நினைவெல்லாம் நீயாகிட வந்தேன்..!! 9

Posted on Updated on

அத்தியாயம் 9

அன்று மதியம்போல், அசோக்கின் மாமி வீட்டில் யாமினி பிள்ளைகளை விட்டுவிட்டு அசோக்குடன் சென்று வீட்டை விக்ரம் பார்த்துவந்தான். மூன்றுமாடி கட்டிடத்தில் இரண்டாவது மாடியில் ஒரு அறை, ஹால், கிச்சன், பாத்ரூம் என்று கச்சிதமான வீடு. சின்னதாய் பால்கனி வேறு! அங்கிருந்த பெரும்பாலானோர் இவளை போலவே, கணவன் வெளிநாட்டில் இருக்க அங்கே தங்கி இருந்தார்கள். பக்கத்திலும் குடிமனைகள். பாதுகாப்பான இடம். மிக திருப்தியாக இருந்தது. சற்று தூரத்தில் கடற்கரை வேறு! சுற்று வட்டாரத்தை சுற்றி பார்த்தார்கள், கடைகள், சின்னதாக பார்க், ஒரு கோவில் என்று எல்லாமே வசதியாகவும் இருந்தது.

வீட்டுக்காரரிடம் திறப்பை வாங்கி, கொண்டுவந்த பொருட்களை அந்த வீட்டில் இறக்கிவிட்டு, அன்றிரவு பிளைட் என்பதால் அசோக்கையும் டெனினிசையும் வழியனுப்ப எல்லோருமாக புறப்பட்டுச் சென்றனர்.

விமானநிலையத்தில், “பாப்ஸ்.. பாய்!” என்று எப்படி அவனை அணைத்து விடுவித்தானோ, அப்படியே, “யாம்ஸ் பாய்!” என்று அவளிடமும் அணைத்து விடைபெற்றான் டெனிஸ்.

சந்தனாவிடம் மட்டும், “ஹேய் பார்பி! கெதியா அங்க வா.. உனக்கு அண்ணா ஒரு ரூம் பார்பி ரூம் மாதிரியே ரெடி பண்ணி வைக்கிறன்.” என்று பெரிய மனிதனாக சொல்லிச் சென்றான்.

அவளை தங்கையாக ஏற்றவன் என்னை அன்னையாக ஏற்க வேண்டும் என்று மனதார வேண்டிக்கொண்டாள் யாமினி.

அசோக்கும் நண்பனை அணைத்து விடைபெற்று விட்டு, “சும்மா சும்மா எல்லாத்துக்கும் அதட்டுவான், நீ பயப்படாத. ஏதாவது சேட்டை விட்டான் எண்டா என்னட்ட சொல்லு. இவன ஒரு கை நான் பாக்கிறன்.” என்று பெரிதாக யாமினியிடம் அளந்தான்.

“நீ பாக்கிற நேரம் பார். இப்ப போடா! ப்ளைட் அங்க எடுக்கப் போறான்.” என்று அவனை பிடித்து தள்ளிவிட்டான் விக்ரம்.

அவர்கள் புறப்பட்டதும், இரவு உணவையும் கடையில் முடித்துக்கொண்டு வீட்டுக்கு சென்றதும் யாமினிக்குள் ஒருவித தடுமாற்றம்!

திருமணம் ஆனதிலிருந்து எல்லோருடனும் கூட இருந்துவிட்டு, இப்போது அவனும் அவளுமாக மட்டும் என்கையில்.. மகள் கூடவே இருந்தாள் தான் என்றாலும் ஒருவிதமாக படபடப்பாக உணர்ந்தாள்.

அப்படி எதுவும் விக்ரமுக்கு இல்லை போலும். உடை மாற்றிக் கொண்டவன் உறக்கத்துக்கு அழுத மகளை, “நான் பாக்கிறேன்” என்று வாங்கிக்கொண்டு அறைக்குள் சென்றான்.

அதன் பிறகுதான் வீட்டை இன்னுமே நன்றாக சுற்றிப் பார்த்தாள் யாமினி.

“என்னென்ன வாங்கோணும் எண்டு லிஸ்ட் போட்டுவை, நாளைக்கு போகலாம்.” என்று விக்ரம் சொல்லி இருந்தான்.

எனவே ஆறுமாதத்துக்கு தேவையானதாக என்ன வாங்கலாம்.. அதை எங்கே வைக்கலாம் என்று வீட்டை ஆராய்ந்தாள்.

