அன்று, மாலை அவள் புறப்படவேண்டும். பூப்புனித நீராட்டுவிழாவுக்கும் செல்லவேண்டும். மனதில் உற்சாகமும் இல்லை உடம்பில் தெம்பும் இல்லை. எப்படியும் அவர்களின் குடும்பமும் வரும் என்பது வேறு அவளின் கால்களைப் பின்னால் இழுத்துப்பிடித்தது. போகாமல் விடட்டுமா என்று ராகவியிடம் கேட்டுப் பார்த்தாள்.
“ஒருத்தர் எங்களை மதிச்சுக் கூப்பிட்டா கட்டாயம் போகவேணும் சஹி. அவேயும் உன்ர அப்பான்ர சொந்தக்காரர் தான். அதால வெளிக்கிடு. அகில் கொண்டுவந்து இறக்கிவிடுவான்.” என்று சொல்லி, அவள் வாங்கிய அந்தச் சேலையை அழகுற அணிவித்து, மிதமான மேக்கப்பில் பூச்சூடி அவளைப் பார்த்தபோது பிரமித்துப்போனார் ராகவி.
இந்தக் குட்டிப் பெண்ணுக்குள் ஒரு அழகிய மங்கை ஒளிந்து இருந்திருக்கிறாளே! ஆசையாக அணைத்துக்கொண்டவர் உடனேயே யாதவிக்கு வீடியோ கோலில் அழைத்துக் காட்டினார்.
இலங்கை வெயிலுக்குத் தகதகக்கும் அவளின் நிறத்தில் மெல்லிய கோடு படிந்திருந்த போதிலும், அதுகூடப் பெண்ணுக்கு அழகுசேர்க்கும் மாயத்தைக் கண்ணாரக் கண்டு ரசித்தார் அன்னை.
“நல்ல வடிவாய் இருக்கிறாய் செல்லம். கவனமா போயிட்டு வா. இரவுக்குக் கொழும்புக்கு வெளிக்கிடவேணும்.” இத்தனை நாட்கள் பொறுத்து இருந்தவருக்கு அவள் வருகிற நாள் நெருங்கியபின் இனி முடியாது என்பது போலொரு தவிப்பு.
உற்சாகம் இல்லாமல் இருந்தவளைக் கவனித்து, “சஹி, ஒண்டுக்கும் கவலைப்படக்கூடாது. முப்பது வருசத்து கோபம் செல்லம். நாங்க நினைக்கிற வேகத்துக்கு மறையாது. அப்பா சுகமாகி வரட்டும், எல்லாரும் திரும்ப அங்க வருவோம் சரியா? அப்ப எல்லாம் சரியாகும். அப்பா சரியாக்குவார். உன்ர சொந்தம் எல்லாரையும் பாத்திட்டாய் எண்டுற சந்தோசத்தோட வரவேணும், என்ன?” ராகவியின் மூலம் அனைத்தையும் அறிந்துகொண்ட யாதவி இதமான குரலில் தேற்றினார். தன்னுடைய காரையும் விற்று அந்தப் பணத்தையும் எடுத்து வங்கியில் போட்டு பணப்பிரச்சனைக்கு ஒரு முடிவைக் கொண்டு வந்திருந்தார். பிரதாபனின் உடலும் சத்திர சிகிச்சைக்குத் தயார் என்றும், எந்தப் பயமும் இல்லாமல் அவர் பிழைத்து வந்துவிடுவார் என்றும் வைத்தியசாலையில் சொல்லி இருந்ததில் கிட்டத்தட்ட அவர்களைச் சூழ்ந்திருந்த இருள் விலகிவிட்டதாகவே நினைத்தார் யாதவி.
பூப்புனித நீராட்டு விழா அவர்களின் வீட்டிலேயேதான் நடந்துகொண்டிருந்தது. வீட்டின் முன் முற்றத்தில் பெரிய கொட்டகை அமைத்து அதனை விழாவுக்கு ஏற்ப அழகுபடுத்தி அலங்கரித்து இருந்தனர்.
அவளையே எதிர்பார்த்துக் காத்திருந்தாள் சஞ்சனா. அன்று போனவள், அதற்குப்பிறகு இவள் அழைத்தும் அழைப்பை ஏற்கவில்லை. அனுப்பிய செய்திகளுக்கும் பதில் இல்லை. நேரே போய்ப் பார்த்துக்கொண்டு வரலாமா என்று யோசித்துவிட்டு, பிறகு அதற்கும் அண்ணா இன்னொரு பூகம்பத்தைக் கிளப்புவான் என்பதில் பேசாமல் இருந்துவிட்டாள். தமையனோடும் இந்த மூன்று நாட்களாகக் கதைக்கவில்லை. சஹானாவின் அப்பாவை அப்படிச் சொன்னது அவளுக்கும் கோபமே.
