• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

ரொபின்சனும் நானும்!

ரோசி கஜன்

Administrator
Staff member
1542053885991.png


என் பல்கலைக் காலம் எவ்வளவோ இடர்பாடுகள் நிறைந்ததே என்றாலும், இன்றும், இருபத்தியைந்து வருடங்கள் உருண்ட பின்னும், அழகான முறுவலை பூசிச் செல்லும் மறக்க முடியாத தருணங்கள் பல பல, உண்டு.

அவற்றில் சிலதுகளை, என் அனுபவங்களை, அப்பப்போ பகிர்ந்து கொள்கிறேன்.



ரொபின்சனும் நானும்!
‘சைக்கிள்’, நம்மோடு மிக மிக நெருக்கமானது இல்லையா?

அந்தக் காலத்தில் என்று சொல்ல வேண்டுமோ!

யாழில் இப்போ எல்லாம் ஸ்கூட்டியாமே!

எது எப்படியோ, அந்தக் காலம் என்று சொல்லி நம்மை நாமே வயதில் ஏற்றிக் காட்ட வேண்டாமே!

விஷயத்திற்கு வாறேன்.

உயர்தர வகுப்பில்(பதினொராவது) காலடி வைத்த போது புத்தம் புதிதாகக் கிடைத்தது, சைக்கிள் ஒன்று!

அதுவரை நடராஜா தான். அல்லது நண்பிகளுக்கு சுமை! அது வேறு கதை.

இப்படியிருக்கையில், பல்கலை முதல் வருட ஆரம்பத்தில் ஒருநாள் ‘சைக்கில் ரேஸ்’ நடக்கவிருப்பதாகச் சொன்னார்கள். முதல் வருட சார்பில், பெண்பிள்ளைகளில் யார் கலந்து கொள்கிறீர்கள் என்று கேட்டார்கள் போல!

யாரவது கலந்து கொள்ளவேணும் என்று எதுவும் சொன்னார்களோ…எதுவோ ஒன்று.

நான் எப்படிச் சம்மதித்தேன்? தன்னம்பிக்கை இருக்கவேணும். அதற்காக?

இதை ஏன் சொல்கிறேன் என்றால், அன்று நடக்கவிருந்த போட்டியில் நான் தான் முதலிடம் வருவேன் என்ற அசையாத நம்பிக்கையில் தான் சம்மதித்தேன்.

“நீதான் சூப்பரா ஓடுவாயேடி!” என்று சொன்னவர்கள், யாராவது ஒருவர் கலந்து கொள்ளவேணும் என்றதற்காகவும் சொல்லி இருக்கலாம். நம்ம மனம் அப்படி…

பெரிதாக, சர்வதேச மட்டத்தில் நடக்கவிருக்கும் ஒரு போட்டியில் கலந்து கொள்ளும் தோரணையில் தான் அன்று வீட்டில் இருந்து புறப்பட்டேன்.

நான் முதல் நாள் கொடுத்த Buld up இல , “டி நானும் பார்க்க வாறன்..” என் தோழி ஒருத்தியும் வந்திருந்தாள்.

நான் முதலாவது வருவதைப் பார்க்க வேண்டாமா?

யாழ் பல்கலை வாசலில், அபிராமி முன்னால் வைத்துத்தான் போட்டி ஆரம்பமானது.

அப்போதான் என் சைக்கிளைப் பார்த்துவிட்டு, “இதில் ஓடுவது கஷ்டம்.” என்று யாரோ சொல்லி, என்னுடன் வந்திருந்த தோழியின் ‘ஏசியா’ என் கைக்கு வந்திச்சு.

‘ஏசியா… சும்மா பறக்கும்டி..நீதான் முதலிடம்!’

இது யாரும் சொன்னதில்ல…நானே எனக்கு!

கும்பலாக ஓட வெளிக்கிட்டு, பரமேஸ்வராச் சந்தியால் இடப்புறம் திரும்பி பலாலி வீதியில் அப்படியே நேரே போய், உரும்பிராய் சந்தி..ஹ்ம்ம் ….சத்தியமா இது நினைவில்லை. ஏதோ ஒரு சந்தியால இடக்கைப் பக்கம் திரும்பின நினைவு.

அப்பவே நான் ஆட்டம் கண்டுவிட்டேன். சும்மா ஓடுவதும் நம்மை முந்திப் போகும் நபரைக் கலைத்துப் பிடிப்பதும் வேறு வேறு தானே!

எதிர்காத்து வேற!

“உனக்கு இப்போ இது தேவையா ரோசி?” சபித்துக் கொண்டேதான் சென்றேன்.

இதற்கிடையில் ரோட்டுக் கரையில் நின்ற சில பெடியல் எல்லோரிலும் தண்ணீரை விசிறி அடித்தார்கள். என் மேலும்!

‘யோவ் கேட்டேனா?’ மனதுள் சீறினது என் பார்வையில் தெரிந்திருக்கும் போல!

