நினைவெல்லாம் நீயாகிட வந்தேன்..!! 10

Posted on

 

romanticcouplesilhouettewall2mob-com_42391-cprw

 

அழகான முன்மாலை பொழுது! கண்ணாடி முன் நின்றிருந்தாள் யாமினி. தன்னைத்தானே ரசித்தபடி. ஆமாம்! தன்னைத்தானே ரசித்தபடிதான்! அதுநாள் வரை அவளுக்கு அப்படி ரசிக்க என்ன.. நன்றாக இருக்கிறேனா என்று பார்க்கக்கூடத் தோன்றியதில்லை. இன்றோ ஆசையாசையாக ரசித்தாள்!

தலைக்கு குளித்து, ட்ரையரில் முடியை காயவைத்ததில், விரிந்து நின்ற கருங்கூந்தலில் வட்டமுகம் மலர்ந்து நின்றது. கனவுகளை சுமந்த விழிகள்.. அழகான நாசி.. எப்போதும் நிரந்தரமாக தங்கிவிட்ட இதழோரச் சிரிப்பு.

‘நான் இவ்வளவு வடிவா?’ அவளால் நம்பவே முடியவில்லை!

இன்னுமே ஊன்றிப் பார்த்தாள். அழகாகத்தான் தெரிந்தாள். மனதுக்கு சந்தோசமாயிருந்தது!

சங்குக் கழுத்தில் தொங்கிய தாலி.. தன்னை இப்படியெல்லாம் மாற்றிப்போட்டது யார் என்று சொல்லிற்று! மனமெங்கும் பூரிப்பு! கண்ணாடியில் தன்னையே பார்த்து புன்னகைத்தாள்.

ஆர்வத்தோடு, முதுகெங்கும் பரவிக்கிடந்த கூந்தலை கொஞ்சமாக எடுத்து கிளிப் போட்டு விரித்துவிட்டாள். கண்ணுக்கு மெலிதாக மையிட்டு இமைகளுக்கும் சற்றே காஜலை தடவிக்கொடுத்தாள். சிவந்த இதழ்களுக்கு லிப் க்ளோஸ் மட்டுமே போதுமாயிருந்தது! நெற்றியில் அழகாக வட்டமாக திலகத்தை வைத்துக்கொண்டு, கண்ணாடியில் தன்னை அப்படியும் இப்படியுமாக திரும்பிப் பார்த்தவளுக்கு தன் உருவத்தில் அத்தனை திருப்தி!

“யாமினி..! போவமா?” கேட்டுக்கொண்டே வந்த விக்ரம், அவளை பார்த்ததுமே அப்படியே நின்றுவிட்டான்.

சும்மா காற்றாட நடக்க என்று அணிந்துகொண்ட பாவாடை சட்டைதான். ரோஜா வண்ண பாவாடைக்கு வெள்ளை நிறத்தில் சட்டை. கழுத்தில் அவன் அணிவித்துவிட்ட தாலியோடு கூடவே கழுத்தை சுற்றி பூக்கள் பூத்தது போன்ற குட்டி நெக்லசும் அதற்கு பொறுத்தமாய் அதே பூ வடிவ காதணியும் அணிந்து நின்றவளை கண்டவனின் கண்களில் ரசனை படர்ந்தது.

எப்போதும் அவனுக்கு சொந்தமான அந்த புன்சிரிப்புடன், அவளை நோக்கி புருவங்களை ஒருமுறை ஏற்றி இறக்கினான் ‘சூப்பர்!’ என்பதாக!

உள்ளம் துள்ளிற்று அவளுக்கு! இது போதும்! இந்த ஒற்றை பாராட்டு பார்வைக்காக தானே அவள் பார்த்துப் பார்த்து தயாரானதே!

உற்சாகத்தோடு, “நான் ரெடி! வாங்கோ போவம்..” என்றபடி அவனோடு நடந்தாள்.

