பல்லவி - கதைத்திரி

Status
Not open for further replies.

நிதனிபிரபு

Administrator
Staff member
“இண்டைக்கு என்ன எண்டு தெரியா, அகோரப் பசி பசிக்குது.” என்றவன், மகனின் தட்டில் இருந்து ஒரு ரொட்டித் துண்டைத் தூக்கி வாயில் போட்டான்.

“நீங்க இப்பிடி நேரத்துக்கு வருவீங்க எண்டு தெரியாது. இல்லாட்டி முதலே செய்திருப்பன். பொறுங்க, இப்ப முடிஞ்சிடும்.” என்றவள், அதற்குள் சுட்டிருந்த அடுத்த ரொட்டியை இன்னொரு தட்டில் வைத்து, கறிகளையும் போட்டு அவனுக்குக் கொடுத்தாள்.

ரொட்டி சுடுவதில் கவனமாக இருந்தாலும், இப்படி அப்பாவும் மகனும் ஒன்றாக இருந்து சாப்பிடும் பொழுதுகள், பல்லவிக்கு மிகவுமே பிடிக்கும் என்பதில், அவர்களை ரசித்தாள். அடுப்பின் அருகிலேயே இருந்து, மொறுமொறுப்பாக அவள் சுட்டுத் தருவதை, அவனும் வயிறாறச் சாப்பிட்டான்.

உணவு முடிந்தபிறகும் அவன் அங்கேயே அமர்ந்து இருந்தான். விதுரன் உறக்கத்தை விழிகளில் நிரப்பி வைத்துக்கொண்டு, தகப்பனை ஒரு வழி செய்துகொண்டு இருந்தான். அதை பார்த்துவிட்டு, “நீங்க போய் டீவிய பாருங்கோ. நான் சாப்பிட்டு, எல்லாத்தையும் ஒதுக்கி வச்சிட்டு வாறன்.” என்றாள் அவள்.

“ஒவ்வொரு நாளும் தானே டீவி பாக்கிறம். நீ சாப்பிடு!” என்றவன், மகனை மடியில் போட்டுத் தட்டிக்கொடுத்தான்.

பார்வை ஒருமுறை சின்னவனிடம் சென்று வர, “நேற்று அங்க பெரியப்பா வீட்டை, முத்தத்தில விளையாடிக்கொண்டு இருந்த பிள்ளையைத் திடீரெண்டு பாத்தா காணேல்ல. நான் பயந்தே போய்ட்டன். தேடிக்கொண்டு போனா ரெண்டு வீடு தள்ளி இருக்கிற கிரவுண்ட்ல பெடியலோட விளையாடிக்கொண்டு நிக்கிறார். என்ன எண்டு கேட்டா அவே எல்லாரும் தன்ர பிரெண்ட்ஸாம், பயமில்லையாம் எண்டு கதை. எனக்குத் தெரிஞ்ச பிள்ளைகள் தான். எண்டாலும் அவருக்கு அது புது இடமெல்லா. இப்பிடி எல்லாம் போகக்கூடாது எண்டு நானும் சொன்னனான். நாளைக்கு நீங்களும் ஒருக்கா சொல்லிவிடுங்கோ.” என்று சொன்னாள் பல்லவி.

“அந்தளவுக்கு வளந்திட்டாரா ஆள்?” பார்வை மகனில் இருக்க, வியப்புடன் கேட்டான் அவன்.

“அதான். இப்பிடி சொல்லாம கொள்ளாம போறதோ எண்டு கேக்கிறன், சிரிச்சு சமாளிக்கிறார். நாளைக்கு உங்களையும் சமாளிக்கப் பாப்பார், விடாதீங்கோ.” என்றவளின் பேச்சில் மலர்ந்த புன்னகையோடு, மகனின் நெற்றியில் கேசத்தை ஒதுக்கிவிட்டு அழுத்தி முத்தமிட்டான் அவன்.

அவளால் அந்தக் காட்சியில் இருந்து கண்களை அகற்ற முடியவில்லை. அவளை எப்போதும் ஈர்ப்பது, மகன் மீதான அவனது பாசமும், அவனுக்கு ஒன்று என்றதும் அவன் கொள்கிற கோபமும் தானே. பார்த்தது பார்த்தபடி இருக்க, அவன் நிமிர்ந்து அவளைப் பார்த்தான்.

வேகமாகப் பார்வையை அகற்றிக்கொண்டவளுக்கு, தான் பிடிபட்டுக்கொண்டோம் என்று தெரிந்தது. அதன்பிறகு, அவள் நிமிராவே இல்லை. உணவை முடிப்பதில் கவனம் செலுத்தினாள்.