ஓரளவுக்கு தனக்கு தெரிந்தது, தேவை என்று பட்டவைகளை குறித்துக்கொண்டாள்.

‘எல்லாம் சரியா எண்டு அவரையும் கேட்டுட்டு வாங்கோணும். .’ இதை மனதில் குறித்துக்கொண்டாள்.

யாழ்ப்பாணத்திலிருந்து வெளிக்கிட்டதில் இருந்து ஒழுங்கான நித்திரை இல்லாததாலோ என்னவோ, அவள் கண்களையும் உறக்கம் மெல்லத் தழுவமுயல, போனவர்கள் என்ன செய்கிறார்கள் என்று மெல்லச் சென்று எட்டிப் பார்த்தாள்.

பார்த்தவளால் அவர்களிடம் இருந்து விழிகளை அகற்றவே முடியவில்லை. முதுகுக்கு ஒரு தலையணையை கொடுத்து கால்களை நீட்டி விக்ரம் சாய்ந்து இருக்க, அவன் மடியில் சந்தனா இரு பக்கமும் கால்களை போட்டு, அவனை தன் பிஞ்சுக் கரங்களால் கட்டி அணைத்தபடி மார்பில் தலைசாய்த்து உறங்கி இருந்தாள். இவனும் அவளை இரு கைகளாலும் அணைத்தபடி கண் மூடிச் சாய்ந்திருந்தான்.

இமைக்கவும் மறந்து பார்த்தாள். ஒரு ராணியை போன்று மகள் துயிலும் அழகில் மனம் தொலைந்துபோனது!

அவளை கட்டிலில் போடுவோமோ என்று யோசித்தாலும் அந்த அழகிய கவிதையை கலைக்க மனம் வராமல் அவள் வெளியே செல்லத் திரும்பவும் தான் கண்டாள், விக்ரம் கண்களை திறந்து அவளையே பார்த்திருப்பதை.

இதயம் படபடக்கத் தொடங்கியது. இப்போதெல்லாம் அடிக்கடி இதுதான் நடக்கிறது. அவன் கண்களை சந்தித்தாலே இவளால் இயல்பாக இருக்க முடிவதில்லை.

அவள் வெளியே செல்ல திரும்பவும், நேரத்தை திரும்பி பார்த்துவிட்டு “நீயும் வந்து படு!” என்றான் அவன்.

மெல்ல நடந்து சென்று மற்றப் பக்கமாக அமர்ந்தாள். உள்ளுக்குள் சின்னதாய் நடுக்கம். பார்வை மகளிடம் செல்ல, அதைக் கண்டு அவனும் சந்தனாவை பார்த்தான். ஆழ்ந்த உறக்கம் நிம்மதியாக அவளை தழுவி இருந்தது. மென்மையாக புன்னகை ஒன்று இதழ்களில் ஜனிக்க, மகளின் முடிக் கற்றைகளை கோதிவிட்டான் விக்ரம்.

“ரெண்டு நாளா அலைந்ததுல களைச்சே போய்ட்டா!” என்றான் தன் செல்லம்மாவிடம் இருந்து விழிகளை அகற்றாமல்.

“ம்ம்.. நேற்றும் ஏனோ ஒழுங்கா படுக்கேல்ல.. சிணுங்கிக்கொண்டே இருந்தவள்.”

மகளை பற்றிய பேச்சு இருவருக்கும் இயல்பாகவே வந்தது. நடுவிலே அவள் தலையணையை வைக்க, அவளை கிடத்தினான் விக்ரம்.

போர்வையை எடுத்து அவள் போர்த்திவிட, அவன் தன் தலையணையை ஒழுங்காக எடுத்துப் போட்டுவிட்டுச் சரிய, அதன்பிறகுதான் மூச்சே வந்தது அவளுக்கு.

அவனறியாமல் மூச்சை இழுத்துவிட்டாள்.

“காட்டுமிராண்டி மாதிரி ஒரேயடியா பாஞ்சிருவன் எண்டு நினைச்சியோ?” என்றான் கேலியாக.

‘ஐயோ.. எத நினச்சாலும் கண்டு பிடிக்கிறாரே..’ பரிதாபமாக அவள் பார்க்க,

“கொஞ்ச நாள் போகட்டும். எல்லாம் தானா நடக்கும். நமக்கு ஒண்டும் இது புதுசு இல்லையே.” என்றான் அவளையே பார்த்தவாறு.