இன்று காலையிலும் நீ கட்டாயம் வரவேண்டும் என்று செய்தி அனுப்பி இருந்தாள். இன்னும் காணவில்லையே என்று வந்து வீதியை எட்டிப் பார்த்தபோது, அகிலனின் வண்டியில் வந்து இறங்கியவளைக் கண்டுவிட்டு ஓடிவந்து கைப்பிடித்து அழைத்துக்கொண்டு போனாள்.
அன்றைக்கு நடந்த நிகழ்வு மனதில் உருவாக்கிவிட்டிருந்த சஞ்சலத்தில் இரு அழகிகளும் மற்றவரின் அழகைக் கவனிக்கும் நிலையில் இல்லை. இருவருக்குமே ஒரு தடுமாற்றம். நெருக்கம் போய் ஒரு விலகல் உருவாகிவிட்ட தோற்றம். தம் பேச்சு மற்றவரைக் காயப்படுத்திவிடுமோ என்று கவனமாக வார்த்தைகளைக் கோர்க்க முயன்றால் ஒன்றுமே வரமாட்டேன் என்றது. சஞ்சனா சஹானாவின் முகத்தை ஆராய்ந்தாள். உற்சாகமற்ற உடல் மொழியும் சோகத்தைச் சுமந்திருந்த விழிகளும் அவளை இன்னுமே குற்றவுணர்ச்சிக்கு ஆளாக்கத் தமையனின் சார்பில், “சொறி மச்சி!” என்றாள்.
நடை நிற்க, “பிளீஸ் சஞ்சு! இனி இதைப்பற்றி எதுவும் கதைக்காத! எனக்குக் கதைக்க விருப்பம் இல்லை!” என்று, நேரடியாகச் சொன்னவளை சற்றே அதிர்வுடன் திரும்பிப் பார்த்தாள் சஞ்சனா.
அந்தக் குரலில் இருந்த இறுக்கம், விழிகளில் தெரிந்த உறுதி அதுவரை அவள் அறிந்திராத சஹானாவை அறிமுகப்படுத்தியது. சிரித்த முகமும் விளையாட்டுக் குணமுமாக எல்லாவற்றையும் இலகுவாகக் கடக்கும் சஹானா அல்ல இவள். சஞ்சனாவுக்கு வலித்தது. கண்ட நொடியில் மனதால் நெருங்கி அன்பு கொண்டவர்கள் இருவரும். இன்றோ அருகருகே நின்றும் இருவருக்குமிடையிலான தூரம் நெடுஞ்சாலையாக நீண்டு தெரிந்தது. இதற்குக் காரணமான தமையனை எண்ணி அப்போதும் கோபம் கொண்டாள் சஞ்சனா.
அங்கே, மண்டபத்துக்குள் வேட்டி சட்டையில் முதன்மையாக நின்று எல்லோரையும் கவனித்துக்கொண்டிருந்தவன் சாட்சாத் சஞ்சயன்தான். அவனை நிமிர்ந்தும் பார்க்கவில்லை அவள். மெல்லிய உடல்வாகினை எழிலுறத் தழுவியிருந்த சேலை காட்டிய செழுமை நிறைந்த அழகு, ஆண் பெண் என்கிற பாகுபாடற்று அங்கிருந்த பலரின் கண்களைப் பறிப்பதை உணராமல் அகப்பட்ட இருக்கையில் அமர்ந்துகொண்டவளை உறவுப்பெண்கள் வளைத்துக்கொண்டனர்.
எல்லோருமே ஏதோ ஒருவகையில் சொந்தம் என்றாகிப்போனதில் பேசாத கதைகளை எல்லாம் பேசித் தீர்த்தனர்.
‘நான் உன்ர அப்பான்ர குஞ்சியம்மான்ர(சின்னம்மா-சித்தி) அக்கா. அப்ப உனக்கு நான் யார் சொல்லு பார்ப்போம்?’ என்று உறவுகளை நிலைநாட்டும் உரிமைப் போராட்டம் வேறு.
இதுவே அன்றைய சம்பவத்துக்கு முதலாக இருந்திருக்க அவர்களோடு ஐக்கியமாகிச் செல்லம் கொண்டாடி சொந்தத்தை அனுபவித்துத் தீர்த்திருப்பாளாயிருக்கும். இப்போதோ ஒருவித வெறுமைதான் அவளைச் சுற்றிக்கொண்டிருந்தது. வேகமாக இதை முடித்துக்கொண்டு புறப்பட்டுவிட்டால் போதும் என்று நினைத்தாள்.
சஞ்சயனும் அவளைக் கவனித்தான் தான். அதுவும் தன்னைப் பார்த்துவிடவே கூடாது என்று கவனமெடுத்துத் தவிர்த்தவளை எண்ணி அவன் உதட்டோரம் வளைந்தது. வாடிப்போயிருந்த முகத்தைப் பார்த்து, ‘நல்லா நடிக்கிறா..’ என்று எண்ணம் ஓடியபோதும், அவளுக்குப் பருகப் பால் தேநீரும் பலகாரமும் கொடுத்து அனுப்பிவிட்டான்.
