அதன்பிறகு எல்லாமே வேகம் தான். அவளின் எந்தக் கதையையும் அவன் செவிமடுக்கவே இல்லை. பத்மாவதியும், “சும்மா இரம்மா!” என்று அவளைத்தான் அதட்டினார்.
வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்று, அவளுக்குப் பிளாஸ்டிக் காலுக்கு அளவு கொடுத்தார்கள். அப்படியே, மின்சாரத்தில் பயன்படுத்தும் சக்கரநாற்காலியும் வாங்கிக்கொண்டான். இனி அவள் கையால் உருட்டத் தேவையில்லை. ஒருமுறை சார்ஜ் போட்டால், குறைந்தது இரண்டு மணித்தியாலங்கள் வரை பயணிக்கலாம்.
“நீங்க வீட்டை போகேல்லையா?” அதுதான் அவன் நினைத்ததுபோலவே எல்லாம் செய்துவிட்டானே என்று கேட்டாள்.
அதைவிட, அவளைப்பற்றி உஷாவுக்கு எல்லாம் தெரியுமா என்றும் தெரியாது. எவ்வளவோ கேட்டும் மூச்சு விடவில்லை அவன். பொல்லாத பிடிவாதக்காரன்
“என்னைத் துரத்திப்போட்டு என்ன செய்யப் போறாய்? சந்தோசமா வாழப்போறியோ?” கனிவோடும் பாசத்தோடும் எல்லாவற்றையும் பார்த்துப் பார்த்துச் செய்கிறவன் இப்படிக் கேட்டால் மட்டும் காய்ந்துவிடுவான்.
“உஷா பாவமெல்லோ நிர்மலன். சின்னப்பிள்ளைகளோட என்னெண்டு தனியா சமாளிப்பா? ஆரனும் மானசியும் ஏங்கப் போறீனம். எனக்கே பாக்கோணும் மாதிரி இருக்கு.”
“அடுத்தச் சம்மருக்கு ஆறுகிழமை லீவுல எல்லாரையும் கூட்டிக்கொண்டு வாறன். இப்ப இப்பிடிப் பார்.” என்று அவர்களின் போட்டோக்களைக் காட்டினான்.
ஆசையாசையாக வாங்கிப் பார்த்தாள்.
அவளுக்கென்று அளவெடுத்துச் செய்யக் கொடுத்த கால் இன்னும் வந்திருக்கவில்லை. ஆனாலும், இப்போதெல்லாம் கண்மணி ஊன்றுகோலின் உதவியோடு வீட்டுக்கு வெளியேயும் வரத்துவங்கி இருந்தாள். அன்றும், மூவருக்குமாகத் தேநீரை ஊற்றிக்கொண்டு, அதனை ஒரு கையிலும் மற்ற கையில் ஒற்றை ஊன்றுகோலோடும் வந்தவள், தடுமாறி விழப்போக, பாய்ந்து பிடிக்கப்போன நிர்மலன், அவனைப்போலவே வேகமாக வந்த காந்தனைக் கண்டதும் அவள் கையிலிருந்த கப்பை மட்டும் பற்றிக்கொண்டான்.
அதற்குள் காந்தன் அவளைப் பற்றி விழாமல் தடுத்திருந்தான். கூச்சமாகப் போயிற்று அவளுக்கு.
“சொறி, ஒரு கைல தேத்தண்ணி கொண்டு வந்தன்.. அதுதான்.” நிர்மலனின் முறைப்பில் அவள் குரல் உள்ளுக்குள் போயிருந்தது.
“இதுக்காக வேலை செய்துகொண்டிருக்கிற உங்களைக் கூப்பிடுறதா?” என்றாள் சமாதானமாக.
“எண்டாலும் கவனமா இருக்கவேணும் கண்மணி!” என்று சொன்னது காந்தன்.
“சரி வாங்கோ, தேத்தண்ணி ஆறமுதல் குடிப்பம்.” என்றவள், நிர்மலன் வாங்கி வந்திருந்த கேக்கையும் கொண்டுவந்து மூவருக்கும் பகிர்ந்தாள்.
முற்றத்தின் ஒரு ஓரமாக ஒற்றை வேம்பு ஒன்று, யாரினதும் உதவி இல்லாமல் ஓங்கி வளர்ந்து நின்றதில், அதற்குக் கீழே பிரம்பிலான ஒரு செட் மேசை நாற்காலிகளை வாங்கிப் போட்டிருந்தான் நிர்மலன். அங்கேதான் அவர்களின் மாலைத் தேநீர் பொழுது கழிந்தது.
