கேட்பார் இன்றிக் காதல்! - கதைத்திரி

Status
Not open for further replies.

நிதனிபிரபு

Administrator
Staff member
அத்தியாயம் 30குழந்தைவேலுவைப் பார்க்க நேராக அவர் கடைக்கே வந்திருந்தார் திருநாவுக்கரசு. குழந்தைவேலு இதைக் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை. நீ யார் என் பெண்ணுக்கு மாப்பிள்ளை பார்க்க என்று கேட்டு, ஏடாகூடமாக எதையாவது சொல்லப் போகிறாரோ என்றுதான் அவர் முகம் பார்த்தார்.

அவர் பயந்ததற்கு மாறாக, “நான் வந்ததால உங்களுக்குச் சங்கடம் ஒண்டும் இல்லையே?” என்று நயமாகவே வினவினார் திருநாவுக்கரசு.

சட்டென்று ஆசுவாசமாகியபடி, “சேச்சே! அப்பிடி எல்லாம் இல்ல. திடீரெண்டு நீங்க வரவும் என்னவோ ஏதோ எண்டு கொஞ்சம் பயந்திட்டன். அவ்வளவுதான்.” என்று சமாளித்தார் குழந்தைவேலு.

“அது… நீங்க சொன்னனீங்களாம் எண்டு சம்மந்தம் பேச வந்தவே. கோபதாபம் இல்லாம பிள்ளையைப் பற்றி நல்ல மாதிரிச் சொன்னனீங்களாம் எண்டும் சொன்னவே. சந்தோசமா இருந்தது. அதுதான் உங்களைப் பாத்து, கதைச்சிட்டுப் போவம் எண்டு வந்தனான்.” அவர் மகனால் பாதிக்கப்பட்டிருப்பது அவர் மகள். அவளின் மொத்த எதிர்காலமும் இருண்டு போயிருக்கிறது. ஆனாலும் கூட, தன் பெண்ணுக்கு நல்ல ஒரு வாழ்க்கை அமைய வேண்டும் என்று முனைப்புக் காட்டிய அந்த மனிதரின் மனம் திருநாவுக்கரசை நெகிழ்த்தியிருந்தது.

“அன்பு உண்மையாவே அருமையான பிள்ளைதான். காந்தனில எனக்குக் கோவம் இருந்தாலும் அதை அன்புட்டக் காட்டுறதில என்ன அர்த்தம் இருக்குச் சொல்லுங்க?” சிறு புன்னகையுடன் அவரிடமே குழந்தைவேலு கேட்டபோது, வார்த்தைகள் கைகொடுக்கும் என்கிற நம்பிக்கை இல்லாமல் ஆம் என்பதுபோல் தலையை அசைத்தார் திருநாவுக்கரசு.

மாப்பிள்ளை வீட்டினரிடம் மகளைப் பற்றி நல்லதாகச் சொல்லி அனுப்பியதும் இப்போது அவர் பேசும் பங்கும் அவர்கள் வீட்டில் கிடைத்த அவமானத்துக்கு மெலிதாய் மருந்திடுவதுபோல் உணர்ந்தார் திருநாவுக்கரசு.

குழந்தைவேலுவுக்கும் அந்தத் தகப்பனின் மன உணர்வுகளை விளங்கிக்கொள்ள முடிந்ததில், “அன்பு என்னவாம்?” என்று விசாரித்தார்.

“அவா வேண்டாம் எண்டு நிக்கிறா.”

“ஏனாம்?”

“காரணம் சரியாச் சொல்லுறா இல்ல. இப்போதைக்கு வேண்டாம் எண்டு மட்டும்தான் சொல்லுறா. கொஞ்சக் காலத்துக்கு எங்களுக்கு மகளாவே இருக்கப் போறாவாம்.”

குழந்தைவேலுக்குச் சங்கடமாயிற்று. அதன் காரணம் என்னவாக இருக்கும் என்று அவரால் ஊகிக்க முடியுமே. “என்ன செய்யலாம் எண்டு இருக்கிறீங்க?” என்று கேட்டு, பந்தை அவர் பக்கமே தள்ளிவிட்டார்.

“இல்ல, அவே நல்ல குடும்பம் எண்டா எனக்குத் தவற விட மனமில்லை. நீங்க சொன்ன மாதிரி காந்தன் செய்த வேலைக்குப் பிள்ளை பொறுப்பாக மாட்டாதான். எண்டாலும் எல்லாரும் அப்பிடியே நினைப்பினமா தெரியாது. அது பிள்ளைக்கு எண்டைக்குமே ஒரு கரும்புள்ளிதான். அதையெல்லாம் தெரிஞ்சு அவே வரேக்க எனக்கு விட விருப்பம் இல்ல. அதான் அவே எப்பிடி, நல்ல குடும்பமா எண்டு உங்களிட்டக் கேக்க நினைச்சன். நல்லம் எண்டா பிள்ளையை எப்பிடியாவது ஓம் எண்டு சொல்ல வச்சு, கட்டி வைக்கத்தான் இருக்கிறன்.”

அதுதான் நல்ல முடிவு என்று குழந்தைவேலுவுக்குமே தோன்றிற்று. காந்தனின் முறைகேடான நடத்தைக்கு எந்த விதத்திலும் சுபாங்கி காரணமே இல்லை. ஆனாலும் கூட, இவள் சரியில்லை போலும், இவள் அவனை நன்றாகக் கவனித்திருக்க அவன் ஏன் வேறு தேடப் போகிறான், இவளில் என்ன பிரச்சனையோ என்கிற பேச்சுகள் இப்போதெல்லாம் மெல்ல மெல்ல அவர்களின் காதுகளுக்கு எட்ட ஆரம்பித்திருந்தன. அதுவும் முக்கியமாக இவள் அவனோடு சென்று வாழாமல், வேலைதான் முக்கியம் என்று இருந்துவிட்டதால்தான் அவன் அங்கே வேறு தேடிவிட்டான் என்று அவன் தவறியதற்கும் அவளையே காரணமாக்குகையில், அவனோடு கூடப்பிறந்தவள் அவனைப் போல்தான் இருப்பாள் என்கிற பேச்சு அன்பினிக்கு வர எவ்வளவு நேரமாகும்?

