்வு. காட்டிக்கொள்ளாமல் மெல்ல எழுந்து, அவர்கள் அருந்தி முடித்திருந்த தேநீர்க் கோப்பைகளை எடுத்துக்கொண்டு நடந்தாள்.

அங்கே சமையலறையில் மும்முரமாக வேலை பார்த்துக்கொண்டிருந்த இந்துமதி, அவளைத் திரும்பிப் பார்த்துவிட்டு, “பால்ப் புட்டுச் செய்றன் பிள்ளை. தம்பிய சாப்பிடச் சொல்லுங்கோ.” என்று சொன்னார்.

“இல்லை அம்மா. அவர் போப்போறாராம்.”

மகளின் மெல்லிய முகச் சிவப்பும், தன் பார்வையை அவள் தவிர்க்கும் விதமும் பல செய்திகளைச் சொல்ல, தானும் சத்தமில்லாமல் சந்தோசப்பட்டுக்கொண்டார் இந்துமதி. உள்ளத்தில் ஒரு நிறைவு. மகள் வாழ்க்கை எந்தக் குறையுமில்லாது தழைத்துவிட வேண்டும் என்று அவர் உள்ளம் வேண்டிற்று.

அவள் அறைக்குள் மீண்டும் வந்தபோது, கைப்பேசியைப் பார்த்துக்கொண்டிருந்தவன் நிமிர்ந்து, “அக்கா ரெண்டு தரம் எடுத்திருக்கிறா.” என்று தகவல் சொன்னான். “நீ நாளைக்குப் பின்னேரம்தானே வெளிக்கிடுறாய்?”

அவள் ஆம் என்று தலையசைத்தாள். அவள் செலவுக்குப் பணம் எடுத்துக் கொடுத்தான். “எனக்கு வரேலுமோ தெரியா அன்பா. பஸ்ஸில போயிடுவாய் தானே?” அவனுக்குத் தானும் அங்கு நிற்கையில் அவளை அப்படித் தனியாகப் போ என்று சொல்வது கஷ்டமாய் இருந்தது.

“போறதுக்கு என்ன? நீங்க என்னைப் பற்றி யோசிக்காமப் போயிட்டு வாங்க.” இன்முகமாய்ச் சொன்னவளையே பார்த்தான்.

அவன் என்ன சொன்னாலும் கேட்டுக்கொண்டு, என்ன செய்தாலும் அனுசரித்துப் போகிறவளை இப்படிப் பிரிந்து வாழும் நிலையை அறவே வெறுத்தான்.

அவனுக்கே இப்படி என்றால் அவள் நிலை? ஆனாலும் சின்னதாகவேனும் முக வாட்டத்தைக் காட்டவில்லை. அவள் முகம் நிமிர்த்தி உச்சியில் முத்தமிட்டான்.

நெஞ்சை அடைத்துக்கொண்டு வந்தது அவளுக்கு. அதே நேரம் அவன் மனதும் புரிந்தது. அவன் கண்களையே பார்த்து, “இந்த நிமிசம் என்ர மனதில எந்தக் குறையும் இல்ல அபய். நான் சந்தோசமா இருக்கிறன். இன்னும் சொல்லப்போனா என்ர வாழ்க்கை இவ்வளவு சந்தோசமா மாறும் எண்டு நினைக்கவே இல்ல. அதால எதையும் யோசிக்காம நீங்க வெளிக்கிடுங்க.” என்றாள்.

அவள் முகம் தாங்கி நெற்றி முட்டி, “கோவமா, அங்க வராத எண்டு சொல்லிப்போட்டு இங்க வச்சு இப்பிடி…” என்றவனை மேலே பேச விடாது தன் விரல்களால் அவன் வாயை மூடினாள் அன்பினி.

“ரெண்டு பெரின்ர முழு விருப்பத்தோடயும் நடந்த ஒண்டு. இண்டைக்குத்தான் இவ்வளவு நாளும் கிடைக்காத ஒரு நிறைவு, திருப்தி, நம்பிக்கை எல்லாம் எனக்குக் கிடைச்சிருக்கு அபய். இன்னுமின்னும் நீங்க என்னட்ட நெருங்கி வந்திட்ட மாதிரி ஒரு பீல். அதை எப்பிடியாவும் கதைக்காதீங்க, ப்ளீஸ்!” என்றாள் கெஞ்சலாக.

அவன் உதட்டில் நிறைவான ஒரு முறுவல். “எனக்கும் அப்பிடித்தான் அன்பா. மனம் முழுக்க நிறைஞ்சு கிடக்கு. என்னவோ இனி என்ன வந்தாலும் சமாளிக்கலாம் மாதிரி.” என்று சொன்னவன் அதன் பிறகு தாமதிக்கவில்லை. புறப்பட்டிருந்தான்.

தொடரும் . ..

ரெண்டு எபி போடுவம் எண்டுதான் இருந்தேன் . உங்க எல்லோரின் ஆர்வம் பாத்து இத இப்பவே போட்டுட்டேன் . முடிந்தால் இரவுக்கு இன்னுமொன்று போடுறேன் . இல்லையா நாளைக்குப் பகல் வரும் .

இந்த எபில பாதி கவி சிஸ்க்கு. மீதிப் பாதி என்ர பேத்திக்கு . அடிபடாம சாப்பிடுங்க . சொறி , வாசிங்க:p .
 

நிதனிபிரபு

Administrator
Staff member
அத்தியாயம் 47


“என்னடா திடீர் எண்டு வந்து நிக்கிறாய்?” அவனைக் கண்டதும் ஆச்சரியமாய் வினவினாள் சுபாங்கி.

ஒரு கணம் வேறு ஏதாவது சொல்வோமா என்று யோசித்தாலும் மறைக்கப் பிடிக்கவில்லை அபயனுக்கு. அதில், “அன்பா கொழும்புக்கு வந்தவள். அதான் அவளைக் கொண்டுவந்து விட்டுட்டு வாறன்.” என்றான்.

“ஓ!” அவள் முகம் மாறியது. “அதுக்கு ஏன் நீ நான் கோல் பண்ணின நேரம் எடுக்கேல்ல?”

காரணத்தைச் சொல்ல முடியாத் தடுமாற்றத்துடன் அவன் நிற்க, “மனுசியக் கண்டதும் அக்காவையும் அக்கான்ர பிள்ளையையும் மறந்தாச்சு என்னடா? இல்ல, அவள் சொன்னவளோ எடுக்கக் கூடாது எண்டு.” என்று சினந்தாள் தமக்கை.

சுள் என்று கோபம் வந்தது அவனுக்கு. ஆனாலும் அடக்கி, “போன் சைலன்ட்ல இருந்தது அக்கா. அதுல நான் கவனிக்கேல்ல.” என்றான் சுருக்கமாக.

“போன் சைலண்ட்ல இருந்தது, ஓப்ல இருந்தது எல்லாம் போதும் போதும் எண்டுற அளவுக்கு நான் கேட்டுட்டனடா. புதுசா நீயும் சொல்லாத!” என்றதும் அவனுக்கு முகம் கறுத்தது. யாரை யாருடன் ஒப்பிடுகிறாள்? கேட்டுச் சண்டை பிடிக்க விருப்பமில்லாமல் வாயை இறுக்கி மூடிக்கொண்டு அமர்ந்திருந்தான்.

சுபாங்கிக்கு பொறுக்க முடியவில்லை. தளிர் மாமனோடு தினமும் கதைக்கும் நேரம் அது. அவளுக்காகத்தான் அழைத்திருந்தாள். கடைசியில் சிணுங்கிய அவளைச் சமாளிக்க, அவளோடு அடுத்த தெருவில் இருக்கும் நண்பியின் வீட்டுக்குச் சென்றிருந்தார் பரமேஸ்வரி. இங்கே அவர்கள் அந்தளவுக்குத் தளிரோடு போராட, அவனானால் அவள் எடுப்பாள் என்பதைக்கூட மறந்து இருந்திருக்கிறான்.

“நீ அவளைக் கட்டின நேரமே இதையெல்லாம் நான் எதிர்பாத்திருக்கோணும் அபய். என்ன இருந்தாலும் என்ர தம்பி என்னை விட்டாலும் என்ர பிள்ளையை விடமாட்டான் எண்டு நினைச்சன். கடைசில…” என்றவள், “பெத்த அப்பனே அவளைப் பற்றி யோசிக்கேல்ல. இதுல உன்னில கோவப்பட எனக்கு என்ன உரிமை இருக்கு?” என்று விரக்தியுடன் சொல்லிவிட்டு உள்ளே நடக்க, ஒரு கணம் அப்படியே அமர்ந்துவிட்டான் அபயன். உள்ளே சுருக்கென்று ஒரு வலி அடி நெஞ்சுவரை பாய்ந்தது. மனைவியோடு சிறிது நேரம் செலவழித்துவிட்டான். அதற்கு என்னவெல்லாம் சொல்கிறாள் அவன் தமக்கை?

அடுத்த நொடியே வேகமாய் எழுந்து சென்று அவளைத் தடுத்து நிறுத்தினான். “நீங்க கதைக்கிறது உங்களுக்கே நியாயமா இருக்கா அக்கா? அப்போத அவனோட என்னை ஒப்பிடுறீங்க. இப்ப இப்பிடிச் சொல்லுறீங்க. ஏன் இப்பிடி எல்லாம் கதைக்கிறீங்க? அதென்ன உங்கள விட்டாலும்? எப்ப அப்பிடி விட்டனான்? அவளுக்கும் எனக்கும் சின்ன சண்டை. அதால என்னைச் சமாதானம் செய்யத் தனியாக் கொழும்புக்கு வந்தவள். அவளைத் தனியாத் திருப்பி அனுப்ப விருப்பமில்லாமக் கூட்டிக்கொண்டு வந்தனான். இதில ஃபோன் உண்மையாவே சைலண்ட்லதான் இருந்தது. அதிலதான் நான் கவனிக்கேல்ல. ஆனாலும் சொறி. தளிர் தேடுவா எண்டுற நினைவு எனக்கு இருந்திருக்கோணும். அதுக்காக என்னையும் அவளையும் இப்பிடி எல்லாம் கதைப்பீங்களா?” என்றான் அடக்கப்பட்ட சினத்துடன்.

“ஓ! உனக்கு அவளச் சொன்னதும் கோவம் வருது.”

மூச்சை இழுத்துவிட்டான் அவன். “அவள் என்ர மனுசி அக்கா. நியாயம் இல்லாமக் குறை சொல்லக் கூடாது தானே! அவளை எப்ப நீங்க என்ர மனுசியா மட்டும் பாக்கப் போறீங்க?” என்றான் தன்மையான குரலில்.

அவளுக்கு உள்ளே வலித்தது. அவளோடு கூடப்பிறந்தவன் தன் மனைவிக்காக அவளோடு மல்லுக்கு நிற்கிறான். ஆனால், அவளைக் கட்டியவன்? அவளுக்குப் பேச முடியாமல் போக. “நீ விடு!” என்று அவன் முகம் பாராமல் அவனிடமிருந்து கையை விடுவித்துக்கொண்டு போக முயன்றாள்.

அபயன் விடவில்லை. மீண்டும் அவளை இழுத்துவந்து இருக்கையில் இருத்தித் தானும் அமர்ந்தான். “தகுதியே இல்லாத ஒருத்தனுக்காக உங்களைச் சுத்தி இருக்கிற எல்லாரையும் விளங்கிக்கொள்ளவே மாட்டன் எண்டு நிக்கிறது சரியா அக்கா?” என்றான் நிதானமாய்.

“நான் என்னடா பிழை செய்தனான்? நீங்க எல்லாரும்தான் என்ர மனம் படுற பாடு தெரியாம என்னைக் காயப்படுத்துறீங்க.” சட்டென்று தொற்றிக்கொண்ட சினத்துடன் சீறினாள் அவள்.

“நீங்க எந்தப் பிழையும் செய்யேல்ல. இனியும் செய்திடாதீங்க எண்டுதான் சொல்லுறன்.”

“நடிக்காத நீ!” என்று முகம் திருப்பினாள் அவள்.

அவன் விடவில்லை. அவள் தாடையைப் பற்றித் திருப்பி, “நான் ஏன் நடிக்கோணும்? அதுவும் என்ர அக்காட்ட? ஒற்றைக்கு ஒற்றை வாங்க எண்டு சண்டைக்கு நிண்டாலும் நிப்பனே தவிர நடிக்கமாட்டன்!” என்றவனின் பேச்சில் மெல்லிய சிரிப்பு அரும்பிற்று அவளுக்கு.

உண்மையில் அவன் அப்படித்தான். அதை ஒத்துக்கொள்ள விரும்பாமல், “இதுதான்டா நடிப்பு!” என்றாள் அப்போதும்.

அவன் உதட்டிலும் சின்ன முறுவல். அதே இதத்துடன், “அன்பா என்னக்கா பிழை செய்தவள்? அவளில ஏன் உங்களுக்கு இவ்வளவு வெறுப்பு?” என்று வினவினான்.

“அவளைப் பற்றி என்னட்டக் கதைக்காத அபய்!” உடனேயே அவள் முகம் மாறிப்போனது.

“எப்பிடி அக்கா கதைக்காம இருக்கிறது? கட்டாயம் கதைக்கோணும். அவள் என்ர மனுசி. நீங்களும் அவளும் காலத்துக்கும் ஒருத்தருக்கு ஒருத்தர் துணையா இருக்கோணும் எண்டு நான் ஆசைப்படுறன்.”

“அது நடக்காது!”

