நினைவெல்லாம் நீயாகிட வந்தேன்..!! -1

18426422_259998427805201_524463775_o

ஜெர்மனியின் பிரங்க்ஃபுவர்ட் நகரம்! எப்போதும்போல, மிக சுறுசுறுப்பாக இயங்கிக்கொண்டிருந்தது. அங்கே, நகர்ப்புறத்தில் அமைந்திருந்த தன் வீட்டு பால்கனியில் கையை கட்டிக்கொண்டு நின்றிருந்தான் விக்ரம். செய்வதற்கு எத்தனையோ வேலைகள் இருந்தாலும் எதையும் பாராது அப்படியே நின்றிருந்தான். மனதில் உற்சாகமில்லை. உடலிலோ அது மருந்துக்கும் இல்லை. மகன் டெனிஷ் பள்ளிக்கூடம் சென்றிருந்தான்.

ஆபிஸ் போகவேண்டும் என்று மண்டைக்குள் மணியடித்தாலும் ‘அங்கே போயும் எதை செய்ய.. எப்பவும் பார்க்கிற அதே வேலதானே..’ என்று சலிப்பாகவிருந்தது.

அவன் ஒன்றும் சோம்பேறி அல்ல! சொல்லப்போனால் மற்றவர்களை விடவும் போர்க்குணம் மிக்கவன்!

வாழ்க்கையில் முன்னுக்கு வரவேண்டும்! மனைவியையும் மகனையும் நல்ல நிலையில் வாழ வைக்கவேண்டும் என்று எண்ணி, அல்லும்பகலும் போராடி உழைத்தான். ஒரு தொழிலாளியாக தன் வாழ்க்கையை ஆரம்பித்து, கைபேசிகளுக்கு பணமேற்றும் தொழிலை சுயமாக ஆரம்பித்து, அதை பெருக்கி இன்று நல்ல நிலையில் வாழ்ந்து வருகிறான். ‘டெனிஷ் மொபைல்’ என்றால் எல்லோருக்கும் தெரியும், தரமானதும் நியாயமானதும் என்று. அவனது வளர்ச்சி இன்று அவனையும் மீறியது!

ஆனால், அந்த அசுரத்தனமான போராட்டமும், ஓட்டமும் அவனது உயிர்நாடியையே அவனிடமிருந்து பிடுங்கிவிட்டிருந்தது!

உழைப்பு உழைப்பு என்று பணத்தை தேடி ஓடியவன், தன் காதல் மனைவி, மகனை கவனித்துக்கொண்டு அவனோடு பின்வருவாள் என்று நினைக்க, அவளோ அவன் தலையில் இடியையே இறக்கிவிட்டாள்!

ஒருநாள் நள்ளிரவில் வீடு வந்து உறங்கிக் கொண்டிருந்தவனை வந்து எழுப்பினாள் யாஸ்மின். அவன் மனைவி! ஜெர்மனிய பெண்.

“என்னம்மா.. கொஞ்சம் தூங்கவிடு.”

“உங்கள பாக்க கீழ ஒருத்தன் வந்திருக்கிறான்.”

“என்ன பாக்கவா? யாரது?” புருவங்களை சுருக்கினான். என்னதான் கடுமையான உழைப்பாளியாக இருந்தாலும், தொழிலை வீடு வரை கொண்டு வருகிறவன் அல்ல அவன்.

தெரிந்தவராக அல்லது சொந்தக்காரராக இருந்தால் அவள் அறியாத நபர் என்று அவனுக்கு யாருமில்லை. “யாரது உனக்கு தெரியாமல்?” என்று கேட்டுக்கொண்டே முகம் கழுவப் போக, அவளோ பதில் சொல்லாமல் கீழே இறங்கி ஓடினாள்.

‘இவள் என்ன ஒண்டுமே சொல்லாமல் போறாள்?’ எண்ணம் ஓட, முகத்தை கழுவிக்கொண்டு வந்து ஒரு சட்டையை எடுத்து மாட்டியபடி கீழே இறங்கினான்.

ஒரு ஜெர்மனியன். அவன் இதுநாள் வரை பார்த்ததே இல்லை. இவன் கீழே செல்லவும் எழுந்து கைகொடுத்தான். அவனை அமரும்படி இருக்கையை காட்டிவிட்டு தானும் அமர்ந்துகொண்டே மனைவியை கேள்வியாகப் பார்த்தான்.

