அத்தியாயம் -18(1)

 

அந்தி சாயும் வேளையில், வீட்டு முற்றத்திலே ஒரு பக்கமாக இருந்த மாமரத்தின் கீழே போடப்பட்டிருந்த கதிரையில் அமர்ந்திருந்த சித்ரா, இன்னொரு கதிரையில் கால்கள் இரண்டையும் போட்டிருந்தாள். கையில் ரமணிசந்திரனின் ‘வெண்மையில் எத்தனை நிறங்கள்’ புத்தகம் இருந்தபோதும், அவள் விழிகளோ இலக்கற்று வானத்தை வெறித்தன.

அவளுக்கு மிக மிகப் பிடித்த எழுத்தாளர் அவர். அந்தக் கதையைப் பல தடவைகள் படித்திருக்கிறாள். அந்தப் புத்தகத்தை வாசிக்க எப்போது எடுத்தாலும் முதல் தடவை படிக்கும் ஆர்வத்தோடு அதிலேயே மூழ்கிவிடும் அவளால் இன்று அதிலிருந்த ஒரு எழுத்தைக் கூட வாசிக்க முடியவில்லை.

அந்தளவுக்கு மனது குற்ற உணர்ச்சியில் குன்றித் தவித்தபடி கிடந்தது. எந்த வேலையையுமே முழு ஈடுபாட்டுடன் செய்ய முடியவில்லை. தவறு செய்துவிட்டோமே.. தவறு செய்துவிட்டோமே என்று உள்ளே மனம் அரித்துக்கொண்டே இருந்தது.

அன்று, அவர்களை மீறியே அந்த உறவு நடந்து முடிந்தபோது, ரஞ்சன் வருந்துவதைக் கண்டதும் அவனைத் தேற்றிவிட வேண்டும் என்று மட்டுமே அந்த நிமிடம் அவளுக்குத் தோன்றியது.

அவனோடு இருக்கும் வரையில் நடந்து முடிந்த சம்பவத்தின் தாக்கம் அவளைப் பெரிதாகத் தாக்கவில்லை. 

அதோடு, அதைச் சீர் செய்துவிடலாம் என்று எண்ணித் தன்னையே தேற்றிக் கொண்டவளின் நிம்மதி, அவன் கடையை விட்டு வெளியேறிய நொடியிலேயே அடியோடு கலைந்தது.

ஒரு பெண்ணாக இருந்தும், தினமும் தாய் சொல்லும் புத்திமதிகளைக் காதால் கேட்டும், அதையெல்லாம் யோசியாமல் எவ்வளவு பெரிய தவறை இழைத்துவிட்டோம் என்று வருந்தியபடி வந்தவளால் வீட்டில் பெற்றவர்களின் முகத்தை நிமிர்ந்தே பார்க்க முடியவில்லை. 

“களைப்பாக இருக்கிறது. என் அறைக்குப் போகிறேன்..” என்றுவிட்டு யார் முகத்தையும் பார்க்காமல் அறைக்குள் புகுந்து கொண்டாள்.

பயணக் களைப்பாக இருக்கும் என்று எண்ணிக் கொண்டனர் வீட்டில் இருந்தவர்கள்.

அடுத்தடுத்து வந்த நாட்களில் வீட்டுக்குள்ளேயே முடங்கிப் போனாள் சித்ரா. யாரின் முகத்தையும் நிமிர்ந்து பார்க்க முடியவில்லை. யாரோடும் இயல்பாகச் சிரிக்கக் கூட முடியவில்லை. 

அதுவரை காலமும் வெகுளித் தனமாகவும், கள்ளமில்லா உள்ளத்தோடும் துள்ளித்திரிந்தவளின் மனதில் பெரும் சுமையே ஏறி அமர்ந்திருந்தது. தானே தன் சுதந்திரத்தைப் பறி கொடுத்துவிட்டதாக உணர்ந்தாள்.

பெற்றவர்களிடம் அனாவசியப் பேச்சை நிறுத்தினாள் என்றால், ரஞ்சனுக்கு அவள் அழைக்கவே இல்லை. அவளால் அழைக்க முடியவில்லை. உள்ளே எதுவோ ஒன்று நெருஞ்சி முள்ளாகக் கிடந்தது குத்திக் கொண்டே இருந்தது. 

அவனையே திருமணம் செய்து கொள்ளப்போகிறோம் என்று தெரிந்திருந்தாலும், தவறு செய்து விட்டோமே, அம்மா அப்பாவுக்குத் தெரிந்தால் தாங்குவார்களா? என்னை நம்பித்தானே சுதந்திரமாக வெளியில் விட்டார்கள். அந்த நம்பிக்கையைக் காப்பாற்றாமல் போனேனே என்று மருகுவதை அவளால் தடுக்கவே முடியவில்லை.

