அருவி என் பார்வையில்

Bildergebnis für aruvi

 

இணையத்தில் பார்க்க முயன்றபோது, முதல் காட்சியிலேயே வரும் அந்தக் குழந்தை என்னை தெளிவாகப் பார் என்று சொல்வது போலிருந்தது. நேற்றுத்தான் அதற்கான சந்தர்ப்பம் அமைந்தது. முதல் கால்வாசி ஒன்றுமே விளங்கவில்லை. ஏன் வீட்டிலிருந்து அவளை வெளியேற்றுகிறார்கள் என்று புரியாமலேயே பார்த்தேன். நடந்ததை ‘சொல்வதெல்லாம் சத்யம்’ மூலம் அறிந்தபோது மனம் ஒருமுறை ஆடி அடங்கியது. அவளுக்கு எயிட்ஸ் என்பதைவிட, வீட்டை விட்டு வெளியேற்றிய பெற்றவர்களை என்னால் மன்னிக்கவே முடியவில்லை. ஒரு பிள்ளை கெட்டே போனால் கூட நம் அவசரமும் கோபமும் அவளை இன்னுமே கெட்டுப்போக வைத்துவிடும் என்று யோசிக்கவே மாட்டார்களா என்ன? நடந்துவிட்டதை மாற்றும் சக்தி எவருக்குமில்லை. நடக்கப்போவதை நல்லதாக மாற்றலாம்; மாற்ற முனையலாம் இல்லையா. எவ்வளவு இலகுவாக வெளியேற்றினார்கள். அப்பாவின் வைத்தியத்துக்கு பணம் வேண்டும் ஆனால், அக்கா வேண்டாம். நல்ல தம்பி! ஆதரவை தேடி ஓடிய ஒவ்வொருவரும் அரவணைத்துக்கொண்ட விதங்களை பார்த்தபோது ‘சீ!’ தான்.

நிறைய விடயங்களை தாங்கி வந்திருக்கிறது படம்! ஒரு நிகழ்ச்சி; அதற்குள் அடங்கி இருக்கும் வியாபாரத் தந்திரம். விளம்பரங்கள்; அவை நம்மை படுத்தும் பாடு. ஒரு பெண் தனிமையில் வாழ்வது அத்தனை இலகுவல்ல என்று பெண்களுக்கு மிக நன்றாகவே உணர்த்துகிறது. அத்தனை ஆண்களும் கெட்டவர்களும் அல்ல; அதே நேரம் அதிகம் கெட்டவர்களால் நிறைந்ததுமல்ல நம் சமூகம். நிறைய நல்லவர்கள் உண்டுதான். ஆயினும், பெண்ணியம், பெண் சுதந்திரம், தனியாக வாழ முடியாதா என்கிற கேள்விகளோடும் அவசர முடிவுகளோடும் தங்கள் குடும்பங்களை விட்டு வெளியேறும் பெண்களுக்கு மிகப்பெரிய சாட்டை தான் இந்த அருவி. தனியாக இருக்கும் பெண்களின் நிராதரவான நிலையை பயன்படுத்திக்கொள்ள முனையும் கயவர்களின் ஆதரவுதான் இப்படியான விஷயங்களுக்கு கரம் கோர்க்கிறது என்று நான் நினைப்பதுண்டு. நால்வரையோ ஐவரையோ கொண்ட என் குடும்பத்தவரிடம் போராடி வெல்ல முடியாத என்னால் எப்படி கோடானு கோடி மனிதர்கள் நிறைந்த உலகில் வெல்ல முடியும்? பாதுகாப்பான குடும்பம் என்கிற அரணுக்குள் இருந்து போராடுவதே ஒவ்வொரு பெண்ணினதும் சாமர்த்தியமான முடிவாயிருக்கும். அதை தவறவிட்ட அருவி செய்ததும் மிகப் பெரிய பிழையே!

பெற்றவர்கள் தவறாகப் புரிந்துகொண்டார்கள் என்றால் நீ சரியாக புரிய வைத்திருக்க வேண்டாமா? நான் அப்படியானவள் அல்ல என்று நிரூபித்திருக்க வேண்டாமா? என் மகனுக்கு சரளமாக தமிழ் வராது. வீட்டில் தமிழ்தான் கதைக்க வேண்டும் என்பது எழுதப்படாத சட்டம். சில நேரங்களில் சிலதை சொல்லத் தொடங்கிவிட்டு, தமிழில் விளக்க முடியாமல் போகும்போது ‘பரவாயில்ல விடுங்கம்மா’ என்று சொல்லுவார். நான் விடமாட்டேன். ‘அம்மாக்கு விளங்கவில்லை என்றால் நீ விளங்கப்படுத்து’ என்று நின்று என்ன சொல்கிறார் என்று விளங்கிக்கொள்ளாமல் விடமாட்டேன். அப்படி ஒரு பிடிவாதம் வேண்டாமா? தவறுக்கும், கோபத்துக்கும் அத்தனை பிடிவாதம் செய்யும் நாம் நம்மை நிரூபிக்கப் போராட வேண்டாமா?
இன்றைய ஆண்களின் மனங்களில் மாற்றங்கள் எத்தனை முக்கியமோ அத்தனை முக்கியம் பெண்கள் சிந்தித்து, நிதானித்து செயலாற்ற வேண்டியதும்! பலத்தை சிந்திக்க வைத்துவிட்டது அருவி. பின் பாதியில், அடுத்து என்ன என்று தவிக்கின்ற நிலையில் போத்தல் சுத்துகிறேன் என்று படத்தை சற்றே இழுத்தடித்தது போலிருந்தாலும், நீண்ட நாட்களுக்குப் பிறகு அழுதழுது பார்த்த படம். நன்றாகவே சிரிக்க வைத்ததும் கூட! நிறைய சிந்திக்க வைத்த படம். ஒரு பெண்ணாய் என் நடவடிக்கைகள் எப்படி இருக்கவேண்டும் என்று சுய ஆலோசனை செய்ய வைத்த அதே வேளை ஒரு அம்மாவாய் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்றும் சிந்திக்க வைத்தது.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s