அவனுடைய ரவுடி ரங்கம்மா அவள்! அவன் செய்யவேண்டிய அத்தனை காரியங்களையும் அவள் செய்வாள்! காதலைச் சொன்னதும் அவள்தான். அவனிடமிருந்து சம்மதத்தைப் பெற்றுக்கொண்டதும் அவள்தான்!
எத்தனை துன்பங்கள் வரட்டும். அவளின் ஒற்றை நினைவு போதும் அத்தனையிலிருந்தும் அவனைத் தூரமாய்க் கொண்டுபோய்விட!
‘ஆரா…’ ஆத்மார்த்தமாய் அவனுள்ளம் அவளைத் தேடியபோது, “அடேய்! தனியா இருந்து சிரிக்காதயடா! எங்கயாவது தூக்கிக்கொண்டு போகப்போறாங்கள்!” என்றபடி, அவனை இடித்துக்கொண்டு வந்து அமர்ந்தாள் ஆரணி.
மழைச்சாரல்கள் பட்டதும் சடசடவென்று பூத்துவிடும் பூக்களைப்போல அவனுள்ளம் மலர்ந்துவிட வேகமாக விழிகளைத் திறந்தான்.
கண்முன்னே நின்றவளின் நெற்றியிலும் உதட்டின் மேலேயும் வியர்வைத் துளிகள். களைத்துச் சோர்ந்திருந்தாள். இழையிழையாகத் தோள்களைத் தொட்டு நிற்கும் முடி கலைந்திருந்தது. அவள் முகத்தைப் பார்த்ததும் அவன் புருவங்கள் சுருங்கிற்று!
“ஏன் களைச்சுத் தெரியிறாய்?”
“நடந்து வந்தனான்!”
மல்லாந்து படுத்திருந்தவன் எழுந்து அமர்ந்து கைகளில் பட்டிருந்த மணல் துகள்களைத் தட்டிவிட்டான்.
“உன்ர காருக்கு என்ன நடந்தது?” கேட்டபடி தன் பாக்கெட்டில் இருந்த கர்சீபை எடுத்து அவளின் வியர்வைத் துளிகளை ஒற்றி எடுத்தான்.
காயப்பட்டு வந்திருந்த ஆரணியின் இதயத்துக்கே ஒத்தடம் கொடுப்பது போலிருந்தது. “என்னை உனக்குப் பிடிக்குமாடா?”
ஒற்றிக்கொண்டிருந்த அவன் கை ஒருமுறை நின்றது. அவள் முகத்தைப் பார்த்தான். அதில் ஏதோ ஒரு அலைப்புறுதல். அவனிடம் ஆறுதலைத் தேடும் கண்கள். மெல்ல நெருங்கி அமர்ந்து அவளைத் தன் தோளில் சாய்த்துக்கொண்டான்.
“வீட்டுல ஏதாவது சண்டை பிடிச்சியா?”
“நான் கேட்டத்துக்குப் பதிலைச் சொல்லு நிக்ஸ்!” அவனிடமிருந்து விலகி, பிடிவாதத்துடன் கேட்டாள்.
‘வேண்டாம் போ!’ என்று அலைகளைக் கரையோரமாகத் தள்ளிவிட்டுக் கொண்டிருந்த கடலின் மீது விழிகளை அலையவிட்டான். “என்ன வாழ்க்கையடா இது எண்டு கசந்துபோற ஒவ்வொரு முறையும் உன்ர ஒரு நினைவு போதும் வாழ்ந்து காட்டவேணும் எண்டுற வைராக்கியத்தை எனக்குள்ள உருவாக்க. விளங்குதா உனக்கு?” என்றான் தீவிரம் மிகுந்த குரலில்.
முகம் மலர அவன் தோளில் சாய்ந்துகொண்டாள் ஆரணி. அவளுடைய திடம், தைரியம், திமிர் எல்லாம் கரைந்துபோகுமிடம் அவனது காலடிதான்!
“அப்ப வா, இப்ப இருந்தே வாழ்ந்து பாப்பம்!” என்றாள் அவள். அதிர்ந்தான் நிகேதன். பதில் சொல்லவில்லை. திரும்பி அவள் முகத்தை ஆராய்ந்தான்.
