You must have JavaScript enabled in order to use this order form. Please enable JavaScript and then reload this page in order to continue.

நான் நானாகவே…! – யாழ் சத்யா (ஃபிரான்ஸ்)- இதழ் 1

ரோசி கஜன்

Administrator
Staff member
1541948875899.png


“உங்களுக்கு எத்தினை தரம் அம்மா சொன்னனான்… நல்ல ஸ்டைலான பொம்பிளையாப் பாருங்கோ என்று. இந்தப் பட்டிக்காட்டை எங்க தேடிப் பிடிச்சியளோ தெரியாது. இப்ப...தினந்தினம் என்ர உசிர் போகுது! எதுக்குடா இவளை லண்டன் கூப்பிட்டன் என்று கிடக்கணை!”



“என்னடா தம்பி… இப்பிடி சொல்லுறாய்?

இவள் நல்ல வெள்ளைப் பெட்டை, வடிவு என்று தானே உனக்கு கட்டி வைச்சனாங்கள். நீயும் பார்த்த பொம்பிளை எல்லாத்தையும் அதுக்கு பல்லு மிதப்பு, இதுக்கு கலர் குறைவு, அது குண்டா இருக்கு, இது உயரம் குறைவு என்று ஆயிரம் சாட்டுச் சொல்லி தட்டிக் கழிச்சாய். இவளிட ஃபோட்டோ அனுப்பினதுமே ஒண்டுமே சொல்லாமல் கெதியா நாளைப் பாருங்கோ என்று சொல்லிப்போட்டு இப்ப என்னோட வாறாய்?”



“ஓமோம்…. அந்த வடிவில மயங்கிக் கட்டினதில தான் நான் இப்ப அவஸ்தைப்படுறன். ஒரு இடத்துக்கு வெளில கூட்டிட்டு போக முடியல. இங்க இருக்கிறவனெல்லாம் சிரிக்கிறாங்கள்!”


“இல்லை கேட்கிறன்…. அவளுக்கு என்ன குறையடா மோனை? கொழும்பு கம்பஸில மேனேஜ்மெண்ட் படிச்ச பெட்டை… சீமாவோ சோமாவோ ஏதோ எக்கவுண்டிங் கோர்ஸூம் எல்லோ முடிச்சிருக்கிறாளாம். நீ ஏஎல் படிச்சுப் போட்டு உங்க போய் கோப்பை கழுவிறதுக்கு உனக்கு இவ்வளவு படிச்ச பெட்டை கிடைச்சதே பெரிய விசயம். அதுக்குள்ள என்னடா என்றால் நீ அவளைப் பற்றிக்குறை சொல்லிக் கொண்டிருக்கிறாய்?”



“என்னணை…. நீங்களே இப்படிச் சொல்லுறியள்? நான் என்ன இப்பவும் கோப்பையே கழுவுறன்? சொந்தமா கடை வைச்சு உழைக்கிறன் தானே? பிறகும் படிக்காததைக் குத்திக் காட்டுறியள். இவளே ஒரு நாள் பார்த்து என்னைப் படிக்காதவன் என்று சொல்லியிருக்க மாட்டாள்… ஆனா நீங்க சொல்லுறியள்.”



“அதைத்தானேடா நானும் சொல்லுறன்….அவள் உனக்கு என்ன குறை வைச்சாள் சொல்லு பாப்பம்? உனக்கு சமைச்சு தராமல் ஊர் சுத்துறாளா? இல்லை உன்னைக் கவனிக்காமல் இருந்து நாடகம் பாக்கிறாளோ?”