“ஏன் நடக்காது?” அவன் புருவங்கள் சுருங்கின.

“அவள் அவன்ர தங்கச்சி.”

“அது அவளின்ர பிழையா? நீங்களும்தான் அவன்ர மனுசி.”

“டேய்! தேவை இல்லாமக் கதைச்சியோ அறைஞ்சு விட்டுடுவன்!” என்று கையை ஓங்கினாள் அவள்.

அவன் அசரவில்லை. “நீங்க என்னை அடிச்சாலும் அதுதான் உண்மை. தளிரும் அவன்ர மகள்தான்.” என்று விடாமல் சொன்னான்.

நொடியில் சினத்தில் சிவந்துபோனது அவள் முகம். “வாய மூடு அபய்! எனக்கு எரிச்சலைக் கிளப்பாத. தளிர் என்ர பிள்ளை மட்டும்தான்.” என்றாள் அழுத்தம் திருத்தமாய்.

“அது உங்கட நினைப்பு. உண்மை அது இல்ல.”

“என்னடா உண்மை அது இல்ல? சொல்லு அவள் என்ர பிள்ளை இல்லையா? சொல்லு!” அவளுக்குக் கோபத்தில் குரல் நடுங்க ஆரம்பித்தது.

“உங்கட பிள்ளை மட்டும் இல்லை.”

அவள் உதட்டில் ஆத்திரச் சிரிப்பொன்று வந்து போனது. “இதுதான்டா நீ. நீ மாறிட்டாய் எண்டு சொன்னா இல்லை எண்டு சொல்லுவியே, இப்ப பாத்தியா அப்பிடியே அந்தப் பக்கம் சாஞ்சிட்டாய்.”

“சாஞ்சு அப்பிடி என்ன செய்திட்டன்?” உள்ளே வலித்தாலும் அவளைப் போல் நிதானத்தை இழக்காமல் வினவினான்.

“இன்னும் என்னடா செய்யோணும். விட்டா நீயே தளிரத் தூக்கி அவனிட்டக் குடுப்ப போல.”

“நான் இல்ல உங்களச் சுத்தி இருக்கிற ஆருமே தளிரை அவனிட்டக் குடுக்க மாட்டம். ஆனா, அவன் சட்டப்படி போனா அது கட்டாயம் நடக்கும். நீங்க அதுக்கும் தயாரா இருக்கோணும். அப்பிடி அவன் போகாம இருக்கிறதுக்கு அன்பாவும் மாமாவும்தான் காரணம். இதையும் விளங்கிக்கொள்ளுங்க. அதை ஏன் அவே செய்யினம் எண்டும் யோசிங்க.” என்றவனை நம்ப முடியாமல் வெறித்தாள் தமக்கை.

“எப்பிடியடா இப்பிடி எல்லாம் கதைக்கிறாய்? எப்பிடி மனம் வந்தது உனக்கு? அவள் உனக்கு மனுசியா இருக்கலாம். அதுக்காக நான் உன்ர அக்கா எண்டுறதையுமா மறக்க வச்சிட்டாள்.” என்றதும் விழிகளை இறுக்கி மூடித் திறந்தான் அபயன்.

அவன் எதைப் பேச வந்தாலும் அவளுக்காக, அவள் வீட்டினருக்காக என்பதிலேயே வந்து நிற்கிறவளுக்கு உனக்காகத்தான் உன்னோடு போராடுகிறேன் என்று எப்படி விளக்குவது என்று தெரியாது நின்றான் அபயன்.

அப்போதுதான் வீட்டுக்குள் வந்தார் குழந்தைவேலு. அவருக்கு அன்று முழுக்க நிறைய அலைச்சல். கடையில் வேறு வேலை செய்கிறவர்கள் சிலபல குளறுபடிகளைச் செய்திருந்தனர். எல்லாவற்றையும் சமாளித்து முடிக்கையில் தலை விண் விண் என்று வலிக்க ஆரம்பித்திருந்தது. இங்கும் வீட்டுக்குள் வகையிலேயே மகளின் குரல் உயர்ந்து ஒலிக்கவும் இன்றைக்கு என்னவோ என்று ஒரு சலிப்பு.

அதற்குத் தகுந்தாற்போல் அவளும் அவரைக் கண்டதும் நேராக அவர் முன்னால் வந்து நின்றாள்.

“இவன்ர கதையக் கேட்டனீங்களாப்பா? அவன் சட்டப்படி கேட்டாத் தளிர நான் குடுக்கோணுமாம். அந்தாள் இவனுக்கு மாமாவாம். எப்பிடி மாறிட்டான் பாத்தீங்களா?” என்றதும், “போதும் பிள்ளை நிப்பாட்டு!” என்று சீறியிருந்தார் குழந்தைவேலு.

அதிர்ந்துபோனாள் சுபாங்கி. இதுவரையில் இப்படி ஒரு குரலை அவர் அவளிடம் பயன்படுத்தியதே இல்லை.

“இதுதான் கடைசித்தரம் நீ அவரை மரியாதை இல்லாமக் கதைக்கிறது. அவருக்கு எத்தின வயசு உனக்கு எத்தின வயசு? என்னைவிட வயசு கூடின மனுசன். அவர் அவனுக்கு மாமாதான். மாமாவை மாமா எண்டு சொல்லாம வேற எப்பிடிச் சொல்லுறது?”

அவளுக்கு அப்போதும் பேச்சு வரவில்லை. தந்தையின் கோபம் அந்தளவில் அதிர வைத்திருந்தது. என்னவோ எல்லோரும் அந்தப் பக்கம் சரிந்துவிட்டது போலிருக்க அவரை வெறித்தபடி நின்றாள்.

அபயனுக்குத் தமக்கையை அப்படிப் பார்க்க முடியவில்லை. இங்கே மாறவேண்டியவள் அவள்தான் என்று புரிந்தாலும் ஒரு அளவுக்குமேல் அவளிடம் கடுமையைக் காட்ட முடியவில்லை. “விடுங்கப்பா!” என்றான் தகப்பனிடம்.
 
Last edited:

நிதனிபிரபு

Administrator
Staff member
அவர் அதைக் கருத்தில் கொள்ளவில்லை. என்றோ ஒருநாள் உடையக் காத்திருந்த பொறுமை இன்று வெடித்திருந்தது. “உனக்கு நடந்தது பெரிய துரோகம்தான். அதுக்காகச் சுத்தி இருக்கிற எல்லாரையும் மோசமா நடத்தக் கூடாது. இனிக் காணும் அழுதது, ஆத்திரப்பட்டது, கத்தினது எல்லாம். மெல்ல மெல்ல வெளில வரப் பாருங்கோ. உங்களை விட்டுட்டுப் போன கழிசடைக்காக உங்களோட இருக்கிற மனுசரை நோகடிக்கிறேல்ல. நீங்களும் நிம்மதியா வாழ்ந்து எங்களையும் நிம்மதியா இருக்க விடோணும் பிள்ளை!” என்றார் பொறுமையை இழுத்துப் பிடித்த குரலில்.

அவள் விழிகள் வேதனையில் அகன்றன. அவர்களின் நிம்மதியை அவள் பறிக்கிறாளா? நெஞ்சு வெடித்துக்கொண்டு அழுகை வர, விருட்டென்று சென்று அறைக்குள் புகுந்துகொண்டாள்.

“என்னப்பா நீங்க. நானே தேவையில்லாமக் கதைச்சிட்டனோ எண்டு இருக்க நீங்களும்…” என்றவன் நடந்ததைப் பகிர்ந்துகொண்டான்.

அவருக்கும் மகள் கண்ணீருடன் போனது வலிக்காமல் இல்லை. உடலும் மனமும் தொய்ந்துவிட அங்கேயே தளர்ந்து அமர்ந்தார். “நீ கதைச்சதில ஒரு பிழையும் இல்ல அப்பு. அந்தப் பிள்ளையும் இன்னும் எத்தின நாளைக்குத்தான் அங்கேயே இருக்கிறது. இதுக்கு என்னத்துக்கு ஒரு கலியாணம்? அதோட நீ அங்க போனதுதான் சரி. அப்பதான் அவேக்கும் கொஞ்சம் தெம்பா இருக்கும். உடம்பிலயும் மனதிலயும் தெம்பு இருக்கிற வரைக்கும் எதையெதையோ தேடி ஓடுறதிலேயே காலம் ஓடிடும் தம்பி. ஆனா வயதான காலத்தில வாழ ஒரு பிடிப்பு வேணும். அது இல்லாம நிக்கினம். அப்பிடியே விட்டுடாத.” என்றார் மிகுந்த மனவருத்தத்துடன்.

உண்மைதான். அவனைக் கண்டதும் வெளிச்சம் போட்டதுபோல் மலர்ந்த இந்துமதியின் முகமும், ஓடி வந்த திருநாவுக்கரசும் மனக்கண்ணில் வந்து போயினர். தான் இருக்கும் வரையில் அவன் அறைக்குப் போகமாட்டான் என்றுதான் அவர் போனார் என்றும் அவனுக்குத் தெரியும். அதில் தகப்பன் சொன்னதைத் தலையாட்டிக் கேட்டுக்கொண்டான்.

பேத்தியோடு வந்த பரமேஸ்வரிக்கும் நடந்த விடயம் சொல்லப்பட, அவர் பயந்துபோனார். “என்னப்பா இது? அன்பு நிண்டா அவவோட சண்டை எண்டு அன்புவத் தம்பி வர வேண்டாம் எண்டுபோட்டான். இப்ப தம்பிட்டையும் அன்புவைப் பற்றிக் கதைச்சு கதைச்சு அவனையும் வரவிடாமச் செய்யப் போறவா?” என்றார் கணவரிடம்.

தளிரைத் தூக்கிப் போட்டு விளையாடியபடி வந்தவனும் இதைக் கேட்டிருந்தான்.

“புதுசா நீங்க ஒண்ட ஆரம்பிக்காதீங்கம்மா. அப்பிடி எல்லாம் வராம விடுவனா?” என்று அவரை முறைத்தான்.

“உன்ன நான் நம்ப மாட்டன். அண்டைக்கு அன்புவை யாழ்ப்பாணம் விட வேண்டாம் எண்டு சொன்னதுக்கு எவ்வளவு கோவம் வந்தது உனக்கு?” என்று திருப்பிக் கேட்டார் அவர்.

“அது நீங்க கதைச்சது பிழை. அதால கோவப்பட்டன். அதுவும் இதுவும் ஒண்டா?”

“என்னப்பு பிழை? அக்கான்ர வாழ்க்கைல நடந்த மாதிரியே எல்லாம் உனக்கும் நடக்குது. அதைப் பாக்க ஒரு பயம் வராதா? காந்தனை வச்சு அன்புவை யோசிச்சது பிழைதான். ஆனா, நடக்கிறது நடக்கட்டும் எண்டு இருக்கேலுமா சொல்லு? நான் என்ன உன்னை அவவோட வாழாத எண்டா சொன்னனான். எங்க எண்டாலும் ரெண்டுபேரும் ஒண்டா இருந்து, எதையாவது செய்ங்க எண்டுதானே சொன்னனான்.”

அன்றைய அவனது கோபம் அவரை மிகவுமே பாதித்திருக்கிறது என்று விளங்க, அவரருகில் தானும் தளிரோடு அமர்ந்துகொண்டு, “பிழை விடுற எண்ணம் உள்ள ஆக்களுக்கு மனுசனோ மனுசியோ பக்கத்தில இருந்தாலும் ஒண்டுதான் இல்லாட்டியும் ஒண்டுதான். எப்பிடி எங்க இருந்தாலும் வாழ்க்கைல தவறிடக் கூடாது எண்டுற வைராக்கியம் மட்டும்தான் ஆரையும் பிடிச்சு வைக்கும் அம்மா.” என்று பொறுமையாக எடுத்துச் சொன்னான் அவன்.

இதையெல்லாம் அறியாத குழந்தைவேலு மனைவியைக் கண்டிப்புடன் ஒரு பார்வை பார்த்தார். அதில் பரமேஸ்வரி அமைதியானார்.

அபயனும், “நான் தளிரோட வெளில போயிட்டு வாறன் அம்மா.” என்று எழுந்துகொண்டான்.

*****

இங்கே அறைக்குள் இருந்த சுபாங்கிக்கு மனம் புண்ணான நிலை. தான் கேட்டும் அபயனை விரும்புவதைப் பற்றிச் சொல்லாமல், திருமணம் வேண்டாம் என்று நின்றதிலேயே அன்பினி மீதான அதிருப்தி சுபாங்கிக்கு ஆரம்பித்திருந்தது.

பிறகும் அபயன் அவளைப் பற்றி ஒரு வார்த்தை கதைக்க விடாதது, உன் அக்கா என்னைவிட அவள் உனக்கு முக்கியமா என்கிற உரிமையுணர்வை உண்டாக்கியிருந்தது. அப்படியே அவள் ஏதும் சொன்னாலும் சத்தமே இல்லாது கோபத்தை அபயன் காட்டுவதும், முக்கியமாக அவள் காந்தனின் தங்கை என்பதும் சேர அவளால் அன்பினியை அபயனின் மனைவியாய் மட்டுமே நினைக்க முடியவில்லை.

இது எல்லாவற்றையும் விட அபயன் அன்பினியின் திருமணம் அவளின் மகா மோசமான தோல்வியாக மனத்தில் பதிந்துபோனது பெரும் காரணமாயிற்று.

