You must have JavaScript enabled in order to use this order form. Please enable JavaScript and then reload this page in order to continue.

10. உன்னைப் போல் ஒருவன் - ரோசிகஜன் -இதழ் 9

ரோசி கஜன்

Administrator
Staff member


வெளிப்புறத்தில் இலேசான தூத்தல் ஆரம்பித்திருந்தது. மாலை மங்கிய நேரத்திலிருந்து இந்தா அந்தா என்று ஆட்டம் காட்டி, கடைசியில் இப்போதுதான் மனமிரங்கினான் வர்ணபகவான்; அதுவும் சிக்கனமாக!

இத்தனை நாட்களாக ஈரலிப்பைக் காணாது தாகத்தோடு காய்ந்து கிடந்த பூமி, இச்சிறு தூத்தலுக்கே ஆரவாரித்துத் தம் வாசத்தைக் கசிய விட்டது. உடனடியாக இல்லையென்றாலும் எப்படியும் மழை கொட்டும்! ஏங்கிக்கிடந்த பூமி, வர்ணபகவானின் ஆக்கிரமிப்பில் கரைந்து குழைந்து கொண்டாடலாம். அதேநேரம் தட்டுத் தடுமாறி மூச்செடுக்க முடியாது போனாலும் போகலாம்.

திறந்திருந்த யன்னலால் கசிந்து வந்தது புழுதி வாசம்!

ஆழ மூச்செடுத்து விட்டான் கவிவர்மன். மண்வாசனை அவ்வளவு மோசமாகவில்லை. கரமிரண்டும் கைபேசியில் நர்த்தனமாட முகத்தில் ஒரு எள்ளல் சிரிப்பு!

ஹ்ம்... இல்லையில்லை, துள்ளல் சிரிப்பு. அது மறையாமலே சிலநிமிடங்கள் தொடர்ந்தது குறுஞ்செய்திப் பரிமாற்றம்.

“இதென்னது? மணி என்ன என்று தெரியுமே! எந்த நேரம் பார்த்தாலும் இதுக்குள்ளத் தலையை விட்டுக் கொண்டிருந்து என்னத்தைச் சாதிக்கப் போறீங்களோ!?"

அந்தகாரத்தில் அபஸ்வரமாக ஒலித்தது, அவன் மனைவி நந்தினியின் குரல்.

"விசரி!" திடுக்கிட்டுப் போனானே! ஆனால் ஒன்று, அந்த விசரியை மிக்க கவனமாக வாய்க்குள் தான் சொன்னான். அவன் மனைவிக்குக் கேட்டிருக்க வாய்ப்பே இல்லை. அதோடு, அவளும், தன் புருசன் தன்னை அப்படியெல்லாம் விளிப்பான் என்று கற்பூரம் அணைத்துச் சத்தியம் செய்தாலும் நம்பமாட்டாள்.

'பாவம்! அப்பாவி மனிசன்!' இது அவள் அவனைப் பற்றி எண்ணியுள்ளது.

"இப்ப உனக்கு என்னடி பிரச்சனை?" குரலில் குழைவு! அதுதான் அவளுக்குப் பிடிக்கும்.

'ஊரில் எவன் இப்படி மனைவிக்கு அன்பும் மரியாதையும் குடுப்பான் சொல்லுங்க?' சந்தர்ப்பம் கிடைக்கையில் எல்லாம் வெளியில் எடுத்து விட்டு விடுவாள்.

"இன்னுமா எழுதுறீங்க? லைட் வெளிச்சம் ரூமுக்க வருதப்பா, தூங்க முடியேல்ல!" முதலில் எரிசலில் சொன்னவள் சட்டென்று தணிந்திருந்தாள். அதுதான் அவன் கெட்டித்தனம்.

"ஹையோ சாரிடி! கதவை மூட மறந்துட்டன் பார்; தொடங்கினதை முடிச்சிட்டு வாறன், நீ துங்கு!"

