கேட்பார் இன்றிக் காதல்! - கதைத்திரி

Status
Not open for further replies.

நிதனிபிரபு

Administrator
Staff member
*****

அன்பினிக்கு அன்று முழுக்க வகுப்புகள் இருந்தன. அணைத்து வைக்கப்பட்டிருந்த கைப்பேசியை இடைவேளையின்போதுதான் எடுத்துப் பார்த்தாள். அன்னை பலமுறை அழைத்திருப்பது தெரியவும் அவள் புருவங்கள் சுருங்கின. இப்படி அழைக்கமாட்டாரே! அப்போதே என்னவோ என்று மனம் சொல்ல, வேகமாக அவருக்கு அழைத்தாள். அழுகையும் ஆத்திரமுமாக அவர் கொட்டித் தீர்த்தவற்றை எல்லாம் கேட்டவள் திக்பிரம்மை பிடித்தவள் போன்று அப்படியே அமர்ந்துவிட்டாள்.

அவளுடைய அண்ணாவா? ஒரு பெண்ணோடு தவறான உறவு வைத்திருந்தானா? நினைக்கவே அவளுக்கு உடலும் உள்ளமும் கூசிற்று. சீ என்று அருவருத்தாள்.

அவளுக்கே எவ்வளவு புத்தி சொல்லுவான். எத்தனை அக்கறையாகப் பார்த்துக்கொள்வான். அவனா? ஆனால், திடீரென்று அவள் திருமணத்துக்கு அவ்வளவு அவசரப்பட்டானே. அன்று, எல்லாம் உன் நன்மைக்காகத்தான், நான் சொல்வதைக் கேள் என்றானே. இதனால்தானா? அவளுக்கு ஒன்றுமே விளங்கமாட்டடேன் என்றது.

இனி அண்ணியின் நிலை? அபயன் என்ன முடிவை எடுப்பான்? என்னவோ அண்ணி சொன்னதற்கு அவன் அசையாமல் நின்றான் என்பது, சூடான கண்ணீரை அவள் கன்னங்களில் இறக்கினாலும் அவளால் அவனைத் தவறாக நினைக்க முடியவில்லை. பெரும் துரோகத்தில் துடித்துப்போய் நிற்கும் ஒரு அக்காவின் பொறுப்புள்ள தம்பியாக வேறு என்னதான் அவனாலும் செய்ய முடியும்?

“நான் போய் அண்ணாவைப் பாக்கவா அம்மா. என்ன நடந்தது எண்டு கேக்கவா?” தமையனின் முகம் பார்த்தே வளர்ந்தவள் அவள். எப்போதுமே அவளுக்கு ஒரு உதாரணமாக, பொறுப்பானவனாக, பக்குவமானவனாக மட்டுமே பார்த்தவனை அத்தனை இலகுவாய் ஒரு துரோகத்துடன் இணைத்து அவளால் யோசிக்க முடியவில்லை.

ஆனால் இந்துமதியோ சீறினார். “சீச்சீ! ஒரு குடும்பப் பொம்பிளைப் பிள்ளை போற இடம் இல்ல அது. இனி உனக்கு அவன் அண்ணாவும் இல்ல, ஆட்டுக்குட்டியும் இல்ல. எங்கயாவது பாத்தாலும் முகத்தைத் திருப்பிக்கொண்டு வந்துடோணும் சொல்லிப்போட்டன். உன்னையே அவன் என்ன கண்ணால பாப்பான் எண்டு ஆருக்குத் தெரியும்?” என்றதும், “அம்மா என்னம்மா இது? இப்பிடி எல்லாம் கதைக்காதீங்க அம்மா.” என்று உடைந்து அழுதாள் அவள்.

அவரும் அழுதார். அவர் பெற்ற பிள்ளையைப் பார்த்து அவரே இப்படிக் கதைக்கும் இடத்தில் வைத்துவிட்டானே! “வேற என்ன பிள்ளை சொல்லச் சொல்லுறாய்? தன்ர வாழ்க்கையைக் கெடுத்ததும் இல்லாம உன்ர வாழ்க்கையையும் கெடுத்திட்டானே. இனி அபயன் உன்னைக் கட்டமாட்டார். எனக்கு நம்பிக்கை இல்ல. ஆனா அவேயச் சொல்லிக் குற்றமும் இல்லை. எங்கட பிள்ளை கேடுகெட்டுப் போயிட்டான். அவனுக்குத் தங்கச்சியாப் பிறந்த பாவத்துக்கு அமைய இருந்த நல்ல வாழ்க்கையும் போச்சு. வேற ஒரு இடமாவது உனக்கு அமைய வேண்டாமா? அதுக்கு அவனை ஒதுக்கித்தான் வைக்கோணும். இல்லாட்டியும் அவன் இனி எங்களுக்குக் காலத்துக்கும் வேண்டாம்.” என்றுவிட்டு அவர் அழைப்பைத் துண்டித்ததும் முகத்தை மூடிக்கொண்டு அழுதாள் அன்பினி.

எதற்கு அழுகிறோம், எதை நினைத்து அழுகிறோம் என்று தெரியாமல் அழுதாள். நெஞ்சு வெடித்துக்கொண்டு வந்தது. அவளால் எதையும் யோசிக்கக் கூட முடியவில்லை.

இவள் இங்கே அன்னைக்கு அழைக்கவும் அவர்கள் கொறிப்பதற்கு ஏதாவது வாங்கி வருகிறேன் என்றுவிட்டு காண்டீனுக்கு போய் வாங்கிக்கொண்ட வந்த நிர்மலா, அவள் அழுவதைக் கண்டதும் ஓடி வந்தாள்.

கையில் இருந்த ரோல்ஸை பக்கத்தில் வைத்துவிட்டு, “ஏய், என்னடி என்னத்துக்கு அழுறாய்?” என்றாள் பதற்றமாக “அன்பு, என்னடி, என்ன எண்டு சொல்லன்?” என்று அவள் முகம் நிமிர்த்திப் பார்க்க முனைய, அதற்கு விடாமல் அவள் இடுப்பைக் கட்டிக்கொண்டு, வயிற்றில் முகம் புதைத்துக் கண்ணீர் உகுத்தாளே தவிர, ஏதும் சொன்னாள் இல்லை.

இதெல்லாம் சொல்லுகிற விடயமா என்ன? முதலில் எப்படிச் சொல்லுவாள்? என்னோடு கூடப்பிறந்தவனுக்கு இன்னொருத்தியோடு தொடர்பாகி, அவள் வயிற்றில் அவன் குழந்தையைச் சுமக்கிறாளாம், அதனால் அழுகிறேன் என்றா? பல்கலையில் இந்த விடயம் தெரிய வந்தால் எப்படிப் பார்ப்பார்கள்? இவ்வளவு நாள்களும் அதே சந்திரகாந்தனின் தங்கை இவள் என்று மதிப்புடனும் மரியாதையுடனும் நடத்தப்பட்டவள் நிலை இனி என்னாகும்?

“நான் அவசரமா முல்லைத்தீவுக்குப் போகோணும் நிம்மி.” என்றபடி கண்களைத் துடைத்துக்கொண்டு
எழுந்தாள்.

“அங்கிள் அன்ட்ரிக்கு ஏதும் பிரச்சினையா?” அவள் வவுனியாவுக்குப் போகிறேன் என்றதும் தானாய் ஒன்றை ஊகித்து வினவினாள்.

“அது… அது அம்மாக்கு உடம்பு சரியில்லையாம். அதான். இங்க கிளாஸ்லயும் சொல்லிவிடு!” என்றவள் தன் உடைமைகளை எல்லாம் பொறுக்கிக்கொண்டு விடுதிக்கு நடந்தாள்.

உள்ளம் அபயனையே சுற்றி சுற்றி வந்தது.

அவனுக்கு அழைப்போமா, வேண்டாமா என்று இரு மனமாகத் தடுமாறினாள். சும்மாவே கோபக்காரன். இதற்கு என்ன சொல்லுவான்? அண்ணியைப் போன்று அவனும் அவளைத் தமையனோடு ஒப்பிட்டுவிடுவானா? அப்படி ஒரு வார்த்தை அவனிடமிருந்து வந்ததோ மொத்தமாய் இறந்தே விடுவாள். கழுத்து செயினை இறுக்கிப் பற்றிக்கொண்டு அறையின் கட்டிலில் அப்படியே அமர்ந்துவிட்டாள்.

அந்த செயின் மனத்தில் மெல்லிய ஆறுதலை உண்டாக்கிற்று. இரண்டு வீடுகளுக்கும் வேண்டுமானால் அவர்கள் இருவருக்கும் திருமணத்துக்குப் பேசியிருக்கிறார்கள் என்று மட்டும்தான் தெரியும். ஆனால், அவர்களுக்குத் திருமணம் முடிந்துவிட்டது என்பதும், அவள் கழுத்தில் கிடப்பது அவன் கட்டிய தாலி என்பதும் அவனுக்கும் அவளுக்கும் மட்டும்தான் தெரியும். அப்படியானால் அவள் அவன் மனைவி. மனைவியைக் கைவிடுவானா அவளின் அபயன்? அதுவும் அப்படித் துரத்தி துரத்தி நேசித்தவன் எப்படி அவளை விடுவான்?

என்ன, அவர்கள் சேர்வதற்கு இன்னும் காலமெடுக்கும். அதுவரையில் அவள் பொறுமையாகத்தான் இருக்க வேண்டும். இருப்பாள். அவன் கோபித்தாலும் தாங்கிக்கொள்வாள். காந்தனுக்குத் தங்கையாகிப்போனாளே! அவளின் அபயனுக்காக அதைக்கூடச் செய்யமாட்டாளா என்ன?

அவளுக்குள்ளேயே ஒரு தெளிவு கிடைத்ததும் அவனுக்கு அழைத்தாள். அவன் அழைப்பை ஏற்கவே இல்லை. கண்களில் கண்ணீர் அரும்பிற்று. சற்று நேரம் அமைதியாய் இருந்தாள். பின், “அபய், என்ன நடக்குது அங்க? அம்மா என்னவெல்லாமோ சொல்லுறா. நீங்களும் எடுக்கிறீங்க இல்ல. எனக்குப் பயமா இருக்கு. உங்களால முடிஞ்சா ஒரு நிமிசம் எடுத்து என்னோட கதைங்க பிளீஸ். எனக்கு என்ன சொல்லுறது, என்ன செய்றது ஒண்டும் தெரியேல்ல அபய். அண்ணி பாவம், அவாவைக் கவனமாப் பாத்துக்கொள்ளுங்கோ. தளிர்… தளிர் கவனம் அபய்.” என்று முதலில் அனுப்பிவிட்டாள்.

இனி அவர்களின் திருமணம் நடக்காது என்று சுபாங்கி சொன்னதைப் பற்றி இந்த நேரத்தில் பேசுவதா என்று அவளுக்குத் தெரியவில்லை. ஆனால், அவன் அவள் அழைப்பை ஏற்காமல் இருப்பது பயத்தைக் கிளப்பிற்று. அழைப்பை ஏற்று, அவளோடு கத்திவிட்டு வைத்திருந்தான் என்றாலாவது கொஞ்சம் ஆறியிருப்பாள் போலும். இந்த அமைதிதான் பயமுறுத்தியது.

அதில் திரும்பவும், “இப்ப இது கதைக்கக் கூடாதுதான். அண்ணியும் கோவத்திலதான் அப்பிடிச் சொல்லி இருப்பா எண்டும் தெரியும். ஆனாலும்… அது அண்ணி சொன்ன மாதிரி எல்லாம் நடக்காதுதானே அபய்? ஆர் என்ன சொன்னாலும் உங்களுக்கு என்னைப் பற்றித் தெரியும் எல்லா? என்ர அபய் எண்டைக்கும் என்ர அபய்தான் எண்டு எனக்குத் தெரியும். எண்டாலும்… எண்டாலும் என்ன நடந்தாலும், எவ்வளவு காலம் ஆனாலும் உங்கட அன்பா உங்களுக்காக மட்டுமே இருப்பா அபய். அத மட்டும் மறந்துடாதீங்க ப்ளீஸ்!” என்று தழுதழுத்த குரலில் பேசி அனுப்பி வைத்தாள்.

அவன் ஏதும் பதில் போடுவானா என்று காத்திருந்து பார்த்தாள். ஒரு பதிலும் இல்லை என்றதும் இன்னும் கண்ணீர் பெருகிற்று. முகத்தைத் தண்ணீரால் அடித்துக் கழுவிக்கொண்டு முல்லைத்தீவுக்குப் புறப்பட்டாள்.

இங்கே தன் அறைக்குள்தான் அமர்ந்திருந்தான் அபயன். அவள் அழைத்தபோது அவன் கைப்பேசி அவன் முன்னால்தான் இருந்தது. அவள் பெயரைப் பார்த்ததுமே அவன் கண்கள் சிவந்தன. அழைப்பை ஏற்காமல் கைப்பேசியையே வெறித்தபடி அமர்ந்திருந்தான். அப்போதுதான் அழைப்பு நின்று அவளிடமிருந்து இரண்டு குறுந்தகவல்கள் வந்து விழுந்தன. ஒரு முறை அவன் தொண்டை ஏறி இறங்கிற்று. சில வினாடிகளுக்கு விழிகளை மூடி யோசித்தான். அடுத்த கணமே எதைப்பற்றியும் யோசிக்காமல் அவள் அனுப்பிய குறுந்தகவலைக் கேட்காமலேயே அழித்துவிட்டு, அவளையும் தன் கைப்பேசியில் தடை செய்துவிட்டான்.

தொடரும்...

சொறி மக்களே, நேற்றில் இருந்து சைட் வேலை செய்ய இல்ல. இப்ப ஓகே. தடங்கலுக்கு வருந்துகிறோம்:ROFLMAO:
 
Last edited:

நிதனிபிரபு

Administrator
Staff member
அத்தியாயம் 21


முல்லைத்தீவு டவுணுக்குள் சொந்தமாக அரிசிக்கடை வைத்திருப்பவர்தான் திருநாவுக்கரசு. அதன் மூலம்தான் அங்கேயே புடவைக்கடை வைத்திருக்கும் குழந்தைவேலுவின் அறிமுகம் கிடைத்து, காந்தனுக்குச் சுபாங்கியைப் பேசிக் கட்டி வைத்திருந்தார்.

அதுவரை காலத்தில் என் கடையை வந்து நீ பார்த்துக்கொள் என்று மகனை அவர் கேட்டதே இல்லை. படி, படித்து நல்ல உத்தியோகத்துக்குப் போ, உயர்ந்த நிலைக்கு வா என்று சொல்லி சொல்லி வளர்த்து, சொன்னதுபோலவே அவனை நல்ல இடத்தில் இருத்தியவரும் கூட.

அதன் பின்னான நாள்களில் அவன் வகிக்கும் பதவியையும் அதன் மூலம் கிடைக்கும் மரியாதைகளையும் கண்டு, ‘இவன் என் மகன்’ என்று தள்ளி நின்று அவனை அழகு பார்ப்பவர். அன்பினி அவரின் செல்லப் பெண் என்றால் அவன் அவரின் பெரும் நம்பிக்கைக்குரியவன்.

வீட்டின் பொறுப்பைக் கண்ணுக்குத் தெரியாமலேயே அவனிடம் எப்போதோ ஒப்படைத்திருந்தார். தனக்கு ஒன்று நடந்தாலுமே தன்னிடத்திலிருந்து இந்தக் குடும்பத்தைத் தாங்குவான் என்று மலைபோல் நம்பி, இத்தனை காலமும் கவலையற்று இருந்தவர்.

வெளிப்படையாக இதையெல்லாம் அவர் அவனிடம் சொல்லாதபோதிலும் தந்தைக்குத் தன்னை மிகவும் பிடிக்கும் என்பதையும், தன் மீது மிகுந்த அன்பும் நம்பிக்கையும் கொண்டிருக்கிறார் என்பதையும் காந்தனும் உணர்ந்துதான் இருந்தான்.

சுபாக்கு மட்டுமன்று அப்படியான தந்தைக்கும் அவன் செய்தது மிகப் பெரிய நம்பிக்கைத் துரோகம். அதனால்தான் தன்னைப் பற்றி எல்லோருக்கும் தெரிய வர முதல் அன்பினிக்குத் திருமணத்தை முடித்து வைத்து, குறைந்த பட்சமாகத் தந்தையின் அந்த நம்பிக்கையையாவது காப்பாற்றிவிட எண்ணினான்.

கடைசியில் அதுவும் நடவாது என்று அம்மாவும் அப்பாவும் சொன்னதில் இன்னுமே உடைந்துபோனான். நினைவு தெரிந்த காலத்திலிருந்தே தவறான எண்ணங்களினாலும், கூடாத செய்கைகளினாலும், கூடா நட்புகளோடும் அவன் வாழ்க்கை அமைந்திருக்க இதையெல்லாம் தூசாகத் தட்டிவிட்டுப் போயிருப்பானாக இருக்கும்.

அப்படியல்லாமல் பிறப்பிலிருந்தே நல்ல பெற்றோரால் நற்பண்புகள் சொல்லிக்கொடுக்கப்பட்டு வளர்க்கப்பட்ட அவன், எதிர்பாராமல் ஒரு பெண்ணின் மீது கொண்ட சபலத்தினாலும், அந்தச் சபலத்தை அடக்கி, உணர்வுகளைத் தன் கட்டுக்குள் வைத்துக்கொள்ள முடியாமல் பலகீனப்பட்டுப் போனதாலும் பெரும் தப்பை இழைத்ததுமல்லாமல், அதைப் போனால் போகிறது என்று கடக்க முடியாமல் கிடந்து துடிக்கிறான்.

