நினைவெல்லாம் நீயாகிட வந்தேன்.! 3

222222

அசோக்கும் விக்ரமும் யாழ்ப்பாணம் வந்திருந்தனர்.

விக்ரம் இன்னோர் திருமணத்துக்கு சம்மதம் சொல்லிவிட்டாலும் அவனை அங்கிருந்து கிளப்பிக்கொண்டு வருவதற்குள் போதும் போதும் என்றாகிவிட்டது அசோக்குக்கு.

“நீயும் நானும் இலங்கைக்கு போனால் யார் இதையெல்லாம் பாக்கிறது?”  என்று வேலையை காரணம் காட்டியபோது, அதற்கு பொறுப்பான ஆட்களை நியமித்து அவன் வாயடைத்தான்.

“டெனிஸ் வளந்திட்டான் மச்சான். இனிப்போய் இன்னொரு கல்யாணமா?” என்று தயங்கியபோது முறைத்துவிட்டு டெனிசையே கூட்டி வந்து, “பாப்ஸ்.. நீங்க கல்யாணம் கட்டுறதுக்கும் எனக்கும் என்ன சம்மந்தம்? முதல் ஒரு கல்யாணத்த கட்டிக்கொண்டு வாங்கோ. உங்கட முகத்தையே பாத்து பாத்து போரடிக்குது!” என்று சொல்ல வைத்தான்.

“டேய்! என்னடா! போற போக்குல என்ர மகன என்னட்ட இருந்து பிரிச்சிடுவாய் போல. எனக்கெண்டு இருக்கிறது அவன் மட்டும் தான்டா..” என்றான் சிரித்துக்கொண்டு.

“நீ ஊருக்கு வராட்டி அதையும் செய்வன்!” என்று மிரட்டியே அவனை அழைத்து வந்திருந்தான்.

வந்து ஒரு வாரமாயிற்று. விக்ரமுக்கு யாரும் அங்கில்லை. இருந்தாலும் தெரிய வாய்ப்பும் இல்லை. பெற்றவர்களோடு சிறு வயதிலேயே ஜேர்மன் வந்துவிட்டவனுக்கு சொந்த பந்தங்களை நினைவும் இல்லை. எனவே அசோக்கின் பெற்றவர்கள், உறவுகள் தான் பெண் பார்த்தனர்.

“யாரையாவது பாத்து வச்சிட்டு கூப்பிட்டு இருக்கலாமேடா.. சும்மா நாள் போகுது.” என்று அதற்கும் சலித்தான் அவன்.

“ஏன்.. பிள்ளையையும் பெத்திட்டு கூப்பிடுறன். அதுக்கு பிறகு வாவன்!” என்று முறைத்துவிட்டுப் போனான் அவன்.

கல்யாணமாகாத இளம் பெண்களை இவனுக்கு மனமில்லை. தனக்கு முப்பத்தியிரண்டு வயது. திருமணமாகி.. ஒன்பது வயதாகப்போகும் மகன் வேறு. கணவன் இழந்த பெண்கள் பரவாயில்லை என்று பார்க்கச் சொன்னான். அப்படியானவர்களை அசோக்குக்கு பிடிக்கவில்லை. கம்பீரமும், களையும், நிறமுமாக தோற்றமளிக்கும் தன் நண்பனுக்கு திருமணமான பெண் பொருத்தமாகவே படவில்லை.

“டேய் கல்யாணம் உனக்காடா..? அவனுக்குத்தானே. அவன் சம்மதிச்சாலும் நீ விடமாட்ட போல..” என்று சொல்லியும் பார்த்தார் அவன் அன்னை மரகதம்.

“நாங்க வருசக்கணக்கில வெளிநாட்டுல குளிருக்க இருந்த ஆட்கள் மச்சி. கலராத்தான் தெரிவோம். இங்க இருக்கிறதுகள் வெயிலுக்க காஞ்சு கருவாடாப்போய் இருக்கிறதுகள். அங்க வந்து ஆறுமாதமான எங்களை விட நிறமா வந்திடுவாங்க.. இல்லாட்டியும் பிரச்சனை இல்ல மச்சான். யாரையாவது பார். அழகெல்லாம் முக்கியமில்ல.” என்று விக்ரமும் சொல்லிப்பார்த்தான்.

