கவினைக் கவர்ந்துவிட்ட மகிழ்வோடு, அடிக்கடி, சரக்சரக்கென்று கடந்து போயின லிசாட்டுகள்!
“அரைவாசித் தூரம் வந்திருப்பமா? கெதியா வந்திட்டமே!” என்ற நாதனுக்கு, “ஓம் அங்கிள், இனிக் கொஞ்சம் ஏற்றம், பார்த்து வாங்க, தடக்கி விழுந்து வைக்காமல்.” சொல்லிவிட்டுத் திரும்பிய வேந்தன் பார்வை இலக்கியாவில் நிலைத்துவிட்டே விலகியது. ‘அவள் ஏன் இவ்வளவு பின்தங்கி வரவேண்டும்.’ மனதுள் சுணக்கம் வேறு!
“எங்களுக்கும் அது தெரியும், முதல் நீங்க பார்த்து நடவுங்க! சித்தப்பா கவின வேந்தனிட்ட குடுங்க, தூக்குவார்.” விடாது சொன்னபடி வந்தாளவள்.
‘கவின மட்டுமில்ல உன்னையும் தூக்கலாம், தூக்கவா?’ குறுஞ்செய்தியைத் தட்டினான்.
அருகில் சுகுணா வரவே டங்கென்று செய்தி வந்து விழுந்ததைத் தெரிவித்த கைபேசியை எடுத்துப் பார்க்க ஒரு மாதிரியாக இருந்தது. மனதை அடக்கிக்கொண்டாள்.
“இலக்கிக்கா அந்த டாம்(dam) தெரிய நிண்டு எடுப்பமா?” அவளோடு வந்துகொண்டிருந்த ராஜியின் மகள் கேட்கவே, சற்றே தூரத்தில் வெள்ளருவியாகக் கொட்டிய சிறு டாம் பின்னால் தெரிய புகைப்படங்களைத் தட்டிவிட்டு, “எங்க பார்த்தாலும் தண்ணியாக் கிடக்கே!” என்ற சுகுணாவோடு கதைத்தபடியே நடந்தவர்கள், வழியில் உயர்ந்து நின்ற பாறை அப்படியே தோற்றத்தில் ‘லிசாட்’ போலிருக்கவே அதிலும் முடிந்தளவு ஏறிநின்று புகைப்படங்களைத் தட்டிக்கொண்டார்கள்.
கூடவே வந்த ஆற்று நீரில் சந்தர்ப்பம் கிடைத்தபோதெல்லாம் கைகளால் அலைந்தார்கள்.
“இண்டைக்குச் சனம் பெரிசா இல்ல.” என்றான், வேந்தன். இப்போது, அவன் தோளில் ஜம்மென்று அமர்ந்திருந்தான், கவின்.
“ஹை! நான் தான் எல்லாரையும் விட உயரம் பாருங்கோ!” நாடியை வேந்தன் தலைமீது முட்டுக்கொடுத்து தன் சிறு கரங்களால் அவன் கழுத்தைக் கட்டிக்கொண்டு அவன் அமர்ந்திருந்த விதம் இலக்கியாவினுள் கவிதையாகப் பதிந்து போயிற்று. மெல்ல மெல்ல அவளையும் மீறியே அவனருகில் சென்றுவிட்டாள். அப்படியே அவன் கரங்களுள் தன் விரல்களையும் பொருத்திட எழுந்த ஆர்வத்தை அடக்கத்தான் முடியவில்லை.
“இப்பத்தான் கண் தெரிஞ்சிது போல!” அவளுக்கு மட்டும் கேட்கும் வண்ணம் சொன்னபடி முறைத்தானவன்.
“என்ன கவின கவின பார்வை? உன்னையும் தூக்கவோ!” கண்களைச் சிமிட்டியபடி தொடர்ந்தவனை நிதானமாகப் பார்த்து முறைக்கவும் முடியவில்லை.
“இதுக்குத்தான் பக்கத்தில வாறதில்ல. உங்கட கண்ணும் வாயும் சும்மா இராது!”
இதழ்களில் ஒட்டிய இள முறுவலோடு சொன்னவளை அப்படியே அணைத்துக்கொள்ள துருத்திய கரத்தை பெரும் பாடுபட்டு அடக்கிக்கொண்டவன், “கிட்ட வந்திட்டம் போல! தண்ணி விழுற சத்தம் கேட்குதே!” என்றபடி நெருங்கிவந்த மாறனிடம், “ஓம் வந்திட்டம். இன்னும் கொஞ்சத்தூரம்.” என்றான்.
மேலும் கொஞ்சம் முன்னேறியவர்கள் தூரத்தில் படர்ந்துகிடந்த மலைமுகடுகளின் அழகில் இலயித்து நின்றார்கள்.
லோங்ஸ் பீக், மவுன்ட் மீக்கர், மற்றது ட்வின் சிஸ்டர்’ மலைகள்” சுட்டிக்காட்டிச் சொன்னான் வேந்தன்.
