You must have JavaScript enabled in order to use this order form. Please enable JavaScript and then reload this page in order to continue.

கொடுத்து வைத்தவள் – ஜெகநாதன் வெங்கட்(இந்தியா) - இதழ் 2

ரோசி கஜன்

Administrator
Staff member
1543006593997.png


‘லன்ச் பாக்ஸ்’களைத் திறந்தபடி, தோழியர் அனைவரும் மேசைக்கு முன்னால் அமர்ந்தனர். இட்லி, எலுமிச்சைச்சாதம், கூட்டாஞ்சோறு, தயிர்ச்சாதம், சப்பாத்தி, பொரியல் என்று அவரவர் கொண்டு வந்ததைப் பங்கிட்டுக் கொண்டனர். அவரவர் குடும்ப விசயங்களைப் பேசியபடி சாப்பிட ஆரம்பித்தனர்.

பேச்சு அப்படியே அடுத்த வாரம் வரவிருக்கிற தீபாவளியைப் பற்றித் தாவியது. பண்டிகைக்காகச் செய்யவிருக்கிற பிரத்தியேகப் பலகாரங்கள், வாங்கவிருக்கிற ஆடைகள், பட்டாசுகள், திட்டமிட்டிருக்கிற சுற்றுலாக்கள், முன்பதிவு செய்திருக்கிற திரைப்படங்கள் என்று பல்வேறு தலைப்புகளில் அவர்கள் உரையாடல் தொடர்ந்தது.

எல்லாவற்றையும் கேட்டுக்கொண்டு புன்னகைத்தபடி சாப்பிட்டுக் கொண்டிருந்த தீபிகாவின் மௌனத்தைப் பொறுக்கமாட்டாத மீனா, “ஏண்டி தீபி...நாங்க அரைமணி நேரமாக் கத்திகிட்டிருக்கோம்...நீ மட்டும் உம்மணா மூஞ்சிக் கணக்கா உக்காந்திருக்கே? வாயிலென்னக் கொழுக்கட்டையா?” எனப் பொரிந்தாள்.

“பேசுனா அவ வாயில் உள்ள கொற்கை முத்துக்கள் உதிர்ந்து போகும்.” இது கௌசல்யாவின் குத்தல்.

“அதெல்லாம் ஒண்ணுமில்லே...நீங்க பேசறதை ரசிச்சுக்கிட்டு இருந்தேன்...” என்றாள் தீபிகா.

“ நாங்க மட்டும் மறைக்காம எல்லா விசயங்களையும் உளறிக் கொட்டணும்; நீ மட்டும் மௌனமா ரசிப்பே; இது என்ன வகை நியாயம்?” பிலுபிலுவெனப் பிடித்துக் கொண்டனர் தோழிகள்.

“சரி, இப்போ நான் என்ன சொல்லணும்?” சற்று எரிச்சலோடு கேட்டாள் தீபிகா.

“அப்படி வா வழிக்கு, என் செல்லமே! இந்தத் தீபாவளிக்கு உங்க வீட்ல என்ன செஞ்சாங்க சொல்லு.” என்றாள் நர்மதா.

“எப்பவும் ஒவ்வொரு தீபாவளிக்கும் எனக்கும் அவருக்கும் பையனுக்கும் டிரஸ் எடுத்துக் கொடுப்பாங்க. இந்தத் தடவ பத்தாயிரம் ரூபா கொடுத்து எங்களையே எடுத்துக்கச் சொல்லிட்டாங்க. நாளைக்குக் ‘குமரன் சில்க்ஸ்’ போய் எனக்கு ஒரு பட்டுப் புடவையும் அவருக்கும் பையனுக்கும் ரெடிமேட் டிரஸ்ஸும் எடுக்கலாம் எனத் திட்டமிட்டிருக்கிறோம்” என, மலர்ச்சியோடு பதிலளித்தாள் தீபிகா.

