நினைவெல்லாம் நீயாகிட வந்தேன்..!! 2

 

18426422_259998427805201_524463775_o

இவனை கண்டதும் அதிர்ந்துபோய் அப்படியே நின்றுவிட்டாள் யாஸ்மின்.

 

அவளையே பார்த்து, “உள்ள வரலாமா?” என்று கேட்டான் விக்ரம்.

 

“வாவா.. உள்ளுக்கு வா விக்கி..”

மலர்ந்த முகத்தோடு வரவேற்றாள் யாஸ்மின்.

 

“எப்படி இருக்கிற விக்கி? என்ன திடீரென்று வந்திருக்கிறாய்? டெனிஷ் எப்படி இருக்கிறான்?” என்று அவள் கேள்விகளை அடுக்க, அன்றிலிருந்து இன்றுவரை இயல்பு மாறாமல், படபடக்கும் அவளை ஆராய்ந்தன அவன் விழிகள்.

 

தோளை தொட்டுக்கொண்டிருந்த முடியை ஆண்களை போன்று வெட்டி விட்டிருந்தாள். கன்ன உச்சி பிரித்து இழுத்திருந்தவளின் முடி, ஒற்றைப் பக்க புருவத்தில் வந்து மோத, அதை நளினமாக ஒதுக்கிவிட்டு, “என்ன குடிக்கிறாய் விக்கி? கபே தரவா?” என்று அவனை அறிந்தவளாக கேட்டாள்.

 

“ம்.. கொண்டுவா..”

 

அவள் சமையலறைக்குள் சென்றதும் வீட்டை ஆராய்ந்தான். பெரிய வசதி இல்லை என்பது பார்த்தாலே தெரிந்தது. ஒரு குட்டி ஹால். தமிழ் எழுத்து டானா ஷேப்பில் அமைந்த சிறு சோபா. அதுவும் பழையது. அதற்கு முன்னால் சின்னதாக ஒரு டிவி. அவ்வளவுதான்.

 

சொல்லாமல் கொள்ளாமலே, அவள் ஆசைப்பட்டு வாங்கிய அவர்கள் வீட்டு சோபாவும், ஒருபக்கச் சுவரையே பிடித்திருந்த தொலைக்காட்சியும் மனக்கண்ணில் வந்தது.

 

அவள் கொண்டுவந்த கபேயை அருந்தியபடி, “எப்படி இருக்கிற?” என்று விசாரித்தான்.

 

“நானும் டிம்மும் நல்ல சந்தோசமா இருக்கிறம் விக்கி. எங்களுக்கு ஒரு மகள் இருக்கிறாள். சாராவுக்கு ஒரு வயசுதான். அதால வீட்டுலேயே இருந்து அவளை பாக்கிறன்.”

 

உற்சாகப்பந்தாய் அவள் சொல்லும்போதே, “மம்மி..” என்றபடி கண்ணை கசக்கிக்கொண்டு எழுந்து வந்தது ஒரு குட்டி தேவதை.

 

தேவதையேதான்!

 

இவனை கண்டதும் விழிகளை உருட்டி பார்த்தாள். இவனும் அவளையே பார்க்க, உருண்டை கண்களில் குழப்பமும் பயமும் தோன்ற ரோஜா இதழ்கள் பிதுங்கத் தொடங்கியது.

 

“சாரா, இங்கே வா..!” என்று அழைத்தாள் யாஸ்மின்.

 

தாயின் மடியில் அமர்ந்துகொண்டது குழந்தை. அவனால் அந்தக் குழந்தையிடமிருந்து விழிகளை அகற்றவே முடியவில்லை. டெனிஷை சிறு வயதில் பார்த்தது போலவேயிருந்தாள்.

 

“நீ சந்தோசமாக இருக்கிறாயா யாஸ்…யாஸ்மின்..” என்றவனின் விழிகள், அவர்களின் வசதிக்குறைவை சுட்டுவது போல அந்த வீட்டை சுற்றிச் சுழன்றது.

