சற்றுமுன் பிரமிளாவிடம் பளார் என்று அறை வாங்கிய அவன் மோகனன். கோபம் தலைக்கேறி முறுக்கிக்கொண்டு நின்றவனை இராமச்சந்திரன்தான் இழுத்துக்கொண்டு வந்து காரில் ஏற்றி, காரோட்டியிடம் கண்ணைக் காட்டிவிட அவனும் வேகமாகச் செயற்பட்டிருந்தான்.
மோகனனின் முகம் செந்தணலைப் போன்று கொதித்துக்கொண்டிருந்தது. மனத்தில் அவமானத் தீ பற்றி எரிந்தது! அத்தனை பெண் பிள்ளைகளுக்கு மத்தியிலும் நடந்தது எவ்வளவு பெரிய கேவலம்?
அவனை ஆர்வமாகப் பார்த்த பெண்களை ஒரு பெட்டையைப் பார்ப்பது போல் பார்க்க வைத்துவிட்டாளே. அவளின் கழுத்தை நெரிக்க வேண்டும் என்று எழுந்த வெறியில் கையை ஓங்கிக் கார் சீட்டிலேயே குத்தினான். வாகன ஓட்டி அதிர்ந்து திரும்பிப் பார்த்துவிட்டு அமைதியாகக் காரைச் செலுத்துவதில் முனைந்தான்.
தன்னைக் கேவலப்படுத்தியவளை என்ன செய்தால் தகும்? என்ன செய்தாலும் தகும்! நடந்த அவமானத்தை நினைக்க நினைக்க மனம் அடங்காமல் இன்னுமின்னும் எண்ணை ஊற்றிய அடுப்பாகப் பற்றி எரிந்தது!
வாழ்க்கையில் அவன் பட்டிராத அவமானம்! தலைகுனிவு! கேவலம்! எல்லாவற்றையும் ஒரே நாளில் தந்துவிட்டாள்! அறை வாங்கிய அந்தக் கணத்தை மறந்துவிட முடியாமல் வெந்துகொண்டிருந்தான்.
அவமானக் கொதிப்புடன் வீடு சென்றவனை இறுகிய முகத்தில் கோபம் துலங்க எதிர்கொண்டார் ராஜநாயகம்.
அவனுடைய தந்தை! கல்லூரி நிர்வாகசபையின் புதிய தலைவர்! அரை நூற்றாண்டுகளாக இலங்கை முழுக்கப் பரவிப்படர்ந்து நிற்கும் கம்பீரம் மிகுந்த செல்லமுத்து நகைமாடத்தின் ஒரே உரிமையாளர்.
அவரின் முன்னே கன்றிச் சிவந்துவிட்ட முகத்துடன் தலை குனிந்தான் மோகனன்!
“ஒரு காரியத்தக் கச்சிதமா செய்து முடிக்கத் தெரியாது! ஆனா, உடம்ப மட்டும் நல்லா வளத்து வச்சிருக்கிறாய்! நீயெல்லாம் பொம்பிளைகளிட்ட அடி வாங்க மட்டும்தான் லாயக்கு!” அடக்கப்பட்ட குரலில் உறுமிவிட்டுத் தன் காரில் ஏறிப் பறந்திருந்தார் ராஜநாயகம்.
அப்படியே அவனுடைய எண்சாண் உடம்பும் கூனிக்குறுகிப் போயிற்று! அவமானத்தில் சிறுத்துப்போய் நின்றவனின் கைப்பேசி அலறியது. எடுத்துப்பார்த்தால் தமையன்.
அழைப்பை ஏற்றுக் காதில் வைத்த நொடியில், “வெக்கமா இல்ல உனக்கு? போயும் போயும் ஒரு பொம்பிளைட்ட அடி வாங்கிக்கொண்டு வந்திருக்கிறாய். இதுக்குத்தான் நான் போறன், நான் பாக்கிறன் எண்டு துடிச்சியா?” அந்தப் புறத்திலிருந்து சீறினான் அவன்.
“சும்மா சும்மா அடி வாங்கிட்டன் எண்டு ஆளாளுக்குக் கத்தாதீங்க அண்ணா! அவளுக்குத் திருப்பி அறஞ்சிருப்பன். அதுக்கிடையில இராமச்சந்திரன் அங்கிள் இழுத்துக்கொண்டு வந்து கார்ல ஏத்தி அனுப்பி வச்சிட்டார். ஆனா அண்ணா, அவளுக்கு ஏதாவது செய்யோணும். செய்தாத்தான் என்ர ஆத்திரம் அடங்கும்!” குமுறினான் மோகனன்.
