நினைவெல்லாம் நீயாகிட வந்தேன் நாவலுக்கான விமர்சனங்கள்.

ஒவ்வொரு படைப்பாளனுக்கும் வாசகனிடம் கிடைக்கும் ஒவ்வொரு வார்த்தைகளும் மிக முக்கியமானவை. அப்படித்தான் எனக்கும். விளையாட்டாகத் தொடங்கிய என் பயணம் இன்றுவரை நீள்வதற்கு வாசக நெஞ்சங்களும், அவர்களின் மனம் திறந்த வார்த்தைகளும் மட்டுமே காரணம். அவர்கள் தந்த பரிசுகள் இவை. அவற்றை பாதுகாக்க வேண்டியது என் பொறுப்பல்லவா. அதன் பெயரிலேயே என் நினைவுப் பெட்டகத்தின் நினைவுகளாய் இவற்றை சேமிக்கிறேன். இதில் யாருக்காவது மாற்றுக் கருத்திருப்பின் அதனை போக்கிட தயாராகவே இருக்கிறேன். மீண்டுமொருமுறை உங்கள் அனைவருக்கும் என் நன்றிகள்!!

 

யாழ் சத்யா: 6 septembar 

நிதனிபிரபுவின் நினைவெல்லாம் நீயாகிட வந்தேன் – யாழ் சத்யாவின் பார்வையில்
————————–
எப்படி ஆரம்பித்து என்ன எழுதுவது என்று தெரியாமலேயே எழுத ஆரம்பிக்கின்றேன். இந்தக் கதை பற்றி சொல்வதென்றால் சாதாரணமான ஒரு காதல் கதை. ஆனால் அதைச் சொல்லிய விதம். கவிதை. கவிதை. உங்கள் கைகளில் ஏதோ மாஜிக் இருக்கிறதுதான் நிதாக்கா.

மேலைத்தேய நாடுகளில் மிக இயல்பாக நடந்தேறும் விவாகரத்துக்கள். அதன் காரணங்கள். அதனால் ஏற்படும் விளைவுகள். அந்தக் காயத்திற்கு மருந்திட வருகிறார்கள் இருவர். காயத்தை ஆற்றினார்களா? இல்லை அதிகரித்தார்களா? என்பதுதான் கதை.

முன்பெல்லாம் எங்களோடு படித்த சில பிள்ளைகள் அப்பா வெளிநாட்டில என்று சொல்லுவார்கள். இவர்கள் பிறந்ததும் வெளிநாடு சென்று உழைக்கும் தந்தையர் பத்து, பன்னிரெண்டு வருடம் கழித்து மகள் பூப்படையும் போதோ அல்லது இருபது வருடங்கள் கழித்து மகளின் திருமணத்திற்கோ தான் வீட்டிற்கு திரும்புவது உண்டு. கடிதங்களிலும் வருடத்திற்கு நாலைந்து முறை தொலைபேசியிலும் மட்டுமே பேசிப் பழகி உறவைப் பலப்படுத்தி இருப்பார்கள். ஆனால் அங்கே கணவன், மனைவி உறவானாலும் சரி, தந்தை மகவு உறவானாலும் சரி மிகுந்த பிணைப்போடேயே இருக்கும். இதுதான் எங்கள் மண்ணின் சிறப்பு.

ஆனால் மேலைநாடுகளில் இன்றைய காலத்தில் எங்கள் மண்ணிலும் சரி காதலித்து மணந்திருந்தால் கூட சில மாதங்கள் வேலை விடயமாகப் பிரிந்து இருப்பதே கூட நிரந்தர பிரிவுக்கு வழி வகுத்து விடுகிறது. இத்தகைய பொறுமையற்றவர்களின், உண்மை நேசத்தைப் புரிந்து கொள்ளாதவர்களின் விவாகரத்துக்களால் அதிகளவில் பாதிக்கப்படுவது பிள்ளைகளே.

ஜேர்மனியில் இருந்து இலங்கைக்கு பயணிக்கும் நாயகனோடு சேர்ந்து எங்களையும் இலங்கை சுற்றிக் காட்டி விடுகிறீர்கள் நிதாக்கா. எனக்கே ஏதோ புதுசாக எல்லா இடத்தையும் பார்க்கும் உணர்வு.

எந்த ஊரிலிருந்தாலும் தனியாக துணையில்லாது வாழும் ஒரு பெண் அனுபவிக்கும் கொடுமைகள் பொதுதான் போலும். இந்தக் கதை நாயகியும் அதற்கு விதிவிலக்கல்ல. அனாதையான அவள் தன்னைப் பாதுகாத்துக் கொள்ளப் புத்திசாலித்தனமான நடந்து கொள்கிறாள். ஆனால் எல்லோரும் இவளைப் போல் இருந்துவிட முடியாததால் பலியாகி விடுகிறார்கள் போல.

இங்கே நாயகன், நாயகியை விட என்னை அதிகம் கவர்ந்தவர்கள் இதில் வரும் குழந்தைகள். அவர்களின் நடவடிக்கைகளை வர்ணித்திருக்கும் விதமும் அவர்களின் பாசமும் சரி அப்பப்பா… அழகோ அழகு… அள்ளி அணைத்து முத்தமிடத் துடிக்கிறது மனது.

இரண்டாம் தடவை காதல் மலருமா? இவ்வளவு பாசம் காட்ட முடியுமா? இவ்வளவு ஏக்கம் வருமா? இந்தளவு பிரிவு வேதனை வாட்டுமா? என்னில் ஏற்பட்ட ஏகப்பட்ட கேள்விகளுக்கு கிடைத்த பதில் அற்புதம். ஒவ்வொரு எபியையும் காத்திருந்து காதல் மழையிலும், பாசத் தூறல்களிலும் நனைந்து கொண்டே படித்த அற்புதத் தருணங்கள் மறக்க முடியாதவை.

தாய் மகன் பிணைப்பாகட்டும், தந்தை மகள் பாசமாகட்டும், தோள் கொடுக்கும் நட்பாகட்டும், கணவன் மனைவி காதலாகட்டும் அனைத்துமே சொல்லப்பட்ட விதம் மனசுக்குள்ளே தென்றல் வீசுவதாய்.

நாயகியின் நாலு பந்தி கடந்தாலத்திலேயே நெஞ்சை உலுக்கி விட்டீர்கள் நிதாக்கா. அவள் துயர் நீக்க ஒருவன் கிடைத்த போல் அவள் போல் பாதிக்கப்பட்ட எல்லோருக்கும் ஒரு தீர்வு கிடைக்காதா என்று ஒரு எண்ண அலை ஓடாமலில்லை.

நினைவெல்லாம் நீயாகிட வந்தேன் மனதிற்கு திருப்தியாய், மயிலிறகாய் மனதை வருடும், சீரான வேகத்தில் செல்லும், ஒரு மென்மையான இனிமையான சுகமான காதல் கதை.

உங்கள் எழுத்தால் மேன்மேலும் எங்கள் மனங்களைக் கட்டிப்போட மனமார்ந்த வாழ்த்துக்கள் நிதாக்கா.

என்றும் அன்புடன்
யாழ் சத்யா.

Image may contain: 4 people, people smiling, text

::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::

 

நிலா: 6 september 

மறுமணத்தின் ஒர் அழகிய விழிப்புணர்வு :

நாயகன் : விக்ரம்
நாயகி : யாழினி

விக்ரமின் முன்னாள்
மனைவி : யாஸ்மின்

நண்பன் : அசோக்

யாழினியின் பெறாத
மழலைகள் : டெனிஸ்,சந்தனா

இடம் : ஜேர்மனி மற்றும் இலங்கை

வேலையில்
காதலையும் மணவாழ்வையும்
தொலைத்து நிற்கும் ஒருவன் ….( விக்ரம்)

எனக்கு பணம் முக்கியம் அல்ல
அன்பும் ஆதரவும் தான் முக்கியம் என்று மணவாழ்வில் பிரிந்து மறுமணம் செய்து செல்லும் ஒருவள்… ( யாஸ்மின் )

தாய் இருந்தும் தந்தையின்
அரவணைப்பில் இருக்கும் சிறுவன்…( டெனிஸ்)

தனிமரமாக இருக்கும்
தன் நண்பனை கண் கொண்டு பார்க்க முடியாமல் அவன் வாழ்வின்
விடியலை நோக்கி பயணிக்க வழிக்கட்டியாய் துணை வரும் ஒருவன்… ( அசோக் )

தன் குடிசையில் வாழ்ந்தலும்
மண் மானத்தை மறக்கமால்
மணவாழ்வில் மணவாளனை இழந்தலும் தன் மனதிற்கும் இளமைக்கும் கடிவாளம் இட்டக்கொள்ளும் ஒருவள்… ( யாழினி )

இவளை தொட்டல் செவ்வானமும்
பொறமை கொள்ளுமோ என்னும் வகையில் தளிர் நடையில் எல்லோர் மனதிலும் சிம்மசனமிட்டு இருப்பவள்… ( சந்தனா )

மணவாழ்வில் தோல்வியையும்,இழப்பையும்
சந்திக்கும் இரு உள்ளமும் மறுமணத்தில் தன் வாழ்க்கையை தொடங்குகிறது….