அவனுக்கு அசோக்கின் தொல்லைக்கு யாரையாவது கட்டிக்கொண்டால் போதும் என்றிருந்தது. புது மாப்பிள்ளைக்கு கூட இப்படி தேடமாட்டார்கள். அந்தளவுக்கு ஊருக்குள் பெண்களை சலித்துக்கொண்டிருந்தான் அசோக்.

விக்ரமோ யாரை பார்த்தாலும் அங்கே யாஸ்மினின் முகத்தை தேடி மனம் சோர்ந்தான்.

அது தவறு என்று தெரியாமல் இல்லை! மனம் தானாக அவளை தேடினால் அவன் என்ன செய்வான்?

‘மறக்கோணும்.. அவள மறக்கடிக்கிற மாதிரி ஒருத்தி கிடைக்கோணும்.’

ஆனால் நம்பிக்கையில்லை!

அந்தளவு தூரத்துக்கு யாஸ்மின் அவனுக்குள் ஊனும் உயிருமாக ஊடுவியிருந்தாள். இன்னொருவனுக்கு மனைவியாகி ஒரு குழந்தைக்கு அன்னையானவளின் நினைவுகளை தனக்குள் இருந்து பிடுங்கி எறியத்தான் அவனும் விரும்புகிறான். நடந்தால் தானே?

‘இந்தளவு தூரத்துக்கு நானும் அவளை நேசித்திருக்கக் கூடாதோ’ என்றும் சில நேரங்களில் தோன்றும்.

இன்றும் நேசிக்கிறானா என்று கேட்டால் நிச்சயமாக இல்லை தான்! ஆனால், அன்றைய நாட்களின் வலி இன்னும் மிச்சமிருந்தது.

அவள் உண்டாக்கிவிட்ட காயமும் ஆறாமல் கிடந்தது.

மீண்டும் சொல்லிக்கொண்டான்.. “மறக்கோணும்! அவள மறக்கிற மாதிரி ஒருத்தி கிடைக்கோணும்!” என்று.

இதற்குமேலும் இப்படியே இருந்தால் இன்னுமின்னும் அவளைப் பற்றித்தான் நினைப்போம் என்று எண்ணி, “வாடா கசூரினா பீச்சுக்கு போவோம்” என்று அசோக்கை அழைத்தான்.

இருவருமாக தயாராகி காரில் ஏறி கார் புறப்பட்டதும் விக்ரமின் பார்வை தானாக காருக்கு பின்னால் பார்த்தது. அவனை ஏமாற்றவில்லை அந்தக் குட்டிப்பெண்.

இரண்டு அல்லது இரண்டரை வயதுதான் இருக்கும். இவர்களின் காரை துரத்திப் பிடிக்கிறவள் போல் குட்டிப் பாதங்களை குடுகுடு என்று வைத்து காரை துரத்திக்கொண்டு வந்தாள். முகத்தில் அரும்பிய புன்னகையோடு அவளையே பார்த்தான் விக்ரம்.

ஏனோ சாராவை நினைவூட்டினாள் அவள்.

அந்த வெயிலுக்கு இதமாக மேலே கையில்லா லேஸ் வைத்த ஒரு குட்டிச் சட்டை வயிறு வரை நின்றது. கீழே பாவாடையோ ஜீன்ஸோ எதுவுமில்லை. குட்டியா ஒரு நிக்கர். அதுவும் கால்களில் லேஸ் வைத்தது. அவ்வளவுதான். அந்தப் பூப் பாதங்களில் மட்டும் அகன்ற கால் சலங்கை. நெற்றியில் பெரிய கறுப்புப் பொட்டு. கன்னத்திலும் குட்டியாக திருஷ்டிப் பொட்டு. கொளுத்தும் வெயிலில் இருந்து தப்பிக்க முடியை ஆண் குழந்தைகளுக்குப் போன்று நல்ல குட்டையாக வெட்டி இருந்தாள்.

