You must have JavaScript enabled in order to use this order form. Please enable JavaScript and then reload this page in order to continue.

பகிடி வதை

Sugiy

Member
வணக்கம் செந்தூரம் உறவுகளே!

|| உன்னை நீயே தோற்கடி! || என்ற வாசகத்தைத் தனதாக்கிக் கொண்டு இணையத்தளத்தில் கோலோச்சும் ரோசி அக்கா, நிதனி மற்றும் அன்பான வாசக நெஞ்சங்களோடு நானும் இணைவதில் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன்.
உங்களுடன் எனது முதற்பதிவைப் பகிர்ந்துகொள்வதில் பெருமையடைகிறேன். ஆரோக்கியமான பகிர்வுகளோடு இணைந்திருப்போம்.... :):):):)


# பகிடி வதை #

எல்லாரும் இதைப்பற்றி எழுதுகிறார்கள் என்று இதை நான் எழுதவில்லை. எம் சமூகத்தில் இந்த விடயம் ஒருகிழமை பேசப்படும். பிறகு இன்னொரு புலம்பலுக்கான தலைப்புக் கிடைத்துவிடும்.

ஆனாலும் கடந்த நாட்களாக என் மனதைக் குடையும் விடயங்களை உங்களுடன் பகிரலாம் என்று நினைக்கிறேன்.

இங்கு பிள்ளைகள் பிறந்தது முதல் பெற்றோறாகிய எங்களுக்கு வழங்கப்படும் முதல் அறிவுரை - "நீங்கள் உங்கள் பிள்ளைகளுக்கு முன்னுதாரணமாக இருங்கள்" என்பதே!.
போர் முடிந்து எத்தனையோ நவீனங்கள் எம்மைச் சுற்றி விரவிக்கிடந்தாலும், எம் சமூகம் எதை நோக்கிப் பயணிக்கிறது என்று கேட்டால் இலக்கற்றே என்று எண்ணத்தோன்றுகிறது. முன்பள்ளியிலிலிருந்து படி படி என்று தாம் மாடாய் உழைத்து பிள்ளைகளைப் படிப்பிக்கும் பெற்றோர் பலருக்குத் தெரிவதில்லை, தம் பிள்ளைகள் உண்மையில் என்ன செய்கிறார்கள் என்று!
படிப்பு என்பது சரி பிழை பார்த்து நடக்கக் கற்றுக்கொள்வற்கே அன்றி பெருமை பாராட்டுவதற்காக அல்ல என்பதை எந்த ஒரு பெற்றோர் தம் பிள்ளைகளுக்குச் சொல்லிக் கொடுத்து வளர்க்கிர்களோ, அவர்கள் தாம் செய்யும் செயல்களைச் சீர்தூக்கிப் பார்ப்பார்கள்.
தேவைகளை நிவர்திசெய்வதற்காகப் பாடுபடும் பெற்றோர்கள் அதன் அளவைப் பிள்ளைகளுக்குச் சொல்லிக்கொடுப்பதில்லை. ஏனெனில் அதன் அளவு என்ன என்பதை அவர்களே புரியாமல் இருப்பதே!
பிறரை மதிக்கக் கற்றுக் கொடுத்தல். இன்றைய எம் சமூகத்தில் குடும்பச் சூழல் எவ்வளவு ஆரோக்கியமாக இருக்கிறது என்று கேட்டால் உருப்படாமற் போய்க்கிடக்கிறது என்றே சொல்வேன். தந்தை தாயை மதிப்பதில்லை. பிள்ளைகள் பெற்றோரை மதிப்பதில்லை. வீடுகளில் குடும்ப உறவுகள் அனைத்துமே தேவையின் அடிப்படையிலேயே பிள்ளைகளுக்கு ஊட்டப்படுகின்றன.
ஒரு சாதாரண குடும்பத்திலேயே மாற்றப்பட வேண்டிய பண்புகள் ஏராளம் இருக்கும் போது எவ்வாறு நல்லறுவடையை நாம் எதிர்பார்க்க முடியும்?
-அன்பைக் கொடுத்து அன்பைப் பெறுங்கள் -பிறரை மதிக்கக் கற்றுக் கொடுங்கள்
-நன்றி சொல்லக் கற்றுக் கொடுங்கள்
-நேரம் தவறாமையைக் கற்றுக் கொடுங்கள்
-கடமை உணர்வை வளருங்கள்
-பிள்ளைகளுக்கு தமது கடமைகளைச் செய்யக் கற்றுக் கொடுங்கள்
-ஆரோக்கியமான பொழுதுபோக்கு விடயங்களில் பிள்ளைகளுக்கு ஈடுபாட்டையும், ஆர்வத்தையும் ஊட்டுங்கள்
எல்லாவற்றிற்கும் மேலாக நீங்கள் உங்கள் பிள்ளைகளுக்கு நல்ல ஒரு முன்னுதாரணமாக இருங்கள்.