“எணை அம்மா… நீங்கள் செய்யிறதையெல்லாம் சொல்லாதையுங்கோ… ஒழுங்கா சமைச்சு வைக்காமல் அந்தக் கோயில்ல தேர், இந்தக் கோயில்ல தீர்த்தம் என்று வெளிக்கிட்டுப் போடுவியள்… இரவிலயாச்சும் ஒழுங்கா சாப்பாடு தாறனியளோ என்றால் அதுவுமில்லை. கோலங்கள், மெட்டியொலி என்று டீவியைக் கட்டிப் பிடிச்சுக் கொண்டிருப்பியள். சன் டீவிக்காரன் அட்வடீஸ்மெண்ட் போடுற வரைக்கும் நானும் அப்பாவும் சாப்பாட்டுக்கு பாத்துக்கொண்டு இருக்கோணும். உங்களோட இருக்கேக்க நான் இந்த கொடுமை எல்லாம் அனுபவிச்ச படியால கடவுளாப் பார்த்து, எனக்கு இப்ப என்னை உள்ளங் கையில வைச்சுத் தாங்கிற பொண்டாட்டியைத் தந்திருக்கிறார்.”



“அடேய்… ஏன்டா மோனை இப்ப பழங்கதையெல்லாம்…. சரி… சரி… அதை விடு... அதுதான் நீயே சொல்லுறியே நல்லா கவனிக்கிற பொண்டாட்டி என்று. பிறகென்ன? நீ கடையில போட சாமான் வாங்கப் போனாலும் அவள் தானே கடையையும் பாக்கிறாள். கடைக் கணக்கு, வழக்குப் பாக்கிறதும் அவள் தானேடா? லண்டன்காரன் இங்கிலிஸ் கதைக்கிற மாதிரி எவ்வளவு ஸ்டைலா கதைக்கிறாள்? உன்னை மாதிரி தடக்கி விழுந்தே அவள் கதைக்கிறவள்?”



“இப்ப எதுக்கணை அம்மா நான் கதைக்கிற இங்கிலிசோட வாறியள்? நான் என்ன அவள் கடை பாக்கிறேல்ல என்று சொன்னானோ? அவள் இங்க வந்த பிறகு தானே நல்லா பிஸ்னஸ் கூடினது… எல்லாம் அவளிட ஐடியாப்படி கடை நடத்த தொடங்கின பிறகு தானே…”



“பிறகெதுக்குடா இப்ப அவளைப் பற்றி புரணி அளக்கிறாய்?”



“நான் புரணி அளக்கிறனோ? அவள் செய்யிற எல்லாம் சரி தான்… ஆனா ஒரு இடத்துக்கு வெளில கூட்டிக் கொண்டு போக முடியுதே? சனமெல்லாம் பார்த்து சிரிக்குதுகள். அதுவும் எங்கட ஆட்கள் எனக்கு முன்னால சொல்லுவாங்கள், ‘இப்புடி ஒரு அடக்கமான பொம்பிளை கிடைக்க குடுத்து வைச்சிருக்கோணும் என்று…’ நான் போய் முடிய பின்னால சிரிக்கிறாங்களணை… ‘இவரிட ஸ்டைலுக்குத் தான் நல்ல பட்டிக்காடா பொம்பிளை கிடைச்சிருக்கு’ என்று…”



“எங்கட சனத்தைப் பற்றித் தெரியும் தானே அப்பன்? அதுகள் உனக்கு நல்ல பொம்பிளை கிடைச்சிட்டு என்று பொறாமையில சொல்லுங்கள்… அதுகளிட கதையளை நீ கணக்கில எடுக்காதையடா மோனை.”


“எப்பிடியம்மா நான் கணக்கெடுக்காம விடுறது? இங்க இருந்து கொண்டு எங்கட ஆட்கள் என்று பழகாமல் இருக்கேலுமே? இவள் கொஞ்சம் புரிஞ்சு கொண்டு நடக்கலாம் தானேம்மா? நான் என்ன விசயத்திலயாவது குறை வைச்சிருக்கிறனோ? ஆசைப்படுற எல்லாம் கேட்காமலே வாங்கிக் குடுக்கிறன். அவளிட குடும்பம் ஊரில கொஞ்சம் கஸ்டப்படுகினம் என்று, இவள் கவலைப்படக்கூடாது என்று இவளுக்குத் தெரியாமலேயே மாசமாசம் அவைக்கு காசு அனுப்பிறன்…”



“உன்ர நல்ல மனசு எனக்கு தெரியும் தானே ராசா… இந்த விசயத்தைத் தவிர அவள் பத்தரை மாற்றுத் தங்கம் தானேயடா? நீ கொஞ்சம் சமாளிச்சுப் போவன்.”