அதுவே போதுமாக இருந்தது யாமினிக்கு. மனதின் பதட்டம் அடங்க ஒரு பக்கமாக சரிந்து தலைக்கு கைகளை கொடுத்தபடி படுத்தாள். சற்றுமுன் அவன் சொன்னதே காதில் எதிரொலித்துக் கொண்டிருந்தது!

டுத்தநாள் நல்லபடியாக அங்கு போய் சேர்ந்துவிட்டதாக அசோக் அழைத்து சொன்னான். டெனியும் தகப்பனோடு கதைத்தது மாத்திரமல்லாமல், யாமினியிடம் போனை கொடுக்கச் சொல்லி கதைத்தது வேறு யாமினிக்கு சந்தோசமாக இருந்தது. அதன்பிறகு தயாராகி மூவருமாக கடைக்குச் சென்று வீட்டுக்கு தேவையான பொருட்களை பார்த்துப் பார்த்து வாங்கினர்.

ஹாலுக்கு பொறுத்தமாய் பிரம்பு நாற்காலி செட், ரூமுக்கு சின்னதாய் ஒரு கப்போர்ட், கிச்சனுக்கு தேவையான பொருட்கள் என்று கச்சிதமாய் அவள் தெரிவு செய்ததை பார்க்கையில் மனதுக்கு நிறைவாய் உணர்ந்தான் விக்ரம்.

அன்று மதிய உணவை கடையில் முடித்துவிட்டு வரும்போது, “போகேக்க காய்கறி வாங்கிக்கொண்டு போனா இரவுக்கு நானே சமச்சிடுவன்.” என்றாள் அவள்.

சரியென்று சென்று அன்றைய இரவுக்காக, ரொட்டிக்கு மாவும், தேங்காய், செத்தல் மிளகாய் என்று மரக்கறியோடு சேர்த்து வாங்கிக்கொண்டாள்.

வீடு வந்ததுமே, அதற்காகவே காத்திருந்தவன்போல் அசோக் அழைத்தான்.

“என்னடா? ஆபீசுக்கு போனியா?”

“அதெல்லாம் போய் பார்த்திட்டு வந்திட்டன். நீ முதல் பேஸ்புக் பார்!” நக்கலாக சொல்லிவிட்டு வைத்துவிட்டான் அவன்.

‘என்ன இவன்.. வேலைய பற்றி ஒண்டும் சொல்லாம பேஸ்புக் பாக்கச் சொல்றான்..’ என்றபடி, லாப்டாப்பில் முகப்புத்தகத்துக்குள் நுழைந்து தன் சாவி கொண்டு திறந்தான்.

திறந்ததுமே வந்தது, “என்னுடைய மிகப்பெரிய கடமை சந்தோசமாக முடிந்தது!” என்கிற டெனிஸின் போஸ்டே!

முறுவல் அரும்ப, பார்வையை கீழே ஓட்டினான்.

“என்ர பாப்ஸ் திருமணம்!” என்றதின் கீழே இவர்களின் திருமண புகைப்படம்!

அதுவும் சரியாக யாமினியின் கழுத்தில் இவன் தாலியை கட்டும்போது எடுத்தது!

அதைக்கண்டு ஒருகணம் இனிமையாக அதிர்ந்து அடுத்தகணம் வாய்விட்டுச் சிரித்தான். கொஞ்சம் வெக்கமாகக் கூட போயிற்று!

யார் யாருக்கு கல்யாணம் செய்து வைப்பது? வெள்ளை மனம் கொண்ட பிள்ளை அதை பேஸ்புக்கில் வேறு போட்டுவிட்டான்!

புன்சிரிப்புடன் விழிகளை அந்தப் புகைப்படத்திலேயே நிறுத்திவைத்தான். அவனுக்கு நன்றாக நினைவிருக்கிறது, தாலியை கட்டுகையில் தலை குனிந்திருந்தாலும், ஆழ்கடல் போன்று அழகிய விழிகளை மட்டுமே உயர்த்தி அவள் அவனைப் பார்த்ததும், அந்த விழிகள் அவனிடம் வீசிய சாரலையும்!

அந்தச் சாரல் இப்போதும் நெஞ்சுக்குள் வீச, படத்தையே பார்த்திருந்தான். கையிலிருந்த மவுஸ் அவளின் முகத்தை சுற்றிச் சுற்றியே வட்டமடிக்க, சின்னதாக சிரித்துக்கொண்டான்.