அந்த நேரத்தில் தமையனைப் பற்றிக் காந்தனிடம் விசாரித்தாள் கண்மணி. அவனும் கதைக்க யாருமில்லாமல் இருந்தவன் தானே. மலர்ந்த சிரிப்போடு கதை கதையாகச் சொல்லிக்கொண்டிருந்தான். அவர்களுக்குள் தலையிடாமல் கவனித்திருந்தான் நிர்மலன்.
நாட்கள் நகர்ந்தது. அவளுக்கான காலும் பொறுத்தப்பட்டுவிட, ஊன்றுகோலும் இல்லாமல் நடமாடத் துவங்கியிருந்தாள் கண்மணி. போதாக்குறைக்கு, காந்தனும் அவனுமாகச் சேர்ந்து அருகிலேயே ஒரு நீண்ட கொட்டிலை இறக்கி சின்னதாக ஒரு டியூஷன் செண்டர் போல ஒன்றையும் உருவாக்கினார்கள்.
“உனக்குக் கணிதம் நல்லா வருமெல்லோ. ஆங்கிலமும் சேர்த்து சொல்லிக்குடு. நேரமும் போகும், உனக்கும் மாற்றமாயிருக்கும்!” என்றவன், அதை அவன் நிற்கும்போதே செயலாக்கி இருந்தான்.
ஊரவர்களும், அவள் வந்துவிட்டதைக் கேள்விப்பட்டுக் கேள்விப்பட்டு வந்து கதைத்துப்போனதில் மனதுக்கு மிகவுமே ஆறுதலாக உணர்ந்தாள்.
பலர் அவள் உயிரோடு இல்லை என்றே நினைத்திருக்கிறார்கள். அவர்களில் பலரை அவளும் அப்படித்தான் கேள்விப் பட்டிருந்தாள்.
நாட்கள் நகர்ந்தன. நிர்மலன் இலங்கை வந்து இரண்டு மாதங்கள் முடிந்திருந்தது. அந்த இரண்டு மாதத்தில் அவளது வாழ்க்கையையே மாற்றிப்போட்டிருந்தான்.
காந்தனுக்கும் தமிழும் சமயமும் நன்றாக வரும் என்பதில் அவனும் அங்கே படிப்பிக்கத் தொடங்கி இருந்தது அவனுக்கும் பெரும் மாற்றமாய் இருந்தது. இருவருக்கும் அவர்களுக்கான வருமானமும் வரும். நமக்காக யாருமில்லையே என்கிற வேண்டாத சிந்தனைகளில் இருந்தும் விடுதலையே!
கண்மணி இப்போதெல்லாம் நிறைய மாறி இருந்தாள். அவளின் தேவைகளை அவளே பார்த்துக்கொள்ளும் நிலை வந்துவிட்டதால் தன்னம்பிக்கையோடு நடமாடத் துவங்கியிருந்தாள். அதுவும், படிக்கவரும் குழந்தைகளோடு குழந்தையாக அவள் சிரிப்பதைப் பார்க்கையில் மனம் நிறைந்துபோகும் நிர்மலனுக்கு. இந்தச் சிரிப்பை மீட்டுவிடத்தானே பாடுபட்டான்!
அவள் கண்களில் ஒளியும் மீண்டிருந்தது. எதிர்காலம் பற்றிப் பலதை அவனோடு கலந்துரையாடினாள். அதிலே ஒன்று, இந்து சமயத்தையும் தமிழையும் காந்தனும் கணிதத்தையும் ஆங்கிலத்தையும் இவளும் எடுப்பதில் மிகுதிப் பாடங்களுக்கும் யாராவது வேறு ஆசிரியர்களைப் பிடித்தால் அவர்களது ஒரு முழுமையான டியூஷன் செண்டராக மாறிவிடும் என்று சொல்லியிருந்தாள். அதற்கான ஆசிரியர்களை நியமிக்கும் பொறுப்பைக் காந்தன் ஏற்றிருந்தான்.
அவனுக்கும் ஒரு பிளாஸ்ட்டிக் கைக்கு நிர்மலன் ஏற்பாடு செய்தபோது, உணர்ச்சி மேலீட்டில் அவனை இறுக்கி அணைத்துக்கொண்டு கண்கலங்கிவிட்டான் காந்தன். உழைப்புப் பிழைப்பில்லாமல் இருந்தபோது கூலியாக அந்த வீட்டுக்கு வந்தவன் ஆசிரியனாக மாறிப்போனானே! போதாக்குறைக்குக் கையும் கிடைத்துவிட்டதே!
அவன் எதிர்பார்த்தபடியே அனைத்தும் நடந்ததில், ஒருநாள் அவளது கல்யாணப் பேச்சையும் எடுத்துவிட்டான் நிர்மலன்.
“கல்யாணமா?” அப்பட்டமான அதிர்ச்சி அவளிடம்.
“உங்களுக்கு என்ன விசரா?” அந்த வார்த்தையே அவளுக்குள் புயலைக் கிளப்பியது.