அதனாலேயே தானாக அமையும் சம்மந்தத்தைத் தவறவிடுவது அவருக்கும் உசிதமாய்த் தோன்றவில்லை.

“எனக்குத் தெரிஞ்ச வரைக்கும் அவேயும் நல்ல குடும்பம்தான். நிறையக் காலமாத் தகப்பனைப் பழக்கம் எனக்கு. எண்டாலும் பெடியனைப் பற்றி நானும் கொஞ்சம் விசாரிச்சுப்போட்டுச் சொல்லுறன்.” என்றவர் அதன் பிறகு அவர்களின் குடும்பம், அவர்களின் உறவினர்கள், அவரும் எந்த வழியில் விசாரிக்கலாம் என்பது பற்றித் திருநாவுக்கரசிடம் சொன்னார்.

திருநாவுக்கரசும் அவரால் முடிந்த வழிகளில் எல்லாம் அவனைப் பற்றி விசாரிக்க ஆரம்பித்தார். அவர் பெற்று வளர்த்த மகனே தடம் மாறி நிற்கையில் யார் என்ன சொன்னாலும் திருப்தியுற முடியாமல், இன்னுமின்னும் அவனைப் பற்றி அறிய முனைந்தார்.

*****

இந்த ஒரு வாரமாகவே நிலானியின் முகம் சரியில்லை. குழந்தை பிறந்துவிடுமோ என்கிற பயம் காந்தனுக்கு வந்திருந்தது. முதல் குழந்தை, துணைக்கு யாருமே இல்லை, எப்படித் தனியாகச் சமாளிப்பாள்? தன்னால் இந்த நிலைக்கு ஆளான பெண்ணை அப்படியே விட முடியாமல், இங்கேயே இருந்துவிடவா என்று அவன் தயங்கி தயங்கிக் கேட்டபோது ஒரேயடியாக மறுத்திருந்தாள் அவள்.

ஏற்கனவே வயிற்றில் இருக்கும் குழந்தையின் தந்தை யார் என்கிற கேள்வி அவளைத் துரத்த ஆரம்பித்திருந்தது. அவள் நடத்தை சரியில்லை என்றுதான் அவளின் அன்னையும் தம்பியும் அவளை விட்டுவிட்டுப் போய்விட்டார்களாம் என்கிற பேச்சும் வந்தாயிற்று. இவன் வந்து போவது வேறு பலர் பார்வையை உறுத்த ஆரம்பித்தாயிற்று. அன்று அவளிடமே, “அடிக்கடி வந்து போற அந்தத் தம்பியோ பிள்ளைக்கு அப்பா?” என்று தண்ணீர் அள்ளப் போனபோது ஒரு அம்மா கேட்டிருந்தார்.

அவமானத்தில் முகம் கறுத்துப் போனாலும், “ஐயோ இல்ல, அவரை ஏற்கனவே காணி பிரச்சினைல தெரியும். இப்ப அம்மா தம்பியக் காணேல்ல எண்டு தேடுற விசயமா நான்தான் உதவி கேட்டனான். துணைக்கு ஒருத்தரும் இல்லாம, வயித்தில பிள்ளையோட அலையிறன் எண்டுற கரிசனைல உதவி செய்றவர இப்பிடிப் கதைக்காதீங்கோ.” என்று ஏதோ சொல்லிச் சமாளித்துவிட்டு வந்திருந்தாள்.

ஆனால், அவள் சொன்னதை எத்தனை தூரத்துக்கு நம்பி இருப்பார்கள் என்கிற கேள்வி அவளை அரிக்க ஆரம்பித்திருந்தது. என்ன சொல்லியும் அவன் வரவை அவளால் நிறுத்தவும் முடியவில்லை. இதில், இவன் வந்து தங்கினால் வேறு வினையே வேண்டாம்.

ஆனால், அன்னை போனதிலிருந்தே ஒரு பயம் அவளைப் போட்டு ஆட்ட ஆரம்பித்திருந்தது. அதுவும் நாள் நெருங்க நெருங்க வயிற்றில் சின்னதாய் மாறுதல் தெரிந்தாலும் பயம் வந்தது. பிள்ளைப்பேற்று வலி எப்படி இருக்கும், எப்போது வைத்தியசாலைக்குப் போக வேண்டும் என்று ஒன்றும் புரிய மாட்டேன் என்றது. என்னென்ன ஆயத்தங்கள் செய்து வைக்க வேண்டும் என்பதிலேயே அவளுக்கு ஆயிரம் சந்தேகங்கள். ஆயிரம்தான் வைத்தியர் சொன்னாலும் அருகிருந்து அரவணைத்துச் சொல்லித்தரும் ஒற்றை உறவை உள்ளம் தேடிற்று. கொஞ்சமாவது தேம்பாய் இருப்பாளே!

இரவுகளில் உறங்கவே முடியவில்லை. எப்படி இந்த வயிற்று வலியைத் தாங்கி, குழந்தையைப் பெற்றெடுக்கப் போகிறோம் என்று நினைத்தாலே அவளுக்கு இதயத் துடிப்பு அதிகரித்தது. தப்பித்தவறி பிள்ளை பிறக்கையில் தனக்கு ஒன்று நடந்துவிட்டால் குழந்தையின் நிலை என்ன என்று யோசிக்கவே முடியவில்லை. நெஞ்சு அடித்துக்கொண்டது. அன்னையின் அண்மையை மிக அதிகமாய்த் தேடினாள். பக்கத்தில் இருந்தே தண்டித்திருக்கக் கூடாதா என்று அழுதாள்.

