“ஏன் மாமா வராம விட்டனீங்க? முதல் ஏன் நாட்டை விட்டே போனனீங்க? தாத்தாவோட கதைச்சிருக்கலாமே.” அப்படி அவர் செய்திருக்க சஹானாவின் முன் பொல்லாதவனாக நின்றிருக்க மாட்டானே என்கிற ஆற்றாமையுடன் கேட்டான்.
பிரதாபனுக்கும் புரிந்தது. சற்று நேரம் அமைதியாகவே நடந்துவிட்டுப் பேசினார். “நான் கேட்டிருந்தா எங்கட கலியாணத்துக்கு அப்பா நிச்சயம் ஓம் எண்டு சொல்லி இருப்பார். அதுக்குப் பிறகு? என்னை தண்டிக்க வேணும் எண்டுற வெறியிலையே காலத்துக்கும் கலியாணம் கட்டாம இருந்து மொத்தக் குடும்பத்தையும் தண்டிச்சு இருப்பாள் பிரபா. அரவிந்தனை வெருட்ட(மிரட்ட) வேணும் எண்டுறதுக்காகவே தன்ர உயிர பணயம் வச்சு நஞ்சு குடிச்சவள். அவளுக்கு தான் நினைச்சது நடக்க வேணும். நடக்காட்டி என்னவும் செய்வாள். ரெண்டு வருசமா எதையும் வெளில காட்டாம பாக்கிற எல்லா மாப்பிள்ளையையும் எனக்கு பிடிக்கேல்ல எண்டு சொல்லியே என்னை அலைய வச்சவள்.” என்றவருக்கு, தான் பாசம் வைத்து வளர்த்த குட்டித்தங்கையின் சரியில்லாத குணம் இன்றும் வருத்தத்தை உண்டாக்கிற்று.
“பிறகு என்ன நடந்திருக்கும் சொல்லு? அவள் கட்டாம சிவா கட்டியிருக்க மாட்டான். நான் கட்டினாலும் என்னால அவள் தனியா நிக்கிறாள் எண்டுறதை பாத்துக்கொண்டு சந்தோசமா வாழ ஏலாது. அம்மா அப்பா அவளை நினைச்சு நினைச்சே துடிச்சு போயிருப்பினம். இது எல்லாம் தங்களால எண்டு அரவிந்தன் குடும்பமும் சந்தோசமா இருந்திருக்காது. அதுக்கு எல்லா கெட்ட பெயரையும் நான் வாங்கிக்கொண்டு போறது பரவாயில்ல எண்டு நினைச்சன். அதோட, சிவாக்கு அவளை பிடிக்கும். எப்பிடியும் அவளையும் மாத்தி சந்தோசமா வாழுவான் எண்டு நினைச்சன்.” என்றார்.
சஞ்சயனுக்கு வாயே திறக்க முடியவில்லை. எவ்வளவு எல்லாம் யோசித்து அந்த முடிவை எடுத்திருக்கிறார் அவர். அவனானால் ஓடிப்போனவர் என்று சிறுமைத்தனமாக முடித்துவிட்டான்.
“பிறகு ஏன் மாமா வரேல்ல நீங்க?” கனத்துப்போன குரலில் வினவினான்.
“ஆரம்ப காலத்தில் விசா கிடைக்க அலைஞ்சு, மொழி படிச்சு, நிலையான ஒரு வேலைய தேடி அந்த நாட்டில கால் ஊண்டுறதுக்கே பத்து வருசம் ஓடிப் போயிட்டுது. போடுறதுக்கு உடுப்பில இருந்து இருக்கிறதுக்கு வீடு கூட இல்லாம பூச்சியத்தில இருந்து ஆரம்பிக்க வேண்டி இருந்தது. பிறகு.. எந்த முகத்தை வச்சுக்கொண்டு வருவன் எண்டுற தயக்கம். என்னை கண்டதும் பிரபா ஏதும் செய்வாளோ எண்டுற பயம்.. பிறகு.. என்ர செல்லக்குஞ்சுக்காக வரேல்ல.” என்றார் அவர்.
அவன் கேள்வியாகப் பார்க்க, “உங்களை எல்லாம் விட்டுட்டுப்போய் எங்களால சந்தோசமா வாழமுடியேல்ல அப்பு. இப்பிடி செய்துபோட்டோமே எண்டு ஒரு வேதனை மனதில அரிச்சுக்கொண்டேதான் இருந்தது. அந்த நேரம் எங்கள் ரெண்டுபேரையும் வாழவைக்கப் பிறந்தவள் என்ர ராசாத்தி. நீங்க எல்லாரும் என்னோட இல்லை எண்டுற குறைய எனக்குத் தீர்த்து வச்சவளே அவள்தான். அவளின்ர கண் கலங்கி அதைப் பாக்கிற சக்தி எனக்கில்லை.” அதுதான் காரணம் என்று சொல்லாமல் சொல்லிப் புன்னகைத்தார் அவர்.