நன்றி:):)
 

நிதனிபிரபு

Administrator
Staff member
அருமை சுகிர்தா. முதலில் வணக்கங்களைச் சொல்லவும் நன்றி நவிழவும் பழக்கவேண்டும். நான் இந்த நாட்டில் பார்த்து அதிசயிக்கும் பெரும் விடயம். நேரத்துக்கு ஏற்ப வணக்கம் சொல்லி ஒருவரை வரவேற்பது விடைபெறுகையில் இன்றைய நாளையோ அந்த வாரத்தையோ நன்றாக அமையச்சொல்லி விடைபெறுவது எல்லாம் எத்தனை அருமையான விடயம்?

அடுத்து, கணவனை மனைவி மதிப்பது மனைவியை கணவர் மதிப்பது எல்லாம் நம் குடும்பங்களில் என்ன நிலையில் இருக்கிறது? அப்பா பாவம், வேலைக்குப் போகிறார், நமக்காக கஷடப்படுகிறார், நமக்காகத் தியாகம் செய்கிறார் என்று அம்மா பிள்ளைகளுக்கும், அதே மாதிரி அப்பாக்கள், அம்மாக்களின் தியாகங்களை சேவைகளை அன்பைப் பிள்ளைகளுக்கும் எடுத்துரைக்க வேண்டும். அப்போதுதானே, குழந்தைகளும் பெற்றவர்களின் தியாகங்களை உணர்ந்துகொள்வார்கள். அதைவிடுத்து அம்மாவும் அப்பாவும் அவர்களுக்குள் நான் இதைச் செய்தேன் அதைச் செய்தேன் எண்டு பிடுங்குப்படுவதில் என்ன அர்த்தம் இருந்துவிடும். சண்டை பிடிக்க பிள்ளைகளும் கற்றுக்கொள்வார்கள். அவ்வளவுதான்.

இப்படி நிறைய.. இன்னும் பேசுவோம்.. பிள்ளை வளர்ப்பில் வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவது போல நிறைய விஷயங்களைக் கவனித்து நடக்கவேண்டும்.

மக்களே, வாசித்துவிட்டுப் போகாமல் நீங்களும் வாருங்கள். உங்கள் அனுபவங்களை கருத்துக்களை பகிர்ந்துகொள்ளுங்கள். ஆரோக்கியமாகக் கொண்டுபோவோம். கதைகளை மட்டுமே வாசிப்பதை விடுத்து, இவையும் நம் வாழ்வில் முக்கியமானவைதானே!
 

ரோசி கஜன்

Administrator
Staff member
வாங்கோ வாங்கோ ...சுகிர்தா !

அன்போடு இங்கே வரவேற்கின்றோம்.




போர் முடிந்து எத்தனையோ நவீனங்கள் எம்மைச் சுற்றி விரவிக்கிடந்தாலும், எம் சமூகம் எதை நோக்கிப் பயணிக்கிறது என்று கேட்டால் இலக்கற்றே என்று எண்ணத்தோன்றுகிறது.

இது அப்பழுக்கற்ற உண்மை . நம் சமூகம் என்றில்லை தமிழ் பேசும் சமூகமே இலக்கற்று சுயமிழந்து தான் போய்க்கொண்டிருக்கின்றது. கண்களைத் திறந்து கொண்டே புதைகுழிக்குள் விழுவதுபோலவே!

மாறி வரும் நடையுடை பாவனைகள் மட்டுமன்றி புதிது புதிதாக அறிமுகமாக்கிக் கொள்ளும் கொண்டாட்டங்கள், கேளிக்கைகள் எவ்வளவு? பிறப்பிலிருந்து இறப்புவரை எத்தனை எத்தனை வடிவங்களில் கேளிக்கைகைகள் முளைத்திருக்கின்றன!

எதிர்காலத் தலைமுறைக்கு நமக்கான அடையாளங்களாக இவையெல்லாமே அறிமுகம் செய்யப்பட்டுவிடுகையில் பிறகென்ன?

பணமிருக்கின்றதோ இல்லையோ ஒருவர் செய்துவிட்டால் போதும், மற்றவர்கள் கட்டாயமாக அதைச் செய்தே தீர வேண்டுமென்கின்ற மனப்பாங்கு இப்போதெல்லாம் கொரோனாவை விட, மிக மோசமாகப் பரவி வருகின்றது. அதன் ஆழமான தாக்கமறியாது அப்பாவியாகக் கேளிக்கைகளில் ஈடுபடுவோரை எந்த வகையில் சேர்ப்பது?