படத்துக்கு கீழே.. கொஞ்சம் சிரிக்கும் ஸ்மைலிகள், வாழ்த்துக்களை சொல்லும் ஸ்மைலிகள், ஆணும் பெண்ணுமாய் நிற்கும் ஸ்மைலிகள்  பரவிக் கிடக்க அதற்கு பிறகு கண்ணை ஓட்டியவனின் முகம் உண்மையிலேயே சிவந்து போனது.

“பாப்ஸ்.. எனக்கு இன்னொரு தங்கை வேணும். கெதியா பெத்துக்குடு. அவளை நானே வளக்கோணும்.” என்று போட்டிருந்தான் அவன் மகன்.

“கடவுளே மானத்தை வாங்கிட்டானே..” என்றபடி தலையை கோதிக்கொடுத்தான். இதழ்களில் அடக்கமாட்டாத சிரிப்பு!

சமையலை முடித்து, சந்தனாவுக்கு உணவை ஊட்டி, உடம்பு கழுவி, வேறு உடை மாற்றிக்கொண்டு வந்த யாமினி, ‘யாரோட கதைக்கிறார்?’ என்பதாக அவனை பார்த்தாள்.

‘என்னட்டத்தான் ஏதும் சொன்னாரோ?’ கேள்வியாக அவள் பார்க்க,

“அது இங்க!” என்றான் லாப்டாப்பை காட்டி.

அவளும் அங்கே கண்ணை ஓட்ட, இவர்களின் திருமணப் படம்.

‘யார் போட்டது?’ என்று கிட்ட வந்து பார்த்தாள்.

டெனிஸ். அவன் மேலே எழுதியைதை படித்ததும் அவள் இதழ்களிலும் சின்னப் புன்னகை ஒட்டிக்கொள்ள விக்ரமை திரும்பிப் பார்த்தாள்.

‘நான் நினச்சதுபோல அப்பாவும் மகனும் நல்ல க்ளோஸ் போல..’ எண்ணிக்கொண்டே.. கீழே பார்வையை ஓட்டியவள் முகம் குப்பென்று சிவந்து போனது.

வேகமாக அவனைத்தான் பார்த்தாள். அவன் சிவந்து கிடந்த இவள் முகத்தை கண்களில் சிரிப்போடு ரசித்துக்கொண்டிருந்தான். ஐயோ…! வெட்கத்தில் அவளுக்கும் சிரிப்புப் பொங்க அதை அடக்கிக்கொண்டு அங்கிருந்து ஓடியே போனாள் யாமினி.

இவனோ.. திரும்பி லாப்டாப்பை பார்த்தான். தலைகுனிந்து அவன் தாலியை வாங்கும் அவள் கண்ணில் பட்டாலும், முகம் முழுக்க சிரிப்பும் வெட்கமுமாக ஓடியவள் தான் கண்ணுக்குள்ளேயே நின்றாள்.

அவர்கள் வீட்டு காலிங் பெல் அழைக்கவும் போய் கதவைத் திறந்தான். மதியம் அவர்கள் வாங்கிய பொருட்கள் லாரியில் வந்திறங்கியது. கொண்டுவந்தவர்களின் உதவியுடன் அனைத்தையும் ஒழுங்கு படுத்தி வைத்துவிட்டு, கேட்டதற்கு மேலே போட்டுக் கொடுக்கவும் அவர்களும் சந்தோசமாகவே வாங்கிக்கொண்டு சென்றனர்.

“இனி எல்லாத்தையும் எடுத்து வை” என்றான் யாமினியிடம்.

அவளும் அதுவரை சூட்கேசுக்குள்ளேயே கிடந்த உடைகளை எடுத்து கப்போர்ட்டுக்குள் வைக்கவும், இவன் அசோக்குக்கு அழைத்தான்.

அவனிடம் வேலை விசயங்களை கேட்டு தெரிந்துவிட்டு வைத்தவனுக்கு விரைவிலேயே தான் அங்கு போவதுதான் நல்லது என்று பட்டது.

‘அதுக்கு முதல் யாமினிய நாளைக்கு டொச் கிளாசுக்கு சேர்த்து விடவேணும். இவள் கிளாசுக்கு போனா.. செல்லம்மாவ என்ன செய்றது?’

அசோக்கின் மாமிக்கு அழைத்தான்.

“என்னப்பா வீடெல்லாம் வசதியா இருக்கா?” அவர் விசாரித்தார்.

“எல்லாம் நல்லாருக்கு அம்மா. பாதுகாப்பான இடம். தெரியாத ஊர்ல தனியா இருக்கப்போறா.. இடம் எப்படியோ எண்டு பயந்தனான். ஆனா, மக்கள் புழங்குற இடமா பாத்து தந்திருக்கிறீங்க.” என்றான் நன்றியோடு.