தாய் இருந்தும் தனிமையில் வாடும் 9 வயதான டெனிஸ்க்கு தாயாய் மாறுகிறள்,திருமணமே ஆனாலும்
தன்னை முழுமனதுடன் தாயாய் ஏற்கும் வரை தன்னை தன்னவனுக்கு கொடுக்காத யாழினி…

இரண்டு வயதில் தந்தையில்
அரவணைப்பிற்கு ஏங்கும் பூந்தளிருக்கு தன்னையே தந்தையேன அடையாளம் காட்டி
எல்லோர் மனதில் இவன் பொல் தந்தை எனக்கு இல்லையேன ஏங்க வைக்கும் தந்தை , மறுமணத்தில் காதலை முழுமையாக உணர்ந்து மனதிற்கு கடிவாளம் இட்டுக்கொண்ட தன்னவளை தன்னையே புரிய வைத்து தன்மன்னவனை காதல் கொள்ள செய்யும் விக்ரம் …

நினைவெல்லம்
நீயாகிட வந்தேன்….

நிதனி மேம்…

Image may contain: 1 person, smiling, text

 

:::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::

 

ரோசி கஜன்: 6 september 

 

ஹாய் நிதா,

‘நினைவெல்லாம் நீயாகிட வந்தேன்’ கதைக்கு ரிவ்யு எழுதலாம் என்று பார்த்தால் அது வந்தால் தானே!

அதற்கென்று விட்டுவிடுவதா?

கதையை வாசிக்கையில் மனதில் பதிந்தவற்றைப் சுருக்கமாகப்ப கிர்ந்து கொள்கிறேன்.

ஜெர்மனியில், நம் ஊர் நாயகன், ஜெர்மன் நாட்டுப் பெண், காதல் திருமணம், மகன் பிறந்த பின்னரான அவர்களின் பிரிவு …இப்படி மிக யதார்த்தமாக ஆரம்பிக்கும் கதை, யாழ்ப்பாணம் சென்றிருந்த போது என்ன நடந்தது தெரியுமா?

வீட்டில் சொல்லிக் கொள்ளாமல் நானும் பெட்டி கட்டி விட்டேன் மா.

நம்ம பேச்சு வழக்கு வேற வருதா? ஒவ்வொரு சம்பவங்களும் என்னை அங்கேயே சுற்றித் திரிய வைத்தது. சின்னதுவோ பெரிதோ, பார்த்துப் பார்த்து நம்ம ஊர் பழக்க வழக்கங்களை கதையில் சொல்லியிருக்கிரீர். அதுக்கு முதல் பாராட்டுகள்.

கதையின் நாயகி யாமினி, எனக்கு அவளை அவ்வளவு பிடிச்சிருக்கு. அவளின் நிமிர்வும் துணிவும் அவள் காட்டும் நேசம், பாசம் ..

விக்ரம், டெனிஷ் மனதில் இடம் பிடித்ததைப் போலவே, எனக்குப் பிடிச்ச ஹீரோயின் என்ற இடத்தைத் தட்டிக் கொண்டு போய்ட்டாள். இவளை வெல்ல ஒருத்தி எப்போ வருவாள் பார்ப்போம்.

கடைசியில் குட்டியா சொல்லியிருந்த அவளின் கடந்த காலம், அது தந்த அழுத்தமும் தாக்கமும் பக்கம் பக்கமாக எழுதினாலும் கிடைக்காதும்மா..

யாமினிக்கு சற்றும் குறையாது நிதா கதையில் எனக்கு பிடிச்ச ஹீரோ…விக்ரம் தான். ( ஹலோ…நோ சிரிப்பு..நம்ம டிசைன் அப்படி )

செல்லம்மாவும் அவள் அண்ணாவும் வரும் இடமெல்லாம் அத்தனை அழகு..

ஊரில் விக்ரமின் கார் சத்தத்துக்கு அவள் ஓடி வருவாளே… அதை எப்போதுமே மறக்க முடியாது.

அதோடு தமையனுக்கு ஜுஸ் கொடுப்பாளே ஹா..ஹா..சின்ன ஆட்கள் அப்படியல்லோ… ஹா..ஹா..நான் அந்த இடத்தில் எதை எதையோ எல்லாம் நினைத்துச் சிரித்தேன்.

அடுத்து, உமக்கே உமக்கான உரைநடை இந்தக் கதையிலும் வெகு வெகு அழகு.

நிதனி பிரபுவிடம் இருந்து இன்னும் இன்னும் அழுத்தமான, அழகான படைப்புகள் பலதை ஆவலோடு எதிர்பார்ப்பவரில் நானும் ஒருத்தி.

மேலும் மேலும் உமது எழுத்து மெருகேறி மிளிர என் அன்பு வாழ்த்துக்கள் மா..

அடுத்த கதையோடு கெதியா வாரும் …

 

::::::::::::::::::::::::::::::::::::::::::::::::

 

Amirtha Saagari A:

நினைவெல்லாம் நீயாகிட வந்தேன்!!!
By நிதனி பிரபு

எனக்கு இந்த கதைக்கு எப்படி review போடுறதுன்னே தெரியலை… simple ஸ்டோரி with மோர் லவ்… express பண்ண வார்த்தைகள் இல்லை…

The way of your presentation is extremely awesome… ஒவ்வொரு வரியும், கதை நகருற இடமும் அவ்வளவு poetic…

விக்ரம் தான் பெஸ்ட்ன்னு நினைச்சா… யாமினி இதையெல்லாம் தாண்டி போறா…

டெனிசை வளர்க்கிற விதமாகட்டும், செல்லம்மாகிட்ட காட்டுற பாசம் ஆகட்டும், யாமினியிடம் காட்டும் நேசமாகட்டும், எல்லா விதத்துலேயும் நின்னு ஜெயிக்கிறான்… செல்லம்மாக்காக யாமினியை திருமணம் செய்துகிட்டாலும் அவளை முதல் முதலில் பார்த்தவுடன் வரும் அந்த நேசம் ரொம்ப அழகு…

அசோக் பொண்ணு பார்க்கிற சமயம் அவன் தனக்கு எப்படிப்பட்ட பொண்ணு வேணும்ன்னு சொல்லுற பக்குவம் ரொம்ப அழகு… மத்தபடி இவன் ரொம்ப குறும்பு பையன்… (ஹீ ஹீ ஹீ)

டெனிஸ் – அப்பா போல அழுத்தமான பிள்ளை… இவனுக்காக யாமினி எடுத்த முடிவு She is Marvellous… ஒரு மகனா விக்ரமை அவன் முடிவெடுக்க வைத்தது நல்ல ஒரு கான்செப்ட்.. யாமினியையும் சந்தனாவையும் அவன் தன்னுடைய சொந்தங்களா ஏற்றுக்கொள்கிற அந்த இடம் மிக மென்மையான உணர்வு…

அசோக் / மரகதம் அம்மா – sweet souls, நட்பு நம்மளா அமைச்சிகிற ஒரு வரம்… அது விக்ரமுக்கு நிறையவே வரமா இருக்கு… தாய்க்கும் மேலா யாமினியை பார்த்துக்குற மரகதம் அம்மா… 2nd மேரேஜ் பண்ணினா குத்தம்ன்னு சொல்லுற சுற்றத்துக்கு மத்தியில் யாமினியின் வாழ்க்கையை நினைச்சு கலங்குற விதம், அவளுக்கு ஒரு நல்ல வாழ்வு கிடைச்சவுடனே அவங்க அடையுற பூரிப்பு வார்த்தையில் விவரிக்க முடியாது…

சந்தனா / செல்லம்மா – cute baby… இவ மட்டும்தான் அவளோட அம்மாக்கு ஒரு நல்ல வாழ்க்கை கிடைக்க காரணம்… எப்படி இருந்தாலும் விக்ரம் விட்டுருக்கமாட்டான் யாமினியை… விக்ரமுக்கும் இவளுக்கும் இருக்க bonding அண்ட் affection வார்த்தைகளில் விவரிக்க கூடியது இல்லை… அவனோட காரின் சத்தம் கேட்டு ஓடி வருவது, அவனின் குரல் கேட்டு அவனை அழைப்பது இதெல்லாம் ரொம்ப beyond இன் தெயர் லவ்… கிட்டத்தட்ட இவளே ஒரு heroin தான்… டெனிஸிடம் இவளும், இவளிடம் டெனிஸ் காட்டும் பாசம்… ரசனையின் மொத்த உருவங்கள்…

யாமினி – சூப்பர் heroin இந்த யாமினி… ஒத்தை மனுசியா சந்தனாவை வளர்க்கிற விதம், மத்தவங்க முன்னாடி அவ காட்டுற இறுக்கம், விடாமல் துரத்தும் விக்ரமிடம் முதலில் மறுத்து, கோபம் கொண்டு, பிறகு அவளின் பெண்ணுக்காக இந்த திருமணம் என்று காட்டிக்கொண்டாலும், அந்த வாழ்க்கையை அவள் விக்ரமின் துணையுடன் கையாண்ட விதம், டெனிஸ்சை அவள் எப்படி ஒரு பெண்ணாக தாயாக பார்க்கிறாள், அவனுக்காக தன்னுடைய வாழ்க்கையை அவளுடைய காதலை தனக்குள்ளேயே வைத்து அவனை தாய்மையுடன் அரவணைக்கிறாள்… யாமினி யு ஆர் தி பெஸ்ட்… அன்பால கட்டிப்போடுற இடத்தில் இவளுக்கு நிகர் இவளே… இந்த மாதிரி இனி ஒரு நாயகி கிடைப்பது அரிது…

(எனக்கு ஒரு டவுட்… யாமினி விக்ரமுக்கு மோதிரம் போட்டாலா??? வரிசையா வந்த review (especially Rosie akka review) பார்த்து, ‘ஐயையோ!!! சீக்கிரம் போட்டுருவோம்ன்னு’ இருந்த பயத்துல கவனத்தில் வைக்கலை… ப்ளீஸ் எனக்கு இந்த டவுட்ட கிளியர் பண்ணுங்க… யாழ் சத்யாsaththumaavu help karo ji…)