“எதுக்கு உனக்கு இவ்வளவு அதிர்ச்சி?” அவள் மீதே விழிகளைப் பதித்து நிதானமாக விசாரித்தான்.
அவனுக்குத் தெரியாதா? தெரியாதவர்களுக்குச் சொல்லலாம், தெரிந்தும் கேள்வி கேட்பவனிடம் என்ன சொல்வது? முகத்தைத் திருப்பிக்கொண்டு அமர்ந்திருந்தாள்.
“சொல்லு கண்மணி!” விடாமல் நின்றான் அவன்.
“என்னத்த சொல்லச் சொல்லுறீங்கள். இப்ப சத்தியமா நான் நல்ல சந்தோசமா இருக்கிறன் நிர்மலன். நிம்மதியா வாழுறன். இது காணும் எனக்கு. என்ன இப்பிடியே விட்டுட்டு நீங்க வெளிக்கிடுங்கோ.” என்றாள் அவள்.
“உன்ன இங்க தனிய விட்டுட்டுப்போய் அங்க என்னால நிம்மதியா இருக்கேலாது.” என்றான் அவன்.
“என்னாலயும் கல்யாணம் எல்லாம் செய்யேலாது நிர்மலன்.”
“ஏன்?”
திரும்பவும் ஏனாம்? “உங்களுக்குத் தெரியாதா?” கோபத்தோடு அவனை நோக்கிக் கேட்டாள்.
“தெரியாததாலதான் கேக்கிறன். சொல்லு!” அவனும் விடவில்லை.
கடைசியில், “என்ர இதயம் என்னட்ட இல்ல நிர்மலன்!” கண்ணீரோடு சொல்லியேவிட்டாள். அன்று, காலுக்கு ஓய்வாக இருக்கட்டும் என்று பிளாஸ்டிக் காலைக் கழற்றிவிட்டுச் சக்கரநாற்காலியில் இருந்தவள் கண்ணீரைக் காட்டப் பிடிக்காது வேகமாக முகத்தைத் திரும்பிக்கொண்டாள்.
அவளது நாற்காலியைப் பற்றி மெல்லத் திருப்பினான் நிர்மலன். கலங்கிச் சிவந்திருந்த விழிகளைக் கண்டவனின் நெஞ்சு துடித்தது. அவள் முன்னே மண்டியிட்டு அமர்ந்து அவளின் கரங்களைப் பற்றிக்கொண்டான்.
“நீ ஆரிட்ட குடுத்தியோ அவன் அதைப் பக்குவமா வச்சிருக்கேல்ல கண்மணி. அவனுக்கு அதின்ர அருமை தெரியேல்ல. தூக்கி எறிஞ்சிட்டான். விளங்கிக்கொள்ளு!” அடைத்த தொண்டையிலிருந்து கரகரத்த குரலில் சொன்னான்.
“இப்ப அவனிட்ட இன்னொரு இதயம் இருக்கு. அதுவும் அவனில உயிரையே வச்சிருக்கிற இதயம்! அவனுக்கும் இப்ப அதுதான் உயிர். அதோட இன்னும் ரெண்டு குட்டி இதயமும் அவனை நம்பி இருக்கு. அவனை என்ன செய்யச் சொல்லுறாய்?”
அவள் விழிகளிலிருந்து கண்ணீர் பொலபொலவென்று வழிந்தது. அழுகையை அடக்கப் பார்த்ததில் உதடுகள் நடுங்கின. “எதுவும் செய்யச் சொல்லி நான் கேக்கேல்லையே? என்னை இப்பிடியே விடுங்கோ எண்டுதானே சொல்லுறன்.”
“உன்ன இப்பிடியே விட்டுட்டுப் போய் நிம்மதியா இருப்பன் எண்டு நினைக்கிறியா நீ?” அவளிடமே கேட்டான்.
என்ன சொல்லுவாள்? உள்ளத்தின் வலி விழிகளில் தெரிய அவளையே பார்த்தவனை அணைத்துக்கொண்டு கதறவேண்டும் போலிருந்தது. இவனுக்கு எதற்கு இந்தக் குற்ற உணர்ச்சி?எவ்வளவு சொன்னாலும் விளங்கிக்கொள்கிறான் இல்லையே?
“அவர் என்ர இதயத்தைத் தூக்கி எறியேல்ல நிர்மலன். அவரால அப்பிடித் தூக்கி எறியவும் ஏலாது. நான்தான் எறிய வச்சனான். என்ன அது என்னட்ட திரும்பி வரேல்ல. அதோட, அவர் நேசிக்கிற ஆரையும் என்னால வெறுக்க ஏலாது.”
கண்கள் கலங்க அவளையே பார்த்திருந்தான் அவன்.