இனி என்றைக்கும் சுபாங்கி தொடங்கி தளிர் வரை யாரினதும் நம்பிக்கையைப் பெறவோ, தன் தப்புகளை எல்லாம் நேராகிக்கொண்டு அவர்களின் முன்னால் சென்று நிற்கவோ அவனால் முடியவே முடியாது.

அதை நினைக்க நினைக்க அபயனால் உண்டான உடல் வலியைக் காட்டிலும் இந்த வலி அதிகமாய் இருந்தது. அதுவும் அவன் தங்கை, அவனுக்குத் தங்கையாய்ப் போனதாலேயே ஆசைப்பட்டவனைக் கரம் பிடிக்காமல் நிற்கப் போகிறாளா?

அவளுக்கும் இதெல்லாம் தெரிந்திருக்குமா? என்ன நினைத்திருப்பாள் அவனைப் பற்றி? கேவலமானவன், அசிங்கமானவன் என்றுதானே? என்னவோ அவளே அவன் முன்னால் வந்து நின்று காறி உமிழ்வது போலிருக்கவும் அவமானத்தில் உயிர் போய் வந்தது அவனுக்கு.

ஆனால், எதற்காகவும் அவள் நேசம் அழியக் கூடாது. இரு வீட்டினருக்கும் தெரியாதுபோனாலும் அவளும் அபயனும் நேசிக்கிறார்கள் என்று அவனுக்குத் தெரியுமே. வேகமாக அபயனுக்கு அழைத்தான். அவன் அழைப்பை ஏற்கவே இல்லை. ஒரு கோபம் வந்தது. அவன் தப்பானவன்தான். அதற்கென்று அவன் தங்கை என்ன தவறு செய்தாளாம்? நேசித்துவிட்டு இப்படித்தான் அவளை வேண்டாம் என்பானா? அதுவும் ஒரு வகையான நம்பிக்கைத் துரோகம்தானே!

அபயனோடு எப்படியாவது கதைத்து, அன்பினியின் திருமணத்தை நடத்தி வைக்க வேண்டும் என்கிற எண்ணத்தோடு எழுந்து, முல்லைத்தீவுக்குப் புறப்பட்டான்.

அவனால் எழுந்துகொள்ளவே முடியவில்லை. குளித்து, உடை மாற்றுவதற்குள்ளேயே எத்தனையோ முறை அம்மா என்று அலறியிருந்தான். ஒரு பிடிவாதத்துடன் வாகனத்தை எடுத்தவன் அபயனுக்கு விடாது அழைத்துக்கொண்டே இருந்தான்.

“அபயன், உனக்கு என்னோடதான் கோவம். நான் செய்தது பெரிய பிழைதான். ஆனா எனக்கு உன்னோட முக்கியமாக் கதைக்கோணும். ப்ளீஸ் கோல் எடு!” என்று வாயால் பேசியும் அனுப்பிப் பார்த்தான். அப்போதும் அவன் எடுக்கவே இல்லை.

இவனும் விடவில்லை. அங்கே அவர்களின் வீட்டுக்கோ இவனின் வீட்டுக்கோ இவனால் போக முடியாது. வெளியேதான் சந்தித்தாக வேண்டும். அதற்கு அவன் அழைப்பை ஏற்றால்தான் எங்காவது வா, சந்திக்க வேண்டும் என்று சொல்ல முடியும். அதில் ஒற்றைக் கையால் வாகனத்தைச் செலுத்தியபடி அவனுடைய இலக்கத்தைக் கைப்பேசியில் திரும்பவும் அழுத்திவிட்டு நிமிர்ந்தவன் அதிர்ந்துபோனான்.

கைப்பேசியில் கவனமாக இருந்ததில் அவன் வாகனம் தனக்கான தடத்திலிருந்து விலகி, வீதியின் அடுத்த பக்கத்துக்குப் போய்விட்டதை அப்போதுதான் கண்டு, எதிரில் மிக வேகமாக வந்துகொண்டிருந்த லொறியில் இடித்துவிடாமல் இருக்க, வேகமாக இந்தப் பக்கம் திருப்பிவிட முயல்வதற்குள் காலம் கடந்திருந்தது. இவன் எடுத்துவிடுவான் என்கிற நம்பிக்கையில் வேகத்தைக் குறைக்காமல் வந்த லொறி, கடைசி நேரத்தில் வேகத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் போனதில் படார் என்கிற பெரும் சத்தத்துடன் இவன் வாகனத்தோடு மோதியது. இவன் வாகனம் ஒரு சுற்றுச் சுழன்று, அப்படியே கரணமடித்து, எதிரில் நின்றிருந்த மரத்திலும் சென்று மோதி, ஒரு பக்கமாய்ச் சரிந்து விழுந்தது.

கடைசியாக, “அம்மா!” என்று கத்தியது மட்டுமே காந்தனின் நினைவில் இருந்தது. அதன் பிறகு மொத்தமாய்ச் சுய நினைவை இழந்திருந்தான்.

அடுத்து வந்த மணித்துளிகள் அத்தனையும் மிகுந்த களேபரத்துடனேயே கடந்து முடிந்தன.

அவனுடைய வாகனம் அவனுக்கு அரசாங்ககத்தினால் கொடுக்கப்பட்டது என்பதை வைத்து, அது எந்தத் துறை என்று கண்டுபிடித்து, ஒரு வழியாக அவன் சந்திரகாந்தன் என்று அறிந்து, அவன் வீட்டினருக்குத் தகவல் தெரிவித்தபோது, மீண்டும் ஒருமுறை அந்த வீடு அதிர்ந்து நின்றது.

அப்போதுதான் முல்லைத்தீவுக்கு வந்து இறங்கி இருந்தாள் அன்பினி. திரும்பவும் அவளுக்கு அழைத்த இந்துமதி, பெரும் பதற்றமும் கண்ணீருமாகக் காந்தனுக்கு நடந்த விபத்தைச் சொன்னபோது, முற்றிலுமாக நிலைகுலைந்து, நிற்கமுடியாமல் தள்ளாடி, பேருந்து நிலையத்தின் இடையளவிலான குந்தினைப் பற்றித் தன்னை நிலைப்படுத்திக்கொள்ள முயன்றாள் அன்பினி.

கண நேரம் என்றாலும் செய்த பாவத்துக்குத்தான் இப்படியாயிற்றோ என்று ஓடிய எண்ணத்தை அவளால் தவிர்க்க முடியாமல் போயிற்று.

“எனக்கு நெஞ்செல்லாம் பதறுது பிள்ளை. காலத்துக்கும் இனி அவன்ர முகத்தில முழிக்கக் கூடாது எண்டுதான் நினைச்சனான். ஆனா, பெரிய விபத்தாம். இடுப்பில நல்ல அடியாம். கால் முறிஞ்சு போச்சுதாம். மாற்றுடுப்புகள் எடுத்துக்கொண்டு அவசரமா வாங்கோ எண்டு சொல்லி இருக்கினம். உங்கட அப்பா அவன் செத்தாலும் எட்டியும் பாக்கக் கூடாது எண்டு சொல்லிப்போட்டு, வீட்டு வாசலிலேயே குத்திக்கொண்டு இருக்கிறாரம்மா. என்ன செய்ய எண்டு எனக்கு ஒண்டுமே தெரியேல்ல பிள்ளை.” இப்போதும் அவன் செய்த எதையும் மன்னிக்க அவர் தயாராயில்லை. ஆனால், பாரதூரமாக அடிபட்டு, சுய நினைவே இல்லாமல் வைத்தியசாலையில் கிடக்கிறான் என்று அறிந்தபோது அன்னை உள்ளம் அத்தனையையும் தாண்டித் துடித்தது.

அவள் விழிகளிலும் கண்ணீர். ஏன் இப்படியெல்லாம் அவர்களுக்கு நடக்கிறது என்று விளங்கமாட்டேன் என்றது. “இப்ப என்னம்மா செய்றது? அண்ணிக்குத் தெரியுமா?” என்று விசாரித்த்தாள்.

“தெரியிறதுக்கு ஆர் சொல்லுறது? நான் உங்கட அப்பாக்குத் தெரியாம எடுத்துப் பாத்தன். எடுக்கவே இல்ல.”

“நான்… நான் போய்ச் சொல்லவா?”

“இல்லப் பிள்ளை. வேண்டவே வேண்டாம். பிறகு உன்னையும் கேளாத கேள்வி எல்லாம் கேட்டு அனுப்புவீனம். நீ தாங்க மாட்டாயாம்மா.” என்றார் அவர் அவசரமாக.

“அதுக்காகச் சொல்லாம இருக்கேலாதுதானேம்மா.”
 
Last edited:

நிதனிபிரபு

Administrator
Staff member
அவருமே எப்படியாவது அவர்களுக்குத் தெரிவித்துவிடத்தான் விரும்பினார். இதனாலேயே சுபாங்கி அவனைப் பார்க்கச் சென்று, அதனாலேயே சற்று மனம் மாறி, நிரந்தரப் பிரிவு என்கிற நிலைக்குப் போகாமல் இருந்துவிட மாட்டார்களா என்று யோசித்தார். நிச்சயமாய் இதில் நியாயம் என்பது மருந்துக்கும் இல்லை என்று தெரியும். ஆனால், ஒற்றைக் குருத்தாய்ப் பேத்தி இருக்கிறாளே! அவளின் எதிர்காலத்தையும் யோசிக்க வேண்டுமே!

அதில், “போகாம கோல் பண்ணி பாரம்மா. அப்பாக்குத் தெரிஞ்சாக் கத்துவார்தான். ஆனா சொல்லாம விடுறது சரி மாதிரி எனக்குத் தெரியேல்ல பிள்ளை.”

“எடுக்காட்டி?”

“எடுக்காட்டியும் போக வேண்டாம் பிள்ளை. மெசேஜ மட்டும் அனுப்பிப்போட்டு வா. இல்ல, உன்னைக் கூட்டிக்கொண்டு வர அப்பாவை அனுப்பவா?”

“இல்லை வேண்டாம். ஆனந்தன் அண்ணாவை வரச்சொல்லி, நான் ஆட்டோவிலேயே வாறன்.” என்றுவிட்டு அழைப்பைத் துண்டித்தவளுக்குக் கைகால்கள் இயங்கவே இயங்காதோ எனுமளவுக்கு நடுங்கின.

ஒன்றுக்கு மேல் ஒன்று என்று நடந்துகொண்டிருக்கும் நிகழ்வுகள் அவளைப் பெரும் அதிர்வுக்கு உள்ளாக்கியிருந்தன. கையோடு கொண்டுவந்த தண்ணீரை எடுத்து முகத்தை அடித்துக் கழுவிக்கொண்டு, தொண்டையிலும் சரித்தாள்.

கொஞ்சமே கொஞ்சம் தெளிவு வந்தது. முதல் வேலையாக அவர்களுக்கு நிறையக் காலமாகத் தெரிந்த ஆட்டோ ஓட்டுநர் ஆனந்தனுக்கு அழைத்து, பேருந்து நிலையத்துக்கு வரச் சொல்லிவிட்டு அபயனுக்கு அழைத்தாள். அழைப்புப் போவேனா என்றது. வேக வேகமாய் ஆராய்ந்தாள். அப்போதுதான் அவன் தன்னைத் தடை செய்து வைத்திருக்கிறான் என்கிற உண்மை அவளுக்குள் அடுத்த அதிர்வாய் இறங்கிற்று.

அவன் கோபமும், அவளோடு கதைக்காமல் இருப்பதன் நியாயமும் கூடப் புரிகிறது. ஆனால், தடை செய்யுமளவுக்கு அவள் என்ன செய்தாள்?

பொது இடத்தில் நிற்பதில் மூக்கு விடைத்துக்கொண்டு பொங்கிய கண்ணீரை அடக்கித் தன்னைச் சமாளித்தாள். கைகள் நடுங்க நம்பிக்கையே இல்லாமல் சுபாங்கிக்கு அழைத்தாள். அவளுக்கும் அழைப்புப் போகவில்லை. மெசேஜ் அனுப்பவும் வழியில்லை.

இனி என்ன செய்வது என்று புரியமாட்டேன் என்றது.

இப்படியே வீட்டுக்குப் போனால் அதன்பிறகு அவளால் வெளியில் வர முடியாது. தந்தை விடமாட்டார். எதுவாயினும் வீடு செல்வதற்கு முதல் செய்தாக வேண்டும். இதற்கிடையில் ஆனந்தன் வந்துவிட அபயனின் வீட்டுக்குப் போகச் சொன்னாள்.

நெஞ்சில் பெரும் பயமும் பதற்றமும் அப்பிக்கொண்டது. அம்மா அப்பாவுக்கே அந்தக் கதி என்றால் அவளுக்கு? ஆனால், வேறு என்னதான் அவளும் செய்ய?

ஆட்டோ சென்று அவர்கள் வீட்டின் முன்னால் நிற்கவும், “நான் வாற வரைக்கும் வெய்ட் பண்ணுங்கோ அண்ணா.” என்றுவிட்டு இறங்கி நடந்தாள். கால்கள் பின்னின. கண்கள் தானாகவே கலங்கின. தொண்டை பயத்தில் ஏறி இறங்கிற்று. மெல்ல வாசலில் சென்று நின்று, “அண்…ணி” என்று குரல் கொடுத்தாள்.

அவள் குரல் அவளுக்கே கேட்கவில்லை என்கையில் அவர்களுக்கு எப்படிக் கேட்கும்.

“அண்ணி!” இந்தமுறை கொஞ்சம் சத்தமாக அழைத்தாள். யாருக்குக் கேட்டதோ இல்லையோ. தளிருக்குக் கேட்டிருந்தது. “அத்த!” என்கிற கூவலோடு ஓடி வந்து அவளிடம் தாவியிருந்தாள்.

“தளிர் குட்டி!” என்று அள்ளி அணைத்துக்கொண்டவளுக்கு ஏன் என்றில்லாமல் கண்ணீர் பெருகிற்று.

இந்தக் குழந்தையைக்கூட அவள் தமையன் மறந்து போனானே. இல்லாமல் இப்படி ஒரு காரியத்தைச் செய்திருப்பானா? இனி இவள் நிலை? வார்த்தைகள் வராமல் போய்விட ஒருவித ஆவேசத்துடன் அவள் முகமெங்கும் முத்தமிட்டாள்.

அதற்குள் ஆவேசமாக வந்த சுபாங்கி, “இங்க எங்க வந்தனி?” என்று சீறியபடி அவள் கையில் இருந்த மகளைப் பிடுங்கி இருந்தாள்.

“அண்ணி!” என்றாள் கண்ணீருடன்.

“அண்ணியும் ஆட்டுக்குட்டியும். முதல் போ நீ, இங்க இருந்து!” என்று துரத்தினாள் அவள்.

“அண்ணி எனக்கு உங்கட கோபம் விளங்குது அண்ணி. அண்ணா செய்தது எவ்வளவு பெரிய துரோகம் எண்டும் தெரியும். ஆனா இப்ப அவருக்கு ஆக்சிடென்டாம். கால் உடைஞ்சிட்டாம். பெரிய அடி போல. ஆஸ்பத்திரில கிடக்கிறாராம். எனக்கு என்ன செய்றது எண்டு தெரியேல்ல. அதான் உங்களிட்டச் சொல்லிட்டுப் போவம் எண்டு வந்தனான்.” என்று அவள் சொல்லி முடிக்க முதலே, “அதை ஏன் என்னட்டச் சொல்லுறாய். அவன் ஆர் எனக்கு? அவன் இருந்தா என்ன, செத்தா எனக்கு என்ன?” என்று சீறி இருந்தாள் சுபாங்கி.

“ஐயோ அண்ணி, இப்பிடியெல்லாம் கதைக்காதீங்கோ, ப்ளீஸ்!” என்று கெஞ்சினாள் அன்பினி. உயிருக்கு ஆபத்தாய் அவன் கிடக்கும் இந்த நேரத்தில் அந்த வார்த்தைகளை அவளால் ஜீரணித்துக்கொள்ள முடியாமல் போயிற்று.

இதற்குள் இவர்களின் சத்தம் கேட்டு வீட்டுக்குப் பின்னால் நின்றிருந்த பரமேஸ்வரி அரக்கப்பரக்க ஓடி வந்தார். மகள் இருக்கும் நிலைக்கு அன்பினியை இன்னுமே காயப்படுத்திவிடுவாள் என்று தெரிய, “பிள்ளை, நீங்க உள்ளுக்கு போங்கோ!” என்று சுபாங்கியிடம் சொல்லிவிட்டு, “நீங்களும் போங்கோம்மா. என்ன நடந்தாலும் இங்க வராதீங்கோ. எதையும் கேக்கிற மனநிலைல நாங்க இல்ல. போங்கோ பிள்ளை!” என்று அன்பினியையும் போகச் சொன்னார்.

எவ்வளவுதான் அவர்கள் வீட்டின் மீது கோபம் இருந்தாலும், அதைச் சின்ன பெண் அவள் மீது காட்டுவதில் அவருக்கு உடன்பாடில்லை. அதை விளங்கி நடக்கும் அளவுக்கான தெளிந்த மனநிலையில் மகள் இல்லை என்பதில் அவளை அங்கிருந்து அனுப்பிவைக்க முயன்றார்.

“ஆனா மாமி அண்ணா…”

“தயவு செய்து போங்கம்மா. ஆரின்ர கதையும் எங்களுக்கு வேண்டாம்!” என்று அவரும் இப்போது இறுக்கிச் சொன்னார்.