இப்படியே போனால் தம்பி என்னை வெறுத்துவிடுவானோ என்கிற பயம் அடி நெஞ்சில் இருந்தாலும் அவளால் அவளை மாற்றிக்கொள்ள முடியவில்லை.

அபயன் திரும்பி வந்தபோதும் அவள் வெளியில் வந்திருக்கவில்லை. எட்டி அவளின் அறையைப் பார்த்தான். கட்டிலில் படுத்திருந்தாள். வாங்கி வந்திருந்த அவளுக்கு விருப்பமான கொத்துரொட்டிப் பார்சலைத் தளிர் கையில் கொடுத்து, “அம்மாவைச் சாப்பிடச் சொல்லுங்கோ. வேண்டாம் எண்டு சொன்னாலும் விடக் கூடாது. நீங்க வேண்டாம் எண்டு சொன்னாலும் அம்மா விடமாட்டா எல்லா.” என்றதும் வெகு சிரத்தையாய் அவன் சொன்னதைக் கேட்டுக்கொண்டிருந்த அந்தச் சின்ன வண்டும் வெகு வேகமாய்த் தலையாட்டினாள்.

அரும்பிய முறுவலோடு அவள் உச்சியில் முத்தமிட்டான் அபய். “அச்சாக் குட்டி எங்கட செல்லம். அவாக்கு எல்லாம் தெரிஞ்சிருக்கு. அப்பிடியே மாமா பாவம். அவரோட கோவிக்க வேண்டாமாம், மாமா அழுதுகொண்டு இருக்கிறாராம் எண்டும் சொல்லோணும் சரியா?” என்றதும் அவன் எங்கே அழுகிறான் என்று கூர்ந்து பார்த்தாள் தளிர்.

வேகமாய் உமிழ் நீரைத் தொட்டுக் கண்களுக்குக் கீழே கோடிழுத்தான் அவன். செப்பு இதழ்களில் சிரிப்பு அரும்ப, “நானும் அழவா?” என்று அவன் காதுக்குள் வந்து ரகசியமாகக் கேட்டாள் அவள்.

அவ்வளவில் உமிழ் நீரைத் தொட்டுக் கண்ணீர்க் கோடு வரைவதில் ஆர்வம் அவளுக்கு. அவனால் சிரிப்பை அடக்க முடியவில்லை. “உங்கட அம்மா என்னோடதானே சண்டை. அதால நான் மட்டும்தான் அழோணும். ஆனா நீங்க மாமா சொன்னதை எல்லாம் மறக்காமச் சொல்லோணும், சரியா?” என்று சொல்லி அவளை உள்ளே அனுப்பிவிட்டு, விறாந்தையிலேயே அமர்ந்துகொண்டான்.

என்னதான் தமக்கையின் பேச்சுகள் நியாயமில்லை என்று தெரிந்தாலும், அவை அவனைக் காயப்படுத்தியிருந்தாலும் அவளை அப்படியே அவனால் விடமுடியவில்லை. எப்படியாவது அவள் முகத்தில் சிரிப்பை வரவழைத்துவிடவே ஆசைப்பட்டான்.

கொஞ்ச நேரம் தமக்கை முறுக்குவதும், தளிர் விடாமல் அவளைச் சாப்பிட வைப்பதில் முனைப்பாக இருப்பதும் கேட்டுக்கொண்டிருந்தது. அவன் மருமகள் அவனைப் போலத்தான். நினைத்ததை முடிக்கிற ரகம். இன்னும் கொஞ்ச நேரத்தில் தமக்கை சிரிக்கும் சத்தம் கேட்க, அவன் முகத்திலும் அது பரவிப் படர்ந்தது.

“உங்கட மாமா அழுறனாமோ? அவன் சரியான கள்ளன்! கதைக்கிறதை எல்லாம் கதைச்சுப்போட்டுக் கொத்துரொட்டி வாங்கி வந்தா நான் சமாதானம் ஆகிடுவனா?” என்று உள்ளே இருந்து சத்தமாகச் சொன்னாள் அவள்.

“ஓகே ஓகே விளங்கிட்டுது!” என்றுவிட்டு எழுந்துபோன அபயனின் முகத்திலிருந்த சிரிப்பு மறையவில்லை.

இதையெல்லாம் மனம் கனியக் கவனித்துக்கொண்டிருந்த பரமேஸ்வரி மெல்ல மகளின் அறைக்குச் சென்றார்.

“நீங்க இப்ப என்னம்மா சொல்லப் போறீங்க?” அவர் அதற்குத்தான் வந்திருக்கிறார் என்று தெரிந்து, மெல்லிய சினம் தெறிக்க வினவினாள் சுபா.

“உங்களுக்குத் தெரியாத என்னத்தப் பிள்ளை நான் சொல்லப் போறன்?” என்றுவிட்டு, “தளிருக்கு ஏதாவது கெட்டது நினைப்பீங்களாம்மா நீங்க?” என்று கேட்டார் அவர்.

“என்னம்மா கதைக்கிறீங்க? நான் வாழுறதே அவளுக்காகத்தான்.”

“அப்பிடித்தானம்மா நாங்களும். உங்களுக்கு எப்பிடித் தளிரோ அப்பிடித்தான் எங்களுக்கு நீங்க. நீங்க நல்லாருக்கோணும் எண்டுதான் நாங்க ஆசைப்படுறோம். அது விளங்கேல்லையா உங்களுக்கு?”

“எனக்கு அப்பிடி தெரியேல்ல.” பட்டென்று முகத்தைத் திருப்பிக்கொண்டு சொன்னாள்.

“ஏன் எண்டால் நீங்க இன்னுமே உனக்கு நடந்த துரோகத்துக்கையே நிக்கிறீங்க. அது உங்கட மனதையும் உடம்பையும் கெடுக்கிறது உங்களுக்குத் தெரியேல்ல. கொஞ்சம் வெளில வந்து ஒவ்வொரு மனுசரைப் பற்றியும் தனித்தனியா யோசிச்சு பாருங்கோ. அவே உங்களுக்கு என்ன நல்லது செய்தவே, என்ன கெட்டது செய்தவே எண்டு முடிஞ்சா ஒரு பேப்பர்ல எழுதுங்கோ. அப்ப நிறைய விசயம் விளங்கும்.” என்றுவிட்டு அவள் சாப்பிட்டுவிட்டு வைத்த உணவுப் பார்சல் பையை எடுத்துக்கொண்டு நடந்தார்.



தொடரும் . ..

பீல் குட் நாவலான இந்த நாவலை வாசிக்கிற உங்க எல்லாருக்கும் , உங்க குடும்பத்தாருக்கும் , உங்கட தலைமுறைக்கும் இந்த எபிசோடை டெடிகேட் பண்ணுறேன் ஓகேயா ? உங்கட பரம்பரையையே விட்டு வைக்கேல்ல . இனியும் ஆரும் என்னை சொல்லேல்ல , என்ர பிள்ளையை சொல்லேல்ல எண்டு வாறேல்ல.:sneaky:
 
Last edited:

நிதனிபிரபு

Administrator
Staff member
அத்தியாயம் 48


அறைக்குள் வந்த அபயனுக்கு மனைவியின் நினைவு. அதுவும் அவனுடைய மேசை கதிரையைப் பார்த்தபோது, இன்னும் அவள் அதில் ஒரு கையை நீட்டி, தலை வைத்துப் படுத்திருப்பதை போல் இருக்கவும் பின் தலையில் தட்டி, மெல்லச் சிரித்துக்கொண்டான். குளித்து, உடைமாற்றி வந்தவனுக்கு உடலில் மிகுந்த அலுப்பு.

அன்பினியைத் தேடிக்கொண்டு யாழ்ப்பாணம் போன நாளில் இருந்தே அவன் நிம்மதி தொலைந்திருந்தது. அன்றிலிருந்து உறக்கமும் இல்லை. அவள் கொழும்பு வந்த நாளிலிருந்து அவள் சொன்னவை, அவள் பக்கத்தில் இருந்தும் விலகி இருக்கும் நிலை, காதலிக்க ஆரம்பித்த நாள்களில் இருந்தே ஆசைப்பட்டது போன்று வாழ்ந்ததேயில்லை என்கிற எண்ணம் தந்த அலைப்புறுதல், பிறகு கொழும்பிலிருந்து இங்கு வரையிலான பயணம், அதற்கான போதிய ஓய்வு இல்லாதது, தமக்கையோடான வாக்குவாதம், அதனால் உண்டான மனச் சுணக்கங்கள் என்று கடந்த சில நாள்களாக உடலுக்கும் மனத்துக்கும் ஓய்வே இல்லை.

எதைப் பற்றிய சிந்தனையும் இல்லாமல், பிடித்த மாதிரி மட்டுமே வாழ்ந்த அந்தப் பழைய நாள்கள் எத்தனை இனிமையானவை என்று இப்போது புரிந்தது. அதை உணராமலேயே கடந்து வந்துவிட்டான். ஒரு நெடிய மூச்சுடன் கட்டிலில் விழுந்து கண்களை மூடினான்.

தானாய் மனம் மனைவியைத் தேடியது. கண்களுக்குள் வந்து நின்றாள் அவள். அவள் கூச்சங்களும் வெட்கங்களும் நினைவில் வந்து, அவன் உதட்டில் மென் முறுவலைப் படர வைத்தன.

உடனேயே கைப்பேசியை எடுத்து, “அன்பா, கோல் மீ!” என்று அனுப்பிவிட்டான்.

அங்கே அன்பினியும் அவன் போன கணத்திலிருந்து அவன் நினைவாகவேதான் சுற்றிக்கொண்டிருந்தாள்.

திருமணத்தின் பின் ஒருமுறை திருநாவுக்கரசு புடவைக்கடைக்கு அழைத்துச் சென்றிருந்தார். கடை முதலாளியோடு அவர் கதைத்துக்கொண்டிருந்த பொழுதில் மனத்தின் ஆசையை அடக்க முடியாமல் அவனுக்கு ஒரு செட் உடையை எடுத்திருந்தாள். வரப்போகிற பிறந்தநாளை நினைவில் வைத்து எடுத்திருந்தாலும் அதைக் குடுக்குமளவுக்கு அவள் மனநிலை அப்போது இருக்கவில்லை.

இன்றைக்கு அதை அவன் அணிந்துகொண்டபோது கனகச்சிதமாகப் பொருந்தியிருந்தது மட்டுமல்லாமல், அவளால் அவள் விழிகளை அவனிடமிருந்து எடுக்க முடியவும் இல்லை. அநியாயத்துக்கு அவள் மனத்தைப் பறித்துக்கொண்டிருந்தான்.

எப்போதும் அவனிடமிருந்து அடாவடியான அன்பை மட்டுமே அனுபவித்தவளுக்கு இப்போதைய அவனின் பண்பட்ட குணமும், பரிவு மிகுந்த நேசமும் வேறு இன்னுமின்னும் அவன் மீது அவளைப் பித்தாக்கின.

அவன் கழற்றிப்போட்டிருந்த உடைகளை ஒருவித சொந்தத்தோடு கழுவிப்போட்டாள். இன்னும் நான்கைந்து உடைகள் அவளுக்குப் பிடித்ததுபோல் அவனுக்கு எடுத்துக்கொடுக்கும் ஆசையும் எழுந்தது. அவனோடு கூடவே இருந்து கருத்தொருமித்த காதல் வாழ்க்கை வாழும் ஆசை பிறந்தது. அதற்குச் சாத்தியமில்லாச் சூழ்நிலை நெஞ்சடைக்க வைத்தது.

அவனோடு இருக்கக் கிடைத்த பொழுதுகளை எல்லாம் வீணாக்கிவிட்டு இப்படி ஏங்குகிறோமே என்று தவித்தாள். அப்போதுதான் அவன் குறுந்தகவல் அனுப்பியிருந்தான்.

பார்த்த கணத்தில் அவளுக்குள் மெல்லிய நடுக்கம். ஆனாலும் இதையெல்லாம் தாண்டி வர வேண்டும் என்கிற உத்வேகமும், அதனால்தான் அவனும் அவனே அழைக்காமல் அவளை அழைக்கச் சொல்லியிருக்கிறான் என்பதும் விளங்க, மெல்லிய படபடப்புடன் அழைத்தாள்.

அபயனின் உள்ளத்தில் வார்த்தைகளில் வடிக்க முடியாச் சந்தோசம். குறுந்தகவல் அனுப்பும்போது செய்வாளா என்கிற கேள்வி இருந்தது. அவளானால் அடுத்த நிமிடமே அழைக்கிறாள். அதுவும் வீடியோ கோல். வேகமாய் அழைப்பை ஏற்று, “அன்பா!” என்றான் ஆசையாக. அவனால் பேச முடியவில்லை. அவள் முகத்தையே பார்த்தான். அந்த நொடியே அவளை இறுக்கி அணைத்துக்கொண்டு தன் மகிழ்ச்சியைப் பகிர ஆசைப்பட்டான்.

அவள் நிலையும் அதேதான். அவன் கைகளுக்குள் அடங்கி, அவன் தோள் வளைவில் முகம் புதைக்க நினைத்தாள். அதற்கு வழியில்லை. என்ன வாழ்க்கை இது? கணவன் மனைவியாய் முழு உரிமையும் இருந்தும் இப்படி இருக்கிறார்கள். அதுவும் நியாயமே இல்லாக் காரணங்களால்.

“இப்பவே யாழ்ப்பாணம் போவமா?” அந்தக் கேள்வியே அவன் மனநிலையை உணர்த்த, அவளுக்கும் போனால் என்ன என்றுதான் இருந்தது. ஒன்றுமே வேண்டாம். அவன் பக்கத்தில் இருந்தாலே போதுமே.