கண்டிப்பாக சொல்லுவேன்… இந்த கதை படிக்கிறப்ப எல்லார் மனசுலயும் ஒரு நிறைவு வருவது உறுதி… அதே போல படிக்கிற அத்தனை பேரின் இதழ் புன்னகையும் ஒருவித நெகிழ்ச்சியுடன், நல்ல நேசத்துடன் விரிந்தே இருக்கும்…

மக்களே… என் இனிய நட்புகளே… மிஸ் பண்ணிராதிங்க… அப்பறம் வருத்தப்படுவீங்க…

நிதா அக்கா… உங்களுக்கு வாழ்த்த எனக்கு வயசு பத்தாது அக்கா… ஆனா இது நான் உங்க கதைல படிச்ச ரெண்டாவது கதை… யாரையும் இதில் வருந்த வைக்கலை… அதுவே எனக்கு பிடிச்சது…

(அப்பறம் அக்கா… உங்க அடுத்த கதை எப்போ வரும்… I am waiting…)

ப்ரியங்களுடன்
அமிர்தசாகரி

 

::::::::::::::::::::::::::::::::::::::::::::::

தர்சி கோகு:

நிதா, சொன்ன மாதிரியே கதையை முடித்துவிட்டீங்க. வாழ்த்துக்கள். இது முதலில் சிறுகதையாக இருக்கும் போது நான் போட்ட கமெண்ட் நீங்க பார்க்கவில்லை என்று சொன்ன ஞாபகம். அதனால் அதை இப்போ இங்கு போடுறேன். பிறகு முழுக் கதையையும் வாசித்துமுடித்து விட்டு வாறன்.

உங்களுக்கு ஒரு உண்மையை சொல்லவா? எவ்வளவு பெரிய கதை என்றாலும் கதை பிடித்திருந்தால் சலிக்காமல் வாசிப்பேன். ஆனால் சிறுகதை (ஏன் குறு நாவல் கூட) வாசிப்பதில் ஆர்வம் இருந்ததில்லை. தனக்கு பிடித்த ஐஸ்கிரீம் சாப்பிட விரும்பும் குழந்தைக்கு அதில் ஒரு டீ ஸ்பூன் மட்டும் கொடுப்பதைப் போன்றது 🙂. கதை வாசித்த திருப்தியே கிடைக்காது. ஒரு ஸ்பூன் சாப்பிடுவதற்கு சாப்பிடாமலேயே இருந்துவிடலாம் என்று தோன்றும்.

சரி இப்ப உங்க கதைக்கு வருவோம். உங்க கதை வாசித்த போது சிறு வயதில் படித்த ஒரு கதை தான் ஞாபகத்துக்கு வந்தது. நீங்களும் படித்திருப்பீர்கள் என்று தான் நினைக்கிறேன். ஒரு கொடூரமான திருடன் இருந்தானாம். ஒரு தடவை அவன் ஒரு முனிவரை மறித்து திருட முற்படும் போது நீ யாருக்காக திருடுகிறாய் என்று முனிவர் அவனைக் கேட்டாராம். தனது மனைவி பிள்ளைகளுக்காகத் தான் என்று அவன் சொன்னானாம். அப்போ திருடும் பணத்தை அவர்கள் பாவிப்பது போல திருடுவதால் கிடைக்கும் பாவத்தையும் அவர்கள் பங்குபோட்டுக் கொள்வார்களா என்று அவர்களிடம் கேட்கும்படி முனிவர் சொன்னார். திருடன் அவன் குடும்பத்திடம் அதைக் கேட்டபோது அவர்கள் அதெப்படி முடியும், நாங்களா உன்னை திருடச் சொன்னோம் என்று கேட்டார்களாம். அதன் பின்னர் அவன் மனம் திருந்தி தவம் செய்து முனிவராக மாறினான் என்பது தான் அந்தக் கதை. அந்த முனிவர் பெயர் என்ன என்று ஞாபகம் இல்லை. இங்கு திருடனின் நிலை தான் விக்ரமுக்கும்.

இக்காலத்தில் எத்தனை ஆண்கள்/பெண்கள் குடும்பத்தை விட்டு தனியாக வேறு இடத்தில இருந்து உழைக்கிறார்கள். இங்கு பலர் கணவன் மனைவியாக, பிள்ளைகளை தாத்தா பாட்டியுடன் அவர்கள் நாட்டில் வளர விட்டுவிட்டு இங்கிருந்து உழைக்கிறார்கள். அவர்களை எல்லாம் நினைக்கும் போது என்ன வாழ்க்கை வாழ்கிறார்கள், இப்படியும் வாழ வேண்டுமா என்று தோன்றும். ஆனால் அப்படி உழைக்கும் எல்லோருமே தமது சந்தோஷத்துக்காக மட்டும் உழைக்கவில்லை என்றும் தெரியும். எனக்குத் தெரிந்து ஒன்றிரண்டு அப்பாமார் பிள்ளைகள் படித்து முடித்து வேலைக்குச் சென்று கல்யாணம் முடித்த பின்னரும் இன்னும் வெளிநாட்டை விட்டு வரவில்லை. அவர்களை நினைத்தால் சந்தேகமாகவும் இருக்கும். அங்கு ஏதேனும் குடும்பம் இருக்குமோ என்று எக்குத்தப்பாகவும் நினைக்கத் தோன்றும்.

இதையெல்லாம் பார்க்கும் போது இந்தக் கதையில் விக்டரின் மீது பிழை இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. அவன் எந்த விதமாக உழைத்தான் என்று நீங்க விளக்கமாக கூறவில்லை. இருந்தாலும் அவன் குடும்பத்தை விட்டு விலகி தனியாக இருக்கவில்லை என்று நினைக்கிறேன். ஜாஸ்மினும் அவன் சம்பாத்தியத்தை மகிழ்ச்சியாக அனுபவித்திருக்கிறாள் என்பதை அவள் வீடு கட்டியதையும் சோபா, டிவி வாங்கியதையும் வைத்து நினைக்கத்தோன்றியது. ஆனால் பிறகு நியாயவாதியாக தனக்கு பணம் தேவையில்லை அவன் அருகாமை தான் தேவைப்பட்டது என்று சொல்வது முரண்பாடாக இருந்தது. என்ன தேவையிருந்திருந்தாலும் அவனிடம் வெளிப்படையாக கதைத்திருக்கலாம். என்னைப்பொறுத்தவரை அவளுக்கு விக்ரமுடனான வாழ்க்கை அலுத்துவிட்டது. அதற்கு இப்படியொரு சாட்டு அவ்வளவு தான். அதோடு அவர்கள் இருவர் மட்டுமே இருக்கும் போது அவர்களைப் பற்றி யோசிக்கலாம். ஆனால் எப்போது குழந்தை என்ற அடுத்த நிலைக்கு போனார்களோ அப்போது அதனுடைய எதிர்காலத்தை பற்றி யோசிக்க வேண்டிய சூழ்நிலை வந்துவிடுகிறது. எமது சந்தோஷத்துக்காக பெற்றுக்கொண்ட குழந்தையின் எதிர்காலத்துக்காக நமது ஆசைகளை/எதிர்பார்ப்புகளை கொஞ்சம் சமாளித்துப்போக வேண்டியது இங்கு அவசியமாகிறது. இங்கு ஜாஸ்மின் தனக்கு பணம் வசதி தேவையில்லை என்று சொன்னாலும் அவர்கள் மகனின் எதிர்காலத்துக்கு அது அவசியமாகிறது. இங்கு அவர்கள் மகனின் ஆசை/எதிர்பார்ப்பு பற்றி நீங்க விளக்கமாக சொல்லவில்லை. அவனும் அப்பாவின் அருகாமை தான் தனக்கு வேண்டும் என்று ஆசைப்பட்டிருந்தால் இருவரும் தமது ஆசையை சொல்லிய பின்னரும் விக்ரம் அதை மதிக்காது அவர்களை புறக்கணித்திருந்தால் அவன் செய்தது பிழையான செயல் தான்.

இன்றைய காலத்தில் இப்படியான வாழ்க்கை தவிர்க்க முடியாதது, எல்லோரும் ஓட வேண்டிய சூழ்நிலை. நடப்பவனை மற்றவர்கள் சோம்பேறியாத்தான் பார்ப்பார்கள், குடும்பத்தினர் கூட மதிக்க மாட்டார்கள். நான் கூட என்னடா வாழ்க்கை வாழ்கிறோம் என்று அடிக்கடி யோசிப்பதுண்டு. காலையிலிருந்து இரவு வரை ஒட்டம். இரவில் படுக்கப் போகும் போது அடுத்த நாளும் அதே போல் ஓட வேண்டுமே என்று நினைக்கும் போது சலிப்பாகவும் இருக்கும். உலகம் முன்னேற்றம் அடையாமல் இருந்திருந்தால் இப்படி ஓட வேண்டிய தேவை வந்திருக்காதே என்றும் நினைக்கத் தோன்றுகிறது.

