“பாப்ஸ்க்குப் பொறாமை யாம்ஸ். நீங்க விடுங்க..” என்று சிரிப்போடு சொல்லிவிட்டு எழுந்து தன் அறைக்குப் போனான் டெனிஷ்.
கணவனுக்கு ஒரு வெட்டும் பார்வையைக் கொடுத்துவிட்டு, “இண்டைக்கு ஸ்விம் கிளாஸ் முடிஞ்சதும் அப்படியே கடைக்குப் போயிட்டு வருவமா? புட்பால் ஷூ காலுக்கு நோகுது எண்டு சொன்னியே கண்ணா..” என்றபடி அவனுக்கு வால் பிடித்துக்கொண்டு உள்ளே சென்றவளை எண்ணி மனம் கனிந்தது விக்ரமுக்கு.
டெனிஷுக்குச் சகலதுமாய்த் தான் மாறிவிடவேண்டும் என்று அவள் பாசத்தோடு பாடுபடுவதை அவனால் உணர முடிந்தது.
இதுநாள் வரை அவன் தனியாகச் சென்றுவந்த ஸ்விம்மிங் கோர்ஸாக இருக்கட்டும், புட்பால் ட்ரைனிங்காக இருக்கட்டும் எல்லாவற்றுக்கும் சின்னவளையும் கூட்டிக்கொண்டு போயிருந்து அவன் விளையாடுவதைக் கூடவே இருந்து பார்த்து, “வாவ் கண்ணா! சூப்பரா விளையாடுற.” என்று ஊக்கப்படுத்தி, களைத்துப்போகும் வேளைகளில் அவனுக்குக் குடிக்க நீர் கொடுத்து, கொஞ்சமாகக் கொறிக்க எதையாவது கொடுத்து, விளையாட்டு முடிந்ததும் கையோடு கூட்டிக்கொண்டு வந்து என்று அவனோடேயே சுற்றிக்கொண்டிருந்தாள்.
“அவனைத் தானா எல்லாத்தையும் செய்ய விடு யாமினி. சுயமா வாழ பழகவேணும்.” என்று இவனும் சொல்லித்தான் பார்த்தான்.
“எல்லாத்தையும் அவனே செய்வான் எண்டா அம்மா அப்பா எண்டு என்னத்துக்கு நாங்க இருக்க? சுயமா அவன் நிக்க இன்னும் வயசிருக்கு. அப்ப நிப்பான்!” என்றுவிட்டாள் அவள்.
ஆரம்பத்தில் குழப்பமாகப் பார்த்தாலும் பிறகு பிறகு டெனிஷும் அவளின் இந்தக் கவனிப்பை மெல்ல மெல்ல எதிர்பார்ப்பதை உணர்ந்தவன் அதற்குமேல் ஒன்றுமே சொல்லவில்லை. தனக்கு எப்படித் தாரமாய் அவளின் அனுசரணையும் பாசமும் மனதுக்குச் சுகம் சேர்க்கிறதோ அப்படித்தானே அவனுக்கும் தாயாக அவள் காட்டும் பாசமும் கவனிப்பும் வேண்டுமாக இருக்கும் என்று உணர்ந்துகொண்டது வேறு வலுச் சேர்த்தது.
அவன் வேலைக்குக் கிளம்பியதும் சொன்னது போலவே மூவருமாக ஸ்விம் கிளாசுக்கு போய்விட்டு வந்தார்கள். அப்படியே அவனுக்குப் புது ஷூவையும் வாங்கிக் கொண்டார்கள். அவளுக்கு மொழிபெயர்ப்பாளர் வேலையை டெனிஷ் பார்த்தான்.
வீட்டுக்கு வந்து சந்தனாவைக் குளிப்பாட்டி, இருவருக்கும் உணவு கொடுத்து, நாளைக்குப் பள்ளிக்கு தேவையானதுகளை எடுத்துவைக்க நேரம் ஏழரையைத் தொட்டது.
“என்ன தம்பி இன்னும் அப்பாவ காணேல்ல?” என்று இவள் கேட்க, அவன் சிரித்தான்.
“என்னடா சிரிப்பு?” அவள் முகத்திலும் புன்னகை மலரக் கேட்டாள்.
“என்னைக் காணேல்ல எண்டு அப்பாட்ட கேக்கிறீங்க, அப்பாவ காணேல்ல எண்டு என்னட்ட கேக்கிறீங்க. இதுவே வேலையா போச்சு யாம்ஸ் உங்களுக்கு” என்று அவன் சிரித்துக்கொண்டு சொல்ல,
“டேய் கண்ணா! உனக்கும் உன்ர அப்பா மாதிரியே வாய்!” என்று சொன்னாலும், அவன் சொன்னதிலிருந்த உண்மையை உணர்ந்து தானும் சிரித்தாள் யாமினி.