“அதுக்கு என்னப்பா.. சொந்தம் எண்டு இருக்கிறது இதுக்குத்தானே!” என்று பெருந்தன்மையோடு அவர் சொல்ல,

“இன்னுமொரு உதவி வேணுமே அம்மா” என்று விஷயத்தை சொன்னான்.

“அதுக்கு என்ன.. எனக்கு நம்பிக்கையான ஒரு அம்மா இங்க இருக்கிறா. அவவ  அனுப்பி வைக்கிறன்.” என்று அதற்கும் இலகுவாக தீர்வு சொன்னார் அவர்.

நன்றி சொல்லி இவன் அழைப்பை துண்டிக்க, “சந்து! அம்மாவ வேல செய்ய விடு. அங்கால போ!” என்று யாமினி மகளோடு மல்லுக்கட்டுவது கேட்டது.

இதழ்களில் புன்னகை அரும்ப, “செல்லம்மா.. என்ன செய்றீங்க?” கேட்டுக்கொண்டே அறைக்கு நடந்தான்.

அங்கு அவன் மகளோ, சூட்கேசுக்குள் ஏறுவதும் இறங்குவதும், அதோடு உடைகளை எடுத்து தன் மேலே போட்டுக்கொள்வதும், தூக்கி எறிவதுமாக தாயை வேளை செய்யவிடாமல் செய்துகொண்டிருந்தாள்.

அவளின் சேட்டைகளை ரசித்துச் சிரித்தவாறே, “அம்மாக்கு ஹெல்ப் பண்றாளா என்ர செல்லம்! நீங்க வாங்க நாங்க டிவி பாப்பம்.” என்று அவளை தூக்கிக்கொண்டு ஹாலுக்குள் சென்று அமர்ந்துகொண்டான்.

வீட்டோடு இருந்த டிவியில் ‘டெலிடபீஸ்’ போட்டுவிட, அவனின் செல்லப் பெண்ணோ அவன் மடியில் இருந்தவாறே பார்த்திருந்தவள், சற்று நேரத்திலேயே உறங்கி இருந்தாள்.

“இதுக்குத்தான் அம்மாவ போட்டு அந்தப் பாடு படுத்தினீங்களா செல்லம்..” என்றவாறு அவளை தூக்கிக்கொண்டுபோய் கட்டிலில் கிடத்தினான். வெளியே செல்ல எழுந்தவன், திறந்திருந்த கப்போர்ர்த்டை பார்த்தான். சீராக உடைகளை அவள் அடுக்கிக்கொண்டு இருந்தாலும், உடைகள் இருந்த தட்டுக்களை விட வெறுமையாக இருந்த தட்டுக்களே அதிகம்.

டுத்தநாள் காலையிலேயே மனைவி மகளை கூட்டிக்கொண்டு போய் உடைகள் எடுத்துக் கொடுத்தான். மகளுக்கு டையப்பர் வாங்கி கொடுத்தான். செலவு என்று அவள் இவ்வளவு நாட்களும் துணிதான் பாவித்தாள். சந்தனாவுக்கோ டையப்பர் வெகு இலகுவாக இருக்க.. அவளின் உற்சாகம் இன்னொரு படி மேலேறியது. வெயில் பட்டு தன் பெண் கறுத்துவிடக் கூடாது என்று குடையோடு கிண்டர் வண்டில் ஒன்று வாங்கினான்.

விதம் விதமான தொப்பிகள்.. கூலிங் கிளாஸ். விளையாட்டு கிட்சென் செட், பார்பி பொம்மைகள், அது இது என்று சந்தனா அதுவரை பார்த்தே அறியாத பொருட்களை எல்லாம் வாங்கினான்.

சில நேரங்களில் இவளுக்கே தோன்றிவிடும், எப்படி இவனால் இந்தளவு பாசத்தை வைக்க முடிகிறது என்று. அந்தளவுக்கு சந்தனா செல்லப்பெண்ணாகி போனாள் அவனுக்கு. ஏன் சந்தனா என்றுகூட அவன் சொன்னது கிடையாது. செல்லம்மா தான். இல்லையோ செல்லம். அவளும் “ப்பா ப்பா..” என்று இப்போதெல்லாம் எல்லாத்துக்கும் அப்பாதான். அம்மா என்று ஒருத்தி இருப்பதே நினைவில்லை.