செய்தது பெரும் தவறுதான். ஆனால், தெரிந்தே செய்யவில்லையே. கண்ணை மூடிக்கொண்டு நம்பிவிட்டாள். மற்றும்படி அவள் ஒன்றும் கூடாத பெண் இல்லையே! அது அவளைப் பெற்றவருக்குத் தெரியாமல் போனதா? எல்லோரையும் போல நானும் வளந்துவிட மாட்டேனா என்று என்னவோ ஒரு ஆசை. அதில் அவசரப்பட்டுவிட்டாள். தப்புத்தான்! அதற்கு இப்படியா அனாதையாக விட்டுவிட்டுப் போவார்?

இத்தனை போராட்டங்களும் அவளுக்குள்ளே நடந்தாலும் கூட அவனை வீட்டில் தங்க அவள் அனுமதிக்கவில்லை.

அவனும் அவள் சூழ்நிலையை உணர்ந்தவனாக ஒரு அம்மாவைக் கொண்டுவந்து விட்டான். “நான் நிக்கிறதுதானே கூடாது. இந்த அம்மா உனக்குத் துணையா இருப்பா.” என்று சொல்லிவிட்டுப் போன அடுத்த நாளே அவளுக்கு வயிற்றுவலி வந்திருந்தது. அவரின் துணையுடன் வைத்தியசாலைக்குச் சென்று சேர்ந்திருந்தாள்.
 

நிதனிபிரபு

Administrator
Staff member
அவனிடம் எதுவும் சொல்ல வேண்டாம் என்று அவள் சொல்லியும் அவர் கேட்கவில்லை. அவரளவில் அவர் முதலாளி அவன். அவனுக்கு நியாயமாக நடக்கிறவராக அடுத்த நிமிடமே அவனிடம் தகவல் தெரிவித்திருந்தார். ஓடி வந்தவனை அந்த நிலையிலும் இங்கே நிற்காதே என்று விரட்டியிருந்தாள்.

அடுத்த இரண்டு நாள்களும் இந்த உலகத்தின் இன்னொரு கோர முகத்தைப் பார்த்தாள் நிலானி.

குழந்தையின் தந்தையைக் கொண்டுவந்து அவர்கள் முன் நிறுத்தாதது அவள் மீதான அவர்களின் பார்வையையே மாற்றியிருந்தது. முதல் மூன்று மாதங்களும் அவன் அழைத்து வந்திருந்த போதிலும் கூட, அவன் பதவி கருதி அவள் உள்ளே அழைத்துச் சென்றதில்லை. தன்னால் அவனுக்கு ஒரு இழுக்கு வந்துவிட வேண்டாம் என்று எண்ணினாள். கணவன் வெளியூரில் வேலை பார்ப்பதாகவும், வருவான் என்றும் சொல்லியிருந்தாள். அதை அவனும் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்தியிருக்கிறான் என்று இப்போதுதானே புரிகிறது.

அது எல்லாவற்றையும் தாண்டி, தகப்பனில்லாப் பிள்ளையைத் தாங்கி, வயிற்று வலியில் துடித்தவளுக்கு அங்கே நல்ல மரியாதை கிடைத்தது. காது கூசும் பேச்சுகளும், இரக்கமற்ற நடத்தைகளும் என்று உண்மையில் கூசியே போனாள். ஒழுக்கம் தவறிப் போவாயா, முறையற்ற உறவு கொள்வாயா என்று கேட்டு கேட்டு சவுக்கால் விளாசியதுபோல் வலித்தது.

தலைப்பிரசவம் என்பதே மறுபிறப்புக்கு ஒப்பானது. இங்கே அவள் அதோடு சேர்த்து தீயிலும் விழுந்து எழுத்துதான் ஆண் பிள்ளையைப் பெற்றெடுத்திருந்தாள்.

மகன் பிறந்திருக்கிறான் என்று அறிந்த பிறகும் தள்ளி நிற்க முடியாமல் ஓடி வந்தான் காந்தன். மகனைக் கையில் வாங்கியபோது எப்படி உணர்வது என்று தெரியாது நின்றான். சுபாங்கி தளிரைப் பெற்றெடுத்ததும், கண்ணில் நீருடன் அந்தச் சந்தோசத்தை இருவருமாகப் பரிமாறியதும் என்று அந்த நாள் நினைவுகள் தானாய் வந்து போயின. கூடவே, முறை தவறிய உறவில் வந்துதித்த மகனின் எதிர்காலம் குறித்தும் ஒரு பயம் அவனை ஆட்டியது.

கட்டுக்குள் கொண்டுவர முடியாமல் போன அவன் சபலம், எத்தனை திசைகளில் எத்தனை பேரின் வாழ்க்கையை நாசமாக்கிவிட்டது என்று நினைத்து நினைத்து வெந்தான்.

மூன்றாம் நாள் அவளை வீட்டுக்கு அழைத்துச் செல்ல வேண்டும். காலையிலேயே அவன் வைத்தியசாலைக்கு வந்தபோது, அங்கே அவள் இல்லை. மாறாக, அவளைப் பார்த்துக்கொள்ள என்று நியமித்திருந்த அந்தப் பெண்மணி ஓடி வந்து ஒரு கடதாசியை அவனிடம் நீட்டினார்.

ஏதோ ஒரு பயம் நெஞ்சைக் கவ்வ அதைப் பிரித்தான்.

“இவ்வளவு நாளும் யோசிச்சு யோசிச்சுப் பாத்தனான். நான் ஒரு வாழ்க்கைக்கு ஆசைப்பட்டது உண்மைதான். ஆனால், கேவலமான ஒரு வாழ்க்கைக்கு இல்லை. நல்லா இருந்த ஒரு குடும்பத்தை நாசமாக்கிட்டியேடி எண்டு என்ர மனச்சாட்சியே என்னைக் கொல்லுது.