அவன் அவசரமாகச் சென்று கதவைத் தாளிட்டுவிட்டு அதிலேயே நின்றான்.

'எவ்வளவு நாட்கள்களாக முயன்று இன்றைக்குத்தான் வெற்றி கிடைச்சிது. அதையும் கெடுத்திட்டாளே! ரசனை கெட்ட பிறப்பு! விடிஞ்சா நல்லா வயிறு முட்ட சாப்பிடுறது. ‘நானும் வேலைக்குப் போறன்' என்று அரிவரிப்பிள்ளைகளுக்குப் போய்ப் பாட்டுச் சொல்லிக் குடுத்திட்டு வந்து வீட்டுவேலையில நான் கை குடுக்கிறன் இல்ல என்று புலம்பித் தள்ளி மனிசரின்ட நிம்மதியைக் குலைக்கிறது ஒருபக்கம் என்றால், இப்படித்தான், நான் என்ன செய்தாலும் அவளுக்கு இடைஞ்சல்! எனக்கென்று வந்து வாச்சிருக்கு! சனியன்!' மனம் எரிச்சலோடு புகைய, கதவையே ஏரிப்பார்வை பார்த்து நின்றான்.

கதவையா? அப்பால் செல்லும் மனைவியை. பாவம், இது எங்கே அவளுக்குத் தெரியப் போகின்றது?



'இதுதான் இவரில் எனக்குப் பிடிச்சதே. சொன்னால் உடனே செய்திடுவார். என்ர விருப்பமும் ஆசையும் தான் அவருக்கு முதல். எப்பவும்!' மனது நிரம்ப, சென்று கட்டிலில் சாய்ந்த நந்தினி கண்களை மூடினாள்.

தண்ணீர் குடிக்கவேண்டும் போலவும் இருந்தது.

'பச்! குடிச்சிட்டே வந்திருக்கலாம்...' அவளுக்கு மீண்டும் எழுந்து செல்லச் சோம்பலாக இருந்தது .

'ஒரு மணியாகுது. பாவம் மனுசன் பகலில வேலை, இரவிரவாகக் கவிதை எழுதுவார்; சொன்னால் கேட்கமாட்டார்.' அவள் மனம் இப்படித்தான் நினைத்துக் கொண்டது.

கணவனை நினைத்துப் பெருமையில் இதழ்களில் முறுவல் வேறு ஒட்டிக் கொண்டது. அவள் கணவன் பிரசித்தி பெற்ற பாடலாசிரியர் என்பதில் அவளுக்கு அத்தனை பெருமை. அவனோ, இப்போதான் ஒரு படத்திற்கு ஒரே ஒரு பாடல் எழுதியுள்ளான் என்பது வேறு கதை.



கவிவர்மன் விட்ட இடத்திலிருந்து தொடர்ந்தான்.



'எங்க போய்ட்டீங்க? நானும் போகப் போறன்.' மறுபுறம் இருந்து வந்திருந்தது.



'இல்ல இல்ல. தேத்தண்ணி போட்டுட்டுக் கொண்டுவரப் போனனான்.' பதிலிட்டான், இளமுறுவலோடு!



'இப்ப குடிச்சா எப்பிடி நித்திரை வரும்?' பூனைக்குட்டிக்காரி அக்கறையாகக் கேட்டாள்.



"அதெல்லாம் வரும்; அதுவும் இன்றைக்கு!' கண்ணடிக்கும் ஸ்மைலியும் சேர்ந்து வழுக்கிச் சென்றது, இவனிடமிருந்து.



அங்கிருந்து நாக்கைத் துருத்தி ஒரு ஸ்மைலி.



'நான் ஒன்று உங்களுக்குக் காட்டவோ?' இவன்தான் தட்டினான்.



'என்ன?'



'இல்ல ஒரு VVIP' உதடுகளில் வந்திருந்த சிரிப்பு விழிகளை எட்டிப் பிடிக்கத் தட்டினான்.



