You must have JavaScript enabled in order to use this order form. Please enable JavaScript and then reload this page in order to continue.

மறைக்க வேண்டாமே - ப்ரீத்தி பவி

ரோசி கஜன்

Administrator
Staff member
இரு பாலாரும் பயிலும் அந்தப் பள்ளியின் இடைவேளை முடிந்து, அடுத்த வகுப்பு ஆரம்பமானதன் அடையாளமாக மணி ஒலிக்க, வானம்பாடிகளாய்ச் சுற்றித் திரிந்த மாணவர்கள் கூண்டுப் பறவைகளாய் வகுப்பறைக்குள் சென்று அமர்ந்து கொண்டனர்.

பத்தாம் வகுப்பின், அறிவியல் பாடப்பிரிவு நேரம் அது.

அறிவியல் ஆசிரியை கமலா சக ஆசிரியை ஒருவரிடம் பேசிக் கொண்டே வகுப்பறைக்கு வந்து கொண்டிருந்தார்.


“இன்னைக்கு பத்தாம் வகுப்புக்கு இனப்பெருக்க மண்டலம் பற்றிப் பாடம் எடுக்கணும் டீச்சர். என்னத்த அதைப் பத்தியெல்லாம் எடுக்குறது இதுங்களுக்கு. இந்தக் காலத்துப் பயலுகளுக்கும், புள்ளைகளுக்கும் ஒன்னும் தெரியாமலா இருக்கு. கண்டதையும் பார்த்து எல்லாத்தையும் தெரிஞ்சு வச்சுத்தான் இருக்குதுங்க. அதனால, பேசாம கேள்வி பதிலக் குறிச்சுக் கொடுத்துப் படிச்சுட்டு வரச் சொல்லலாம்னு இருக்கேன்.” என்கிறார்.

“ஆமா, டீச்சர். இதெல்லாம் நடத்தவே கொஞ்சம் சங்கடமாத் தான் இருக்கும். பொண்ணுங்க மட்டும் இருந்தா கூட பரவாயில்லை. பயலுகளும் இருக்கிறதால நீங்க இந்தப் பாடத்துல கேள்வி பதிலை மட்டும் குறிச்சுக் கொடுத்துருங்க.” என கமலாவின் பேச்சை ஆமோதித்துப் பேசினார், அந்த ஆசிரியையும்.

இருவரின் உரையாடலையும் கவனித்து விட்டு, அவர்களின் அருகே வந்த ஆங்கில ஆசிரியை பிருந்தா, “கமலா டீச்சர், உங்களுக்கு ஆட்சேபனை எதுவும் இல்லையினா, இனப்பெருக்கமண்டலம் குறித்த பாடத்தை நான் எடுக்கட்டுமா?” என்று கேட்டார்.

“அறிவியல் பாடம் எடுக்குற எனக்கே ஒரு மாதிரி இருக்கு. நீ எப்படி இந்த வகுப்பை எடுப்ப?” என்று சந்தேகத்துடன் அவளைப் பார்க்க,

“எனக்கு இந்த வகுப்பு ஓய்வு நேரம் தான், அதனால உங்கள் பாடத்தை நான் எடுக்கிறேன். எப்படி எடுக்கிறேன் என வந்து பாருங்கள்.” என்று, அவரையும் அழைத்துக் கொண்டு பத்தாம் வகுப்பிற்குள் நுழைந்தார் பிருந்தா.

கமலா கடைசி இருக்கையில் சென்று அமர்ந்து விட, மாணவர்களின் மரியாதைக்குப் பதில் மரியாதை செய்த பிருந்தா, வகுப்பைத் தொடங்கினார்.

“ஹாய் ஸ்டூடன்ட்ஸ், இன்னைக்கு நாம பார்க்கப் போற பாடம் என்னனா? நீங்களே சொல்லுங்க பார்ப்போம்.”

“உழுவதற்குத் தேவை கலப்பை.
பொருள் வாங்கத் தேவை கைப்பை.
உயிரினங்கள் பிறக்கத் தேவை
இந்தப்பை. அது என்னப் பை?” என்று கேட்கவும், சில மாணவர்களும் மாணவிகளும் தயக்கத்துடன், “கருப்பை” என்றனர்.


“வெரிகுட்! சரியாச் சொன்னீங்க. இப்ப அந்தக் கருப்பையைப் பற்றி விரிவாப் பார்க்கலாமா?” என்றபடி கரும்பலகையில் கருப்பையை வரைந்தார்.