அவளோ, இவனை பாராது மேசையில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த புத்தகங்களை மீண்டும் அடுக்கிக்கொண்டிருந்தாள். முகத்தில் பதட்டம். கைகளில் நடுக்கம்.

“நாம் ஏற்கனவே சந்தித்து இருக்கிறோமா?” முன்னால் அமர்ந்திருந்தவனிடம் கேட்டான்.

“இல்லை. நான் யாஸ்மினின் நண்பன்.” என்றான் அவன்.

‘நண்பனா? இவள் ஏன் அத சொல்லேல?’ என்கிற யோசனையோடு மனைவியை பார்க்க, அவளோ இவன் கண்களை பாராது, “அவன நான் காதலிக்கிறன் விக்கி; உன்ன விவாகரத்து செய்துட்டு அவன கட்டப்போறன்.” என்றாள்.

அதிர்ந்துபோய் மனைவியை பார்த்தான் விக்கி. சற்று நேரம் பிடித்தது அவள் சொன்னதன் சாராம்சத்தை அவன் கிரகித்துக்கொள்ள. கிரகித்துக்கொண்டதும் சித்தம் கலங்குவது போலிருந்தது. பேச்சு மறக்க, மூச்சு அடங்க அவள் சொன்னதை நம்ப முடியாமல் உள்ளுக்குள்ளே சிதைந்தான்.

அவனுடைய காதல் மனைவி யாஸ்மின். அவள் இன்னொருவனை காதலிக்கிறாளா? பள்ளிப்பருவத்தில் தொடங்கி நல்ல நண்பர்களாக இருந்து, அவன் எடுத்த பாடத்தையே அவளும் எடுத்து அவன் சேர்ந்த கல்லூரிக்கே சேர்ந்து, அவனுடைய வாழ்வின் ஒவ்வொரு முக்கியமான கட்டங்களிலும் கூட இருந்து, தாயும் தந்தையும் விபத்தில் இறந்தபோது அன்னையாக இருந்து அவனை காத்தவள் இன்னொருவனை காதலிக்கிறாளா?

அவனுக்கும் அவளுக்கும் எப்போது காதல் மலர்ந்தது என்று கேட்டால் அவனுக்கும் தெரியாது. அவளுக்கும் தெரியாது. ஒருவருக்கொருவர் நேசத்தை பரிமாறிக்கொண்டார்களா என்று கேட்டால் அதுவும் இல்லை. ஒருவரை ஒருவர் மனதால் புரிந்துகொண்ட, தெரிந்து கொண்ட பந்தம் அவர்களது! அந்தளவு புரிந்துணர்வோடு வாழ்ந்தவர்களின் வாழ்வில் இயல்பாக பற்றிக்கொண்ட நேசம், திருமணம் என்கிற புனிதமான பந்தத்தை பூண்ட இத்தனை நாட்களில் கடிந்தொரு சொல் அவளை அவன் சொல்லியிருக்க மாட்டான்.

அப்படி அவன் சொல்லும்படி அவள் நடந்ததில்லை. அந்தளவுக்கு அவனை புரிந்துகொண்டு வாழ்ந்தவள் இன்னொருவனை தேடியோட என்ன காரணம்?

அதிர்ச்சி மெல்ல மெல்ல அடங்க அந்த இடத்தை கண்மண் தெரியாத கோபம் ஆக்கிரமிக்கத் தொடங்கியது.

அந்த நேரம், “மிஸ்டர் விக்ரம்..” என்று அந்த அவன் ஆரம்பிக்க, கையை நீட்டி தடுத்தான் ‘நீ பேசாதே!’ என்பதாக. முகம் கடினப்பட்டு இறுகிற்று!

ஆத்திரத்தை அடக்க நினைத்தவனின் கழுத்தோர நரம்புகள் புடைக்க, கண்கள் சிவக்க கை முஷ்டிகள் இறுகின. கலவரமாக தங்களுக்குள் பார்வையை பரிமாறிக் கொண்டனர் அந்த இருவரும்.

அந்தநொடியில் நொடித்துப்போனது விக்ரமின் உள்ளம்! பிரத்யேகமான பார்வை பரிமாற்றங்களும், பரிபாஷைகளும் மனைவி என்கிறவள் கணவனோடு அல்லவோ நடத்த வேண்டும்!

இங்கே அவளுக்கு யார் கணவன்? மிக கேவலமாக உணர்ந்தான் தன் நிலையை!