எனக்கு ஏனோ உங்களில மட்டும் குறை சொல்ல விருப்பம் இல்ல. என்னதான் ஒருத்தர மனதுக்குப் பிடிச்சு இருந்தாலும், அவருக்கு அளவுக்கதிகமா இடம் குடுத்திருக்கக் கூடாது. குறைஞ்ச பட்சமா முறையில்லாம உடம்பக் குடுத்தே இருக்கக் கூடாது. அதோட கலியாணம் நடந்திட்டுது எண்டு நீங்க சொன்னனீங்கதான். நான்தான் நம்பேல்ல. அந்தளவுக்கு ஒருத்தரைப் பற்றி முழுசாத் தெரியாம கண்மூடித்தனமான நம்பினதும் என்ர பிழைதான்.

சரி பாதி பிழையா- நனையும் செய்துபோட்டு உங்களிட்ட நியாயம் கேக்கிறதில அர்த்தம் இல்லை. அதனாலதான் நான் விலகிப் போறன். என்ர அம்மாக்குத்தான் நான் நல்ல மகளா இருக்கேல்ல. என்ர மகனுக்காவது நல்ல ஒரு அம்மாவா இருக்க ஆசைப்படுறன். நாளைக்கு அவன் வளந்து வந்த பிறகு அம்மா வாழ்க்கைல தவறினவள்தான். ஆனா தவறானவள் இல்லை தம்பி எண்டு நான் என்ர பிள்ளைட்ட சொல்லோணும். அதால போறன்.

நான் உங்களிட்ட கேக்கிறது எல்லாம் ஒண்டே ஒண்டுதான். தயவு செய்து உங்கட மனுசி மகளோட போய்ச் சேர்ந்திடுங்க. அவேன்ர கண்ணீர் என்னை வாழவிடாது. இத மட்டும் எனக்காகச் செய்திடுங்க ப்ளீஸ்!” என்று முடிந்திருந்தது அந்தக் கடிதம்.

இடிந்துபோய் அமர்ந்துவிட்டான் காந்தன். அவனால் எதையும் சிந்திக்கவோ சிந்தித்துச் செயலாற்றவோ முடியவில்லை. இதை அவன் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை.

குருவிக்கூடு மாதிரி இருந்த அவன் குடும்பத்தையும் சிதைத்து, வறுமை என்றாலும் தாம் உண்டு தம் பாடு உண்டு என்று இருந்த குடும்பத்தையும் உடைத்து என்ன செய்து வைத்திருக்கிறான்?

எங்கு எப்படித் தேடியும் அவள் மறைந்த தடத்தை அவனால் கண்டு பிடிக்கவே முடியாமல் போயிற்று!


*****


கிட்டத்தட்ட ஒரு மாதம் கடந்திருந்தது. திருநாவுக்கரசிடமிருந்து எந்தத் தகவலும் வரவில்லை என்றதும் மாப்பிள்ளை வீட்டினர் திரும்பவும் குழந்தைவேலுவைத்தான் தொடர்புகொண்டு விசாரித்தனர்.

அவருக்கும் ஒன்றும் தெரியவில்லை. அன்று எப்படியாவது இந்த சம்மந்தத்தை முடித்துவிட வேண்டும் என்று சொன்ன மனிதர் ஏன் அமைதியாக இருக்கிறார்? இடையில் அவர் வேறு அழைத்து, தான் விசாரித்த வரையில் பெடியன் நல்லவன்தான் என்று சொல்லியிருந்தார்.

ஒன்றும் விளங்காமல் அவரே திருநாவுக்கரசுக்கு அழைத்தார்.

“நீங்க ஒண்டும் சொல்ல இல்லையாம் எண்டு விசாரிச்சவே…”

“என்ன சொல்லுறது எண்டு தெரியாம பேசாம இருக்கிறன்.” என்றார் அவர் சோர்ந்த குரலில்.

அந்தக் குரல் மனத்தைத் தொட, “ஏன், ஏதும் பிரச்சினையா?” என்று விசாரித்தார்.

“என்ன சொன்னாலும் மகள் வேண்டாம் எண்டு நிக்கிறா. அதான்.”

“ஓ!”

“நீங்க கட்டி, பிள்ளை குட்டி எண்டு வந்திட்டா எங்களுக்கும் சந்தோசமா இருக்கும் பிள்ளை எண்டு சொன்னதுக்கு அண்ணாவே இப்பிடி மாறிட்டார், எனக்கு வாறவர் மட்டும் நல்லவரா இருப்பார் எண்டு என்னப்பா நம்பிக்கை எண்டு கேக்கிறா? எனக்கு என்ன பதில் சொல்ல எண்டே தெரியேல்ல. என்னவோ எனக்கும் இப்ப இப்ப எல்லாமே வெறுத்த மாதிரிப் போகுது. ரெண்டே ரெண்டு பிள்ளைகள். அந்த ரெண்டு பிள்ளைகளும் சந்தோசமா வாழாம நிக்குதுகள். இதைப் பாக்கவா இவ்வளவு காலமும் வாழ்ந்தனான் எண்டு இருக்கு. நானும் இன்னும் எவ்வளவு காலத்துக்கு இருப்பனோ தெரியாது. அதுக்கு முதலே அவாக்கு ஒரு நல்லதைச் செய்ய ஆசைப்படுறன். எங்க நடக்கோணுமே?” என்றதும் குழந்தைவேலுவால் தாங்கவே முடியாமல் போயிற்று.

ஒரு தந்தையின் துடிப்பு. அதை இன்னொரு தந்தையால் உணரமுடியவில்லை என்றால் எப்படி? “பேசாம தம்பிக்கே அன்புவை தாறீங்களா?” தன்னை மீறியே கேட்டிருந்தார். கேட்ட பிறகு கேட்டவருக்கே அதிர்ச்சி என்றால் அதை உள்வாங்கியவருக்கு?