கண்ணீருடன் அவள் திரும்பி நடக்க, அபயனின் பைக் உள்ளே வந்தது. எதிர்பாராமல் அவனைக் கண்டதும் அத்தனை நேரமாய் அவள் நெஞ்சை அழுத்திக்கொண்டிருந்த எல்லா வேதனைகளும் வெடித்துக்கொண்டு கிளம்பின. மளுக்கென்று நிறைந்துவிட்ட விழிகளோடு அவனையே பார்த்திருந்தாள்.

ஒரேயொரு வார்த்தை அவளுக்கு இதமாய்ப் பேசிவிட மாட்டானா என்று அவள் இதயம் ஏங்கிற்று. வேறு ஒன்றும் வேண்டாம். இங்கிருந்து போ அன்பா. உன்னோடு பிறகு கதைக்கிறேன் என்று சொன்னால் கூடப் போதும்.

ஆனால், அவளின் அத்தனை எதிர்பார்ப்புகளையும் பொய்யாக்கிக்கொண்டு, “ஆரம்மா இவளை எல்லாம் உள்ளுக்க விட்டது? இனி வளவுக்கையே எடுக்காதீங்க எண்டு சொன்னனான் எல்லா!” என்று அன்னையை அதட்டினான் அவன்.

அவளால் நம்பவே முடியவில்லை. அவளின் அபயனா? அவனா அவளைத் துரத்துகிறான்? அசையக்கூட முடியாதவளாய் அவனையே பார்த்து நின்றாள்.

“அதுதான் போகச் சொல்லிச் சொல்லிட்டன் அப்பு. நீங்க வாங்கோ!” என்று சூழ்நிலையைப் பரமேஸ்வரி சமாளிக்க முயல, “ஏன் வந்தவளாம்?” என்றான் அவன் அவளைத் திரும்பியும் பாராது.

“அண்ணாக்கு ஆக்சிடென்ட்.” தழுதழுத்த குரலில் மெல்ல முணுமுணுத்தாள் அன்பினி.

“அதுக்கு?” என்றான் அவன் புருவங்களைச் சுளித்துக்கொண்டு.

“அதச் சொல்ல வந்தனான்.”

“சொல்லி?” என்றான் அவன். “சொல்லு? சொல்லி என்ன செய்யப் போறாய்? இதச் சாட்டா வச்சு நடந்ததை எல்லாம் சமாளிக்கப் பாக்கிறியா?”

இதற்கு என்ன சொல்வது என்று தெரியாது கண்ணீருடன் அவனையே பார்த்து நின்றாள் அவள்.
 
Last edited:

நிதனிபிரபு

Administrator
Staff member
“அந்த நாய் செத்தாக் கூட இங்க வந்து சொல்லிடாத!”

“அபய்!” என்றவள் உள்ளம் பதறியது. ஆளாளுக்கு இப்படியே சொல்கிறார்களே! கண்ணீர் வழிய, “உங்களுக்கு அவரில கோவம் இருக்கலாம். ஆனா தளிர் பாவம் எல்லா? அவளுக்கு அப்பா வேண்டாமா?” என்றதும் அவனுக்கு வெறியே பிடித்துக்கொண்டது.

“அவனை மாதிரி ஒரு ஊத்தைய அப்பா எண்டு சொல்லி வளக்கிறதுக்குப் பதிலா அப்பன் செத்திட்டான் எண்டு சொல்லி வளக்கிறம். அவளைப் பற்றி நீ கவலைப்படாத. போ இங்க இருந்து!” என்றவனையே விழியாகற்றாமல் பார்த்தவளுக்கு அதற்குமேல் அங்கே நிற்கவோ, உயிரைக் கொல்லும் அவன் வார்த்தைகளைக் கேட்கவோ தெம்பில்லை. எதுவும் சொல்லாமல் அங்கிருந்து புறப்பட்டாள்.

*****


முதல்நாள் மாலை கிளினிக் சென்று வந்தபிறகு வீட்டுக்குக் கொண்டு வந்து விட்டவன் அதன் பிறகு நிலானியோடு கதைக்கவே இல்லை. அவள் அழைத்தபோதுகூட வேலை என்றவன் இதோ அடுத்த நாள் மாலையாகியும் அழைக்கவும் இல்லை, அவள் அழைப்பை ஏற்கவும் இல்லை. அந்த இரவு முழுக்க அவளால் உறங்க முடியவில்லை. காரணமே இல்லாமல் நெஞ்சைப் போட்டு எதுவோ பிசைந்தது.

என்னதான் அவன் மீது அசைக்கவே முடியாத நம்பிக்கை இருந்த போதிலும், முறையாகத் திருமணம் நடக்க முதல் குழந்தையைத் தாங்கி நிற்கிறோமே என்று உள்ளம் உறுத்தாமல் இல்லை. இப்போதெல்லாம் இப்படி அவசரப்பட்டிருக்க வேண்டாமோ என்கிற கேள்வி அடிக்கடி எழுந்தது. அவள் தவறி, குழந்தைக்கும் சேர்த்து அவப் பெயரை வாங்கிக் கொடுக்கப் போகிறாளே!

என்னதான் அன்று அன்னையிடம் நான் சமாளிப்பேன் என்று அவனுக்காகச் சொன்னாலும் கூட, அவரின் சதா கவலை தோய்ந்த முகம், கேக் செண்டரில் யாரையும் நிமிர்ந்து பார்க்க முடியா நிலை, யாராவது அறிந்து கேட்டு விடுவார்களோ என்கிற பதற்றம் என்று இப்போதெல்லாம் அவள் இயல்பாய் இல்லை.

நிம்மதியையும் சந்தோசத்தையும் தொலைத்துவிட்டு ஒருவிதப் பயத்துடனேயே நாள்களைக் கழித்துக்கொண்டிருந்தாள்.

யாரும் அறியாமல் தற்போதைக்குக் கோயிலில் வைத்து ஒரு மஞ்சள் கயிற்றை மட்டுமாவது கட்டுகிறீர்களா என்று காந்தனிடம் கேட்கலாமா என்று யோசிக்க ஆரம்பித்திருந்தாள். குறைந்த பட்சமாக இந்த மனத்தின் உறுத்தலாவது அடங்குமே! வயிறு வெளியே தெரிய வருகையில் கேட்கிறவர்களுக்கு மரியாதைக்காகக் காட்ட அதாவது அவள் கழுத்தில் கிடக்குமே!

அவள் அவனை நேசித்ததற்காக அவப்பெயரைக் கேட்கலாம். பொறுத்துப் போகலாம். ஆனால், அவள் வயிற்றில் தரித்ததற்காய் அவமானத்தைச் சுமந்தபடி அந்தக் குழந்தை இந்தப் பூமிக்கு வருவதில் என்ன நியாயமிருக்கிறது?

எது எப்படியானாலும் என்றைக்கு அவன் வீட்டில் சொல்லி, எல்லோர் சம்மதத்தோடும் அவள் கழுத்தில் தாலி ஏறுகிறதோ, அன்றுதான் அவளின் இந்த நிலை மாறும். அது என்று நடக்குமோ என்று நினைக்கையிலேயே பெரிய மூச்சு ஒன்று அவளிடமிருந்து வெளியேறிற்று.

இரவிரவாக அவளுக்கு உறக்கமே இல்லை. அடுத்தநாள் காலை எழுந்தும் அவனுக்கு அழைத்துப் பார்த்தாள். அவன் ஏற்கவில்லை. இப்படி இருக்க மாட்டானே. அவளிடம் ஒரு கலக்கம்.

“என்ன பிள்ளை முகம் சரியில்லாம இருக்கு. ஏலாம இருந்தா இண்டைக்கு வீட்டில நில்லுங்கோவன்.” என்றார் சிவகாமி அம்மா.

அவளுக்கும் அப்படித்தான் தோன்றியது. ஆனாலும் அவனையும் ஒருமுறை பார்த்துக்கொண்டு வருவோம் என்று எழுந்து, முகம் கழுவிக்கொண்டு வந்தவளுக்கு அதற்குமேல் முடியவே இல்லை. அருந்திய தேநீரும் சேர்ந்து வெளியில் வந்துவிட, அப்படியே சுருண்டிருந்தாள்.

கேக் செண்டருக்கு அழைத்து இன்றைக்கு வரவில்லை என்று சொல்லிவிட்டு, நன்றாக உறங்கி எழுந்தாள். ஆனாலும் உள்ளத்தின் அந்த அந்தரிப்பு மட்டும் போவதாக இல்லை. காந்தனுக்கு மீண்டும் அழைத்தாள். அப்போதும் அவன் எடுக்கவில்லை.

அவளையே கவனித்துக்கொண்டிருந்த சிவகாமி, “என்ன பிள்ளை, தம்பியோட ஏதும் சண்டையா?” என்று விசாரித்தார்.

“சேச்சே! அப்பிடி எல்லாம் ஒண்டும் இல்லை அம்மா. ஆனா, முந்தநாள்(நேற்றைக்கு முதல் நாள்) இங்க வந்திட்டுப் போனதில இருந்து அவர் கதைக்கவே இல்லை. அதுதான் என்னவோ எண்டு யோசனையா இருக்கு. நான் ஒருக்காப் போய்ப் பாத்துக்கொண்டு வரட்டா?”

“என்ன எண்டு போய்க் கேப்பீங்க? அங்க எல்லாம் வர வேண்டாம் எண்டு சொல்லி இருக்கிறார் எல்லா.”

“அதுக்காக இப்பிடியே இருக்க ஏலாம இருக்கம்மா. எனக்கு என்னவோ மனம் சரியில்லை. இவ்வளவு நாளும் அவர் இப்பிடி எடுக்காம இருந்ததே இல்ல. பிசியா இருந்தாலோ ஊருக்குப் போனாலோ மெசேஜாவது போடுவார். இது…” என்றவளுக்கும் என்ன என்று சொல்லத் தெரியவில்லை.

“அப்ப வா, மூண்டு பேரும் போயிற்று வருவம். அது பாக்கிறவேக்கும் வித்தியாசமாத் தெரியாது. அயலட்டைச் சனம் கேட்டாலும் நடந்த காணிப் பிரச்சினையைப் பற்றிச் சொல்லுவம்.” என்று சொல்லி, மூவருமாகப் புறப்பட்டு அவனுடைய குவார்டஸுக்கு சென்றார்கள்.

அந்த வீதியில் தொடராய் ஒரே மாதிரியான வீடுகள். அதில் எது அவன் வீடு என்று தெரியாமல் எதிர்ப்பட்ட மனிதர் ஒருவரிடம், “சந்திரகாந்தன் சேர்… அவரின்ர வீடு எது அண்ணா?” என்று விசாரித்தாள் நிலானி.

“அந்த ஆளின்ர வீடா? அங்க பாருங்க, ஒரு வீட்டுக்கு முன்னால சிவப்புக் கடதாசிப் பூ மரம் நிக்குது எல்லா. அந்த வீடுதான். ஆனா நேற்று மச்சானாரிட்ட நல்லா வாங்கிக் கட்டிப்போட்டு விடிய வரைக்கும் வீட்டுலதான் கிடந்தவர். இப்ப அவரின்ர வாகனத்தைக் காணேல்ல. எங்க போனார் எண்டு தெரியாது.” என்று அவர் சொன்னதும் திடுக்கிட்டுப் போனார்கள்.

“வாங்கிக் கட்டினவரோ? அப்பிடி என்ன நடந்தது?” என்று அவசரமாகக் கேட்டாள் அவள்.

“அதுக்கு ஏன் நீங்க பதறுறீங்க? நீங்க ஆரு?” திடீரென்று தொற்றிக்கொண்ட சந்தேகத்தில் அவளை அளவிட்டபடி வினவினார் அவர்.

அவள் பயந்துபோனாள். பதற்றத்துடன் பார்வை தாயிடம் செல்ல, அவரின் நெஞ்சையும் பெரும் பயம் ஒன்று கவ்விப் பிடித்திருந்தது. ஆனாலும் சமாளித்து, “இல்ல அது… பறிபோக இருந்த எங்கட காணியக் கிட்டத்தட்ட எங்களுக்கு வாங்கித் தந்ததே அவர்தான். அவ்வளவு நல்ல மனுசன். இவர் என்ர மகன். கொஞ்சம் ஏலாத பிள்ளை. இவருக்கு உதவித்தொகை வாங்கித் தந்ததும் அவர்தான். அதான் நேராப் பாத்து நன்றி சொல்லிப்போட்டுப் போவம் எண்டு வந்தனாங்க தம்பி. அப்பிடியான நல்ல மனுசன் என்ன செய்தவர் எண்டு அடிக்கக் கிடக்கு? அதான் அதிர்ந்து போனோம்.” என்று என்னவெல்லாமோ சொல்லிச் சமாளித்தார் சிவகாமி.

“என்ன செய்தவரா? கட்டின மனுசி இருக்கத் தக்கன இன்னொருத்தியோட கள்ளத் தொடர்பு வச்சிருந்தா மச்சான் காரன் விடுவானா? ஒரு பொம்பிளைப் பிள்ளை வேற இருக்கு. இப்ப பாத்தா அந்தச் சின்ன வீட்டுக்கும் வயித்தில பிள்ளையாம்.” என்றதும் அன்னை மகள் இருவருமே தலையில் இடி விழுந்தவர்கள் போன்று உறைந்துபோய் நின்றனர்.

இதில் கள்ளத்தொடர்பு என்கிற வார்த்தை வாளாய் மாறி அவர்கள் நெஞ்சை அறுத்தது. எத்தனை கேவலம்!

“முந்தநாள் இரவு அந்தப் பெடியன் அடிச்ச அடியப் பாக்க மாட்டீங்க. நாங்க எல்லாருமாச் சேர்ந்து இழுத்துப் பிடிச்சதாலதான் அந்த ஆள் உயிரோடையாவது இருக்கிறார். இல்லையோ கொன்டே போட்டிருப்பான். இந்தப் பொம்பிளைப் பிள்ளைகளும் இவனை மாதிரி ஆக்களிட்டத்தானே போய் மாட்டுதுகள். அந்தளவுக்கு என்ன அலைச்சல் குணமோ தெரியேல்ல.” என்றுவிட்டு நடையைக் கட்டினார் அவர்.

சிவகாமி அம்மா உணர்வுக்கு வருவதற்கு நிறைய நேரம் பிடித்தது. உணர்வு திரும்பிய போது பார்வையைத் திருப்பி மகளை வெறித்துப் பார்த்தார். அவ்வளவு நேரமாகத் தன்னைச் சமாளித்துக்கொள்ளவே முடியாமல், வேலியைப் பற்றிக்கொண்டு நின்ற நிலானிக்கு அன்னையின் பார்வையில் சுரீர் என்று என்னவோ தாக்கிற்று.

“கடவுள் சத்தியமா எனக்கு இதெல்லாம் தெரியா அம்மா. அவர் ஒருக்காக் கூட என்னட்ட சொல்லவே இல்ல.” என்றவளுக்கு நெஞ்சுக்கூடெல்லாம் நடுங்கிற்று.

அவர் ஒரு வார்த்தை பேசவில்லை. நிசாந்தனின் கையைப் பற்றி இழுத்துக்கொண்டு விறுவிறு என்று நடக்க ஆரம்பித்தார்.


தொடரும்...

எப்பிடி இருக்கு எண்டு சொல்லுங்கோ. கருத்திடும் அனைவருக்கும் மிக்க மிக்க நன்றி.
 
Last edited:

நிதனிபிரபு

Administrator
Staff member
அத்தியாயம் 22எப்படி வந்து சேர்ந்தார்கள் என்று தெரியாமலேயே வீட்டுக்கு வந்து சேர்ந்திருந்தனர் மூவரும். அவர்கள் தலையில் இடியாக விழுந்த விடயத்தை நிலானியால் இன்னும் கூட ஜீரணித்துக்கொள்ளவே முடியவில்லை. அவளுக்கு அழுகை கூட வரமாட்டேன் என்றது. அப்படி ஒரு அதிர்ச்சி. அவள் அவனுக்குக் கள்ளத்தொடர்பா? சின்ன வீடா? நினைக்கவே நெஞ்சு அடைத்தது. இப்படி ஒரு இழி நிலைக்குத் தள்ளப்படுவோம் என்று கனவில் கூட நினைத்ததில்லை.

அவளுக்கு நினைவு தெரிந்த காலத்திலிருந்து அவர்கள் வீட்டில் வறுமைதான். ஆனாலும் கூட ஒருவர் ஒரு வார்த்தை சொல்லும்படி வாழ்ந்ததில்லை. நாளாந்த உழைப்பில் என்ன கிடைக்கிறதோ அதை வைத்துச் சுயமரியாதையோடு வாழ்ந்தவர்கள். ஒரு நாளுக்கு ஒரு பொழுது மட்டுமே வயிற்றைக் கழுவிய நாள்களில் கூட, அடுத்தவரிடம் சென்று ஒரு ரூபாய் இரந்ததில்லை.

இந்தக் காணி கிடைத்து, வீட்டுத் திட்டம் மூலம் வீடு கட்டிக்கொண்டு இங்கே வந்து, அவளும் கேக் செண்டரில் வேலைக்குச் சேர்ந்ததிலிருந்து, அதுவரையில் அவர்கள் இருந்த நிலைக்கு இப்போது எவ்வளவோ பரவாயில்லை என்கிற நிலையில்தான் வாழ்ந்தார்கள்.

ஆனாலும் கூட, என் வாழ்வில் திருமணம் எல்லாம் எட்டாக்கனி என்று எண்ணி, அம்மாவையும் தம்பியையும் நல்லபடியாகப் பார்த்துக்கொண்டால் போதும் என்று வாழ்ந்த அவள், அவனைப் போன்ற ஒருவன் தன் வாழ்வில் வருவான் என்று நினைத்துப் பார்த்ததே இல்லை.