அவள் வெறுங் கால்களுடன் இவர்களை துரத்த.. ‘ஐயோ செல்லத்துக்கு கால்ல கல்லு குத்தப் போகுதே’ என்று விக்ரமின் மனம் தானாக துடிக்கும்போதே, அவளின் அன்னை ஓடிவந்து அவளை தூக்கிக்கொண்டாள்.

இது அவன் வந்த முதல் நாளிலிருந்து நடக்கும் அழகிய காட்சி. முதல் நாள் அவள் ஓடி வரவும், எதேர்ச்சையாக காரின் பின் கண்ணாடியால் பார்த்தவன்,  ஏன் இப்படி ஓடி வருகிறாள் என்று பார்த்தான். அடுத்தநாள் ஓடி வந்தபோது சின்னப் புன்னகையோடு அவளை ரசித்தான். அதற்கு அடுத்தநாள் காரை எடுத்ததுமே அந்தக் குட்டி வருகிறாளா என்று எதிர்பார்ப்புடன் இவன் தானாகவே திரும்பிப் பார்த்தான். அவளும் ஏமாற்றாமல் வந்தாள். இங்கே ஒரு காதை வைத்துக்கொண்டே இருப்பாள் போலும். கார் ஸ்டார்ட் செய்த சத்தம் கேட்டதுமே அவள் தத்தக்கா பித்தக்கா என்று ஓடிவரும் காட்சியை காணலாம்.

‘ஒரு நாளைக்கு அந்த குட்டியை ஏத்திக்கொண்டு ஒரு ரவுண்ட் வரோணும்.’ மனதில் முடிவெடுத்தான்.

“யாருடா அது?”

திடீரென்று விக்ரம் கேட்கவும், முன் பக்கம் விழிகளை சுழற்றிவிட்டு “யாரை கேக்கிறாய்?” என்று கேட்டான் அசோக்.

பின் பக்கம் கையால் காட்டினான் விக்ரம். திரும்பிப் பார்க்க, அவள் அசோக்கின் பக்கத்துவீட்டு கேட்டை திறந்து போவது தெரியவும் முகத்தை சுளித்தான் அசோக்.

“எங்கட ஊர்தான். நல்ல குடும்பத்து பிள்ளைதான். முந்தி எங்களுக்கு நல்ல பழக்கம். இப்ப யாரும் அதோட கதைக்கிறேல்ல.” என்றான்.

“ஏன்டா?”

அந்தக் குழந்தை பாவமே.. என்றிருந்தது அவனுக்கு.

“தெரியேல்ல மச்சான். அடிபாட்டுல அதுன்ர மொத்த குடும்பமும் போய் சேந்திட்டினம். இது பிள்ளையோட வந்து நிக்குது.. என்ன எப்படி ஒண்டும் தெரியாது. புருஷன் எங்க எண்டு கேட்டா செத்திட்டார் எண்டு மட்டும் சொல்லுமாம். அதுக்கு மேல அதைப்பற்றி ஒண்டும் சொல்லாதாம். மனுஷன் செத்த பிள்ள மாதிரி இல்ல அதை பாக்க. அதால பெருசா யாரும் கதைக்கிறேல்ல.. ஊரும் அந்த பிள்ளைய ஒண்டுக்கும் சேர்க்கிறேல்ல அதுவும் சேராது.” என்றான்.

விக்ரமுக்கு ஏனோ அது நியாயமாக படவில்லை. அவள் வாழ்வில் நடந்த எல்லாத்தையும் கடை பரப்பினால் மட்டும் தான் ஊர் அவளை சேர்க்குமா.. கடை பரப்பாவிட்டால் அவள் பிழையானவளா? இது என்னவிதமான கொள்கை? எவ்வளவுதான் முன்னேறினாலும் இப்படி அர்த்தமற்ற செயல்கள் மட்டும் நம்மவர்களிடம் இருந்து மாறாது போல என்று எண்ணிக்கொண்டான்.