“என்ன? என்ன சொல்லுறீங்க?” என்றார் நம்ப முடியாமல்.

“உண்மையா இத நான் கேக்க நினைக்கவே இல்ல. கேட்டது எனக்கே கொஞ்சம் அதிர்ச்சிதான். ஆனா யோசிச்சுப் பாத்தா இதுதான் சரியோ எண்டு இருக்கு. இங்க தம்பியும் ஒரு கலியாணத்துக்குப் பிடி குடுக்கிறானே இல்ல. எனக்கு என்னவோ அவே ரெண்டு போரையும் பிரிச்சு வைக்கிறது பிழையோ எண்டு படுது. அதுதான்…”

திருநாவுக்கரசுக்கும் ஒருவிதமான தவிப்புத்தான். அவரும் மகளைப் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார். “இது சரியா வரும் எண்டு நினைக்கிறீங்களா? உங்கட மகள் இருக்கிறாவே.

உண்மைதான்… என்று யோசித்தவர் பேசாம ரெண்டு போரையும் கலியாணத்துக்கு பிறகு தனியா வச்சா என்ன?

அவர் சொல்வதைக் கேட்கையில் நன்றாகத்தான் இருந்தது. இது நடைமுறைக்குச் சரியாக வருமா, மகள் என்ன சொல்வாள், முக்கியமாகச் சுபா என்ன சொல்வாள், அபயனின் முடிவு என்ன என்றெல்லாம் தெரியாமல் மனத்தில் ஆசையை வளர்க்கவும் பயமாக இருந்தது. அதில், “நான் மகளோட கதைச்சுப்போட்டுச் சொல்லவா?” என்று கேட்டுவிட்டு வைத்தார்.


தொடரும்...

முக்கியமான விசயம். என்னைப் பேசாதீங்க ப்ளீஸ். கதை சின்ன கதையா வரும், ஜூலைக்கு முதல் முடிக்கலாம் எண்டு நினைச்சுத்தான் ஆரம்பிச்சன். ஆனா இது சுரங்கம் மாதிரி எழுத எழுத வந்துகொண்டே இருக்கு. நான் யோசிச்சு வச்சிருக்கிற மாதிரிக் கதையை முடிக்க இன்னுமே கிட்டத்தட்ட 30000 சொற்கள் கொண்ட கதை இருக்குப் போல இருக்கு. சோ, என்னால இந்த மாதத்துக்க கதையை முடிக்கவே ஏலாது.

ஜூலை சம்மர் லீவு. இப்பவே அதுக்கான ஏற்பாடுகள் வீட்டுல தொடங்கியாச்சு. சோ, என்னால முடிஞ்ச வரைக்கும் ஜூலை நான்கு வரை கதை போடுவேன். அதுக்குப் பிறகு ஓகஸ்ட் நடுப்பகுதிக்குப் பிறகுதான் வருவேன்.

உண்மையாவே சொறி, இடையில இவ்வளவு பெரிய இடைவெளி விடுறதுக்கு. முடிஞ்சவரைக்கும் நீங்க எல்லாரும் கொஞ்சமாவது ஆசுவாசமாகிற இடத்தில கொண்டு வந்து கதையை நிறுத்த முயற்சி செய்றன். சரிதானே?
 

நிதனிபிரபு

Administrator
Staff member
அத்தியாயம் 31


அபயனுக்கு அன்பினியைக் கேட்டுவிட்டு வந்திருக்கிறேன் என்று தந்தை சொன்னதைக் கேட்டு, நம்ப முடியாமல் அமர்ந்திருந்தாள் சுபாங்கி.

அவளுக்கு நடந்த துரோகமும் அநியாயமும் அவருக்கு ஒன்றுமே இல்லாமல் போயிற்றா என்ன? அல்லது, அதையெல்லாம் சாதாரணமாய்க் கடந்துவிடலாம் என்று நினைத்துவிட்டாரா?

அபயன் சந்தோசமாக இருக்கக் கூடாது என்பது அவள் எண்ணம் கிடையாது. அவ்வளவு பெரிய துரோகத்தைச் செய்துவிட்டும் கூட, என் தங்கை திருமணம் முடிகிற வரையில் வெளியே சொல்லாதே என்றவனுக்கு, அவளுக்காகவே இந்த வீட்டுக்கு வந்து நியாயம் கேட்டவனுக்கு அவளால் கொஞ்சமாய்க் கூடத் திருப்பிக் கொடுக்க முடியவில்லையே! அதுதான் அவளை வருத்தியது.

அநியாயமாய்த் தண்டனை அனுபவிக்கிறாள் அவள். நியாயமாய்க்கூட அவனைத் தண்டிக்க அவளால் முடியவில்லை. என்னவோ யாருமே இல்லாமல் தனித்து நிற்பதுபோல் தோன்றும் அந்த உணர்வை அவளால் விரட்டவே முடியவில்லை.

அபயனும் இதை எதிர்பார்க்கவில்லைதான். வேகமாகத் திரும்பித் தமக்கையைப் பார்த்தான். அவள் முகத்திலிருந்து எதையும் படிக்க முடியவில்லை. ஆனாலும் அவள் மனத்தை அவனால் உணர முடிந்தது. எழுந்து அவள் முன்னே சென்று நின்றான்.

அவள் நிமிர்ந்து பார்க்கவும், “உங்களிட்ட நான் சொன்னது சொன்னதுதானக்கா. மாறாது!” என்றுவிட்டு அறையை நடந்தான்.

பரமேஸ்வரிக்கு அப்படி ஒரு கோபம் வந்தது.

