அத்தியாயம் 2 – 1
அது ஒரு தனியார் கல்லூரி. ஆயிரத்தி எண்ணூறாம் ஆண்டுகளின் முன்பகுதியில் அமெரிக்க மிஷன் ஒன்றினால் நிறுவப்பட்டு, படிப்படியாக வளர்ச்சி அடைந்து இன்றைக்கு மிகுந்த சிறப்புடன் இயங்கிக்கொண்டிருந்தது. அங்கேதான் தன்னுடைய இருபத்தியைந்தாவது வயதில் ஆசிரியராகப் பதவியேற்று, உப அதிபராக வளர்ச்சி கண்டு அதிபரானவர், தனபாலசிங்கம்.
அதிபராகப் பதவியேற்றோமா, சம்பளத்தை வாங்கினோமா, பதவிக்கான செல்வாக்கையும் வசதிகளையும் அனுபவித்தோமா என்று வாழாமல் அந்தக் கல்லூரிக்காக நிறைய உழைத்தவர்.
அமெரிக்க மிஷன் மூலம் நிர்வாகச் சபைக்கு வழங்கப்பட்டு, அதன்மூலம் பாடசாலைக்கான செலவுகள் நடந்தாலும், அந்தப் பாடசாலையை வளர்ச்சிப்படியில் நகர்த்திச் சென்றதில் மிகப்பெரிய பங்கு அவருக்கே உண்டு.
தனிப்பட்ட முறையில் வெளிநாடுகளில் வசிக்கும் தன் பழைய மாணவிகளைத் திரட்டி, அவர்கள் மூலம் பணம் சேர்த்து, விஞ்ஞான ஆய்வுகூடம், சகல வசதிகளுடன் கூடிய நூலகம், கணணிக்கூடம் என்று பலவற்றை அமைத்தவர்.
யாழ் சமூகம் கல்வியில் காட்டுகின்ற மிகுந்த அக்கறையை விளையாட்டில் பெரிதாகக் காட்ட விரும்புவதில்லை. அதனாலேயே திறமைகள் மிகுந்த மாணவ மாணவிகள் கவனிக்கப்படாமல் மழுங்கடிக்கப்படுவதைக் கவனித்து, அதை மாற்ற எண்ணினார். கடந்த இரண்டு வருடங்களாக அருகிலிருக்கும் பெரும் பரப்பளவிலான காணியில் உள்ளக வெளியக விளையாட்டு அரங்கு ஒன்றினை அவரே முன்னின்று அமைக்கத் தொடங்கியிருந்தார்.
இப்படியான தன்னலமற்ற அவரின் சேவைகளினால் அவுஸ்திரேலியா வாழ் பழைய மாணவிகள் போனவருடம் அவரை அவுஸ்திரேலியாவுக்கு அழைப்பித்துப் பெருவிழா ஒன்றினை எடுத்து, கௌரவித்து அனுப்பியிருந்தனர்.
அப்படியான ஒரு மனிதரை அந்தக் கல்லூரிக்கு வெளியில் நிறுத்துவார்களா?
உப அதிபருக்கு, அவளின் அப்பாவைப் போலவே நீண்ட வருடங்களாகப் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு எல்லாம் அழைத்து இதைப் பற்றி ஏதும் தெரியுமா என்று விசாரித்தாள். யாருக்கும் எந்த அறிவித்தலும் வந்திருக்கவில்லை என்றதும் இன்னும் கோபம் பெருகியது.
அவள் கல்லூரிக்கு வந்து சேர்ந்தபோது, அதிபர் மாணவியரோடு ஆசிரியர்களும் அங்கேயே நின்றிருந்தனர். பிள்ளைகளை இறக்கிவிட வந்த பெற்றோர், விடுப்புப் பார்ப்போர் என்று கூட்டம் சேரத் தொடங்கிற்று.
இவளைக் கண்டதும் மாணவியர் கலவரமும் குழப்பமுமாக ஓடிவந்தனர்.