“உங்களுக்கு அலைச்சலா இருக்காதா?”

“என்ன பெரிய அலைச்சல். தளிரையும் கூட்டிக்கொண்டு வாறன். அவாவும் சந்தோசப்படுவா.”

“அப்ப போவம்!” என்றாள் வேகமாக.

“அப்ப நான் வாறதால சந்தோசம் இல்லை போல.”

அவள் வாயைக் கிண்டுகிறான்! அதனாலேயே வாயை இறுக்கி மூடிக்கொண்டு அவனை முறைத்தாள்.

“அங்க வாங்கிப் போட்ட கட்டிலும் வீணாக்கக் கூடாதுதானே?”

தளிரையும் வைத்துக்கொண்டா? முகம் இலேசாகச் சூடானாலும், கள்ளச் சிரிப்பில் அவள் விழிகள் மின்னின.

அவன் முகத்திலும் அதன் எதிரொலி. “எனக்குத் தெரியுமடி உன்னைப் பற்றி. பிள்ளைகள் இருக்கிற அம்மா அப்பா எல்லாம் குடும்பமே நடத்திறேல்லையா என்ன, நீ வா முதல் அங்க! அது எப்பிடி எண்டு காட்டுறன்!” என்று அவளைச் சிவக்க வைத்துவிட்டு அழைப்பைத் துண்டித்தான் அவன்.

அவன் உதட்டிலும் அவளைச் சிவக்க வைத்துவிட்ட சிரிப்பு. எழுந்து இரண்டு நாள்களுக்கான உடைகளை எடுத்து வைத்தான். “மாமா!” என்றபடி அவனிடம் ஓடி வந்தாள் சின்னவள்.

“என்ன வேணுமாம் என்ர குண்டு மணிக்கு?” என்றபடி அவளை அப்படியே அள்ளிக்கொண்டான்.

“கடைக்குப் போவமா?” கண்கள் மின்ன ரகசியமாய் வினவினாள் அவள்.

“ஏன், உங்கட அம்மா என்னைத் துரத்தி துரத்தி அடிக்கவோ?”

“அம்மாக்குக் கொத்துரொட்டியும் வாங்கி வருவம்.”

“அடிப்பாவி! மூண்டு நேரமும் கொத்துரொட்டி குடுத்து என்ர அக்காவை வருத்தக்காரி ஆக்கிற பிளான்?” என்று அவன் கண்களை உருட்டவும் அவள் சிரித்தாள்.

பிரிட்ஜில் இருந்து அவளுக்குப் பிடித்த ஜெலியில் நான்கைந்தை எடுத்து ஒரு கிண்ணத்தில் போட்டு, “அம்மாட்டப் போயிருந்து சாப்பிடுங்கோ. மாமா இப்ப வாறன்.” என்று அவளை அனுப்பி வைத்துவிட்டுத் தாய் தந்தையரைத் தேடிக்கொண்டு போனான்.

அங்கே வீட்டின் பின் பக்கம் இருந்த பிலா மரத்தின் கீழே அவர்கள் இருவரும் அமர்ந்திருந்தனர். நிச்சயம் அக்காவைப்பற்றித்தான் பேசிக்கொண்டிருப்பார்கள் என்று தெரிய, அதுவும் அவனை அழுத்தியது.

“அக்காவை என்னப்பா செய்யப் போறீங்க?” என்று நேரடியாக விசயத்துக்கே வந்தான்.

அவன் கேள்வியின் பொருள் விளங்காமல் பார்த்தார் குழந்தைவேலு.

“அவனுக்கு டிவோர்ஸும் குடுக்காம, இப்பிடி அவன் செய்ததையே நினைச்சுக்கொண்டு இருக்கிறதால எந்தப் பிரயோசனமும் இல்லை அப்பா. முதல் டிவோர்ஸ் குடுக்கட்டும். அவனைக் கடந்து வரட்டும். அப்பதான் அடுத்தது என்ன எண்டு அவாவும் யோசிப்பா, நாங்களும் யோசிக்கலாம்.” என்றதும் ஒருவித அதிர்வுடன் மகனைப் பார்த்தார்.

அவன் சொல்வதுதான் சரி. ஆனாலும் விவாகரத்து என்கிற அந்த ஒரு சொல் அவரைப் பெரிதாய்ப் பாதித்தது. இதற்கா பார்த்து பார்த்து எல்லாம் செய்தார்? பரமேஸ்வரியும் சட்டென்று இறங்கிவிட்ட கண்ணீரை வேகமாகத் துடைத்துக்கொண்டார்.

“அம்மா!” என்றான் அவன் தேறுதலாக.

“சில விசயங்களை வாய் விட்டுக் கதைக்கிறது கஷ்டம்தான் அப்பா. அதுக்காகக் கதைக்காம இருக்கேலாது. நான் கதைச்சா அன்பா வீட்டுக்காகக் கதைக்கிறன் எண்டு பிழையாத்தான் எடுப்பா. அதுதான் உங்களைக் கதைக்கச் சொல்லிச் சொல்லுறன்.”

ஒரு நெடிய மூச்சுடன், “அவாக்கு இனி அவனோட வாழ விருப்பம் இல்ல தம்பி. ஏற்கனவே சொல்லிட்டா. ஆனா விவாகரத்து எண்டு சட்டப்படி போனா, பிள்ளையை அவனிட்டக் குடுக்கிற மாதிரி வந்திடுமோ எண்டு பயப்பிடுறா.” என்றார் அவர்.
 

நிதனிபிரபு

Administrator
Staff member
அந்தப் பயம்தான் அன்பினியையும் அவள் வீட்டினரையும் கண்டாலே அவளைத் தகிக்க வைப்பது. அவனுக்கும் அது தெரியும்தான். “அதுக்காக அக்காவை இப்பிடியே விடச் சொல்லுறீங்களா அப்பா?” என்று கேட்டான் அவன்.

ஒன்றும் சொல்லாமல் அவர் பார்க்க, “சட்டப்படி வெளில வந்தா அவாக்குமே மனதளவில ஒரு விடுதலை உணர்வு கிடைக்கும் அப்பா. கொஞ்சம் தெளிவாவும் இருப்பா. அவா நல்லா இருந்தாத்தான் தளிரின்ர வாழ்க்கையும் நல்லாருக்கும். இல்லையோ தகப்பனும் இல்லாமல், அவாவும் பிள்ளையை வடிவாக் கவனிக்காம, அவான்ர வாழ்க்கையும் நாசமாகி, சின்னவான்ர வாழ்க்கை எப்பிடி ஆகும் எண்டே தெரியாமப் போயிடும். வேற வழி இல்லை அப்பா. முதல் அப்பிடித் தளிரைத் தரேலாது எண்டு சொல்லிப் பாப்பம். இல்லை எண்டு நிண்டா மாமாவைக் கொண்டு கதைச்சுப் பாப்பம். கட்டாயம் அவர் எங்களுக்காகத்தான் நிப்பார். அதுக்குப் பிறகு நடக்கிறதை அப்ப பாப்பம்.” என்றுவிட்டு எழுந்துகொண்டான் அவன்.

“அன்பாவைக் கூட்டிக்கொண்டுபோய் யாழ்ப்பாணத்தில விட்டுட்டு வரப்போறன் அப்பா.” இவ்வளவு நேரமாக இல்லாத மெல்லிய தடுமாற்றம் அப்போது வந்துவிட, அதைச் சொல்லிவிட்டு கையில் இருந்த கைப்பேசியில் எதையோ மும்முரமாகத் தேடினான்.

அவ்வளவு நேரமாக இருந்த இறுக்கமான மனநிலை மறைய மகனையே பார்த்த குழந்தைவேலுவின் முகத்தில் மெல்லிய சிரிப்பு.

எதிர்பாராமல் அவர் பார்வையைச் சந்தித்துவிட்டவன் தடுமாறிப் போனான். சின்ன வெட்கம் வேறு வந்து தொலைக்க, “அப்பா!” என்றான் அதட்டலாக.

சத்தமாய்ச் சிரித்தார் குழந்தைவேலு. மகன் சந்தோசமாக இருக்கிறான் என்று பிடிபட்டுப் போனதில் அவர் மனமும் நிறைந்துபோனது. “கவனமாப் போயிட்டு வாப்பு!” என்று அனுப்பிவைத்தார்.

மகள் வாழ்க்கையைப் பற்றி யோசித்து மறுக்கிக்கொண்டிருந்த பரமேஸ்வரி, தகப்பன் மகனுக்கிடையில் நடந்து முடிந்த அந்த நிகழ்வைக் கவனிக்கத் தவறியிருந்தார். கணவரின் திடீர் சிரிப்பிலும் இலகு குரலிலும், “என்னப்பா?” என்றார்.

இளம் முறுவல் ஒன்றுடன் போகும் மகனையே பார்த்திருந்தவர் நடந்ததைச் சொன்னார். சின்னதாய்ச் சிரிப்பு அரும்பினாலும் அதற்கும் பரமேஸ்வரியின் விழிகள் இலேசாய்க் கசிந்தன. என்னவோ அவனாவது கடைசி வரையிலும் சந்தோசமான வாழ்க்கையை வாழ்ந்துவிட வேண்டும் என்று இறைவனை வேண்டினார்.

வீட்டுக்குள் வந்தவன் திறந்திருந்த தமக்கையின் கதவை வேண்டுமென்றே டொக் டொக் என்று தட்டி, “அக்கா, நான் யாழ்ப்பாணம் வரைக்கும் போயிட்டு வரப்போறன்.” என்று அறிவித்தான்.

அவளிடம் சத்தமில்லை. ஆனால், மனைவியைத் தனியே அனுப்ப மனமில்லாமல் கொண்டுபோய் விடப்போகிறான் என்று ஊகித்ததாள். அவன் அவன் மனைவிக்குச் செய்கிறான், இதில் என்ன தவறு இருக்கிறது என்று அறிவு எடுத்துச் சொன்னாலும் உள்ளே ஒரு வலி.

படிக்கிற காலத்திலேயே அவள் வவுனியாவுக்குத் தனியாகவே போய் வருவாள். ஆனாலும் இப்போது தன் மனைவியை எங்கும் தனியாக அனுப்ப அவனுக்கு விருப்பமில்லை. துணைக்கு ஓடுகிறான். இதுவே அவளுக்கு ஒன்று என்றால் எல்லாவற்றையும் அவள்தான் பார்க்க வேண்டும். எல்லோரும் நாம் இருக்கிறோம் என்கிறார்கள். எதுவரைக்கும்? ஏதோ ஒரு கண்ணுக்குத் தெரியாத எல்லை வரைக்கும் தானே? யோசித்துப் பார்த்தால் அவள் மட்டும்தானே அவளுக்கு இருக்கிறாள்?

இதில் கணவனாய் இருந்தவன் அனுசரணையாய், நம்பிக்கையாய் இருந்த நாள்கள் வேறு நினைவில் வந்து தொலைத்தன. அப்படியெல்லாம் அவளைக் கவனித்துக்கொண்டுவிட்டு எப்படி இப்படி அவனால் அவளை விட முடிந்தது? எதில் அவள் குறை வைத்தால் என்று இன்னொருத்தியிடம் போனான்? இதையெல்லாம் இனி நினைக்கவே கூடாது என்று நினைத்தாலும் முடியாமல் அவனோடு நிறைவாக வாழ்ந்த நாள்கள் நினைவில் வந்து கொன்றன.

எப்படி வாழ்ந்தவள். இன்று இப்படியாகிப்போய் நிற்கிறாளே! தன்னிரக்கம் சூடான கண்ணீராகக் கரகரவென்று இறங்கின.

“அக்கா!” அவளிடம் சத்தமில்லாமல் போனதில் மீண்டும் அழைத்தான் அவன்.

வேகமாக முகத்தைத் துடைத்துக்கொண்டு எழுந்து அமர்ந்து, “கவனமாப் போயிட்டு வா!” என்றாள் அமைதியான குரலில்.

ஒன்றும் சொல்லாமல் உள்ளே வந்தான் அபயன். நனைந்திருந்த இமைகள் இவ்வளவு நேரமாக அவள் என்ன செய்துகொண்டிருந்தாள் என்று சொல்லின.

அவள் பக்கத்தில் போய் அமர்ந்து, “கடவுள் சத்தியமா அவளுக்காகவோ அவள் வீட்டுக்காகவோ நான் கதைக்கேல்ல அக்கா. அவளை இஞ்ச வர வேண்டாம் எண்டு சொன்னதும் உங்கட மனம் கொஞ்சம் அமைதியாகட்டும் எண்டுதான். ஆனா நியாயமே இல்லாம நாங்க கோவப்படவும் கூடாது தானே? சும்மா சும்மா தனியா இருந்து அழுறேல்ல. நடக்கக் கூடாதது நடந்திட்டுதுதான். அதையே யோசிச்சு அழுதுகொண்டு இருந்தா மாறிடுமா என்ன?” என்றான் அவன் இதமாக.

“எனக்கு விளங்குது. நீ போயிற்று வா!” எதையும் பேச மனமில்லா நிலையில் இருந்தவள் முகத்தைத் துடைத்தபடி சொன்னாள்.