சந்தனா கிண்டர் வண்டிலில் அமர்ந்துகொள்ள, அவளுக்கு குடிக்கத் தேவையான ஜூஸ், துடைக்க பேப்பர், டயப்பர், விளையாட பந்து சகிதம் அடங்கிய பாக்  வண்டிலுக்கு கீழே குடிபுகுந்தது! மெல்லியதாய் வீசிக்கிக்கொண்டிருந்த வெயில் அவளுக்கு படாமலிருக்க, குட்டி குடையை விரித்துவிட்டான் விக்ரம்!

அவள் வண்டிலை தள்ள, “இங்க தா” என்று தான் வாங்கிக்கொண்டான்.

மாலைப்பொழுது. இளம் வெயில், கேசம் கலைத்து விளையாடிய காற்று. மகள் கணவன் என்று குடும்பத்தோடு நடக்கையில்தான் உணர்ந்தாள், வாழ்க்கை இத்தனை ரம்யமானதா?

நினைத்தே பார்த்ததில்லை அவள்!

பார்க்கும் இடமெல்லாம் ரம்யமாய் தோன்றிற்று!

வாழ்க்கை இப்படியெல்லாம் வண்ணமயமிக்கது என்பதெல்லாம் அவள் அறியாதது!!

“கோயிலுக்கு போயிட்டு போவமா?”

என்னவோ இந்த சந்தோசமான வாழ்க்கையை தந்த கடவுளுக்கு நன்றி சொல்லவேண்டும் போலிருந்தது.

அவள் ஆசையாக கேட்டபிறகு மறுப்பானா விக்ரம்?

கூட்டிக்கொண்டு போனான். அந்த தெய்வத்திடம் கணவனோடு நின்று கை கூப்பியபோது மனம் நிறைந்தே போயிற்று!!

கோவிலால் அப்படியே கடற்கரைக்கு போனார்கள்.

கடலை கண்டதும் அதன் அலைகளை விட உற்சாகமாக துள்ளத் தொடங்கினாள் சின்னவள்.

விளையாட கொண்டுவந்த பந்தை எடுத்துப் போட்டதுமே அதைப் பிடிக்க ஓடினாள் அவள்.

அவளருகே சென்று, “குட்டிம்மா.. அம்மாக்கு போடுங்க..” என்றாள் யாமினி.

சின்னவளும் தன் பிஞ்சுக் கரங்களால் தூக்கிப் போட, இவள் பிடிக்க முதல் நடுவில் பாய்ந்து அதனை கைப்பற்றினான் விக்ரம்.

யாமினி அவனை முறைக்க, விளையாட்டுக்குள் நடந்துவிட்ட இந்தக் குட்டி விளையாட்டில் சின்னவளுக்கு குதூகலமோ குதூகலம்!! கிக்கிக்கிஈ என்று பச்சரிசிப் பற்களை காட்டித் துள்ளியது!

“சரி..! நீங்க எனக்கு போடுங்க நான் குட்டிக்கு போடுறன்” என்று அவனையும் ஆட்டத்தில் சேர்த்தாள் யாமினி.

தன் குறும்புச் சிரிப்பால் அவளை சீண்டிக்கொண்டே, “செல்லம்மாக்கு வேணுமா பந்து இல்ல அம்மாக்கு குடுக்கவா?” என்று பந்தை கையில் வைத்துக்கொண்டு இருவர் பக்கமும் ஆட்டம் காட்டினான் விக்ரம்.

சின்னவள் விடுவாளா?

“எனக்கு.. எனக்கு!” என்று துள்ள, இவளிடம் திரும்பி பார்வையால் சீண்டிவிட்டு மகளுக்கு பந்தை போட்டான் விக்ரம்.

இடுப்பில் கைகளை ஊன்றி இவள் முறைக்க, அவள் மகளுக்கோ தாயை கழட்டிவிட்டு தகப்பன் தன்னோடு கூட்டணி வைத்துக்கொண்டதில் அத்தனை ஆனந்தம்.