சுவரில் சாய்ந்தபடி, உறங்கிவிட்ட மகனை மடியில் வைத்துக்கொண்டு, அவளைத்தான் பார்த்தான் பாலமுரளி. குளித்து, ஒற்றைப் பின்னலோடு, முகத்துக்குப் பவுடர் போட்டு, குங்குமம் வைத்து, நெற்றியில் திருநீறு பூசியிருந்தாள். மனதுக்கு இதம் சேர்க்கும் மங்களம் நிறைந்த முகம் அவளுக்கு.

உணவை முடித்து, பாத்திரங்களை எடுத்துக்கொண்டு கழுவுவதற்காக அவள் வெளியே போகவும், அவனும் எழுந்து மகனோடு பாயில் சரிந்துகொண்டான்.

வேலைகளை முடித்துக்கொண்டு அறையை நோக்கி நடந்தாள் பல்லவி. “பாய இங்க கொண்டுவா.” என்றான் அவன், மகனின் உறக்கம் கலைந்துவிடாத மெல்லிய குரலில். அவளுக்கு முகம் சூடாக ஆரம்பித்தது. அதை மறைக்க முயன்றபடி விதுரனைக் கண்ணால் காட்டினாள். “பரவாயில்ல கொண்டுவா.” என்றான் அவன்.

அவள் தன்னுடைய பாயை விதுரனின் அருகில் விரிக்கப்போக, தன் பக்கத்தைக் காட்டினான் அவன். ஒருகணம் தனக்குள் வெட்கிவிட்டு அவனருகில் விரித்துவிட்டுப் படுத்தாள். மார்பில் இருந்த மகனை ஒரு கரம் வருடிக்கொடுத்துக்கொண்டிருக்க, மற்றக் கையால் அவளை இழுத்துத் தன்னுடன் சேர்த்துக்கொண்டான், பாலமுரளி.

கூச்சம், வெட்கம், தடுமாற்றம் என்று எல்லாம் கலந்து கட்டி அவளைத் தாக்கினாலும், நாம் மூவரும் ஒரு குடும்பம் என்று காட்டும் அவனுடைய அந்தச் செய்கை, மிகவும் பிடித்திருந்தது. அவன் கரத்திலிருந்து பரவிய வெம்மை தேகம் முழுவதையும் ஆக்கிரமிக்க, அவன் கையிலேயே தலையைச் சாய்த்து, விழிகளை மூடிக்கொண்டாள்.

அவளை அணைத்திருந்த அவன் கை தலையை வருடிக்கொடுக்கவும், விதுரனைப்போலவே தானும் அவன் மார்புக்குள் ஒன்றிக்கொள்ள வேண்டும் போல் எழுந்த உணர்வில், மிகவும் தடுமாறிப்போனாள் பல்லவி. இனிமையான ஆழ்ந்த அமைதியில் கழிந்த நொடிகளின் பின்னே, அவன் மற்றப் பக்கம் மகனைக் கிடத்துவது தெரிந்தது. அவள் இப்போதும் விழிகளை இறுக்கி மூடிக்கொண்டாள். “பூனை கண்ணை மூடினா உலகமே இருண்டுட்டுது எண்டு நினைக்குமாம்.” அவள் புறமாகச் சரிந்து காதோரமாகச் சொன்னான் அவன்.

படக்கென்று விழிகளைத் திறந்து அவனை முறைத்தாள் பல்லவி. “குளிக்கேக்க வடிவா இருந்தாய்.” என்றான் குறும்புச் சிரிப்புடன் கண்ணடித்து. அவள் முகம் குங்குமமாகச் சிவந்து போனது. அவன் கையைப் பிடித்துக் கிள்ளிவிட்டாள். பக்கத்தில் மகனும் இருந்ததில் சத்தமில்லாமல் சிரித்தான் பாலமுரளி.

“அதென்ன நான் பாக்காத நேரம் என்னை பாக்கிறது. நான் பாத்தா வேற எங்கயோ பாக்கிறது?” அவளை மூக்கோடு மூக்குரசும் தூரத்தில் வைத்துக் கேட்டான் அவன்.

“அது..”

“ம்.. சொல்லு அது?”

“விதுவ நீங்க பாசமா பாப்பீங்க. அதுதான்.”

“இப்ப என்ன, உன்னில நான் பாசமில்லை எண்டு சொல்லுறியா?”

