இதயத் துடிப்பாய்க் காதல் 9 – 2

லென்ஸ் வைக்கையில் கலங்கியதால் சற்றே சிவந்திருந்த விழிகளும், கண்ணாடி இல்லாததால் எடுப்பாகத் தெரிந்த நாசியும், ஈரம் சொட்டும் இதழ்களின் சிரிப்பிலும் தன்னைத் தொலைத்தான் அவன்.

“அப்படியா.. எனக்கும் இப்போது உன்னை முத்தமிடத் தோன்றுகிறது.” என்றபடி அவளை இழுத்து தன்மடியில் போட்டவன், அவள் முகத்தைக் கைகளில் ஏந்தி, அவளின் நீண்ட பெரிய விழிகளில் தன் உதடுகளைப் பதித்தான்.

சூடாய்ப் பதிந்த அவன் இதழ்களின் வேகத்தைத் தாங்க முடியாது விழிமூடியவள் மெய்மறந்து மயங்கிப்போனாள்.

அவளின் உதடுகளோ, “வேண்டாம் சூர்யா.” என்று மனதை மறைத்துப் பொய் பேசியது.

அசைந்த இதழ்களினால் அவை இருக்குமிடத்தைக் கண்டுகொண்டவனின் இதழ்கள் தன் இணையை நோக்கி வேகமாகச் சென்றது. சென்ற வேகத்திலேயே சந்தித்துக்கொண்ட இதழ்களுக்குப் பிரிவைப் பிடிக்காமல் போய்விட்டது போலும், பல நொடித்துளிகள் பிணைந்தே கிடந்தது!

மூச்சுக்காற்றுக்கு அவள் தடுமாறுவதை உணர்ந்தே அவளிடமிருந்து தன்னிதழ்களைப் பிரித்தெடுத்தான் சூர்யா.

“இனியும் எதற்காவது நன்றி சொன்னாயானால், இதுதான் தண்டனை.” என்றான், ஏதோ அதற்காகத்தான் அவளை முத்தமிட்டது போன்று!

பட்டென்று கண்களைத் திறந்தவள் அவனை முறைக்க, அவனோ ஒற்றைப் புருவத்தை உயர்த்தி என்னெவென்பதாகக் கேட்டான். அந்த ஆளுமையான பார்வையை ரசித்தவளின் முகத்தை நோக்கி அவன் மீண்டும் குனிய, அவனைப் பிடித்துத் தள்ளியவள் தன்னிருக்கைகுப் பாய்ந்தாள்.

நெஞ்சம் படபடக்க, கைகால்கள் நடுங்க வெட்கம் பிடுங்கித் தின்றது அவளை.

அவளின் நிலையைப் பார்க்கையில் அவனுக்குச் சிரிப்புப் பொத்துக்கொண்டு வந்தது. சிரிப்பவனை முறைக்க முயன்றும் முடியாமல் போகவே, சூடாகிவிட்ட கன்னங்களை அவனுக்கு காட்ட வெட்கி முகத்தைத் திருப்பிக்கொண்டாள் லட்சனா.

“ஏன் உன் காதுமடல் இப்படிச் சிவந்திருக்கிறது லட்டு..?” வம்புச் சிரிப்புடன் கேட்டான்.

“இப்படி.. இப்படி எல்லாம் செய்யாதீர்கள் சூர்யா…” என்றாள் முணுமுணுப்பாக. அதற்கு மேல் அவளுக்கு குரல் எழும்பவில்லை.

“எப்படியெல்லாம்..?” உல்லாசம் மறையாமல் கேட்டான் அவன்.

கேட்கும் கேள்வியைப் பார். வாய்விட்டுச் சொல்லமாட்டேன் என்கிற தைரியத்தில் விளையாடுகிறான்.

“நான் எதைச் சொல்கிறேன் என்று உங்களுக்கு தெரியாதா..?” கோபமாகக் கேட்க முயன்றாள்.

“புரிகிறது. ஆனால்.. அதிலே என்ன தப்பு?”

“கல்யாணத்துக்கு முதல் நாம் இப்படி நடப்பது தப்பில்லையா சூர்யா?” இப்போது அவளுக்கு மெய்யாகவே கோபம் வந்தது. பின்னே, செய்வதையும் செய்துவிட்டு அதில் தப்பில்லை என்று வேறு வாதிடுகிறானே.