அவளும் 28 வயது நிரம்பிய முழுமையான பெண் என்பதா, என்னதான் வீட்டின் நிலை அறிந்து மனத்தை அலைபாய விடாமல் வைத்திருந்தாலும், எனக்கும் ஒரு நல்லவன் துணையாக அமைந்துவிட மாட்டானா, நானும் மற்றவர்களைப் போன்று குடும்பம், குட்டி என்று ஒரு வாழ்க்கையை வாழ்ந்துவிட மாட்டேனா என்கிற ஆசைகள் ஆழ்மனத்தில் ஏக்கமாய் இருந்ததாலோ என்னவோ, கண்ணியமாய், நாணயமாய்த் தெரிந்த ஒருவன், ஆர்வமாய்ப் பார்த்து ஆசையாய்ப் பேசவும் வேகமாய் விழுந்துவிட்டாளோ?

இல்லாமல் எப்படி இத்தனை காலம் கட்டுக்கோப்பாக இருந்துவிட்டு அவனிடம் மட்டும் சறுக்கினாள்? அதன் பிறகும்கூட அவனைச் சந்தேகிக்கவே இல்லையே! அத்தனை நம்பிக்கை!

பக்கத்து வீட்டினர் நான்கடி நிலத்தை ஏமாற்றப் பார்க்கிறார்கள் என்று போனவள் கடைசியில் அவளே ஏமாந்து நிற்கிறாள்!

அந்த வீதியில் வைத்துச் சிவகாமி அம்மா விறுவிறு என்று நிசாந்தனோடு நடக்க ஆரம்பித்திருந்தாலும் அவளால் அப்படி அங்கிருந்து வந்துவிட முடியவில்லை. ஒருவர் ஒன்று சொல்லிவிட்டார் என்றதும் நம்பிக்கொண்டு ஓடிவந்து மூலையில் குந்தியிருந்து அழுவதற்கு இது ஒன்றும் சாதாரண விடயம் இல்லையே! உறுதியாய் உண்மைதானா என்று அறியவேண்டியிருந்தது.

அவன் வீட்டுக்கு ஓடிப்போய்ப் பார்த்தாள். அந்த மனிதர் சொன்னது போன்று அவன் வாகனமும் இல்லை, வீடும் பூட்டியிருந்தது.

நடந்த பிரச்சனைகளால் பக்கத்து வீட்டுப் பெண்மணி இங்கேயே ஒரு கண்ணை வைத்துக்கொண்டே இருந்தார் போலும். இவளைக் கண்டுவிட்டு, “நீங்க ஆரம்மா? இங்க என்ன செய்றீங்க?” என்று கேட்டுக்கொண்டு வந்தார்.

திக்கித் திணறி, அந்த மனிதரிடம் சொன்னது போலவே அவரிடமும் காணிக் கதையைச் சொல்லி விசாரித்தபோது, இவள் மீது சந்தேகப் பார்வையைப் பாதித்தாலும் அவரும் அந்த மனிதர் சொன்னதைத்தான் உறுதிப்படுத்தியிருந்தார். கூடவே, சுபாங்கி வந்து, நேராகக் கேட்டுச் சண்டை பிடித்துவிட்டுப் போனதையும் சேர்த்தே சொன்னவர், அவளைப் பற்றியும் அவள் குடும்பத்தினரைப் பற்றியும் சொல்ல அதற்குமேல் அவள் அங்கே நிற்கவில்லை.

ஓட்டமும் நடையுமாக ஓடி வந்து, பேருந்து நிலையத்தில் பேருந்துக்காக நின்றிருந்த அன்னையைப் பிடித்திருந்தாள்.

அந்தப் பெண்ணுக்காவது தட்டிக் கேட்கத் தம்பி என்று ஒருவன் இருந்தான். அவளுக்கு?

மெல்லத் திரும்பி அன்னையைப் பார்த்தாள். வீட்டுக்கு வந்த கணத்திலிருந்து ஒரு மூலையில் முடங்கி அமர்ந்தவர்தான். தற்போது வரை அசையவே இல்லை. வெயிலில் அலைந்து வந்ததாக்கும் அவர் மடியில் படுத்து உறங்கியிருந்தான் நிசாந்தன்.

அவளுக்கும் அவர் மடியில் படுத்து ஆறுதல் தேட வேண்டும் போல்தான் இருந்தது. ஆனால், அவள் பக்கம் திரும்பவே திரும்பாத அவர் பார்வையும், கல்லாக இறுகிக் கிடந்த அவர் முகம் அவரை நெருங்க விடமாட்டேன் என்றது.

அவரிடம் எதைப் பேசவும் பயந்தாள். எத்தனை புத்திமதிகளைச் சொல்லியிருப்பார்? அறிவியல் உச்சியைத் தொட்டால் என்ன, ஆளும் பதவியில் சென்று பெண் அமர்ந்துகொண்டால்தான் என்ன? முறையற்ற உறவு என்கிற ஒன்று, ஆணுக்கும் பெண்ணுக்குமிடையில் வந்துவிடுமாயின் பாவம் பழிகளைச் சுமக்கிறவள் பெண் மட்டும்தான் என்கிற நிலை மாறியா இருக்கிறது? இல்லையே! அது தெரிந்தும் எல்லை மீறிப் பழகிய அவளை என்ன செய்வது?


அந்தளவில் ஆசை! நல்ல நிலையில் இருக்கிற நல்லவன் ஒருவன் எனக்கும் கிடைத்துவிட்டான், அவனைத் தவற விட்டுவிடக் கூடாது என்கிற பேராசை! இல்லாமல் இத்தனை அவசரமாக உள்ளத்தோடு சேர்த்து உடலையும் கொடுத்திருப்பாளா என்ன? அவள் உள்ளமே அவளைக் கூறு போட்டுக் கொன்றது.

அந்த வலியைத் தாங்கிக்கொள்ள முடியாமல், “அம்மா!” என்றாள் மெல்ல.

அவர் அசையவே இல்லை.

“இனி என்னம்மா செய்றது?” அதைக் கேட்கும்போதே குரல் உடைந்தது.

“எனக்குப் பயமா இருக்கம்மா. வயித்தில பிள்ளை வேற இருக்கே.”

சட்டென்று அவர் முகம் அக்கினியாய் ஜொலித்தது. வேக வேகமாய் மார்புக் கூடு ஏறி இறங்கிற்று. அப்படி ஒரு ஆத்திரமும் ஆவேசமும்.

அதைக் கவனிக்காமல், “நல்லவர் எண்டு நம்பினன். ஒருக்காக் கூடத் தனக்குக் கலியாணமாயிற்றுது, பிள்ளை இருக்கு எண்டு அவர்…” என்று சொல்லிக்கொண்டு வந்தவள் பட்டென்று பேச்சை நிறுத்தினாள்.

இல்லை, அவன் சொன்னான். அவள்தான் நம்பவில்லை. அன்று அவர்களுக்குள் நடந்த விளையாட்டுப் பேச்சும், அதன் தொடர்ச்சியாய்க் கலியாணமாயிற்று என்று அவன் சொன்னதும், அதை அவன் சொன்ன தொனியும் சேர்ந்து, அவன் தன்னோடு விளையாடுகிறான் என்றுதான் எண்ண வைத்திருந்தன.

அதைவிடவும் கண்ணியவான், நல்லவன், நேர்மையானவன் என்றெல்லாம் அவள் எண்ணியிருந்த ஒருவன், ஏற்கனவே திருமணமும் முடித்துக் குழந்தையும் இருக்கையில் தன்னோடு அப்படியெல்லாம் பழகுவான் என்று அவள் யோசிக்கவே இல்லை.

தான் ஏமாந்ததும் இல்லாமல் இன்னொரு பெண்ணின் வாழ்க்கைக்குள் நுழைந்திருக்கிறோம் என்கிற எண்ணம் அவளைப் போட்டுக் கொன்றது; நீ எல்லாம் எவ்வளவு கேவலமானவள் என்று கேட்டுச் சிரித்தது. அவளே அவள் எண்ணத்தில் தரமிறங்கிப் போனாள்.

ஒரு குடும்பத்தைக் குலைப்பது எவ்வளவு பெரிய பாவம்? அந்தப் பெண்ணின் மனம் என்ன பாடுபடும்? கணம் தவறாமல் இவளைச் சபிக்க மாட்டாளா?

இரவு முழுக்க நிலானியால் உறங்க முடியவில்லை. யாருமற்று நிற்பதும், வாழ்வில் போராடுவதும் அவளுக்குப் புதிதா என்ன? இவ்வளவு காலமும் அம்மாவுக்கும் தம்பிக்குமாக ஓடியவள் இனி வயிற்றில் இருக்கும் அவளின் குழந்தைக்கும் சேர்த்து ஓடப்போகிறாள். அவ்வளவுதானே? அவ்வளவேதான்!

இனியும் யார் தயவும் வேண்டாம். ஒரு குடும்ப வாழ்க்கைக்கு ஆசைப்பட்டதும் போதும், வாங்கிக்கொண்ட சூடும் போதும்! அடுத்த நாள் காலையில், இருள் விலகும் முன்னேயே எழுந்து, அவள் அறையை விட்டு வெளியே வந்தபோது, கொட்ட கொட்ட விழித்தபடி விறாந்தையில் அமர்ந்திருந்தார் சிவகாமி அம்மா.

பார்த்ததும் பயந்துபோனாள் நிலானி.

“அம்மா, என்னம்மா உடம்புக்கு ஏதும் செய்யுதா?” என்றபடி அவள் நெருங்க, விருட்டென்று எழுந்து வெளியே நடந்தார் அவர்.

அவள் விழிகள் கலங்கிப் போயின. நேற்றிலிருந்து இப்படியேதான் இருக்கிறார்.

எதுவுமே பேசாமல் தயாராகினாள். அவள் எழுந்துவிட்ட அரவம் கேட்டாலே அடுப்பை மூட்டித் தேநீருக்குத் தண்ணீரை வைக்கிறவர் இன்று வீட்டுக்குள் வரவேயில்லை. அந்த நேரத்திலேயே தெரு மூலையில் இருக்கும் கிணற்றிலிருந்து தண்ணீர் கொண்டுவந்து இங்கிருக்கும் பெரிய வாளிகளை நிறைக்க ஆரம்பித்தார்.

ஒருமுறை அவர் தண்ணீரோடு வந்தபோது, “அம்மா, நான் ஒருக்கா முல்லைத்தீவுக்குப் போயிற்று வாறன்.” என்று சொன்னாள். அவர் காதிலேயே விழுத்திக்கொள்ளவில்லை. அடுத்த முறை தண்ணீரோடு வந்தபோது அவள் வீட்டை விட்டு வெளியேறினாள்.

முன்பின் வந்திராத ஊர். ஆனாலும் நில அளவைத் திணைக்களத்தில் உயர் பதவியில் இருக்கும் சந்திரகாந்தனின் வீட்டைக் கண்டு பிடிப்பது அவளுக்கு அத்தனை சிரமமாய் இல்லை.
 
Last edited:

நிதனிபிரபு

Administrator
Staff member

*****

அங்கே, அன்பினி அவர்கள் வீட்டுக்குச் சென்று வந்திருக்கிறாள் என்று அறிந்து சத்தம் போட்டிருந்தார் திருநாவுக்கரசு. அபயன் நடந்துகொண்ட விதம் அவளைக் காயப்படுத்தியிருந்ததில் திருப்பி எதுவும் கதைக்காமல் கேட்டுக்கொண்டாள்.

கணவர் கடைக்குப் புறப்பட்ட பிறகு இந்துமதியும், “போகாத பிள்ளை எண்டு சொன்னனான் எல்லா, பிறகும் ஏனம்மா போனனீ?” என்று கடிந்துகொண்டிருந்தார்.

“இனி என்னம்மா நடக்கும்? அண்ணாவும் அண்ணியும் சேராயினமா(சேர மாட்டார்களா)?” தழுதழுத்த குரலில் வினவினாள் அன்பினி.

நடந்த விடயத்தின் பாரதூரம் விளங்கினாலும் அது எங்கே போய் நிற்கும் என்று அனுமானிக்கவோ யோசிக்கவோ அவளால் முடியவில்லை.

இந்துமதிக்கும் விழிகள் கலங்கிப் போயின. “எப்பிடிப் பிள்ளை சேருறது? நீயே யோசிச்சுப் பார், எங்களுக்கே அவன்ர முகம் பாக்க அருவருப்பா இருக்கு. அவா அவன்ர மனுசி எல்லா. எப்பிடி அவனோட வாழுவா?”

“என்னம்மா சொல்லுறீங்க? அப்ப அண்ணி பிரிஞ்சிடுவாவா?” அதை நினைக்கும்போதே அவளுக்கு அழுகை வந்தது.

“கடவுளுக்குத்தான் வெளிச்சம் பிள்ளை. சேந்தா மட்டும் சந்தோசமாவா இருக்கப் போயினம்? என்ன நடந்தாலும் இனி நிம்மதி எண்டுறது ஒருத்தருக்கும் இல்லை.” என்றார் விரக்தியோடு.

அவளுக்கும் அப்படித்தான் தோன்றிற்று. அங்கேயும் யாரும் நிம்மதியாய் இல்லையே. எதிர்காலத்தை யோசிக்கவே அவ்வளவு பயமாக இருந்தது. யார் வாழ்க்கை இனி எப்படிப் போகும் என்று தெரியமாட்டேன் என்றது.

“அண்ணா எப்பிடி இருக்கிறாரோ தெரியா என்னம்மா?”

அவருக்கும் விழிகள் கலங்கிற்று. ஆனாலும் ஒன்றும் சொல்லாமல் அமர்ந்திருந்தார்.

அப்போதுதான் அங்கே வந்து நின்றாள் நிலானி. அவளின் நல்ல காலமோ என்னவோ வீட்டில் திருநாவுக்கரசு இல்லை.

அன்பினிக்கு அவளை எங்கேயோ பார்த்தது போலிருந்தாலும் இனம் காண முடியவில்லை. ஆனால், காந்தனின் தங்கை என்று ஆசையாகப் பார்த்த பெண்ணை நிலானி மறக்கவில்லை. தானாக விழிகள் கலங்க, “நீங்க அன்பினிதானே?” என்று வினவினாள்.

“ஓம் நீங்க?”

“நான் நிலானி.” என்றாள் மெல்ல. அப்போதும் யார் என்று கண்டுபிடிக்க முடியாமல் அன்பினி பார்க்க, “அது நான்…சந்திரகாந்தன்… அவர் அது…” என்று தன்னை எப்படி அறிமுகப்படுத்துவது என்று தெரியாமல் தடுமாறினாள். அந்த மனிதர் சொன்னது போன்று அவனின் கள்ளத் தொடர்பு என்றா சொல்ல முடியும்? உடலும் உள்ளமும் கூசின. எத்தனை கேவலமான நிலையில் நிற்கிறாள்.

ஆனால், அவ்வளவு நேரமாக மகளுக்குத் தெரிந்த பெண்ணோ என்று பார்த்திருந்த இந்துமதி, அவள் முழுமையாகச் சொல்லும் அவசியமே இல்லாமல் அவளை யார் என்று கண்டுபிடித்திருந்தார்.

உள்ளத்தில் வெறுப்பு மூழ, “எங்க இருந்து வாறீர்?” என்றார் அதட்டலாக.

“வ…வவுனியா.” என்றதுமே அவருக்கு நெஞ்சு கொதிக்க ஆரம்பித்தது. “பிள்ளை உள்ளுக்கு போ!” என்று முதல் வேலையாக அன்பினியை உள்ளே அனுப்ப முயன்றார்.

அவளுக்கும் புரிந்துபோயிற்று. அதிர்ச்சியோடு தாயையும் அவளையும் மாறி மாறிப் பார்த்தாள்.

இந்துமதிக்கு வயதுப்பெண் அவளை வைத்துக்கொண்டு எதையும் பேச விருப்பமில்லை. அதில், “உன்ன உள்ளுக்க போகச் சொன்னனான் அன்பு!” என்றார் எச்சரிப்பாக.

அடுத்த நொடியே அன்பினி தன் அறைக்குள் இருந்தாள். காரணமே இல்லாமல் அவளுக்குக் கைகால்கள் எல்லாம் பதறின.

அடுத்த கணமே, “வீடு வரைக்கும் தேடி வாறதுக்கு எவ்வளவு தைரியம் உமக்கு? முதல் கலியாணம் கட்டிப் பிள்ளையோட இருக்கிற ஒருத்தனைப் பிடிக்க வெக்கமா இல்லையோ?” என்று நிலானியிடம் சீறினார் இந்துமதி.

அவள் துடித்துப்போனாள். “அப்பிடிச் சொல்லாதீங்கோ அம்மா. கடவுள் சத்தியமா எனக்கு அவர் ஏற்கனவே கட்டினது தெரியாது. அவர் சொல்லவே இல்ல.” என்றாள் அவசரமாக.

இந்துமதிக்கு முகம் கன்றிப் போயிற்று. ஆக, இந்தப் பெண்ணையும் அவர் பெற்றவன்தான் ஏமாற்றி இருக்கிறான். எவ்வளவு கேவலம்! விபத்தினால் அவர் மனத்தில் உண்டாகியிருந்த மெல்லிய ஈரமும் காய்ந்து போயிற்று. ஒன்றுக்கு இரண்டு பெண்களின் வாழ்க்கையை நாசமாக்கியவனை இன்னுமே வெறுத்தார்.