திருமணம் நடந்து அனைத்துமே நேரானாலும் கூட திருமணத்திற்கு முதலே தவறு செய்தவள் நீ என்று அவள் மனமே அவளைக் குத்துமே! விடிவே இல்லாத, விடையே இல்லாத கேள்வியாக அல்லவா அவளே அவள் வாழ்க்கையை மாற்றிவிட்டாள்!

எதைச் செய்து இதை நேராக்குவது?

இப்படித் தெளிவற்ற சிந்தனையோடு அமர்ந்திருந்தவளை நோக்கி வேகமாக வந்தார் லக்ஷ்மி. “நன்றாக இருட்டிவிட்டது. ஒரு பெண் பிள்ளை அதுகூடத் தெரியாமல் முற்றத்திலே இருந்து என்ன செய்கிறாய்? உள்ளே போ!” என்று அதட்டினார்.

“சரிம்மா..” என்றபடி எழுந்து சென்ற மகளைப் புருவங்கள் சுருங்க யோசனையோடு பார்த்தார் லக்ஷ்மி.

‘இவளுக்கு என்னவாகிற்று? நான் எது சொன்னாலும் கேட்க மாட்டாளே. திருப்பி எதையாவது கதைக்காமல் போகமாட்டாளே..’ என்று எண்ணியவருக்கு, இந்த ஒரு வாரமாக மகள் அமைதியாக இருப்பது கருத்தில் படாமல் இல்லை.

ஆனால், வவுனியா சென்று வந்தது, திருமணத்தை எண்ணி யோசிக்கிறாள் என்று தானாகவே ஒவ்வொன்றை நினைத்துக் கொண்டவருக்கு, அப்படி இல்லையோ என்று இப்போது தோன்றியது.

உடனேயே, “சித்து நில்லு!” என்றபடி மகளிடம் விரைந்தார். வராந்தாவுக்குள் நுழைந்திருந்தவள் நின்று, “என்னம்மா?” என்று கேட்டாள்.

“ஏன் ஒரு மாதிரி இருக்கிறாய்?” 

சாதாரணமாகத்தான் அவர் கேட்டார். ஆனால், அவருக்கு ஏதாவது தெரிந்துவிட்டதோ என்று பயத்தில் உடல் நடுங்கத் தாயாரை பயத்தோடு ஏறிட்டாள் மகள்.

அதுவரை காலமும் மனதில் பாரமே இல்லாமல் இருந்தவளுக்கு செய்துவிட்ட தவறு எதையும் சாதரணமாக எதிர்நோக்கும் இயல்பை அவளிடம் இருந்து பறித்துக் கொண்டிருந்தது. 

லக்ஷ்மியோ உண்மையான அக்கறையோடும் பாசத்தோடும் அவளைப் பார்க்க, அந்தப் பார்வையே அவளைக் குத்திக் கிழித்தது. ஒரு கணம் தடுமாறி, அவர் விழிகளைப் பார்க்க முடியாமல் குன்றி, உடனேயே முகத்தைத் திருப்பிக் கொண்டு, “ஒன்றுமில்லைமா..” என்றாள் சித்ரா.

“என்னடி ஒன்றுமில்லை என்கிறாய்? நிச்சயமாக ஏதோ இருக்கிறது. இப்படி நான் கேட்கும் கேள்விகளுக்கு நின்று நிதானித்துப் பதில் சொல்லும் ஆளில்லையே நீ. அடங்கிப் போகிறாய் என்றால் என்னவோ பிழை செய்திருக்கிறாய் என்று அர்த்தம். என்ன அது? சொல்லு. சொல்லாமல் கொள்ளாமல் தியேட்டருக்குப் போனாயா? அல்லது ஏதாவது நகையைத் தொலைத்துவிட்டாயா?” என்று கேட்டவரின் விழிகள் மகளின் கைகள், கழுத்து, காது என்று அலசியது.

அவரளவில் அதுநாள் வரை மகள் செய்யும் தவறுகள் அவ்வளவே!

தொலைந்தது எது என்று தெரிந்தால் இந்த அம்மா என்ன செய்வார்கள் என்று நினைக்கவே அவளுக்கு நெஞ்சு நடுங்கியது. ஆனாலும், அவரிடம் எதையும் காட்டிக்கொள்ளாமல் இருக்க முயன்றபடி, “நான் திருந்த நினைத்தாலும் விட்டுவிடாதீர்கள்! திருப்பிக் கதைத்தால் வாய் காட்டுகிறாய் என்பீர்கள். அமைதியாக இருந்தால் ஏன் இப்படி இருக்கிறாய் என்று கேட்கிறீர்கள்? என்னை என்னதான் செய்யச் சொல்கிறீர்கள்.” என்றவள், பொய்யாகத் தாயாரை முறைத்தாள்.