“நிச்சயமாகத் தப்பே இல்லை. இதுமட்டுமல்ல, எதுவுமே…!” என்றான் அவன், அந்த ‘எதுவுமே’யில் அழுத்தம் கொடுத்து. அவன் வளர்ந்த விதம் அதைச் சரியென்றே சொன்னது. அவளோ அவன் சொன்னதைக் கேட்டு வாயடைத்து நின்றாள்.

எதுவுமே தப்பில்லையாமே.. என்ன சொல்கிறான் இவன்? இந்த நாட்டில் பிறந்து வளர்ந்ததாலேயே இவன் வெள்ளைக்காரனைப் போல் நடக்க முடியுமா? எங்கு வாழ்ந்தாலும் தமிழன் தமிழன் தானே! நமக்கென்று ஒரு கலாச்சாரம், கட்டுப்பாடு, வாழும் வழிமுறைகள் என்று நம் முன்னோர் வகுத்ததெல்லாம் எதற்காக?

“திருமணம், தாலி, சடங்குகள் எல்லாம் எதற்காக இருக்கிறது? நம் வீடுகளில் பெரியவர்கள் இருப்பது எதற்காக?” கோபத்தில் மூச்சிரைக்கக் கேட்டவளை வித்தியாசமாகப் பார்த்தான் அவன்.

“நீ சொல்வதற்கும் இப்போது நடந்ததற்கும் என்ன சம்மந்தம்..?”

இவன் என்ன விளையாடுகிறானா என்று நினைத்தபடி அவள் பார்க்க, அவன் முகத்தில் விளையாட்டுத்தனமோ குறும்போ மருந்துக்கும் இல்லை. நிஜமாகவே புரியாமல்தான் கேட்கிறான் என்பது தெரிய, இதைக் கூடச் சொல்லிக்கொடுக்காமல் இவன் வீட்டில் இவனை எப்படி வளர்த்தார்கள் என்று கோபம் வந்தது அவளுக்கு.

“பெரியவர்களின் சம்மதத்துடன் திருமணம் நடந்தபிறகுதான் நாம் இப்படி இருக்கவேண்டும். அதுவரை இது தப்பே..!” என்றாள் அவள் கொஞ்சம் கடுப்பேறிய குரலில்.

“ஒரு விஷயத்தை திரும்பத் திரும்பப் பேசுவது எனக்குப் பிடிப்பதில்லை லட்சனா!” என்று அழுத்திச் சொன்னவன், அவளைப் பார்த்தே தொடர்ந்தான்.

“திருமணம் வேண்டாம் என்றோ அல்லது பெரியவர்களின் சம்மதம் வேண்டாம் என்றோ நான் சொல்லவில்லை. உன் வீட்டாரோடு பேசவா என்றால் அதற்கும் வேண்டாம் என்றது நீதான்! ஆக, திருமணத்தை இப்போதைக்கு மறுப்பவள் நீதான். நானல்ல! ” என்றவனின் குரலில் என்ன இருந்தது? சலிப்பா? கோபமா? அல்லது இரண்டுமா…

“இப்படி எல்லாவற்றையும் மறுத்துவிட்டு, அழகாய் மனத்தைக் கவரும் உன்னைத் தொடவும் வேண்டாம் என்றால், என்னால் முடியாது!” என்றான் திட்டவட்டமாக.

“செய்வது தவறென்று தெரிந்தால் நிச்சயம் மாற்றிக்கொள்வேன். ஆனால் என் வருங்கால மனைவியை அணைப்பதும் முத்தமிடுவதும் எனக்குத் தவறாகப் படவில்லை…” என்றான் தொடர்ந்து அழுத்தமான குரலில்.

அவள் அழகி என்பதாலும் அவனின் வருங்கால மனைவி என்பதாலும் எதுவும் செய்யலாமா? இதைக் கேட்டால் ஆம் என்பான். அதுவும் அவளை வாயடைக்கச் செய்யும் விதமாக ஒரு விளக்கத்தையும் சொல்லி.

அதற்காக அவன் செய்கைகளுக்கு அவள் இடம் கொடுக்க முடியாதே!

“உங்களுக்குத் தப்பாக இல்லாமல் இருக்கலாம். ஆனால் எனக்கு இது பிடிக்கவில்லை. அதனால் இப்படிச் செய்யாதீர்கள்.” என்றாள் பிடிவாதக் குரலில்.

