You must have JavaScript enabled in order to use this order form. Please enable JavaScript and then reload this page in order to continue.

செப்பனிடுவோம்!

ரோசி கஜன்

Administrator
Staff member
1547576377868.png


“எனக்குக் கிடைத்த வாழ்த்துகளில் மிகவும் விசேடமானது என்றால்... என் ஆசிரியடமிருந்து கிடைத்ததே!” குழந்தைத்தனம் மாறா முகத்தில் ஒட்டியிருந்த மென்னகையோடு, சற்றும் யோசியாது, தொலைக்காட்சியொன்றின் பேட்டிக்குப் பதில் சொல்லியிருந்தார் மகேந்திரன் திகலொளிபவன்.



‘நீ, எனக்குக் கொடுத்த வாக்கைக் காப்பாத்திவிட்டாய்; அச்செய்தியையும் ஆசிரியர் தினமதில் அறிந்துகொண்டதில் இத்தினம் மறக்க முடியாத தினங்களில் ஒன்றாயிற்று!’ என்றாராம் அவரின் ஆசிரியர். எத்தனை ஆசிரியர்களின் வாழ்வில் இப்படியொரு மறக்க முடியாத தருணம் வந்தமைந்து விடும்.



அப்படியொரு தருணத்துக்கு விலைமதிப்புண்டா என்ன?



யார் இச்சிறுவன் என்ற கேள்விக்கு விடையோடு தொடர்ந்து பார்ப்போமே!



சிலநாட்களுக்கு முன்னர் ஒரு ஒளி நாடாவைப் பார்க்கும் வாய்ப்புக் கிட்டியது. அது ஒரு தொலைக்காட்சிக்கான பேட்டி!



இலங்கையில், கடந்த ஆவணியில் வெளியாகிய புலமைப்பரீட்சை முடிவுகளில் அகில இலங்கை மட்டத்தில் இரண்டாம் இடத்தைப் பிடித்த மூவரில் இரு சிறார்கள், யாழ் இந்து ஆரம்பப் பாடசாலையைச் சேர்ந்த மகேந்திரன் திகழொளிப்பவன் , மற்றும் சாவகச்சேரி இந்து ஆரம்பப் பாடசாலையைச் சேர்ந்த நவாஸ்கான் நதி என்போராகும்.



முதலில், செந்தூரத்தின் சார்பில் அவ்விருவருக்கும் மனமார்ந்த வாழ்த்துகள்! கல்வியில் மேலும் மேலும் பல படிகள் தாண்டிச் சாதனைகள் புரிந்திடுவீராக!



இவர்களுள், யாழ் இந்து ஆரம்பப் பாடசாலையைச் சேர்ந்தவரே மேற்சொன்ன சிறுவன்.



தொடர்ந்த பேட்டியில்... “இன்றய நாட்களில் இப்பரீட்சை, மாணவச் சிறார்களுக்குப் பெரும் சுமையாகிப் போனதாகச் சொல்லப்படுகின்றதே , அது பற்றி உங்கள் கருத்து?” என்கின்ற ரீதியில் கேள்வியொன்றை முன்வைத்தார் பேட்டி எடுத்த பெண்மணி.



முறுவல் மாறாது மிக இயல்பாக அமர்ந்திருந்த திகழொளிப்பவன் முகத்தில் புன்னகை சற்றே விரிந்தது.



“இல்லை, அப்படியெல்லாம் இல்லை; அவே டியூசன் போவதால் தான் நிறைய பாடங்கள் ஆகிச் சுமையாகிறது...” என்ற ரீதியில் பதில் அளித்த திகழொளிப்பவன், “இப்பரீட்சைக்கு என்று வகுக்கப்பட்ட வரையறைக்குள் பாடசாலையில் சொல்லித் தருகிறார்கள்; அதுவே பரீட்சையிலும் கேட்கப்படுகிறது. ஆனால், டியூஷனில் அதைவிட அதிகமாகக் கற்பிக்கிறார்கள்; அதுவே பாடங்கள் அதிகரிக்கக் காரணம்.” என்று பெரிய விடயமொன்றை மிகச் சாதாரணமாக எடுத்துச் சொல்கிறார்.



இந்த இடத்தில், அவரின் ஆசிரியருக்கும் பாடசாலைக்கும் மரியாதை நிறைந்த வணக்கங்களை முன்வைப்பதில் செந்தூரம் பெருமை கொள்கின்றது.



இப்படி எத்தனை பாடசாலை மாணவர்களால் சொல்ல முடியும்? அப்படியே எல்லோரும் சொல்வதானால் பெருகிவரும் தனியார் பாட வகுப்புகளுக்கு இங்கே வேலை என்ன?



இந்தப் பிள்ளைகளின் சாதனைகளின் பின்னால் பாடசாலை ஆசிரியர்கள் என்பதையும் கடந்து நிச்சயம் வீட்டினரின் பங்களிப்பு இருந்தே இருக்கும் . இருந்தும், இன்றைய நாட்களில் எம் சமூகத்தை மட்டுமே இங்கு எடுத்துக் கொண்டாலும் கல்வி என்பது காசோடு தொடர்புபடுத்தப்பட்ட ஒன்றாகிவிட்டதை யாராலும் மறுக்க முடியாது.



அப்போ காசில்லாதவர் நிலை?



இலங்கையில், இலவசக் கல்வி, ஆசிரியர் சேவை இரண்டும் எந்தளவுக்குத் தன்னை நிலைநிறுத்தி வருகின்றது என்பது பெரும் கேள்விக்குறியாகவே உள்ளது.



பொதுவாக, சில செயல்பாடுகள் மட்டுமே சேவை என்பதினுள் அடங்கும். கல்வி, மருத்துவம் , போக்குவரத்து இப்படி ...