உண்மையில் அதிர்வோடு இப்படிப்பட்ட மனநிலையில் உள்ளவர்கள் கதைப்பதைக் கேட்டிருக்கிறேன் .
அவர்களுக்கு என்ன சொல்லியும் விளங்க வைக்க முடியுமா என்றால் இல்லை என்றுதான் சொல்லுவேன்.

அப்படியிருக்கையில், மாடாய் என்ன கழுதையாகவும் மாறத்தான் வேண்டும்!

தாயும் தகப்பனும் அப்படி ஓடித்த திரிந்தால் பிள்ளைகள் பாடு!

தாம் பெற்ற பிள்ளைகளை மற்றவர் தலைகளில் கட்டி விடுகிறார்கள். பிள்ளைப் பராமரிப்பிலிருந்து பாடசாலை ஆசிரியர், டியூசன் அப்படியே தாய் தகப்பனின் பொறுப்புகள் ஒவ்வொருவரிடமும் பிரித்துக்கொடுக்கப்பட்டு விடும் நிலை. அதற்குப் பணம் கொடுக்கிறார்கள் தான். பணத்துக்காக செய்யப்படும் வேலை எந்தளவில் இருக்கும்.

இப்பத்தைய பிள்ளைகளோ அடிப்படையிலேயே நல்ல புத்திசாலிகள்! மிகவும் கவனமாக வழிநடத்தினால் ஒவ்வொருவரும் இரத்தினங்கள்! அதற்குப் பெற்றவர்களுக்கே நேரமில்லை என்றால் மற்றவர்களுக்கு என்ன வந்தது சொல்லுங்கள் பார்ப்போம்!

இன்னொரு வகையினருக்கு என்னதான் வேலை செய்து பணத்தை ஈட்ட முடிந்தாலும் பிள்ளைகளுக்கு ஈடுகொடுக்கும் படிப்பறிவு குறைவாக இருக்கும் சந்தர்ப்பங்களும் உண்டு. அந்நிலையில் பிள்ளைகளின் கையோங்கி விடுகின்றது .அவர்கள் வைப்பதே சட்டமாகிவிடுகின்றது.

மற்றவர்களிடம் இருக்கையில் என் பிள்ளையிடம் இல்லாமலா என்று அறிமுகமாகும் கைபேசியும் etc etc அப்படி இயந்திரத்தோடு இயந்திரமாக இருக்கும் பிள்ளைகளை பார்த்துப் பெருமையாகச் சிரித்துக் கதைப்போரும் உண்டு..அறிவுக்கொழுந்துகள்!
படிப்பு என்றில்லை இப்போதெல்லாம் சிரிச்சாலும் இருந்தாலும் எழுந்தாலும் பெருமை பேசுவதற்காகவே ஒரு மார்க்கமாகச் செய்து வைக்கிறார்கள். பெரியவர்களே இப்படியென்றால் அவர்களைப் பார்த்து வளரும் பிள்ளைகள்?

களவுவெடாதே பொய் பேசாதே தொடங்கி எத்தனை செய்யாதேக்களை சொல்லி வளர்ப்பார்கள்!
இன்றோ, பெரியவர்களே இதையெல்லாம் போகிற போக்கில் வெகு இயல்பாகவே செய்கிறார்கள். அதை பிள்ளைகள் அறிந்து கொள்கின்றார்கள். இப்படியான சந்தர்ப்பங்களில் பெரியவர்களின் நியாயப்படுத்தல்களைப் பார்த்திருக்கும் இளையவர்கள் நாலடி அதிகமாகப் பாயவேண்டுமா இல்லையா சொல்லும் .

ஒருவர் மற்றவரை மதித்தல் என்பது வீட்டிலும் இல்லை வெளியிலும் இல்லை.

ஆரோக்கியாமான பொழுதுபோக்கு, உண்மையான அன்பு,அரவணைப்பு, பாசம், அக்கறை இப்போதைய பிள்ளைகளுக்கு அறிமுகம் வெகு வெகு குறைவு.

மன்னிப்பும் வருந்துதலும் தான் சுகிர்தா.
 

Sugiy

Member
மகிழ்ச்சி அக்கா:love:
உண்மை தான் அக்கா. பக்குவப்பட்ட நிலையில் இளையவர்களுக்கு முன்னுதாரணமாக இருக்கவேண்டிய ஒரு தலைமுறை பழையதை மறக்கமுடியாமலும், புதியவற்றைச் சரிவரக் கையாளத் தெரியாமலும் தள்ளாடுகிறது. மாற்றவேண்டியவை, மாறவேண்டியவை ஏராளம் உண்டு. தனியொருவராக தன்னளவில் தொடங்கினாலே போதும்!
எம்மவரிடம் இருக்கும் பெரிய ஒரு குறை என்னவென்றால், ஒரு விடயத்தை முடிவெடுத்துச் செய்யத் தொடங்கிவிட்டு, அதைக் கிரமமாக தொடர்ந்து நடைமுறைப்படுத்தவதில்லை.
ஒழங்கு என்பதில் முதலிடத்திலிருக்கவேண்டிய ஒரு பண்பு எம்மவரில் கடைநிலைக்குச் சென்றுவிடுவதால்தான் அதிகம் நாம் தோற்றுப் போகின்றோம்.