“விக்கி.. நான் சொல்றத கொஞ்சம்..” என்று ஆரம்பித்த யாஸ்மினை விக்ரமின் பொசுக்கும் பார்வை அடக்கியது.

அவனின் பக்கமாக திரும்பி, “நீ போகலாம்!” என்றான் உறுமலாக.

தயக்கத்தோடு எழுந்தவன் யாஸ்மினை பார்க்க, “உனக்கு நான் பிறகு போன் பண்றன் டிம்(Tim); நீ இப்ப போ..” என்றாள் அவள்.

அவன் போக, அவனோடு தானும் வெளியே நடந்தாள் யாஸ்மின்.

சோஃபாவின் கைப்பிடியில் முழங்கையை ஊன்றி கையால் நெற்றியை பற்றித் தேய்த்து விட்டுக்கொண்டே பார்வையை திருப்பியவனின் விழிகளில், டிம்மின் காரருகே நின்றிருந்த யாஸ்மினும் டிம்மும் பட்டனர்.

அவனது கைகள் இரண்டையும் பற்றிக்கொண்டு யாஸ்மின் நின்றிருந்தாள்.

பல்லைக் கடித்துக்கொண்டு முகத்தை இவன் திருப்பப் போக, டிம்மின் தோளில் சாய்ந்துகொண்டாள் யாஸ்மின். அவனோ இவளை அணைத்துக்கொண்டு என்னவோ சொன்னான்.

அணைப்பதும் தோள் சாய்வதும் அவர்களுக்கு பெரிய விடயம் அல்லதான். ஆனால், யாஸ்மின் சற்றுமுன் சொன்ன விஷயத்தை அறிந்த பிறகும் அதை சாதாரணமாக அவனால் எடுக்க முடியவில்லை.

அவன் இரத்தம் கொதித்தது. அதைவிட மனைவியை காதலியாக அன்றுவரை நெஞ்சில் சுமந்தவனின் இதயம் தூள் தூளாக உடைந்தது.

வெறும் பயலாக இருந்த அவனை நெஞ்சில் கொண்ட நேசத்துக்காக மட்டுமே அன்று கரம் பிடித்தவளை, யாரும் எட்ட முடியாத உயர்ந்த இடத்தில் வைக்கவேண்டும் என்று ஆசைப்பட்டானே! ஆசைப் பட்டது மட்டுமல்லாமல் அதை நிறை வேற்றியும் காட்டினானே!

அவள் ஆசைப்பட்டாள் என்று புத்தம் புதுக்கார். அவள் ஆசைப்பட்டாள் என்றுதான் இந்த வீட்டையும் கட்டினான். யாரோ அவர்களின் விருப்பத்துக்கு கட்டிய வீட்டை நாம் வாங்குவதா? நமக்கு பிடித்த விதமாக நாம் கட்டுவோம் என்று அவளின் ஆசைப்படி கட்டிய வீடு இது.

அவளின் பார்வை ஆசையோடு ஒரு பொருளின் மீது படிந்தால் அடுத்த நிமிடமே அதை வாங்கி கொடுத்துவிடுவானே..

பணமிருந்தால் எதுவும் செய்யலாம் தான். ஆனால் அவன் கொட்டிய நேசம்? காட்டிய காதல்?

தமிழர்கள் மட்டுமல்ல, அவர்களை அறிந்த ஜெர்மனியர்கள் கூட “உன் கணவன் நல்ல காதலன்” என்று சின்னப் பொறாமையோடு சொல்லும் இடத்தில் அவன் வாழவைக்க, அவள் இன்னொருவனை தேடுவாளா?

மனம் உலைக்கலமென கொதித்துக்கொண்டிருந்தது.

அவனை அனுப்பிவிட்டு அவள் வீட்டுக்குள் வந்தபோது, மனம் விட்டே போயிற்று விக்ரமுக்கு!

இன்னொருவனின் தோள் சாய்ந்தவளை வெறுப்போடு பார்த்தான்.

அவன் முன்னால் அவள் தயங்கி நிற்க, “உனக்கு எதில குற வச்சனான் எண்டு இப்படி நடந்தாய் யாஸ்மின்? காதல்லையா? உன்மேல வச்ச அன்பிலா? நம்பிக்கையிலா? பணத்திலா, வசதியான வாழ்க்கையிலா? எதில குற வச்சனான்?” கிட்டத்தட்ட கர்ஜித்தான்.

விக்ரமின் உக்கிரத்தில் அவள் தேகம் நடுங்கிற்று!