“என்ன மிஸ் நடக்குது? ஒண்டும் விளங்கேல்ல!”
அவர்களைப் போன்றுதான் அவளும் காரண காரியம் அறியாமல் நிற்கிறாள்.
எனவே, “சத்தம் போடாம எல்லாரும் உங்க உங்கட வகுப்புகளுக்குப் போங்கோ!” என்றாள் அழுத்தமாக.
“சொறி மிஸ். எங்கட பிரின்சிப்பல் வராம நாங்க போகமாட்டோம்!” என்று பணிவாகவே மறுத்தனர் பிள்ளைகள்.
வாதாட நேரமில்லாமல் அங்கு நின்றிருந்த மாணவத் தலைவியை அழைத்து, “எந்தச் சத்தமும் இல்லாமல் ஒரு கரையா(ஓரமா) நில்லுங்கோ. போக்குவரத்துக்கு எந்த இடைஞ்சலும் இருக்கக் கூடாது!” என்று பணித்துவிட்டுத் தகப்பனிடம் விரைந்தாள்.
அவளின் சொல்லைக் கேட்டு மாணவியர் வேகமாகத் தங்களை ஒழுங்குபடுத்திக்கொண்டு நின்றாலும், அவர்களின் பார்வை முழுக்க முழுக்க நடக்கும் சம்பவங்களையே கூர்மையுடன் கண்காணித்துக்கொண்டிருந்தது.
“என்ன நடக்குது எண்டு ஒண்டும் விளங்கேல்ல அம்மாச்சி!” மகளைக் கண்டதும் கொஞ்சம் தெம்பு வந்தவராய்ச் சொன்னார் தனபாலசிங்கம்.
“பொறுங்கோ அப்பா, என்ன எண்டு பாப்பம்.” என்றுவிட்டுக் காவலாளியை நோக்கி, “கேட்டை திற குமரன்!” என்று உத்தரவிட்டாள்.
அவனுடைய விழிகள் அச்சத்துடன் அங்கே சற்றுத் தள்ளி நின்றவர்களிடம் சென்றது. அவனைத் தொடர்ந்து இவளும் நோக்க, “தாராளமா திறக்கலாம். புது அதிபர் வந்து பள்ளிக்கூடத்தையும் தொடங்கிவைப்பார்.” என்றான் அதில் நின்ற ஒருவன்.
‘இவன் யார் புதிதாக?’ என்று கேள்வி மனதினுள் எழுந்தாலும் அவனுடைய பேச்சைப் புறம் தள்ளி, அவனுடன் நின்றிருந்த அந்தக் கல்லூரியின் நிர்வாகச் சபைத் தலைவர் திரு இராமச்சந்திரனை நோக்கிச் சென்றாள் பிரமிளா.
“இதுதான் நீங்க நிர்வாக சபையைத் தலைமையேற்று நடத்திற லட்சணமா? எந்த அறிவிப்பும் இல்லாம எந்த அடிப்படையில அப்… அதிபரை நிப்பாட்டி இருக்கிறீங்க? இருவது வருசத்துக்கு மேல அதிபரா இருந்து சேவை செய்தவருக்குக் கிடைச்ச பாராட்டு இதுதானா?” என்று சீறினாள்.
இந்தக் கேள்விகள் எல்லாம் வரும் என்று அவருக்கு ஏற்கனவே தெரியும். ஆனாலும் மனச்சாட்சி ஏதோ ஒரு மூலையிலிருந்து குத்தியதில் உடனேயே பதில் சொல்லிவிட முடியாமல் தடுமாறினார்.
“பதில் சொல்லுங்க இராமச்சந்திரன் சேர். அமைதியா நிண்டா நீங்க செய்தது நியாயம் ஆகிடாது!”