பாலுக்கு அப்பா சாப்பாட்டுக்கு அப்பா.. உறங்க அப்பா ஏன் முழித்ததும் அவள் தேடுவதும் அப்பாவைத்தான்! சில நேரங்களில் டயப்பர் மாத்துவது கூட அப்பாதான்!

இவள் தான் பதறிப்போய், “ஐயோ இதெல்லாம் நீங்க ஏன் செய்றீங்க?” என்று வந்தாலும், “என்ர மகளுக்கு நான் செய்றன். நீ இதுல தலையிடாத” என்றுவிடுவான்.

அவளையும் விட்டு வைக்கவில்லை அவன். தோட்டவேலையில் காய்ந்திருந்த கைகளை, கால்களை கண்டுவிட்டு மேனிக்குயூர் பெடிக்கியூர் என்று கூட்டிப் போனான். முகத்துக்கும் பேஷியல் அது இது என்று யாமினிக்கும் தான் என்னவோ புதிதாக பிறந்துவிட்ட உணர்வு. வறண்டு கிடந்த பாலைவனத்தில் சடசடவென்று பூக்களும் காய்களும் கனிகளும் காய்த்துவிட்டால் எப்படி இருக்கும்.. அப்படியிருந்தாள் அவள்!

அப்படியே டொச் வகுப்புக்கும் சேர்த்துவிட்டான். சரளமாக அவன் டொச் பேசி சேர்த்துவிட்டதில் அவளுக்கு சற்றே நிம்மதியும் கூட.

“எனக்கு ஒண்டும் தெரியாது. வடிவா சொல்லித் தரச்சொல்லி சொல்லுங்கோ..” என்று அவன் காதைக் கடித்தாள் யாமினி.

“தெரியாட்டி தானே இங்க வருவீனம். தெரிஞ்சவே ஏன் வர?” விஷமச் சிரிப்போடு சொன்னான் விக்ரம்.

‘என்ன சொன்னாலும் ஒரு நொள்ள சொல்லிடுவான்.. இவனோட மனுசர் படுற பாடு..’

“படிக்காட்டி திட்டக்கூடாது எண்டும் சொல்லுங்கோ.. பிறகு நான் வரமாட்டன் நீங்கதான் வந்து எனக்காக படிச்சு டெஸ்ட் எழுதுவீங்க சொல்லீட்டன்” என்றாள் மிரட்டலாக.

அவள் பேச்சில் எழுந்த முறுவலோடு அவளை சுற்றிக் கையை போட்டபடி, “ஒழுங்கா படிக்காட்டி நாலு போட்டு படிக்க வைங்கோ. நான் ஏன் எண்டும் கேக்கமாட்டன்” என்றான் ஆசிரியை பெண்மணியிடம்.

திடுக்கிட்டுப்போய் இவள் இவனை முறைக்க, அவரோ சிரித்துவிட்டு, “அப்படியெல்லாம் நாங்க நடக்கமாட்டோம். இதுவும் கஷ்டம் இல்லை மிசஸ் விக்ரம். ஆரம்ப அறிவு இருக்கா எண்டுதான் டெஸ்ட்டிலும் பாப்பீனம்” என்றார் அவளிடம்.

அப்பாடி! அவ்வளவுதானா என்றிருந்தது யாமினிக்கு!

4 thoughts on “நினைவெல்லாம் நீயாகிட வந்தேன்..!! 9

  radhikaramu16 said:
  May 26, 2017 at 2:49 am

  Lovely update mam.The romance between Vikram and Yamini is so beautiful.That too the post of Dennis in Fb is superb mam. The last part of the update Yamini enrolled in Dutch class is fantastic.Also Vikram’s love for Chandhana is amazing because many fathers don’t change diapers for their own children but he is so different mam. His characterisation is nice mam.

  Liked by 1 person

   NithaniPirabu's Novels responded:
   May 26, 2017 at 6:40 am

   மிகவும் நன்றி ராதிகா. நான் எழுதின ஒவ்வொரு சீனையும் ரசிச்சு படிச்சு சொல்லி இருக்கீங்க.. நன்றி நன்றி!!

   Like

  Shanthi said:
  May 26, 2017 at 2:06 am

  Denis fb mulam murasu kottite.yams nee padipil makkaa.vara pogum amma yaar.ivan veli naadu ponaal sellama irukumaa.

  Liked by 1 person

   NithaniPirabu's Novels responded:
   May 26, 2017 at 6:41 am

   ஹாஹா.. ஆமாக்கா.. டெனிஸ் போட்டு குடுத்துட்டான். நன்றிக்கா…

   Like

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s