சஞ்சயனின் நிலைதான் மிகுந்த பரிதாபமாகப் போயிற்று. மகளின் மீது உயிரையே வைத்திருக்கும் மனிதர் அந்த மகளுக்கே அவன் கொடுத்த துன்பத்தையெல்லாம் அறிந்திருந்தும் அவனைக் கடிந்து ஒரு சொல் சொல்லவே இல்லை! அவனாலேயே அதைப் பொறுக்க முடியவில்லை. “அப்பிடி நீங்க வளத்த மகளை நான் நிறையக் கஷ்டப்படுத்தி இருக்கிறன். அழ வச்சிருக்கிறன்.” என்றான் எங்கோ பார்த்துக்கொண்டு.
“நீயும் என்ன வேணும் எண்டா செய்திருக்கப்போறாய். ஏதோ ஒரு கோபத்தில தானே. நடந்த எல்லாத்துக்கும் சேர்த்துவச்சு இனி எல்லாரும் சந்தோசமா இருங்கோ.” இரண்டு வரியில் அவனுடைய பெரும் பிரச்சனைக்குத் தீர்வு சொன்னார் மனிதர்.
அவன் நின்றுவிட்டான். என்னமாதிரியான மனம் அவருடையது? அன்பு காட்டுவதைத் தவிர வேற எதுவும் இவருக்குத் தெரியாதோ? இவரின் வழிகாட்டலில் அவன் வளராமல் போய்விட்டானே. அதனால் தானோ இப்படியெல்லாம் நடந்தான்?
ஏன் நிற்கிறாய் என்று அவர் கேள்வியாகப் பார்க்க, என்ன சொல்வது என்று தெரியாமல் தடுமாறிவிட்டு, “திரும்பிப் போவம் மாமா.” என்றான் .
“உண்மையைச் சொல்லுங்கோ மாமா. என்னில உங்களுக்குக் கோவமே இல்லையா? உங்கட நண்பர் குடும்பத்தையே அடைச்சு வச்சிருந்தனான்.”
“அது பிழைதான்!” உடனேயே சொன்னார் அவர். “நீ அப்பிடிச் செய்து இருக்கவே கூடாது! இனியும் எந்தக் காலத்திலையும் இப்பிடியான காரியங்களை பாக்கக் கூடாது! ஆனா இதையெல்லாம் பிடிச்சுத் தொங்கி என்ன செய்யச் சொல்லுறாய்? ஆழமா யோசிச்சுப் பாத்தா உன்ன இப்பிடிச் செய்ய வச்சதும் நான் செய்த பிழை தானே. அப்ப முதல் குற்றவாளி நான்தானே.”
அவனுக்காக அவனிடமே வாதாடியவரை, “போங்க மாமா!” என்றான் சலிப்புடன்.
“எனக்குச் சஹி வேற நீ வேற இல்லை அப்பு.” புன்சிரிப்புடன் சொன்னார் பிரதாபன்.
“என்ன மாமா நீங்க? கொஞ்சமாவது என்னைத் திட்டுங்கோவன்!”
“அதை எல்லாம் என்ர மகள் செய்வாள். சந்தோசமா வாங்கிக்கொள்!” அப்போதும் அவருக்குச் சிரிப்புத்தான் வந்தது.
வந்ததில் இருந்து அவனைப் பொருட்டாகவே மதிக்காதவளை அவனும் கவனித்துக்கொண்டுதானே இருக்கிறான். இதில் அகில் மச்சான், சஞ்சு மச்சாள் என்று கொஞ்சல் வேறு. ‘என்னை அப்பிடி கூப்பிட மாட்டியாடி?’ என்று உள்ளுக்குள் உறுமிக்கொண்டிருந்தான் சஞ்சயன்.
இவர்கள் கண்ணுக்குத் தெரியவும் ஓடி வந்தாள் சஹானா. “உங்களை ஆரு அவ்வளவு தூரம் வரைக்கும் நடக்கச் சொன்னது?” என்று தகப்பனை முறைத்தாள்.
“கொஞ்சத் தூரம் தான்டாம்மா.” ஆசிரியருக்கு பணிந்து நிற்கும் மாணவனைப்போன்று பக்குவமாகப் பதில் சொன்னவரைப் பார்த்துச் சிரிப்பு வர, அவர்கள் இருவரையும் சுவாரசியமாகப் பார்த்திருந்தான் அவன்.
“இங்க யாரையும் நம்ப வேண்டாம் அப்பா. பாக்கத்தான் நல்ல மனுசர் மாதிரி. ஆனா கடத்திக்கொண்டு போறது அடைச்சு வைக்கிறது எல்லாம் நல்லா செய்வினம். இனி எங்க போறதா இருந்தாலும் நானும் வருவன்!” என்றவள், அவன் ஒருவன் அங்கே நிற்கிறான் என்பதே தெரியாதவள் போன்று அவரின் கையைப் பற்றி அழைத்துக்கொண்டு நடந்தாள்.
சஞ்சயன் பல்லைக் கடித்தான். ‘இவள் வந்து மட்டும் என்ன கிழிப்பாளாம்? ஒற்றைக் கைக்கு அடங்குவாளா?’ இதில், நடந்து கொண்டிருந்தவர் திரும்பி அவனைப் பார்த்துச் சிரிக்கவும் அவரை நன்றாக முறைத்தான்.