கொண்டு, கூட, இருந்து

நிதனிபிரபு

Administrator
Staff member
சில சொற்களைச் சேர்த்து எழுதுவது கட்டாயமாகும். பிரித்து எழுதுவதற்கும் சேர்த்து எழுதுவதற்கும் இடையே வேறுபட்ட பொருள் தோன்றிவிடும் என்பதனை முதலில் உணரவேண்டும்.

பயணிகள் உண்ணுமிடம் - என்றால் ‘பயணிகள் உணவை உண்ணுமிடம்’ என்பது பொருள்.

பயணி கள் உண்ணுமிடம் - என்று பிரித்து எழுதிவிட்டால் அங்கே ‘பயணிகள் கள் குடிக்கலாம்’ என்ற பொருள் வந்துவிடுகிறது.

நாம் உணர்த்த விரும்பிய பொருள் கள்ளுண்ணும் இடம் என்பதன்று. உணவு உண்ணுமிடம் என்னும் பொருளைத்தான். அந்தப் பொருளை உணர்த்தாமல் வேறுபட்ட பொருள் வந்துவிடுகிறது, பாருங்கள் !

பிரித்து எழுதினால் அச்சொல் தனித்து நின்று தனிச்சொல்லுக்கான பொருளைத் தரும். சேர்த்து எழுதப்படும்போதுதான் அது சொல்லுருபாய்ச் சேர்ந்து உரிய பொருளுணர்த்தி நிற்கும்.

பயணிகள் உண்ணுமிடம் - என்பதில் கள் என்பது பன்மை விகுதி - சொல்லுருபு.
பயணி கள் உண்ணுமிடம் என்பதில் கள் என்பது தனிச்சொல். தனிச்சொல்லுக்கான கள் என்னும் பொருள் வந்துவிட்டது.

இருந்து’ என்பதும் நீங்கற்பொருளில் சொல்லுருபாகப் பயன்படும்.

வீட்டில் இருந்து வருகிறான் - என்றால் ‘வீட்டில் இருக்கிறான்’ என்பது பொருள்.
வீட்டிலிருந்து வருகிறான் - என்றால் ‘வீட்டிலிருந்து கிளம்பி வருகிறான்’ என்பது பொருள். வீட்டிலிருந்து நீங்குவது குறித்த பொருள் தரும் சொல்லுருபாவது ‘இருந்து’ என்னும் சொல்.

இன்று செய்தித் தொடர்கள் எழுதுவோர் பலரும் ‘இருந்து’ என்பதனைச் சொல்லுருபான நீங்கற்பொருளில் பிரித்து எழுதிக் கொல்கின்றனர்.
தலைமைச் செயலகத்திலிருந்து வந்தது - என்பதற்கும்
தலைமைச் செயலகத்தில் இருந்து வந்தது - என்பதற்கும் உள்ள பொருள் வேறுபாடு அவர்கட்கு விளங்கவேண்டும்.

அவ்வாறே பயன்படும் இன்னொரு சொல் ‘கூட’ என்பதாகும். அதுவும் தனிச்சொல்லாகவும் சொல்லுருபாகவும் இருநிலைகளில் பயன்படும்.

அவனைக்கூட விட்டுவிடலாம் - என்பதற்கு ஒரு பொருள். அவனையுமே விட்டுவிடலாம்.

அவனைக் கூட விட்டுவிடலாம் - என்பதற்கு வேறு பொருள் . அவனைக் கலப்பதற்கு விட்டுவிடலாம்.

கொண்டு என்பதும் இத்தகைய பயன்பாடுடையதுதான்.
கஞ்சி கொண்டு வந்தான்.

இங்கே ‘கஞ்சி கொண்டு’ என்பது இரண்டாம் வேற்றுமைத் தொகை. கஞ்சியைக் கொண்டு வந்தான்.

கஞ்சிகொண்டு பசியாறினான்.

இங்கே ‘கஞ்சிகொண்டு’ என்பது மூன்றாம் வேற்றுமைத் தொடர். கஞ்சியால் பசியாறினான். (வேற்றுமைத் தொடர், தொகை என்பன பெரிய கல்வி. இங்கே இவ்வளவிற்குத்தான் இடம்.)

வேறுபாடு விளங்குகிறதா ?


- கவிஞர் மகுடேசுவரன்
 

Google Typing

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.

Top Bottom