 

அதைக் கவனித்துவிட்டு புன்னகைத்தாள் யாஸ்மின். “சந்தோசம் எண்டு நீ எத நினைக்கிற விக்கி? வீட்டில இருக்கிற பொருளையும் காசையுமா? அது தப்பு விக்கி. மனதில தான் இருக்கு சந்தோசமும் மகிழ்ச்சியும். அப்படி பாத்தா நானும் டிம்மும் நல்ல சந்தோசமா இருக்கிறம். என்ன விட்டுட்டு ஒருநாள் இருக்கமாட்டான் அவன். வருவாய் கொஞ்சம் குறைவுதான். அதுக்கென்ன? என்றைக்குமே காசுக்கு நான் ஆசைப்பட்டது இல்லையே விக்கி. நானும் வேலைக்கு போனா இன்னும் நல்லா வாழலாம் தான். ஆனா, சாராவுக்கு மூண்டு வயசாகி, அவள் கிண்டர்கார்டனுக்கு போனபிறகுதான் வேலைக்கு போவன். காசு எப்பவும் உழைக்கலாம்.. ஆனா, சாரா வளந்தபிறகு அவளின்ர சின்ன வயசு சந்தோசத்த எங்களால அனுபவிக்க முடியுமா சொல்லு? அத மாதிரித்தான் இளமையும். இருக்கேக்க சந்தோசமா வாழோணும். அத இழந்து கிடைக்கிற எதிலையும் நிறைவும் இல்ல, திருப்தியும் இல்ல.”

 

அவள் சொல்வதை தலையசைத்துக் கேட்டுக்கொண்டான் விக்ரம்.

 

இன்று அவன் உணர்ந்ததை அன்று அவள் உணர்ந்திருக்கிறாள். அன்று அவளை தனிமையில் அவன் வாட விட்டிருக்கிறான். என் மனைவியை நெஞ்சில் சுமக்கிறேன், அவளை உயிராக நேசிக்கிறேன் என்று அவனாக அவனுக்குள் ஒரு கற்பிதம் வைத்திருந்திருக்கிறானே தவிர, அவளின் நிலையை உணர மறந்து விட்டிருந்தான்.

 

“நீ சொல்றது சரிதான் யாஸ். இத அண்டைக்கு நான் யோசிக்க மறந்திட்டன். என்னவோ.. உன்னையும் டெனிஷையும் நல்லா வச்சிருக்கோணும் எண்டு நினைச்சன். அதுக்கு காசு வேணும். அப்ப எல்லாம் என்ர மனதில நிறைய கற்பனை. உன்னையும் அவனையும் கூட்டிக்கொண்டு இந்த உலகத்தையே சுத்தோணும். யாரும் வாழாத வாழ்க்கையை உனக்கு தரோணும் எண்டு புறவாழ்க்கைய பற்றி யோசிச்ச நான் மனத யோசிக்க மறந்துதான் போனன்.” என்றான் அவன்.

 

அவள் விழிகள் லேசாகக் கலங்கியது. “நீ நல்லவன் விக்கி. என்ன விளங்கிக்கொள்ளுவ எண்டு நினைச்சன். அதேமாதிரி விளங்கிக்கொண்டாய். இது போதும் எனக்கு.”

 

“ஆனா ஒண்ட மறந்திட்ட நீ. உன்ன காதலிச்சு, கை பிடிக்கேக்க நீ சாதாரண விக்கிதான். அந்த விக்கிய, ஏழ்மையிலும் அன்ப மட்டுமே அள்ளியள்ளிக் கொட்டின அந்த விக்கியதான் நான் உயிராகக் காதலிச்சனான். அதுக்குப்பிறகு நீ காசுக்கு பின்னால ஓடத் தொடங்கிட்ட. இளைப்பாற மட்டும் தான் என்னட்ட வந்த. எனக்கோ நீ பக்கத்தில இருந்து, உன் அன்ப  மட்டுமே தரோணும் போல இருந்தது. எண்டைக்குமே காசு பணத்துக்கு நான் ஆசைப்பட்டதில்ல.”