கொஞ்ச நேரம் அவள் முகத்தையே பார்த்தான் அபயன். உற்சாகப் பந்தாய் எல்லோரையும் கவனித்துக்கொண்டு, தன் வாழ்க்கையையும் சீராக நடத்திக்கொண்டிருந்தவள். இன்று எப்படியாகிப்போய் நிற்கிறாள். மனம் அவளை இப்படியே விட்டுவிடக் கூடாது என்று இன்னுமே உறுதி கொள்ள, அதைப் பற்றி அவளிடம் பேசாமல், “எப்பிடியும் நாளைக்குப் பின்னேரம் போல வந்திடுவன். பிறகு நாங்க மூண்டு பேரும் வெளில போறம் ஓகே?” என்றான்.

“இல்ல வேண்டாம்.”

அவன் பதில் சொல்லாமல் அவளையே பார்த்தான்.

அவனுடைய அந்தப் பிடிவாதம் மெல்லிய கோபத்தை அவளுக்குள் மூட்டியது. “வரவர நீ மூத்தவனா, இல்ல நான் மூத்தவளா எண்டே தெரியாம இருக்கடா!” என்றாள் தமக்கை.

“மூத்தது மொக்காம்(மக்கு) எண்டு நீங்க கேள்விப் படேல்லையா?” என்றான் அவன் வேண்டுமென்றே.

“நான் மொக்காடா உனக்கு? என்னைப் பாத்தா உனக்கு மொக்கு மாதிரி இருக்கோ!” என்று கேட்டு நாலு அடியைப் போட்டாள் அவள்.

அதுவரை நேரமும் மாமனின் மடிக்குள் புகுந்திருந்த தளிரும் விறுவிறு என்று அவன் தோளில் ஏறி அமர்ந்துகொண்டு, அவன் முடியைப் பற்றி ஒரு ஆட்டு ஆட்ட, “துரோகி!” என்று மருமகளை முறைத்தான் அவன்.

“பிடிச்சது எல்லாத்தையும் வாங்கி அமுக்கிப்போட்டு மாமாவையே அடிக்கிறீங்க என்ன?” என்று அப்படியே அவளை வாகாகத் தன் கைகளுக்குள் கொண்டுவந்து, கிச்சு கிச்சு மூட்டினான். அவன் கைகளுக்குள்ளேயே துள்ளியபடி அடக்கமாட்டாமல் சிரித்தாள் சின்னவள்.

பார்த்திருந்த சுபாங்கியும் தன்னிச்சையாய் மகளைப்போலவே கலகலத்துச் சிரித்தாள்.

“டேய் விடடா, என்ர பிள்ளைக்கு மூச்சடைக்கப் போகுது!” என்று தடுத்தவளின் பேச்சையும் அவன் கேட்கவில்லை. சின்னவளைக் கட்டிலில் போட்டு, “மாமாக்கு எதிராப் போர்க்கொடி தூக்குவீங்களா?” என்று கேட்டு கேட்டு அவளை சிரிக்க வைத்தான். கட்டிலில் உருண்டு பிரண்டு சிரித்தபடி, “சமாடானம் மாமா. சமாடானம்” என்றவளின் பேச்சில் அகமகிழ்ந்துபோனாள் சுபாங்கி.

“என்னடா இது, சமாதானம் எண்டுறாள்?”

“நாங்க அப்பிடித்தான். சண்டை பிடிச்சா அப்பிடித்தான் சமாதானம் ஆகிறனாங்க. உங்களை மாதிரி அறைக்க விழுந்துகிடந்து அழுற ஆக்கள் எண்டு நினைச்சீங்களா?” அவளைத் தூக்கி மேலே போட்டுப் பிடித்தபடி சொன்னான்.

அவள் முறைக்க, “அக்கா தளிரையும் கூட்டிக்கொண்டு போகட்டா?” என்றான் மெல்ல.

அவள் முகம் உடனேயே மாறியது. “திரும்ப ஆரம்பிக்காத அபய்!” என்றாள் சலிப்புடன்.

“என்ன ஆரம்பிக்கிறன்? நாளைக்கு இரவே நானும் கொழும்பு வெளிக்கிட்டுடுவன். தளிர் பாவமெல்லா. என்னோட வந்தா கொஞ்சம் சந்தோசப்படுவா.”

“அவாக்கு நேர்சரி இருக்கு.”

“பெரிய கிழிஞ்ச நேர்சரி!”

அவள் முறைக்க, “நான் கூட்டிக்கொண்டு போகப்போறன்!” என்று அறிவித்தான்.

“நான் இல்லாம அவள் இருக்க மாட்டாள்.”

“அன்பா இருந்தா அவள் உங்களையே தேடமாட்டாள்.” என்றதும் திரும்பவும் முறைத்தாள்.

“சும்மா சும்மா முறைக்கிறேல்ல. என்னோடதானே வாறா. நீங்க தடுக்கிறதப் பாத்தா, தாளிர்ல எந்த உரிமையும் எனக்கும் இல்லை எண்டு சொல்லுவீங்க போல.” முகம் ஒரு மாதிரியாக மாற அவன் சொன்னதும் அவளுக்கே ஒருமாதிரி ஆகிப்போனது.

தளிர் கொஞ்சமாவது நன்றாக இருக்கிறாள் என்றால் அதற்கு அவன் மட்டும்தானே காரணம்.

“அந்த வீட்டுக்குக் கூட்டிக்கொண்டு போறேல்ல!” மறைமுகமாகத் தன் சம்மதத்தைச் சொன்னாள்.

ஒரு கணம் அமைதியாய் இருந்தாலும் வேகமாய்ச் சமாளித்து, “சரி!” என்றான்.

தமக்கை கண்டுகொண்டாள். கண்டிப்புடன் நோக்கி, “அபய், உன்னை நம்பி விடுறன். என்னை நீயும் ஏமாத்தாத!” என்றாள் வெகு அழுத்தமாக.

உண்மையில் இதே சாட்டில் இந்துமதியிடமும் சின்னவளைக் கொஞ்ச நேரம் விடுவோம் என்றுதான் எண்ணியிருந்தான். இனி முடியாது. உள்ளே ஒரு கோவமும் அந்தப் பெண்மணியை எண்ணிக் கவலையும் உண்டாக, “சரி!” என்றுவிட்டு போனான் அவன்.

தொடரும் . ..

மக்களே , கதை ஏதும் இழுக்கிற மாதிரி இருக்கா என்ன ? இப்பிடித்தான் வருது . பெரும்பாலும் அடுத்த எபி இல்லை அதுக்கடுத்த எபில கதை திரும்பும் . முடிவை நோக்கி நகரும் . பெரும்பாலும் அடுத்த வாரக் கடைசில கதை முடிஞ்சிடும் . கருத்திடும் அனைவருக்கும் நன்றி .
 

நிதனிபிரபு

Administrator
Staff member
அத்தியாயம் 49


தளிரைத் தோளில் போட்டுத் தட்டிக்கொடுத்தபடி அந்த அறைக்குள்ளேயே அங்குமிங்குமாக நடந்துகொண்டிருந்தான் அபயன். அங்கிருந்த நாற்காலியில் அமர்ந்து, மேசையில் ஒரு கையை நீட்டிப் படுத்திருந்தவளின் பார்வை
அவனையே தொடர்ந்துகொண்டிருந்தது.

இது ஒன்றும் புதுக் காட்சியில்லை. அவர்களின் வீட்டில் இருக்கும் வரையிலும் தினமும் பார்த்ததுதான். அப்போதெல்லாம் மருமகளைத் தங்குகிறான் என்று எண்ணிக்கொள்வாள். அதுவே இன்று தம் பிள்ளையையும் இப்படித்தானே பார்த்துக்கொள்வான் என்று ஓடியதில் அவள் உதட்டோரத்தில் ரகசியப் புன்னகை.

அவளுக்கு முதுகு காட்டி நடந்துகொண்டிருந்தவன் திரும்பி வருகையில் அவள் சிரிப்பைக் கண்டுவிட்டான். புருவங்களை மாத்திரம் உயர்த்தி என்ன என்று வினவினான். ஒருகணம் என்ன சொல்வது என்று தெரியாமல் தடுமாறினாலும் அடுத்த நொடி உதடுகளைக் குவித்து முத்தமிடுவதுபோல் செய்து காட்டினாள்.

நடந்துகொண்டிருந்தவன் சட்டென்று நின்றுவிட்டான். அவன் முகத்தில் அப்பட்டமான வியப்பு. கூடவே அவளின் செய்கையை ரசிக்கும் முறுவல்.

சின்னவள் சிணுங்க மீண்டும் தட்டிக்கொடுத்தபடி நடக்க ஆரம்பித்தாலும் அதன் பிறகு பார்வை அவள் மீதேதான்.

உறங்கிவிட்டவளை மெல்லக் கட்டிலில் கிடத்தி, போர்வையால் போர்த்திவிட்டான். வரும்போது கையோடு வாங்கி வந்திருந்த பாயையும் தலையணையையும் தரையில் விரித்துவிட்டுத் திரும்பி அவளைப் பார்த்தான்.

அவ்வளவு நேரமாக அவனையே கவனித்துக்கொண்டிருந்தவள் அவன் திரும்பவும் வேகமாக முகத்தைத் திருப்பித் தன் சிரிப்பை மறைக்க முயன்றாள்.

‘சேட்டைக்காரி!’ உதட்டோரம் சிரிப்பில் துடிக்க அவளை நெருங்கி, அப்படியே அள்ளிக்கொண்டான். “உனக்குச் சிரிப்பா இருக்கு என்னடி!” சின்னவள் விழித்துவிடாதபடிக்குக் காதோரமாக அதட்டியவன் அவளோடு பாயில் சரிந்தான்.

இறுகிய அணைப்பில் உணர்வுகளைப் பரிமாறி, அதற்கு முத்தங்களைப் பரிசாக்கிய பிறகும் அவன் முன்னேறாமல் இருக்கவும் கேள்வியாகப் பார்த்தாள் அன்பினி.

“என்னவோ இதுக்காகவே இஞ்ச வந்த மாதிரி இருக்கு அன்பா. அது பிடிக்கேல்ல.” என்றான் அவன்.

அவள் உதட்டில் மெல்லிய புன்னகை. ஆசையாய் அவன் நெற்றியில் முத்தமிட்டாள்.

“உனக்குக் குறை ஒண்டும் இல்லையே?”

அவன் கேள்வியில் அவள் முறுவல் இன்னும் விரிந்தது. இல்லை என்பதுபோல் தலையை அசைத்துவிட்டு, “இப்பிடி உங்கட கைக்க இருக்கிறதே போதும்.” என்றுவிட்டு, “இந்த அபய இன்னுமின்னும் பிடிக்குதே!” என்றாள் அவன் கன்னம் வருடி.

விழிகளை மூடி அவளின் வருடல் தரும் சுகத்தைக் கொஞ்ச நேரம் அனுபவித்துவிட்டு, “ஏன் பழைய அபய்க்கு என்ன குறை?” என்று விசாரித்தான்.

“அவரிட்ட என்னதான் நெருக்கமாப் பழகினாலும் ஒரு பயம் இருக்கும். எதுக்குக் கோபப்படுவார் எண்டே தெரியாது.” என்றதும் முறைத்தான் அவன்.

“உனக்குப் பயம்? அதுதான் கழுவாத பிளாஸ்க்ல தேத்தண்ணியும், டிபன் பொக்ஸுக்க இலைகுலையும் வச்சனியா?”

“பிறகு என்ன? இவர் வெருட்டுவாராம், நாங்க பயந்து நடுங்கிக்கொண்டே இருக்கோணுமா?”

“உன்ன!” என்றவன் ஆசையாய் அவள் உதட்டில் முத்தமிட்டான்.

தளிர் எழும்பும் வரையில் ஒருவர் அணைப்பில் மற்றவர் அடங்கியபடி ரகசியமாய்ப் பேசிக்கொண்டிருந்தனர். நேரம் எப்படி ஓடியது என்றே தெரியவில்லை. சின்னவள் விழித்ததும் மனமேயில்லாமல் எழுந்து புறப்பட்டான்.

அறையை விட்டும் வெளியேறும் நொடியில், “இன்னும் கொஞ்ச நாளைக்கு அன்பா. எனக்காக…” என்றவனின் உதட்டில் கையை வைத்துத் தடுத்து, “எங்களுக்காக நான் எவ்வளவு காலம் எண்டாலும் பொறுப்பன் அபய்.” என்று சொல்லி அவனை அனுப்பிவைத்தாள் அன்பினி.

*****

இந்துமதி அம்மாவுக்கு மனம் சரியேயில்லை. அன்று மாலை முல்லைத்தீவுக்குப் புறப்படுகிறேன் என்று சொன்ன மகள், காலையிலேயே தயாரானதும் அல்லாமல், அபயன் வந்து கூட்டிப்போகிறான் என்று சொன்னபோது மகிழ்ச்சியாகவே அவளுக்கு அனைத்தையும் எடுத்து வைத்திருந்தார்.

அவளோ அத்தனையையும் எடுத்துக்கொண்டு ஆட்டோவில் புறப்பட அவருக்கு ஒன்றும் புரியவில்லை.

“தம்பி வருவார் எண்டு சொன்னியேம்மா?”

“ஓம் அம்மா, அவர் டவுன்ல ஏதோ வேலையா நிக்கிறாராம். அங்க என்னை வரச் சொன்னவர். அதான்…” என்று அவர் முகம் பாராமல் சொல்லிவிட்டு அவள் புறப்பட்டிருந்தாள்.

என்னவோ சரியில்லை என்று அவருக்குப் பட்டது. உடனேயே கணவருக்கு அழைத்து விடயத்தைச் சொல்லியிருந்தார்.