“ஸ்டூடண்ட்ஸ், கருப்பையைப் பத்தித் தெரிஞ்சுக்கிறதுல நாம தயங்க வேணாம். நம்ம உடல்ல இருக்கிற மற்ற மண்டலங்களைப் போல தான் இனப்பெருக்க மண்டலமும். அதனால இதைப்பற்றித் தெரிந்து கொள்வதில் உங்களுக்குத் தயக்கம் வேண்டாம். நா பாடம் எடுக்கும் போது எந்தவித சந்தேகமா இருந்தாலும், தயக்கமில்லாம கேட்கலாம். அது பெண்களாக இருந்தாலும் சரி, ஆண்களாக இருந்தாலும் சரி.” என்றவுடன், ஒரு சிலர் தயக்கத்துடனும் ஒரு சிலர் ஆர்வமாகவும் பாடத்தைக் கவனிக்க ஆரம்பித்தனர்.

“கருப்பை என்பது உயிரினங்கள் அனைத்திலும், பெண் இனத்திற்குக் கடவுள் கொடுத்திருக்கும் ஒரு வரம் எனலாம். இப்பொழுது நாம் பார்ப்பது பெண்ணின் கருப்பை.
கருப்பை, நமது உள்ளங்கை அளவே கொண்டு, பம்பர வடிவில் பெண்ணுறுப்புக்கு அருகே அமைந்துள்ளது. கீழ்ப்பகுதி குறுகியும், மேற்பகுதி அகலமாகவும் காணப்படுகிறது. கருப்பையின் இரண்டு பக்கங்களிலும் சினை முட்டைகள் உள்ளன. இந்தச் சினை முட்டைகள் வளர்ச்சி அடைந்து முதிர்வு பெறுதலே பெண்கள் ‘பூப்படைதல்’ என்று கூறப்படுகிறது.

“பூப்படைந்த காலம் முதல் இந்த இரண்டு முட்டைகளும், ஒன்று மாற்றி ஒன்றாக ஒவ்வொரு மாதமும் வெடித்து, கருக்குழாய் வழியே வந்து பிறப்புறுப்பு வாயிலாக உதிரமாக வெளியேறுகிறது. இதனையே ‘மாதவிடாய்’ என்கிறோம். இந்த மாதவிடாய் காலங்களில் ஏற்படும் உதிரப் போக்கினால் பெண்களுக்கு வாந்தி, தலைவலி, வயிற்று வலி, அதிகப்படியான மன அழுத்தம் ஏற்படுகிறது. ஹார்மோன் மாற்றத்தால் உடல் அளவில் மாற்றமும், மனதளவில் மாற்றமும் ஏற்படும்.

“உங்களின் தாய், தமக்கை, பாட்டி மட்டுமல்லாது உங்கள் உடன் பயிலும் தோழிகளும், உங்களைச் சுற்றியுள்ள ஒவ்வொரு பெண்களும் இந்த வேதனைகளைச் சுமந்து கொண்டு தான் வாழ்கின்றனர்.

“அடுத்ததாக பிரசவ வலி. கருப்பையில் கரு உருவானது முதல், பத்து மாதங்களும் வாந்தி, மயக்கம், பிரசவம் குறித்த பயம் இவற்றுடனே பெண்கள் வலம் வருகின்றனர். பிரசவத்தின் போது ஏற்படும் வலியானது சுமார் 200 எழும்புகள் ஒரே நேரத்தில் உடையக் கூடிய வலிக்கு ஒப்பானது ஆகும். இவ்வளவு வலிகளைத் தாங்கிக் கொண்டு தான் நம் தாய்மார்கள் நம்மை ஈன்றெடுக்கிறார்கள். அப்பேர்ப்பட்ட பிறப்புறுப்பைக் கேவலப்படுத்துமாறு செய்யும் வன்முறைகள் நம் தாயை நாமே கேவலப்படுத்துவதற்குச் சமம்.

கர்ப்ப காலத்தில் ஏற்படும் ஹார்மோன் மாற்றத்தால், “ப்ரோலேக்டின்” எனும் சுரப்பி மார்பகங்களில் சுரந்து தாய்ப்பாலை உற்பத்தி செய்கிறது. தனது உதிரத்தைப் பாலாக மாற்றி நமக்கு ஊட்டுகிறார் அன்னை. தாய்ப்பால் கொடுப்பதை நிறுத்தும் சமயத்தில், மார்பகங்களில் பால் கட்டிக் கொண்டு, மரண வேதனையை அனுபவிக்கிறாள். அத்தகைய மார்பகங்களை அவதூறாகவும், அசிங்கமாகவும் சித்தரிப்பது ஈனச்செயலிலும் மோசமான செயல். நம்மை ஈன்ற அன்னை மட்டும் அன்னை அல்ல. நம் உடன் பிறந்த, பிறக்காத சகோதரிகளும், குழந்தைகளை ஈன்ற, ஈன்றெடுக்கப் போகிற அன்னைகளே.”


பிருந்தாவின் ஒவ்வொரு விளக்கத்தையும் மாணவர்கள் உன்னிப்பாகக் கவனித்துக் கொண்டிருந்தனர். ஊசி விழுந்தால் கேட்கும் அளவிற்கு அங்கே அமைதி நிலவியது.