 

:::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::

 

Vaksala Thujan Vasi:

 

என்னோட முதல் முயற்சி யாருட கதைக்கும் Reviewழுதியில்லை இதுவரைக்கும் கதை பிடிச்சிருந்தால் Comment பண்ணுவன் ரொம்ப பிடிச்சால் Inbox message போடுவன் ஆனால் இந்த முயற்சி முதல் முறை ஏதும் குற்றம் குறை இருந்தால்
மன்னிக்கவும் .
வாசிக்கிறதுக்கு என்ன கிடைச்சாலும் அதை வாசிச்சு முடிச்சிட்டுதான் மறுவேலை பாப்பன். பாடசாலை காலத்திலயும் பெரும்பாலான என் நேரத்தை நூலகம் எடுத்துக்கொள்ளும் வேலை என்டு வெளிக்கிட்டா பிறகு இங்க வேலை இடத்துக்கு பக்கத்தில நூலகம் இல்லை தேடி போறதுக்கு நேரமும் கிடைக்கிறதில்லை.இப்டி போய் கொண்டிருக்கும் போதுதான் ஒருநாள் முகப்புத்தகத்தில நாவல்கள் வெளிவந்திருப்பதை கண்டறிஞ்சு என்ர வாசிப்பு பசிக்கு தீனிபோட்டன்.
நான் வாசிச்சு எனக்கு மனசை நிறைச்ச கதைதான் நினைவெல்லாம் நீயாகிட வந்தாய் எழுத்தாளர் நிதனி பிரபு .
என்னமாதிரி ஒருகதை சொல்றதுக்கு வார்த்தையே இல்லை.
விக்ரம் ஜாஸ்மின்ட பிரிவு தற்காலத்துக்கு ஏற்ற காரணத்தோட அமைச்சிருக்கிங்க. தொழிலுக்கும் பணத்துக்கும் பின்னால மனிதன் ஓடத்தொடங்கியதால் வீட்டாட்களை விட்டு தூரமாய் செல்வதை இயல்பாய் ஜாஸ்மின் சுட்டி காட்டி விலகிடுறது.விவாகரத்துக்கு பின் ஒரு ஆணின் மனநிலையை விக்ரம் மூலமா அருமையா காட்டிருக்கிங்க. இவர்களின் பிரிவால் வாடியது டெனிஷ்தான். அவாவ Miss பண்ணகூட விரும்பல என்று அந்த பிஞ்சு சொல்லும் வரிகளில் தெரிகிறது அவனின் ஏக்கம் .விவாகரத்து என்ற முடிவாலயும் ஒருநல்லது நடந்திருக்கு யாமினி செல்லம்மாக்கு நல்ல வாழ்க்கை கிடைச்சிருக்கு.கதைஆரம்பத்தில இருந்து விக்ரம் தான் ஹீரோவா தெரிஞ்சார் யாமினி செல்லம்மாவின் கடந்த காலத்தை சொன்ன பிறகு யாமினி சூப்பர் ஹீரோயின் ஆகிட்டா எனக்கு.நீயும் நானும் சேர்ந்து டெனிஷ்கும் செல்லமாக்கும் ஒருகுடும்பத்தை குடுப்பம் என்டு சொல்லுறப்ப விக்ரம்ஜீ பெரிய சலூட் உங்களுக்கு. யாமினியை டெனிஷ் அம்மா என்டு ஏற்றுக்கொள்ற சந்தர்ப்பம் சூப்பரோ சூப்பர் உணர்ச்சிமயமா இருந்துச்சு.நான் விட்டால் கதை முழுசும் சொல்லிடுவன்.அருமையான படைப்பு உங்களின் அடுத்த படைப்புக்காய் ஆவலுடன் காத்திருக்கும்…
உங்கள் வாசகி

 

::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::

 

 Selvarani:

 

நினைவெல்லாம் நீயாகிட வந்தேன்…
படிக்கும்போதே நம்மை ஒவ்வொரு உணர்ச்சிக்கு குவியல்களுக்குள் இழுத்து போன கதை.ஜெர்மனியில் தொடக்கி யாழ் வந்து பின் ஜெர்மனியில் முடிகிறது..யாமினி போன்ற எண்ணற்ற பெண்கள் நம் ஊர்களில் இருக்கிறார்கள்.அவர்களின் துயரங்கள் இப்படி விடிந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்??கண்டிப்பாக வெளி நாடுகளில் வசிக்கும் நம்மவர்கள் இப்படி கூட உதவிகள் செய்யலாம்…விக்ரம் தன குடும்ப வாழ்வை தொலைக்கிறான், அங்கும் நம் பெண்கள் போல உணர்வு குவியல்களில் சிக்குகிறார்கள் போல!!கணவனின் கவனிப்பு இல்லையென்றால் இப்படி விலகும் பெண்…பிள்ளையை மறந்து செல்கிறாள் என்று நான் நினைக்க, அவள் அவனுக்காக விட்டு சென்றதாய் சொல்கிறாள்!!யாஸ்மின்…அவளை விரும்பிக் கொண்டே இருக்கும் விக்ரம்..இப்படி ஒரு காதலா?? வெளிக்காட்ட வில்லையோ?? அல்லது அந்த ஊரில் இதெல்லாம் இவ்வளவு பெரிது இல்லியோ??

விதவை இல்லையேல் ஆதரவற்றவள்தான் வேண்டும் என்று நினைத்து யாமினியை மணக்கிறான்…யாமினி பல்வேறு தயக்கங்கள் பின் சந்தனா வுக்காக மணம் செய்கிறாள்..மெல்ல மெல்ல தன மனம் விக்ரம் பக்கம் சாய கவிதை போல அவள் வாழ்வு விடிகிறது..ரொமான்ஸ் கதைகளின் ராணி நிதா!! ரொம்ப அழகாக அவர்களின் மண வாழ்வை எழுதியிருக்கீங்க!!நானும் முதலில் அவளுக்கு ரெண்டாம் கல்யாணமோ என்று நினைக்க, அப்படியே ஒரு ட்விஸ்ட் வெச்சுட்டீங்க!! அப்படியே கொண்டு போயிருக்கலாம் நிதா..உங்கள் கதையில் நான் மிஸ் செஞ்ச இடம் இதான் நிதா!!
டெனிஸ்…அன்பை மனசுக்குள் வெச்சு பரிதவிக்கும் பிள்ளை, நீங்க சொன்ன உண்மை கதையின் இளம் பிஞ்சு..படிக்கும்போதே அவனை நினைக்க மனம் வருந்தியது..அம்மா தங்கைன்னு அழகா பொருந்திட்டான் ..விக்ரம் மகனை வளர்க்கும் விதம் அட!!இப்படித்தான் அங்கு பிள்ளைகள் வளர்க்கிறார்கள் போல!! அருமை..

அங்குள்ள விழாக்கள், சூழல்,படிக்க படிக்க அழகு நிதா…ஒரு குடும்பம் அழகாய் உருவாகிட்டது…எப்படியோ கதையை முடிச்சுட்டிங்க!! தினம் இன்னிக்காவது போடுவீங்களான்னு பார்த்து பார்த்து ஏமாந்து போயிருந்தேன்!!வாழ்த்துக்கள் நிதா…

 

:::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::

 

Tharshi Tharshi:

ஊர் இரண்டுபட்டால் தானே கூத்தாடிக்கு கொண்டாட்டம். அதே போல் ஹீரோ ஹீரோயினுக்குள் பிரச்சனை இருந்தால் தானே எனக்கு சந்தோசம். அவர்கள் கொஞ்சிக் குலாவிக்கொண்டிருந்தால் நான் என்ன செய்வது… நீங்க இப்படி என்னை மோசம் பண்ணி விட்டீங்களே. இது உங்களுக்கே நியாயமாப் படுதா…

ஹம்… கதை பற்றி என்ன சொல்வது.. எங்கே ஆரம்பித்து எங்கே முடிப்பது..

கதையின் மூன்றாம் நான்காம் அத்தியாயங்கள் உங்க இரண்டாவது கதையை எனக்கு ஞாபகப்படுத்தியது (நல்ல விதத்தில் தான்) அந்தக் கதை போலவே வேறொரு இடத்திலிருந்து வரும் தந்தைக்கு முதலில் மகளின் அறிமுகம் கிடைக்கிறது.. பின்னர் நாயகியின் அறிமுகம் பிறகு கல்யாணம்…. அதிலும் கார் சம்பந்தப்பட்ட நெகிழ்ச்சியான என் மனதுக்கு பிடித்த சம்பவம் இருக்கிறது. இங்கேயும் கார் தகப்பன் மகள் உறவைத் தொடங்கிவைக்கும் காரணியாக இருக்கிறது.

முழுக் கதையிலும் எனக்கு மிகவும் பிடித்த பகுதி மூன்றாம் நான்காம் அத்தியாயங்கள் தான்..👌👌👌

கணவன் தன்னுடன் போதிய அளவு நேரம் செலவழிக்கவில்லை என்று ஏதேதோ காரணம் சொல்லி ஜாஸ்மின் விக்ரமைப் பிரிந்து போய்விடுகிறாள் இல்லையா.. அதன் பின்னர் அவள் சொல்வதும் சரிதானே தான் தனிமையில் வாடுவதைப் போலத் தானே அப்போது அவளுக்கும் இருந்திருக்கும் என்று விக்ரமும் நினைக்கிறான் இல்லையா.. இருவருமே கணவன் மனைவி உறவில் ஏற்பட்ட தனிமையைப் பற்றி மட்டும் தான் யோசிப்பது போல எனக்குத் தோன்றியது. தாம் இருவர் மட்டுமல்ல இன்னொரு ஜீவனும் அவர்களை நம்பி இருக்கிறது என்று இருவருக்குமே தெரிந்த மாதிரித் தெரியவில்லை. சரி ஜாஸ்மின் தான் சுயநலமாக தன்னை மட்டும் சிந்தித்து இன்னொரு வாழ்க்கையைத் தேடி போய்விட்டா என்றால் அதன் பின்னர் தான் செய்தது பிழை என்று நினைக்கும் விக்ரம் என்ன செய்திருக்க வேண்டும்… ஐந்து வயதுப் பாலகனான டெனிசிடம் எப்படி நடந்துகொண்டான்.. ஐந்து வயதிலேயே சிறுவன் தானே தன்னைப் பார்த்துக்கொண்டானா.. விக்ரம் வேலையையும் மகனையும் எப்படி சமாளித்தான்…என்று அந்த இடைப்பட்ட நான்கு வருடங்கள் விக்ரம் – டெனிஷ் இடையிலான உறவு பற்றி சொல்லப்பட்டிருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்று நினைக்கிறேன். அதோடு ஜாஸ்மின் – டெனிஷ் இடையிலான உறவு எப்படியிருந்தது என்று தெரியாததால் கடைசியில் அவனுக்கு அம்மா மீது வெறுப்பு என்று சொல்லும்போது அது அழுத்தமாக உணரப்படவில்லை.