“மாற வேண்டாம் தம்பி. இப்ப நீங்க எல்லாம் வளந்த மனுசர். அப்பா வாக்குக் குடுத்தா என்ன, அதால மரியாதை கெட்டு அவர் நிண்டாத்தான் என்ன? உங்களுக்கெல்லாம் உங்கட பிடிவாதங்கள் தானே முக்கியம். அதால எதுவும் மாற வேண்டாம். நீ இப்பிடியே இரு!” என்றவர் கணவர் புறம் திரும்பி, “இதெல்லாம் நடக்காது எண்டு நாளைக்கு நீங்க திரும்பவும் சொல்லிவிடுங்கோ. நம்பிக்கையைக் குடுத்து ஏமாத்துறது எல்லாம் எங்களுக்குப் புதுசா என்ன? எங்களுக்கே தெரியாம அந்தப் பிள்ளையோட பழகிப்போட்டு, சத்தமே இல்லாம கைய விட்டவன்தானே இவன்!” என்றதும், “அம்மா!” என்றான் அதட்டலாக.

“என்ன அம்மா? நான் என்ன பொய்யா சொல்லுறன்? உன்ர அக்காக்கு ஒரு நியாயம், அந்தப் பிள்ளைக்கு ஒரு நியாயமா?”

அவருக்குப் பதில் சொல்லாமல் தந்தையைப் பார்த்தான் அபயன். அவனுக்கு அவனிடம் கேளாமல் அவர் இப்படி அங்குப் பேசியதில் உடன்பாடில்லை என்று சொல்லிற்று அந்தப் பார்வை.

அதை உணர்ந்துகொண்டவரும், “அக்காக்காக யோசிக்கிறாய் எண்டு விளங்குது தம்பி. ஆனா, அந்தப் பிள்ளையை நீ கட்டாம இருக்கிறதால அக்கான்ர வாழ்க்கைல எதுவும் மாறப்போறேல்ல. அதோட அந்தக் குடும்பமும் பாவம். காந்தனால அவேயும்தான் பாதிக்கப்பட்டு நிக்கினம். அண்ணாவே இப்பிடி நடந்திருக்கிறார் எண்டேக்க, எனக்கு வாறவனும் மோசமா நடக்கமாட்டான் எண்டு என்ன நம்பிக்கை எண்டு அன்பு கேட்டவாவாம். அந்தப் பயத்தில கலியாணம் வேண்டாம் எண்டு அப்பிடியே இருந்திட்டா எண்டா அந்தப் பாவமும் எங்களுக்குத்தான் வந்து சேரும். அதால அவசரப்படாம யோசிச்சு முடிவு சொல்லுங்கோ.” என்றுவிட்டு அவரும் போய்விட, அப்படியே நின்றுவிட்டான் அபயன்.

சும்மாவே எல்லாவற்றுக்கும் பயப்படுகிறவள் அவள். நிச்சயம் இப்படி எல்லாம் யோசித்துத்தான் இருப்பாள். எங்கு என்றாலும் அவள் நன்றாக வாழ வேண்டும் என்பதுதான் அவன் ஆசை. அப்படியிருக்க அவளுக்கு அப்படி ஒரு நிலை வருமாயின் அவனாலேயே அவனை மன்னிக்க முடியாது!

தமக்கையைப் பார்த்தான். தளிரை மடியில் வைத்துக்கொண்டு தனியாக அமர்ந்திருந்தாள். அந்தக் காட்சி அவன் நெஞ்சை என்னவோ செய்ய, “அக்கா!” என்றான்.

திரும்பி அவனைப் பார்த்தவள் விழியோரத்தில் மெல்லிய கசிவு. “அப்பா சொன்ன மாதிரி என்ன நடந்தாலும் எனக்கு நடந்துகள் மாறப்போறேல்ல. அவளைக் கட்டமாட்டன் எண்டு எனக்குச் சொன்னதை பற்றிப் பெருசா யோசிக்காத. உனக்கு எது சரி எண்டு படுதோ அதைச் செய்.” என்றுவிட்டு அவளும் எழுந்து போனாள்.

இனி என்ன செய்வது? பாசமா நேசமா? அவன் முன்னே மீண்டும் அதே கேள்வி!


*****


இங்கே அன்பினியும் விடயமறிந்து என்ன சொல்வது என்று தெரியாது தந்தையைத்தான் பார்த்தாள்.

“என்னம்மா?” அவள் பார்வையின் பொருள் விளங்காமல் வினவினார் திருநாவுக்கரசு.

“இது என்ன திடீர் எண்டு?”

“அவராத்தானம்மா கேட்டவர்.”

“அவரின்ர மகன் என்ன சொன்னவராம்?”

அந்தக் கேள்விக்கு மௌனமே பதிலாயிற்று. அவள் உதட்டினில் மெலிதாய் ஒரு சிரிப்பு. அவன் திருமணம் நின்றுபோனது தெரியும். அது நடந்திருந்தால் இப்போது அவன் இன்னொருத்தியின் கணவன். “முடிஞ்சது முடிஞ்சதாவே இருக்கட்டும் அப்பா.” என்றாள் அமைதியான குரலில்.

“ஏன் பிள்ளை? அவேயே கேட்டு வரேக்க வேண்டாம் எண்டு ஏன் சொல்லுறீங்க?” என்ற அன்னையை வேதனையுடன் பார்த்தாள் அவள்.

“அது என்னம்மா அவேயே கேட்டு வரேக்க எண்டுறீங்க. அந்தளவுக்கு மோசமா இருக்கா என்ர நிலமை?”

இந்துமதி தவித்துப்போனார். “என்னம்மா கேள்வி இது? நாங்க அப்பிடி நினைப்பமா? நீங்க ஆசைப்பட்ட வாழ்க்கை. தானா வரேக்க விட வேண்டாமே எண்டு நினைச்சன்.” என்று அவசரமாகத் தன்னை விளக்கினார்.

“ஆசைப்பட்டது எல்லாம் ஒரு காலம் அம்மா. இப்ப அந்த ஆசை எல்லாம் இல்ல. அதால வேண்டாம்.”