அன்று மாலை வரும்போது அந்த வீட்டை கடக்கையில் தன் பாட்டுக்கு பார்வை அங்கே சென்றது. தகப்பனில்லா குழந்தை என்பது வேறு மனதில் நின்று வாட்டியது!

அந்த வீட்டின் வாசல் படியில் அமர்ந்திருந்தாள் அந்தப் பெண். குழந்தையோ தாயின் மடியில் வாகாக அமர்ந்துகொண்டு கால்கள் இரண்டையும் வெளியே தொங்கப் போட்டிருந்தது. மகளை தன்னோடு வளைத்துப் பிடித்திருந்த கையில் குட்டிக் கிண்ணம் ஒன்றையும் பிடித்திருந்தாள். மறு கையால் அதிலிருந்து உணவை எடுத்து குழந்தைக்கு ஊட்டிக்கொண்டிருந்தாள்.

இவள் வேண்டமாட்டேன் என்று மறுக்க மறுக்க அன்னை ஊட்டுகிறாள் என்பதற்கு சான்றாக, அவளின் வாய் மட்டுமல்ல கன்னங்கள் முழுவதுமே உணவு அப்பிக் கிடந்தது.

‘பெரிய சுட்டிதான்!!’ இதழ்களில் புன்னகை அரும்ப நினைத்துக்கொண்டான்.

இவர்களின் கார் சத்தம் அவளின் காதை எட்டிவிட்டது போலும், தாயின் மடிக்குள் இருந்து துள்ளித் திமிறிக்கொண்டிருந்தாள் இங்கே ஓடிவர.

ஏன் என்றே தெரியவில்லை மீண்டும் சாராவை நினைவு படுத்தினாள் அந்த சுட்டி. கையிலேந்தி கொஞ்சவேண்டும் போல் ஓர் உந்துதல் அவனுக்குள்.

அதன்பின் அவன் கண்கள் அடிக்கடி அந்த வீட்டுக்கே ஓடியது. குழந்தை படுத்துவிட்டாள் போலும், இரவு எட்டுமணி போல் அந்தப் பெண் கிணற்றில் தண்ணி அள்ளி குளிக்கும் சத்தம்,  தனக்கான மாடியறையில் உறக்கம் வராமல் படுத்திருந்த விக்ரமின் காதுகளில் இரவின் நிசப்தத்தில் தெளிவாகவே கேட்டது.

‘ஏன் இந்த நேரத்தில் குளிக்கிறாள்..’ யோசனை அதன்பாட்டுக்கு ஓடிற்று! யாருமே இல்லாமல் தனித்து நின்று மகளை கண்ணுக்குள் வைத்துக் காப்பாற்றுகிறாள் என்பதிலேயே அவன் மதிப்பில் உயர்ந்து நின்றாள்.

அங்கே ஒரு பெண் கணவன் இருந்தும் இன்னொருவனை நாடிப் போகிறாள். இங்கே ஒரு பெண் கணவன் என்கிறவனை சரியாக அடையாளம் காட்டாததினாலேயே ஊர் உலகத்தால் தள்ளிவைக் பட்டிருக்கிறாள். என்ன உலகம் இது? கசந்த புன்னகை ஒன்று அவன் இதழ்களில்!

‘யார் என்ன சொன்னாலும், அவ நல்ல அம்மா. ஒரு நல்ல தாய் கூடாத பெண்ணா இருக்க சந்தர்ப்பமே இல்லை!’ மனம் அழுத்திச் சொன்னது அவனுக்கு.

அடுத்த நாட்களில் அவன் வேலையே அவர்களை கவனிப்பது என்றானது. அதுநாள் வரை கண்கள் கண்டாலும் கருத்தில் பதியாதவை இப்போது பட்டன.