நன்றி அக்கா.
 

Gowri

Active member
சுகி, மிக நன்றாக இருந்தது உங்களின் கட்டுரை.. உண்மையில் இக்காலகட்டத்தில் மிகவும் தேவையான ஒரு விஷயம் பற்றி எழுதியுள்ளீர்கள். நாம் தவறு என்று உணராமல் செய்யும் சிறு சிறு விஷயங்கள், பிள்ளைகளின் வாழ்க்கையையே மாற்றிப்போடும் வல்லமை கொண்டவை என்று எத்தனை பேர் உணர்கிறோம். எல்லோரும் தங்கள் வாழ்க்கை, தங்களின் சுகம் மட்டுமே பார்த்து குழந்தைகளின் உணர்வுகளையும், வாழ்க்கையையும் இரண்டாம் பட்சம் ஆக்கிவிடுகிறார்கள்). உங்களின் கட்டுரையை படித்தபோது தான் நான் அறியாமல் செய்து கொண்டிருந்த தவறு ஒன்றை உணர்ந்தேன். இனி கவனமுடன் குழந்தைகளுக்கு உதாரணமாக இருக்க வேண்டும் என்று முடிவெடுத்துள்ளேன்.. நன்றி சுகி(நீங்கள் எனக்கு சமவயதினராக இருப்பீர் என்ற எண்ணத்தில் உங்களை பெயர் சொல்லி குறிப்பிட்டுள்ளேன், இல்லையென்றால் மன்னித்து விடுங்கள், அடுத்த முறையிலிருந்து அக்கா என்றே அழைக்கிறேன்).
 

Sugiy

Member
சுகி, மிக நன்றாக இருந்தது உங்களின் கட்டுரை.. உண்மையில் இக்காலகட்டத்தில் மிகவும் தேவையான ஒரு விஷயம் பற்றி எழுதியுள்ளீர்கள். நாம் தவறு என்று உணராமல் செய்யும் சிறு சிறு விஷயங்கள், பிள்ளைகளின் வாழ்க்கையையே மாற்றிப்போடும் வல்லமை கொண்டவை என்று எத்தனை பேர் உணர்கிறோம். எல்லோரும் தங்கள் வாழ்க்கை, தங்களின் சுகம் மட்டுமே பார்த்து குழந்தைகளின் உணர்வுகளையும், வாழ்க்கையையும் இரண்டாம் பட்சம் ஆக்கிவிடுகிறார்கள்). உங்களின் கட்டுரையை படித்தபோது தான் நான் அறியாமல் செய்து கொண்டிருந்த தவறு ஒன்றை உணர்ந்தேன். இனி கவனமுடன் குழந்தைகளுக்கு உதாரணமாக இருக்க வேண்டும் என்று முடிவெடுத்துள்ளேன்.. நன்றி சுகி(நீங்கள் எனக்கு சமவயதினராக இருப்பீர் என்ற எண்ணத்தில் உங்களை பெயர் சொல்லி குறிப்பிட்டுள்ளேன், இல்லையென்றால் மன்னித்து விடுங்கள், அடுத்த முறையிலிருந்து அக்கா என்றே அழைக்கிறேன்).
மிக்க மகிழ்ச்சி கௌரி :love:
\\உங்களின் கட்டுரையை படித்தபோது தான் நான் அறியாமல் செய்து கொண்டிருந்த தவறு ஒன்றை உணர்ந்தேன். இனி கவனமுடன் குழந்தைகளுக்கு உதாரணமாக இருக்க வேண்டும் என்று முடிவெடுத்துள்ளேன்..|| வாழ்த்துக்களும் நன்றியும்! என்றும் உங்கள் முடிவிலிருந்து மாறாமல் இருங்கள். அதுவே போதும்!

பெயர் சொல்லி அழைப்பதில் எந்தத் தவறும் இல்லை. இங்கெல்லாம், எமக்கு மேலதிகாரியாகப் பணிபுரிபவரையே நாங்கள் பெயர் சொல்லித்தான் அழைப்போம். மரியாதை மனதிலும், செயலிலும் இருந்தாலே போதும். அதேநேரம், உறவினர்களிடத்தில் உறவுமுறை சொல்லி அழைப்பதை நான் அதிகம் விரும்புவேன். :)

நட்போடு இணைந்திருப்போம்....
 
Top Bottom