“இப்பிடி ஆரைக் காட்டினாலும் வேண்டாம் வேண்டாம் எண்டு சொன்னா என்னம்மா அர்த்தம்? ஆரையாவது கட்டத்தானே வேணும்.”

“அப்பிடி என்னம்மா கட்டாயம்? உங்க ரெண்டு பேருக்கும் மகளா வாழக்கூடாதா? எனக்கு இந்தக் கலியாணம் எல்லாம் வேண்டாம்.” என்றதும் பெற்றவர்கள் இருவரும் பயந்து போயினர்.

அதுவும் இந்துமதி அழுதேவிட்டார். “அப்பிடிச் சொல்லாத ஆச்சி. நீயாவது நல்லபடியாக் கட்டி, குழந்தை குட்டி எண்டு இருக்கிறத நாங்க பாக்கோணும். அதுதானே எங்களுக்குச் சந்தோசம்…” என்றவருக்கு மேலே பேச முடியாமல் போயிற்று.

அவள் விழிகளும் கலங்கிப் போயின. ஆனால், இனியும் அவளால் அவள் வாழ்வில் ஒருவனை நம்ப முடியுமா என்ன?
 

நிதனிபிரபு

Administrator
Staff member
தந்தையின் இடத்தில் வைத்துப் பார்த்தவனும் பொய்த்துப்போய், அவளுக்குச் சகலதுமாக இருப்பான் என்று நினைத்தவனும் பொய்த்துப்போன பிறகு யாரை நம்புவாள்?

“என்னம்மா? ஓம் எண்டு சொல்லுங்கோ குஞ்சு.” என்று கெஞ்சினார் இந்துமதி.

அப்படிக் கேட்பவரிடம் மறுப்பது இலகுவாகவே இல்லை அவளுக்கு. ஆனாலும், “என்னால ஏலாம இருக்கே அம்மா. நான் என்ன செய்ய?” என்று அவரிடமே கேட்டாள் அவள். “அந்த நேரம் எனக்கு அவ்வளவு பயமா இருந்தது. ஆனா, நான் இருக்கிறன் உனக்கு, என்ன நடந்தாலும் சமாளிக்கலாம் எண்டு நம்பிக்கை தந்தது அவர். அதே அவர்தான் கடைசில ஒண்டுமே சொல்லாம விட்டுட்டுப் போனவர். அப்பிடியானவரோட ஒரு வாழ்க்கை வேணுமா எண்டு இருக்கு.” என்று கேட்டபோது பெற்றவர்களுக்கும் மனத்தைப் பிசைந்தது.

ஆனாலும் விடாமல், “அவரின்ர சூழ்நிலை அப்பிடி எல்லா பிள்ளை. அதையெல்லாம் பெருசா எடுக்கக் கூடாதம்மா.” என்றவருக்கு அவள் ஒன்றும் சொல்லப் போகவில்லை.

அவளின் மன உணர்வுகளை அவர்களுக்கு விளங்கவைக்க அவளால் முடியவில்லை.

“அம்மாச்சி, இங்க பார்! உங்கட கவலை என்ன எண்டு எங்களுக்குத் தெரியாம இல்ல. ஆனா, எங்களையும் கொஞ்சம் யோசிங்கோ பிள்ளை. இந்த வீடு பாழடைஞ்சுபோய்க் கிடக்கு. ஒரு சந்தோசம் இல்ல. நீங்க கட்டி, மனுசன் பிள்ளை எண்டு ஆனாத்தான் நாங்க இந்தக் கவலை துன்பங்களிலிருந்து கொஞ்சமாவது வெளில வரலாம். எங்களுக்காக யோசி பிள்ளை.”

அடுத்தநாள் குழந்தைவேலுவுக்கு அழைத்த திருநாவுக்கரசிடமும் மிகுந்த தயக்கம்.

அவர் என்ன ஏது என்று விசாரிக்க முதலே, “மகள் வேண்டாம் எண்டு நிக்கிறா.” என்று சொன்னார்.

குழந்தைவேலு ஒன்றும் பெரிதாக அதிரவில்லை. “கலியாணம் வேண்டாமாமோ இல்லை அபயன் வேண்டாமாமோ?” என்று விசாரித்தார்.

“ரெண்டும். உங்களுக்கு மகளாவே இருக்கிறன் எண்டு சொல்லுறா.”

குழந்தைவேலுவும் நெற்றியை அழுத்திவிட்டார். மகனும் இன்னும் ஒன்றும் சொல்லவில்லையே. அவனுக்குத் தமக்கையைத் தாண்டி வரத் தயக்கம். அவள் என்னதான் சொன்னாலும் இவன் அன்பினியை மணந்தால் நிச்சயம் உடைந்துபோவாள் என்றுதான் மறுக்கிறான் என்று விளங்காமல் இல்லை. இப்படி ஆளுக்கு ஒரு திசையில் இழுத்துக்கொண்டு நின்றால் என்னதான் செய்வது? ஒரு நெடிய மூச்சுடன், “பிள்ளைகள் வளந்தா நிம்மதியா இருக்கலாம் எண்டு பாத்தா பிள்ளைகள் வளர வளரப் பிரச்சினைகளும் வளருதே தவிர எங்களுக்கு நிம்மதி மருந்துக்கும் இல்லை.” என்றார் அவர்.

“ரெண்டு நாள் போகட்டும். திரும்ப கேட்டுப் பாக்கிறன்.” என்ற திருநாவுக்கரசு அவர் வீட்டின் விவரம் அறிந்துகொண்டு அழைப்பைத் துண்டித்தார்.

இங்கே அவன் மறுக்கும் அவசியமே இல்லாமல் அவள் மறுத்துவிட்டதை அறிந்தவன் ஒன்றுமே சொல்லவில்லை. உள்ளத்தில் மட்டும் சின்னதாய் ஒரு துடிப்பு. ஒரு காலத்தில் அவனும் அவளும் இணைவதுதான் அவர்களின் பெரும் கனவாகவே இருந்தது. இன்றைக்கு அவர்களே அதற்கு எதிராய் நிற்கிறார்கள்.

