சஞ்சயன் ஒரு வேகத்துடன் ‘பிளாஸ்ட்டிக் இல்லா யாழ்ப்பாணம்’ பணியினை முழுமூச்சாகச் செய்துகொண்டிருந்தான். காலையில் அது. மாலையில் தோட்டம். பனை எழுச்சி வாரத்துக்கான வேலைகள் கூட ஆரம்பித்து இருந்தது. எங்காவது பேச அழைத்தால் அதற்கும் செல்வது என்று பொழுதுகள் கடுகு ரயிலாக விரைந்துகொண்டிருந்தது.
அன்று மன்னார் கடற்கரைக்குப் போவதாக முடிவு செய்திருந்தனர். இப்போதெல்லாம் வார இறுதிகளில் அகிலனும் அவர்களோடு இணைந்துகொள்வான். இரண்டு வண்டியில் போகாமல் நானே வந்து அழைத்துப் போகிறேன் என்று சொல்லியிருந்தான் சஞ்சயன். வாசலில் சென்று நின்று இவன் ஒலிப்பானை அழுத்த, வெளியே வந்தார் ராகவி.
“இவ்வளவு தூரம் வந்த பிள்ளைக்கு வீட்டுக்க வரேலாதோ? வந்து சாப்பிட்டு போ சஞ்சு! அகிலனும் இன்னும் சாப்பிடேல்லை!”
“நான் சாப்பிட்டன் பெரியம்மா. அகிலக் கெதியா(விரைவாக) வரச் சொல்லுங்கோ!” அங்கே அவள் இருப்பாள் என்று தெரியும். திருமணம் என்று முடிவானதில் இருந்து அவர்களின் தங்கல் இங்குதான். அதில் முடிந்தவரை அங்கு செல்வதைத் தவிர்த்துவிடுவான். நேரத்துக்கே வாடா என்று சொல்லியும் வராத அகிலனால் இன்று ராகவியிடம் மாட்டிக்கொண்டான்.
“கொஞ்சமா இங்கயும் சாப்பிடு! புட்டும் நெத்தலி மீன் பொரியலும் செய்தனான், வா!” என்று அழைத்துப்போனார் அவர்.
வேறு வழியில்லாமல் இறங்கிப்போனவன், அங்கே இலகுவாகச் சாய்ந்து பத்திரிக்கை வாசித்துக்கொண்டிருந்த பிரதாபனை நலன் விசாரித்துக்கொண்டான். “சாப்பிட்டீங்களா மாமா?”
“அதெல்லாம் நேரத்துக்கே ஆச்சுதப்பு. நீ சாப்பிடு!” என்றார் அவர்.
அகிலனும் தயாராகி ஓடி வந்தான். “அஞ்சு நிமிசத்தில வெளிக்கிடலாம் அண்ணா!” என்று சஞ்சயனைச் சமாளித்துவிட்டு, “இன்னும் என்னம்மா செய்றீங்க? சாப்பாட்டைக் கெதியா கொண்டு வாங்கோ! நேரமாகுது!” என்று அன்னையிடம் சத்தமிட்டான்.
இருவருக்கும் இரண்டு தட்டில் போட்டுக்கொண்டு வந்தவர் மகனை முறைத்தார். “இவ்வளவு நேரமும் ஆடி அசைஞ்சுபோட்டு இப்ப கெதியா கொண்டுவரட்டாம். கேளு கதைய!” என்றபடி பரிமாறினார்.
“சஹி சாப்பிட்டாளாம்மா?” எதேற்சையாக விசாரித்தான் அகிலன்.
“அவள் மேல நித்திலனோட கதைக்கிறாள். நாங்க பிறகு சாப்பிடுறோம், இப்ப நீங்க சாப்பிடுங்கோ!” என்று அவர் சொல்லி முடிக்க முதலே, “இந்த ஊர்ல இது ஒரு பிரச்சனை. பாத்துக்கொண்டு இருக்க நெட் போயிடும்! அகில் மச்சான், நெட் காட் இருக்கா? நித்தி அங்க பாத்துக்கொண்டு இருப்பான்.” என்றபடி இறங்கி வந்துகொண்டிருந்தாள் சஹானா.
வேகமாக நிமிர்ந்த சஞ்சயனின் விழிகள் அப்படியே அவளிலேயே நின்றுபோயிற்று. அவளும் எங்கோ செல்வதற்குத் தயாராகி இருந்தாள். அகலக்கால் கொண்ட முக்கால்(த்ரீ ஃபோத்) ஜீன்ஸ்க்கு கையில்லாத குட்டி சிவப்புநிற தொளதொள மேல்சட்டை ஜீன்ஸின் இடுப்பு விளிம்பைத் தொட்டபடி நின்றது. ‘ஸ்டெப்ஸ் கட்’டில் விரித்துவிட்ட கூந்தல், திருத்திய புருவங்கள், சாயம் பூசிய இதழ்கள் என்று அளவான மேக்கப்பில் இருந்தவளைக் கண்டு அவனின் இதயத்தின் தாளம் அதிகரித்தது. வேகமாகப் பார்வையைத் தட்டுக்கு மாற்றினான்.
அவனுக்கு அவள் என்று பெரியவர்கள் நிச்சயித்ததில் இருந்தே அவன் விழிகள் இப்படித்தான், தன் எல்லையை மீறிக்கொண்டிருந்தது.