அதேநேரம் எதற்காகவும் இந்தப் பெண்ணை வீட்டுக்குள் எடுக்கவும் அவர் தயாராயில்லை. அதில், “அவன் ஏமாத்தினா நீரும் வயித்தில பிள்ளை வாற அளவுக்கு இடம் குடுப்பீரா? முதல் என்னத்துக்கு இங்க வந்து நிக்கிறீர்?” என்று அதட்டினார்.

“இல்ல பயப்பிடாதீங்கோ. உங்களிட்ட எதைக் கேட்டும் நான் வரேல்ல. அவருக்கு இடம் கொடுத்தது என்ர பிழைதான். அதுக்காக நான் கேவலமானவள் இல்லை அம்மா. உண்மையைச் சொல்லப்போனா என்ர வாழ்க்கையையும் துலச்சு, வயித்தில பிள்ளையோட நானும் அவரிட்ட ஏமாந்துதான் நிக்கிறன். ஆனாலும் பரவாயில்ல. ஒருத்தரைப் பற்றி முழுசாத் தெரியாமல் கண்ணை மூடிக்கொண்டு நம்பினதுக்குத் தண்டனையா இத நான் ஏற்கிறன். இனி நான் அவரின்ர வாழ்க்கைல இல்ல. உங்கட மருமகளை அவரோட சேர்ந்து வாழச் சொல்லுங்கோ. அந்தளவும் போதும். இதைச் சொல்லத்தான் வந்தனான். வாறன் போயிற்று.” அடக்கிய கண்ணீரும் நடுங்கிய குரலுமாகச் சொல்லிவிட்டு அவள் போக, அப்படியே அமர்ந்துவிட்டார் இந்துமதி.

அந்தப் பெண், எல்லாம் உன் மகனால்தான் என்று அவரோடு சண்டை பிடித்திருந்தாலோ, கேவலப் படுத்தியிருந்தாலோ, என் வாழ்க்கைக்கு ஒரு பதிலைச் சொல் நியாயம் கேட்டிருந்தாலோ கூட அவரை இது இந்தளவில் தாக்கியிராது போலும்.

உன் மகனால்தான் நானும் வாழ்க்கையை இழந்து நிற்கிறேன் என்று சொல்லிவிட்டு, ஆனாலும் யார் வாழ்க்கையையும் நான் கெடுக்க விரும்பவில்லை, விலகிப் போகிறேன் என்று சொன்னது அவரைக் கசக்கிப் பிழிந்து. இந்த நியாயமும் நேர்மையும் கூட அவர் பெற்றவனுக்கு இல்லாமல் போயிற்றே! சே! எப்படியான ஒருவனைப் பெற்று வளர்த்திருக்கிறார்?

எல்லாவற்றையும் கேட்டுக்கொண்டிருந்த அன்பினிக்கும் தமையன் மீதிருந்த கொஞ்சநஞ்சப் பற்றும் அகன்று போயிற்று. உள்ளத்தில் வெறுப்பு மூண்டது. எப்படி இப்படி இரண்டு பெண்களின் வாழ்வோடு விளையாட முடிந்தது?

அவளின் அபயனுக்கு இன்னொருத்தியோடு தொடர்பு இருந்தால் அவளுக்கு எப்படி இருக்கும்? அப்போதுதான் சுபாங்கியின் மனநிலையும், ‘அப்பா செத்திட்டார் எண்டு சொல்லி வளப்பம்’ என்று சொன்ன அபயனின் வார்த்தைகளின் பின்னிருக்கும் நியாயமும் அவளுக்கு முழுமையாய் விளங்கிற்று.

தமையன் மீதான பாசம் என்பதை விடவும் தளிரைக் கண்ட கணத்தில், அதுவும் அவள் அத்தை என்று ஓடி வந்து ஆசையாகத் தொற்றிக்கொண்டபோது, அந்தக் குழந்தை அப்பா இல்லாமல் எப்படி வாழ்வாள் என்கிற ஆதங்கத்தில்தான் அவனிடம் அப்படிக் கேட்டிருந்தாள்.

இப்போது யோசிக்கையில் அவளின் தமையனைப் போன்ற ஒருவன், அப்பாவாக இருப்பதற்கு இல்லாமல் இருப்பதே பரவாயில்லையோ என்று தோன்றிற்று.

*****

நிலானி வீடு திரும்பியபோது மாலையாகியிருந்தது. வீட்டுக் கதவு திறந்தே இருந்தது. வீட்டுக்குள் நுழைகையிலேயே வித்தியாசமாய் ஒரு உணர்வு. என்ன என்று பிரித்தறிய முடியாமல், “அம்மா!” என்று அழைத்தாள்.

யாரும் இருப்பதற்கான அடையாளமே இல்லை. இந்த நேரம் எங்கே போனார்? கோயிலுக்கோ? வீடு முழுவதும் சுற்றி வந்தவளுக்கு வீட்டுப் பொருள்கள் குறைந்திருப்பது போன்றிருந்தது.

நெஞ்சம் பதற ஓடிப்போய் அலமாரியைத் திறந்து பார்த்தாள். அன்னையினதும் நிசாந்தனினதும் உடைகள் காணாமல் போயிருந்தன. நிசாந்தனின் கிளினிக் சம்மந்தமான எந்த ஆவணத்தையும் காணோம்.

ஒரு கணம் அவளுக்கு என்ன நடந்திருக்கும் என்று யோசிக்கவே முடியவில்லை. நெஞ்சு படார் படார் என்று அடித்துக்கொண்டது. ‘இல்லை, பதறக் கூடாது, நிதானமாய்ப் பார்க்க வேண்டும்!’ என்று ஆழ்ந்த மூச்சுகளை இழுத்துவிட்டுத் தன்னை நிதானப்படுத்திக்கொண்டு தேடினாள்.

நெஞ்சுச் சட்டைக்குள் வைத்துக்கொள்வது போன்று அவர் பயன்படுத்தும் குட்டி பர்சிலிருந்து, அவரின் கிளினிக் புத்தகம் தொடங்கி, அவர் வெளியூர் எங்கும் போவதாக இருந்தால் பயன்படுத்தும் பயணப்பை வரை பலவற்றைக் காணவில்லை.

அவளை இப்படித் தனியாக விட்டுவிட்டுப் போய்விட்டார்களா என்ன? கைகள் நடுங்க அவருக்கு அழைத்தாள். அழைப்புப் போனது. என்ன அவர் அழைப்பை ஏற்கவே இல்லை.

“அம்மா, எங்க அம்மா என்னை விட்டுட்டுப் போயிட்டீங்க? நான் செஞ்சது பிழைதான். அதுக்கு இப்பிடியாம்மா செய்வீங்க? திரும்பி வாங்கம்மா பிளீஸ். நீங்களும் தம்பியும் இல்லாம எப்பிடி அம்மா இருப்பன்?” என்று கேட்டு அவருக்குச் செய்தி அனுப்பி வைத்தாள்.

பதில் எதுவும் வருவதாய் இல்லை. திரும்ப திரும்ப அழைத்தாள். கடைசியில் கைப்பேசி அணைத்துவைக்கப்பட்டிருந்தது.

அவ்வளவுதான். இடிந்துபோய் அமர்ந்துவிட்டாள். தன் உதவி இல்லாமல், தன் சம்பளப் பணம் இல்லாமல் நிசாந்தனை அவரால் பார்த்துக்கொள்ளவே முடியாது என்று நன்கு தெரிந்திருந்தும் அவனோடு போயிருக்கிறார் என்றால், அந்தளவில் அவளை வெறுத்துவிட்டார் என்றுதானே அர்த்தம்?

பிச்சை எடுத்தாலும் பரவாயில்லை, நீ எங்களுக்கு வேண்டாம் என்கிறாரா? ஒழுக்கம் கெட்டுப் போனவள் இனி நீ எக்கேடு கெட்டாலும் அக்கறையில்லை என்று விட்டுவிட்டுப் போனாரா? இல்லை, கேடுகெட்டவள் நீ, உன் பாவம் எங்களுக்கு வேண்டாம் என்று நினைத்தாரா?

உள்ளம் அழுது தீர்த்தது. இனி வயிற்றில் இருக்கும் அந்தக் குழந்தையும் இந்தக் கண்ணீரும்தான் அவளுக்கு மிச்சம் போலும்.


தொடரும்...
 
Last edited:

நிதனிபிரபு

Administrator
Staff member
அத்தியாயம் 23


அடுத்து என்ன என்று தெரியாமலேயே அந்த வாரம் தன் இறுதியை எட்டியிருந்தது. இரு வீட்டினரும் மற்றவரிடம் எந்த வகையிலும் தொடர்பு கொள்ளவில்லை. காந்தன் எப்படி இருக்கிறான், அவன் நிலை என்ன, அவனுக்கு யார் உதவியாக இருக்கிறார்கள் என்று எதுவும் தெரியாது. திரும்பவும் அழைத்த வைத்தியசாலையினருக்கு, ‘அவனுக்கும் எங்களுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை, இனி இங்கே எடுக்க வேண்டாம்!’ என்று கோபமாகச் சொல்லிவிட்டு வைத்திருந்தார் திருநாவுக்கரசு.

அன்று ஞாயிற்றுக்கிழமை. அன்பினி வவுனியாவுக்குப் புறப்பட்டேயாக வேண்டும். அவளுக்குப் போகவும் மனமில்லை, அங்குச் சென்று படிக்கிற மனநிலையும் இல்லை.

படிப்பை முடித்தபிறகு குறைந்தது ஒரு வருடமாவது வேலை பார்த்தபிறகுதான் திருமணம் என்று பிடிவாதமாக இருந்தாள். இல்லை, திருமணத்தை முடித்துவிட்டு வேலையைப் பார் என்று தமையன் சொன்னபோது, சம்மதித்தும் இருந்தாள். அதனாலோ என்னவோ அபயனோடான திருமண வாழ்க்கை பற்றிய நினைப்புகள் அவளுக்கு வர ஆரம்பித்திருந்தன.

அதுவும், அன்று பேசும்போது, ‘கட்டினபிறகு உன்னத் தள்ளி எல்லாம் வைக்கேலாது’ என்று அவன் சொன்னது, அத்தனை காலமாகக் கட்டுக்குள் வைத்திருந்த அவள் மனத்தைக் கலைத்துப் போட்டிருந்தது. இனிமை சேர்க்கும் பல கற்பனைகள் அவளுக்குள் இரகசியமாய் ஓடியிருக்கின்றன. இரவுகள் கனவுகளின் கூடாரமாயிற்று. மெல்ல மெல்ல அவனுக்கும் அவளுக்குமான அந்தத் திருமண வாழ்க்கைக்கு அவள் மனத்தளவில் தயாராக ஆரம்பித்திருந்தாள்.

இனி? அவளுக்குத் தெரியவில்லை. சுபாங்கிக்கு அவன் கொடுத்த வாக்கு, அதற்கு வலுச் சேர்க்கிறவனாக அவளை மொத்தமாய் அவன் விலக்கி வைத்திருப்பது, அவளைக் கண்டபோது கூட அவனிடம் தென்படாத இளக்கம் என்று அவன் நடந்துகொள்ளும் விதம் அத்தனையும் அவளைப் பயமுறுத்த ஆரம்பித்திருந்தன.

ஆனாலும் கூட, அவளைத் துரத்தி துரத்தி நேசித்தவன், பிடிவாதமாக அவள் நெஞ்சிலும் நேசத்தை விதைத்தவன் எதற்காகவும் அவளைக் கைவிட்டுவிட மாட்டான் என்கிற அசைக்க முடியாத நம்பிக்கை, அவளிடம் இன்னுமே இருந்தது.

அந்த நம்பிக்கையை இறுக்கமாகப் பற்றிக்கொண்டுதான் இதோ வவுனியாவுக்குப் புறப்படுகிறாள்.

அவள் தயாராகி வெளியே வந்தபோது, இந்துமதி கலங்கிச் சிவந்த முகத்துடன் நின்றிருந்தார்.

கடந்த மூன்று வருடங்களாக மகள் அவரோடு இல்லைதான். அது கவலையைத் தந்தாலும் பெரிதாய்த் தாக்கியதில்லை. அவரின் பொழுதுகளை இனிமையாக்கப் பேத்தி இருந்தாள். துணைக்கு மருமகள் இருந்தாள். இனி?

கணவர் கடைக்குச் சென்றுவிட அந்த வீட்டில் தனியாக இருக்கப் போகிறார். நினைத்துப் பார்க்கவே நெஞ்சை என்னவோ செய்தலும் மகளிடம் எதையும் காட்டிக்கொள்ளாமல், “கவனம் என்னம்மா.” என்றார் அவள் தலை வருடி.

அவளுக்கும் அவர்களைத் தனியாக விட்டுவிட்டுப் போகிறோமே என்கிற கவலை இல்லாமல் இல்லை. ஆனால், படிப்பை முடித்தாக வேண்டுமே. அதில், “இன்னும் ஒரு மூண்டு மாசம் அம்மா. ஸ்டடி லீவுக்கு இங்க வந்திடுவன். பிறகு எக்ஸாமுக்கு மட்டும் போனாச் சரி. ” என்றாள் அவரைக் கட்டிக்கொண்டு.

தலையை ஆம் என்பதுபோல் அசைத்தவர் ஒன்றும் சொல்லவில்லை. விழிகள் மட்டும் கலங்கிப் போயின.

திருநாவுக்கரசுவும் எதையோ சொல்வதற்குத் தவிக்கிறார் என்று விளங்க, “என்னப்பா?” என்றாள் அன்பினி.

“அது… மனதில எந்த ஆசையையும் வளக்காதீங்கோ பிள்ளை. பேசின கலியாணம் நடக்கும் எண்டுற நம்பிக்கை எனக்கு இல்ல. அப்பிடி நடக்காம இருக்கிறதுதான் நல்லம் எண்டு நானும் நினைக்கிறன். அதால படிப்பை மட்டும் பாருங்கோ.” என்றார் அவள் முகம் பார்க்க முடியாமல்.

மளுக்கென்று அவள் விழிகள் நிறைந்து போயின. ஆனாலும் கட்டுப்படுத்தி, “நீங்க என்னை நினைச்சுக் கவலைப்பட வேண்டாம் அப்பா. எனக்கும் இப்போதைக்குப் படிப்பை முடிக்கோணும் எண்டுறது மட்டும்தான் மைண்ட்ல இருக்கு.” என்றுவிட்டுப் புறப்பட்டாள்.

இங்கே அபயனுக்கு வீட்டினரை விட்டு நகரவே முடியாத நிலை. தகப்பனுக்காகச் சிணுங்கும் தளிர் முதற்கொண்டு, உண்ணாமல் உறங்காமல் கண்ணீர் உகுத்தபடி கிடக்கும் தமக்கையிலிருந்து, உடைந்து தளர்ந்துவிட்ட தாய் தந்தையர் வரை அனைவரையும் அவன் ஒருவனே தாங்கவேண்டி இருந்தது. அப்படி இருந்துமே தந்தையிடம் சொல்லிவிட்டு இடையில் நான்கு நாள்களுக்குக் கொழும்புக்கு ஓடிவிட்டு வந்திருந்தான்.

சுபாங்கி இன்னுமே தன்னை நிதானப்படுத்திக்கொள்ள முடியாமல் தவித்துக்கொண்டிருந்தாள். அந்தக் கேடுகெட்டவனுக்காக நான் அழவே கூடாது என்று எவ்வளவுதான் நினைத்தாலும் முடியாமல், நம்பிக்கைத் துரோகத்தின் வலி அவளைக் கொஞ்சம் கொஞ்சமாய்க் கொல்லுவதைப் போல் உணர்ந்தாள். நடந்ததை மறந்து வேறு எதையும் யோசிக்க முடியவில்லை, ஒரு கண்ணுக்கு உறங்க முடியவில்லை. ஒரு வாய் சோறு உள்ளே இறங்குவேனா என்றது.

எத்தனை ஆசைகளோடும் கனவுகளோடும் ஆரம்பித்த வாழ்க்கை. சில வருடங்களில் ஒன்றுமே இல்லை என்றாகிப் போயிற்றே! அவர்கள் வாங்கிப்போட்ட காணி, அதில் கட்ட நினைத்த வீடு, அதன் பிறகு பெற்றுக்கொள்ள ஆசைப்பட்ட இன்னொரு பிள்ளை, நால்வருமாக அந்த வீட்டில் வாழ நினைத்த வாழ்க்கை என்று எல்லாமே கற்பனையாக மட்டுமே போயிற்றே!

எதிர்காலம் என்பது இனி என்ன? வெறும் சூனியமா?
நினைக்க நினைக்க அவள் நெஞ்சு காந்தியது. அவன் அங்கே எவளோ ஒருத்தியுடன் கூத்தடிக்க, இங்கே அவள் கண்ணீர் வடித்துக்கொண்டிருக்கிறாள். அவனை விடக் கூடாது. விடவே கூடாது. ஏதாவது செய்து அவனையும் அழ வைக்க வேண்டும் என்கிற ஆவேசம் அவளுக்குள் பெரிதாய் எழுந்து நின்றது.

“அம்மாச்சி, இப்பிடியே இருந்தா என்னம்மா அர்த்தம்? இனி என்ன செய்யப் போறீங்க?” அழுது, கத்தி, ஆவேசமாகத் திட்டிக்கொண்டிருந்த மகள், இப்போதெல்லாம் தனக்குள் கொஞ்சம் கொஞ்சமாக ஒடுங்குவதைப் பார்த்த பரமேஸ்வரி இதமாய் விசாரித்தார்.

“நான் செய்ய என்னம்மா இருக்கு? அதுதான் எல்லாத்தையும் அவன் செய்திட்டானே! இனிச் சாவுக்கும் எனக்கு அவன் வேண்டாம். அவன்ர முகத்தில முழிக்கக் கூட எனக்கு விருப்பம் இல்ல.” என்றாள் அழுகையும் ஆத்திரமுமாக.

