`விபச்சாரி` என்ற சொல்லிற்கு ஆண்பாற்சொல்

ரோசி கஜன்

Administrator
Staff member
பொதுவாக பெண்ணியம் தொடர்பான உரையாடல்களில் சொல்லப்படும் ஒரு வசனம் ‘விபச்சாரி என்ற சொல்லிற்கு ஆண்பாற்சொல் தமிழில் இல்லை’ என்பதாகும். அடுத்த வசனம் அந்தளவிற்கு ஆணாதிக்கமிக்கது பழந்தமிழர் வாழ்வியல் என்பது.



முதலில் விபச்சாரி என்ற சொல் தமிழே அல்ல. அவ்வாறான தமிழேயல்லாத, இடையில் திணிக்கப்ட்ட ஒரு சொல்லிற்கு, தமிழ் ஏன் குற்றஞ்சாட்டப்படவேண்டும்?



அச் சொல்லிற்கு நிகரான தமிழ்ச்சொல் ‘பரத்தை’ என்பதாகும். இச்சொல்லிற்கு ஆண்பாற் சொல் மட்டுமல்ல, பொதுப்பாற் சொல்லே உண்டு. பொதுப்பாற்சொல்லிற்கான(common gender) சான்று சிலப்பதிகாரத்தில் உண்டு.



“வறுமொழி யாளரொடு வம்பப் பரத்தரொடு

குறுமொழிக் கோட்டி நெடுநகை புக்குப்

பொச்சாப் புண்டு பொருளுரை யாளர்”


இங்கு {வம்பப் பரத்தர்=புதிய காம நுகர்ச்சி விரும்புங் காமுகர்} ‘பரத்தர்’ என்ற சொல் இருபாலாரையும் குறிக்கும் சொல்லாகும்.



சரி, பொதுப்பால் உண்டு. ஆண்பால் உண்டா? இதோ



“யார்கொல் அளியள் தானே எம்போல்

மாயப் பரத்தன் வாய்மொழி நம்பி….” (அகநானூறு 146)




இந்த அகநூற்றுப் பாடலில் வரும் ‘பரத்தன்’ என்ற சொல் ஆண்பாற்சொல்லே.

அது மட்டுமல்ல திருக்குறளே உண்டு. ஆனால் அதில் பலரும் பரிமேலழகர் எழுதிய உரைக்கு ஏற்ப குறளிலேயே ஒரு எழுத்தினை மாற்றிவிட்டார்கள்.



“பெண்ணியலார் எல்லாரும் கண்ணின் பொதுஉண்பர்

நண்ணேன் பரத்தனின் மார்பு” (குறள் 1311)




இங்கு பலரும் இறுதிச் சொற்களை பலரும் `பரத்தநின் மார்பு` எனவே எழுதிவருகின்றார்கள். முனைவர் இரவிசங்கர் கண்ணபிரான் இதனை ‘பரத்தனின்_மார்பு’ என எழுதி, ‘வரைவின் மகளிர்’ பாடிய வள்ளுவர் தான் ‘பரத்தன்=ஆண் பரத்தை’-யும் காட்டுகின்றார் என்கின்றார்.



எனவே ‘பரத்தை’ என்ற தமிழ்ச்சொல்லிற்கு ‘பரத்தன்’ என்ற ஆண்பாற்சொல் சங்ககாலம் முதலே உண்டு. {ஆங்கிலத்தில் இன்றும் கூட `prostitute`என்ற சொல் பெண்ணையே குறிக்கும். இப்போது male என்ற முன்னொட்டு கொடுத்து ‘male prostitute’ என அழைத்தாலும், அது மிகவும் செயற்கையாகவுள்ளது.}

நன்றி: திரு வி. இ . குகநாதன்
 
Last edited by a moderator:
Top Bottom