“கிக்கீ..” என்று பச்சரிசிப் பற்களை காட்டியபடி தகப்பன் போட்ட பந்தை எடுத்துவந்து அவனுக்கு வீச,

‘துர்ர்ர்ரோகி!’ என்று மகளையும் முறைத்தாள் யாமினி.

பாசம் இருக்க வேண்டியதுதான். அதற்காக அம்மாவையே கழட்டிவிடும் அளவுக்கா பாசம் இருப்பது?

நோ! கூடாது! விடக்கூடாது!

விக்ரம் மகளுக்கு பந்தை எறிய, அதை அவனைப்போலவே நடுவில் பாய்ந்து பிடிக்க எண்ணி இவள் பாய, அதை எதிர்பார்த்தவனோ அவள் இடுப்பில் கைகளை போட்டு ஒரே தூக்காக இவளை தூக்கி அந்தப் பக்கம் வைத்துவிட்டான்!

‘இப்ப என்ன நடந்தது இங்க?’ மலங்க மலங்க விழித்தாள் யாமினி!

தகப்பனின் வீரதீரச் செயலில் அவள் பெண் உருண்டு பிரண்டு சிரிக்க, ஆத்திரம் ஆத்திரமாக வந்தது அவளுக்கு!

“இண்டைக்கு விடுறேல்ல!!” வீராவேசமாக விக்ரமை நெருங்கி, அவனிடமிருந்து பந்தை தட்டிப் பறிக்க முயல, அவனோ மகளுக்கும் போடாமல் அந்தக் கை மாறி இந்தக் கை என்று அவளுக்கு விளையாட்டுக் காட்டினான்.

இவளும் அந்தக் கைக்கு மாறி இந்தக் கைக்கு என்று தொங்கித் தொங்கி பிடிக்க முனைந்துகொண்டிருந்தாள்.

எங்க பிடிக்கிறது? அவன்தான் லைட் போஸ்ட்டருக்கு வைக்கிற ஏணி மாதிரி வளர்ந்து நின்றானே!

இதில் பந்தை வேறு தலைக்கு மேலே தூக்கிப் பிடித்தால்?

“இண்டைக்கு பறிக்காம விடமாட்டன்!!”

“ஓ…..!! எங்க பிடி பாப்பம்?” அவன் பெரிதாக ஒன்றுமே செய்யவில்லை. கைக்கு கை பந்தை மாற்றுவது மட்டும் தான்!

வெகு மும்முரமாக அங்குமிங்கும் துள்ளித் துள்ளி பந்தை பிடிக்க முனைந்தவளையே சிரிப்போடு ரசித்துக்கொண்டிருந்தான்.

“மரியாதையா தாங்கோ..!” விரல் நீட்டி எச்சரித்தாள்.

“சரி! தாரன்! அதுக்கு முதல் நான் உன்ன காதலிக்கிறன் எண்டு டொச்சுல சொல்லு, அப்ப தாரன்.” பேரம் பேசினான் அவன்.

‘என்ன?’ ஒருகணம் அதிர்ந்து அசைகள் அற்று நின்றாள் யாமினி!

இப்போ ஒரு வாரமாகத்தான் வகுப்புக்கே போகிறாள். இதில் நான் உன்னை காதலிக்கிறேனா?

‘நான் உன்ன கொல்லப்போறன்’னுக்கு டொச்சு தெரியாம போச்சே!

“மரியாதையா பந்த தாங்கோ. வாங்கமா விடமாட்டன் இண்டைக்கு!” மீண்டும் மிரட்டலில் இறங்கினாள்.

“மரியாதையா எல்லாம் தரமாட்டன். முடிஞ்சா என்னட்ட இருந்து வாங்கிக்கொள்.” என்றவன் பந்தை மேலே போட்டுப் போட்டு பிடித்தான்.