“இந்தக் காசும் பணமும் எனக்கு வேணும் எண்டு என்றைக்காவது நான் சொன்னேனா விக்கி? எப்போதுமே வேல வேல எண்டு நீ போனா நான் யாரோட கதைக்கிறது? சிரிக்கிறது?”

“ஏன், அப்படி என்ன வருசக் கணக்கிலா உன்னவிட்டுப் பிரிஞ்சனான்? எங்க போனாலும் கடசியா இங்கே தானே வந்தேன். நீயும் பிள்ளையும் தானே என்ர  உலகமே. உலகம் பூரா சுத்தினாலும் என் உலகம் உன் காலடிதானே. அது உனக்கும் தெரியும். பிறகும் ஏன்.. ஏன் இப்படியெல்லாம்.. என்னோட வாழ்க்கையை திரும்பிப்பார்த்தால் எந்த இடத்திலையும் நீயில்லாமல் எதுவும் இல்லையே யாஸ்மின். இனி.. இனி மட்டும் எப்படி?” தொண்டை அடைத்தது அவனுக்கு.

“என்னை கொஞ்சம் விளங்கிக்கொள் விக்கி..” அவள் தவிப்போடு சொல்ல, அவனோ எரிமலையென வெடித்தான்.

“இனியும் உன்ன விளங்கி நான் என்ன செய்ய? என் பெண்டாட்டி பிள்ளையையும் நல்லபடியா பார்த்துக்கொண்டு எனக்காக காத்திருப்பா எண்டு நம்பித்தானே ஒவ்வொரு முறையும் இந்த வீட்ட விட்டு வெளியே போவன். அந்த நம்பிக்கைக்கு நல்ல பதில் சொல்லிட்ட! இனியும் உன்ன விளங்கிக்கொள்ள என்ன இருக்கு?”

அவனுக்கு தன் மனதை புரிய வைக்கவே முடியாது என்று தெரிந்துபோக, “நான் அவனத்தான் கட்டப்போறன் விக்கி. எனக்கு விவாகரத்து வேணும்.” என்றாள் யாஸ்மின் முடிவாக.

தன் மனதை அறிந்தும், அதில் எவ்வளவு தூரத்துக்கு அவள் உயிரோட்டமாக கலந்திருக்கிறாள் என்று தெரிந்தும் அப்படிச் சொன்னவளை வெறித்தான்.

“நான் தரமறுத்தா?”

“நீ என்னட்ட கேட்காத விளக்கத்தை எல்லாம் கோர்ட்ல  சொல்லி விவாகரத்து வாங்குவன்.”

முற்றிலுமாக உடைந்து போனான் விக்ரம். கோர்ட்டுக்கு போனால் இதையெல்லாம் பார்க்கும் மகனின் மனநிலை என்னாகும்?

அன்றுவரை அவள் கேட்டதை எல்லாம் வாங்கிக் கொடுத்தவன், அவளின் மனம் கோண நடக்காதவன் தன் மனதை கல்லாக்கிக்கொண்டு அதையும் கொடுத்தான்.

வேறு என்னதான் செய்வதும்?

அவனை வேண்டாம் என்று முடிவுசெய்துவிட்டு, தனக்கான அடுத்த துணையாக இன்னொருவனை தேர்வும் செய்துவிட்டு, அவனை தன்னிடமே அவள் அறிமுகப் படுத்தியபோது அவனால் என்ன செய்துவிட முடியும்? அப்படி செய்தாலுமே அதில் ஏது பலன்?

காதலித்து கட்டிய கணவனை பற்றி அவள் சிந்திக்கவில்லை. பத்துமாதம் சுமந்து பெற்ற மகனை பற்றி சிந்திக்கவில்லை. அவர்கள் மூவரினதும் எதிர்காலம் பற்றி யோசிக்கவில்லை.

அவளில்லாமல் அவனும் மகனும் என்னாவார்கள் என்றுகூட அவள் சிந்திக்கவே இல்லையே…

“மகன் என்னட்ட இருக்கட்டும்.” அவளின் முகம் பாராது அவன் சொன்னபோது, கலங்கிய விழிகளை மூடித்திறந்து சம்மதித்துவிட்டு அவனை பிரிந்து சென்றாள் யாஸ்மின்.