விக்ரம் – சந்தனா – யாமினி மூவருமே அதிகம் கதையில் வருவதால் அதேயளவு இடம் கதையில் டெனிஷுக்கு கொடுக்கப்படாததால் தானோ என்னவோ விக்ரம் – சந்தனா – யாமினி இடையில் கூடுதலான நெருக்கம் இருப்பது போல கதை வாசிக்கும் போது தோன்றியது. அதோடு விக்ரம் – சந்தனா இடையில் ஏற்பட்ட உறவு மெதுவாக ரொம்பவும் அழகாக தொடங்கியது போல யாமினி – டெனிஷ் இடையிலான உறவு மலர்ந்த விதம் சொல்லப்படாததால் யாமினி திடீரென ரொம்பவும் உரிமையாக அவனிடம் பேசும் போது சட்டெனப் புரிந்து கொள்ள முடியாமல் செயற்கையாக இருப்பது போலத் தோன்றியது. அதோட ஒருமுறை டெனிஷ் யாமினியோடு போனில் கதைக்கும் போது ஏதோ மாதிரி அவளைப் பார்த்த மாதிரி சொல்லியிருந்தீங்க. அது யாமினியைப் போலவே எனக்கும் விளங்கவில்லை.

விக்ரம் – யாமினி திருமணம் வரை சீரான வேகத்தில் சென்ற கதை அதன் பின்னர் நகராமல் நின்றது போல எனக்குத் தோன்றியது. யாமினி திருமணத்துக்கு ஒத்துக்கொண்டு அவர்கள் திருமணம் முடிந்த போது ஓரளவு அவர்கள் இருவரின் மனமும் ஒருவர் பால் ஒருவர் ஈர்க்கப்பட்டிருந்ததைப் புரிந்துகொள்ளக் கூடியதாக இருந்தது. அதன் பிறகும் அவர்கள் இருவர் பற்றிய சம்பவங்கள் அதிகம் வந்துகொண்டிருந்தது வாசிக்கும் போது எனக்குக் கொஞ்சம் சலிப்பாக இருந்தது. 😴😴😴

கணவனை அப்பா என்றழைப்பது பற்றிய யாமினியின் விளக்கம்.. அவளின்(யாமினி/நிதாவின்) தனிப்பட்ட விருப்பம் அதை நான் ஒன்றும் சொல்ல முடியாது தான்.. அதை சும்மா அழைப்பது போல சொல்லியிருந்தால் இங்கு அதைப் பற்றி கதைத்திருக்க மாட்டேன்.. ஆனால் அதற்கு பெரிதாக அவள் விளக்கம் சொல்வது போல இருந்ததால் அது என் கருத்தையும் சொல்ல வேணும் போல தோன்றுகிறது. என் பிள்ளைக்கு உறவுமுறை சொல்லி அழைப்பதைப் பழக்கும் போது என் கணவரின் அப்பாவை அப்பப்பா என்று அழைக்கத் தான் சொல்லிக் கொண்டுத்தேன். ஆனால் வீட்டில் மற்றவர்கள்(மாமா உட்பட) தாத்தா என்று சொல்லிச் சொல்லி அவன் இப்போ தாத்தா என்று தான் அழைக்கிறான். நான் அப்பப்பா என்று சொல்லிக் கொண்டுத்த காரணம் அப்பப்பா என்பது அவனுக்கும் அவருக்கும் இடையிலான தனிப்பட்ட உரிமையான உறவு முறையைக் குறிப்பது. தாத்தா என்பது எல்லா வயதான ஆண்களையும் அழைக்கும் பொதுவான அழைப்பு. அதே போல் அப்பா என்ற அழைப்பு பிள்ளைகளுக்குச் சொந்தமானது. என் பிள்ளைகளுக்கு என் கணவரிடம் உள்ள உரிமையான உறவைக் குறிப்பது போல் எனக்கும் என் தந்தைக்குமிடையிலான உரிமையைக் குறிப்பது. என் கணவர் கூட ஒருமுறை விளையாட்டுக்கு பழைய காலம் மாதிரி ஏன் தன்னை அப்பா என்று அழைப்பதில்லை என்று கேட்டிருக்கிறார். நான் அப்பா என்று அழைப்பதுக்கு ஒருவர் இருக்கிறார். உங்களை அப்பா என்றழைத்தால் அவரை நான் எப்படி அழைப்பது.. 😋😋😋 என்று சொன்னேன் நான். யாமினியின் விளக்கம் எனக்கு அர்த்தமில்லாததாகத் தெரிந்த மாதிரி என் விளக்கமும் உங்களுக்குத் தெரியலாம். 🙂🙂🙂

கணவனின் ஒற்றைப் பார்வையிலேயே எப்போதும் நாணிக் கோணி கன்னம் சிவக்க வெட்கப்படும், கணவனின் ஒரு விரல் தொடுகையிலே உடலில் மின்சாரம் பாய்ந்தது போன்று நடுங்கும் கதாநாயகிகளைச் சில காலம் உங்களுக்கு கிட்டே நெருங்க விடாமல் பார்த்துக்கொள்ளுங்களேன் ப்ளீஸ்…. முதலில் இப்படியான குணாதிசயம் கொண்ட பெண்கள் இந்தப் பிரபஞ்சத்திலே எங்கே இருக்கிறாங்க என்றும் சொல்லுங்க 😲😲😲.. என் வாழ்நாளில் ஒருமுறையாவது பார்த்துவிட வேணும் 😜😜😜

ஜீன்ஸ் எப்படி சரி அளவாக யாமினி வாங்கினாள் என்று சொல்லீட்டீங்க.. ஆனால் மோதிர அளவு எப்படி எடுத்தாள் என்று சொல்லவில்லையே.. நல்ல காலம் காதலிக்கிறேன் என்று சொல்லு என்று யாமினியைக் கேட்பதை விக்ரம் கடைசியில் விட்டுவிட்டான். உண்மையிலேயே இதில் எல்லாம் உங்களுக்கு நம்பிக்கை இருக்குதா… இல்லை கதைக்காக என்று இப்படி எழுதுறீங்களா..

விக்ரம் மாதிரி மனைவியைத் தாங்கும் கணவனை எந்தக் கடையில் வாங்கலாம் நிதா. இல்லை முதலிலேயே ஆர்டர் கொடுத்து சொல்லிச் செய்விக்க வேணுமா. எனக்கு அடுத்த பிறப்புக்கு இப்போதே ஆர்டர் கொடுக்கலாமா என்று யோசிக்கிறேன். 🤔🤔🤔

சொல்ல நினைத்ததையெல்லாம் சொல்லிவிட்டேன் என்று தான் நினைக்கிறேன். ஏதாவது விடுபட்டிருந்தால் பிறகு வருகிறேன் 🙂

 

::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::

Arthy Writes:

ஒரு நீண்ட இடைவேளைக்குப் பிறகு வாசிப்பும் கருத்துப் பரிமாறலும்… 😀

💞🌼🌺 “நினைவெல்லாம் நீயாகிட வந்தேன்” 🌺🌼💞 ❤️ நிதனி பிரபு ❤️

ஒரு கதை வாசகர்களை மிகவும் கவர்கிறதென்றால் அக்கதையில் இரு விடயங்கள் கண்டிப்பாக நன்றாக இருக்கும். அவை கதாசிரியரின் எழுத்து நடை, கதைக்கரு. தோழி நிதாவின் கதைகளில் இவை இரண்டும் எப்போதும் அருமை. அவர் யாரென்று தெரியாததிலிருந்தே அவர் கதைகளின் ரசிகை நான். 😀

இந்தக் கதையும் என் மனதைக் கவர்ந்து சென்றது. எப்போதும் போல் அழகுத் தமிழ் நடை. யாழ்ப்பாணத் தமிழ் துள்ளி விளையாடுகிறது. கதைக்கருவும் கனம். ஆனால், அக்கனம் நம்மைத் தாக்கிய போதும், கதை முழுவதும் நம்மை அழுத்திப் போகவில்லை. கனமான கதையையும் மிக மென்மையான வகையில் தந்திருக்கிறார். 👍🏼👏🏼👏🏼👏🏼

கதைக்கருவை நாம் விரிவாக அலச வேண்டாம். கதையை வாசிக்காதவர்கள் எதிர்பார்ப்போடு வாசிக்கட்டும். அப்போது தான் கதாசிரியர் நம்மிடம் இட்டு வரும் செய்திகளையும், உணர்வுகளையும் முழுமையாக நாம் உணர முடியும்.