அது ஒரு மண் வீடு. ஒரு அறைதான் எல்லாமே. சமையலுக்கு என்று அதன் அருகே ஒரு பத்தி இறக்கி இருந்தாள். அறையில் ஒரு யன்னல் இருந்து அடைக்கப்பட்ட அடையாளம் தெரிந்தது.

ஒரு வேலிதான் அந்த வீட்டுக்கும் இந்த வீட்டுக்கும் தடுப்பு. வேலிக்கு அருகிலேயே அவள் வீடு அமைந்திருந்தது. அதில் துல்லியமாக அங்கு நடப்பவை இங்கு கேட்டது விக்ரமுக்கு. காலையிலேயே விழித்த குழந்தையின் அழுகை முதலில் கேட்டது. பின் இவள் மகளோடு கதைக்கும் சத்தம்.. பின்னர் சின்னச் சின்ன சினுக்கங்கள்.. பிறகு குழந்தை விளையாடும் சத்தம்.

கொஞ்ச நேரத்தில் மகளை இடுப்பில் தூக்கிக்கொண்டு அவள் போவது தெரிய இவனும் பின் தொடர்ந்தான். என்ன நடக்கிறது ஏன் போகிறான் என்கிற கேள்விகள் அவனிடம் வரவேயில்லை.

அவள் போனது சந்தைக்கு. வெகு சிக்கனமாக காய் கறிகளை பார்த்துப் பார்த்து வாங்கினாள். சிறு காரட் ஒன்றினை மகளுக்கு கடிக்கக் கொடுத்தாள். இவனும் அசோக் வீட்டுக்கு காய் கறிகளை வாங்கிக்கொண்டான்.

திரும்பி வரும்போதுதான் கவனித்தான். கொண்டைதான் போட்டிருந்தாள். ஆனாலும் பின் மண்டை முழுவதையுமே பிடித்திருந்தது அது. மிகவுமே மெல்லிய தேகம். சுடிதார் அணிந்திருந்தாள். அவளின் நடையில் உடையில் முகத்தில் ஒருவித இறுக்கம்!  யாரும் நெருங்க முடியாத படிக்கு. சந்தையிலும் கவனித்தான்.. யாரினதும் கண்ணை பார்த்து ஒருவித கண்டிப்போடேயே இருந்தது அவளின் பேச்சு.

அந்தப் பார்வையும் பேச்சும் அவளது இயல்பு அல்ல என்று அவள் முகமே காட்டிக் கொடுத்தாலும், அந்தக் பார்வையும் பேச்சும் அவள் போட்டு வைத்திருக்கும் வட்டத்தை தாண்டி யாரையும் வர விடாது என்று நன்றாகவே தெரிந்தது.

ஒரு நெருப்பு வளையம்! ஆனால், அந்த வளையம் போட்டு அதற்குள் வாழும் நிலைக்கு ஒரு பெண்ணை தள்ளிய சமூகத்தை என்ன செய்வது? இதில் யார் யாரை பிழை சொல்லி ஒதுக்கி வைப்பது?

ஏனோ அவள் தவறானா பெண்ணாக இருப்பாள் என்கிற எண்ணம் கொஞ்சமும் வரவில்லை அவனுக்கு. பின்னால் அவன் வருகிறான்.. ஒரு அதிகப்படியான அங்க அசைவு இல்லை.. அங்கே இங்கே என்று பார்க்கும் பார்வை இல்லை.. மற்றவர்களை பிராக்குப் பார்க்கும் எண்ணமில்லை. வீதியில் நடந்து சந்தைக்கு சென்று காய்கறிகள் வாங்கி வீடு வரும் வரைக்குமே அவளும் அவள் குழந்தையும் மட்டுமே அவள் முழு உலகமாக இருந்தது.

அவள் அவளது படலையை திறந்துகொண்டு போக இவனும் வாங்கியதை கொண்டுவந்து மரகதத்திடம் நீட்டினான்.

“ஏனப்பு இதெல்லாம்..” என்றவரிடம், “அதுக்கு என்ன ஆன்ட்டி.. சந்தைய கண்டாப்போல வாங்கிக்கொண்டு வந்தனான்.” என்றுவிட்டு போனான் அவன்.