“உனக்குப் பிடிக்கவில்லை என்பதை நம்புவதற்கு இல்லை. உன்னுடைய ஒத்துழைப்பும் இருந்தது..:” என்றான் அவன் வெட்ட வெளிச்சமாக. அவளுக்கோ முகம் கன்றிச் சிவந்தது.

“நானொன்றும் பொம்மையில்லை! உணர்வுகள் உள்ள ஒரு சாதாரணப் பெண்தான்.. ஆனால்.. நீங்கள் நெருங்காமல் இருந்தால் போதும்…” என்றாள் குன்றிவிட்ட குரலில்.

“உன்னைப்போல நானும் உணர்வுகள் உள்ள சாதாரண மனிதன்தான். எனக்கு முத்தமிடத் தோன்றினால், வேறு யாரையுமா முத்தமிட முடியும்? உன்னைத்தானே முத்தமிட முடியும்! அதனால் என்னால் இதைத் தவிர்க்க முடியாது!” என்றான் அவனும் உறுதியான குரலில்.

பதில் சொல்ல முடியாமல் கலங்கிய விழிகளோடு அவள் அவனைப் பார்க்க, “இப்போது எதற்கு இந்த அழுகை..?” என்று பொறுமையிழந்த குரலில் கேட்டான் அவன்.

“மிரட்டுகிறீர்களா..?” குரலடைக்க அவள் கேட்க,

“மிரட்டுகிறேனா…?” என்று, அவன் அதையே திரும்பக் கேட்டான்.

“நான்.. நான் சம்மதிக்காவிட்டால் வேறு யாரிடமும் போவேன் என்று..” அதற்கு மேல் பேசமுடியாமல் அவள் திக்க, என்ன சொல்கிறாள் என்பதாக புருவங்கள் சுருங்க அவளைப் பார்த்தவனுக்கு, அவள் சொன்னது புரிய முகம் இறுகியது.

“எதைச் சொல்ல நினைத்தாலும் அதை நேரடியாகச் சொல்வதுதான் என் இயல்பு. நீ சொல்வது போல் மிரட்டுவது, மறைமுகமாகப் பேசுவது இதெல்லாம் எனக்கு வராத விஷயங்கள்! இத்தனை நாள் பழக்கத்தில் இதைக்கூட நீ புரிந்துகொள்ளவில்லையா?” என்று கேட்டவனின் விழிகள் இப்போது சாலையை வெறித்தது.

கைகள் இரண்டும் நகராத காரின் ஸ்டேரிங்கைப் பிடித்திருக்க, அவன் முகமோ கல்லாக இறுகியிருந்தது. மூச்சடைத்தது போலும், கார்க்கதவின் ஜன்னலை இறக்கிவிட்டு முகத்தை காற்றுப் படும்விதமாகத் திருப்பிக்கொண்டான்.

அது அவளைப் பாதித்தது. அப்படி என்ன தவறாகச் சொன்னோம் என்று யோசித்தவளுக்கு ஒன்றுமே பிடிபடவில்லை. ஆனாலும் அவன் முக இறுக்கத்தை அவளால் தாங்க முடியவில்லை.

இதற்கு அவன் என்ன வேண்டுமானாலும் செய்துகொள்ளட்டும் என்று பேசாமல் இருந்திருக்கலாமோ என்று கூடத் தோன்றியது. அவளே அவனுக்குத்தான். அவன் இல்லையென்றால் அவளும் இல்லை. அவளுக்கு வேறு எதுவும் தேவையும் இல்லை. அப்படி இருந்தும் ஏன் இப்படிச் சொன்னோம் என்றிருந்தது இப்போது.

எதையாவது சொல்லி அவனைச் சமாதானப்படுத்துவோம் என்று நினைத்தபடி அவன் புறமாக அவள் திரும்ப, “உன்னிடமிருந்து விலகியிருக்க முடிந்தவரை முயற்சிக்கிறேன்…” என்றான் அவன் இறுக்கமான குரலில்.

“சூர்யா.. அது.. நான்…”

“நாம் இதைப்பற்றி இதற்குமேல் பேசவேண்டாம்…!” என்றான் அவன் முடிவாக.

சுருக்கென்று தைத்தது அவளுக்கு. விலகியிருக்கச் சொன்னது அவள்தான்! ஆனால், அவன் விலகலை வார்த்தைகளில் கூட ஏற்கமுடியாமல் நின்றபோதும் அவள்தான்!

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
Best Wordpress Adblock Detecting Plugin | CHP Adblock