அவனை சவாலாக நோக்கிவிட்டு அவளும் மேலே பாய்ந்து பிடிக்க முனைந்தபோது, பந்தை மேலே போட்டுவிட்டு அப்படியே அவளையும் ஒரே தூக்காக தூக்கிப் பிடித்தான் விக்ரம்.

பந்திலேயே குறியாக இருந்தவள் அது தன் கைகளில் வந்து விழுந்ததும், “ஹே…ய்!!!!! பிடிச்சிட்டேனே.. பந்த பிடிச்சி..” என்றபடி குனிந்தவள் அப்போதுதான் உணர்ந்தாள் தான் அவன் கைகளில் இருப்பதை.

சட்டென முகம் சூடாவதை அவளே உணர, கைகளில் இருந்து பந்து நழுவியது. வெட்கமும் கூச்சமுமாக அவனிடமிருந்து இறங்க அவள் முயல, அவனோ அவளையே பார்த்தான்.

என்ன இது?

குழப்பமும் படபடப்புமாக நின்றவளையே பார்த்து சின்னச் சிரிப்பொன்றை சிந்திவிட்டு, ஒருமுறை அணைத்து விடுவித்தான் விக்ரம்!

உடலெங்கும் பனிக்கட்டிகள் சூழ்ந்ததுபோல் சில்லிட்டு நின்றுவிட்டாள் யாமினி.

குறும்புடன் விக்ரம் கண்ணாடிக்க, சட்டென்று அவனிடமிருந்து விழிகளை விலக்கியவள்,

‘குட்டிம்மா எங்க..?’ மகளை தேடி விழிகளை சுழற்றினாள்.

‘என்ன விளையாட கூட்டிக்கொண்டு வந்திட்டு நீங்க ரெண்டுபேரும் என்ன செய்றீங்க?’ என்பதாக முறைத்துக்கொண்டிருந்தாள் அவள்! கையிலோ செல்!

‘இதை எப்ப குடுத்தான்? என்னோடதானே விளையாடிக் கொண்டிருந்தான்.’ கணவனின் குறும்புத்தனத்தில் சிரிப்பு வர மகளிடம் ஓடினாள்.

“செல்லக்குட்டி என்ன செய்றாங்க?” அவளையே பின்தொடர்ந்த கணவனின் குறும்புப் பார்வையில் இருந்து தப்பிக்க எண்ணி மகளிடம் பேச்சுக்கொடுத்தாள்.

“ப்பா.. போன்..” என்று அதை தூக்கி காட்டிவிட்டு அவள் மடியில் வாகாக ஏறி அமர்ந்துகொண்டு தன் விளையாட்டை அவள் தொடர,

‘பாருங்க! எப்ப பாத்தாலும் போன்ல விளையாட நல்லா பழக்கி இருக்கிறீங்க!’ என்று கண்ணாலேயே அவனை முறைத்தாள் யாமினி!

அவனோ அவளருகில் வந்து அப்படியே சரிந்தான்! கைகளை தலைக்குக் கொடுத்து மல்லாந்து படுத்தவனை யாமினி பார்க்க, “நிறைய நாளாச்சு யாமி நான் இப்படி சந்தோசமா இருந்து!” என்றான் உள்ளத்தில் இருந்து.

‘நானும் தான்!’ வாய்விட்டு சொல்லவில்லை அவள். ஆனால் உள்ளுக்குள் ஆச்சர்யமாக தன்னைத் தானே உணர்ந்துகொண்டிருந்தாள். ‘இப்படி குழந்தைபோல் விளையாடுவதும் சிரிப்பதும் நானா?’

‘நானா இப்படி சின்னப்பிள்ள மாதிரி அவனோட மல்லுக்கு நிண்டது?’

தகப்பனை அருகில் கண்டதும் சும்மா இருப்பாளா சின்னவள்?