சற்று நேரத்திலேயே விக்ரமும் வந்துவிட, மிகவும் சந்தோசமாகக் கழிந்தது அவர்களின் அதன் பிறகான நேரம்.
நேரம் எட்டரையை நெருங்கவும் பிள்ளைகளைப் படுக்கக் கூட்டிக்கொண்டு போனாள்.
முதலில் பற்களைத் தீட்டி இரவுடை மாற்றி டெனிஷை படுக்கவிட்டவள் அவனுக்குப் பெட்ஷீட் போர்த்தி, “குட்நைட் கண்ணா! இரவில என்ன எண்டாலும் அம்மாவ கூப்பிடு என்ன..” என்றாள் கனிவாக. சந்தனாவும் தமையனுக்கு மேலே ஏறியமர்ந்து அவன் நெற்றியில் முத்தமிட்டுக் குட்நைட் சொல்லிவிட்டு வந்தாள்.
அவளையும் தங்கள் கட்டிலில் கிடத்தி தட்டிக்கொடுத்தாள் யாமினி. அவளுக்காக டெனிஷ் ஒரு அறையினை உருவாக்கி இருந்தாலும், அதில் பகல் பொழுதுகள் மட்டுமே அவளுக்குக் கழியும். இரவில் உறக்கம் பெற்றவர்களுக்கு நடுவில்தான்!
அவள் உறங்கியதும் மெதுவாக எழுந்து டெனிஷின் அறையை எட்டிப் பார்க்க அவனும் உறங்கியிருந்தான். சமையலறைக்குச் சென்றவள், ஏற்கனவே ஊற்றி வைத்திருந்த கிரீன் டீயை எடுத்துக்கொண்டு விண்டர் கார்டனுக்கு நடந்தாள்.
அவளுக்குத் தெரியும் கடக்கும் ஒவ்வொரு துளிக்கும் அங்கே அவளுக்காகக் காத்திருக்கும் விக்ரமின் முறைப்பு அதிகரிக்கும் என்று. சிரிப்புத்தான் வந்தது. இரவு பிள்ளைகள் உறங்கிய பிறகான அவளின் நேரமும் அவளும் அவனுக்குத்தான் சொந்தமாம். அந்த நேரத்தை இவள் வேறு எதற்காவது பயன்படுத்திவிட்டால் முறைக்கத் தொடங்கிவிடுவான்.
அந்த வீட்டிலேயே அவர்களுக்கு மிகவுமே பிடித்த இடமென்றால் அந்த விண்டர் கார்டன்தான்!
யாஸ்மின் அவனைவிட்டுப் பிரிந்தபிறகு, அந்த வீடு முழுவதுமே அவளின் நினைவை மறக்கவிடாமல் செய்ததால், அவனாகக் கட்டிக்கொண்டதுதான் அது.
கீழே அவனது காரின் கராஜுக்கு மேலே இருந்த இடத்தில் முற்றிலுமாகக் கண்ணாடியால் அதை உருவாக்கி இருந்தான். மேல் கூரை கூடக் கண்ணாடிதான். நிலத்துக்கு ஹீட்டர் போட்டிருந்தான். வெயில் காலத்தில் மின்னும் சூரியன் ஓரழகு எனில், குளிர் காலத்தில் மேலே கொட்டிக்கிடக்கும் ஸ்னோவின் வெண்மை ஓரழகு என்பான். லைட் கூட இல்லை. கண்ணாடிகளின் ஊடாக ஊடுருவும் இயற்கையின் ஒளி மட்டுமே தங்கி நிற்கும்! அரியவகைக் குரோட்டன்களை வேறு வாங்கி வைத்திருந்தான். ஒற்றைச் சோபா மட்டுமே!
யாமினிக்கும் பார்த்ததும் அந்த இடம் பிடித்துப்போனது. இன்னொரு சோபாவையும் அங்கே போடலாம் என்று சொல்ல அவன் மறுத்துவிட்டான். அந்த விண்டர் கார்டனில் அவளுக்கான இருக்கை அவன் மடி மட்டும்தானாம்! முதலில் கூச்சமாக இருந்தாலும் இப்போதெல்லாம் அவளுக்கும் அங்கே வந்தால் அவன் மடி மட்டும்தான் வேண்டும்!