மதியப்பொழுதும் ஏறத்தொடங்க வெயிலின் புழுக்கம் தாங்காமல் மாமரத்தின் அடியில் கதிரையை போட்டு சாய்ந்துகொண்டான். அசோக் அவனது நெருங்கிய உறவாம் என்று அவர்களின் திருமணத்துக்கு போயிருந்தான். கணவர் இறந்துவிட்டதில் மரகதம் அம்மா இப்படியான விசேசங்களுக்கு போவதை விரும்புவதில்லை.

டெனிசுக்கு அழைத்து எப்படி இருக்கிறாய் என்று விசாரித்தான். புட்பால் விளையாடப் போனதை.. இவர்களின் பள்ளிக்கூடம் இரண்டாம் இடத்தை பெற்றதை.. நண்பனுக்கு கால் அடிபட்டதை என்று மகன் சொன்னவற்றை எல்லாம் கேட்டுக்கொண்டான்.

“பாப்ஸ்.. உங்களுக்கு பிடிச்ச மாதிரி யாராவது கிடச்சிட்டாங்களா?”

என்னவோ நெருங்கிய நண்பனிடம் கேட்பதுபோல் கேட்ட மகனின் கேள்வியில் முறுவல் அரும்பியது அவனுக்கு.

“இல்ல டெனிஸ். எனக்கு என்னவோ எனக்கு பிடிச்சமாதிரி கிடைக்கும் போல தெரியேல்ல. பேசாம நான் திரும்பி அங்க வரவா?” என்று கேட்டான்.

உண்மையிலேயே அவனுக்கு அங்கு போய்விட்டால் என்ன என்றுதான் இருந்தது. எந்தப் பெண்ணையும் தனக்கான துணையாக பார்க்கவே முடியவில்லை. அதோடு அஷோக்கின் கட்டாயத்தில் மகன் தன் திருமணத்துக்கு சம்மதித்தானோ என்கிற நினைவும் அந்தக் கேள்வியை கேட்க வைத்தது.

“பா…ப்..ஸ்…!” என்றான் அழுத்தமாக. அது ராகமாக வெளி வந்தது.

“மாம்ஸ் மாதிரியே தேடாம வேற ஆளா பாருங்க. அப்பதான் அவா எங்களோடையே இருப்பா.”

அதிர்ந்துபோனான் விக்ரம். மகனும் தாயின் செயலை உணர்ந்திருக்கிறான். உணரும் பருவத்துக்கு அவன் வந்துவிட்டான். கசப்பான உண்மை தொண்டைக்குள் கசந்துகொண்டு இறங்க, “டெனிஸ்..” என்றான் விக்ரம் அதிர்ந்த குரலில்.

“மம்மாவ மிஸ் பண்றியா?”

“நோ பாப்ஸ்!” உடனடியாக மறுத்தான். “அவவ மிஸ் பண்ணக்கூட எனக்கு விருப்பமில்ல!”

இன்னுமே அதிர்ந்துபோனான் விக்ரம். தகப்பனின் அதிர்வு விளையாட்டுப் பிள்ளையான மகனை சென்றடையவில்லை போலும். “கல்யாணம் கட்டாம நீங்க இங்க வரவே கூடாது. ஓகே! கல்யாணத்துக்கு என்ன கூப்பிடுங்கோ பாப்ஸ், நான் பாக்கோணும்!” என்றுவிட்டு வைத்துவிட்டான் அவன்.

சற்று நேரம் பிடித்தது விக்ரமுக்கு மகன் கொடுத்த அதிர்வில் இருந்து வெளியே வர.

‘டெனிசுக்காகவாவது அவனை அன்போடு அரவணைத்துப் போகும் ஒரு பெண்ணை மணந்துகொள்ள வேண்டும்!’

அந்த முடிவை எடுத்த பிறகு, கம்பனிக்கு அழைத்து அங்கத்திய நிலவரம் அறிந்து, சிலபல வேலைகளை முடித்தான்.