அவருக்கும் எதுவும் புரியவில்லை. அதுவும், அன்று அபயன் வீட்டுக்கு வந்துவிட்டுப் போனதிலிருந்து மகள் வாழ்க்கைமீது ஒரு நம்பிக்கை பிறந்திருந்தது. இன்று புதிதாய் என்னவோ என்று உடனேயே மகளுக்கு அழைத்திருந்தார்.

தாயிடம் சமாளித்தது போன்று தந்தையிடம் சமாளிக்க முடியவில்லை. கூடவே, தந்தை விளங்கிக்கொள்வார் என்கிற நம்பிக்கையில், திக்கித் திணறி அபயன் சொன்னவற்றைச் சொல்லியிருந்தாள்.

“எங்கட வீட்டுக்குக் கூட்டிக்கொண்டு போகக் கூடாது எண்டு சொல்லித்தான் அண்ணி தளிரை அனுப்பி இருக்கிறா அப்பா. வீடு வரைக்கும் கூட்டிக்கொண்டு வந்திட்டு அம்மாட்டக் குடுக்காமத் தளிரை எப்பிடி அப்பா கூட்டிக்கொண்டு போறது? அது பிறகு அம்மாவும் தாங்க மாட்டா. அதுதான் இவர் வீட்டில இருந்து கொஞ்சம் தள்ளி நிண்டவர்.” என்று சொல்லியிருந்தாள்.

திருநாவுக்கரசுக்கும் மனைவின் தவிப்புத் தெரியும். தினமும் பேத்தியைப் பற்றிப் பேசாமல், அரற்றாமல் அவர் உறங்கியதேயில்லை. அப்படியிருக்க, கண் முன்னே பேத்தியைக் கண்ட பிறகும் நிச்சயம் அமைதியாக இருந்திருக்க மாட்டார்தான். மகள் செய்தது சரிதான்.

ஆனால், ஏன் இந்த நிலை? இத்தனை மாதங்கள் ஓடியுமா இப்படி ஒரு பிடிவாதம்? மெல்லிய கோபமும் வந்தது. ஆனாலும் நிதானத்தை இழக்காமல், “சரியம்மா, நீங்க கவனமாப் போயிட்டு வாங்கோ. அம்மாட்ட நான் சொல்லிவிடுறன்.” என்றுவிட்டு மனைவிக்கு அழைத்து விடயத்தைச் சொல்லியிருந்தார்.

அவர் எவ்வளவுதான் இதமாகவும் பதமாகவும் எடுத்துச் சொன்ன போதிலும் இந்துமதியால் இதை ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. கண்ணீருடன் குமுறியிருந்தார். “பெத்த மகனையும் ஒதுக்கி, பேரப்பிள்ளையையும் பாக்காம நான் ஏன் இந்த வாழ்க்கை வாழோணும்? சுபாக்கு ஏன் இவ்வளவு பிடிவாதம்? என்ர சொந்தப் பேத்தி அப்பா. இதுவே அவவின்ர அம்மாவுக்குக் காட்டாம வளப்பாவா? இல்ல, நான் இல்லாம இத்தின வருசமும் வளத்தவாவோ?” என்று என்றுமில்லாதவாறு இன்று வெடித்திருந்தார்.

அந்தளவுக்குக் காலடிக்குப் பேத்தி வந்தும் அவர் கண்ணில் அவளைக் காட்டவில்லை என்கிற விடயம் அவரை நிலைகுலைய வைத்திருந்தது.

“வெளிநாட்டில பேரப்பிள்ளைகள் இருந்தாலுமே ஒவ்வொரு நாளும் வீடியோ கோலில பாத்து, கதைச்சு, பிள்ளைகளின்ர வளர்ச்சியைப் பாத்து, நல்லது கெட்டதை அறிஞ்சுகொண்டு இருக்கினம். ஆனா நான்… பக்கத்தில இருந்தும் பாக்க வழி இல்ல. அந்தளவுக்கு நான் என்ன பிழை செய்தனான்? எல்லாத்துக்கும் பொறுமையா இரு, பொறுத்துப் போ எண்டு சொல்லுவீங்க. இப்ப நீங்க எனக்கு நியாயம் சொல்லுங்கோ!” என்று அவரை விடாமல் உலுக்கியிருந்தார் இந்துமதி.

அன்று மட்டுமில்லை அதன் பிறகு வந்த நாள்களில் கூட அவரின் புறுபுறுப்பும் அரற்றாலும் குறையவில்லை. அந்த வார இறுதியில் வந்த மகளிடமும் அவர் முகம் கொடுத்துப் பேசவில்லை. அவ்வளவு கோவம். ஒரு முறை கண்ணில் காட்டவே கூடாத அளவுக்கு அவர் என்ன பிழை செய்தார் என்பதிலேயே நின்றார்.

முறையான உறக்கம் இல்லாமல், மனத்தில் நிம்மதியும் இல்லாமல், நேரா நேரத்துக்குச் சாப்பாடும் இல்லாமல் இருந்த இந்துமதி திடீரென்று மயங்கி விழுந்திருந்தார்.

அன்று பகலுக்குச் சாப்பிட வரமாட்டேன் என்று சொல்ல அழைத்த திருநாவுக்கரசு, மனைவி தொடர்ந்து எடுக்காமல் இருக்கவும் கொஞ்சம் பயந்துபோனார். கடந்த சில நாள்களாகவே அவரின் மன அமைதி குலைந்திருந்ததும் நினைவில் வர, ஓடி வந்தவர் கண்டது, மூக்கால் இரத்தம் வழிந்து காய்ந்த நிலையில் சமையலறையில் மூர்ச்சையாகிக் கிடந்த இந்துமதியைத்தான்.





தொடரும் . ..


அன்புக்குரியவர்களே, உண்மையிலேயே சொறி , என்னால எழுதவே முடிய இல்ல . இந்தளவுதான் இன்றைக்கு வந்தது . எபிசோட் போடாம இருக்கக் கூடாது எண்டு இதைப் போட்டுட்டேன் . கொஞ்சம் சமாளிங்க . நாளைக்கு இரவு அடுத்த எபி போடுறேன் .
 
Last edited:

நிதனிபிரபு

Administrator
Staff member
அத்தியாயம் 50


அடிக்கடி முல்லைத்தீவு, யாழ்ப்பாணம் என்று வந்து போனதில் அபயனால் அடுத்த இரண்டு வாரங்களுக்கு அசையவே முடியவில்லை. இப்படி வேலையைச் சிரத்தையாகக் கவனிக்க முடியாமல் போனால் எதிர்காலம் என்னாகும் என்கிற கேள்வியும் எழுந்தது. திவாகர் வேறு அடிக்கடி விடுமுறை எடுப்பதைக் கொஞ்சம் குறை என்று நேரடியாகச் சொன்னது வேறு கொஞ்சம் குன்ற வைத்தது.

அதில் அவன் கொழும்பிலேயே இருந்துகொண்டான். மனைவியையும் அவள் அண்மையையும் மனம் அதிகமாகத் தேடியது. ஆனால், நினைத்ததும் ஓடிப்போய்ப் பார்க்கும் தூரத்தில் அவர்கள் இல்லையே. அடுத்த வார இறுதி அவளை இங்கே வரச் சொல்லுவோமா என்று யோசித்துக்கொண்டிருந்தான்.

அதே நிலையில்தான் அன்பினியும் இருந்தாள். புதிதாகப் பிறந்திருக்கும் குழந்தை ஆசை, இப்போதைக்கு அது சாத்தியமில்லை என்கிற கசப்பான நிஜம், கொஞ்சம் கூட இறங்கி வராத சுபாங்கியின் பிடிவாதம், அன்னையின் முகத்திருப்பல், கணவனைக் காணமுடியாத வாட்டம் என்று அவளுக்குள் நிறைய மனவுளைச்சல்கள். இதில், ஒரு நாள் உறவில் குழந்தை வந்திருக்குமா என்கிற பயம் கலந்த படபடப்பு வேறு.

அன்று அந்தப் பாடவேளை அவளுக்கு வகுப்புகள் எதுவும் இல்லை என்பதில் லைப்ரரிக்கு நடந்தாள். அப்போதுதான் அழைத்து விடயத்தைச் சொன்னார் திருநாவுக்கரசு. அன்பினி பதறித் துடித்துப் போனாள். அடித்துப் பிடித்து விடுமுறை எடுத்துக்கொண்டு, புறப்பட்டு முல்லைத்தீவுக்கு வந்திறங்கி, வைத்தியசாலைக்கு ஓடி வந்தவளால் அரை மயக்க நிலையில் படுத்திருந்த அன்னையைக் கண்கொண்டு பார்க்கவே முடியவில்லை.

“அம்மா!” என்றாள் அவர் கன்னம் வருடி. அவர் புருவங்கள் அசைந்தன. மெதுவாய் விழிகளைத் திறந்து பார்த்தார். தளர்ந்து நலிந்துபோன ஒரு கை, மெதுவாக அசைந்து மகளின் கையை நடுக்கத்தோடு பற்றிக்கொண்டது. கண்ணோரங்களில் கசிந்த கண்ணீர் மெது மெதுவாகக் காதோரங்களை நனைக்க ஆரம்பித்தது.

“உங்களுக்கு ஒண்டும் இல்லை அம்மா. பயப்பிடாதீங்க.” அவருக்குத் தைரியம் கொடுக்க முயன்றாள்.

இல்லை என்பதுபோல் தலையை அசைத்தார் அவர். விழிகளால் அவர் அறையைத் துளாவிவிட்டு, “அப்பா எங்க?” என்றார் உதடுகளை மெதுவாக அசைத்து.

“இவ்வளவு நேரமும் இஞ்சதான் இருந்தவர். இப்ப நான் வரவும் தான் டொக்டரப் பாக்கப் போனவர்.”

“தளிர்…. எனக்குத் தளிரைப் பாக்கோணும் பிள்ளை. ஒரேயொருக்க என்ர பேத்தியை கொண்டு வந்து காட்டம்மா.”

“முதல் நீங்க சுகமாகி வீட்டுக்கு வாங்க. நான் கட்டாயம் தளிரைக் கூட்டிக்கொண்டு வாறன்.” அவசரமாகச் சொன்னாள் அவள்.

அவர் மறுப்பாகத் தலையை அசைத்தார். “நான் இனி இருப்பனோ இல்லையோ தெரியேல்ல பிள்ளை…” என்றதுமே துடித்துப்போனாள் அவள். “உங்களுக்கு என்ன விசாராம்மா? உங்களுக்கு அப்பிடி ஒண்டுமே இல்ல. பிரசரும் லோ சுகருமாம். சாப்பாட்டை நீங்க ஒழுங்கா கவனிக்காம விட்டதால வந்தது இதெல்லாம்…” என்று படபடத்தவளின் பேச்சு அவர் பற்றியிருந்த அவள் கரத்தில் கொடுத்த அழுத்தத்தில் நின்றது.

“எனக்கு ஒரேயொருக்காத் தளிரைப் பாக்கோணும். இப்பவே. பாக்காமயே போயிடுவானோ எண்டு பயமா இருக்கு.” எனவும் அவளால் முடியவேயில்லை.

அங்கே வந்த தாதிப்பெண் கூட, “அப்பிடி எல்லாம் ஒரு வருத்தமும் இல்லை அம்மா. நாங்க தாற மருந்தை எல்லாம் இனி மறக்காமக் கவனமாய் போடுங்கோ. பூட்டப்பிள்ளையப் பாக்கிற வரைக்கும் வாழலாம்.” என்று சொன்னதை எல்லாம் கேட்கும் நிலையில் அவர் இல்லை. தளிரைப் பார்த்தேயாக வேண்டும் என்று நின்றார்.

அதற்குமேல் அன்பினி அங்கே தாமதிக்கவில்லை. அந்தத் தாதிப் பெண்ணிடம் அவரைப் பார்த்துக்கொள்ளச் சொல்லிவிட்டு வெளியே ஓடினாள். அப்பாவிடம் சொல்வோம் என்றால் அவரைக் காணக் கிடைக்கவில்லை. கைப்பேசிக்கு அழைத்துப் பார்த்தாள். அவர் எடுக்கவும் இல்லை என்றதும் ஒரு ஆட்டோவைப் பிடித்துக்கொண்டு அபயன் வீட்டுக்கு ஓடினாள்.

அங்கே பரமேஸ்வரிதான் தளிரோடு இருந்தார். “மாமி, அம்மாக்கு பிரஷர் கூடி ஆஸ்பத்திரில சேர்த்திருக்கு. தளிரைப் பாக்கோணும் எண்டு அழுறா. நான் கூட்டிக்கொண்டு போறன்.” என்றவள் அவரின் பதிலுக்காகக் கூடக் காத்திருக்கவில்லை. தளிரோடு வந்த ஆட்டோவிலேயே புறப்பட்டிருந்தாள்.

அப்போதுதான் வேலை முடிந்து ஸ்கூட்டியில் வீடு திரும்பிக்கொண்டிருந்த சுபாங்கி, மகள் அன்பினியோடு ஆட்டோவில் செல்வதைக் கண்டதும் பட்டென்று ஸ்கூட்டியை நிறுத்தி, அன்னைக்கு அழைத்து என்ன என்று விசாரித்தாள். அவருக்கும் ஒன்றும் புரியவில்லை. அன்பினி சொன்னதை மாத்திரமே சொன்னார்.

