சர்வதேசத் திரைப்பட விழா- யாழ்ப்பாணம்- இதழ் 5

ரோசி கஜன்

Administrator
Staff member
இதழ் 5 இற்காக இவ்வாக்கத்தை எழுதிய எழுத்தாளர் உஷாந்தி கௌதமனுக்கு நெஞ்சம் நிறைந்த நன்றிகள்!

சர்வதேசத் திரைப்பட விழா - யாழ்ப்பாணம்

யாழ்ப்பாணம் இந்த நாளுக்காய் கொஞ்ச நாட்களாகவே பரபரப்பாய்க் காத்திருந்தது. ஆரம்பிக்கும் முன்னரே சர்ச்சைகள் உருப்பெற்று, பலபக்கமும் பேசு பொருளாக மாறினாலும் அவையும் விழாவுக்கான விளம்பரத்தையே பெற்றுக்கொடுத்திருந்தன.

யாழ்ப்பாண சர்வதேசத் திரைப்படவிழா நான்காவது வருடமாக இந்த ஆண்டும் ஐப்பசி 03ஆம் திகதி தொடக்கம் 8ஆம் திகதி வரை யாழ்ப்பாணத்தில் நடாத்தப்பட்டிருந்தது. நம் ஏகலைவர்களை கொண்டாடும் நோக்கத்திலும் யுத்தத்தின் வடுக்களில் இருந்து மீண்டு வரும் ஓர் முயற்சியாகவும் இது அமையும் என்பதே நோக்கம் ஆகும்.

கார்கில்ஸ் மஜஸ்டிக் சிட்டி யாழ்ப்பாணம், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், யாழ்ப்பாணப் பொதுநூலகம் ஆகியவற்றில் மாறி மாறி ஏகப்பட்ட திரைப்படங்கள், குறுந்திரைப்படங்கள் திரையிடப்பட்டிருக்க, திரைப்படங்கள் தொடர்பான கலந்துரையாடல்களிலும் மக்கள், மொழி வேறுபாடின்றிக் கலந்து, கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டதைக் காணக்கூடியதாக இருந்தது. விழாவின் ஆரம்பத் திரைப்படமாக, ‘ த யங் கார்ல் மார்க்ஸ்’, முடிவுநாள் திரைப்படமாக ‘சுவீற் கன்ட்றி, ஆகியன திரையிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.இந்நிகழ்வில் நமக்குக் கனேடியத் திரைப்பட இயக்குநர் தீபா மேத்தா அவர்களின் ‘அனாட்டமி ஒஃப் வயலன்ஸ்’ திரைப்படத் திரையிடலில் பங்குபற்றும் வாய்ப்புக்கிடைத்தது. டெல்லி நிர்ப்பயா பாலியல் வல்லுறவு சம்பவத்தைக் குற்றவாளிகளின் பார்வையூடாகப் பேசிய அத்திரைப்படத்தை எம்முடன் யாழ் பொதுநூலகத்தில் முப்பதிற்கு மேற்பட்டோர் பார்வையிட்டிருந்தனர். அத்திரைப்படம் எழுப்பிய அதிர்வு அனைவர் முகத்திலும் தென்பட்டதைக் காணக்கூடியதாக இருந்தது.அத்திரைப்படத்தின் முடிவில், திருமதி. வாணி குலசேகரம், திருமதி. காயத்ரி திவகலாலா, செல்வி. லிகினி ரத்வத்த, திரு. உபாலி அமரசிங்க ஆகியோர் தலைமையிலான கலந்துரையாடல் நடைபெற்றது.படத்தில் காண்பிக்கப்பட்ட “குற்றவாளி எப்போதுமே தானாக உருவாகி விடுவதில்லை. சமூகமே அவனை உருவாக்குகிறது” என்ற செய்தி மக்களை எவ்வாறு சென்று சேர்ந்தது?அவன் முன்பொருநாளில் பாதிக்கப்பட்டிருப்பவனாக இருந்தான் என்பதனால், வன்முறையாளனாகியிருக்கிறான் என்ற செய்தியை ஏற்றுக்கொள்ள முடியுமா?நம் தந்தை வழி சமுதாயத்தில் அதிகாரமும், அதிகாரம் சார் உறவு முறைகளும் எவ்வாறு சமுதாயத்தில் பெண்கள் மீதான வன்முறைக்கு காரணமாகிறது?

எவ்வாறு நாம் சிறுவயதில் இருந்து, அதாவது, பாடசாலைத் தண்டனைகளின் பெயரால் வன்முறையை ஒரு நல்வழிப்படுத்தும் கருவியாக ஏற்றுக்கொள்கிறோம்? அது எவ்வாறு பல்கலைக்கழகங்களில் ‘ராகிங்’ போன்ற வன்முறை வடிவங்களாக மாறுகிறது?

வன்முறையைச் சாதாரணமாக எடுத்துக்கொள்ளும் மனப்பாங்கு பெண்கள் மீதான வன்முறைக்கு எவ்வாறு காரணமாக அமைகிறது?

நம் சமூகத்தில் கூட வித்யா, ரெஜினா என்று நீண்டு கொண்டே போன சமீபத்திய வன்முறைகளுக்கு உண்மையில் என்ன காரணம்?

பெண்களின் ஆடைகள் குறித்த காலம் காலமான ஆணாதிக்கச் சாக்குப்போக்குகள், பெண் குழந்தைகளுக்கு மட்டும் வன்முறை குறித்த விழிப்புணர்வு வழங்கப்படுவது சரியா?

குழந்தைகளின் உலகம் குறித்த பார்வையை செதுக்குவதில் பெற்றோரின் பங்களிப்பு என்ன?

இதெல்லாம் கலந்துரையாடலில் இளைய சமுதாயம் எழுப்பிய கேள்விகளும் விவாதித்த விடயங்களும் ஆகும். கேள்வி எழுப்புதலும் நம் வாழ்க்கை முறையைச் சீர்தூக்கிப்பார்த்தலும், சமூக அக்கறையும் நல்ல சமுதாய மாற்றத்துக்கு அடிப்படையான இளைய சமுதாயத்தின் இயல்புகளே. அவ்வகையில் இடம், மொழி வேறுபாடின்றி கலந்துரையாடலில் கலந்து கொண்ட இளைய தலைமுறை நாளைய சமுதாயம் குறித்த நம்பிக்கையையே பெரிதாய் தூவிச்சென்றது.


ஒரு நல்ல திரைப்படம் என்பது சிந்தனையைத் தூண்டி மக்களைத் தங்களைத்தானே சீர்தூக்கிப் பார்க்க உதவ வேண்டும். அவ்வகையில் தீபா மேத்தாவின் இத்திரைப்படம் பல்வேறு சர்ச்சைகளையும் குற்றவாளிகளின் மேல் பரிதாபப்போர்வையைப் போர்த்துகிறது போன்ற எதிர்க்கருத்துக்களையும் பரவலாக எதிர்கொண்டாலும், இக்காலகட்டத்தில், மக்களை, மிகத்தேவையான விடயம் ஒன்றுக்காய்ச் சிந்திக்கத்தூண்டிய விதத்தில் வெற்றியே பெறுகிறது.
 
Last edited by a moderator:
Top Bottom