“நீங்க என்னில பாசமா?” என்றாள் விழிகளைத் தழைத்துக்கொண்டு. மனம் மட்டும் அவன் பதிலுக்காக மிகுந்த ஆவலுடன் காத்திருந்தது.

அவனும் உடனேயே பதில் சொல்லிவிடவில்லை. அவள் கன்னத்தை வருடிக்கொடுத்தான். மெல்ல விழிகளை உயர்த்திக் கேள்வியாகப் பார்த்தாள் பல்லவி. “தம்பிக்காக எண்டு நினைச்சுத்தான் உன்னைக் கட்டினான். ஆனா இப்ப, நீ வேணும் எனக்குக் காலத்துக்கும். நான் உன்னில் பாசமா இல்லையா எண்டுறதை நீயே கண்டுபிடி.” என்றவன், அவளின் இதழ்களின் வழியே அதற்கான வழியை அவளுக்குக் காட்டினான்.
 

நிதனிபிரபு

Administrator
Staff member
அத்தியாயம் 25


அன்று, விதுரனை நேசரியில் விட்டுவிட்டு நேராக வீட்டுக்கு வந்தான், பாலமுரளி. இந்தக் கொஞ்ச நாட்களாக இவன் இப்படித்தான். மகன் இல்லாத பொழுதுகளை எப்படிப் பயன்படுத்திக்கொள்வது என்று, அவனிடம் தான் வகுப்புக்குப் போகவேண்டும்.

அவனை முறைத்துக்கொண்டு நின்றாள் அவள். வீட்டுக் கதவை அடைத்துவிட்டு வந்தான் அவன்.

“என்னடி அது முறைப்பு?” என்றவன், அவளை அப்படியே தூக்கிக்கொண்டு அறைக்கு நடந்தான்.

தன்னைக் கொண்டாடும் கணவனைக் கண்டு பல்லவிக்குச் சந்தோசம்தான். கூடவே வெட்கமும். “புதுசா இப்பிடி நடுவில நடுவில வந்தா பாக்கிற சனம் என்ன நினைக்கும்?”

“ஊர் சனத்துக்கு நான் எப்ப வாறன், எப்ப போறன் எண்டு பாக்கிறதுதான் வேலையா?” என்றவனின் உதடுகள், ஆசையோடு அவளின் கழுத்தோரத்தில் புதைந்தது.

“பாக்காமத்தான் சுதாக்கா என்னை ஓட்டித் தள்ளுறாவா?” என்று சிணுங்கியவளின் மனம் கணவனின் செய்கைகளில் மயங்கிற்று. அவளின் கைகள் தானாகவே அவன் பிடறிக் கேசத்துக்குள் நுழைந்து விளையாட ஆரம்பித்தது.

“அவளை விடு. என்னைப் பிடிச்சிருக்கா உனக்கு? முதல் எல்லாம் முகத்தைத் திருப்பிக்கொண்டு திரிவாய்.” அவனுக்கு எப்போதுமே அவளின் விரல்கள் தன் கேசத்துக்குள் விளையாடுவது பிடிக்கும். அதை அனுபவித்தபடி அவளின் முகம் பார்த்து வினவினான்.

“சொறி.. அது அந்த நேரம் மனதில நிறையக் குழப்பம்..” விழிகளில் மெல்லிய கலக்கம் சூழச் சொன்னாள் பல்லவி.

“ஏன்? இந்தக் கலியாணம் பிடிக்கேல்லையா?” அவள் கன்னம் வருடியபடி மென் குரலில் வினவினான் பாலமுரளி.

இல்லை என்று மறுத்துத் தலையை அசைத்தவள், “அது அப்ப.” என்றாள் வேகமாக.

சிறு முறுவல் அரும்பிற்று அவன் உதடுகளில்.

“என்னை?” பதில் தெரிந்தே கேட்டான்.

“உங்களையும் பிடிக்கேல்ல. அதுவும் அப்பதான்.” என்றாள் இப்போதும் வேகமாக.

அவன் முறுவல் விரிந்தது. “ரெண்டாவது கலியாணம் எண்டா?”

“ம்! ஆனா, ரெண்டாவது கலியாணம் எண்டுறதை விட, அந்த நிலைக்கு நான் ஏன் வந்தனான் எண்டுறது தான் கவலையாயிருந்தது.” என்றவளுக்கு அவன் தவறாகப் புரிந்துகொண்டு விடுவானோ என்று பயம் வந்தது. அதில், “பிளீஸ்! பிறகு இதையெல்லாம் நீங்க மனதுக்க ஏத்தி கவலைப் படக்கூடாது. நான் சொல்லுறது எல்லாம் அந்த நேரம் இருந்த என்ர மனநிலையத்தான்.” என்றவளின் பேச்சில் சிரிப்பு அரும்ப, “எனக்குத் தெரியுமடி. நீ சொல்லு!” என்றான் அவன்.