'ஓ! ' ஆச்சரியம் காட்டியது அங்கிருந்து வந்த ஸ்மைலி. சற்றே அமைதியாகப் பார்த்திருந்தான். இதெல்லாம் ஒரு கலை பாருங்க. அவசரம் கூடவே கூடாது.



'என்ன சத்தமே இல்ல? திரும்பவும் தேத்தண்ணி போடப் போயாச்சோ?' கண்ணீர் தெறிக்கச் சிரிப்பு; ஸ்மைலியில் தான்.



அதைப்பார்த்திருந்தான் கவிவர்மன். அவன் கண்களில் நகைப்புப் பொங்கியது.

'கள்ளி! எத்தனை நாட்களாக என் ஒரு 'ஹாய்'க்குப் பதில் போடாது இருந்தாய்?' உதட்டோரம் வளைந்தது.



'ஹலோ இருக்கிறீங்களா? நான் தூங்கப் போறன்.' பூனைக்குட்டி தட்டியது.



'இருங்க இருங்க! அந்த VVIP யாரு என்று பார்த்திட்டே போங்க.' என்ற வேகத்தில், ஒரு புகைப்படத்தைத் தட்டிவிட்டவன் பதிலுக்காக ஆவலாகக் காத்திருந்தான்.



அதுவும் வந்தது. நாக்கைத் துருத்தும் ஸ்மைலி வந்த வேகத்தில் 'எங்க எடுத்தீங்க?'

அவன் பதிலை எதிர்பாராதே, 'கள்ளன்! என் மற்ற ப்ரோபைல் டிபி இது! ஹா...ஹா! இது ஒரு வருசத்துக்கு முந்தி எடுத்தது.' கண்ணடிக்கும் ஸ்மைலியம் சேர்ந்து.



'அடடா! அப்ப இப்ப எடுத்ததைக் காட்டுங்க.' தருவாளோ? கண்களில் ஆர்வத்தோடு திரையைப் பார்த்திருந்தான்.



'அதெல்லாம் முடியாது.' பூனைக்குட்டி கண்ணடித்தது.



'பரவாயில்லை. இதிலேயே நீங்க அவ்வளவு அழகா இருக்கிறீங்க தெரியுமா?' தட்டியவன் ,'யாரிட்ட விடுறாய் பெண்ணே! விரைவில் நீயே தருவாய்; தர வைப்பான் இந்தக் கவிவர்மன்.' முணுமுணுத்தான்.



அங்கிருந்து அதற்குப் பதில்... நாக்கைத் துருத்தியது .



'பின்ன? இந்த அழகான கண்களைக் காட்டாது பூனைக்குட்டியைப் போட்டு வைத்திருந்தால்.' தட்டிய வேகத்தில் கவிதையும் பறந்தது.

'அவை என்ன கண்களா?

வாள் கொண்டு என்னை வீழ்த்துகின்றதே!

கண் முன்னே இல்லாத

இதோ இந்த நிமிடம் கூட

என்னைச் சுருட்டி விழி வலைக்குள்

விழுத்தியே வைத்திருக்கின்றதே.

வாழ்விலேயே முதல் முறையாக

ஒரு பெண்ணின் கண்களைச்

சந்திக்க முடியாமல்

தடுமாறிப் போயிருக்கிறேன்!

இனியும் சந்திக்க

முடியாது என்றே மனம் சொல்லிற்று!

அதனால் என்ன?!

வீழ்வது உன்னிடம் என்றால்

அந்த வாள்கொண்டு இன்னும் வீசு பெண்ணே!'



அதற்கு ஹார்டின் போட்ட வேகத்தில் அதே ஸ்மைலியும் வழுக்கிக் கொண்டு வந்து விழுந்தது.

'ஹையோ.. எவ்வளவு அழகாக் கவிதை எழுதுறீங்க? தாங்க்ஸ் தாங்க்ஸ்' தட்டியவள், கவிதையின் அர்த்தம் புரிந்துதான் பதில் போட்டாளா? அவள் ஒருவிதமான மாயைக்குள் வழுக்கிக் கொண்டிருந்தாள்.