அந்த மடியின் சுகத்தை மனம் தேட, கண்ணாடி கெட்டிலில் கிரீன் டீயும், இரண்டு கப்புக்களும் கொண்ட தட்டை பிடித்தபடி, கண்களில் சிரிப்பு மின்ன அவனை நோக்கி வந்தவளை பொய்யான முறைப்போடு பார்த்திருந்தான் விக்ரம்.
ஆகாய நீலத்தில் வெள்ளை பொட்டுக்கள் வைத்தது போன்ற முழுநீள நைட்டியில், நடு உச்சியெடுத்து பின்னிய ஒற்றைப் பின்னல் அசைந்தாட, நெற்றியில் இட்டிருந்த குங்குமம் அழகுசேர்க்க, தட்டில் ஒரு பார்வையும் அவனில் ஒரு பார்வையுமாக வந்தவளை விழியகற்றாது பார்த்தான் விக்ரம்.
அங்கிருந்த குட்டி மேசையில் தட்டை அவள் வைத்துவிட்டு, கண்ணாடிக் கதவை சாத்தியதும் கைகளை விரித்தான்.
அவளும் ஆசையோடு ஓடிவந்து அவன் மடியில் அமர்ந்து, அந்தக் கைகளுக்குள் சரண் புகுந்துவிட, நேரம் கடத்தியதற்கான தன் கோபத்தைக் காட்டுபவன் போன்று அவளை இறுக்கி அணைத்தான்.
‘என்ர செல்லம் தானே..’ என்பது போன்று தலையைச் சரித்துக் கெஞ்சலாகக் கண்களால் கொஞ்சியவள், அவனது தாடையில் தன் இதழ்களைப் பதித்து மீட்டாள்.
புருவங்கள் இரண்டையும் உச்சிமேட்டுக்கே உயர்த்தித் தன் வியப்பை காட்டி கண்ணால் சிரித்தான் அவன்! அந்தப் பொல்லாத விழிகள் அன்று மதியம் அவன் பதித்த இதழ் முத்தத்தை நினைவூட்ட எண்ணி அவளின் இதழ்களுக்கு ஓட, இவள் வெட்கிச் சிவந்தாள்.
ஈரலிப்பான தேனூறும் அந்த இதழ்கள் அதன் சுவையை ருசித்திடத் தூண்ட, பார்வை மாற அவள் முகம் நோக்கிக் குனிந்தான் அவன். அதை உணர்ந்தவள் நாணி சட்டென்று தன் முகத்தை அவன் கழுத்து வளைவில் மறைத்துக்கொள்ள, தன்னவளை ஆசையோடு அணைத்துக்கொண்டான் விக்ரம்!
இது போதும்! இந்தச் சுகம் போதும்!
நெஞ்சமெங்கும் இதம் பரவக் கண்களை மூடிக்கொண்டான்! யாமினியும் அவன் தோளில் இந்த உலகையே மறந்து சாய்ந்திருந்தாள்.
தாம்பத்யம் என்பது அழகோவியம்தான்! அதைக் காட்டிலும் மிக மிக அழகான தருணங்கள் இல்லறத்துக்குள் எத்தனையோ உண்டு! அவை அத்தனையையும் அவர்கள் இருவருமே நேசம் பொங்க அனுபவித்துக் கொண்டிருந்தனர்!
அவன் மடியில் அமர்ந்து தோளில் சாய்ந்து கிடப்பது பரமசுகம் அவளுக்கு. அவளை மடியில் தாங்கி அணைத்தபடி சோபாவில் சாய்ந்திருப்பது பேரானந்தம் அவனுக்கு! அந்த அறைக்குள் ஒருவரின் மூச்சுக்காற்றே மற்றவரின் சுவாசக் காற்றாகிப்போகும்! அவன் இதயத்துடிப்பு அவளுக்கு இன்னிசையாக, அவளது இதயத்துடிப்பு அவனுக்கு மென்னிசையாகிப்போகும்!
ஏகாந்தமான இரவுப்பொழுது! வானில் நட்சத்திரங்கள் மின்னின. முற்றிலுமான அந்தக் கண்ணாடி அறைக்குள், அவளை அவனும் அவனை அவளும் உள்ளத்தால்.. உள்ளத்தின் மென்மையான உணர்வுகளால் உணர்ந்துகொள்ளும் தனிமை. பெரிதாக எதுவுமே கதைத்துக்கொள்ள மாட்டார்கள். அந்தப் பேச்சு அங்கே அவசியமும் இல்லை. மனதோடு மனமும் இதயத்தோடு இதயமும் இரண்டரக் கலந்தபின்பு பேச்சுக்கென்ன வேலை அங்கே?