‘இனி என்ன செய்றது?’ எப்போதும் அடுத்து அடுத்து என்று ஓடியவனுக்கு இப்படி சும்மா சோம்பி இருப்பது அலுப்புத் தட்டியது. அது அவனுக்கு பழக்கமுமல்ல.

‘இங்க வந்து சும்மா இப்படி இருக்கிறதுக்கு அங்க நின்றிருக்க நாலு உருப்படியான வேலையையாவது பாத்திருக்கலாம்..’

சும்மா இருக்க முடியாமல் ஒரு ஸ்டூலையும் லாப்டாப்பையும் எடுத்துவந்து ஆன்லைனில் தன் அக்கவுண்டுகளை செக் பண்ணத் துவங்கினான். மனேஜருக்கு அழைத்து பேசினான்.

சற்று நேரத்தில் பக்கத்து வீட்டிலிருந்து சமையல் மனம் கமகம என்று வந்தது.

‘நல்லாத்தான் சமைக்கிறா..’

அதை முடித்துக்கொண்டு அவள் எங்கேயோ போக ஆயத்தமாவது தெரிய நிமிர்ந்து பார்த்தான். ஒரு பழைய சுடிதாரில் நின்றிருந்தாள். மகளை தூக்கி எப்போதும்போல இடுப்பில் அடித்துக்கொண்டாள். மற்றக் கையில் ஒரு ரப்பர் பாக்.

சற்று முன் மகன் சொன்னது மனதின் ஓரத்தில் நின்றதாலோ என்னவோ, அந்தக் குட்டி இப்படி ஒரு அன்னை கிடைக்க கொடுத்து வைத்திருக்க வேண்டியவள் என்று மனம் சொல்லிற்று.

‘என்ர மகனுக்கு மட்டும் ஏன் இப்படி ஒரு அம்மா கிடைக்கேல்ல?’ மகனை எண்ணி வேதனையில் உழன்றான் விக்ரம்.

‘ஏன் இப்படி செய்தா? விக்கி வீட்டுக்கு வா. நீ இல்லாம இருக்க முடியேல்ல என்று ஒரு வார்த்தை உரிமையோடு சொல்லும் அளவுக்கு அவளை அவன் வைக்கவில்லையா என்ன?’

‘ப்ச்! நினைக்கக் கூடாது எண்டு நினச்சாலும் முடியேல்ல..’ தலையை உதறி அவன் வெளியே வர, அவர்கள் இருவரும் வெளியே படலையை திறந்து போவது தெரிந்தது.

அசோக்கும் வந்துவிட அவனோடு கழிந்தது மீதிப் பொழுது. மனதுக்குள் மட்டும் நினைவுகள் கிடந்து அவனை வருத்திக்கொண்டே இருந்தது!

 

 

8 Comments

 1. ஹாய் நிதா சிஸ். அருமையான பதிவு. அப்பாவும் பிள்ளையும் நல்ல Understanding.

  Like

 2. ஹாய் நிதா …நீண்ட நாட்களுக்குப் பிறகு படிக்கும் உங்களின் கதை…பதிவுகள் அனைத்தும் நன்றாக இருக்கிறது…நன்றி பதிவிற்கு

  Like

 3. மிகவும் நன்றி தேவி. தமிழ் விளங்குது தானே.. விளங்காட்டி கேளுங்கோ.. பார்ப்போம் இந்தப் பெண் அவனுக்கு இனையாகிறாளா என்ன என்று..

  Liked by 1 person

 4. அத்தியாயம் மிகவும் அருமை நிதனி சிஸ்… உங்கள் தமிழ் வெகு அருமை.. அதோடு விக்ரம் , டெனிசே இருவரின் மன நிலையும் அழகாக சொல்லி இருக்கிறீர்கள்.. விக்ரமிற்கு இந்த பெண் இணை ஆவாளா? தெரிந்து கொள்ள காத்து இருக்கிறோம்

  Liked by 1 person

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s