“சொல்லாத செய்! என்னவாவது செய்! ஒரு பொம்பிளை அறையிற அளவுக்கு நீ விட்டிருக்கக் கூடாது! எங்கள்ல கைவச்சா என்ன நடக்கும் எண்டு அந்த நிமிசமே காட்டியிருக்கோணும்! எவ்வளவு தைரியம் அவளுக்கு! இந்தக் கௌசிகன்ர தம்பில கை வைக்கிறாளா? வந்து வைக்கிறன் அவளுக்கு வேட்டு!”
அப்படித் தமையன் சொன்ன பிறகுதான் அவனுடைய ஆத்திரம் கொஞ்சமேனும் கட்டுக்குள் வந்தது!
அப்போது அங்கே வந்த செல்வராணி, “அண்ணாவா தம்பி? என்னட்ட ஒருக்கா தா, நானும் கதைக்கோணும்.” என்று கைப்பேசியை வாங்கிப் பெரிய மகனிடம் பேசத் தொடங்கினார்.
“தம்பி, இண்டைக்குக் கோயில்ல ஒரு பிள்ளையைக் கண்டனான் அப்பு. அவ்வளவு வடிவு, அதைவிட உன்ன மாதிரியே நிமிர்வு, கம்பீரம் எல்லாம் இருக்கு. உனக்கு நல்ல சோடிப்பொருத்தம். நீ ஓம் எண்டு சொன்னா அப்பாவும் நானுமா போய்ச் சம்மந்தம் பேசிப்பாக்கலாம் தம்பி. என்னப்பு, பொம்பிளை கேக்கட்டுமா?” என்று ஆவலே வடிவாக ஆர்வத்துடன் கெஞ்சலாகக் கேட்டார்.
சுறுசுறு என்று ஏறியது அவனுக்கு. எவ்வளவு பெரிய பிரச்சனை நடந்துகொண்டிருக்கிறது. அவரானால் அவனுக்குப் பெண் பார்க்கிறாராம்.
“இப்ப இது உங்களுக்கு முக்கியம்! எந்த நேரம் என்ன கதைக்கிறது எண்டு தெரியாம… பேசாம ஃபோன மோகனிட்ட குடுங்கம்மா!” ஒற்றை அதட்டலில் அவரை அடக்கியிருந்தான் கௌசிகன்.
அப்படியே முகம் கூம்பிப்போய்விட, “அண்ணா உன்னோடதான் என்னவோ கதைக்கப்போறானாம்.” என்று சின்ன மகனிடம் கைப்பேசியை நீட்டிவிட்டு நடந்தார் செல்வராணி.
இதுதான் அவரை வருத்துவது. ஒரு நிமிடம் ஒதுக்கி அவரின் பேச்சைக் கேட்க அந்த வீட்டில் யாருக்கும் நேரமில்லை. அவருக்கு என்ன தேவை, அவரின் விருப்பம் என்ன, அவரின் எதிர்பார்ப்பு என்ன என்று எதைப் பற்றியும் அந்த வீட்டின் ஆண்கள் அக்கறை கொள்வதே இல்லை.
“இனி எந்தச் சமாதானத்துக்கும் இடமில்லை. அவரை வெளியேற்றினது வெளியேற்றினதுதான்! புது அதிபரோட மட்டும்தான் பள்ளிக்கூடம் நடக்குமாம் எண்டு நான் சொன்னேனாம் எண்டு இராமச்சந்திரனிட்டச் சொல்லிவிடு!” என்று அவனுக்கும் கட்டளை இட்டுவிட்டு அழைப்பைத் துண்டித்தான் கௌசிகன்.
மனம் துள்ளியது மோகனனுக்கு. இனி அந்தத் திமிர் பிடித்தவளை உண்டில்லை என்று ஆக்காமல் அண்ணா விடமாட்டார்! அது உறுதி. ஆனால், அவர் வருவதற்குள் அவனும் என்னவாவது செய்ய வேண்டும்! அவளை விடக் கூடாது!
கௌசிகனின் உத்தரவு உடனேயே இராமச்சந்திரனுக்குப் பறந்தது! அங்கே ராஜநாயகமும் அவரை விட்டுவைக்கவில்லை. சொன்ன விசயத்தைச் செய்து முடிக்கத் துப்பில்லாத நீயெல்லாம் நிர்வாகியாக என்ன கிழித்தாய் என்று கிழித்துத் தொங்கவிட்டுக்கொண்டிருந்தார்.
அவர் கொடுத்த குடைச்சலில் புது அதிபர் சகிதம் அவர்களுக்கு ஆதரவு தெரிவித்த ஒருசில ஆசிரியர்கள் கொண்ட குழு ஒன்று பாடசாலையை நோக்கிப் படையெடுத்தது.