ரோசி கஜனின் இயற்கை 1 (3)

“அக்காண்ட செல்லமெல்லா! ஒண்டு சொன்னோன்ன இப்பிடிக் கோவிக்கிறதே! ம்ம்…அப்ப  ஓடின வேகத்தில படியில் விழுந்திருந்தா உங்கட அப்பா அக்காக்கு நல்ல அடி தந்திருப்பார் தெரியுமா?”  அழுவது போலச்  சொல்ல,  தமக்கையின் கன்னத்தில்   பிஞ்சுக் கரமிரண்டையும் வைத்து அழுத்தினான், கவின்.

 “கவின் அச்சாப்பிள்ள!” கிசுகிசுப்பாக, விழிகளில் நகைப்போடு சொல்லவும் செய்தான். 

   “டேய் கள்ளன்! சித்தி, இவன் இப்பிடியே எல்லாரையும் மயக்கப் போறான் பாருங்க!” என்றபடி அவனைக் கொஞ்சிவிட்டு இறக்கிவிடும் தருணத்தில், அவர்களைக் கடந்து சென்றான், அவன், சற்றுமுன் டிம்ஹொட்டனில் கண்டவன் தான். இவர்களைப்  பார்த்தபடியே நண்பனோடு கதைத்துக்கொண்டு சென்றவனை இலக்கியா கவனிக்கவில்லை. நல்ல சனநடமாட்டமும் தான். யாரும் யாரையும் கவனித்துக் கொண்டிருக்கவில்லை. அவரவருக்கு அவரவர் வேலை. 

   “அங்க எல்லாம் இப்பிடி நம்மட சனத்தக் காணேலாது. இருக்கீனம் தான்,  இப்பிடி இல்ல. இங்க ஊர் போலவே இருக்கு!” வியந்தபடி,  “அம்மாவோட வாங்க கவின்.” மகன் கரத்தைப் பற்ற முயன்றாள், அஜி. அவனோ, பிடிவாதமாக தமக்கையின் கரத்தைத் பிடித்துக்கொண்டு நடந்தான்.

   “வாங்க சித்தி, முதல் டொமிக்குப்  போயிட்டு வருவம். அங்க அந்த போர்டில எந்த ஃபிளோரில டொமி இருக்கு எண்டு பார்ப்பம்.” என்றபடி, சற்றுத் தள்ளியிருந்த அக்கடைத்தொகுதியின் வரைபடம் நோக்கி நடந்தாள், இலக்கியா.

    அதை நெருங்கிப் பார்க்க முடியாதவாறு சிலர் வளைத்துக்கொண்டு நிற்க, பின்னால் நின்றே பார்த்தவளின் பிடியிலிருந்து தன் கரத்தை விடுவிக்க முனைந்தான் சிறுவன்.

  “சித்தி, இவனப் பிடியுங்கோ, நான் பார்த்திட்டு வாறன்.” சொல்லிவிட்டு எட்டிப்பார்த்தவள், “நாம மேல போக வேணும் சித்தி. அங்க g7 ல டொமி இருக்கு.” சொல்லிக்கொண்டே, “வாங்க போவம்.” அருகில் அஜி நிற்கிறாளென்று நினைத்துக் கையைப் பிடித்திழுக்க…

   “அய்யோ! அய்யய்யோ!” பட்டென்று கரத்தை விலக்கிவிட்டாலும்  அவள் முகம் எக்கச்சக்கமாகக் கோணியிருந்தது. நாக்கைக் கடித்தபடி மூக்கும் முழியும் சுருங்கிக் கிடக்கத் தவிப்போடு, “சொறி சொறி…நான் சித்தி எண்டு… சொறி” என்றுவிட்டு ஓட்டமாக நகர்ந்தவளை, உதடுகளில் வந்தொட்டிய மென்முறுவலோடு பார்த்திருந்தான் அவன், வேந்தன்.

