மீண்டுமொரு தேத்தண்ணி வித் நிதா

நிதனிபிரபு

Administrator
Staff member

அடுத்த கேள்வி: உண்மையில் மிக அருமையான கேள்வி. கேட்டவருக்கு மிகுந்த நன்றி!
எழுத்து துறையில் இருக்குறதில் உங்க பலம் என்ன பலவீனம் என்ன Sis?

நீங்க கேட்ட பிறகுதான் பலவீனம் என்ன என்று யோசித்துப் பார்க்கிறேன். அப்படி எதுவுமே எனக்குத் தோன்ற இல்ல. இந்த எழுத்தினால் கிடைக்கும் ஆழ்ந்த அன்பை, மிக நெகிழ்ச்சியான தருணங்களை உண்மையாகவே எனக்குக் கையாலத் தெரியாது. அதைப் பலகீனத்தில் சேர்க்கலாமா தெரியாது.

என்னைக் கோபப்படுத்திப் பார்த்தால் அதை நன்றாகவே ஹாண்டில் செய்வேன். அல்லது, ஒரு கடினமான சூழ்நிலை வந்தால் கூட அதை நிதானமாகக் கையாளப் பிடிக்கும். அதை எப்படிக் கையாள்கிறேன் என்று என்னை நானே கவனிப்பேன். அதைவிட, அதை நல்ல முறையில் நான் கையாண்டுவிட்டால் அதுவே எனக்கு மிகப்பெரிய சந்தோசத்தைத் தரும்.
ஆனால், இந்த அன்பைக் கண்டால் என்ன செய்வது என்று தெரியாமல் திணறி நிற்பேன். எங்கேயாவது ஓடி ஒளிந்துவிடலாமா என்கிற அளவுக்கெல்லாம் யோசிப்பேன்.

அளவுக்கதிகமான சந்தோசத்தில் அவர்களைச் சங்கடப்படுத்தும் விதமாக எதையும் கதைத்துவிடவும் கூடாது, அதே நேரம் அவர்களின் அன்புக்கு இணையான அன்பை நாமும் குடுக்க வேண்டும். இல்லையானால் அதுவே அவர்களின் மனத்தை நோகடிக்கலாம். அதனால் அன்பைக் கண்டால் நான் கொஞ்சம் பயப்படுவேன்.

இது என் பலவீனமே தவிர எழுத்துத் துறையில் இருப்பதால் வந்த பலவீனமா என்று சொல்லத் தெரிய இல்ல.

எழுத்துத் துறையில் இருப்பதால் வரும் பலம்: நிறைய உண்டு. என் கதைகளை வாசிக்கும் நபர்களோடு சத்தமே இல்லாமல் என் எழுத்தின் மூலம் நான் உரையாடிக்கொண்டு இருக்கிறேன். யோசித்துப் பாருங்களேன், அது எவ்வளவு பெரிய விசயம் என்று. அதை மிகப்பெரிய பலமாக, ஒரு பாக்கியமாகக் கருதுகிறேன். அதனாலேயே அவர்களோடு கவனமாக உரையாட வேண்டும் என்கிற பொறுப்பும் வந்திருக்கிறது.

என் கதைகளும் ஜனரஞ்சக வகைக்குள் அடங்குபவை. பொழுதுபோக்கு என்பதற்குள்ளும் வரும். அதே நேரம் யதார்த்த வாழ்வியலையும் பேசும். அப்படி இருக்கையில் அந்தக் கதைக்குள் வாசிக்கிற நபருக்குத் தேவையான ஏதோ ஒன்றைச் சொல்லிவிட வேண்டும் என்பதில் மிகுந்த முனைப்போடு இருப்பேன். அவரை ஏதோ ஒன்றைப் பற்றி யோசிக்க வைக்க வேண்டும். அது அவரின் வாழ்வின் முன்னேற்றத்துக்கான ஒன்றாக இருக்கவும் வேண்டும்.

அப்படிப் பார்க்கையில் என் எழுத்து யார் யாரையோ எல்லாம் யோசிக்க வைக்கிறது. அது அடுத்த பலம்.

அடுத்தது எழுதுவதுபோல் நானும் இருக்க வேண்டும் என்பதில் மிகுந்த கவனமாக இருக்கிறேன். என் வாழ்க்கையை, என் சிந்தனைகளை, நான் நடக்கும் முறைகளை நானே கவனிக்க ஆரம்பித்திருக்கிறேன். ஊருக்குத்தான் உபதேசம் என்று இருந்துவிட கூடாது இல்லையா? அந்த நினைப்பே என் வாழ்க்கையை நெறிப்படுத்துகிறது. இது அடுத்த பலம்.
அடுத்ததாகக் குடும்ப நாவல்கள் என்பதையும் தாண்டி
நிறைய வாசிக்க ஆரம்பித்திருக்கிறேன். அது என் சிந்தனைப் பரப்பைப் பெரிதாக்கி இருக்கிறது. நான் சில விசயங்களைப் பார்க்கும் கோணத்தை மாற்றி இருக்கிறது. அது உண்மையில் இந்த எழுத்தினால் உண்டான மாற்றமும் என் மீதான என் கணிப்பை இன்னுமின்னும் உயரக் கொண்டுபோவதை மிகப்பெரிய பலமாக நினைக்கிறேன்.
இவையெல்லாம் எழுத்துத் துறையில் இருப்பதால் எனக்கு உண்டான பலங்கள்.
 