“நானும் வந்த புதுசு கொஞ்சம் இடம், குளிர் எல்லாம் பழகட்டும்….கொஞ்ச நாள் போக மாறுவாள்… மாறுவாள் என்று பார்த்தால் மாட்டன் என்றே நிக்கிறாளணை. நானும் எவ்வளவோ சொல்லி விளங்கப் படுத்திக் களைச்சுப் போனன். அவளும் பிடிவாதமாய் எனக்கு மேலால விளக்கம் சொல்லுறாள். நான் என்ன தான் செய்யுறது?”



“நீ என்னை பேசாதை அப்பன்… ஆனா எனக்கும் அவள் செய்யுறது தப்பாத் தெரியேல்ல. இந்தக் காலத்தில இப்படி ஒரு உறுதியான பிள்ளையா என்று அவளில மதிப்புத்தான் கூடுது!”


“அதுதானம்மா… எனக்கும் சிலவேளை அவளைப் பேசுறதுக்கு மனம் வராது. வெள்ளைக்காரங்களுக்கு முன்னால அவளைப் பார்க்க பெருமையாத் தான் இருக்கும். ஆனால், எங்கட சனத்திட கதையளைக் கேட்கவெல்லோ விசர் வருது மனுசருக்கு!”



“இங்க பார் தம்பி… நான் கடைசியா சொல்லுறன்… எங்கட அறுந்து போன சனத்திட கதையை விட்டிட்டு நீ அவளை அவளாய் வாழ விடு! அவளோட சேர்ந்து சந்தோசமா குடும்பம் நடத்தி பிள்ளை குட்டி பெறுற வழியைப் பாரு! நான் நாளைக்கு எடுக்கிறனடா. சூப்பர் சிங்கர் தொடங்கப் போகுது… நீ நான் சொன்ன மாதிரி அந்த ராஜேஸ்வரிக்கு வோட் பண்ணிணி தானே? நீ இருந்து பாரன் இந்த முறை செந்தில் தான் முதலாவதா வருவான்… சரியடா மோனை… மருமகளிட்ட சொல்லு நாளைக்கு காலமை எடுத்து கதைக்கிறன் என்று.”



“நீங்க இந்த ஜென்மத்தில திருந்த மாட்டியளணை… அப்பாவுக்கு சாப்பாட்டைக் குடுத்துட்டு டீவிக்கு முன்னால குந்துங்கோ… நான் வைக்கிறன்.”



தனது கடையிலிருந்து வைபரில் தாயோடு உரையாடிக் கொண்டிருந்தவன் கைப்பேசியை அணைத்தான்.



அவனின் இத்தனை புலம்பல்களுக்கும் காரணமான அவன் மனையாட்டியோ, வெள்ளிக்கிழமை என்று நல்ல மரக்கறி சோறு சமைத்து மூடி வைத்து விட்டு, தலைக்குக் குளித்து விட்டு வந்தவள், மஞ்சளுக்கு கிளிப்பச்சை கரையிட்ட பருத்திச் சேலையை எடுத்து உடுத்திக்கொண்டு, இடுப்புக்கு கீழே நீண்டு படர்ந்திருந்த அந்தக் கருங் கூந்தலை காய வைத்து சிக்கெடுத்து அழகாய் பின்னி அடியிலே ஒரு பூல் பாண்டைப் போட்டுக் கொண்டாள்.