கொண்டுவந்து நீட்டியவனிடம் அவள் மறுப்பது கண்டு தாடை இறுகியது! அதற்குமேல் அவளை வேண்டுமென்றே கவனிக்காமல் விட்டான்.
மிகச் சிறப்பாகவே பூப்புனித நீராட்டுவிழா நடந்துகொண்டிருந்தது. காமாட்சி விளக்கேந்த குமரிப் பெண்களோடு அவளையும் ஒருத்தியாக நிறுத்திவைத்தார் ஒரு பெண்மணி. அவரும் அவளுக்கு அத்தை முறையாம்.
பிடித்துக்கொண்டு வந்து நிறுத்திவிட்டார்கள் என்பதாலேயே சிரிப்பற்ற முகத்துடன் நின்றவளைக் கண்டு அங்கு வந்த சஞ்சயனுக்குச் சினமேறியது. “அர்ச்சனா! இங்க வா!” என்று ஒரு பெண்ணை உரக்க அழைத்தான்.
பாவாடை தாவணியில் நின்ற அவள், “என்ன அண்ணா?” என்றபடி வர, “அந்த விளக்கை நீ வாங்கு!” என்றான் அவளிடம்.
ஒன்றுவிட்ட தமையன் முறைதான் என்றாலும் அவனின் பேச்சைத் தட்டுகிற தைரியமெல்லாம் அவளுக்கு இல்லை. ஆனால், ஏற்கனவே விளக்கேந்தி வரிசையில் நிற்கும் அவளிடம் விளக்கை வாங்குவது நன்றாயிராதே என்று தடுமாற, அவளின் கையில் தானே விளக்கைக் கொடுத்துவிட்டு வரிசையிலிருந்து விலகிக்கொண்டாள் சஹானா.
அவள் அங்கிருந்து போவதைக் கவனித்துவிட்டு, “விளக்கு ஏந்தவல்லோ விட்டனான் பிள்ளை. எங்க போறாய்?” என்றபடி வந்தார் அவளைப் பிடித்துவிட்ட பெண்மணி.
“நான் தான் சித்தி அர்ச்சனாவை மாத்திவிட்டனான்.” என்று அழுத்தமாய் உரைத்தவனிடம் என்ன சொல்வது என்று தெரியாமல் விழித்தார் அவர்.
“பரவாயில்ல ஆன்ட்டி. அவர் செய்ததுதான் சரி. எனக்கு இதைப்பற்றிப் பெருசா தெரியாது.” கண்ணுக்கு எட்டாத முறுவல் ஒன்றுடன் சொல்லிவிட்டு விலகிச் சென்றாள் அவள்.
“என்ன தம்பி நீ? பிடிச்சு நிப்பாட்டமுதல் தடுத்திருந்தா வேற. வரிசையில நிண்டவளைப் போய்.. அழகற்ற செயல் செய்யக்கூடாது! சின்னப்பிள்ளை பாவமெல்லே. முகமே வாடிப் போச்சுது!” அவருக்குப் பிரபாவதி ஒன்றுவிட்ட தமக்கை. அவன் பெறாமகன். பாசத்துடன் கடிந்தபோதும் அவன் மாற்றியதை அவர் மாற்றவில்லை.
“விடுங்க சித்தி!” என்றுவிட்டு நகர்ந்தான் அவன். அங்கே மண்டபத்தின் கடைசியில் ஒரு மூலையாக யாரின் கண்களிலும் படாதமாதிரி தனியாக அவள் அமர்வது தெரிந்தது. அவனுக்குத் தெரிந்து இதுதான் முதல் முறை, ‘அவர்’ என்று யாரோவாக அவனை விழித்தது. ‘மச்சானை’ தவிர்க்கிறாளாம். ‘யாருக்கு வேணுமாம் இவளின்ர மச்சான் எண்டுற அழைப்பு?’ என்று உதடு வளைந்தாலும் ‘அவர்’ என்று அவள் விழித்த விதம் பொருந்தாமலேயே நின்றது.
ஆனால், அவன் சித்தி என்று விழித்த அந்தப் பெண்மணி அவளை விடவில்லை. பூத்தூவ, பெண்ணை அழைத்துவர என்று எல்லாவற்றுக்குமே பிடித்துக்கொண்டார். எவ்வளவோ மறுத்தும் விடாதவரின் மேல் மெல்லிய சினம் உண்டானபோதும் பிடிவாதமாக மறுத்து மற்றவர்களின் முன்னிலையில் காட்சிப்பொருளாவதை விரும்பாமல் சொன்ன இடத்தில் நின்றாள். செய்யச் சொன்னதைச் செய்தாள்.
அவள் பயந்ததுபோன்று எதுவும் செய்யாமல் அவனும் ஒரு பார்வையோடு அவளைக் கடந்தான். தெய்வானை அம்மாவும் பிரபாவதியும் இவள் தங்களை நெருங்காததே போதும் என்பதாகத் தங்களின் வட்டத்தோடு அமர்ந்திருந்தனர்.