அவன் வயிற்றில் அவள் ஏற, “செல்லம்மா.. அப்பாட்டா வாராங்களா..” என்றபடி மகளை அவன் கைகளால் தூக்கினான்.

தலை மண்ணில் சாயப்போக, “மண்ணில தலைய வைக்காதிங்கோ..” என்றாள் யாமினி அவசரமாக.

திரும்பி அவளை பார்த்துவிட்டு, சட்டென்று அவள் மடியில் தலையை தூக்கி வைத்துவிட்டான் விக்ரம்.

அப்படியே உறைந்தாள் யாமினி!

விக்ரமோ மகளோடு விளையாடத் தொடங்கினான்.

நேரம் கழிந்தும் யாமினியிடம் மாற்றமில்லை. “கொஞ்சம் தலைய கோதிவிடேன்.” என்றான் விக்ரம் கெஞ்சலாக.

கைகள் நடுங்க அவன் கேசத்துக்குள் மெல்ல கைகளை நுழைத்தாள் யாமினி. அடர்ந்த கேசம்.. அவள் விரல்களை தனக்குள் வாங்கிக்கொள்ள, தன்னை மீறியே கொதிக்கொடுத்தது யாமினியின் விரல்கள்.

மெல்ல மெல்ல கண்களை மூடிக்கொண்டான் விக்ரம்!

அவள் மடியில் அவன்! அவன் மார்பில் மகள்! நிறைந்துபோனது விக்ரமின் நெஞ்சம்!

இதுதான் அவன் தேடிய சொந்தம்!

இந்த சொந்தத்தைக் கூட இன்னும் மூன்று நாட்களில் பிரியப் போகிறான்! தற்காலிக பிரிவுதான் என்றாலும் நெஞ்சை அரித்தது வேதனை!

‘இவே ரெண்டுபேரையும் இங்க விட்டுட்டு எப்படி இருக்கப் போறன்?’

மனப்பாரம் தாங்காமல் கண்களை திறந்து அவளைப் பார்த்தான்.

அவளும் அவனைத்தான் பார்த்துக் கொண்டிருந்தாள்.

‘நீங்க இல்லாம என்ன செய்யப்போறன் நான்?’ கேள்வி கேட்ட கண்களையே பார்த்திருந்தான் விக்ரம்.

இந்தப் பிரிவு தற்காலிகமானதுதான்! ஆனால் தவிர்க்கமுடியாததும் ஆயிற்றே! பெருமூச்சொன்று கிளம்பிற்று!

சுற்றுப்புறத்தில் மெல்லிய இருள் கவியத் தொடங்கவும், “வா போவம்!” என்றபடி எழுந்துகொண்டான்.

இருவர் மனதிலும் பாரம்! வெளியே சொல்லிக்கொள்ளவில்லை. அமைதியாகவே வீட்டுக்கு நடந்தனர்.

 

டுத்தடுத்த நாட்கள் ஒருவித அமைதியோடு கழிந்தது. காலையில் நான்கு மணித்தியாலங்கள் அவள் வகுப்புக்குச் சென்றுவர, இவனும் கிடைத்த நேரங்களில் தானும் சொல்லிக்கொடுத்தான். மாலை உலாவல் என்று, முடிந்தவரை அந்த ஊரை அவளுக்கு பழக்கியும் ஆயிற்று! சூப்பர் மார்கெட் போகும் வழி.. டொச் வகுப்புக்கு போகும் பாதை.. கோவிலுக்கு, பார்க்குக்கு, கடற்கரைக்கு  என்று அவள் செல்ல வேண்டி வரக்கூடிய இடங்கள் என்று சிலதை அனுமானித்து போய்வந்து பாதையை பழக்கினான்.