கண்ணாடி மேசைக்கு முன் வந்தவள் கண்ணுக்கு அளவாய் மையிட்டு விட்டு குங்குமத்தை நெற்றி வகிட்டிலும் நெற்றியிலும் இட்டுக் கொண்டாள். தானே மிக கவனமாய் இந்த குளிர், வெயில் எல்லாவற்றிலிருந்தும் பாதுகாத்து வளர்க்கும் கனகாம்பரச் செடியிலிருந்து பறித்த மலர்களைத் தொடுத்துக் கட்டியிருந்த சரத்தை தலையிலே சூட்டிக் கொண்டு, மேலே குளிர் அங்கியை எடுத்து அணிந்து கொண்டவள், கதவைப் பூட்டிச் சாவியைக் கைப்பையில் போட்டுக்கொண்டு அருகிலிருந்த தேவாலயத்தை நோக்கி நடக்க ஆரம்பித்தாள்.



எந்தக் கடவுளாய் இருந்தால் என்ன? எல்லாம் நம் மனதைப் பொறுத்தது தான் என்ற எண்ணம் கொண்டவள், இலங்கையில் இருக்கும் போது எவ்வாறு தவறாது ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் கோவிலுக்குச் செல்வாளோ, அதேபோன்று இங்கே சேர்ச்சுக்குத் தவறாது போவாள்.



இந்துக் கோயில்கள் அவள் இருப்பிடத்தில் இருந்து வெகு தொலைவு என்பதால் வருஷம், தீபாவளி என்று விசேசங்களுக்கு மட்டும் அங்கே போய் வருவார்கள்.



‘அவளது நீண்ட கூந்தலை வெட்டு, டை அடி, சேலை கட்டாதே, சல்வார் போடாதே… ஜீன்ஸ் டீசேர்ட் போடு... லண்டனில இருக்கிற மாதிரி இரு… இப்பிடிப் பட்டிக்காடா இருக்காதே’ என்ற மற்றவர்களின் கருத்தை ஏற்றுக் கொள்ளாமல்,



“லண்டன்ல இருந்தாலும் நான் தமிழச்சி தானே? நான் எதுக்கு என்ர பழக்கவழக்கத்தை மாத்தோணும்? வெள்ளைக்காரன் தன்ர உடுப்பென்று ஜீன்ஸ், டீசேர்ட், சட்டை போடுறாங்கள்… நாங்கள் ஏன் அவங்களை மாதிரி மாற வேணும்? லண்டன்காரன் யாழ்ப்பாணம் வந்தால் ஒரு நாளைக்கு ஆசைக்கு சாரிய, வேட்டிய கட்டிக் கொண்டு நல்லூருக்குப் போறாங்கள்… ஒவ்வொரு நாளுமே அப்படித் திரியிறாங்கள்? முஸ்லிம் ஆட்களை நான் இந்த விசயத்தில மிகவும் மதிக்கிறன். அவே செவ்வாய்க்கு சென்றால் கூட தங்கட கலாச்சாரத்தை விட்டுவிடமாட்டார்கள்.


நாங்க மட்டும் ஏன் மாற வேணும்? உடுப்பு முதல்ல அவை அவையிட சொந்த விசயம்… எனக்கு சீலை கட்டத் தான் பிடிக்குது. நான் கட்டுறன். அதுக்காக இங்க ஜீன்ஸ் போடுறவையளை நான் குறை சொல்லவில்லை. அது அவைக்கு வேலையளுக்கு ஈஸி, அவைக்குப் பிடிச்சிருக்கு என்றால் அவை போடட்டும். அது அவையிட விருப்பம். அதுக்காக என்னை மாறச் சொல்லிச் சொல்ல ஒருத்தருக்கும் உரிமையில்லை. அதுக்கு நான் பட்டிக்காடாகவே இருந்திட்டுப் போறேன்… பரவாயில்லை.”



என்று கணவனின் வாயை அடைத்த அந்தத் தமிழச்சி, யேசுநாதரின் உருவத்தில் விநாயகரை தரிசிக்க, தன் நீண்ட ஜடை கருநாகமாய் அசைந்தாட நடந்து சென்று கொண்டிருந்தாள்.
 
Top Bottom