“நீ எந்த நேரமும் வீடியோகோல் போட்டா நெட் முடியாம என்ன செய்யும். மாமா தன்ர சொத்தை வித்து உனக்கு நெட் கார்ட் போட்டுத் தந்தாலும் காணாது!” என்றான் அகிலன்.
“டேய் மச்சான்! இப்ப இருக்கா இல்லையா?”
“கடையிலேயே இருக்குமா தெரியாது. எல்லாத்தையும் வாங்கி உனக்கே தந்திட்டன்!” என்றான் அவன் நக்கலாக.
தடதடவென்று ஓடிவந்து அவனருகில் அமர்ந்து, “மச்சான்! அகில் மச்சான்! வாங்கித் தாங்கோ மச்சான்!” என்று, அவனைச் சுரண்டிக்கொண்டிருந்தாள் சஹானா. இத்தனைக்கும் பக்கத்திலேயே இருக்கிறவனைத் திரும்பியும் பார்க்கவே இல்லை. இதில் ஆயிரம் மச்சானாம். சஞ்சயனுக்குள் இருந்த முரடன் உறுமத் தொடங்கியிருந்தான்.
வேகமாக உணவை முடித்துக் கையைக் கழுவிக்கொண்டு வந்து, “வா, வாங்கித்தந்திட்டுப் போறன்!” என்று அவளை அழைத்தான்.
இப்படி நேரடியாகக் கூப்பிடுவான் என்று எதிர்பாராதவள் கொஞ்சம் தடுமாறிவிட்டு, “இல்ல, நான் பிறகு போடுறன்.” என்றாள் ஃபோனிலேயே முகத்தைப் புதைத்துக்கொண்டு.
“போய்ப் போட்டுக்கொண்டு வா சஹி. உனக்குத்தான் எவ்வளவு போட்டாலும் காணாது!” இதையெல்லாம் கேட்டுக்கொண்டு அறையில் தயாரான யாதவி வெளியே வந்து சொன்னார். அவரை முறைத்துவிட்டுப் போய் அவனின் வண்டியில் ஏறிக்கொண்டாள் அவள்.
முகத்தை இறுக்கமாக வைத்துக்கொண்டு வருகிறவளைப் பார்த்த சஞ்சயனுக்குச் சிரிப்பு வந்தது. ஒரு கைபேசி அழைப்பில் அவனால் ‘ரீலோட்’ செய்துகொள்ள முடியும். என்னவோ அந்த நொடியில் அவளை அழைத்துக்கொண்டு போகவேண்டும் என்று மனம் உந்திவிட, கேட்டுவிட்டான்.
அவளிடம் பேச்சுக்கொடுக்க அவன் விளையவில்லை. இப்படி அவள் தன்பின்னால் அமர்ந்துவர வீதி உலாப்போல் அழைத்துச் செல்வதே மனதுக்கு ஒருவகையான இதத்தைப் பரப்பியது. இன்னும் கொஞ்ச நாட்களில் அவனும் அவளும் கணவனும் மனைவியும். அந்த எண்ணமே இனிமையாக இருக்க ஆசையாக அவளைப் பார்த்தான். விட்டால் பின் டயரில் அமர்ந்துகொள்வாளாக இருக்கும். அவ்வளவு இடைவெளி. ஒரு பிரேக்கைப் போட்டுப் பார்க்கலாமா என்று அவனுக்குள் இருந்த காதல் கிறுக்கன் குசும்பினான்.
அப்படி எதையும் செய்யாமல் நல்ல பிள்ளையாக அங்கே சந்தியில் இருந்த கடையில் மாதத்துக்கான நெட்கார்ட் போட்டுக்கொடுத்தான். எப்படியும் இவள் பாதியிலேயே முடித்துவிடுவாள் என்று தெரிந்து அதேபோல இன்னும் இரண்டு கார்டுகளைச் சேர்த்து வாங்கிக்கொடுத்தான்.
என்னவோ அவனுக்கு உடனேயே அவளை வீட்டுக்கு அழைத்துச் செல்ல மனமில்லை. கிடைத்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்த எண்ணி, “செவ்விளநீர் குடிக்கப் போறியா?” என்று, பக்கத்தில் இருந்த கடையைக் காட்டிக் கேட்டான்.
இளநீர் கடையையே ஒரு கூல்பார் போன்று நடத்திக்கொண்டிருந்தனர். கடையின் முன் வாசலில் பனையோலையால் வேயப்பட்ட குடையின் கம்பைச் சுற்றி நின்றுகொண்டு குடிக்கும் உயரத்தில் வட்டமாக மேசைபோல் அமைத்து, இருவரோ மூவரோ நின்றபடி இளநீரை அருந்தும் வகையில் அமைத்திருந்தது பார்க்க நன்றாக இருந்தது.
அவளுக்கும் இளநீர் விருப்பம் தான். ஆனால், அவனோடு சேர்ந்து அருந்தப் பிடிக்காமல் இல்லை என்று தலையசைத்தாள்.
“வழுக்கல் போட்டு சுவையா இருக்கும். வா குடிப்பம்!” என்றுவிட்டு, கடைக்காரரிடம் இரண்டுக்குச் சொன்னான்.
அவனை முறைத்தாள் சஹானா. அவன் நினைத்ததையே செய்வது என்றால் பிறகு எதற்கு வேண்டுமா என்று கேட்பான்?
“இந்தச் சூட்டுக்கு இதுதான் நல்ல மருந்து.” என்றான் கண்களில் சிரிப்போடு.