“உங்கட வீட்டிலயும் தான் கஷ்டம். அதுக்காக உங்கட தங்கச்சியாக்களை ரெண்டாவதா கட்டிக் குடுப்பீங்களா? இல்லதானே. அவே மாதிரித்தானே நானும். பிறகும் ஏன் எனக்கு மட்டும் இப்பிடி. காரணம் அந்த ஆள். அந்த ஆள் செய்த வேல. முதல் நாள் இரவு என்னைக் கட்டிப்பிடிச்சுக்கொண்டு படுத்த அம்மா, அடுத்தநாள் விடிய தூக்குல தொங்குறதை பாத்தா எப்பிடி இருக்கும் சொல்லுங்க?” என்றவளுக்கு விழிகள் கலங்கிக் போயிற்று.

“எனக்கு அம்மாவிலயும் தான் கோவம். முதலுமே அவவின்ர உழைப்பிலதான் எங்கட குடும்பம் வாழ்ந்தது. அவா நினைச்சிருந்தா அந்த ஆள இப்ப நான் தூக்கி எறிஞ்சமாதிரி எறிஞ்சுபோட்டு வாழ்ந்திருக்கலாம். அடுத்த நாலு வருசத்துல நானும் உழைக்க ஆரம்பிச்சிட்டன். சந்தோசம் இல்லாட்டியும் அவாவும் ஒரு நிம்மதியான வாழ்க்கையை வாழ்ந்திருப்பா. மானம், மரியாதை, ஊர் கேவலமா கதைக்கும் எண்டு யோசிச்சு அவா கண்டது என்ன? என்னை அனாதையா விட்டுட்டுப் போனது மட்டும் தான். அதுதான், அவாவே இல்லை எண்டேக்க அவா சேத்து வச்ச நகையும் எனக்கு வேண்டாம் எண்டு எல்லாத்தையும் அக்காக்குக் குடுத்திட்டன்.” என்றவளுக்குக் கண்ணீர் பெருகி வழிந்தது.

இப்படியான நேரங்களில் வார்த்தைகள் கைகொடுக்காது என்று அறிந்து, ஒன்றும் சொல்லாமல் அவளை மார்போடு சேர்த்தணைத்து, முதுகை வருடிக்கொடுத்தான். அவள் சற்றுத் தேறிக்கொண்டதும், “இனி அவரைப்பற்றி உன்னட்ட கதைக்க மாட்டன், சரியா?” என்றான் அவள் முகம் பார்த்து. ஆம் என்பதாகத் தலையை அசைத்தாள் அவள். “அதேமாதிரி, இந்தக் கலியாணத்தையோ என்னையோ என்னால மாத்தேலாது. ஆனா, உன்ன சந்தோசமா வச்சிருப்பன். என்னை நம்புறாய் தானே?” என்று கனிந்த குரலில், அவளின் கன்னங்களைத் தாங்கிக் கேட்டான் அவன்.

தெரியும் என்பதுபோல் தலையை அசைத்தவள் மென் முறுவலுடன் எம்பி அவன் கன்னத்தில் தன் இதழ்களை ஒற்றினாள்

மழைச்சாரலாக மனம் நனைத்த முத்தத்தில் சிறு வியப்புடன் புருவங்களை உயர்த்தினான் அவன். அவள் சிரிக்க, “கிஸ் இப்பிடித் தரக்கூடாது!” என்றவன் எப்படி என்று காட்டினான். அவளின் கை அவனின் சட்டையை இறுக்கிப் பற்றிக் கசக்கியது. அன்பைப் பரிமாற ஆரம்பித்த முத்தம், வேறு ஏதோ ஒன்றைக் கேட்டு நிற்க, அவள் தடுமாற, அவன் விடாமல் பற்ற என்று இருவரும் தடுமாறிச் சரிந்தனர். கடைசியில் அங்கிருந்த கொடியும் அறுந்து, அவர்களோடு சேர்ந்து விழுந்தது.

பயமும் சிரிப்புமாக அவனைக் இறுக்கிக் கட்டிக்கொண்டாள் பல்லவி.

“பயப்பிடாத! ஒண்டும் நடக்கேல்ல. உடுப்புக்கு மேலதான் விழுந்திருக்கிறம்.” என்றான் அவன்.