நிதனிபிரபு

Administrator
Staff member
அடுத்த கேள்வி: இதைக் கேள்வி என்று சொல்வதைவிட அன்பின் பகிர்தல் என்றுதான் சொல்ல வேண்டும்.

அன்பின் நிதாவுக்கு, இந்;திய எழுத்தாளர்களைத் தேடிவாசித்த நான் இன்று எம்மண்ணின் எழுத்துக்களில் அதன் வீரியத்தில் போலியில்லா யதார்த்தத்தில் கட்டப்பட்டிருக்கின்றேன். உங்கள் எழுத்துநடை யாவரையும் ஈர்க்கவல்லது. கதைகளின் காலத்துக்குள் எம்மையும் வாழவைக்கும் திறமை உங்களுக்குண்டு. நான்வாசித்த உங்கள் கதைகள் எல்லாம் வெறும் கதைகள் என்று என்னால் எண்ண முடிவதில்லை. எங்கோ நாம் சந்தித்த, வாசித்த, கேட்ட நிகழ்வுகளை மீளவும் முழுமையாக வாசிக்கும் உணர்வே ஏற்படும். உங்கள் கதைமாந்தர்களின் குணஇயல்புகள் எம்மண்மணம் மாறாதவை. உங்கள் எழுத்துப்பணி மென்மேலும் சிறக்கட்டும். நான் ஒரு அமைதியான வாசிப்பாளர். ஆனாலும் இதை உங்களுடன் பகிரவேண்டும் என உந்துதலில் எழுதிவிட்டேன்.

உங்களின் விழிப்பே மிகுந்த நெகிழ்ச்சியைத் தந்திருக்கிறது. உங்கள் அன்புக்கும் பாராட்டுக்கும் மனம் நிறைந்த நன்றி.

என் எழுத்துப்பயணம், வாசிப்புப் பயணம் இரண்டுமே ரமணி அம்மாவில் ஆரம்பித்ததுதான். இந்தியாவைப் பற்றி நமக்கு எதுவுமே தெரியாது. ஆனாலும் அப்படி நாம் உணர்ந்ததில்லை. காரணம், படங்கள், நாடகங்கள், கதைகள் மூலம் உண்டான நெருக்கம். இந்தியாவும், அதன் நகரங்களும், கலாசாரம், மனிதர்கள் எல்லோருமே என்னவோ நம் அயலட்டை மனிதர் போன்ற உணர்வையே தரும்.

அதுவே எம் மண்ணைப் பற்றி, எம்மைப் பற்றி, எம் தேசத்து வாழ்வியலைப் பற்றி நானும் பேச வேண்டும் என்கிற ஆசையைத் தோற்றுவித்திருந்தது. அதன் வடிகாலாகத்தான் என் நாவல்கள் வருகின்றன.

அது உங்களையும் கவர்ந்ததால் மிகுந்த மகிழ்ச்சி.
//உங்கள் எழுத்துநடை யாவரையும் ஈர்க்கவல்லது. கதைகளின் காலத்துக்குள் எம்மையும் வாழவைக்கும் திறமை உங்களுக்குண்டு. நான்வாசித்த உங்கள் கதைகள் எல்லாம் வெறும் கதைகள் என்று என்னால் எண்ண முடிவதில்லை. எங்கோ நாம் சந்தித்த, வாசித்த, கேட்ட நிகழ்வுகளை மீளவும் முழுமையாக வாசிக்கும் உணர்வே ஏற்படும். உங்கள் கதைமாந்தர்களின் குணஇயல்புகள் எம்மண்மணம் மாறாதவை. // இந்த வார்த்தைகளுக்கு இதயம் நிறைந்த நன்றி.
 

நிதனிபிரபு

Administrator
Staff member
ஒரு கல்லில் இரு மாங்காய்கள்: வரலாற்று நாவல்கள் எழுதும் ஆர்வம் உண்டா சகோதரி? ஒரு கதை எழுதி முடித்துவிட்டு அடுத்த கதை எழுதுகையில் அதே மனநிலையில் இருப்பீர்களா? அல்லது அக்கதையின் தரத்தை உயர்த்த வேண்டும் என்ற மனநிலைக்குச் சென்று அதற்குரிய வகையில் உங்களைத் தயார் படுத்திவிட்டு எழுத ஆரம்பிப்பீர்களா?

அன்புச் சகோதரிக்கு வணக்கம். ஹாஹா…

வரலாற்று நாவல்கள் எழுதும் ஆர்வம் உண்டா சகோதரி?

உண்டு. ஆனால், அதற்கு நான் சரி வருவேனா என்கிற பெரும் சந்தேகமும் உண்டு. உண்மையில் எழுத விருப்பம். அதற்கு நிறைய தேடல் முக்கியம், தகவல்கள் சேகரிப்பது முக்கியம். இதெல்லாம் நடந்தால் நிச்சயம் எழுதுவேன்.