 

அன்று கேட்க மறுத்ததை இன்றாவது கேட்கிறானே என்கிற நிம்மதி அவளிடம்!

 

ஆனால் அவன் முகத்தில் உணர்ச்சிகளே இல்லை.

 

எங்கோ வெறித்துக்கொண்டு, “உன்ர மனத நீயாவது சொல்லியிருக்கலாம் யாஸ். வேறொரு வாழ்க்க தேடமுதல் உன்ர விருப்பத்த, ஆசைய, ஏக்கத்த என்னட்ட ஏன் சொல்லேல்ல? சாராவ பற்றி இண்டைக்கு இவ்வளவு யோசிக்கிறவள் அண்டைக்கு டெனிச பற்றி ஏன் யோசிக்கேல்ல?” என்று கேட்டான் அவன்.

 

பதிலின்றி தலைகுனிந்து அமர்ந்திருந்தாள் யாஸ்மின். கணவன் அவர்களுக்காகத்தான் கஷ்டப்படுகிறான் என்று தெரிந்து, மனதின் ஆசைகளையும் இளமையின் தேவைகளையும் அடக்கிக்கொண்டு தான் அவளும் வாழ்ந்தாள். அந்த நேரத்தில்தான் டிம்மின் நட்பு அவளுக்கு கிடைத்தது.

 

அவன் என்னவோ சாதாரண நண்பனாகத்தான் அறிமுகமானான். நாட்கள் செல்லச் செல்ல, அவனது அன்பும், நிதானமும், பழகும் விதமும் அவளை கவர்ந்து அவள் அறியாமலேயே அவள் மனதில் அவன் வந்திருந்தான். அதை அவள் உணர்ந்தபோதோ அவன் முற்றிலுமாக அவள் மனதை ஆக்கரமித்திருந்தான்.

 

பிறகு எங்கே கணவனிடம் அதைப் பற்றிக் கதைப்பது? அவன்தான் மனதுக்குள் வந்து விட்டிருந்தானே!

 

இதை எப்படி இப்போது அவனிடம் சொல்வது? ஏற்கனவே நொந்துபோய் இருக்கிறவனிடம்!

 

அவள் அமைதியாக இருக்க புதியவனை வேடிக்கை பார்த்து முடித்துவிட்ட சாரா, வீட்டுக்கு பின்னால் விளையாடப் போகவும், கபே கப்பை எடுத்துக்கொண்டு தானும் அவளோடு நடந்தான் விக்ரம்.

 

சின்னத் தோட்டம் வைத்திருந்தார்கள். நான்கு தக்காளி, நான்கு கத்தரி, கொஞ்சமாக காரட், மிளகாய் கன்று கூட ஒன்று நின்றது. அதை அவன் பார்க்கவும், “உன்னோட இருக்கேக்க பழகினது. எப்பயாவது மிளகா சாப்பிடுவன்.” என்றாள் அவனோடு கூட வந்த யாஸ்மின்.

 

“நீ எப்படி சாப்பிடுவ எண்டு எனக்கு தெரியாதா? ஒரு மிளகாய நாளா வெட்டி அத நாலு நாளுக்கு வச்சு சாப்பிடுவா.” என்று சொல்லி சிரித்தான் விக்ரம்.

 

“விக்கி! கேலி செய்யாத! நீ சாதாரணமாக நாளு மிளகாய ஒரே நேரத்தில உள்ள தள்ளுவ. நான் டிம்மிட்ட கூட சொல்லியிருக்கிறன். அவன் வாய பிளந்தான்.” என்று சொல்லி அவள் சிரிக்க, அந்த நாட்கள் மனக்கண்ணில் ஓட உள்ளே வலி எழுந்தது அவனுக்கு.