இக்கதையின் நட்சத்திரங்களாக நான் கருதுவது டென்னிஸ், செல்லம்மா @சந்தனா. மிகவும் முக்கியமானவர்கள். 😘😘😍😍

டென்னிஸ் சில இடங்களில் நெகிழ வைத்துவிட்டான் நிதா. அந்த வயதிற்கு நல்ல மெசூரிட்டி. எனக்கு அடிக்கடி தோன்றுவது, பிள்ளைகள் தங்களுக்கு இடப்பட்ட சூழலை இக்காலத்தில் அழகாகக் கையாள்கிறார்கள் என்பது தான். அதுவும் வெளி நாடுகளில் நாம் அறிந்தேயிறாத பல் வேறு விடயங்களைக் காணும் போது இக்கருத்து வலுப் பெறுவதாய்!

இங்கு டென்னிஸ் அப்படியான ஒருவனாக இருப்பதைக் கண்டு மனம் ஒரு விதமான உணர்வலைக்கிடையில் பயணித்தது.

மிக இலகுவாக வலம் வருபவன், கடைசிக்கு முதல் விழிகளில் ஒரு கசிவைத் தந்திருந்தாலும், அவனுடைய புரிதல், யாமினியிடம் ஒட்டிக் கொள்ளும் தருணங்கள், இருவருக்கும் இடையே பட்டுப்பூ போல் மலர்ந்து இருவரின் முயற்சியால் வந்திருந்த நெருக்கம், அவனின் அப்பாவுடனானப் பிணைப்பு, பார்பியுடனான உறவுநிலையின் நெருக்கம், யாஸ்மின் உண்டு பண்ணிவிடும் உணர்ச்சிகளின் பிடியில் அவனின் தவிப்பு என அனைத்தும் நெஞ்சைத் தொட்டுச் செல்கின்றன. ❤️👏🏼😘

செல்லம்மாள், மிக வடிவான படைப்பு. விக்ரமுடனான அவளின் பிணைப்பைக் கண்டு பிரமிப்பு ஏற்படுகிறது. விக்ரமுக்கு அவள் இன்றியமையாதவளாகிப் போவது கண்டு வியப்பும் பெரும் மகிழ்ச்சியும் வந்தது நிதா. 😘😍

மரகதம் அம்மா அற்புதமான மனுசி. சந்திரன் போன்ற நல்ல உள்ளங்கள் நம்மிடையே வாழ்ந்து கொண்டு தானிருக்கிறார்கள்.👍🏼😊

யாஸ்மின். இவளைப் பற்றி நான் கருத்துகளைச் சொல்ல வேண்டும் எனப் பிரியப்படவில்லை. காரணம், இவளைப் போல் ஒருத்தியைப் பற்றிச் சமீபத்தில் நிறையப் பேசி விட்டேன். ஆனால், ஒன்றே ஒன்று சொல்லித் தான் ஆக வேண்டும் இங்கே. பகிர்தல், புரிதல் என இவ்விரண்டு குணங்களும் நமக்கு மிகவும் அவசியம். நட்பு, பிள்ளை, வாழ்க்கைத்துணை, சகோதரம், சொந்தம், அண்டை அயல் வீடு இப்படி எந்த உறவையும் வலுப்படுத்துவன இக்குணங்கள் தாம். நிறையப் பேரிடையே தற்போது பற்றாக்குறை எனும் நிலை தான் பகிர்தலுக்கும் புரிதலுக்கும். 😔😔😔

அசோகன் ~ விக்ரம். இருவரிடையே நடக்கும் உரையாடல்கள் அருமை. நட்பும் அற்புதம். ❤️❤️👏🏼👏🏼

யாமினி ~ விக்ரம். என்னவென்று சொல்வது இவர்களைப் பற்றி? நச்சென்று நெஞ்சத்தில் பதிந்து விட்டார்கள். இவர்களுடன் பயணிக்கும் போது நாம் உணர்வது நிறைய அழகான, புரிதலான தருணங்கள். மிக அழுத்தமான ஆழமான உணர்வுகளையும் எழுப்பிச் செல்கிறார்கள். ❤️❤️😘😘😍😍💐💐

மிதமான வகையில் இளமையான ரொமான்ஸும் நிறைய உண்டு. இரு நாடுகளின் பழக்கவழக்கங்கள் மற்றும் சில தகவல்களும் இடம் பெற்றிருக்கின்றன.

நிதாவின் எழுத்தில் மிளிர்ந்த கதையம்சம் மற்றும் கதை மாந்தர்களின் ஒளிர்வை மட்டும் பகிர்ந்துள்ளேன். கதைக்கருவைத் தொடவில்லை. என் மனதில் வந்திருந்த உணர்வுகள், சிந்தனைகளின் வெளிப்பாடாக வந்திருக்கும் பின்னூட்டம்.

கதையை வாசித்து மிச்சத்தைத் தெரிஞ்சு கொள்ளுங்கள் தோழமைகளே!

நன்றி நிதா! ❤️😘💐👏🏼

அன்புடன்,
ஆர்த்தி ரவி

(அடிக்க வராதீங்க தோழீஸ்… மீ வெரி ஸ்லோ. முடியும் போதும் ஒவ்வொருவரின் கதைகளாக வாசித்துக் கருத்துகளை உங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன்.)

 

::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::

 

Logambika Palaniswami:

 

நினைவெல்லாம் நீயாகிட வந்தேன்

வீக்கெண்டில் வெட்டியாக இருக்க, படிப்போமே என்று எடுத்த கதையே ‘நினைவெல்லாம் நீயாகிட வந்தேன்’. கதையை படிக்கும் போது தோன்றிய விடயங்கள் மட்டுமே கீழே உள்ளவை.

பவியக்கா, நான் படித்த முதல் விக்ரம் கதை இது என்று நினைக்கிறேன். வேறு ஏதேனும் கதை இருந்தால் உள்பெட்டிக்கு வந்து சொல்லவும்!

கதைக்களம், ஜெர்மன் பாதி, இலங்கை பாதி. ஒன்பது வயது டெனிஷுக்கு தந்தையான விக்ரம், தன் மகனுக்கு தாய் வேண்டுமென்று நண்பனின் வற்புறுத்தலின் பேரில் இலங்கை வருகிறான். அங்கே, அவனைக் கவர்கிறாள் ஒரு குழந்தை. அதன் காரணமாக, தனித்திருக்கும் அதன் தாயிடம் தன்னைத் திருமணம் செய்யுமாறு கேட்கிறான். (Yes, you heard right! அவனவன் ஏதேதோ காரணம் சொல்லி பெண் கேட்பான்… நீ சொன்னே பார் ஒரு காரணம்😂)

விக்ரம் – கதையின் நாயகன். அவனுடைய உலகம் மிக சிறியது; அவன், அவன் மனைவி, மகன் என இருக்கும் அது உடையும்போது வெகுவாக நொந்து போகிறான். யாஸ்மின் அவனைப் பிரிந்து சென்ற காரணம் புரிந்தபின்பு அவளைத் தேடிச் செல்லும்போதும், சாராவைத் தூக்கிக்கொண்டு அவள் வேண்டும் என்று கூறும்போதும், அவ்வளவு நல்லவனா நீ? யாமினியைக் கண்டு ‘இவள் பிழையானவள் அல்ல’ என நீ அடித்துக் கூறுவது, 👌👌👌 பாவம் யாமினி, உன்னிடம் மாட்டிக்கொண்டு அவள் படும் பாடு இருக்கிறதே! அவளை வம்பிழுத்து யாரிடமேனும் மாட்டி விடுவதே முழு நேர அலுவலா உனக்கு? சந்தனா மீதும் டெனிஸ் மீதும் வைக்கும் பாசமும், யாமினியிடம் நீ காட்டும் காதலும் சூப்பர். சாரிப்பா… டெனிஸ், சந்தனா என சுற்றியதில் உன்னை சரியாக கவனிக்க முடியாமல் போனது!

யாமினி – என்ன பெண்ணிவள்? பெண் ஒருத்தி தனியாக வாழ்வதே சிரமமான இந்த காலத்தில் எப்படித்தான் இவள் அனைத்தையும் சமாளித்துக்கொண்டு இருந்தாளோ? தைரியசாலிதான்! சந்தனாவையும் டெனிசையும் பார்த்துக்கொள்ளும் விதமும், டெனிஸ் தன்னை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்னும் தவிப்பும் அருமை. மனம் ஒன்றுபட்டால் இருவரும் அடுத்தடுத்த கண்டங்கள் என்ன, அடுத்தடுத்த galaxy-இல் இருந்தாலும் நேசம் மாறாது என்பதனை நன்கு உணர்த்தினர் விக்ரமும் யாமினியும். (இத்தகைய ஒரு பிடிப்பு இல்லாததே யாஸ்மினும் விக்ரமும் பிரியக் காரணமோ?🤔)

சந்தனா – பொதுவாகவே குழந்தைகள் அழகு! அதுவும் தத்தக்கா பித்தக்கா என நடந்து வரும்போது பேரழகு! அப்போதுதான் விக்ரமும் இவளைக் கண்டான். அவன் செல்வக்களஞ்சியம் அவள்! அவன் வாழ்வை ஏற்றம் புரிய வந்தவள் அவள்! ஆம், விக்ரம்-யாமினி வாழ்வில் பாம்பன், ஹவுரா என இன்னும் பற்பல பாலங்களை உறுதியாகக் கட்டியவள் சந்தனாவே! அப்பா, அண்ணா என இருவரின் பின்னாலும் தொங்குவது… ஹய்யோ… செல்லம்… You are so cute!!