'உண்மையைச் சொன்னதுக்கு என்ன தேங்க்ஸ்?' தட்டியவனுக்கு என்னவோ அவள் நெருங்கி வரும் உணர்வு. கள்ளச் சிரிப்போடு மிதந்தான்.

அத்தனை 'ஹாய்'களுக்கும் பதில் போடாதவளை அவள் பிறந்தநாளுக்கு ஒரு கவிதையை உள்பெட்டிக்கு அனுப்பியல்லவா மெல்ல இழுத்துப் பிடித்திருக்கிறான்!

'ம்ம்.. மெல்ல மெல்லத்தான் இழுக்க வேணும். இன்றைக்குக் காணும். 'அவன் நினைத்த போதே வெளியில் எதுவோ பேச்சுக் குரல்.



'இவள் நந்தினி இன்னுமா தூங்கவில்லை? ஏன் கத்துறாள்?'



'ஓகே டியர்... நானும் தூங்கப் போறேன்.' இதயம் ஒன்றைத் தட்டிவிட்டு 'GN TC' போட்டுவிட்டு வேகமாக வெளியில் வந்தவன், "நந்தினி! என்ன சத்தம்?" எதிரேயிருந்த தங்கையின் அறைக்குள் நுழைந்தான்.



அங்கே...



கண்ணீரோடும் பயத்தோடும் முகம் வெளிற நின்றிருந்தாள் இவன் தங்கை. முன்னால் இவன் மனைவி, பத்திரகாளியாய்!



"நந்தினி இதென்ன? இந்த நேரம் இப்படிப் பெரிசா..." கேட்டவன் வார்த்தைகள் வராது விழுங்கிவிட்டான். அப்படியொரு பார்வை பார்த்தாள் அவன் மனைவி.



"நீங்க எந்தநேரமும் கவிதையும் மண்ணாங்கட்டியும் என்று போனுக்க குடித்தனம் நடத்துங்க. இவள் யாரு? உங்கட தங்கச்சித் தானே? அதைத்தான் அவளும் செய்யிறாள். நம்மளை நம்பித்தானே இங்க படிக்க விட்டிருக்கு? தண்ணி குடிக்க வந்தால் அழுது கேட்குது! என்ன என்றால்... என்ன படிப்புப் படிக்கிறாள் பாருங்க!'



போனை அவன் முகத்தின் முன்னால் நீட்ட, "ச்சே!" ஓரடி பின்னால் போன அவன் உடல் பதறியது.

மின்னலாக அறைந்த அதிர்வோடு தங்கையைப் பார்த்தான். வார்த்தைகள் வரேன் என்று மறுத்துப் பின்வாங்கின.

அவன் தங்கையோ பெரிதாகவே அழத் தொடங்கிவிட்டாள் .

"சத்தியமா அண்ணா, நல்ல மாதிரித்தான் இந்த ஒரு வருசமும் 'சட்' பண்ணுறவன். கொஞ்ச நாளாகத்தான் ஒரு மாதிரிக் கதைக்கிறான் என்று இன்றைக்குக் கொஞ்சம் கோபமாக ஏசிப்போட்டன்.(திட்டிவிட்டேன்) அடுத்த நிமிசம் இப்படிப் படங்களை அனுப்பி...." விம்மியழுதாள் தங்கை.



அந்த அழுகுரல் தீப்பந்தமேந்திய கூரிய குத்தீட்டியாய் நெஞ்சைக் கிழிக்க, மனைவியின் வாய் உதிர்க்கும் வார்த்தைகள் ஒவ்வொன்றும் பரல் பரலாக எண்ணெய் வார்க்க, அப்படியே சுவரில் மோதி தொய்ந்து நிலத்திலமர்ந்தான் அவன்.

வெளிப்புறத்தில் பூனையொன்று பெரிதாகக் கத்திக்கொண்டு பாய்ந்து சென்றது.
 
Top Bottom