 

அவன் மிளகாயை சாப்பிடுவதை பார்த்து, “இது அவ்வளவு ருசியாவா இருக்கும் விக்கி?” என்று கேட்டவளின் வாய்க்குள் அன்று அவன் ஒரு மிளகாயை திணித்ததும், விவகாரம் தெரியாமல் அவள் அதை சப்பியதும், உறைப்பு தாங்காமல் அவள் பட்ட பாடும், அதை தடுக்க அவன் வழங்கிய இதழ் முத்தமும் என்று அவன் நினைவுகள் அந்த நாட்களுக்கு ஓட மனமோ இழந்துவிட்ட சொர்க்கத்தை மீட்க வழியின்றிப் போனதில் துடித்துத் துவண்டது.

 

அன்று மட்டுமல்ல, அடுத்துவந்த வாரம் முழுவதுமே அவள் வயிற்று வலியால் துவண்டதும், அவளை தன் குழந்தையை போல் தாங்கிப் பேணியதும், காதலில் அவள் உருகியதும் என்று எத்தனை அழகான நாட்கள்!

 

அப்படி அவனோடு வாழ்ந்தவள் எப்படி இன்னொருவனை மனதில் நினைத்தாள்? என்னதான் தனிமை கொடுமை என்றாலும், அவளின் செயலில் ஏதாவது நியாயம் இருக்கிறதா?

 

கேள்வி நெஞ்சில் எழ அவளை திரும்பிப் பார்த்தான். அவர்களின் குட்டித் தோட்டத்துக்கு, சேமித்து வைத்திருந்த மழைநீரை அள்ளி ஊற்றிக்கொண்டிருந்தாள் யாஸ்மின். அவளுக்கு பின்னால் தானும் தோட்டத்துக்கு நீர் விடுகிறேன் என்கிற பெயரில் தன்னை நனைத்துக் கொண்டிருந்தாள் சாரா.

 

இவன் பார்க்கவும், “என்ன பார்க்கிற?” என்று கேட்டாள் யாஸ்மின்.

 

மனதில் இருப்பதை சொல்ல முடியாமல், “இது சொந்த வீடா யாஸ்? தோட்டம் எல்லாம் வைத்திருக்கிற?” என்று கேட்டான்.

 

“இல்ல.. வாடகை வீடுதான். ஆனால், உரிமையாளர் நல்ல மனுஷன். அதால சொந்தவீடு மாதிரித்தான் எங்களுக்கு..”

 

“வாழ்க்க எப்படி போகுது யாஸ்? நான் ஏதாவது உதவி செய்யவா? எது எண்டாலும் யோசிக்காம கேளு! கட்டாயம் செய்றன்.”

 

அவள் புருவங்களை சுருக்கவும், “தப்பான எண்ணத்தில கேக்கேல்ல யாஸ். என்னட்ட தேவைக்கு அதிகமாகவே இருக்கு. அது உனக்கு தேவைப்பட்டா எனக்கு அதுல சந்தோசம். அதால மட்டும் தான் கேட்டன்.” என்றான் அவன்.

 

“எனக்கு உன்ன தெரியாதா விக்கி? ஆனா, மெய்யாவே தேவை எண்டு எதுவுமே இல்ல விக்கி. என்னில உயிரையே வச்சிருக்கிற அன்பான கணவன். அழகான குட்டி சாரா. சின்ன வீடு, போதுமான சம்பாத்தியம், போதாக்குறைக்கு நம் மகன் டெனிஷ். இதவிட வேற என்ன வேணும் சொல்லு?”

 

அவளையே பார்த்தான் விக்ரம்.