டெனிஸ் – ஒன்பது வயது சிறுவனாக கதையில் வந்தாலும் அவனிடம் இருக்கும் தெளிவு 👍. ஆனால், அதன் காரணம்தான். நாம் எவ்வளவுதான் வளர்ந்தாலும் வீட்டிற்கு வந்ததும் முதல் தேடல் அம்மாவாகவே இருக்கும். அப்படியிருக்கும்போது அந்த பிஞ்சு மனம் எப்படி தேடியிருக்கும் அவன் அம்மாவை? பிள்ளை தன் வாயாலேயே தாயை வெறுக்கிறேன் என்று கூறினால், அதன் மனம் எத்தனை வேதனைகளும் ஏக்கங்களும் கொண்டதன் வெளிப்பாடு அது? அவற்றை யாருக்கும் காட்டாமல் இருக்க எத்தனை பாடுபட்டிருக்கும்? என்னதான் யாஸ்மின் ஏதேதோ காரணங்கள் சொன்னாலும், டெனிஷுக்காக மட்டுமாவது யோசித்திருக்கலாம். அவன் விரைவாக யாமினியையும் சந்தனாவையும் ஏற்றுக்கொள்ளும் விதம் 👌. (ஓவர் செண்டிமெண்ட்டா போச்சோ??)

யாஸ்மின் – விக்ரமின் முதல் மனைவி. ஏனம்மா, உன்னைப் பற்றி நினைத்தாய், உன் காதலனைப் பற்றி நினைத்தாய், அவ்வளவு ஏன், விக்ரமைப் பற்றி கூட நினைத்தாய்… உன் மகனைப் பற்றி சிறிதேனும் நினைத்தாயா? அவனை விக்ரமிடம் விட்டு வர ஒரு காரணம் சொன்னாயே 😡. அது மகனுக்காக எடுக்கவில்லை என நன்றாகப் புரிந்தது. அவனைப் பற்றியோ இல்லை விக்ரமைப் பற்றியோ நீ சிறிதளவேனும் யோசித்திருந்தால் அத்தகைய முடிவெடுக்கும்முன் விக்ரமிடம் பேசியிருப்பாய். உனக்காக என்ன வேண்டுமென்றாலும் செய்ய நினைப்பவன் நீ கேட்டதை செய்திருக்க மாட்டானா? அவர்களை விட்டுச் செல்ல உனக்குத் தேவை ஒரு காரணம். கிடைத்தது. அவ்வளவுதான். இங்கு உன்னை முழு சுயநலவாதியாக மட்டுமே பார்க்க முடிகிறது.

அசோக் – நண்பனின் பிடிவாதத்தை எதிர்ப்பதாகட்டும், அவன் வாழ்வு செழிக்க முயற்சி எடுப்பதாகட்டும், அவனுக்கு தோள் கொடுப்பதாகட்டும், நண்பேன்டா…

மரகதம் அம்மா, சந்திரன், சந்தியா சிறிதே வந்தாலும் நல்ல மனிதர்கள்.

ஆனால், கடைசி வரையில் விக்ரம் கேட்டதை யாமினி சொல்லவே இல்லையே அக்கா! அதனால் என்ன, நான் சொல்கிறேன்.

Ich liebe deine geschichten, நிதா அக்கா. நமக்கு டச்சு தெரியாது. அதான் ஜெர்மன் பக்கம் ஒதுங்கிட்டேன்😁😁😁. தப்பா இருந்தா மன்னிச்சுக்கோங்க. இப்போ தான் பழகுகிறேன்😂

:::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::

 

Pavithra Narayanan:

 

நினைவெல்லாம் நீயாகிட வந்தேன்

விக்ரம் என்ற நாயகனுக்கே உரிய வாய்..என்ன வாய்டா அது..?இந்த கதையில்ல காதலை தேடனும்னு தான் என்னோட கருத்து..இது காதலை தாண்டிய கதைன்னு சொல்வேன்.எனக்கு ரொம்ப பிடிச்சது தாய்ப்பாசமும் தந்தைப்பாசமும் தான் இக்கதையில்.
செல்லம்மாட்ட விக்ரம் காட்டிற பாசம்,யாம்ஸ் மடியில் விக்ரம்,விக்ரம் மார்பில் செல்லம்மா….அய்யோ கவிதையான காட்சி..இப்படி கதைக்குள் நிறைய கவிதைகள் உண்டு….இலங்கையில நடந்த பயங்கரத்தை இப்படி ஒரே பத்தில வலியோடு சரியா சொல்லிட்டீங்க நிதா aunty.திருடிய இதயம் நான் முழுசா படிக்கல.உங்க டச் இல்லன்னு தோனிச்சு…..ஆனா இது மீண்டும் நிதா இஸ் பேக் சொல்லவைச்சது.ஆனாலும் இன்னும் இன்னும் அழுத்தமான கதையை மனம் உங்களிடம கேட்க விழைகிறது.டெனிஸ் தாயை அம்மா என்று அழைக்கும் காட்சி இன்னொரு கவிதை தான்.அந்த தனியான சோபா உள்ள இடம் சூப்பர்…..அழகாய் காட்சி விரிந்த்து.எனக்கு அந்த யாஸ்மினை பிடிக்கவே இல்ல….அசோக் நல்ல நண்பன்.மரகதம்ம்மா லாம் நம்மை சுற்றி இருக்கும் நல்ல மனிதர்களுக்கு சான்று.அந்த சிறுகதை முடிந்த போதே இப்படி விக்ரம்க்கு ஜோடியில்லாம போச்சேன்னு வருத்தப்பட்டேன்.. நல்ல காலம் என் ஆசை நிறைவேய்டுச்சு….அண்ட் இந்த தமிழ் ரொம்ப அழகா இருந்துச்சு..கதையை விட அத்தமிழ் என்னை பெரிதும் கவர்ந்த்து.ஆனால் இன்னும் அழுத்தமான பெரிய கதையோடு நேரம் எடுத்துக்கொண்டு வாருங்கள்.காத்திருக்கிறோம்…நிதாவின் முத்திரைக்காக..!!என் விக்ரமுக்கும் என்னைப் போல ப்ளாக் ஃபார்ஸ்ட் கேக் பிடிச்சிருக்கே சூப்பர்…

வாழ்த்துகள் aunty.

பிரியமுடன்
பவித்ரா நாராயணன்.

 

:::::::::::::::::::::::::::::::::::::::::::

Kiruthi Logeshsaravana:

 

நினைவெல்லாம் நீயாகிட வந்தேனே

ஒரு மென்மையான காதல் கதை😆….

படிச்சுட்டு நிம்மதியா சின்ன சிரிப்போட தூங்கினேன்😍….

அவ்ளோ கியூட் ஸ்டோரி
துளி கவலையற்ற கதை…

அதேசமயம் ஆழமான கரு😘

மைன்ட் ரிலாக்ஸ் வேணும்னா
கண்டிப்பா இந்த கதையை படிக்கலாம்

அவ்ளோ இனிமை

வாழ்த்துக்கள் நிதுகா😍😍😍
சீக்கிரமே அடுத்த கதைக்கு ஆவலாக வைட்டிங்😘

 

::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::

Krishnaa Guru :

 

Vikram:Yasmin ah sincere ah love pani Ava avana vitu pona aprm um Ava ponnu Sara mela vikram Ku vara pasam.. yamini ah kalyanathuku samathika vakarathulayum avan chellamma mela katra pasam elame super. French window layout vikram,yamini kana spl place😍😍😍 and beach la yamini madila vikram vikram mela chellamma happy family nice scene. Ovoru time entha scene express pandra idam vithama elame arumai.

Yamini: annanoda kuzhanthai yai than kuzhanthai ah valathu thanukunu oru vazhkai vendam othungi irukara. Athai yum Meri chellamma mela ula pasathala yamini karam pidikum vikram.. 6 matha pirivil iruvarkum malarum kathal Denis mela yams katum pasam. Avan amma nu yamini ah kupadra tarunam athanayum arumai.

Vikram Ku chellamma mela irukara pasamum yamini Dennis mela katra anbum arumai😊😊
Yasmin: Ava vikram ah pirinthu poga Ava Ena reason sonalum Denis ah Ava consider panama vitutu ponathu rmba thapu. Antha vishayatha enala ethuka mudila. Yasmin vry bad.

Dennis: amma thana vitu ponaprm appa voda nizhal la valara payan. Appa avan vazhkai avan vazhnthu kathukanum nu nenakarathu nala vishayam tan Ana Thai pasam evalo mukiyam nu intha kathaila azhaga soli irukenga.. Dennis amma venum amma Kita poganum vikram ta soli yamini Kita pogara scene kannula thani vara vaikuthu..
Maragatham amma,ashok nu ovoru character um azhaga picturize pani irukenga.
Srilankan tamizh la Na padikara frst story ithu. But intha tamizh vasika arumai ah iruku. Ithaye type laye continue panunga mam. It’s a kind request😊

:::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::

 

Narmadha Narmu :

 

Thirudiya idhayathai thirupi kodu

Azhagana menmaiyaana kaadhal kathai…

Romba romba pidichithu nitha…

Ila nagaiyudane than kathai muzhuvathume padichen… kathai padikuravangala Unga ezhuthunaalaye azhaga kaadhala unara veikureenga…

Niranjan and jeevani kaadhal… Manathai kollai kollum inimaiyaana kaadhal kaaviyam… Jeevani character semma..
Thullal nayagi nu sollalam.. ava apadiye irukatum nu niranjan solrathu than unmaiyana kaadhal.. avala avalave iruka vidurathu.. than suyatha izhakaamal kidaikura kaadhal eppavume special thaan..