அவளின் அதட்டலைக் கேட்டபிறகுதான் சற்று நிம்மதியாக இருந்தது லக்ஷ்மிக்கு. அவள் எப்போதும் போலத்தான் இருக்கிறாள். நாம்தான் தேவையில்லாமல் குழம்பி, அவளையும் குடைந்துவிட்டோம் என்று நினைத்தவர், அதைக் காட்டிக் கொள்ளாமல், “நீ திருந்திவிட்டாலும்!” என்று நொடித்துவிட்டுத் தன் வேலைகளைப் பார்க்கப் போனார்.

செல்லும் தாயையே பார்த்திருந்த சித்ராவுக்குக் கண்ணைக் கரித்தது. 

ஏதோ நினைவு வந்தவராக நின்று திரும்பி வந்தவர், “அப்பாவிடம் இந்தச் சித்திரைக்குப் பிறகு மாப்பிள்ளை பார்க்கச் சொன்னாயாம். ஏன் சித்து?” என்று கேட்டார்.

“அது.. கல்யாணம் முடிந்தால் நான் வேறு வீட்டுக்குப் போய்விடுவேனே அம்மா. அதுதான்.. கொஞ்ச நாள் உங்களோடு இருக்க..லாம் என்று..” என்று, எதையோ சொல்லிச் சமாளித்த மகளின் தலையைக் கனிவுடன் தடவினார் அவர்.

“அதற்கு என்ன செய்வது சித்து? நான் உன் அப்பாவைக் கட்டி வரவில்லையா, உன் சித்தி சித்தப்பாவைக் கட்டி வரவில்லையா, ஏன் அபி அவள் கணவனோடு போகவில்லையா? இப்போது போய் அபியைக் கூப்பிட்டுப் பார் வீட்டுக்கு வாடி என்று. கடைசி வந்தாலும் வரமாட்டாள். அப்படி உனக்கும் திருமணமானால் எல்லாம் பழகிவிடும்.” என்றவரின் குரலும், வரப்போகும் மகளின் பிரிவை எண்ணிக் கலங்கிக் கனிந்திருந்தது.

தாய் சொல்லச் சொல்ல அவள் விழிகளும் கலங்கத் தொடங்க, அதைக் காட்டாதிருக்க முயன்றபடி, புத்தகத்தைப் பார்ப்பதுபோல் முகத்தைக் குனிந்து கொண்டாள்.

“சரி அதைவிடு. நீ போய்ப் புத்தகம் படி. நான் சமையலைக் கவனிக்கிறேன். இன்று உனக்குப் பிடித்த இடியப்பமும் சொதியும் வைக்கப் போகிறேன்..” என்றுவிட்டு அவர் சமையலறைக்குச் செல்ல, உள்ளே ஹோ என்று அடைத்துக்கொண்டு வந்த மனதைச் சமணப் படுத்த தன் அறைக்கு விரைந்தாள் சித்ரா.

உள்ளே இருந்து கொள்ளும் இந்த வேதனையைத் தாங்க முடியாமல், ரஞ்சனோடு கதைத்தால் கொஞ்சம் நன்றாக இருக்குமோ என்று எண்ணி, ஒரு வாரத்துக்குப் பிறகு அவனுக்கு அழைத்தாள்.

அவனோ எப்போதும் போல் அழைப்பை எடுக்கவில்லை.

‘நான் படும் பாட்டுக்கு இவன் வேறு..!’ என்று நினைத்தவள், ‘இப்போது நீங்கள் கதைக்காவிட்டால் உங்களைத் தேடி இப்போதே வருவேன். நீங்கள் எங்கு இருந்தாலும் சரி.’ என்று ஒரு மெசேஜை அவனுக்குத் தட்டிவிட்டாள்.

அந்த மெசேஜுக்குப் பலன் இருந்தது. சற்று நேரத்திலேயே அவளுக்கு அழைத்தான் ரஞ்சன்.

“ஹலோ இதயன்..” என்று சித்ரா சொன்னதுதான் தாமதம், கடுகடுவெனப் பொரிந்தான் ரஞ்சன்.