“ஆனாம்மா தளிர் பாவமே பிள்ளை. நீங்க மட்டும் எண்டா அது வேற. பேத்திக்காகவும் யோசிக்க வேணுமே.”

அவளுக்கு ஆத்திரம் வந்தது. “அப்ப நான் ஒரு மனுசி இல்லையாம்மா? எனக்கு வலிக்காதா? நான் எனக்காக வாழக் கூடாதா? முதல் உங்களுக்கு விளங்குதா இல்லையா? அங்க அவள் மூண்டு மாதமாம். அந்த மூண்டு மாதமும் அவன் என்னோடயும் வாழ்ந்து இருக்கிறான். எனக்கு அத நினைக்க நினைக்க என்னையே மண்ணெண்ணெய் ஊத்தி எரிக்கோணும் மாதிரி இருக்கு. ஆனா அவன்… சீ!” என்றவளின் சீற்றத்திலும் அவள் சொன்ன விடயத்திலும் விக்கித்துப்போய் அப்படியே அமர்ந்துவிட்டார் பரமேஸ்வரி.

சொல்வதறியாமல் கணவரைத் திரும்பிப் பார்த்தார். அவர்தான் மகளோடு பேசிப் பார்க்கும்படி மனைவியிடம் சொல்லியிருந்தார். மகள் சொன்னதைக் கேட்டவருக்கு உடலும் உள்ளமும் கொதித்துப் போயிற்று. விறுவிறு என்று வீட்டை விட்டு வெளியேறியவருக்கு நெஞ்சின் கொதிப்பை அடக்குவதற்கு நிறைய நேரமாயிற்று.

நல்லகாலம் அன்று அபய் வீட்டில் இல்லை. இருந்திருக்க நிச்சயமாய் இன்னுமொருமுறை காந்தனைத் தூக்கிப்போட்டு மிதிக்கிறேன் என்று புறப்பட்டிருப்பான்.

கிட்டத்தட்ட ஒரு மாதம் இப்படியே ஓடியிருந்தது. பேத்தியைப் பாராமல், அவளைக் கொஞ்சாமல், மகளும் பக்கத்தில் இல்லாமல் பாதியாகிப் போயிருந்தார் இந்துமதி. திருநாவுக்கரசின் நிலையும் அதேதான்.

இதற்குள் கதை வெளியே கசிந்திருந்தது. இரு வீட்டுக்குமே இது சங்கடமான நிலை என்றாலும் அன்பினி குடும்பத்துக்குப் பெருத்த அவமானம். வெளியில் தலை காட்டவே முடியவில்லை. சொந்தபந்தங்கள், அறிந்தவர்கள், தெரிந்தவர்கள் என்று எல்லோரிடமும் முகம் கொடுக்க முடியாமல் நின்றனர்.

ஒரு கட்டத்துக்குமேல் இந்துமதியால் இந்த அழுத்தத்தைப் பொறுக்க முடியவேயில்லை. “இப்பிடியே இருந்து என்னப்பா செய்றது? அவே என்ன முடிவு எடுத்திருக்கினமாம் எண்டு கேக்க வேண்டாமோ?” என்று கணவரிடம் கேட்டார்.

அவருக்கும் அதே யோசனைதான். எந்த முடிவையும் எடுக்கும் நிலையில் அவர்கள் இல்லையே! சிலபல வேலைகளை முடித்துக்கொண்டு ஒருநாள் இந்துமதியோடு அவர்களின் வீட்டுக்குப் புறப்பட்டுச் சென்றார்.

தாம் பேச வருவதாக முதலே குழந்தைவேலுவுக்கு அழைத்துச் சொல்லியிருந்தால் அபயனிலிருந்து எல்லோரும் வீட்டில்தான் இருந்தனர்.

எல்லோர் முகத்திலும் மிகுந்த இறுக்கம். யாராலும் இயல்பாய்ப் பேசவே முடியவில்லை. ஆயினும் கூட வீட்டின் தலைவராக நின்று, “வாங்கோ, வந்து இருங்கோ!” என்று அழைத்தார் குழந்தைவேலு.

ஆனால், திருநாவுக்கரசு வீட்டுக்குள் செல்லவில்லை. “கதிரைகளை(நாற்காலிகள்) வெளில கொண்டுவந்து போடுங்கோ. இங்க முத்தத்திலயே(முற்றம்) இருப்பம்.” என்றுவிட்டார்.
 
Last edited:

நிதனிபிரபு

Administrator
Staff member
குழந்தைவேலுவுக்கு ஒரு மாதிரியாகிப் போயிற்று. “அது அண்டைக்கு இருந்த கோவத்துல…” என்று இழுத்தார்.

“அண்டைக்கு உங்களுக்காவது என்ன நடந்தது எண்டு தெரியும். எங்களுக்கு எதுவுமே தெரியாது. எண்டாலும் பரவாயில்ல விடுங்கோ. நீங்க கதிரையை(நாற்காலி) இங்கயே கொண்டு வாங்கோ, இங்கயே இருப்பம்.” என்றவர் முற்றத்திலேயே நின்றுகொண்டார்.

அதற்குமேல் குழந்தைவேலுவும் ஒன்றும் சொல்லவில்லை. அபயனைப் பார்க்க அவன் பிளாஸ்டிக் நாற்காலிகளைக் கொண்டுவந்து போட்டான்.

இந்துமதி, திருநாவுக்கரசு, குழந்தைவேலு மூவரும் அமர்ந்துகொள்ள, அபயன் தந்தையின் அருகில் நின்றுகொண்டான். பெண்கள் இருவரும் வீட்டு வாசல் நிலையில் நின்றிருந்தனர்.

இந்துமதிக்கு சுபாங்கியின் கையில் இருந்த பேத்தியிலேயே கண் போயிற்று. அவரின் சொந்தப் பேத்தி. ஆனாலும் ஆசையாகத் தூக்கிக் கொஞ்ச உரிமையற்று நிற்கிறார். உள்ளம் அழுதது.

திருநாவுக்கரசுவின் நிலையும் அதேதான். எத்தனை நாள்களுக்குப் பிறகு பேத்தியைப் பார்க்கிறார். அவர் மடியிலேயே விளையாடி, அவர் கையிலேயே உறங்கிப் போகிற குழந்தை. பகலில் தவறாமல் அவர் வீட்டுக்கு வருவதே சாப்பிட்டுவிட்டு அவளோடு கொஞ்ச நேரம் விளையாடிக்கொண்டு இருந்துவிட்டுப் போகலாம் என்கிற ஆசையில்தான். ஆனால் இன்று? அவள் வேறு, “அப்பப்பா…” என்று சிணுங்கியபடி இவரிடம் ஓடி வரத் துடித்துக்கொண்டு இருக்கவும், “பேத்தியை வாங்குங்கோ.” என்றார் இந்துமதியிடம்.

அதற்குமேல் தாமதிக்காமல் அவருமே ஓடிப்போய் வாங்கிக்கொண்டார். அவளைத் தூக்கியதுமே அவரால் அழுகையை அடக்கவே முடியாமல் போயிற்று. அவளை மார்போடு அணைத்தபடி விம்மினார். ஆசை தீரக் கொஞ்சினார். திருநாவுக்கரசுவும் ஆசையாய் வாங்கி மடியில் வைத்துக்கொண்டார்.

பழக்கதோசத்தில் அவள் அவரின் கையைப் பாத்தாள். அவரும் ஏமாற்றாமல் வாங்கி வந்த இனிப்புப் பண்டத்தை எடுத்துக்கொடுத்தார்.

சற்று நேரம் அவள் அதைச் சாப்பிடும் அழகையே பார்த்திருந்தவர் மீண்டும் பேத்தியை மனைவியிடம் கொடுத்துவிட்டு, நிமிர்ந்து அமர்ந்தார்.

பேச்சை ஆரம்பிப்பது அவருக்கு இலகுவாகவே இல்லை. ஆனால், பேச என்றே வந்துவிட்டுப் பேசாமல் இருப்பதில் அர்த்தமும் இல்லையே!

ஒரு நெடிய மூச்சை இழுத்துவிட்டுவிட்டு, “நல்லதைச் சொல்லிக் குடுத்துத்தான் வளத்தம். ஆனாலும் அவன் இப்பிடி எல்லாம் செய்வான் எண்டு கனவில கூட நினைக்கேல்ல. எங்கட மகனா எண்டு நம்பவே ஏலாம இருந்தது. நான்தான் இந்தக் கலியாணப் பேச்சை முதல் முதல் எடுத்தனான். உங்கட மகளைச் சந்தோசமா வச்சிருப்பான் எண்டு நம்பித்தான் கட்டியும் வச்சனான். அதால உங்கட மகளின்ர இந்த நிலைக்கு நானும் ஒரு காரணம். அதால நீங்க எல்லாரும் என்னை மன்னிக்க வேணும்.” நெஞ்சில் கையை வைத்து அவர் சொல்லவும் அழுகையை அடக்க முடியாமல் சத்தமாக விம்மி இருந்தார் இந்துமதி. துணைக்கு மடியில் இருந்த பேத்தியை அணைத்துக்கொண்டார்.

யாருக்கு என்ன பேசுவது என்று தெரியாத நிலை. ‘பரவாயில்லை விடுங்கோ’ என்று சொல்லக்கூட முடியாமல் தவித்தனர்.

“இப்ப இதக் கேக்கிறது சரியா எண்டு எனக்குத் தெரியேல்ல. எண்டாலும் கேக்கிறன். இனி என்ன செய்யப்போறீங்க எண்டு ஏதும் யோசிச்சனீங்களா?” என்று அவர்கள் எல்லோரையும் பொதுவாகப் பார்த்து வினவினார்.

குழந்தைவேலு மகளைத் திரும்பிப் பார்த்தார். அவளும், “கட்டின மனுசி நான் இருக்கேக்கையே இன்னொருத்திக்குப் பின்னால போன ஒருத்தனோட வாழ வேணும் எண்டு எனக்குத் தலை எழுத்தா அப்பா? எனக்கு என்னப்பா குறை? நான் ஏனப்பா அப்பிடியான ஒருத்தன சகிச்சு வாழ வேணும்? அவன் எல்லாம் என்ர கால் தூசுக்கும் வரமாட்டான். அவன் எனக்கு வேண்டவே வேண்டாம்.” என்றாள் தெளிவாய்.

குழந்தைவேலு திரும்பித் திருநாவுக்கரசைப் பார்த்தார். தன் மருமகள் தன் முகம் பார்த்துத் தன்னிடம் பேசவில்லை என்பதை புரிந்துகொண்ட திருநாவுக்கரசு, அது அவரைக் காயப்படுத்தியபோதும் காட்டிக்கொள்ளாமல் தானும் குழந்தைவேலுவிடமே பதில் சொன்னார். “நீங்க என்ன முடிவை எடுத்தாலும் எனக்கு அதில முழுமையான சம்மதம்தான்.” என்றுவிட்டுக் கையோடு கொண்டுவந்த பையிலிருந்து சில ஆவணங்களை வெளியில் எடுத்தார்.

“இதில இருக்கிறது எல்லாம் காந்தனுக்குக் குடுக்கிறதுக்கு எண்டு பிரிச்சு வச்ச சொத்துப் பத்திரங்கள். அதை எல்லாம் பேத்தின்ர பெயருக்கு மாத்தி இருக்கிறன். நான் பெத்த மகன் தன்ர கடமைல இருந்து தவறி இருக்கலாம். ஆனா நான் என்னால முடிஞ்சதைச் செய்ய நினைக்கிறன். வாங்குங்கோ.” என்று குழந்தைவேலுவிடம் நீட்டினார்.

அவரால் அதை வாங்க முடியவில்லை. அவர் மறுக்க முதல், “அந்தாளுக்குச் சொந்தமானதை வாங்கி எங்கட வீட்டுப் பிள்ளைக்குக் குடுக்கிற நிலமைல நாங்க இல்ல. அதால இதெல்லாம் எங்களுக்குத் தேவை இல்ல!” என்று பட்டென்று சொன்னான் அபயன்.

மகனின் கேவலமான செயலுக்குப் பதிலாக, சொத்தைத் தந்து நேராக்கப் பார்க்கிறாரா என்கிற கோபம் அவனுக்கு.

ஆனால் அவரோ, “அதைச் சொல்ல உங்களுக்கு உரிமை இல்ல தம்பி.” என்றார் நிதானமாக. “இடையில என்ன வேணுமெண்டாலும் நடந்திருக்கலாம். ஆனா காந்தன் என்ர மகன் எண்டுறதோ, தளிருக்கு அவன்தான் அப்பா எண்டுறதோ எப்பிடி மாறாதோ, அதே மாதிரி அவா என்ர பேத்தி எண்டுறதும் மாறாது. அவாக்கு நான் செய்றதை செய்யக் கூடாது எண்டு சொல்லுற உரிமை உங்கட அக்காக்குக் கூட இல்ல.” என்று தெளிவாய்ச் சொன்னவர், எட்டிக் குழந்தைவேலுவின் மடியில் பத்திரங்களை எல்லாம் வைத்தார்.

“இல்லை. எங்களுக்கு இதில உடன்பாடு இல்ல. இதெல்லாம் எங்களுக்கு வேண்டாம்.” என்று அவருமே அதைத் திருப்பிக் கொடுக்க முயன்றார்.

திருநாவுக்கரசு வாங்கவில்லை. “இதில உடன்பாடு இருக்கா இல்லையா எண்டுற கேள்விக்கே இடமில்லை. உங்கட மகனுக்குச் சொன்னதுதான். உங்களுக்கு அவா எப்பிடிப் பேத்தியோ அப்பிடித்தான் எங்களுக்கும். நீங்க உங்கட பேத்திக்குச் செய்ற மாதிரி நானும் செய்றன். அவ்வளவுதான்.” என்றார் முடிவாக.

“நீங்க சொல்லுறது எல்லாம் சரிதான். ஆனா தயவு செய்து எங்களையும் கொஞ்சம் விளங்கிக் கொள்ளுங்கோ. ஏற்கனவே நிறைய நொந்து போயிட்டம். ஆனாலும் எல்லாத்தையும் கடந்து வரத்தான் நினைக்கிறம். அதுக்கு விடாம இப்பிடி நீங்க செய்றது எல்லாம் சரி இல்ல.” என்றார் குழந்தைவேலு.

திருநாவுக்கரசு எதற்காகவும் தான் எடுத்த முடிவிலிருந்து மாறுவதற்கு இல்லை. “உங்கட நிலமைலதான் நாங்களும் இருக்கிறம். உங்களுக்காவது மகள், மகன் எண்டு பிள்ளைகள் எல்லாரும் பக்கத்தில இருக்கினம். ஆறுதலுக்குப் பேத்தியும் இருக்கிறா. எங்களுக்கு? கடைசி காலத்தில பாப்பான் எண்டு நம்பின மகன் இனி இல்ல. முகம் பாத்து ஆறுறத்துக்குக் கூட வீட்டில ஒரு ஆள் இல்ல. ஆனாலும், எங்கட மகனாலதான் உங்கட மகளுக்கு இந்த நிலை எண்டுதான் பேத்தியைப் பாக்கோணும் மாதிரி ஆசையா இருந்தாலும் இந்தப் பக்கமே நாங்க வரவே இல்ல.” என்றவர் அதற்குமேல் அங்கே நிற்கவில்லை. எழுந்துகொண்டார்.

அவர் புறப்படப்போகிறார் என்றதும் குழந்தைவேலுவும் எழுந்துகொண்டார்.

இந்துமதிக்குப் பேத்தியைக் கொடுக்க மனமேயில்லை. அவள் அவர் மார்பிலே உறங்கிப் போயிருந்தாள். இனி எப்போது பார்க்கக் கிடைக்குமோ என்கிற தவிப்பில் அவளை இறுக்கி அணைத்து முத்தமிட்டார். கண்ணீர் தானாய் வழிந்தது. மீண்டும் மீண்டும் முத்தமிட்டார்.

பரமேஸ்வரி வாங்க வரவும், “கவனமாப் பாத்துக்கொள்ளுங்கோ.” என்றபடி மனமேயில்லாமல் கொடுத்தார்.

கடைசியாக, “இதக் கேக்கிறதில அர்த்தம் இல்லை எண்டு தெரியும். எண்டாலும் உறுதியான முடிவு தெரிஞ்சாத்தான் நானும் அடுத்தது என்ன எண்டு பாக்கலாம். அதாலதான் கேக்கிறன். அண்டைக்கு உங்கட மகள் உங்கட மகனுக்கும் எங்கட மகளுக்கும் பேசின கலியாணம் நடக்காது எண்டு சொன்னவா. அது கோவத்துல சொன்னதா, இல்ல, உறுதியான முடிவுதானா?” என்று கேட்டார் திருநாவுக்கரசு.

குழந்தைவேலு மகன் முகத்தைப் பார்த்தார். அவன் பதில் சொல்ல எடுத்துக்கொண்ட நொடி நேரத் தாமதிப்பில், “அதுதான் கேக்கிறாரே, நீயே சொல்லு தம்பி!” என்றாள் சுபாங்கி.

“உறுதியான முடிவுதான். இனி அந்தக் கலியாணம் நடக்காது.” என்றான் அபயன்.