சுபாங்கியின் உள்ளத்திலும் சுருக்கென்று ஒரு வலி. காந்தனால் அவர்கள் மீது அவளுக்குக் கோபம் இருந்தாலும் இப்படி அவர் வைத்தியöசாலையில் இருப்பது அவளையும் பாதிக்க, ஸ்கூட்டியை வைத்தியசாலைக்கு விட்டாள்.

*****

மொத்த உறவுகளாலும் ஒதுக்கி வைக்கப்பட்டுத் தனித்து வாழ்வது எத்தனை பெரிய கொடுமை என்று உணர்ந்துகொண்டிருந்தான் காந்தன். மனம் விட்டுப் பேசிச் சிரிக்க, சேர்ந்து சாப்பிட, அவனுக்கு ஒன்று என்றால் துடிக்கவோ பார்க்கவோ யாருமில்லாமல் அவனே சமைத்து, அவனே சாப்பிட்டு என்று நரகமாக இருந்தது அந்த வாழ்க்கை.

இப்படி இருக்கையில்தான் முல்லைத்தீவில் இவர்கள் வீட்டுக்கு எதிர்வீட்டில் இருக்கும் அவனோடு படித்த நண்பன் திடீரென்று அழைத்து, இந்துமதியின் நிலையைச் சொல்லவும் துடித்துப்போனான். அதுவும் அப்பா தனியாக அவரைத் தூக்கிக்கொண்டு ஓடினாராம் என்று அறிந்து நிலைகுலைந்துபோனான்.

அம்மா… அவருக்கு இந்த நிலை வரக் காரணம் அவன்தானே? அவனால் அதற்குமேல் அங்கே இருக்க முடியவில்லை. அடுத்த நிமிடமே புறப்பட்டிருந்தான்.

அங்கே அவன் சென்று சேர்ந்தபோது இந்துமதியின் அறையில் யாருமில்லை. தாதிப்பெண் மட்டுமே இருந்தார். அவர் கேள்வியாகப் பார்க்கவும், இந்துமதியைக் கையால் காட்டி, “அம்மா. நான்… மகன்.” என்றவனுக்குக் குரல் எழும்பவே இல்லை.

எத்தனையோ மாதங்களுக்குப் பிறகு பார்க்கிறான். அவன் அம்மாவா இது? அவனால் நம்பக்கூட முடியவில்லை. இருந்ததற்குப் பாதியாகி, வயக்கெட்டு(மெலிந்து), தலை நரைத்து, முகத்தில் அப்பட்டமாக மூப்புத் தெரிய, அவன் வந்தது கூடத் தெரியாமல் படுத்துக்கிடந்தார்.

அவரை அவன் இப்படிப் பார்த்ததேயில்லை. அதுவும் அவன் வவுனியாவிலிருந்து வருகிறான் என்றால் பார்த்து பார்த்து அவனுக்குப் பிடித்ததாக மட்டுமே சமைத்துத் தருவார். அசிவன் மீது அளவில்லாத வாஞ்சையும் அன்பும்.

அப்படியானவரின் இன்றைய நிலை என்ன? மனம் அழ அவர் அருகில் சென்றான்.

“அவா கொஞ்சம் பயந்துபோய் இருக்கிறா. என்ன கதைக்கிறதா இருந்தாலும் நம்பிக்கை குடுக்கிற மாதிரிக் கதைங்கோ. அவாவை நிறையக் கதைக்க விடாதீங்கோ!” என்றுவிட்டு வெளியே வந்து நின்றார் தாதி.

மெல்ல அவரருகில் சென்று அமர்ந்தான். கை நடுங்க கட்டிலில் கிடந்த அவர் கரத்தைப் பற்றினான். அந்தத் தொடுகை அவரின் ஆழ்மனத்தைத் தொட்டது போலும். “தம்…பி!” என்றார் மெல்ல.

அவன் விழிகளில் கண்ணீர் கசிந்தது. தனிமையிலேயே கிடந்து செத்தவனுக்கு அன்னை தன்னை வெறுக்கவில்லை, அவர் நெஞ்சில் அவன் மீதான பாசம் இன்னும் இருக்கிறது என்று தெரிந்துவிட, “அம்மா!” என்றான் துடிப்புடன். என்னவோ அவரை இறுக்கி அணைத்துக்கொள்ள வேண்டும் போலிருந்தது. அவர் காலடியில் விழுந்து தான் செய்த பாவத்தை எல்லாம் அழுது தீர்க்க நினைத்தான். அவர் கண் விழித்துத் தன் முகம் பார்த்து இரண்டு வார்த்தை பேசிவிட மாட்டாரா என்று ஏங்கினான்.

அவர் விரல்கள் அவன் விரல்களை மெல்லப் பற்றின. அந்தக் கையில் மெல்லிய நடுக்கம். அதை உணர்ந்தவனின் உள்ளமும் நடுங்கியது. மூச்செடுக்கக் கூட மறந்தவனாக அவரையே பார்த்திருந்தான். புருவங்கள் சுருங்க மெல்ல விழிகளைத் திறந்தார் இந்துமதி.

அவன் விழிகளில் கண்ணீர். “அம்மா!” என்றான் மீண்டும். “உங்களுக்கு ஒண்டும் இல்ல அம்மா. ஒண்டுக்கும் பயப்பிடாதீங்க.” என்றான் அவர் தலையை வருடி.

சில கணங்களுக்கு அவனையே பார்த்தார். “ஏன் தம்பி உனக்குப் புத்தி இப்பிடிப் போனது?” பேச முடியாமல் இருந்தாலும் சிரமப்பட்டுப் பேசினார்.

“அம்மா!” அவர் முன்னே இருக்க முடியாமல் குன்றியவனுக்கு அவர் முகத்தைப் பார்க்க முடியவில்லை.

“உன்னால நாங்க என்ன பாடெல்லாம் படுறோம் எண்டு உனக்குத் தெரியுமா? தினம் தினம் அழுறோம். வெளில எதையும் சொல்லவும் ஏலாம, மறக்கவும் ஏலாம கிடந்து துடிக்கிறோம். ஏன் இப்பிடி எல்லாரின்ர வாழ்க்கையையும் மண்ணை அள்ளிப் போட்டனி?”

“அம்மா!” அவனால் முடியவே இல்லை. அவர் கைகள் இரண்டையும் எடுத்துத் தன் கண்களில் ஒற்றிக்கொண்டான். “ஏன் இப்பிடிப் புத்தி பேதலிச்சுப் போனது எண்டு எனக்கே தெரியேல்ல அம்மா. ஆனா இப்ப நடந்ததை எல்லாம் நினைச்சு நினைச்சு அழுறன். உங்கட கால்ல விழுந்து மன்னிப்புக் கேக்கிறன் அம்மா. என்னை மன்னிச்சிடுங்கோ ப்ளீஸ்!” என்று அழுதான்.

அது எதுவும் அவர் காதில் ஏறவேயில்லை. கொஞ்சம் கொஞ்சமாய் அவர் சுருதி ஏறிக்கொண்டே போனது. “சொல்லு! ஏனடா அப்பிடிச் செய்தனி? ஒண்டுக்கு ரெண்டு பொம்பிளைகளின்ர வாழ்க்கை அழிச்சு நீ எப்பிடி எனக்குப் பிள்ளையா வந்து பிறந்தனி?” என்றவர் ஆவேசம் வந்தவர் போன்று அவனை உதறித் தள்ளினார்.

“அம்மா!”

“சீ! என்னை அப்பிடிக் கூப்பிடாத!” என்றவரின் ஆக்ரோசத்தில் அதிர்ந்து எழுந்து நின்றுவிட்டான் காந்தன். “எந்த முகத்தை வச்சுக்கொண்டு என்னைப் பாக்க வந்தனி? வெக்கமா இல்ல உனக்கு? வெளில போ முதல்!” என்று கத்தினார்.

அந்தச் சத்தத்தில் அடித்துப் பிடித்து ஓடி வந்தார் தாதிப்பெண். “என்ன என்ன சத்தம் இங்க? அவவைக் கதைக்க வைக்காதீங்க எண்டு சொல்லி விட்டா என்ன செய்து வச்சிருக்கிறீங்க?” என்ற அவரின் பேச்சைக் கேட்கும் நிலையில் அவனும் இல்லை, அவரும் இல்லை.

“போடா வெளில. நான் செத்தாக் கூட என்னைப் பாக்க நீ வரக் கூடாது. உன்ர பாவம் என்னில படக் கூடாது. போ வெளில!” என்றார் ஆவேசமாக.

அவனால் அசையக்கூட முடியவில்லை. அவர் சொல்வதைக் கேட்டு வெளியே செல்ல வேண்டும் என்று கூடப் புத்தியில் உரைக்கவில்லை.

“நீ ஒரு பொம்பிளைப் பொறுக்கி. என்னையே எப்பிடிப் பாப்பாய் எண்டு தெரியாது. உனக்கு முன்னால படுத்துக் கிடக்க எனக்குக் கூசுது. போடா வெளில!” என்றதும் நொறுங்கிப்போய் அவர் காலடியில் தொய்ந்து விழுந்தான். “நீங்க என்ர அம்மாம்மா. ஏனம்மா இப்பிடி எல்லாம் கதைக்கிறீங்க? அம்மா…” என்று அவர் கால்கள் இரண்டையும் பற்றிக்கொண்டு அழுத்தவனை அப்போதும் உதறினார் அவர்.

அதற்குமேல் தாதிப்பெண் தாமதிக்கவில்லை. முதல் வேலையாக அவனை இழுத்துக்கொண்டுபோய் வெளியில் தள்ளிவிட்டார்.

இது எதுவும் தெரியாது தளிரோடு ஓட்டமும் நடையுமாகத் தாயின் அறையை நோக்கி ஓடி வந்துகொண்டிருந்தாள் அன்பினி.


தொடரும் . ..

சொறி மக்களே , இண்டைக்கும் குட்டி எபிதான் . சமாளிங்க . எல்லோருக்கும் ஹாப்பி வீக்கெண்ட் . திங்கள் சந்திப்போம் .
 
Last edited:

நிதனிபிரபு

Administrator
Staff member
அத்தியாயம் 51


எதிரில் வந்துகொண்டிருக்கும் யாரையும் கவனிக்கும் நிலையில் காந்தன் இல்லை. அந்தளவில் அன்னையின் வார்த்தைகள் அவனை மொத்தமாக அடித்துச் சாய்த்திருந்தன. இதற்கு அவர் ஒரு பிடி சோற்றில் விசத்தைக் கலந்து தந்திருக்கலாம்.

அவரைப் போய்… அவனைப் பெற்று, வளர்த்து, சீராட்டி வளத்த அவரைப்போய் அவன் எப்படி அப்படிப் பார்ப்பான்? அவன் செய்த தப்புக்கு இதைவிடவும் பெரிய தண்டனை யாராலும் தர முடியும் போல் இல்லை. அங்கிருந்த நாற்காலியில் விழுந்து முகத்தை மூடிக்கொண்டு குலுங்கி அழுதான்.

இப்படி ஒரு பேச்சைப் பெற்ற தாயிடமிருந்து கேட்ட பிறகும் அவன் வாழத்தான் வேண்டுமா? அழுக்கேறிப்போன த் உடலைத் தானே எரித்துக்கொள்ள வேண்டும் போலிருந்தது. அப்படி ஒரு ஆவேசமும் ஆத்திரமும் அவன் மீது அவனுக்கே உண்டாயிற்று.

இல்லை, இனி நான் வாழக் கூடாது! வாழவே கூடாது. ஒரு வேகத்துடன் முகத்தை அலுத்தித் துடைத்துக்கொண்டு அவன் எழுந்தபோது, “அப்பா!” என்கிற குரல் ஒரு கதறலாய் ஒலித்தது.

உயிர் துடிக்க நிமிர்ந்தான் காந்தன். மின்னலாய் ஓடி வந்து அவன் கால்களைக் கட்டிக்கொண்டாள் தளிரினி.

“தளிர்! செல்லம்” என்றபடி பெண்ணை அப்படியே அள்ளிக்கொண்டவனுக்கு மட்டுப்பட்டிருந்த அழுகை மீண்டும் வெடித்தது. சின்னவளும் அத்தனை நாள்களினதும் ஏக்கத்தைத் தீர்க்கிறவளாக அவன் கழுத்தை இறுக்கிக் கட்டிக்கொண்டு கதறினாள்.

“அப்பா எங்கப்பா போனனீங்க? ஏன் என்னைப் பாக்க வரேல்ல?” தன் மழலையில் கேட்டு கேட்டு கதறினாள்.

காந்தன் நிலைகுலைந்து போனான். அன்னையின் சுடு வார்த்தைகள் அவன் மீது கொதிநீரைக் கொதிக்க கொதிக்க வார்த்தது என்றால், பெற்ற மகளின் அவன் மீதான பாசம் அவனைச் சுட்டுப் பொசுக்கியது. கண்ணீருடன் நிமிர்ந்து தங்கையைப் பார்த்தான்.

உச்சியில் திலகமிட்டு மணமான பெண்ணாக நின்றவளைக் கண்டு அவன் உள்ளம் இன்னும் அழுதது. ஒரேயொரு தங்கை. அவள் வாழ்வின் முக்கியமான ஒரு நிகழ்வில் அவன் இல்லை. நாளைக்கு அவளுக்கு ஒன்று என்றால் துணை நிற்கவும் அவன் இல்லை. அவளும் அண்ணா என்று வரப்போவதில்லை.