அவள் விடமாட்டாள் என்று புரிந்துபோக, அங்கே ஆசிரியர்களுடன் நின்றிருந்த தனபாலசிங்கத்தை நோக்கி, “சேர், சின்ன விசயத்தைப் பெருசாக்க வேண்டாம். நிர்வாக சபை ஏற்கனவே அறிவிச்சபடிதான் உங்களுக்கு ஓய்வு தரப்பட்டிருக்கு. அதால உங்களுக்குக் கேள்விகள் இருந்தா அடுத்த நிர்வாக சபைக் கூட்டத்தில வந்து கேளுங்கோ. இப்ப பள்ளிக்கூடத்த ஆரம்பிக்கோணும். புது அதிபர் வரோணும். தயவுசெய்து எங்களை எங்கட வேலைகளைப் பாக்க விடுங்கோ!” என்றார் நல்ல மனிதர் போன்று.
தனபாலசிங்கத்துக்கு மிகுந்த வருத்தமாயிற்று. “எங்களுக்கும் எந்தப் பிரச்சனையும் செய்ய விருப்பம் இல்லை இராமச்சந்திரன். எனக்கு ஓய்வு கிடைக்கிறது பற்றியும் கவலை இல்லை. ஆனா, அந்த ஓய்வை நீங்க தருகிற விதம் முறையில்லையே. முறைப்படியே எனக்கு இன்னும் ஆறு மாதம் சேவைக்காலம் இருக்கு. அப்படியிருக்கச் சொல்லாம கொள்ளாம இப்பவே வேலையைப் பறிச்சது நியாயமில்லையே?” பக்குவமான மனிதர் பக்குவமாகவே வினவினார்.
“இதை நீங்க நிர்வாக சபை கூட்டத்திலதான் வந்து கேக்கோணும் சேர். என்னட்ட இல்ல. அதால தயவுசெய்து இப்ப போங்கோ. நீங்க நிக்கிறதப் பாத்துத்தான் பிள்ளைகளும் வெளில நிக்கினம். சனம் கூடுது. இது எங்கட பள்ளிக்கூடத்துக்கே மரியாதை இல்லை.” என்னவோ பள்ளிக்கூடத்தின் மரியாதையை அவர்தான் வாங்குவது போன்று இராமச்சந்திரன் உருவகப்படுத்தியத்தைக் கேட்டுத் தனபாலசிங்கத்துக்கு வேதனை மிகுந்து போயிற்று.
இதற்குமேல் என்ன கதைப்பது? அவர்களைப் போல மனச்சாட்சி அற்று நடப்பதோ, முறையற்று நடப்பதோ அவரால் இயலாத காரியம்.
எனவே, “நான் போறனம்மா. வீண் சச்சரவுகள் வேண்டாம். பள்ளிக்கூடம் ஆரம்பிக்கட்டும்.” என்றார் பிரமிளாவிடம்.
அதைக் கேட்டு அதிர்ந்து போயினர் அங்கு நின்ற ஆசிரியர்கள்.
“அது எப்பிடி சேர்? எங்கட கேள்விகளுக்கு நியாயமான பதில் கிடைக்காமல் எப்பிடி அப்பிடியே விடுறது? அப்ப எங்களுக்கும் இஞ்ச வேலை நிரந்தரம் இல்லை. எப்பவும் ஆரையும் நிர்வாகம் தூக்கும். ஆரும் கேள்வி கேக்கேலாது எண்டா என்ன அநியாயம் இது?” அதுவரை நேரமும் நடப்பதை உள்வாங்க முனைந்துகொண்டிருந்த ஆசிரியர்கள் கேள்விகளைக் கோபமாய் எழுப்ப ஆரம்பித்தனர்.
பிரச்சனை பெருக்கப்போவதை உணர்ந்து இடையில் புகுந்தார் இராமச்சந்திரன். “அதிபரே போறன் எண்டு சொல்லிட்டார். வேற ஆரும் இதைப் பற்றிக் கதைக்க வேண்டாம். ஆசிரியர்கள் வழமைபோலத் தங்கட பணிகளைப் பார்க்கலாம்.” உத்தரவு போன்று அழுத்திச் சொன்னவரை நிதானமாக ஏறிட்டாள் பிரமிளா.