  “கவின் இனி அம்மாட்ட நல்லா வாங்குவ சொல்லீட்டன்.” மகனோடு மல்லுக்கட்டிக்கொண்டு நின்ற அஜியின் அருகில் வந்த இலக்கியா, “வாங்க சித்தி போவம், டொமி மேல இருக்கு.” என்றவளின் மொத்தப் பதற்றமும் சிறுவனில் பாய்ந்தது.

  “டேய் கவின், இனிமேல் அக்கா எங்கயும் உன்னக் கூட்டிக்கொண்டு வரமாட்டன்.” கை நீட்டி எச்சரித்தாள்.

   அவனோ, “மூவிங் ஸ்டெப்ல போகப் போறன்.” இராகம் இழுத்தான்.

   “சரி சரி போவம் வா!”  அவனை அஜியிடமிருந்து விலக்கித்  தான் பிடித்துக்கொண்டே, “வாங்க சித்தி…” முன்னால் நடந்தவள் தப்பித் தவறியும் கடைத்தொகுதி வரைபடமிருந்த இடத்தைப் பார்க்கவேயில்லை. இருந்தபோதும், மனத்திலிருந்த சிறு தவிப்போ பதற்றமோ என்னவோ ஒன்று பாரேன் என்றுதான் சொல்லிற்று! ஆனாலும் அவள் திரும்பவில்லை. மனம் மட்டும் ‘ஆரவன்?(யாரிவன்)’ என்றதில் நின்றது.

   முதல் எப்போதும் எங்குமே சந்தித்த நினைவும் இல்லையே! கொஞ்சம் முதல் டிம்ஹொட்டனில் தான் கண்டாள். ‘அதென்ன பார்வை பார்த்துக்கொண்டு நின்றவன்? நான் பார்த்தோன்ன, பார்க்காத பாவனையில திரும்பீட்டான். ஒருவேள, கவின் செய்த கூத்தில ஒரு ஆர்வத்திலயும் பார்த்திருக்கலாம் தான். போனவே வந்தவே எல்லாம் சிரிச்சிட்டுப் போகேல்லையா? அப்பிடி!

  சரி, அப்பிடியே  எடுத்தாலும் அந்த ஃப்ளோர் மேப் அடியில அவ்வளவு கிட்ட (பக்கத்தில) வந்து நிக்கப் போய்த் தானே சித்தி எண்டு நினைச்சுக் கையப் பிடிச்சன்? பிறகும் ‘சொறி’ எண்டு சொல்லுறன் அவன் கண்ணால சிரிக்கிறான்.’ இந்த எண்ணமோட,  ‘உண்மையாவே  அவன்ட கண்களில சிரிப்பு இருந்ததா?’ அருகில் கண்ட அவன் விழிகளை மனதுள் கொண்டுவந்து நிறுத்தி ஆராய முயன்றவளை என்ன செய்வதாம்? 

 ‘ஷொப்பிங் செய்ய வந்த,  பல்லாயிரக் கணக்கில மக்கள் பிழங்கிற ஒரு இடத்தில, ஒருத்தன ஒண்டுக்கு நாலு தடவைகள் கண்டிட்டா…இப்பிடியா அவனப் பற்றி நினைச்சுக் கொண்டிருக்கிறது?’ தலையை உலுக்கிக்கொண்டாள், இலக்கியா.

   “இலக்கிக்கா முதல் மூவிங் ஸ்டெப்…ப்ளீஸ் அக்கா!”  படிகளின் பக்கம் இழுத்த சகோதரனின் இழுவையில் சென்று, மேலும் கீழுமாக நான்கு தடவைகள் ஊர்வலம் போய்வந்ததில் அப்புதியவன் பற்றிய நினைவும் நகர்ந்து போயிருந்தது. தன் குறும்புத்தனத்தாலும் துடியாட்டத்தாலும் நகர்ந்து செல்ல வைத்திருந்தான், கவின்.

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
Best Wordpress Adblock Detecting Plugin | CHP Adblock