“பஸ்சிலையோ, நடந்தோ எங்கயும் போகாத.. வெயிலுக்க திரியாத.. ஆட்டோவிலேயே போ!” என்றவன், அந்த தெருவிலேயே வசிக்கும் ஒருவரை அறிமுகப்படுத்தி அவரிடமும் சொன்னான், அவளை போகும் இடங்களுக்கு கூட்டிப் போகச் சொல்லி. அவரின் கைபேசி என்னை தானும் வாங்கிக் கொண்டான்.

எல்லாம் செய்தாயிற்று என்றதும் மனம் பாரமாகத் தொடங்கிற்று. நாளை அவர்களை விட்டுவிட்டு அவன் போகவேண்டுமே!

அவளுக்கும் மனதில் சொல்ல முடியாத பாரம்தான்! அதை சுமந்துகொண்டு எதையும் காட்டாமல் நடமாடிக் கொண்டிருந்தாள். அவளையே பார்த்திருந்தான் விக்ரம்.

‘நான் போனபிறகு என்ன செய்வா?  சமாளிப்பாளா? ஊரும் புதுசு.. சிங்களமும் தெரியாது.. டொச் வேற புதுசா படிக்கோணும்.. என்ன செய்யப் போறா?’

அவனாலும் இதற்குமேலே இங்கே இருக்க முடியவில்லை. அசோக்கொடுதான் டெனிஷ் இருக்கிறான் என்றாலும் போயே ஆகவேண்டிய கட்டாயம் உருவாகிக்கொண்டே வந்தது தொழிலில்.

“யாமி இங்க வா..!” அவளை தன்னருகில் இருத்தி, கையை பற்றி, “இருப்ப தானே.?” என்று கேட்டதுமே கண்ணில் மளுக்கென்று நீர் கோர்த்துக் கொண்டது அவளுக்கு.

இவ்வளவு நாட்களும் தனியாகத்தான் இருந்தாள். ஆனால் இப்போது.. எதைப் பற்றியும் சிந்திக்காது, அவன் பார்த்துக்கொள்வான் என்கிற நினைப்போடு இந்த நாட்களை கடத்தியபிறகு, பார்த்துப் பார்த்து கவனித்துக்கொண்டவன் தந்த சுகத்தை அனுபவித்து விட்டவளுக்கு, அவன் இல்லாத நாட்களை நினைக்கவே மருட்சியாக இருந்தது. தனியாக இருக்கப் போகிறோம் என்கிற நினைவே வந்து அச்சுறுத்தியது.

‘எப்படி.. இந்தப் பரந்த உலகில்.. அருகில் அவன் இல்லாமல்.. நினைவே இப்படி கணக்குதே.. அப்போ நான் எப்படி..’ கன்னங்களை நனைத்துக்கொண்டு கண்ணீர் ஓடிக்கொண்டே இருந்தது.

மனம் தாங்காமல் அவளை தன் மார்பில் சாய்த்துக்கொண்டான். “சும்மா எல்லாத்துக்கும் அழக்கூடாது!” கண்களை துடைத்துவிட்டான்.

“ஆறுமாதம் தானே. அது கண் மூடித் திறக்கிறதுக்குள்ள ஓடிப் போய்டும். துணைக்கு ஆயாம்மா இருப்பா. ஒண்டுக்கும் பயப்படாத என்ன!” என்று தனக்கும் சேர்த்து ஆறுதல் சொன்னான்.

“கவனமா படி. இடைல லீவு கிடச்சா கட்டாயம் ஒருக்கா வர பாக்கிறன். வீட்ட ஒதுக்கிறன் சமைக்கிறன் எண்டு நேரத்த ஓட்டாம ஒழுங்கா படிச்சு ஒரே தரத்திலேயே பாசாகிடோணும். அதுக்கு மேலையும் உன்னையும் பிள்ளையையும் விட்டுட்டு இருக்க என்னால ஏலாது.” என்று தன் மனதை சொன்னான்.