இதெல்லாம் நடந்து நான்கு வருடங்கள் ஓடியிருந்தன. இருபத்திமூன்று வயதில் நடந்த திருமணம் இருபத்தியெட்டு வயதில் முறிந்தே போயிற்று! ஆனாலும், அன்றைய நினைவுகள் இன்றும் மனதில் ரணமாய் கிடக்க, கண்களை இறுக மூடிக்கொண்டு சிலையென அப்படியே நின்றான் விக்ரம்! அன்று அவள் என்ன சொல்ல வந்தாள் என்பது இன்று அவள் சொல்லாமலே புரிந்தது அவனுக்கு.

முகம்பார்த்து சிரிக்க ஒருவரின்றி, மனதிலிருப்பதை கொட்ட ஒரு துணையின்றி, தலைசாய ஒரு மடியின்றி, சிகைகோத இரு கரங்களின்றி அவன் வாழ்க்கையே மரத்துப்போயிற்று!

டெனிஷ் இந்தக் காலத்துப் பிள்ளையாக, நண்பர்கள், வெளியே சுற்றுவது, வீட்டுக்கு வந்தால் கேம் விளையாடுவது என்று அவன் வாழ்க்கை பட்டாம்பூச்சியாக மிக மிக சந்தோசமாக போய்க்கொண்டிருந்தது.

அப்போது அவனது கைபேசி அழைக்கவும், சலிப்புடன் பாக்கெட்டுக்குள் கையை விட்டு எடுத்து காதுக்கு கொடுத்து, “சொல்லுடா..” என்றான், அழைப்பது நண்பன் அசோக் என்றறிந்து.

“என்ன மச்சான்? ஏன் ஒருமாதிரி கதைக்கிறாய்?”

“தெரியேல்லடா… என்னவோ எல்லாமே மனம் விட்டுப்போன மாதிரி இருக்கு…” எல்லையற்ற வலியும் விரக்தியும் அவனிடத்தில்.

விக்ரமை பற்றி முழுவதும் அறிந்தவன் அசோக். இன்னொரு திருமணம் செய்துகொள் என்று எத்தனையோ தடவைகள் சொல்லிவிட்டான். கேட்ட பாடே இல்லை.

“தனிமை இவ்வளவு கொடுமையா இருக்கும் எண்டு நான் நினச்சே பாக்கேல்ல அசோக். சிலநேரம் வாழ்க்கையே வெறுத்துப்போகுது. ஆறுதலுக்கு கூட பக்கத்தில ஒருத்தர் இல்ல மச்சான். இப்ப விளங்குது அவ ஏன் இன்னொரு வாழ்க்கையை தேடிப் போனா எண்டு..” சொல்லிக்கொண்டு போனவனுக்கு குரல் அடைத்துக்கொண்டது.

இன்று அவன் எப்படி தாயாக தாரமாக அவனை தாங்க ஒரு உயிரை தேடுகிறானோ, அன்று அவளும் அப்படித்தான் தன் அருகாமையை தேடி இருப்பாளோ என்று தோன்றவும், காலம் கடந்து உரைத்த உண்மையின் கசப்பை தாங்கமுடியாமல் நின்றான் விக்ரம்.

அசோக்குக்கும் பேச்சே வரவில்லை. இப்படியெல்லாம் மனதை தளர விடுகிறவன் அல்ல விக்ரம். அதோடு, எதையும் இலேசில் வெளியில் சொல்லவும் மாட்டான். அப்படியானவன் இப்படி புலம்புகிறான் என்றால்?

“இதுக்குத்தான் சொன்னனான் இன்னொரு கல்..” என்று ஆத்திரத்தோடு ஆரம்பித்துவிட்டு, இதை இப்போ கதைப்பது உசிதமல்ல என்றுணர்ந்து அதை நிறுத்தினான். “நேரமாச்சே.. ஆபிஸ்க்கு உன்னை இன்னும் காணேல்லையே எண்டுதான் எடுத்தனான். இன்றைக்கு நீ வராத. நானே எல்லாத்தையும் பாக்கிறன். நீ ஒண்டையும் யோசிக்காம நிம்மதியா இரு..” என்றுவிட்டு செல்லை அணைத்தான் அசோக்.

விக்ரமுக்கு ஏனோ யாஸ்மினை பார்க்கவேண்டும் போலிருந்தது. அவள் எப்படியிருக்கிறாள், அவள் வாழ்க்கை எப்படிப் போகிறது, இப்போது எப்படியிருப்பாள் என்று தெரியவேண்டும் போலிருந்தது.

உடனேயே சொல்லாமல் கொள்ளாமல் அவள் வீட்டுக்கே போனான்.

1 Comment

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s