புணர்ச்சி விதி

நிதனிபிரபு

Administrator
Staff member

தமிழ்ச் சொற்களஞ்சியத்தில் ல், ள் ஆகிய மெய்யெழுத்துகளில் முடியும் சொற்கள் எண்ணற்று இருக்கின்றன. தமிழ் மொழியின் அடிப்படைச் சொற்கள் என்றும் தலையாய சொற்கள் என்றும் கருதத்தக்கவை அவை.

கல், கால், பால், விரல், மடல், கடல், ஆடல், பாடல் போன்ற சொற்களின் ஈற்றெழுத்து (கடைசி எழுத்து) ல் என்ற மெய்.

முள், வாள், கோள், திரள், தேள் போன்ற சொற்களின் ஈற்றெழுத்து ள் என்ற மெய்.
இவ்விரண்டு மெய்களில் முடியும் சொற்களோடு அடுத்து வரும் சொற்கள் சேர்கையில் ஒருவகைப் புணர்ச்சி நேரும்.

அத்தகைய சொற்றொடர்களின் புணர்ச்சியை (சொற்கள் சேர்வதை) லகர ளகர ஈற்றுப் புணர்ச்சி என்று இயல்படுத்தியிருக்கிறார்கள்.

அவற்றுக்குப் பல்வேறு விதிகளும் விதிவிலக்குகளும் இருப்பினும் எளிமையாய் விளங்கிக்கொள்ள ஒரு வழி இருக்கிறது.

ல் என்று முடியும் சொற்களை அடுத்து வல்லின எழுத்தில் தொடங்கும் சொல் வந்தால் ற் என்று மாறும்.
ள் என்று முடியும் சொற்களை அடுத்து வல்லின எழுத்தில் தொடங்கும் சொல் வந்தால் ட் என்று மாறும்.
இரண்டும் பெயர்ச்சொற்களாக இருந்தால் இவ்வாறு புணர்த்திக் கொள்ளலாம். பெயர்ச்சொல்லும் வினைச்சொல்லும் வந்தால் புணர்த்தாமல் இயல்பாக விட்டுவிட வேண்டும்.

பால் + குடம் என்பதில் இரண்டும் பெயர்ச்சொற்கள். பாற்குடம் என்று புணர்த்தலாம்.
பால் + குடி என்பதில் பெயரும் வினையுமாய் உள்ளன. பால் குடி என்று இயல்பாக விட்டுவிட வேண்டும்.

பாற்குடம், கற்குகை, சொற்புணர்ச்சி, கடற்காற்று
பொருட்குற்றம், இருட்பொழுது, முட்காடு, உட்பகுதி

- மகுடேசுவரன் அண்ணா -
 
Top Bottom