அங்கே அன்பினையும் திகைத்துப்போய் நின்றிருந்தாள். எப்படியாவது தளிரை அன்னையின் கண்களில் காட்டிவிட வேண்டும் என்கிற தவிப்புடன் ஓடி வந்தவள், தளிர் அப்பா என்று கதறிக்கொண்டு தன் கையிலிருந்து குதித்திறங்கவும் ஒருகணம் தடுமாறிப்போனாள்.

நிமிர்ந்து பார்க்கக் கண் முன்னே அவள் தமையன்.

அவள் செய்வதறியாது நின்றது ஒரு கணம்தான். அடுத்த கணமே அவன் முகத்தை நிமிர்ந்தும் பாராமல், சின்னவளை ஒருவிதப் பிடிவாதத்துடன் அவனிடமிருந்து பிடுங்க முயன்றாள்.

அவன் அவளைத் தடுக்கவில்லை. தளிர்தான் தகப்பனின் கழுத்தைக் கட்டிக்கொண்டு அன்பினியிடம் வரமாட்டேன் என்று நின்றாள். “தளிர்!” என்றவளின் அதட்டல் அவளிடம் செல்லுபடியாகவே இல்லை.

“அவாவை விடுங்க!” அப்போதும் முகம் பாராமல் அவனிடம் சொன்னபடி தளிரைத் தூக்க அவள் செய்த முயற்சிகள் அத்தனையும் தோல்வியிலேயே முடிந்தன.

அவளை உதறித் தள்ளினாள் தளிர். “இல்ல, நான் வர மாட்டன், அப்பா வேணும்!” என்று அவளுக்குக் கால்களால் உதைத்தாள். சின்னவளின் மெல்லிய கால்கள் பட்டு அன்பினிக்கு வலித்தது. “தளிர் இப்ப வரப்போறீங்களா இல்லையா? நாங்க அப்பம்மாவைப் பாக்கப் போகோணும்!” என்று அதட்டியவளின் பேச்சை அவள் கேட்கவேயில்லை. இன்னும் அடித்தொண்டையிலிருந்து கத்தினாள்.

“என்ன இது? வருத்தக்காரர் படுத்திருக்கிற இடத்தில இவ்வளவு சத்தம். பிள்ளையைக் கூட்டிக்கொண்டு வெளில போங்கோ!” தாதி ஒருவரின் அதட்டலில் காந்தன் வெளியில் நடக்க, “தளிரைத் தந்திட்டுப் போங்கோ!” என்றாள் அன்பினி கோபக்குரலில்.

“கொஞ்சம் பொறு அன்பு. அவான்ர அழுகை நிக்கட்டும்.” என்றுவிட்டு அவன் வெளியே நடக்க, அன்பினிக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை.

அங்கே தவித்துக்கொண்டிருக்கும் அன்னை ஒரு பக்கம், அப்பா தமையனைப் பார்த்தால் என்னாகுமோ என்கிற பதற்றம் இன்னொரு பக்கம் என்றால், சுபாங்கி இதையெல்லாம் அறிந்தால் தன்னைக் கடித்துக் குத்தறிவிட மாட்டாளா என்று நினைத்ததுமே நடுங்கியது. கணவனும் கோபப்படுவானே!

இதற்குள் காந்தன் வைத்தியசாலைக்கு வெளியே வந்திருந்தான். மகள் முதுகைத் தடவி, ஆறுதல் வார்த்தைகள் சொல்லி, தேற்றி, முத்தமிட்டு, முகம் துடைத்துவிட்டு என்று எது செய்தும் அவள் கண்ணீர் நிற்பதாயில்லை.

அவனை அவளிடமிருந்து யாராவது பறித்துக்கொண்டு போய்விடுவார்களோ என்கிற பயத்தில் மிக மிக இறுக்கமாக அவன் கழுத்தைக் கட்டிக்கொண்டு அசையவே மாட்டேன் என்று நின்றாள். காந்தனுக்குக் கழுத்து வலித்தது. அதைவிட அதிகமாய் நெஞ்சம் வலித்தது.

சின்ன மகள். அவளைப்போய் அவனுக்காக இப்படித் துடிக்க வைத்துவிட்டானே! அவள் காலில் விழுந்து அழ வேண்டும் போலிருந்தது அவனுக்கு.



விறுவிறு என்று அவர்களிடம் வந்த அன்பினி, “உங்களை ஆர் இஞ்ச எல்லாம் வரச் சொன்னது? அண்ணி பாத்தா என்னைத்தான் பேசுவா. இருக்கிற பிரச்சினைகள் போதாது எண்டு எங்களை ஏன் இப்பிடி வதைக்கிறீங்க!” என்று சிடுசிடுத்தாள்.

“அம்மாவைப் பாக்க வந்தனான் அன்பு.”

“அவான்ர இந்த நிலைக்குக் காரணமே நீங்கதான். முதல் தளிரைத் தந்திட்டு நடவுங்க நீங்க!” முகம் சினத்தில் சிவக்க மீண்டும் தளிரை வாங்க வந்தவளின் ஒரு கையைப் பற்றித் தடுத்தான் காந்தன்.

“எப்பிடி இருக்கிறாய்?” அடைத்த குரலில் வினவினான்.

அவள் விழிகள் அவனை எரித்தன. “இவர் என்னை நல்லாத்தான் வச்சிருக்கிறார். ஆனா நான்? நல்லாவே இல்ல. அம்மா அப்பா நிம்மதியாவே இல்ல. அண்ணி, நான் பாத்தா அன்னிதானா இவா எண்டு நினைக்கிற அளவில ஆளே மாறிப்போய் இருக்கிறா. இது எல்லாத்துக்கும் காரணம் நீங்க. இப்ப வந்து கேக்கிறீங்க, எப்பிடி இருக்கிறாய் எண்டு?” அழுகையும் ஆத்திரமுமாக அவள் சீறிக்கொண்டிருக்கையில்தான் அங்கே வந்தாள் சுபாங்கி.

காந்தனை மகளோடு கண்டதும் அவள் உள்ளம் கொதித்துப் போனது. ஸ்கூட்டியை நிறுத்தக்கூட இல்லை. அப்படியே போட்டுவிட்டு ஓடி வந்தவள், “இதுக்காடி என்ர பிள்ளையை தூக்கிக்கொண்டு வந்தனா?” என்றபடி அன்பினியைப் பிடித்துத் தள்ளிவிட்டாள்.

“ஏய் சுபா! அவளோட என்னத்துக்கு சண்டைக்கு போறாய்? அவளுக்கு நான் வந்ததே தெரியாது!” என்றபடி தங்கையை எட்டிப் பிடித்து இழுத்துத் தன் பின்னால் நிறுத்திக்கொள்ளவும் சுபாங்கிக்கு வெறியே பிடித்துக்கொண்டது.

அன்றும் இதே இவளுக்காகத்தானே அவளை அடக்கினான்.
அடுத்த நொடியே ஆவேசம் கொண்டவள் போட்டிருந்த செருப்பை கழற்றி அவனை அடி வெளுத்திருந்தாள்.

“கேடுகெட்ட நாயே! என்ர பயறை சொல்ல உனக்கு எவ்வளவு தைரியமடா? இதில கோபம் வேற வருதா உனக்கு? என்னை அதட்ட நீ ஆரடா? முதல் பிள்ளையைத் தா!” என்றவள் வெறி வந்தவள் போன்று மகளை அவனிடமிருந்து பிய்த்து எடுத்துத் தன் பக்கம் வைத்துக்கொண்டாள். சின்னவளோ திரும்பவும் தகப்பனிடம் போகக் கதறினாள்.

அன்பினிக்கு என்ன செய்வது என்று தெரியவேயில்லை. அவர்களைச் சுற்றிக் கூட்டம் சேர ஆரம்பித்தது. மிகுந்த அவமானமாக உணர்ந்தவள் தகப்பனிடம் போகத் துடிக்கும் தளிரைத் தூக்கி வைத்துக்கொண்டாள்.

சுபா சுற்றியிருக்கும் சூழலை உணரும் நிலையில் இல்லை. அத்தனை காலமும் நெஞ்சில் அடக்கி அடக்கி வைத்திருந்த வெறி வீறு கொண்டு எழுந்து நின்றதில் செருப்புப் பிய்ந்து போகும் வரையிலும் அடித்துத் தீர்த்திருந்தாள். “வாயில விரல் வச்சா காட்டுறாய் எனக்கு நாயே! அடங்கி இருக்கேலாமத் தெருப் பொறுக்கின அற்பம் நீ, நீ என்னை அடக்கிறியாடா? எவ்வளவு தைரியம் உனக்கு? உன்னைக் கொன்டாத்தானடா எனக்கு வெறி அடங்கும்!” என்று மற்றைய செருப்பையும் எடுத்து அடிக்கப் போனாள்.

அவள் சத்தம் கேட்டு ஓடிவந்த திருநாவுக்கரசு, நடுவில் புகுந்து அவளைத் தடுத்திருந்தார்.

“என்னம்மா இது, இத்தின பேர் பாக்கிற இடத்தில வச்சு?” எவ்வளவு பெரிய தலையிறக்கம்? மிகுந்த அவமானமாய் உணர்ந்தார் அவர்.

“பாத்தா என்ன பாக்கட்டும். அப்பதானே இவனைப்பற்றி எல்லாருக்கும் தெரிய வரும். முதல் இவனை ஆர் இஞ்ச வரச் சொன்னது? என்ர பிள்ளையத் தூக்க இவனுக்கு என்ன உரிமை இருக்கு? அத முதல் அவனிட்டக் கேளுங்க!” என்றுவிட்டுத் திரும்பியவள் கண்ணில் அங்கே அவமானமும் அழுகையுமாகச் சின்னவளைப் பிடித்து வைத்துக்கொண்டு நின்ற அன்பினி பட்டாள்.

அப்படி ஒரு ஆத்திரம் வந்தது அவளுக்கு. விழிகளில் நெருப்புப் பறந்தது. “எல்லாம் உன்னால! என்னடி அப்பனையும் பிள்ளையையும் சேர்க்கப் பாக்கிறியா? கொண்டு வா என்ர பிள்ளையை.” என்று அவளிடமிருந்து மகளைப் பறித்து எடுத்தாள்.

தளிரின் தகப்பனுக்கான கதறலையும் கண்ணீரையும் கவனிக்கும் நிலையில் அவள் இல்லை. அந்தளவில் நெஞ்சு கொதித்தது. பத்ரகாளியாக நின்றவள், “இனிமேல் என்ர வீட்டு வாசப்படி மிதிச்சுப் பார். உனக்கு இருக்கு!” என்று அன்பினியிடம் சீறிவிட்டுப் போகவும் திருநாவுக்கரசின் முகம் இறுகியது.

அந்த இடத்தில் வைத்து எதுவும் கதைக்க விரும்பவில்லை அவர். கையை நீட்டி மகளை அணைத்தார். அவள் ஓடி வந்து அவர் தோளில் முகத்தைப் புதைக்கவும் ஆதரவாக அவள் தலையை வருடிக் கொடுத்தவருக்கு மனதே விட்டுப் போனது. இப்படிச் சந்தி சிரித்து வாழும் ஒரு வாழ்க்கையை வாழத்தான் வேண்டுமா என்று நினைத்தார்.

உள்ளம் எரிமலையெனக் கொதித்தது. திரும்பிக் காந்தனைப் பார்த்தார். அவர் அவனைப் பார்த்துச் சீ என்று சொல்வது போலிருந்தது அவனுக்கு. உடலும் உள்ளமும் கூனிக் குறுகிப் போனவன் அப்படியே அவர் காலிலேயே நெடுஞ்சாண்கிடையாக விழுந்தான்.

திருநாவுக்கரசின் உடலும் உள்ளமும் இறுகியது. வேகமாகப் பின்னால் நகர்ந்து அவனைத் திரும்பியும் பாராமல் அன்பினியோடு வைத்தியசாலையை நோக்கி நடந்தார்.

“நீங்க போய் அம்மாவோட இருங்கோ பிள்ளை.” என்று அவளை உள்ளே அனுப்பிவிட்டு அவர் திரும்பவும் அவள் பயந்துபோனாள்.

“எங்கயப்பா போறீங்க? நீங்களும் வாங்கோ!” அடக்கிய கண்ணீரும், உடைந்த குரலுமாக அவர் கரம் பற்றி வினவினாள்.

“நீங்க போங்கோம்மா. நான் இப்ப வாறன்.” பொறுமையாகவே சொன்னார் அவர்.

அந்தப் பொறுமைதான் அவளை பயமுறுத்தியது. “அப்பா, அம்மா தளிரைக் கேப்பா. நீங்க வந்து சமாதானம் சொல்லுங்கோ!” என்றாள் அப்போதும் அவர் கையை விடாமல்.

ஒரு கணம் ஆழ்ந்து மூச்சை இழுத்துவிட்டவர். “அப்பா தளிரைக் கூட்டிக்கொண்டு வரப் போய்ட்டாராம் எண்டு சொல்லுங்கோ. என்றுவிட்டுத் திரும்பியவர் மீண்டும் நின்று திரும்பி, “இனிக் கிழமைல ஒருக்கா எண்டாலும் எங்கட வீட்டுக்குத் தளிர் வருவாவாம் எண்டும் சொல்லி விடுங்கோ!” என்றுவிட்டு நடந்தவரின் மனத்தில் இன்று அத்தனைக்கும் முடிவு கண்டுவிடும் உறுதி வந்திருந்தது.


தொடரும் . ..

இவ்வளவுதான் எழுத வந்தது . ப்ளீஸ் பேசாதீங்க .
 
Status
Not open for further replies.
Top Bottom