அவள் ஒன்றுமே கதைக்கவில்லை. அவன் மார்பில் சாய்ந்து கண்ணீர் உகுத்துக்கொண்டிருந்தாள். விக்ரமுக்கும் அதற்குமேல் முடியவில்லை. அப்படியே அவளை அணைத்தபடி அமர்ந்திருந்தான்!

கழியும் நொடிகளை விட மற்றவர் அருகிளில்லாமல் கழிக்கப்போகும் நொடிகளை எண்ணி மௌனமாகிப் போயினர்!

“என்னாலையும் போகாம இருக்க முடியேல்லமா. இடைல எப்படியும் வருவன்.. ஆனா இப்ப போயே ஆகோணும்.” மனம் பொறுக்காமல் புலம்பினான்.

சந்தனாவையும் வச்சுக்கொண்டு ஒற்றை ஆளாக என்ன செய்யப் போகிறாளோ என்று நினைக்கவே மலைப்பாக இருந்தது.

வரப்போகின்ற பிரிவு.. அவர்களுக்குள் ஒருவித நெருக்கத்தை உருவாக்கிக்கொண்டே இருந்தது.

அடுத்தநாள், விமான நிலையத்தில், நேரம் இன்னுமே இருந்ததில் அவளோடு சென்று கதிரையில் அமர்ந்துகொண்டான். அன்று அதிகாலையிலேயே ப்ளைட் என்றதில் முழித்த சந்தனா திரும்பவும் உறங்கி இருந்தாள். அவளை தானே மடியில் வைத்திருந்தான் விக்ரம்.

அவளை பார்க்க பார்க்க மனம் கனத்தது. ‘நான் இல்லாம எப்படி இருப்பா? தத்தக்கா பித்தக்கா எண்டு என்னையே சுத்துவா. இனி என்ன செய்வா? என்னாலேயே முடியேல்லையே..’

மனைவியை திரும்பிப் பார்த்தான். தலையை குனிந்து கைகள் இரண்டையும் ஒன்றோடு ஒன்றாக போட்டு பிணைந்து கொண்டிருந்தாள்.

சில நாட்களாக அவளிடம் தெரிந்த அந்த உற்சாகம், துள்ளல், விளையாட்டு எல்லாம் அடங்கி பழைய யாமினியின் சாயல் அடித்தது!

“ஊர்ல நிம்மதியா இருந்தவள கல்யாணம் என்ர பெயர்ல புது ஊர்ல தெரியாத மனுசருக்கு மத்தியில கொண்டுவந்து விட்டு போறன் எண்டிருக்கா?” என்று கேட்டான்.

“ஐயோ.. அப்படியெல்லாம் இல்லை.” என்றாள் மனதின் கலக்கத்தை கண்களில் காட்டாதிருக்க முயன்றபடி.

“நீங்க எவ்வளவு தூரம் போனாலும் உங்கட பாதுகாப்புல நான் இருக்கிறன் என்ற நினைப்பே எனக்கு போதும்.” கசிந்த விழிகளோடு அவனையே பார்த்துச் சொன்னாள்.

பிரியப்போகும் அந்த நொடிகளில் ஒருவர் மீதான மற்றவரின் பாசம் வளர்ந்துகொண்டே போனது.

இருவருக்குமே பேச்சு வரவில்லை. மனம் கனத்து தொண்டை அடைத்துக் கொண்டது.

இனியும் தாமதிக்க முடியாத நிலை வந்தபோது, எழுந்து மகளை கிண்டர் வண்டிலில் கிடத்திவிட்டு, அவளின் நெற்றியில் தன் இதழ்களை பதித்தான். வெண்பஞ்சு கன்னங்களை தடவிவிட்டு நிமிர்ந்தபோது அவன் விழிகள் கசிந்தே போயிற்று!

“சரிம்மா.. நான் வரவா?” மனதில் பாரத்தோடு கேட்டான்.

கண்களில் நீர் கோர்க்க தலையை மட்டும் அசைத்தவளை பார்க்கப் பார்க்க நெஞ்சுக்குள் அடைத்தது விக்ரமுக்கு.