தீபிகாவின் பேச்சில் ஒருவிதப் பெருமை வழிந்தோடுவதைத் தோழிகள் உணராமல் இல்லை. சிலருக்குக் கொஞ்சம் பொறாமையும் கூட ஏற்பட்டது என்றே கூற வேண்டும். இருந்தாலும் எல்லோரும் ஒருமித்த குரலில், “தீபி, நீ கொடுத்து வைத்தவள்!” என, ‘ஜே’ போட்டனர்.

என்ன தான் தோழியை வாழ்த்தினாலும் அவர்களின் மனங்களில் ஒருவித ஏக்கம் பரவி இருந்தது. இருக்காதா பின்னே? அவர்களுக்குப் பிறந்தகத்திலிருந்து இரண்டாயிரம், மூவாயிரம் ரூபா கிடைப்பதே குதிரைக் கொம்பு! தங்கள் தோழியாவது அதிர்ஷ்டம் செய்திருக்கிறாளே என, அவளை வாழ்த்திவிட்டுத் தங்கள் அலுவலக இருக்கைகளுக்குச் சென்றனர்.

தன் இருக்கையில் அமர்ந்தபடி, தோழிகள் அவளுக்குக் “கொடுத்து வைத்தவள்’’ என்று பட்டம் சூட்டிச் சென்றதை நினைத்துத் தனக்குள் சிரித்துக் கொண்டாள் தீபிகா. தோழிகள் சொன்னபடி உண்மையிலேயே தீபிகா கொடுத்து வைத்தவளா? ஆம்! அவள் கொடுத்து வைத்தவள் தான். ஆனால், வேறொரு அர்த்தத்தில்... அதைப் புரிந்துகொள்ள சிலநாட்களுக்கு முன்னர் தீபிகாவின் வீட்டில் நடந்த நிகழ்வுகளைத் தெரிந்து கொள்வது அவசியம்.

இரண்டு வாரங்களுக்கு முன் அலுவலகத்திலிருந்து களைத்துப் போய் வீட்டுக்கு வந்தாள் தீபிகா. வறுத்தெடுத்த வெயிலும் பேருந்தின் இரைச்சலும் அவளுக்குத் தலைவலியைத் தந்திருந்தன. அவசர அவசரமாகச் சமயலறைக்குச் சென்று, சூடாக ஒரு கப் காஃபி போட்டுக் கொண்டு முன்னறையில் நாற்காலியில் வந்தமர்ந்தாள். டிவியை ஆன் செய்து சமையல் நிகழ்ச்சியை ரசித்தவண்ணம் காஃபியைக் குடிக்கத் தொடங்கினாள்.

‘வாக்கிங்’ போய்விட்டு உள்நுழைந்த அவள் மாமியார் தீபிகாவைப் பார்த்ததும், “வந்துட்டியா? காலையிலேயே கேக்கணும்னு இருந்தேன், நீ வேகமாப் போயிட்டே.” என்றார்.

“எதைப் பத்தி அத்தே?” என்றாள் தீபிகா.

“எல்லாம் வருசா வருசம் வர்ர பிரச்சனை தான். இரண்டு வாரத்துல தீபாவளி வருது. உங்க வீட்ல மூச்சு விடாம இருக்காங்க. என்ன பண்றதா உங்க அப்பா அம்மாவுக்கு உத்தேசமாம்? மக, மருமகன், பேரன் இவங்களுக்கு ஏதாவது செஞ்சாத்தானே அக்கம் பக்கத்திலே உன் பிறந்த வூட்டுக்குப் பெருமை. நாங்களும் தலை நிமிர்ந்து நடப்பம்.” என்று ஒரு புராணமே பாடி முடித்தாள் மாமியார்க்காரி.