இப்போது இவையெல்லாம் சேவையாகவா உள்ளது? பெரும் இலாப நோக்கில் இயங்கிவருவதாகவே கொள்ளவேண்டியுள்ளது .



ஒரு ஆசிரியர் பள்ளியில் தான் கற்பிக்கவேண்டிய பாடத்தை முறையாக மாணவருக்குப் போதிக்கும் தருணத்தில், அம்மாணவன், அதே பாடத்தை மீண்டும் கற்க , பாடசாலை நேரம் தவிர்த்த நேரத்தில் இன்னொருவரை நாடவேண்டிய அவசியம் தான் என்ன ?



அப்படியே, பள்ளியில் முறையாகக் கற்பிக்கப்படுவதில்லை என்று வெளியிடங்களில் படிக்கப் போகிறார்கள் என்றே கொள்வோமாயின் அந்தப் பள்ளியில் அந்த ஆசிரியருக்கு என்ன வேலை? பிள்ளைப் பராமரிப்பா? இக்கேள்வி சற்றே கடுமையாகத்தான் இருக்கிறது இல்லையா? ஆனாலும் ஒவ்வொருவருமே கேட்டுப்பார்த்து விடைகாண வேண்டிய கேள்வியாகவே இதுவுள்ளது.



ஒரு மாணவன் கல்வியில் தன்னை நிரூபிக்கச் சிறந்த பெறுபேறுகளை எடுத்து மேலேமேலே செல்கையில் அவன் முன்னேற்றத்திலும் வெற்றியிலும் எனக்கும் பங்குண்டு என்று நிமிர்வாகச் சொல்ல, பாடசாலை ஆசிரியர்கள் பெருமையோடு முன்னணியில் நிற்க வேண்டும். மாணவர்களின் விரல்கள் தம் ஆசிரியரை நோக்கி ‘இவரால்தான்’ எனப் பெருமையோடு சுட்டி நிக்கவேண்டும். அப்படி ஒரு நிலையில் தனியார் வகுப்புகள் எங்கே போகும் என்று சற்றே யோசியுங்களேன்.



பாடசாலை நேரம் தவிர்த்து வெளியிடங்களுக்கு அலைந்து திரியும் நேரம் மிச்சமானால் அந்தப் பிள்ளைகள் அந்த நேரத்தில் இன்னும் இன்னும் எத்தனை விடயங்களைச் செய்யலாம். ஒரு விளையாட்டு, வீட்டு மனிதர்களோடு கலகலப்பாக அளவளாவுதல், தமக்கே தமக்கான சிறுசிறு பொழுதுபோக்குகள், வாசிப்பு... ம்ம்ம் எவ்வளவு செய்யலாம்.



கடகடவென்று கடந்து செல்லும் மணித்துளிகளும் அவர்களின் பால்யமும் திரும்பி வரவா போகின்றது? ஒவ்வொருகுழந்தையும் பள்ளி, அது முடிந்தால் டியூசன், அது முடிந்தால் வீட்டுப்பாடம்...



இப்படியே போனால் ஒருகட்டத்தில், மிகுந்த ஈடுபாட்டோடு படிக்கும் குழந்தைகளுமே வெறுப்படையலாம். அப்போ, படி படி நீ படித்தே ஆகவேண்டும் என்று கட்டாயமாகத் திணிக்கப்படும் குழந்தைகள் நிலை?



‘ஆசிரியர் பணி’ என்பது சாதாரணமானதல்ல. மிகுந்த அர்பணிப்புள்ளது. வருங்கால தலைமுறையை செதுக்கும் பணியது. ஆசிரியர் என்று தம்மை வெளிப்படுத்தும் ஒவ்வொரு ஆணும் பெண்ணும் ஒழுக்கத்திலும் கடமையில் தவறாதிருக்க வேண்டும் . அப்படித் தவற நினைப்பவர்களுக்கு, தவறுபவர்களுக்கு அவர்களைக் காண்கையில் ஒரு அச்சுறுத்தல் வரவேண்டும்.



அவர்கள் மற்றவர்களுக்கு முன்மாதிரியாக எடுத்துக்காட்டாக இருக்கவேண்டியவர்கள் . அதனால் தாம் நம் சமூகத்தில் மாதா பிதாவுக்கு அடுத்து குருவை மதிப்புக்குரியவர்களாக்கியுள்ளனர்.



ஒவ்வொரு ஆசிரியரும் , பாடசாலைகளும் , இவர்கள் மீதான கட்டுப்பாட்டு அதிகாரம் கொண்டோரும் இணைந்து, ஆசிரியர் சேவை என்பதை தூய்மையாக, கூர்மையாக முன்னெடுத்துச் சென்றால்...இன்று நம் கண்முன்னால் நிலவும் எத்தனையோ பிரச்சனைகளுக்குத் தீர்வுண்டாக்கலாம்.




செப்பனிடுவோம்!
 
Last edited by a moderator:

Sharly usha

Active member
சரிதான் அக்கா. என் மகள் படிக்கும் பள்ளியில் நிறைய ஆசிரியர்கள் பாடம் எழுதி போடுவதோடு சரி. படிக்க வைப்பது வீட்டில் உள்ளவர்கள் பொறுப்பு. ஒரு சில ஆசிரியர் மட்டும் விதிவிலக்கு. நம் காலத்தை போல மாணவர்கள் கல்வியில் ஈடுபாடு உள்ள ஆசிரியரை காண்பது அரிது. ஒன்றாம் வகுப்பிலிருந்து டியூஷன் செல்லும் குழந்தைகளை காணும் போது பரிதாபமாக இருக்கும்.
 
Top Bottom