“களைப்புத் தெரியாமல் இருக்க… ஓடுங்கோ!” என்றார்கள்.

‘பார்ரா!’

மீண்டும் சர்வதேசப்போட்டியில் கலந்துகொள்ளும் நிமிர்வு!

ஓடினேன் ஓடினேன் …

ஒவ்வொருவராக என்னை முந்திச் சென்று பார்வையில் இருந்து மறைகையில், ஓட்டம் ஆரம்பிக்கையில் இருந்த உற்சாகமும் சக்தியும் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்தாலும், ஓட்டத் தூரம் முழுவதும் ஓடி முடித்து, திரும்ப, பல்கலை வாயிலுக்கு வந்து சேர்ந்த போது…முகமும் மனமும் அப்படியே கூம்பித்தான் போயிற்று!

எதிர்பார்த்ததுதான்… என்றாலும்?

எனக்கு முன்னால் பலர் வந்திருந்தார்கள். பதினோராவது என்று யாரோ சொன்ன நினைவு…பச் விடுங்கோ!

கொஞ்சம் வெட்கமாகவும் இருந்திச்சு! களைப்பு, அதையெல்லாம் பொருட்படுத்தவிடவில்லை.

“இந்தாடி பிடி!” ‘ஏசியா’வை தோழியிடம் கொடுக்கையில், அங்கே ஒரு ஓரமாக நின்ற ரொபின்சன் வாய்விட்டு சிரித்தான்.

‘எவ்வளவு துணிவு?’ என் முறைப்பு அவனுள் நகைப்பை அதிகப்படுத்தியிருக்கும்!

ஆனாலும் மெல்ல அடக்கிக் கொண்டான். நகைப்பின் சாயல் மட்டும் மறையவில்லை!

‘மூன்று வருடங்களுக்கு மேல் ஒன்றாகச் சுற்றித் திரிந்தவன் செய்யும் செயலா இது!?’ மனதுள் வெகுண்டு, பார்வையால் அவனைச் சுட்டேன்.

“ஆங்!…அதேதான் என் மனதிலும். மூன்று வருடங்களுக்கு மேலாக ஒன்றாக திரிந்தவனை விட ‘ஏசியா’ எந்தவிதத்தில் உனக்குப் பெரிதாகத் தெரிந்தான்?

மற்றவர்கள் சொன்னால், அப்படியே மதிலோடு சாய்த்துவைத்துவிட்டு ‘ஏசியா’வில் போவாயோ!

கடைசியில் என்ன நடந்தது?

இதற்கு, ஓடிப்பழகிய என்னில் சென்றிருந்தால் கொஞ்சம் முதல் வந்திருக்கலாமோ என்னமோ!” சத்தமாகவே முணுமுணுத்தான், என் ரொபின்சன் சைக்கிள்!

உண்மைதானோ !

நெதர்லாந்து வந்த பின்னர், இப்பவும், நானும் சைக்கிளும் பிரியவில்லை. தனியாகப் போகவேண்டிய இடங்கள் எல்லாமே சைக்கில் தான். சைக்கிளில் போவதே அலாதியான ஒரு அனுபவமல்லவா? ரொபின்சன் தான் இல்லை.



‘Tour of France’ கேள்விப்பட்டிருப்பீர்கள். உலகில் நடக்கும் மிகப் பெரிய சைக்கிள் போட்டிகளில் ஒன்று. நூறு தடவைகளுக்கும் மேல் நடந்திருக்கும் என்று நினைக்கிறன்.

ஒரு முறை அதைத் தொலைகாட்சியில் பார்க்கும் போது, இப்போ உங்களுக்குச் சொன்னதை வீட்டில் சொன்னேன்.

“உண்மையாகவா அம்மா? எத்தனையாவதாக வந்தீங்க.” make sure பண்ணினார் மூத்த மகன்.

“பதினொன்றுடா!” சலிக்காது பதில் சொல்ல,

“ஆங் எத்தனைபேர் ஓடினார்கள் என்று கேளுங்க பார்ப்போம். பதினொன்றுதானே ரோசி?” என்றது…வேறு யாரு? கஜன். கிரர்ர்ர்ரர்ர்ர்ர்

“சும்மா இருங்கோ அப்பா…எங்கட செல்ல அம்மா கெட்டிக்காரி என்று எங்களுக்குத் தெரியும் தானே!” என்று கட்டிப் பிடித்து செல்லம் கொஞ்சினார் இரண்டாவது மகன்.

“அப்ப… நீங்க கம்பசில எல்லாம் படிச்சீங்களா அம்மா?” விஷமச் சிரிப்போடு கேட்டவர், என் கடைக்குட்டி.

எது எப்படியோ…அன்று நான் சைக்கிள் போட்டியில் கலந்து கொண்டதை என்றைக்கும் மறக்க முடியாது.

அதுவும், tour of France பார்க்கும் போது …அந்த நினைவு எட்டிப் பார்த்துச் செல்லும்.


 
Top Bottom