திருநாவுக்கரசு அதற்கு ஒன்றுமே சொல்லவில்லை. சொல்ல அவரால் முடியவில்லை. இதுதான் நடக்கும் என்று அவருக்குத் தெரியாமல் இல்லை. ஆனாலும் அன்றைக்கு ‘மனதில் ஆசையை வளர்க்காதே’ என்று சொன்னபோது, கலங்கிவிட்ட விழிகளோடு ‘எனக்கும் இப்ப படிப்புத்தான் அப்பா முக்கியம்’ என்று சொன்ன மகளுக்காகத்தான் கேட்டிருந்தார். இதோ இப்போது அவனே சொல்லிவிட்டான். சரி என்று தலையசைத்துக் கேட்டுக்கொண்டு, நொறுங்கிப்போன மனத்தோடு அங்கிருந்து நடந்தார்.

கண்ணீரை மட்டுமே கண்களுக்குள் தேக்கியபடி அவரைப் பின் தொடர்ந்தார் இந்துமதி.தொடரும்...

சொறி இண்டைக்கு நல்லாவே லேட்டா போச்சு. எப்பிடி இருக்கு எண்டு சொல்லுங்க. வேற என்ன? எப்பவும் போல ஹாப்பி வீக்கெண்ட். இந்த ரெண்டு வார்த்தைகளை எழுதுறது எண்டா எனக்கு அவ்வளவு சந்தோசம்.
 
Last edited:

நிதனிபிரபு

Administrator
Staff member
அத்தியாயம் 24முழுதாக இரண்டு மாதங்கள் வைத்தியசாலையில் படுத்துக் கிடந்திருந்தான் காந்தன். இடுப்பில் விழுந்த பாரிய அடியும், கால் முறிந்ததும் சேர்ந்து காலத்துக்கும் இனி அவன் ஊன்றுகோலின் துணையுடன்தான் நடமாட வேண்டும் என்கிற நிலை.

உண்மையிலேயே அவனுக்கு அது மிகுந்த அதிர்ச்சி. தானாகவே தன் தலையில் மண்ணை அள்ளிப் போட்டுக்கொண்டதும் அல்லாமல் செய்த பாவத்தின் பலனோ என்னவோ விபத்தும் உண்டாகியிருந்தது.

என்னால் இனி இயல்பாய் நடமாட முடியாது என்பதை ஏற்று, இனிக் காலத்துக்கும் ஊன்றுகோல்தான் என்று மனத்தளவில் தயாராவது ஒன்றும் அவனுக்கு அவ்வளவு இலகுவாக இல்லவே இல்லை. தனக்குள் அழுதான், போராடினான். வைத்தியர்களோடு திரும்ப திரும்பக் கதைத்தான். வளர்ந்துவிட்ட அறிவியல் உலகில் இதை மாற்ற எதுவுமே இல்லையா என்று எத்தனை விசாரித்தும் பலன் சுழியம்தான்.

கிட்டத்தட்ட உயிர் போய் உயிர் பிழைத்த நிலையில் இருந்த அவனை வீட்டினர் யாரும் திரும்பியே பார்க்கவில்லை என்பது, இதைவிடவும் மிகப் பெரிய அடியாகிப்போனது.

அவன் செய்தது மகா தப்புத்தான். அதுவும் ஒழுக்கத்துக்கும் நேர்மைக்கும் மிகுந்த முக்கியத்துவம் கொடுத்து வளர்த்த தந்தையால் தன்னை மன்னிக்கவே முடியாது என்பதும் தெரியும்தான். தாய் தங்கை கூட அவனை எட்டியும் பார்க்கவில்லையே!

மன்னிக்க வேண்டாம். வந்து பார்த்துவிட்டாவது போயிருக்கலாமே! அவனுக்குச் சின்னதாய் ஒன்று என்றாலே துடித்துப்போகும் குடும்பம், இப்படி மொத்தமாய்த் தூக்கி எறிய அவனே காரணமாகிப்போனான்.

மொத்த வீட்டுக்கும் ராஜாவாய் வாழ்ந்தவன். இன்றைக்குக் குப்பைக்குச் சமமாகிப் போனான். இதோ வைத்தியசாலையிலிருந்து புறப்படுகிறான். இன்னுமே பத்து நாள்களுக்கு ஒரு முறை காலினைக் காட்ட வேண்டும். தாய் வீடும் தாரத்தின் வீடும் அதே ஊரில் இருந்தும்கூடத் தங்குவதற்கு அவனுக்கு ஒரு இடமில்லை. அதனால் வவுனியாவுக்கே புறப்படுகிறான்.

போவதற்கு வாகனமில்லை. அழைத்துச் செல்ல ஆள் இல்லை. இரு வீட்டுக்கும் செல்ல அவனுக்குத் தைரியம் இல்லை. எந்த முகத்தை வைத்துக்கொண்டு அவர்களைப் பார்ப்பான்?

வீட்டிலிருந்து எந்த உதவிகளும் வராததினால் அவனுக்கு நினைவு திரும்புகிற வரைக்கும் வைத்தியசாலையினர்தான் எப்படியோ சமாளித்தனர். அதன் பின்னர் அவன் நிலையை அறிந்த அவனே ஆண் தாதியரிடம் சொல்லி, தன்னைக் கவனித்துக்கொள்வதற்கு ஒருவரை வேலைக்கு அமர்த்தி, தனக்கான உடைகள் முதற்கொண்டு அத்தனை உதவிகளையும் பெற்றுக்கொண்டான்.

ஒரு வழியாக வாகனம் பிடித்து வவுனியா, குவார்டசுக்குச் வந்து சேர்ந்தான். இரண்டு மாதங்களுக்குப் பிறகு அவனைப் பார்த்ததும், என்னதான் இருந்தாலும் அரசாங்க உத்தியோகத்தில் உயர் பதவியில் இருக்கிறவன் என்பதும் சேர, அயலட்டை மனிதர்கள் வந்து பெயருக்கு விசாரித்துவிட்டுப் போயினர்.

பக்கத்துவீட்டுப் பெண்மணி வேறு, அவனை ஒரு பெண் வந்து விசாரித்துவிட்டுப் போனதாகச் சொல்லவும் அது நிலானிதான் என்று விளங்கிற்று. முகத்தை மாறாமல் வைத்தபடி தலையாட்டிக் கேட்டுக்கொண்டான்.

இந்த இரண்டு மாத வைத்தியசாலை வாசமும் தனிமையும் நிறைய யோசிக்க வைத்திருந்தது. நடந்த எதையும் மாற்ற முடியாது என்பதையும், தன் மீது தானே பூசிக்கொண்டு கரியோடுதான் இனி மிச்ச வாழ்க்கை என்பதும் புரிந்துபோனதில் இருந்த இருக்கையிலேயே தளர்வாய்ச் சாய்ந்தவன், பின்னால் தலையைச் சாய்த்து விழிகளை மூடிக்கொண்டான்.

கண்களுக்குள் தளிர் வந்தாள். அவனைக் கண்டாலே அப்பா என்று தாவி வரும் குழந்தை. அவன் இருந்தால் அவளுக்கு யாருமே தேவை இல்லை. இனி? விழியோரங்கள் மெலிதாய்க் கரித்தன. இந்த இரண்டு மாதங்களும் அவன் முகம் பாராமல் எப்படி இருந்தாள்? அவளிடம் என்ன சொல்லிச் சமாளித்திருப்பார்கள்?

சுபா கண்களுக்குள் வந்து நின்று முறைத்தாள். உனக்கு என்ன குறை வைத்தேன் என்று எனக்குத் துரோகம் செய்தாய் என்று கேட்டாள். இதே வீட்டில் வைத்து அவளைத் தள்ளி விழுத்தியது நினைவு வந்தது.

அங்கே நடந்த நிகழ்வுகள் முழுமையாக அவனை வந்து சேராதபோதும், அவன் பங்குச் சொத்து முழுவதையும் திருநாவுக்கரசு தளிருக்குக் கொடுத்த விடயத்தை அறிந்திருந்தான். வைத்தியசாலையில் இருந்தபோது அவனைப் பார்க்க வந்திருந்த அவனோடு படித்த நண்பர்கள் அவனைத் திட்டிவிட்டுச் சொல்லியிருந்தார்கள்.

நிலானியின் நிலை என்ன என்று தெரியாது. அவளின் அன்னை என்ன சொன்னாரோ, அவள் என்ன செய்கிறாளோ எதுவுமே தெரியவில்லை. யாரிடம் என்ன விளக்கம் கொடுப்பது என்று எதுவும் புரியாமல் ஒரு நெடிய மூச்சு ஒன்று அவனிடமிருந்து வெளியேறிற்று.

வேறு வழியில்லை. கருமை நிறைந்த இந்தப் பக்கங்களோடுதான் இனி அவன் வாழ்க்கை என்று விளங்கிற்று.

அவனுடைய அலுவலகத்துக்குப் போக வேண்டும், வேலை எப்படி என்று பார்க்க வேண்டும், நிச்சயம் அங்கேயும் நடந்தவை அனைத்தும் கசிந்திருக்கும், அவர்களையும் எதிர்கொள்ள வேண்டும், வாகனத்தோடு சேர்த்து இனி வாகன ஓட்டி ஒருவரையும் ஏற்பாடு செய்ய வேண்டும். நன்றாகக் குணமாகிய பிறகு வாகனத்தைத் தனியாகச் செலுத்தலாம் என்று சொல்லியிருந்தார்கள்தான் என்றாலும் தற்போதைக்கு அவனால் முடியாது.

*****

அன்பினியின் மனது அமைதியிழந்து நிறைய நாள்களாயிற்று. அபயனின் சூழ்நிலையும் மனநிலையும் எப்படி இருக்கும் என்று தெரியாமல் இல்லை. ஆனாலும் கூட இத்தனை நாள்களில் அவளோடு ஒரு வார்த்தையேனும் கதைக்க முடியாமலா இருக்கிறான்? நடந்தவையினால் அவளுக்கும்தானே அதிர்ச்சி. அப்பாவுக்கு அடுத்த இடத்தில் வைத்திருந்த ஒருவனின் செய்கை அவளைப் பாதிக்காதா? அவனுடைய ஒற்றை ஆறுதல் வார்த்தைக்காக அவளும்தானே ஏங்கி நிற்கிறாள். இல்லை அவன் குடும்பமா அவளா என்று வருகையில் அவள் அவனுக்கு ஒரு பொருட்டில்லையா?

கசியப்பார்த்த விழிகளைக் கட்டுப்படுத்திக்கொண்டு படிப்பில் கவனம் செலுத்த முயன்றாள். முடியவேயில்லை. பரீட்சைகளில் கோட்டை விட்டுவிடுவோமோ என்று பயப்படுகிற அளவில் இருந்தது அவள் மனநிலை. அவனிடம் ஒரு முறை ஒரேயொரு முறை மனம் விட்டு அழுதால் கூடப் போதும். தெளிந்துவிடுவாள்.

எங்கே? அவன்தான் அவளைத் தள்ளி வைத்துவிட்டானே! அப்பா கேட்டபோதும் இந்தக் கலியாணம் நடக்காது என்று சொன்னானாம் என்று அறிந்ததில் இருந்தே அவளைப் போட்டு ஒரு பயம் ஆட்ட ஆரம்பித்திருந்தது. ‘அந்தளவுக்கு நான் செய்த பிழை என்ன அபய்?’ என்று தினம்தினம் மனதோடு அவனிடம் கேட்கிறாள். பதில்தான் கிடைத்த பாடில்லை. இரவுகளில் உறங்க முடியவில்லை. படிப்பில் கவனம் செலுத்த முடியவில்லை. எந்த நேரமும் நெஞ்சைப் போட்டு ஏதோ ஒரு வலி குடைந்துகொண்டே இருந்தது.

அவள் பயந்தது சரிதான் என்று சொல்வதுபோல் அன்று அவள் கைப்பேசிக்குச் சில புகைப்படங்கள் வந்து விழுந்தன. அவளோடு பாடசாலையில் படித்த தோழி ஒருத்தி அனுப்பி இருந்தாள். எடுத்துப் பார்த்தவள் இதயம் தன் துடிப்பை நிறுத்தியே இருந்தது.

அங்கே அபய் இன்னொரு பெண்ணோடு சோடியாக நின்றிருந்தான்.

அவளால் நம்பவே முடியவில்லை. மூச்சடைத்த நிலை. திரும்ப திரும்பப் பார்த்தாள். எத்தனை தரம் பார்த்தாலும் அங்கே அவன்தான் நின்றுகொண்டிருந்தான்.

அவன் சிறு புன்னகையோடு நின்றிருக்க அவன் கையைத் தன் இரு கைகளாலும் பிடித்தபடி நின்றிருந்தாள் அந்தப் பெண். மெல்லிய இடைவெளி கூடக் கிடையாது. அவன் கையோடு அவள் தேகம் உரசும் அளவிலான நெருக்கம். இன்னொன்றில் அவள் முன்னால் நிற்க, அவளின் இரண்டு தோள்களையும் பற்றியபடி பின்னால் அவன். இன்னொன்றில் அவள் தோளைச் சுற்றிக் கையைப் போட்டபடி அவன்.

என்னவோ நெஞ்சைக் கிழித்து, இதயத்தில் யாரோ கத்தியைச் பெருகியது போலிருந்தது அவளுக்கு.

இனி அவர்களின் திருமணம் நடக்காது என்று சுபாங்கி சொன்னாளாம் என்று சொன்னபோதிலும் சரி, அவளோடு அவன் கதைக்காமல் தவிர்த்தபோதிலும் சரி, அவனே அப்பாவிடம் திருமணம் நடக்காதாம் என்று சொன்னானாம் என்று அறிந்தபோதிலும் சரி, ஒருவிதக் கலக்கவும் பயமும் அவளைப் போட்டு ஆட்டினாலும் கூட அவள் நம்பிக்கையை இழக்கவில்லை.

காரணம் அவளோ அவள் நேசமோ அன்று! அவன்! அவன் காட்டிய காதல்!

ஆனால் இன்று அந்த நேசத்தைச் சுமந்திருந்த நெஞ்சம் நொறுங்கியே போயிற்று. இதற்கு அவன் அவளைக் கொன்றிருக்கலாம். உண்மையிலேயே கொன்றிருக்கலாம்.

ஏன் பார்க்கிறோம் எதற்குப் பார்க்கிறோம் என்று தெரியாமலேயே அந்த மூன்று புகைப்படங்களையும் திருப்பி திருப்பிப் பார்த்துக்கொண்டே இருந்தாள்.

அவளுக்கு அழைத்த தோழி, அபயனுக்குப் பேசியிருக்கும் அந்தப் பெண் அவளோடு ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் பயில்கிறவளாம், இவர்களை விட ஒரு வயது பெரியவளாம் என்று சொன்னாள். அதனால் அவளின் முகப்புத்தகத்தில் அவள் பகிர்ந்ததை இவளும் பார்த்திருக்கிறாள்.

அவளுக்கு ஏனோ அவனுக்கு அழைத்து இதெல்லாம் என்ன என்று கேட்கவோ, கேட்டுச் சண்டை பிடிக்கவோ விருப்பமில்லை. அன்புக்காகப் பிச்சையே எடுப்பது வேறு! அன்பையே பிச்சையாகக் கேட்பதில் அர்த்தமே இல்லையே!

அதைவிட, இந்தப் புகைப்படங்கள் சொல்லாத விளக்கத்தையா அவன் சொல்லிவிடப் போகிறான்? எல்லாவற்றையும் விட, அவனால் அவளைத் தாண்டி இன்னொருத்தியோடு அவன் வாழ்க்கையை யோசிக்க முடிந்திருக்கிறது. மனத்தளவிலும் உடலளவிலும் இன்னொருத்தியோடு வாழ்வதற்குத் தயாராக முடிந்திருக்கிறது என்கையில் என்ன கேட்டு என்ன பயன்?

அவளோடு கண்ட கனவுகளையும், அவளோடு நிகழ்த்திய பிரத்தியேகமான உரையாடல்களையும் இன்னொருத்தியோடு வாழப்போகிறானாம். வாழட்டும்! அவளுக்கு என்ன? நன்றாக வாழட்டும்! அவள் ஒன்றும் தடுக்கப் போவதில்லை. இந்தக் கண்ணீர் மட்டும் அவள் கட்டுப்பாட்டை மீறி வழிந்துகொண்டே இருந்தது.

ஆனால், அவன் அணிவித்துவிட்ட செயினுக்கு என்ன பொருளாம்? அதை அணிவித்துவிட்டு ‘அன்பா, உண்மையா எங்களுக்குக் கலியாணம் நடந்திட்டா?’ என்று காதோரமாய்க் கேட்டானே. மறந்துவிட்டானா என்ன?

தந்த முத்தம்? காட்டிய நெருக்கம்? ஓர் கோப்பையில் தேநீர் எல்லாம் பருகினார்களே! அவளின் அறை வரைக்கும் வந்தானே? ‘கலியாணம் முடிஞ்ச பிறகு உன்னத் தள்ளி எல்லாம் வைக்கேலாது’ என்றானே. இனி என்ன அந்தப் பெண்ணை மணந்து, அவளைத் தள்ளி வைக்காமல் வாழப் போகிறானாமா? அதற்குமேல் முடியாமல் விம்மல் வெடிக்க ஆற்றுவார் தேற்றுவாரின்றி அழுது தீர்த்தாள்.

*****

அன்று டவுனில் ஏதோ அலுவலாக இன்னொரு புடவைக் கடைக்கு நடந்துகொண்டிருந்த திருநாவுக்கரசு, எதிரில் குழந்தைவேலு அபயனோடு நடந்துவருவதைக் கண்டார். இருதரப்புக்கும் மிகுந்த சங்கடம். கண்டுவிட்ட பிறகு காணாததுபோல் போக முடியவில்லை. இன்முகமாகப் பேசவும் வரமாட்டேன் என்றது.