இந்துமதிக்கு இதைத் தாங்கிக்கொள்ளவே முடியவில்லை. “தம்பி, நீ ஒருக்காப் போய்க் கதையன் அப்பு. நீ கதைச்சா அவா ஓம் எண்டு சொல்லுவா.” என்றார் கெஞ்சலாக.

அவன் சின்னதாய்ச் சிரித்தான். “நான் இன்னொருத்தியோட சோடி போட்டுக்கொண்டு நிண்டவன் அம்மா. அவளிட்டப் போய்க் கேக்க எனக்கு உரிமையோ தகுதியோ இல்ல. அவள் இப்பிடித்தான் சொல்லுவாள் எண்டு எனக்கு ஏற்கனவே தெரியும். அதால இத விடுங்கோ.” என்றான் முடிவாக.

அவருக்குக் கோபம்தான் வந்தது. “அப்பிடி எல்லாம் விடேலாது. அன்பு ஓம் எண்டு சொன்னா இந்தக் கலியாணம் நடக்கும். அப்ப வந்து நிண்டு நீ ஒண்டும் சொல்லக் கூடாது!” என்றார் உத்தரவாய்.

“ப்ச் அம்மா!” என்றவனை அவர் பேச விடவில்லை. “அண்டைக்கு திரும்பவும் வந்து என்னத்துக்கு அந்தச் செயினை என்னட்ட இருந்து வாங்கினனீ?” என்று கேட்டார்.

“அது என்ர செயின்.”

“அது உன்ர செயின் இல்ல. நீ அன்புக்குப் போட்ட செயின்.”

“இப்ப என்ன அதுக்கு?” அவனுக்கு மெல்லிய சினம் வந்தது.

“அது எங்க? கொண்டுவா இங்க. அதைக் குடுத்துப்போட்டு நான் எனக்குப் பிடிச்ச மாதிரி ஏதாவது வாங்கப் போறன்.” என்றதும், “அம்மா!” என்றான் அதட்டலாய்.

“என்ன அம்மா? அதான் அவள் வேண்டாம் தானே உனக்கு. செயினை மட்டும் வச்சிருந்து என்ன செய்யப் போறாய்? கொண்டு வா!” என்று நின்றார் அவர்.

அவன் முறைத்துவிட்டு எழுந்து போக, “இதே மாதிரி கலியாணத்துக்கும் அமைதியா வந்து நிக்கிறாய்!” என்று முடித்தார் பரமேஸ்வரி.

இங்கே அன்பினியையும் இந்துமதி விடவில்லை. பேசிப்பேசியே கரைத்தார். அதுவும், “நீ அங்க போனா அடிக்கடி தயிரையும் பாக்கலாம் பிள்ளை. கண்ணுக்கையே நிக்கிறா. இல்லாட்டி இந்த உறவு அப்பிடியே விட்டுப் போயிடுமாச்சி. அம்மாக்கு பயமா இருக்கம்மா.” என்றவரின் கண்ணீர் அவளை அசைத்தது.

அதைவிடவும், “கடைசி வந்தாலும் உங்களை இப்பிடியே இருக்க அப்பா விடமாட்டன் பிள்ளை. ஒண்டு நீங்க அபயனைக் கட்டோணும். இல்லையா, அந்தத் தம்பிக்கு ஓம் எண்டு சொல்லோணும். நீங்களாவது அப்பா சொல்லுரத்தைக் கேட்டு நடப்பீங்க எண்டு நம்புறன்.” என்று திருநாவுக்கரசு சொன்னபோது அவளால் ஒன்றுமே சொல்ல முடியாமல் போயிற்று.

இரண்டு நாள்களைச் சிந்தனையிலேயே கழித்தவள் மனம் முழுக்க ரணத்துடன் அபயனை மணக்கச் சம்மதித்தாள்.

பெரியவர்கள் நால்வரும் அதன் பிறகு நொடியும் தாமதிக்கவில்லை. அடுத்து வந்த நல்ல நாள் ஒன்றில் அவர்களின் திருமணத்துக்கு ஏற்பாடு செய்தனர்.

அவளை எதிர்கொள்ளவே முடியாத மனநிலையோடு அவனும், மகிழ்ச்சி என்பது சிறிதும் இல்லா நிலையில் அவளும் திருமணத்துக்குத் தயாராகினர்.

பெரிய ஆரவாரங்கள் எதுவும் இல்லாது, அவர்களின் ஊர்க் கோயிலில் வைத்து, அவள் கழுத்தில் பொன் தாலியைப் பூட்டி, அவளைத் தன் மனைவியாய் ஆக்கிக்கொண்டான் அபயன்.

தொடரும்...

சும்மாவே டீசர்தான் போடுவேன் எண்டு சொல்லுவீங்க. இண்டைக்கு இது அதை விடவும் சின்ன அத்தியாயம். ஆனா, இதுக்கு மேல எனக்கு எழுத வருதே இல்ல. லீவ் மூடுக்கு போய்ட்டேன் போல. இதோடயே நான் கதையை நிப்பாட்டுறேன். அவ்வ்வ் திட்டாதீங்க மக்கா. மீ பாவம். ஆனா நிச்சயமா லீவு முடிஞ்சு ஆரம்பிச்சா வேகமா முடிச்சிடுவேன். ஓகேயா?

ஒன்றரை மாதம்தான். அது வேகமா போயிடும்😁

இப்படி கதையை இடையில நிப்பாட்டினதுக்கு பதிலா ஏதாவது முடிஞ்ச கதை ரீ ரன் பண்ணுறேன். எந்தக் கதை எண்டு சொல்லுங்க. நான் ஆரம்பிக்கிறேன்.

 
Status
Not open for further replies.
Top Bottom