“முதல் என்ன நடந்தது எண்டு சொல்லு?”
“வீட்டை விட்டு வெளில வந்திட்டன் நிக்ஸ்.” நடந்ததைச் சொன்னாள் ஆரணி.
நிகேதனுக்குக் கோபம் வந்துவிட்டது. அதைவிட எவ்வளவு சாதாரணமாகச் சொல்லுகிறாள். “இதுக்குத் தானேடி, இப்ப சொல்லாத, முதல் நான் ஒரு வேலைல சேருறன், பிறகு கதைப்பம் எண்டு சொன்னனான். சொல்ல சொல்லக் கேக்காம சொல்லிப்போட்டு இப்ப வீட்டை விட்டு வெளில வந்திட்டன் எண்டு சர்வ சாதாரணமா சொல்லுறாய். இனி என்ன செய்யிறது?”
அவனுக்கு வேலை கிடைத்தபாடாய் இல்லை என்றுதான் வேண்டாம் என்று அவன் சொன்னதையும் கேட்காமல் வீட்டில் சொன்னதே! வீட்டில் சம்மதித்தால் வெளியில் வேலை தேடவேண்டிய அவசியமே அவனுக்கு வராது. அவர்களின் தொழிலே போதும். இதை அவனிடம் அவளால் பகிர்ந்துகொள்ள முடியாது. சுயகௌரவம் நிறையப் பார்க்கிறவன் கொதித்துவிடுவான். அவனுக்கே தெரியாமல் அனைத்தையும் சுபமாக முடிப்போம் என்று நினைக்க, அது இப்படியாகும் என்று அவளே எதிர்பார்க்கவில்லை!
“எங்கயாவது ஒரு கோயில்ல கல்யாணத்தைக் கட்டுவம்.” என்றாள் அவள்.
“அறைஞ்சன் எண்டா! எல்லாத்தையும் எவ்வளவு ஈஸியா சொல்லுறாய். கையில ஒரு ரூபா காசு இல்ல. ஒரு வேலை இல்ல. கல்யாணமாம் கல்யாணம். நானே என்ர வீட்டுக்குச் சுமை. இதுல நீயும் வரப்போறியா? கொஞ்சமாவது பொறுமையா நடக்க மாட்டியா ஆரா!”
அவனுக்கு இந்தச் சூழ்நிலையை எப்படிக் கையாள்வது என்றே தெரியவில்லை. அவன் கோபப்படுவான் என்று ஆரணியும் எதிர்பார்த்தாள் தான். ஆயினும், இந்தளவில் இல்லை.
“என்ன நடந்தாலும் நீ இருக்கிறாய் எண்டுற நம்பிக்கைலதான் வந்தனான் நிக்கி. ஆனா நீ இப்பிடிச் சொல்லுறாய். உன்னட்ட இத எதிர்பாக்கேல்ல.”
“விளையாடாத ஆரா! இதென்ன படமா? நீ நம்பி வந்ததும் அடுத்த ஒருமணி நேரத்துல நான் முன்னேறிக் காட்ட? நான் இருக்கிறன் தான்! உனக்காக.. எண்டைக்கும்! ஆனா, அந்த நான் வெட்டியா இருக்கிறன். வீட்டுக்குச் சுமையா இருக்கிறன். காதலுக்குக் காசு தேவையில்ல. ஆனா கல்யாணத்துக்கு? காசு இல்லாம அந்தக் கல்யாணமே நடக்காது! என்னடி நீ?” தலையைப் பிடித்துக்கொண்டான் நிகேதன். அவனுக்கு என்ன செய்வது என்றே விளங்கவில்லை.
அவனை நம்பி வந்த அவளும் பாவம் தான். வந்தவளை வா வாழ்ந்து பார்ப்போம் என்று சொல்லமுடியாத நிலையிலிருக்கும் அவன் நிலையும் பரிதாபம் தான். என்ன செய்யப் போகிறான்? எதிர்பாராமல், திட்டமிடாமல், முன்னாயத்தங்கள் எதுவுமில்லாமல் திருமணம் என்கிற ஒன்றுக்குள் சட்டென்று புகுந்துவிட அது என்ன விளையாட்டா?