பிறந்த வீட்டு நிலையை நினைத்ததும் தீபிகாவுக்குக் கண் கலங்கியது. அவ்வப்பொழுது ஊசி குத்துவது போல மாமியார் பேசுவது கேட்டு அவளுக்குக் கோபம் வரும். அந்த வீட்டில் அவளின் கோபம் செல்லுபடியாகாது என்பதை அவள் அறிவாள். கணவன் நல்லவன் தான். அன்பானவனும் கூட. அந்த வீட்டில் அவனாலும் ஒன்றும் செய்ய முடியாது. மனைவி வருத்தப்படும் போதெல்லாம் ‘பொறுத்துப் போ!’ என உபதேசிப்பான். எப்படியோ வாழ்க்கை ஓடிக் கொண்டிருந்தது.

கணவன் அலுவலகத்திலிருந்து வந்ததும் அவன் அம்மா பாடிய புராணத்தை அப்படியே ஒப்பித்தாள் தீபிகா.

தீபிகாவின் பெற்றோர்கள் இப்பொழுதுதான் அவளின் இரண்டு தங்கைகளுக்கும் திருமணம் நடத்தி இருந்தனர். ஏகப்பட்ட செலவு. கடனுக்கு மேல் கடன் வாங்கியாகி விட்டது. இந்த நிலையில் அவர்கள் எப்படி இவளுக்குத் தீபாவளிக்குச் சீர் கொடுக்க முடியும்? மாமியாரின் பேராசையை எப்படி தீர்த்து வைக்க முடியும்? தன் மனக்குமுறலைக் கண்ணீர் வடித்தபடி கணவனிடம் கொட்டித் தீர்த்தாள் தீபிகா.

தீபிகாவின் கணவன் அவள் மீது அளவற்ற பாசம் வைத்திருந்தான். அதே சமயம் பெற்றோரை எதிர்த்தும் அவனால் எதுவும் செய்ய முடியாது. யோசித்துப் பார்த்தபொழுது அவனுள் ஒரு திட்டம் உருவாகியது. அழுத மனைவியை முதலில் சமாதானப்படுத்தி விட்டு, “இங்க பார். எனக்கு ஒரு யோசனை தோணுது; அதைச் செயல் படுத்தினால் உன் வீட்டாரும், எங்க வீட்டாருக்கு முன் தலை குனிய வேண்டியதில்லை; எங்க அப்பா அம்மாவையும் திருப்திப்படுத்தி விடலாம்; உன் பிரச்சனையும் தீர்ந்துவிடும்.” என்றான்..

“என்ன யோசனை?” என்றாள் தீபிகா ஆவலுடன்.

“கவனமாகக் கேள். என் மூளையைக் கசக்கிப் பிழிந்து தயாரித்த திட்டமாகும். நாளைக்கே உன் வீட்டுக்குப் போய் உன் அப்பாவிடம் ஒரு பத்தாயிரம் ரூபாயைக் கொடுத்து வை. இந்த வாரத்தில் ஒரு நாள் உன் அப்பா நம் வீட்டிற்கு வரட்டும். எல்லோரின் முன்னிலையிலும் நம் இருவரிடமும் அந்தப் பணத்தைத் தீபாவளிச் சீராகக் கொடுக்கட்டும்.” என விளக்கினான், அவளின் ஆருயிர்த் துணைவன்.

தீபிகா அவனை அப்படியே அணைத்துக் கொண்டாள், கண்களில் நீர் மல்க.

எல்லாம் திட்டமிட்டபடி அழகாக நடந்தது. தீபிகா ‘கொடுத்து வைத்த’ பணத்தைக் கடந்த வாரமே அவளுடைய அப்பா சம்பந்திகளின் முன்னிலையில் பொண்ணு, மாப்பிள்ளையிடம் கொடுத்து நல்ல பெயர் வாங்கிக் கொண்டார்.

இப்பொழுது சொல்லுங்கள்! தீபிகா ‘கொடுத்து வைத்தவள்’ என்பது சரிதானே! அதாவது அப்பாவிடம் முன்கூட்டியே பணத்தைக் கொடுத்து வைத்தவள்!

முற்றும்





 
Top Bottom