“ஒண்டுக்கும் யோசிக்காத.. காசு ஏதும் தேவை எண்டாலும் என்னட்ட சொல்லோணும். இடையில ஒருக்கா வரப்பாக்கிறன். பிள்ளைய கவனமா பாத்துக்கொள்.”

இதையெல்லாம் பலதடவைகள் சொல்லிவிட்டான். ஆனாலும் மனம் கேட்கவில்லை.

எல்லாத்துக்கும் தலையை மட்டுமே அசைத்தாள்.

முடியவில்லை அவனால்.

“என்னடா? இருந்திடுவியா?”

மளுக் என்று கண்ணீர் வழிந்தது.

அவள் தலையை தன் மார்போடு அணைத்துக்கொண்டான். “என்னம்மா நீ. இப்படி அழுதா நான் எப்படி போறது?”

“இல்லையில்ல! நான் அழேல்ல!” என்றபடி வேகமாக கண்ணீரை துடைத்தாள்.

தாங்கமாட்டாமல் அவள் பூமுகத்தை பற்றி நெற்றியில் உதடுகளை பதித்தான் விக்ரம்.

“கவனமா இரு என்ன..” சொல்லும்போதே தொண்டை அடைத்தது.

“செல்லம்மா கார் சத்தம் கேட்டாலே ஓடுவா. பால்கனில தனியா விடாத.. நீயும் கவனமா இரு!” இதோடு பல தடவைகள் சொல்லிவிட்டான்.

இனியும் தாமதிக்க முடியாது என்கிற நிலையில் கிளம்பினான். போகவே மனமில்லை. இருவரையும் திரும்பித் திரும்பி பார்த்தபடியே சென்றான்.

மனதையும் நினைப்பையும் முற்றிலுமாக அவளிடமும் குழந்தையிடமும் விட்டுவிட்டு உயிர்ப்பே இல்லாமல் கிளம்பினான் விக்ரம்!

 

6 thoughts on “நினைவெல்லாம் நீயாகிட வந்தேன்..!! 10

  shanthi said:
  June 1, 2017 at 10:47 am

  6 maatham tanguma taayum seyum,…………

  Like

  chitraganesan said:
  May 30, 2017 at 5:40 am

  nice ud. sikkrem vanthu kutti kondu po vikram.pavam yamini..eppadi thaniyaka samalikka pogiralo?avargalin iyalpana seiyalkale avargalidam oru nesam,and pasathai velipaduthavathu romba alagu…

  Like

  saji said:
  May 30, 2017 at 4:22 am

  superrrrrrr ud sis

  Like

  radhikaramu16 said:
  May 30, 2017 at 4:15 am

  Mam the love developing between Vikram and Yamini is so sweet. But Vikram leaving Yamini in Lanka and moving to Germany is so painful for me itself . Now only they two are realizing their love ❤ though this gap is expected one it’s so emotional to read and made me to shed tears for them. How Yamini is going to manage without Vikram? Hmmmm a woman’s real happiness lies in her husband’s part. If he is so caring and lovable then she can see the heaven in earth itself. Vikram is rocking in this regard. I wondered how fast he gave his cellphone to Chandhana when he was playing with Yamini in the seashore.And the last part of update he asking Yamini to pass the test in the first attempt itself tells his pure love for her and Chandhana. What is next ? This is running in my mind mam. So eagerly waiting for your next update mam.

  Like

  Kiruthi logesh said:
  May 30, 2017 at 3:33 am

  Woww nithakka unga hero la enku vikram rompaaaa pudchurku semma yenna oru character phaaa chance ah ila…i really enjoyed ur writing way😍😍😍😍 kadhaiya sekram mudikka koodathu solten

  Like

  suguashok said:
  May 29, 2017 at 10:10 pm

  Hi mam
  Nice update….as usual awesome mam….

  Like

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s