“கடவுளே, இனி இந்தக் கொடியை கட்டி, உடுப்பை எல்லாம் எடுத்துப்போட்டு.. உங்களோட நான் படுற பாடு இருக்கே!” என்று சலித்தவள், “எழும்புங்கோ!” என்றாள் அவனைத் தள்ளிவிட்டபடி.

“அத பிறகு செய். இப்ப பேசாம இரு!” என்றவன் அந்தக் கொடியில் கிடந்த உடைகளையே அவர்களுக்கு மெத்தையாக்கினான்.

மனங்கள் சங்கமித்த மிக மிக நிறைவான ஒரு உறவு. வியர்த்து வழிந்தாலும் விலக மனமற்று சேர்ந்தே இருந்தனர்.

“இந்த உடுப்பெல்லாம் திரும்ப நான் தோய்க்கோணும்!” பொய்ச் சலிப்புடன் சொன்னாள் அவள்.

“தண்ணி நான் அள்ளித்தாறன். நீ தோய்!” என்றான் அவன் தன் அணைப்பை இறுக்கியபடி. சுகமாக அவன் கைகளுக்குள் அடங்கி இருந்தவளுக்கு நீண்டநாட்களாக அவளுக்குள் இருக்கும் கேள்வி நினைவில் வந்தது. அவனிடம் எப்படிக் கேட்பது என்று யோசித்தாள்.

“என்ன?” அவள் முகத்தைப் பார்த்துவிட்டுக் கேட்டான் அவன்.

“அது.. ஏன் இப்பிடி கவனமா இருக்கிறீங்க? தம்பிய நான் பாசமா பாக்கமாட்டன் எண்டு பயமா?” அவன் முகம் பாராமல் மார்பு முடியை வருடியபடி கேட்டாள் பல்லவி.

“அதுவும் தான்!” என்றான் அவன். வேகமாக நிமிர்ந்து பார்த்தவளின் விழிகளில் பெரும் வலி இருந்தது. கண்ணீரும் சேர ஆரம்பித்தது.

“சொல்லுறத முழுசா கேட்டுட்டு அழு!” என்று அதட்டினான் அவன். “ஆரம்பம் உன்னைப்பற்றி எனக்கு என்ன தெரியும் சொல்லு? நான் அவனுக்கு அப்பா. அதைப்பற்றி எப்பிடி யோசிக்காம இருப்பன்? நம்பிக்கை இல்லாம இல்ல. ஆனாலும் ஒரு பயம். அதோட…” என்றவன் அவளை இன்னும் தன் நெருக்கத்தில் கொண்டுவந்து, “இப்பவே எனக்கும் உனக்கும் நடுவுல தம்பி இருக்கிறான். இன்னொரு பிள்ளையும் வந்தா நீயும் நானும் பாவம் இல்லையா?” என்றான் சன்னச் சிரிப்புடன்.

அவள் உதடு கடித்துப் பார்வையைத் தழைக்க, அந்த இதழ்களில் சற்று நேரம் மூழ்கி எழுந்தான் பாலமுரளி. மனதில் கிறக்கம் பிறக்க, அவன் மார்புக்குள் தன் முகத்தை மறைத்துக்கொண்டாள் பல்லவி. “மகன் மட்டும் காணும் எண்டு இருந்த நான், அம்மா எண்டுற ஒருத்தியப் பற்றி அறியாமலே வளந்த தம்பி, மனுசனோட அஞ்சு வயசுப் பிள்ளையையும் பாக்கவேண்டிய நீ எண்டு, மூண்டு பேருக்கும் இந்த வாழ்க்கை பழக, மூண்டுபேரும் நாங்க ஒரு குடும்பம் எண்டு நினைக்க அவகாசம் வேணும் தானே. அதுக்கிடையில இன்னொரு குழந்தை எண்டா அது மூண்டு பேரையும் பாதிக்கும். அதுதான் உடனே வேண்டாம் எண்டு நினைச்சன்.” என்றவன், “இதுல கொஞ்சமே கொஞ்சம் என்ர சுயநலமும் இருக்கு.” என்றான் அவள் காதுக்குள் கிசுகிசுப்பாக.

அதைக்கேட்டு, முகத்தை அவன் மார்புக்குள் இருந்து எடுக்காமலேயே அவன் கையில் கிள்ளிவிட்டாள் பல்லவி.

சந்தோசமாகச் சிரித்தான் பாலமுரளி; இனி அவன் வாழ்க்கையில் எந்தக் குறையும் இல்லை என்கிற மகிழ்வோடு!

முற்றும்.

 
Status
Not open for further replies.
Top Bottom