ஒரு கதை எழுதி முடித்துவிட்டு அடுத்த கதை எழுதுகையில் அதே மனநிலையில் இருப்பீர்களா? அல்லது அக்கதையின் தரத்தை உயர்த்த வேண்டும் என்ற மனநிலைக்குச் சென்று அதற்குரிய வகையில் உங்களைத் தயார் படுத்திவிட்டு எழுத ஆரம்பிப்பீர்களா?
என்ன கேக்கிறீங்க எண்டு எனக்கு வடிவான விளங்க இல்லை அக்கா. நீங்க கேள்வி கேட்டாலே நான் குழம்பி போறன் போல ஹாஹா…

ஒரு கதை எழுதி முடித்துவிட்டு அடுத்த கதை எழுதுகையில் அதே மனநிலையில் இருப்பீர்களா?

இல்லை, எழுதி முடித்த கதையின்போது என்ன தவறெல்லாம் எனக்குள் நடந்தது என்று பார்த்து அடுத்த கதையில் அது நடக்காமல் இருக்க முயற்சி செய்வன். ஆனா, அந்தக் கதையில புதுசா நாலு சிக்கல் வந்து நிக்கும். ஹாஹா…

அல்லது அக்கதையின் தரத்தை உயர்த்த வேண்டும் என்ற மனநிலைக்குச் சென்று அதற்குரிய வகையில் உங்களைத் தயார் படுத்திவிட்டு எழுத ஆரம்பிப்பீர்களா?
கதையின் தரம் பற்றிய கவனம் எப்போதும் இருக்கும். இப்ப புதுசா நினைக்கிறது, தரத்தோடு கூடவே கதையை ஒழுங்காகத் திட்டமிட்டு, திட்டமிட்டது போலவே எழுதி முடிக்க வேணும் எண்டு. அடுத்த கதையில அது நடக்குதா எண்டு பாப்பம்.
 

நிதனிபிரபு

Administrator
Staff member
நாவல்கள் எழுதுகையில் ஏதோவொரு கணத்தில் நாவல்களின் எண்ணிக்கையில் உங்கள் கவனம் சென்றுள்ளதா? அல்லது தரத்தில் மட்டுமே கவனம் செலுத்தி மினக்கடுதலோடு எழுதுவீர்களா? உங்கள் மினக்கடுதல் எந்தவகையில் இருக்கும் என்று எங்களோடு பகிர்ந்து கொள்ள முடியுமா?

நாவல்கள் எழுதுகையில் ஏதோவொரு கணத்தில் நாவல்களின் எண்ணிக்கையில் உங்கள் கவனம் சென்றுள்ளதா? இப்போதெல்லாம் அடிக்கடி அதைப் பற்றி யோசிக்கிறேன்தான். எண்ணிக்கை பெரிதாக இருக்க வேணும் என்று இல்ல. ஆனால், ஒரே நாவலில் அதிக நாள்களைச் செலவழிக்காமல் அதை இன்னொரு நாவலுக்காகச் செலவு செய்திருக்கலாமோ என்று தோன்றும். காரணம், நம் சிந்தனையின் வேகத்துக்கு, நமக்குள் புதிது புதிதாகத் தோன்றும் கருக்களின் வேகத்துக்கு என்னால் கதைகளை முடிக்க முடியாம இருக்கு. அதனால் நினைப்பதுண்டு.

அல்லது தரத்தில் மட்டுமே கவனம் செலுத்தி மினக்கடுத்தலோடு எழுதுவீர்களா?
தரத்தில் எப்போதுமே கவனமுண்டு. அதை எதற்காகவும் தவிர்க்க மாட்டேன். அதைத் தவிர்த்து என்னால் எழுதவும் முடியாது. ஆனால், தரத்தைக் கவனிக்கிறேன் என்று எழுதும் நாள்களை நீட்டிப்பதில் உடன்பாடில்லை. தரத்தோடு சேர்த்து எழுதும் வேகத்தைக் கூட்ட வேண்டும் என்கிற பெருவிருப்பம் உண்டு.

உங்கள் மினக்கடுதல் எந்தவகையில் இருக்கும் என்று எங்களோடு பகிர்ந்து கொள்ள முடியுமா?

ஹாஹா…. இதுக்கு உண்மையா எப்பிடி பதில் சொல்லுறது என்று தெரியேல்லையே சகோதரி. முடிந்தவரையில் என் மெனக்கெடல் யதார்த்தத்தை மீறக் கூடாது என்பதில் இருக்கும். ஏதோ ஒன்றை பிரயோசனமாகச் சொல்ல வேண்டும் என்பதில் இருக்கும். இந்தக் கதை மூலம் என்ன சொல்கிறேன் என்பதில் இருக்கும். எல்லாவற்றையும் விட எனக்குப் பிடித்த மாதிரி, நான் நினைத்த மாதிரிக் கதை வர வேண்டும் என்பதில் மிகவும் மினக்கெடுவேன். அவ்வ்வ்வ்வ்…
 
Top Bottom