“அவே நாலுபேரும் சந்தோசமா வாழுறதை நான் ரசிச்சுப் பாக்கவேணும். ஒவ்வொரு வருசமும் எப்ப சம்மர் வரும், அவே எப்ப வருவீனம் எண்டு காத்திருந்து காணவேணும். என்ர பிள்ளைகளின்ர வளர்ச்சியைக் கண்டு நான் வாயப்பிளக்கவேணும். ஆண்ட்டி எண்டு ஓடிவாற அந்தக் குழந்தைகளை அள்ளி அணைக்கவேணும். இந்தளவும் எனக்குக் காணும் நிர்மலன்.”
அவள் சொல்லக் சொல்ல கேட்டிருந்தவனின் நிலை மகா மோசமாகப் போய்க்கொண்டிருந்தது.
“விசராடி உனக்கு! எப்ப பாத்தாலும் என்னைப்பற்றியே யோசிக்கிற?” கேட்டவன் அவள் கரங்களிலேயே முகத்தைப் புதைத்தான். “என்னை எங்கயாவது தூக்கி எறி கண்மணி! நான் உன்ர வாழ்க்கைல இல்ல! ஏன் உனக்கு இது விளங்குதில்லை?” அவன் சொல்ல சொல்ல அவள் கண்களிலும் கண்ணீர்!
அவளின் கரங்கள் ஈரமாகவும், துடித்துப்போனாள்.
“நிர்மலன் ப்ளீஸ்! அழாதிங்கோ! அதைப்பாக்கிற சக்தி எனக்கில்லை.” மெல்லச் சொன்னாள்.
ஒரு நெடிய மூச்சை இழுத்து விட்டுவிட்டு நிமிர்ந்தான் அவன்.
“அதேமாதிரி நீ இப்பிடி இருக்கிறதையும் என்னால பாக்க ஏலாது கண்மணி. நீ கலியாணம் கட்டியே ஆகவேணும். சின்ன வயதில இருந்தே காந்தனை எனக்கு நல்லாத் தெரியும். நல்ல பெடியன். உனக்கும் டியூஷன் செண்டருக்கும் அவர் நல்ல துணை.” என்றான்.
காந்தனா? அதிர்வோடு பார்த்தாள். பதில் ஒன்றும் சொல்லவில்லை. அவனும் உடனேயே சொல்லச் சொல்லி வற்புறுத்தவில்லை.
“நடந்த விசயங்களை, என்னை மறக்க ஏலாம இருக்கா?” ஒருநாள் மெல்லக் கேட்டான்.
“உங்களை ஏன் மறக்க?” எதிர்கேள்வி கேட்டவளை அவன் முறைக்க, ‘உங்களுக்கு விளங்கேல்ல’ என்பதாக மறுத்துத் தலையசைத்தாள் அவள்.
“அது ஒரு அழகான காலம் நிர்மலன். நானும் நீங்களும் சேர்ந்தா மட்டும்தான் முழுமையாகும் எண்டில்லை. நினைச்சுப் பார்த்தாலும் சந்தோசம் தான். அதையேன் மறக்க? நிறைய வருசத்துக்குப் பிறகு திடீர் எண்டு உங்களைப் பாத்ததும் ஒரு தடுமாற்றம் வந்தது உண்மைதான். அது சின்னத் தடுமாற்றம் மட்டும்தான். மற்றும்படி அந்த நினைவும், உங்கள்ள இருக்கிற பாசமும் எண்டைக்கும் இருக்கும். இதுக்குப் பெயர் என்ன எண்டு கேட்டா உண்மையா எனக்குத் தெரியாது. அதுக்காக மறுக்கேல்ல. இனி ஒரு கலியாணம் தேவையா எண்டு இருக்கு. என்னால ஏலுமா, இது சரியா வருமா, ஏதும் பிரச்சனை வந்தா என்ன செய்றது? நிறையக் காலத்துக்குப் பிறகு நிம்மதியா நித்திரை கொண்டு எழும்புறன் நிர்மலன். அது பறிபோயிடுமோ எண்டு பயமா இருக்கு.” இன்னதுதான் என்றில்லாமல் அவள் மனம் குழம்பித் தவிப்பதை அவன் உணர்ந்துகொண்டான். ஒரு பிரச்சனை என்று வந்தால் துணைக்கு யாருமில்லாத பாதுகாப்பற்ற நிலை கொடுக்கும் பயமல்லவா இது!
அந்தப் பாதுகாப்புக்குத்தானே திருமணம் செய் என்கிறான். அதற்குமேல் ஒன்றும் சொல்லவில்லை அவன்.
குழம்பித் தெளியட்டும்! ‘என்றைக்குமே உனக்காக நானிருப்பேன்.’ என்கிற நம்பிக்கையை மட்டும் கொடுத்துவிட்டுக் காத்திருந்தான்.