ஆனாலும் காட்டிக்கொள்ளாமல் நின்ற திருநாவுக்கரசு, “எப்பிடி இருக்கிறீங்க?” என்றார் பொதுவாக.

“பரவாயில்ல. போகுது…” என்ற குழந்தைவேலுவுக்கும் அடுத்து என்ன பேசுவது என்று தெரியாத நிலைதான்.

“அபயனுக்குக் கலியாணம் நிச்சயமாயிற்றுதாம் எண்டு அறிஞ்சன். நாள் குறிச்சாச்சா?” இயல்பாய் அவர் விசாரித்தபோது, அப்பா மகன் இருவருக்குமே மெல்லிய வியப்பு.
 

நிதனிபிரபு

Administrator
Staff member
ஒருபுறம் இத்தனைக்குப் பிறகும் இயல்பாய் உரையாடும் அந்த மனிதரின் குணம் அவர்களைத் திணற வைத்தது என்றால் மறுபுறம் அவனுக்கு நிச்சயமான திருமணத்தைப் பற்றி அவர்கள் பெரிதாய் வெளியில் சொல்லவில்லை. அப்படி இருக்க இவருக்கு எப்படித் தெரிந்தது என்று பார்த்தனர்.

அவருக்கு அவர்களின் பார்வையின் பொருள் புரிந்தது போலும். “அது மகள்தான் பேஸ்புக்கலையோ எங்கயோ போட்டோ பாத்தவாவாம் எண்டு சொன்னவா. உண்மையாவே சந்தோசம் தம்பி. எல்லாம் நல்லபடியா நடக்கும். என்ர பக்கத்தில இருந்து என்ன உதவி தேவை எண்டாலும் எதைப் பற்றியும் யோசிக்காமச் சொல்லுங்கோ. கட்டாயம் செய்வன்.” அவன் தோளில் தட்டிச் சொல்லிவிட்டு அவர் விடைபெற்றுக்கொள்ள, நிலைகுலைந்துபோய் நின்றிருந்தான் அபயன்.

“என்ன தம்பி?” மகனின் அதிர்ந்த தோற்றம் கண்டு வினவினார் குழந்தைவேலு.

ஒன்றுமில்லை என்பதுபோல் தலையை அசைத்தவனின் பார்வை போகிறவரிலேயே இருப்பதைக் கண்டு, “இப்பிடியான ஒரு மனுசனுக்கு அப்பிடியான ஒரு மகன். என்னத்தச் சொல்லுறது? வாங்கோ வந்த வேலையைப் பாப்பம்.” என்றுவிட்டு நடந்தார் அவர்.

“நீங்க போங்கப்பா. இப்ப வாறன்!” என்றவன் எதிர்திசையில் சென்று, அவர் கண்ணுக்குத் தெரியாமல் நின்றுகொண்டான்.

அவனுக்குத் தன்னைச் சமாளித்துக்கொள்வதற்குத் தனிமை தேவைப்பட்டது. தனக்குத் திருமணம் நிச்சயமானது அன்பினிக்கு இவ்வளவு வேகமாகத் தெரிய வந்திருக்கும் என்று அவன் எதிர்பார்க்கவே இல்லை. பெண் வீட்டினர் யாழ்ப்பாணம் என்பதும், இவர்களும் யாரிடமும் சொல்லவில்லை என்பதாலும் கொஞ்ச நாள் எடுக்கும் என்றுதான் எண்ணியிருந்தான்.

அதற்குமுதல் தானே அவளைப் பார்த்துப் பேசி, மனத்தளவிலான அவர்களின் காதல் ஒப்பந்தத்தை முறித்துக்கொள்ள எண்ணியிருந்தான்தான். என்ன, முடிவெடுத்ததும் முதல் வேலையாக ஓடிப்போய் அதை முடிக்க அவனால் முடியவில்லை. அவள் முகத்தைப் பார்த்து, அவள் தவிக்கிற தவிப்பை எல்லாம் இயல்பாக எதிர்கொண்டபடி இதைச் சொல்வது அவனுக்கு இலகுவான காரியமே இல்லை. அதற்குத் தன்னை மனத்தளவில் தயார் படுத்த ஆரம்பித்திருந்தான்.

இங்கானால் அவளுக்கு எல்லாம் தெரிந்திருக்கிறது. ஆனாலும் அவனிடம் அவள் நியாயம் கேட்டுக்கொண்டு வரவுமில்லை, சண்டை பிடிக்கவுமில்லை. என்ன நினைத்திருப்பாள் அவனைப் பற்றி? முதலில் இதையெல்லாம் எப்படித் தாங்கினாள்? உள்ளும் புறமும் மென்மையே கொண்ட பெண்!

ஆனால் அவனும் சூழ்நிலைக் கைதியாயிற்றே! கூடவே, தமக்கையின் வாழ்க்கையை அழித்து, நம்பிக்கைத் துரோகம் செய்தவனின் தங்கையைக் காதலுக்காகக் கைப்பிடிக்க அவனும் மனத்தளவில் தயாரில்லை என்பது உண்மைதான்.

திருமணம் என்ன திருமணத்தோடே முடிகிற ஒன்றா என்ன? அப்படி அவளை மணமுடித்தால் அவர்களின் வீட்டுக்குச் சென்றுவர வேண்டும், அவர்களையும் உறவாக மதிக்க வேண்டும், நாலு நல்லது கெட்டதற்கு அவர்கள் இவர்கள் வீட்டுக்கு வந்து போக வேண்டும், எல்லாவற்றையும் விடக் காந்தனின் தங்கை அன்பினியைப் பக்கத்திலேயே இருந்து பார்த்துக்கொண்டு, அவன் தமக்கையினால் ஒரு நிம்மதியான வாழ்க்கையை வாழத்தான் முடியுமா? சந்தோசம் என்கிற ஒன்று அவள் வாழ்க்கையில் இனி இருக்குமா தெரியாது. குறைந்தபட்சமாக நிம்மதியான ஒரு வாழ்க்கையேனும் கொடுக்க வேண்டியது அவன் கடமையாயிற்றே!

பாசமா நேசமா என்று வருகையில் அவனால் பாசத்தின் புறம்தான் நிற்க முடிந்தது. அவனளவில் எல்லாம் சரிதான். அவள்? அவள் நிலை?

அன்பா! அன்பே வடிவான அவனின் அன்பா! ஒரு நெடிய மூச்சை இழுத்துவிட்டான்.

அவர்கள் வீட்டில் அவசரத் திருமணம் ஒன்றுக்கு யாருமே தயாராயில்லை. ஆனால், அதையெல்லாம் கேட்கும் நிலையில் சுபாங்கி இல்லை. அவளுக்கு அவள் மனத்தில் கொழுந்துவிட்டு எரிந்துகொண்டிருக்கும் நெருப்பைக் கொஞ்சமாவது அணைக்க வேண்டும். அதற்குக் காந்தனைக் காயப்படுத்த வேண்டும். அதற்கான ஆயுதம் அன்பினி. அவளுக்காகத்தானே அன்று இவளைத் தள்ளி விழுத்திவிட்டு, அவள் திருமணம் முடிகிற வரையில் வெளியில் சொல்லாதே என்று சொன்னான். அதற்கு மாறாய் நடந்துகாட்டி, அவனுக்குப் பதிலடி கொடுக்க வேண்டாமா?

ஆரம்ப நாள்களில் இங்கே முல்லைத்தீவில் இவளோடு இவளின் அலுவலகத்திலேயே வேலை செய்த நண்பி ஒருத்தி, பிறகு அவர்களின் சொந்த இடமான யாழ்ப்பாணத்துக்கே மாற்றல் வாங்கிக்கொண்டு போயிருந்தாள். இங்கிருந்த நாள்களில் இவர்கள் வீட்டுக்கு அவளின் குடும்பமே வந்து போயிருக்கிறது. அதில் நல்ல பழக்கமும் கூட.

முன்னொரு நாளில் அவளே அவளின் தங்கைக்கு அபயனைக் கேட்டு, அன்பினியைப் பேசியிருப்பத்தைச் சொல்லி இவள் மறுத்திருந்தாள். அதுவே இன்று கைகொடுக்க, அன்பினி இனி ஏன் வேண்டாம் என்பதையும் சொல்லி இவள் கேட்டபோது அவர்கள் மறுக்கவே இல்லை. இருவருக்குமான பொருத்தம் வேறு மிக நன்றாகப் பொருந்திப்போனதில் சுபாங்கி அதன் பிறகு தாமதிக்கவே இல்லை.

“அக்கா, வீடு இருக்கிற நிலையில இப்பிடி ஒரு அவசரக் கலியாணம் வேணுமா? அதுதான் நீங்க சொல்லுறதைத் தாண்டிப் போக மாட்டன் எண்டு சொல்லிட்டேன்தானே. பிறகும் ஏன் இப்பிடி அவசரப்படுறீங்க? முதல் ஒரு கலியாணத்துக்கு நான் ரெடியாவே இல்ல.” அவள் கலியாணப்பேச்சை எடுத்தபோது அபயன் இப்படித்தான் சொன்னான்.

அவள் விடவில்லை. “முதல் அவளைக் கட்டுறதுக்கு ரெடியாத்தானே இருந்தனி. இப்ப மட்டும் என்ன ரெடியா இல்ல?” என்று திருப்பிக் கேட்டாள்.

“அப்ப இருந்த சூழ்நிலை வேற. இப்ப இருக்கிற சூழ்நிலை வேற அக்கா.”

“அது மாறினதுக்குக் காரணமே நான்தான். நானே சொல்லுறன் கட்டு எண்டு. நீ ஏன் மாட்டன் எண்டு நினைக்கிறாய்? இன்னும் உன்னால அவளை மறக்கேலாம இருக்கோ?” என்றதும் அவனுக்குக் கோபம்தான் வந்தது.

“அக்கா, தேவை இல்லாமக் கதைக்காதீங்க. நான் நீங்க காட்டுற பெட்டையைக் கட்ட மாட்டன் எண்டு சொல்லேல்ல. இப்ப கலியாணம் வேண்டாம் எண்டுதான் சொல்லுறன். நீங்க முதல் நோர்மல் ஆகோணும். நானும் தொழிலை ஒழுங்கா பாக்கேலாம இங்க நிக்கிறன். இந்த நேரம் இதெல்லாம் தேவையா சொல்லுங்க? முதல் அம்மா அப்பாவே இந்தக் கலியாணத்துக்கு ரெடியா இல்ல.”

அது உண்மை என்பதில் பரமேஸ்வரியும் குழந்தைவேலுவும் கூட கொஞ்சம் பொறுக்கும்படிதான் அவளிடம் சொல்லினர். ஆனாலுமே அவள் கேட்பதாகவே இல்லை.

“நீ இந்தக் கலியாணத்தைத் தள்ளிப் போடுறதுக்குக் காரணம் சொல்லுறியே தவிர இதெல்லாம் உண்மையே இல்ல. உன்ன நான் நம்ப மாட்டான். அவளை நீ விரும்பினது எனக்குத் தெரியாது எண்டு நினைச்சியா? இல்ல, இப்ப கலியாணம் வேண்டவே வேண்டாம் எண்டு நிண்டவள் நீ எண்டதும் ஓம் எண்டு சொன்னது ஏன் எண்டு எனக்குத் தெரியாது எண்டுதான் நினைச்சியா? ஃபோன கூடக் காட்ட மாட்டன் எண்டு சொன்னவன் தானே நீ. இப்ப என்ன தள்ளிப் போடுற மாதிரி தள்ளிப் போட்டுட்டுப் பிறகு அவளையே கட்டுற பிளான்ல இருக்கிறியா?” என்று குரலை உயர்த்தினாள் அவள்.

“அவேன்ர வீட்டு ஆக்களிட்டயே இந்தக் கலியாணம் நடக்காது எண்டு நேராச் சொன்ன பிறகும் நீங்க இப்பிடிச் சொன்னா நான் என்ன சொல்லுறது?” உண்மையிலேயே அவளுக்கு என்ன சொல்லி நம்ப வைப்பது என்று தெரியாமல் அவளிடமே கேட்டான் அவன்.

“எனக்கும் விளங்குதடா தம்பி. ஆனாலும் இப்ப இப்ப என்னால ஆரையுமே நம்பேலாமா இருக்கு. எல்லாரையுமே சந்தேகமாத்தான் பாக்கிறன். அதான் உன்னையும் நம்புறன் இல்லை போல..” எனும்போதே அவள் உடைய ஆரம்பித்திருந்தாள்.

“அக்கா எனக்கா இது…” என்று எழுந்து அவன் அவளருகில் வரவும் அவன் கையைப் பற்றிக்கொண்டவளிடம் மிகுந்த தவிப்பு.

“நீ எனக்கு ஏதாவது செய்யோணும் எண்டு நினைச்சா இப்பவே அவளைக் கட்டு. இத நான் எனக்காக மட்டும் சொல்லேல்ல. உண்மையா நான் அவனில கோவமாத்தான் இருக்கிறன். அதுக்காக என்ர தம்பிக்குப் பொருத்தமே இல்லாத ஒருத்தியப் பாக்கவே மாட்டன். என்ர வாழ்க்கை பிழைச்சுப் போனாலும் நீ காலத்துக்கும் நல்லா இருக்கோணும் எண்டுற ஆசை இருக்கு. அதே நேரம் எனக்கு ஆத்திரம் அடங்கோனும், அவன் செய்த துரோகத்தில இருந்து நான் கொஞ்சமாவது வெளில வரோணும் எண்டு சொன்னா இதுக்கு நீ ஓம் எண்டு சொல்லியே ஆகோணும்.” கண்களில் கண்ணீர் வழிய, அவன் கையை இறுக்கமாகப் பற்றிக்கொண்டு அவள் கெஞ்சியபோது அவனால் மறுக்கவே முடியாமல் போயிற்று. அவளை அணைத்துக் கண்களைத் துடைத்துவிட்டபடி, “சரி, நீங்க ஏற்பாடு செய்ங்க. நான் கட்டுறன். நீங்க அழாதீங்க.” என்றான் அவளுக்கு இதமான குரலில்.

அவளுக்கு அதற்கும் அழுகைதான் வந்தது. “சொறியடா தம்பி. உன்ன வற்புறுத்திறனோ எண்டு மனதில படாம இல்ல. ஆனா என்னால இரவில நித்திரை கொல்லேலாம இருக்கு. கண்ண மூடினாலே என்னைத் தள்ளி விட்டுட்டு, வாய மூடு எண்டு அவன் சொன்னதுதான் நினைவில வருது. அண்டைக்கு அவனை அடிச்சு நொறுக்கோணும் மாதிரி ஆத்திரம் வந்தது. ஆனா, உடம்பால அவன் பலமானவன் எண்டுறதால ஒண்டுமே செய்யாமத்தானடா திரும்பி வந்தனான். அண்டுல(அன்றில்) இருந்து என்ர நெஞ்சில ஏரியிற இந்த நெருப்பு அணையோணுமடா.” என்றவளை மேலே பேச அவன் விடவில்லை.

“அதுதான் ஓம் எண்டு சொல்லிட்டனே. பிறகும் ஏன் அழறீங்க? அதைவிட நீங்க ஆசைப்பட்டதுக்கும் மேலால அவனை மிதிச்சுப்போட்டுத்தான் வந்தனான். அதால அதை எல்லாம் யோசிக்காதீங்க.” என்று என்னவெல்லாமோ சொல்லி அவளைக் கொஞ்சமாய்த் தேற்றி இருந்தான்.

அந்தச் சகோதரர்களுக்கும் தாய் தந்தையால் நடுவில் வரவே முடியவில்லை. அவர்களுக்குள் இருந்த பிணைப்பும் பாசமும் அப்படி இருந்தது. கூடவே, மகளின் காயம் ஆறுவதற்கு இதுதான் மருந்து என்றால் இந்தக் கலியாணம் நடந்துவிட்டுப் போகட்டுமே என்றுதான் எண்ணினர்.

சுபாங்கியும் அதன் பிறகு தாமதிக்கவில்லை. இதோ அடுத்த இரண்டு மாதத்தில் திருமணம் என்கிற இடத்தில் கொண்டுவந்து நிறுத்தியிருந்தாள்.

அவனும் தன்னை அதற்குத் தயார்படுத்த ஆரம்பித்திருந்தான். எல்லாம் சரிதான். தமக்கைக்கு அவன் நல்ல தம்பிதான். ஆனால் நேசித்த பெண்ணுக்கு?

எதிர்காலம் நமக்கு என்ன வைத்திருக்கிறது என்று தெரியாமல்தானே நிகழ்காலத்தில் ஆயிரம் கோட்டைகளைக் கட்டிவிடுகிறோம். அப்படித்தான் ஒரு காலத்தில் அவனும் ஒரு காதல் கோட்டையைக் கட்டினான். சும்மாவல்ல. தானுண்டு தன் பாடுண்டு என்று இருந்த பெண்ணின் மனத்தில் நேசத்தை வம்படியாக விதைத்து, நான் இல்லாமல் உனக்கு ஒன்றுமே இல்லை என்கிற அளவுக்கு அவளுக்குள் தன்னைத் திணித்துவிட்டு, இதோ இன்று அவளை அப்படியே அம்போ என்று விட்டுவிட்டு வந்துவிட்டான்.

என்ன நினைத்திருப்பாள் அவனைப் பற்றி? மேலே யோசிக்கக் கூட முடியாமல் அவன் நிற்க, குழந்தைவேலு அவனுக்கு அழைத்தார்.

“இந்தா வந்திட்டன் அப்பா!” என்றுவிட்டு அவரிடம் விரைந்தான் அபயன்.


தொடரும்...
 
Status
Not open for further replies.
Top Bottom