“இண்டைக்குப் போன வேலையையும் வேணாம் எண்டு சொல்லிப்போட்டன்.” இவள் இப்படிச் செய்வாள் என்று தெரிந்திருக்க அந்த வேலையையாவது ஏற்றுக்கொண்டிருக்கலாம். அவனுக்கு எந்தக் கோணத்தில் சிந்தித்துப் பார்த்தாலும் இன்றைய நிலையில் திருமணம் என்பது மருந்துக்கும் உசிதமற்ற காரியமாகவே பட்டது.
“கல்யாணம் இப்ப சரியாவே வராது ஆரா. அவசரத்துல எடுக்கிற முடிவு இல்ல இது. நீ திரும்பி வீட்டையே போ! அதுதான் சரி!”
அதிர்ந்துபோய்ப் பார்த்தாள் அவள். அப்பாவின் முன்னே மீண்டும் போய் நிற்பதா? அவளால் அதை நினைத்துக்கூடப் பார்க்கமுடியவில்லை.
“உன்ன நம்பி வந்தனான். ஆனா நீ இப்பிடிச் சொல்லுவாய் எண்டு கனவிலையும் நினைக்கேல்ல. சரி போறன்! வீட்டையில்ல. இந்தக் கடலுக்கையே போறன்! உனக்குச் சுமையா இருக்கவும் வேணாம். மானம் கெட்டுத் திரும்ப அப்பாவுக்கு முன்னால போய் நிக்கவும் வேணாம்!” முகம் சிவக்கச் சொன்னவள் விருட்டென்று எழுந்துவிட்டாள்.
“அடிதான்டி வாங்கப் போறாய்!” கோபத்தோடு அவன் பிடித்து இழுத்த இழுவையில் அவனருகிலேயே வந்து விழுந்தாள் ஆரணி!
“என்ன இருந்தாலும், வா வாழ்ந்து பாப்பம் எண்டு சொல்லேல்லையேடா நீ!” அவன் தந்த ஏமாற்றத்தைத் தாங்கிக்கொள்ள அவளால் முடியவில்லை.
அவனோ மறுப்பாகத் தலையசைத்தான். “உனக்கு விளங்கேல்ல! நிறையக் கஷ்டப்படப்போறம். நிறைய அவமானப்படப் போறம். எத்தனைபேரின்ர பல்லுக்குப் பதமாகப் போறோமோ தெரியாது. அதையெல்லாம் நீ தாங்க மாட்டாய்!” என்றான் கவலையோடு.
“பரவாயில்லையடா. நீ பக்கத்தில இருக்கிற வரைக்கும் எதையும் நான் தாங்குவன். எதிர்நீச்சல் போட்டுத்தான் பாப்பமே!” நம்பிக்கையோடு சொன்னாள் ஆரணி.
அப்போதும் அவன் முகம் தெளியவில்லை என்றதும் வேதனையாயிற்று! அவன் தாடையைப் பற்றித் தன்புறமாகத் திருப்பினாள்.
“எதையும் நான் தாங்குவன் நிக்ஸ். சமாளிச்சுப் போவன். ஆனா, பக்கத்தில துணையா நீ இருக்கோணுமடா! நீயில்லாத ஒரு வாழ்க்கை என்ன தந்தாலும் அது எனக்கு வேண்டாம். இன்னொருத்தனை துணையா என்னால நினைச்சுக்கூடிப் பாக்க முடியேல்ல நிக்ஸ். உனக்கு விளங்குதா?” விழிகளோடு விழிகளைக் கலந்து கேட்டபோது நெஞ்சம் கசிய அவளை அணைத்துக்கொண்டான் நிகேதன்.
“நீயில்லாம நான் மட்டும் வாழுவன் எண்டு நினச்சியா? சரி விடு! வாழ்க்கை நமக்கு என்ன வச்சிருக்கு எண்டு வாழ்ந்துதான் பாப்பமே!” உதட்டினில் பூத்துவிட்ட சிரிப்புடன் கண்ணைச் சிமிட்டியபடி சொன்னான் அவன்.
ஆரணியின் முகம் பூவாய் மலர்ந்துபோயிற்று.