 

என்னை தெரியும், என் மனதை தெரியும், என் எண்ணங்களை தெரியும், என்னைப்பற்றி எல்லாவற்றையும் தெரிந்து வைத்திருந்தவள் ஏனடி என்னை விட்டுப் போனாய் என்று கத்தவேண்டும் போலிருந்தது.

 

அடக்கிக்கொண்டான்!

 

அவள் கட்டாயப்படுத்தி தந்த மதிய உணவையும் முடித்துக்கொண்டு அவன் விடைபெற்ற போது, மனதில் எந்தளவு தூரத்துக்கு வலி இருந்ததோ அந்தளவு தூரத்துக்கு நிறைவாகவும் உணர்ந்தான்!

 

அவன் நேசித்த பெண், அவளாவது சந்தோமாக வாழ்கிறாளே.

சாராவோ அதற்கிடையில் அவனோடு நன்றாக ஒட்டிவிட்டிருந்தாள். தன் மகனைப்போன்ற சாயலில், தான் நேசித்த பெண்ணின் வடிவில் இருந்த குழந்தையை கையிலிருந்து இறக்கவே முடியவில்லை அவனால்.

 

அவனது முன்னாள் மனைவியின் இந்நாள் கணவனின் குழந்தை என்று தெரிந்தாலும் முடியவில்லை. பாசம் உள்ளே பொங்கிற்று!

 

“இவள எனக்கே எனக்கென்று தந்துவிடேன் யாஸ். என்னால் இவள விட்டுவிட்டு போக முடியும்போல தெரியேல்ல..” என்றான் கைகளில் இருந்தவளை இறக்க மனமற்று.

 

பொலபொலவென்று கண்ணீர் கொட்டியது யாஸ்மினின் கண்களில் இருந்து. “டெனிஷை பிரிஞ்சு இருக்கிறதையே என்னால இண்டைக்கு வரைக்கும் தாங்க முடியேல்ல விக்கி. என்ன இருந்தாலும் உனக்கு நான் செய்தது பெரிய துரோகம். இதுல அவனையும் உன்னட்ட இருந்து பிரிச்சா நீ தாங்கமாட்ட எண்டுதான் அவன உன்னட்டையே விட்டுட்டு வந்தன். இவளையும் தந்துவிட்டு என்னை என்ன செய்யச் சொல்ற விக்கி?” என்று அவள் கேட்டபோது, அவன் கண்களும் பனித்துவிட்டது.

 

சட்டென்று அங்கிருந்து நகர்ந்து வீதிக்கு வந்தான். சாரா வீதியை வேடிக்கை பார்க்க, அவன் நெஞ்சமோ பூகம்பத்தின் பிறப்பிடமாகிப்போனது.

 

அழகாக அவன் பார்த்துப் பார்த்துக் கட்டிய குருவிக்கூடு சிதைந்தே போயிற்று! இனி சீரமைக்கவே முடியாது!

 

தன் உணர்வுகளை அடக்கிக்கொள்ள பெரும் சிரமப்பட்டான் விக்ரம்.

 

தாயை தேடியோ என்னவோ அவன் தோளுக்கு பின்னால் பார்க்க முற்பட்ட சாராவின் செப்பு இதழ்கள் அதன்பாட்டுக்கு இவன் கன்னத்தை உரசிச் செல்ல, சிலிர்த்துப்போய் திரும்பி, பனித்த விழிகளால் அந்தக் குட்டியை பார்த்தான்.

 

அவள் தாயை தேடுவது கண்ணில் பட, உண்மை உறைக்க, நிகழ்காலமும் நினைவுக்கு வந்தது.

 

மனம் கனத்தாலும் யாஸ்மினின் சந்தோசமான வாழ்க்கை ஒருவித நிறைவைத்தான் கொடுத்தது அவனுக்கு.

 

சாராவை அவளிடம் கொடுத்துவிட்டு விடைபெற்றான்.

 

“விக்கி..” தயக்கத்தோடு அழைத்தாள் யாஸ்.