“காலம் முழுவதும் தங்கள் உடல் அளவிலும், வெளியே தெரியாமல் மனதளவிலும் உயிர் வேதனையைச் சுமக்கும் பெண்களை, அவர்களின் அங்கங்களையும், அந்தரங்கங்களையும் கொண்டு மிரட்டுவது உயிரை வதைப்பதை விடக் கொடூரமான செயல். வெளியே காணும் பெண்களின் அங்கங்களைக் கொண்டு அவர்களை எடை போடாமல், மனதளவில் அவர்களின் வேதனைகளைக் களைவதில் எப்பொழுதும் துணை இருங்கள். திராவகத்தை வீசி அவர்களின் அங்கங்களையும், வீடியோக்களைக் காட்டி அவர்களின் உள்ளங்களையும் கொல்லாமல் கொல்லாதீர்கள். அவர்களின் குடும்பங்களைக் கொல்லும் மனித எமன்களாக மாறாதீர்கள். உங்கள் தாய் தங்கைகளைப் போலவே அனைத்துப் பெண்களையும் பாவியுங்கள். அப்பொழுது தான் ஆணில் பாதி பெண் என்ற வார்த்தைக்கு அர்த்தம் இருக்கும்.” என்று மாணவர்களைப் பார்த்துக் கூற,

“நிச்சயமாகச் செய்வோம் டீச்சர்.” என மாணவர்கள் குரல் எழுப்பினர்.


“ஓகே ஸ்டூடண்ட்ஸ். இந்தப் பாடப்பகுதி நிறைவடைந்தது. பிறகு ஒரு வாய்ப்புக் கிடைத்தால் மீண்டும் சந்திக்கலாம்.” என்றவாறு பிருந்தா கிளம்ப, மாணவர்கள் எழுந்து உற்சாகமாகக் கரவொலி எழுப்பினர். கமலாவும் சேர்ந்து கரவொலி எழுப்பினார்.


கமலாவிடம் வந்த பிருந்தா, “பாடப் புத்தகத்தில் இனப்பெருக்கம் குறித்த பகுதிகளை பாடமாகக் கொடுப்பது அவற்றைப் பற்றிய அடிப்படை அறிவை மாணவர்கள் பெறுவதற்காகத் தான். அடிப்படை அறிவு முறையாக இருந்தால் தானே பாலியல் குறித்து முறையான அறிவை அவர்கள் பெற முடியும். இந்த விடலைப் பருவம் என்பது ஆர்வமாக எதையேனும் தெரிந்து கொள்ள வேண்டும் என துடிக்கும் பருவம். அப்படித் தான் இந்தப் பாலியல் கல்வியும். நாம் மூடி மறைத்துக் கொண்டிருப்பதால், அதில் என்ன இருக்கும் என்கிற ஆர்வம் அதிகமாக இருக்கும். அவர்களின் வயதுக்குறிய இயல்பு அது. அப்படி அவர்கள் வலைதளங்கள் போன்ற ஆபத்தான இடங்களில் தகவல்களைத் தேடும் போது அவர்களின் வயதுக்கு மீறிய வக்கிரமான தகவல்கள் கிடைக்கின்றன. ஆகையால், ஆரம்பத்திலேயே அவர்களின் மனதில் தவறான புரிதல் ஏற்பட்டு விடுகிறது.
நல்ல விதைகளை நன்கு பராமரித்தால் தானே வளர்ந்து நமக்கு நல்ல பலன்களைக் கொடுக்கும். மனிதன் உயிர்வொளி பெறுவது கருவறை என்றால், அறிவொளி பெறுவது வகுப்பறையில் தானே! ஆகவே அவர்களின் அறிவை நல்ல வழியில் கொண்டு செல்லும் உரிமையும் கடமையும் பெற்றோர்களை விட நமக்கு அதிகம். இனி இவ்வாறு செய்யாதீர்கள்!” என்று பிருந்தா சொல்ல,



“சாரி பிருந்தா. இனி இப்படிச் செய்ய மாட்டேன். இனி வரும் காலங்களில் இந்தப் பாடப்பகுதிகளைச் சிறப்பாக நடத்துவேன்.” என்று கமலா கூற, ஒரு புன்னகையுடன் விடை பெற்றார் பிருந்தா.

பாலியல் கல்வி என்பது கொலைக் குற்றம் அல்லவே. முறையான அறிவை வழங்கும் போது, தவறான வழி நடத்தல்கள் குறையும். ஆகவே, அதன் ஆரம்பமாகப் பள்ளிகளில் ஆரம்பப் படிகளை எடுத்து வைக்கலாம். தயவு செய்து மாணவர்களிடம் இது பற்றி மறைக்க வேண்டாமே!
 
Top Bottom