Ithu varai rendu kathai padichiruken ungaloda thu.. rendume mind pressure,kavalaigal ellathayum pokki manasula inba saaralai veesa seiyum azhagana kathai…

Ipadi ezhuthunga … Romba pidichiruku…

Innum neenga neraiya ezhutha, athe naanga padika ennudaiya vaazhthukkal….

 

:::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::

 

Fanaceer Saleem:

 

என்னை கவர்ந்த நாவல்

நேற்று நிதனிபிரபு அவர்கள் எழுத்தில் தோன்றிய நினைவெல்லாம் நீயாகிட வந்தேன் நாவல் படிக்க நேர்ந்தது,

இலங்கை தமிழ் சொட்டச்சொட்ட படிப்பதற்கு அவ்வளவு இனிமையான நாவல்

கதை ஜெர்மனில் அழகானவொரு உவமையுடன் சோககீதத்துடனான துவக்கம்

இலங்கையை சேர்ந்த விக்ரம் ஜெர்மனியில் டெலிபோன் ரீசார்ஜ் கடையை சிறிய அளவில் துவங்கி தன் கடின உழைப்பால் பெரிய கம்பெனியாக வளர்ச்சி அடைகிறான்.

உழைப்பு உழைப்பு என்று ஓடோடி தன் கணவன் உழைப்பது தனக்காகவும் தன் அன்பு மகனுக்காவும் தான் என்பதை உணராத ஜெர்மானிய பெண் யாஸ் தன் அன்பும் பாசமும் நேசமும் வைத்திருக்கும் கணவனை விட்டு பிரிந்து வேறொரு துணையை நாடுகிறாள்.

தான் காதலிப்பவனை வீட்டிற்கே அழைத்து கணவனிடம் அறிமுகப்படுவது – வலிகள்.

ஜெர்மனில் இதெல்லாம் சாதாரணம் என்றாலும் அவனால் ஜுரணிக்க முடியவில்லை என்பது தான் அவ்வளவு அன்பாக இருந்த மனைவியா இப்படி மாறினாள் என்பது ஏன் என்று புரியவில்லை அவனுக்கு.

5 வருடமாக தன் நண்பன் அசோக் எவ்வளவு வற்புறுத்தியும் கேளாமல் மனைவி மேல் வைத்த காதலையும் அன்பையும் மறக்க இயலாமல் மகன் டெனிஷ்க்காக வாழ்கிறான் விக்ரம்.

இதற்கிடையே தன் முதல்மனைவி எப்படி வாழ்கிறாள் சுகமாக வாழ்கிறாளா என்று காண செல்கிறான்.

அங்கே அவள் முதல் மனைவியின் குழந்தை சாராவை கண்டதும் அவனுள்ளே பாசம் ஊற்றாக வழிகிறது.
சாராவை தூக்கி முத்தமழை பொழிகிறான். அவன் முதல் மனைவியும் தான் சந்தோசமாக வாழ்வதாகவும் நீயும் திருமணம் செய்து கொள் என்று சொல்லி வலியுறுத்துகிறாள்.

அதன்பின்னர் நடந்த நிகழ்வுகளுக்கேற்ப நண்பன் அசோக் உடன் யாழ்ப்பாணம் செல்கிறான் விக்ரம்.

நண்பனுக்காக ஊரையை சலித்து பெண் தேடுகிறான் அசோக் எனினும் திருமணமாகி குழந்தையுடன் இருக்கும் பெண்ணுக்கு வாழ்வளிக்க விரும்புகிறான் விக்ரம்.

அசோக் வீட்டிற்கு பக்கத்து வீட்டில் இருக்கும் குழந்தையை பார்த்தவுடன் முதல் மனைவி குழந்தை சாராவை போல் இருப்பதால் குழந்தையுடன் தனியே இருக்கும் பெண் யார் என்று விசாரிக்கிறான் அசோக்கிடம்.

அந்த பெண்ணை பற்றி நல்ல அபிப்ராயம் இல்லை குடும்பத்தோடு வெளியூர்க்கு போய் வருடம் பல சென்ற பின் இந்த பெண் கணவன் இல்லாமல் ஒரு குழந்தையோடு வந்தவளின் பேரில் பிழை இருப்பதாகவும் அவள் வாழ்வில் மர்மம் இருப்பதாக ஊரார் கதைக்கிறார்கள் என்று அசோக் கூறுகிறான்.

அந்த பெண் சில நாட்கள் கவனித்த விக்ரம் அவள் பேரில் எந்த பிழையும் இல்லை அவள் நல்லவள் என்பதை உணர்ந்து அசோக்கின் தாயார் மரகதம் அம்மாவை பெண் கேட்க அனுப்புகிறான் அவளோ மறுத்து விடுகிறாள் அசோக்கிற்கும் விருப்பமில்லாமல் திட்டுகிறான் தோழனை.

மிகுந்த சிரமத்திற்கு பின் விக்ரமை புரிந்து கொண்டு தன் மகள் சந்தனாவுக்காக விக்ரமை கை பிடிக்கிறாள் கதையின் நாயகி யாமினி.

ஜெர்மன் செல்ல விசா வாங்குவதற்கு டொச்சு படித்து பாஸ் பண்ணினால் தான் வழங்கப்படும் என்பதற்காக திருமணத்தன்று இரவே கொழும்பில் வீடெடுத்து குடிபெயர்கிறார்கள்.

நடந்த சம்பவங்களை மறந்து எப்போ தன்னை முழு மனதுடன் யாமினி ஏற்று கொள்கிறாளோ அப்பொழுது தான் வாழ்க்கையை துவங்க வேண்டும் என்று உறுதி கொள்கிறான் விக்ரம்.

அதே போல் திருமணத்திற்கு வந்த கணவன் விக்ரமின் மகன் தன்னை அம்மா என்றழைக்காமல் சித்தி என்றழைத்து விடுவானோ என்று பயந்து கொண்டிருக்கும் பொழுது யாம்ஸ் என்றழைத்தது வேறு யாமினிக்கு சற்று ஆறுதலாக இருந்தது, தன் மகள் சந்தனா விக்ரமை ஏற்று கொண்டது போல் விக்ரமின் மகன் டெனீஷ் ம் தன்னை அன்னையாக ஏற்று கொண்டபின் தான் விக்ரமுடனான வாழ்க்கையை தொடங்க வேண்டும் என்று நினைக்கிறாள்.

இதற்கிடையே விக்ரம் யாமினி திருமணம் ஆகாதவள் என்று சந்தேகம் கொண்டு அதிர்ந்து அவளிடம் கேட்கிறான், அதற்கு அவள் தரும் பதில் திருமணம் நடந்த அன்றே அவன் கணவன் இறந்ததாக சொல்கிறாள் அப்படியென்றால் யாமினியின் மகளாக வரும் சந்தனா யார்?

சந்தனா வாழ்வில் நடந்த மர்ம முடிச்சி அவிழ்ந்ததா?

யாமினி டச்சு தேர்வில் பாஸ் செய்து ஜெர்மன் சென்றாளா?

டெனிஷ் யாமினியை தாயாக ஏற்று கொண்டு அம்மா என்றழைத்தானா?

என்ற முடிச்சிகளை அவிழ்க்கும் இலக்கில் நோக்கி சுவாரஸ்யமாக கதையை நகர்த்தி செல்கிறார் கதாசிரியர்.

கொழும்பில் விக்ரம் தன் தொழிலை கவனிக்க ஜெர்மன் புறப்படுமுன் டச்சு வகுப்பில் சேர்த்துவிட்டு சந்தனாவை கவனிக்க ஆயாவையும், வெளியே செல்ல துணைக்கு ஆட்டோ டிரைவர் சந்திரனையும் நியமித்து ஆட்டோ டிரைவர் கைப்பேசி எண்ணை வாங்கி சென்ற காட்சிகள் நெகிழ்ச்சி அடைய வைத்தது.

தன் மனைவியின் குழந்தை சாரா போலவே இருந்த சந்தனாவின் மீது அளவு கடந்த பாசம் வைத்து அந்த குழந்தைக்காகவே யாமினியை திருமணம் செய்ய நினைத்தது சிறப்பு.

விக்ரம்- சந்தனா இடையே பாசமழை பொழியும் அத்தனை காட்சிகளும் அபாரம்.

விக்ரம் ஜெர்மனியில் இருக்கும் போது கொழும்பிலிருந்து யாமினிக்கு இடையேயான டெலிபோன் உரையாடல்கள் பிரமாதம் அவ்வளவு அன்னியோன்யம்,

கொழும்பில் டச்சு வகுப்பு தோழிகளான சந்தியா, அஜிதாவிற்கும் நல்ல பாத்திரங்கள்.

யாமினி விக்ரம் பிறந்த நாளுக்காக டிரஸ் பர்சேஸ் பண்ணிய விதமும், பிறந்தநாள் துணியை நண்பரிடம் கொடுத்துனுப்புமாறு பொய்சொல்லி விட்டு தானே ஜெர்மனிலிரருந்து வந்து சர்ப்பரைஸ் செய்த காட்சிகள் அழகு.

மொத்தத்தில் அழகிய முடிவுடன் கூடிய நாவல் முழுவதுமே இலங்கை தமிழின் தித்திப்புடன் கூடிய காதல் ரசம் சொட்ட சொட்ட காட்சிபடுத்தப்பட்ட அத்தனை காட்சிகளுமே ரசிக்க வைத்தது, மனதை அள்ள செய்தது.

மொத்தத்தில் நினைவெல்லாம் நீயாகிட வந்தேன் – வரம்.

 

::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::

 

 

 

 

 

 

 

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s