 

கதவை திறந்து காருக்குள் ஏறப்போனவன் நின்று பார்த்தான்.

 

“இனியாவது இன்னொரு திருமணத்தைப் பற்றி யோசிக்கலாமே..” மெல்லச் சொன்னாள்.

 

அவளையே பார்த்தான் விக்ரம். நெடிய மூச்சொன்றை இழுத்துவிட்டான். பின், “இனி யோசிக்கிறன்..” என்றுவிட்டு காரிலேறிச் சென்றான்.

 

நாட்கள் அதன்பாட்டுக்கு நகர்ந்தன.

 

வளர்ந்துவிட்ட டெனிஷ்க்கும் பரந்துகிடக்கும் உலகத்தில் பல நண்பர்கள். வீடு தங்குவதே கிடையாது. இவனும் தொழில் தொழில் என்று தொழிலே கதியென்று கிடந்தான்.

 

அவ்வப்போது இன்னோர் திருமணம் பற்றி யோசனை வரும். யாரை.. என்று நினைத்ததும் யாஸ்மினின் முகம் மட்டுமே மனக்கண்ணில் மின்னியது. சில நேரங்களில் நினைப்பான், நான் இவ்வளவு ஆழத்துக்கு அவளை நேசித்திருக்கக் கூடாதோ என்று.

 

அன்று அசோக், “ஒரு இடத்துக்கு போவம் வா.” என்று இவனை இழுத்துக்கொண்டு வந்திருந்தான்.

 

அது ஒரு சிவப்பு விளக்குப் பகுதி!

 

அந்த இடத்தை பார்த்ததும், “என்னடா இங்க வந்திருக்கிற?“ என்று கேட்டான் விக்ரம்.

 

“இங்கதான்! நீ போய்ட்டு வாடா.”

 

நண்பனை வியப்போடு திரும்பிப் பார்த்தான். “நான் நல்லவனா இருக்கிறதுல உனக்கு என்னடா கஷ்டம்?” இலகுவாகவே கேட்டான்.

 

ஆனால் அவனோ தீவிரமாக இருந்தான். “இங்கே வாரவே எல்லாரும் கேட்ட மனுசர் இல்ல விக்கி. நீயும் எண்டைக்குமே நல்லவன் தான். அதால எதப்பற்றியும் யோசிக்காம போ.”

 

அதுவரை இருந்த இலகுத்தன்மை அகன்றது. “திடீரெண்டு ஏன்டா இந்த முடிவுக்கு வந்த?”

 

“நீ படுற கஷ்டத்த பாத்துத்தான்! நானும் ஒரு ஆம்பிள. உன்ர கஷ்டம் எனக்கு விளங்காதா? போ மச்சான்..” என்றான் அவன் தோளில் தட்டி.

 

“என்னடா என் நிலை?”

 

“தனியா இருக்கிறியேடா. மனுசி எண்டு ஒருத்தி இல்ல. அண்டைக்கு எடுத்து போன்ல கத்தினாயே.. பிறகும் என்னடா?”

 

“உண்மதான். பக்கத்துல ஒருத்தி இருந்தா எவ்வளவோ நல்லம் எண்டு இப்பவும் நினைக்கிறன்தான். அது வெறும் உடம்பு தேவைக்கு மட்டுமில்ல. அதுவும் தேவைதான். அதவிட முக்கியமாக மனதுக்கு தான்டா ஒரு துணை தேவ. என்னோட கதைக்க, என்னோட சேர்ந்து சிரிக்க, என்னோட சேர்ந்து ஒரு கப் கஃபே குடிக்க, என்னோட சேர்ந்து மாலையில் நடக்க, இரவில் தூங்கும்போது அருகில் துணையாக உறங்க, எனக்கு சமைத்துத் தர, என்னோட சேர்ந்து சாப்பிட, என்னோட சண்டை பிடிக்க, எனக்கு எதையாவது வாங்கித்தா என்று அடம்பிடிக்க, அவளுக்காக என்று ஒன்றை நான் செய்ய எண்டு இப்படி பலதுக்காக எனக்கு ஒரு துணை வேணும்தான். ஆனா.. இதுக்காக மட்டும் ஒரு பொம்பிளட்டவாறது.. ப்ச் அது கேவலம்டா! அந்த கேவலத்த என்ன செய்ய சொல்றியா?” சின்னக் கோபம் எட்டிப்பார்த்தது அவன் பேச்சில்.