“இந்த நேரத்தில் அப்படி என்ன கதைக்க வேண்டியிருக்கிறது உனக்கு. மனிதனை நிம்மதியாக வேலையைப் பார்க்க விடமாட்டாயா? என்னை என்ன உன்னைப் போல அப்பா சம்பாதித்து வைத்த பணத்தைச் செலவழித்துக் கொண்டு சும்மா இருப்பவன் என்று நினைத்தாயா? தயவு செய்து என்னைக் கொஞ்ச நாட்களுக்குத் தொந்தரவு செய்யாதே.” என்று சிடுசிடுத்தான்.

அதைக் கேட்டவளுக்கு குரலோடு சேர்ந்து நெஞ்சும் அடைத்தது. ஆறுதல் தேடித் தவித்துக் கொண்டிருந்தவளை அவன் பேச்சு இன்னும் காயப் படுத்தியது. “என்ன இதயன், உங்களோடு கதைத்து ஒரு வாரமாகிறது என்று எடுத்தால் இப்படிச் சொல்கிறீர்களே?”

“பின்னே, வேறு எப்படிச் சொல்லச் சொல்கிறாய்? அங்கே கடையில் சுகந்தனும் ஜீவனும் மட்டும்தான் நிற்கிறார்கள். அங்கேயும் வேலை பார்த்து கிடைக்கும் நேரத்தில் இந்தக் கடையிலும் வேலைகளைப் பார்த்து என்று ஓய்வில்லாமல் நிற்கிறேன் நான். வீட்டுக்குக் கூடப் போக முடிவதில்லை. இதில் நீ வேறு தொந்தரவு!” என்று, சினந்தவனின் பேச்சில் அவளுக்கு வலித்தது.

அவளைக் குத்திக் காட்டுகிறானா அல்லது வேலைச் சுமையில் தன்னை அறியாது வார்த்தைகளை விடுகிறானா? எது எப்படி இருந்தாலும் அவளுக்கு வலிக்கிறதே! 

ஆனாலும், ஓய்வில்லாமல் உழைக்கும் அவனோடு சண்டையிட மனம் வராமல், “சரி இதயன். நான் சும்மாதான் எடுத்தேன். வைக்கிறேன்..” என்று சோர்ந்த குரலில் சொல்லிவிட்டு, வேதனையோடு கைபேசியை அணைக்கப் போனவளுக்கு, “இனியும் எடுத்துத் தொந்தரவு செய்யாதே. என்னை நிம்மதியாக வேலையைப் பார்க்கவிடு.” என்று எரிச்சலோடு அவன் மொழிவது கேட்டது.

குபுக் என்று விழிகள் குளமாகிவிட ஒன்றும் சொல்லாது கைபேசியை அணைத்தவளின் கன்னங்களில் இருசொட்டுக் கண்ணீர்த் துளிகள் உருண்டோடின.

எப்போதும் சிடுசிடுப்பதுதான் அவனது இயல்பு. அதை அவள் அறிவாள் தான்! ஆனால் இந்தக் கடுமை? அவளையே அவனுக்காகக் கொடுத்த பிறகும் ஏன் இந்த அந்நியத் தன்மையும் கடுமையும்?

அன்றைய உறவின் பிறகு அவனை இனி அவளிடம் இருந்து யாராலும் பிரிக்க முடியாது என்று நினைத்தாளே! அது தவறோ என்று நினைத்த மாத்திரத்தில் அடிமனதில் ஒருவிதப் பயம் ஊற்றெடுத்தது.

அவன் பிரிந்துவிட்டால்? அவள் கதி என்ன? அப்படிச் செய்வானா? இல்லையில்லை! நிச்சயம் செய்யமாட்டான். அவன் அப்படியானவன் அல்ல!

தனக்குத் தானே ஆறுதல் சொல்லிக் கொண்டவளுக்கு அவன் பேசிய பேச்சுக்கள் நினைவில் ஆடின.

அதுவும் அவள் சும்மா இருந்து அப்பாவின் பணத்தைச் செலவு செய்வதாகச் சொல்கிறானே. அவள் என்ன அந்தளவுக்குச் சோம்பேறியா? அல்லது உழைக்கப் பிடிக்காதவளா? 

ஏற்கனவே நொந்திருந்த மனதை அவன் பேச்சுக்கள் இன்னும் பெரிதாகக் காயப்படுத்தியதில் பிடிவாதமாக ஒரு முடிவை எடுத்தாள். நான் ஒன்றும் சும்மா இருந்து உண்ணவில்லை என்று அவனுக்குக் காட்டவேண்டும் என்று எண்ணினாள். என்னாலும் முடியும் என்று நிரூபிக்க நினைத்தாள்.

error: Alert: Content selection is disabled!!