“அது ‘பட்டன் ரொக் ரெசெவோ’ என்ன?” கீழே அமைதியாகப் பரந்துகிடந்த நீர்த்தேக்கத்தைக் காட்டிக் கேட்டாள், கவி.
“ஓம், வேணுமெண்டால் அங்க மட்டும் போகலாம். இறங்கி ஏறவேணும், போகவே போறிங்க?” வேந்தன்.
“இல்ல தேவையில்ல தம்பி. இங்க நிண்டு பார்க்கவே தெரியுதுதானே.” என்றிருந்தார் நாதன்.
“அப்போ தள்ளுங்கோ ஃபோட்டோ எடுப்பம்.” என்று சொல்லி அவள் தொடங்க, தனித்தனியாகவும் ஒன்றாகவும் சேர்ந்து தாம் இரசித்தவற்றைப் புகைப்படங்களில் அடக்கிக்கொண்டு டாம் நோக்கிச் சென்றார்கள்.
மிக மிக வேகமாக நீரை வாரி இறைத்துக்கொண்டிருந்த டாம், இவ்வளவு மினக்கட்டு தன்னை நோக்கி வந்தவரை கொஞ்சமும் ஏமாற்றவில்லை .
அருகில் நிழலில் சற்றேயமர்ந்து பிஸ்கட், ஜூஸ் என்று உள்ளே தள்ளிவிட்டுத் திரும்பி நடக்கத் தொடங்கினார்கள்.
“இனிக் கவினும் நடப்பான்!” இறங்கி, தாயின் கரம்பற்றி நடக்கத் தொடங்கிவிட்டான் அவன்.
போகும் போதில்லாது திரும்பி வருகையில் வெயில் நன்றாகவே பதம் பார்த்தாலும் சலசலவென்று ஓடிய, ‘நோர்த் செயின்ட் வி ரெயின் கிரீக்’ சேர்ந்து வந்ததில் வெயில் சூடும் தெரியவில்லை.
காருக்கு வந்து சேர்கையில் உண்மையில் நன்றாகவே களைத்திருந்தார்கள். ஏறியதும் கவின் நித்திரையானது அவன் எவ்வளவு களைத்துவிட்டானென்று சொல்லிற்று!
“எண்டாலும் பிள்ள கெட்டிக்காரன்!” என்றபடி வாகனத்தை எடுத்த வேந்தன், “உண்மையாவே என்ஜோய் பண்ணிங்களா?” ஆவலோடு கேட்டான்.
“பின்ன! வித்தியாசமா இருந்தது தம்பி!” ஆரூரனின் தாய் சொல்ல, “சுப்பரா இருந்தது வேந்தன்.” ஆமோதித்தாள், கவி.
“எனக்கு என்னவோ ஒண்டும் புதுசா இருக்கேல்ல போல! கால் ரெண்டும் பே நோ நோகுது. அதுதான் கண்ட மிச்சம்!” அலுப்போடு சொன்னாள், இலக்கியா.
“ஓமோம், நாங்களும் அதைப் பார்த்தனாங்க தானே? தொடங்கின நேரம் தொட்டு செல்ஃபி செல்ஃபியா எடுத்தது ஆரு?” கிண்டலாகப் பதில் சொன்னான், வேந்தன்.
“அப்ப, வந்தது வந்தாச்சு அதைச் சரி எடுப்பம் எண்டுதான் எடுத்தன். மற்றும்படி நாலு பல்லிகளைப் பார்த்ததுதான் மிச்சம்!” என்றபடி, பின் இருக்கையில் தலைசாய்த்து விழிகளை மூடிக்கொண்டாளவள்.
“சரிதான், நீங்க வாய்க்கும் ஒரே வேலை குடுத்துக்கொண்டு வந்ததில பாருங்க கதைச்சுக் கொண்டிருக்கேக்கையே கண்ண மூடிட்டீங்க!” கிண்டலாகச் சொல்லி பட்டென்று விழிகளைத் திறந்து முறைக்க வைத்தான், வேந்தன்.
“உண்மை அண்ணா, கொண்டுபோனதெல்லாம் இலக்கிக்கா வாய்க்கதான் போனது.” ஆரூரன்.
“உங்கள… கொஞ்சம் சரி நல்லா இருந்ததால தப்பினிங்க. இல்ல, அங்கயே ஒரு பாறையில இருந்து உருட்டி விட்டிருப்பன்.” தொடர்ந்து சொன்ன சின்ன மகளை, “பிள்ள என்னம்மா நீ!” அடிக்குரலில் கடிந்துகொண்டார், சுகுணா.
“ஹா..ஹா..விடுங்க ஆன்ட்டி.” என்றவன், ‘உன்னையும் இழுத்துக்கொண்டு விழுந்திரும்பன்டி!’ மனதோடு முணுமுணுத்துக்கொண்டே அவளைத் திரும்பிப் பார்த்தான். ஒற்றைப்புருவத்தோடு நெற்றியும் சேர்ந்துயர விழிகளால் சீண்டியவள் அவன் உதடுகளில் முறுவலோடு காரைச் செலுத்த வைத்தாள்.