 

“லூசன் மாதிரி பேசாத! உன்ன நானே அப்படிச் சொல்வனா? நீ சொல்ற மாதிரி ஒருத்தி எண்டா அது மனுசியாத்தான் இருக்கவேணும். நல்லவளா ஒருத்திய நானே பார்க்கிறன். அது பிறகு. இப்ப நீ இங்க போய்ட்டு வா..” என்றான் அசோக்.

 

“நோ மச்சான். இங்க வாறதா இருந்தா என்றைக்கு யாஸ்மின் என்ன விட்டுப் போக காரணம் என்ன என்று உணர்ந்தேனோ.. என்றைக்கு எனக்கு ஒரு துணை வேண்டும் என்று யோசித்தேனோ அன்றைக்கு வந்திருப்பேன்டா.”

 

எதற்கும் வளைந்து கொடுக்காத நண்பனை முறைத்தான் அசோக்.

 

“எல்லாத்திலையும் பிடிவாதம்! ஆரம்பத்தில யாஸ்மின தான் கட்டுவன் எண்டு  பிடிவாதம். பிறகு வாழ்க்கையில முன்னேறவேணும் எண்டு பிடிவாதம். இப்ப இதுக்கும் பிடிவாதம். இந்தப் பிடிவாதத்தால எவ்வளவு பெற்றியோ அதேயளவு இழந்தும் இருக்கிற..” சலித்துக்கொண்டான் அசோக்.

 

அவன் பேச்சில் இருந்த உண்மையில் ஒன்றும் சொல்லவில்லை விக்ரம். ஆனால், அந்தப் பிடிவாதம் தான் விக்ரம். அதுதான் அவன் இயல்பு. ஒன்றையே பற்றி அதிலேயே நின்று வென்று காட்டுகிறவன் அவன். அந்த இயல்பை மாற்ற முடியாதே!

 

“உன்ன இப்படியே விட்டா சரியா வராது. நாங்க நாளைக்கே போறம் இலங்கைக்கு. உனக்கு பொம்பிள பாக்க!” என்றான் முடிவாக.

 

நேரெதிரே பார்வையை பதித்து சற்று யோசித்தான் விக்ரம். பிறகு, “நாளைக்கு முடியாது. வேலையெல்லாம் கொஞ்சம் ஒதுக்கிக்கொண்டு போகலாம்.” என்றான்.

 

அந்தப் பதிலை அவனிடமிருந்து சற்றும் எதிர் பாராததில், “ஹேய்… சூப்பர்டா..” என்று அசோக் சந்தோசப்பட,

 

“வாறவளும் என்ன விட்டுட்டு போகாம இருந்தா சரிதான்.” சின்னச் சிரிப்போடு சொன்னான் விக்ரம்.

 

விரக்தி கலந்த அந்தச் சிரிப்பில் இருந்த வேதனையை உணர்ந்தான் அசோக். அவனுக்கு ஒரு நல்லதை செய்தே ஆகவேண்டும் என்கிற உறுதியோடு நண்பனின் தோளில் நம்பிக்கையோடு தட்டிக் கொடுத்தான்!

 

3 Comments

    1. மிக அழகான கமென்ட் உங்களினது. மிக்க நன்றி!! தொடர்ந்து படிச்சிட்டு மறக்காம சொல்லுங்க..

      Like

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s